Advertisement

பௌர்ணமி வர்ணம் – 3

புவனேஷ்வரனை பிக்அப் செய்ய வண்டி வந்திருந்தது ஏர்போர்ட்டிற்கு…. வீடு வந்தான் புவன். அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் கார்த்தியாயினி. அவனின் அப்பாவை பெற்ற அம்மா. எழுவதைந்து வயதிலும் திடமாக நின்றிருந்தார் வாசலில்.

புவனனை பார்த்தவுடன் “வா டா ப்பா….” என சொல்லி அவனை வாசலிலேயே நிற்கவைத்து ஆலம் சுற்றிதான் உள்ளேயே விட்டார்.

புவனின் மில்டரி ஆசைக்கு வித்திட்டவர். இவரின் சாயல் அவனிடம் நிறைய எதிரொலிக்கும்… உள்ளே வந்தவன் தன் அம்மாவிடம் சென்றான் “அம்மா…..” என கட்டிக் கொள்ள… அந்த மில்டரிகாரனின் கைகளில், அவனின் அம்மா… ஆனந்தி அடங்கித்தான் போனார். கண்களில் மட்டும் தாய்மை நிறைந்தது.

எத்தனை வருடங்கள்….  அவனை பிரிந்து… இப்போதும் சந்தேகமாகவே கேட்டார்  அவனிடம் ஆனந்தி “இனி இங்கதானே டா…” என. கண்கள் மட்டும் தன் மாமியாரை இறைஞ்சுதலாக பார்த்தது.

புவன் “ம்மா…. எப்போதும் இனி இங்கதான், இனி அங்க, என்னை உள்ளே விடமாட்டாங்க…. நீ சோறு போடுவிலம்மா…..” என்றான் விளையாட்டாய்.

ஆனந்தி “என்ன டா பேச்சு…. இது “ என தன்னை நிலைபடுத்தியவாறே கேட்டார். “இரு…. ஜூஸ் ஏதாவது கொண்டு வரேன்” என்றவர் உள்ளே செல்ல.

புவன் “பாட்டி…. “ என அவர் அருகில் வந்தான். சோபாவில் அமர்ந்து, தாய் மகன்  பேச்சை பார்த்தும் பார்க்காதவராக அமர்ந்திருந்தார் கார்த்திகாம்மா அவனின் அழைப்பை கேட்டு நிமிர்ந்தவர்.

“என்ன டா சொல்றா உங்கம்மா….. உங்கம்மாக்கு உன்னை இடுப்பிலேயே வைச்சிக்கணும்…. எங்கையாவது இறக்கி விட்டா காக்கா தூக்கி போயிடும்ன்னு பயம்….” என்றார் சிரித்தவாறே.

புவனனும் சிரித்தவாறே “காக்காக்கு பயந்து இல்ல பாட்டி….. அவங்க மாமியார் தூக்கிட்டு போய்டுவாங்கலோன்னு இன்னும் பயம்” என்றான் சிரித்தவாறே.. இப்போது உள்ளிருந்து ஜூஸ்சுடன் ஆனந்தி வரவும் சரியாக இருந்தது. இப்போது ஆனந்தி என்னவென அவர்களை  குறு குறுவென பார்க்க…. பாட்டியும் பேரனும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தனர்…

ஆனந்திக்கு கோவம் வந்தது “திருந்தவே மாட்டாங்க…. இனி என்ன என்ன பாடு படுத்த போறாங்களோ இரண்டு பேரும் சேர்ந்து..” என தலையிலடித்துக் கொண்டார்.

அதற்கெல்லாம் அசரவில்லை இருவரும்… ஆனந்தி “குளிச்சிட்டு வாடா…. சாப்பிடலாம், அப்பா வந்திடுவாங்க” என்றார்.

புவன் “அம்மா… நான், காலையிலேயே குளிச்சிட்டேன்… அப்பாவ வர சொல்லு சாப்பிடலாம், ராம் வருவானா ம்மா..” என்றான்.

ஆனந்தி ஏதோ  சொல்ல வர, அவனின் பாட்டி “ஏன் ஆனந்தி, அவன் என்ன மார்கெட்டா போயிட்டு வரான், ப்ளயிட்டுல வரான்…. அடுத்து AC காரு… வெயில்ல நின்னுருக்க கூடாமாட்டான்…. அதுக்குள்ளே குளிக்கனுமாம்..

அவனெல்லாம் மில்டரில இருந்தவன்…. எப்படி இருந்தாலும்… அங்கேயே நின்னு சாப்பிட்டு வேலைய பாக்க போகணும்…. சும்மா குளி, பல்லு விளக்குன்னு சின்ன பையன் மாதிரி சொல்லிகிட்டே இருக்காத” என்றார் வேண்டுமென்றே.. புவனனும் சிரித்துக் கொண்டே பார்த்திருந்தான்…

ஆனந்திக்குதான் பொங்கிவிட்டது “என்ன…. நான் என் பையன் கிட்டதான் பேசறேன்…. நீங்க ஏன் பதில் சொல்றீங்க…. உங்க பையன் வருவார்…. அவர்கிட்ட சொல்லுங்க எதா இருந்தாலும்” என்றார்.

கார்த்திகாம்மா லேசாக சிரித்தவாறே அமைதியாகி விட்டார். புவன் இப்போது வெடித்து சிரித்தான். தன் மகன் சிரிப்பதை பார்த்ததும் ஆனந்தி அங்கே நிற்காமல் “அவங்க பையகிட்ட ஒன்னும் பேசறதில்ல, என் பையனதான், என் கிட்ட இருந்து பிரிக்கிறது” என தனக்குள் ஏதோ முனு முனுத்தவாரே உள்ளே சென்றார்.

கார்த்தியாயினி நல்ல பாட்டி… ஆனால் நல்ல மாமியாரா! இன்னும் தெரியலை….. அவர்க்கே.

புவனுக்கு மூன்று வயது இருக்கும் போது… ஆனந்தி… கீழே விழுந்து இடுப்பில் பலத்த அடி… ஒரு ஆறுமாதம் படுத்த படுக்கையாக இருந்தார்.

ஆனந்தியின் பெற்றோர் வந்துதான் பார்த்துக் கொண்டனர்… நாட்டு வைத்தியம் செய்துத்தான் சற்று தேறினார். அப்போதுதான் புவனனை தங்களுடன் சேலம் அழைத்து சென்றார் கார்த்தியாயினி.

அப்போத்திலிருந்து புவனன் பாட்டியிடம்தான் வளர்ந்தான். ராமலிங்கம் ஆனந்தி தம்பதிக்கு… இரண்டு மகன்கள்…. பெரியவன் ராம்குமார். அவனிற்கு பூரணியுடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் சித்தார்த், தன்யஸ்ரீ என இரண்டு குழந்தைகள். அவர்கள் பக்கத்தில்தான் தனியாக உள்ளனர்.

ராம்குமார் மட்டும்தான் தாய் தந்தையுடன் வளர்ந்தான். புவனனின் பள்ளி படிப்பு, கல்லூரி எல்லாம் சேலத்தில்தான். தாத்தா சுந்தரமூர்த்தி கார்த்தியாயினி வளர்ப்பு அவன்.

கார்த்தியாயினி பாட்டி தன் மகனை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என ஆசைபட்டாரோ அப்படியெல்லாம் வளர்த்தார் புவனனை. அவனின் தாத்தா ஒரு தாசில்தார். அப்போது அது பெரிய வேலை.

எனவே, அந்த கிராமத்தில் யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டும், மணியாடர் அனுப்ப வேண்டும் என்பதில் தொடங்கி…. ரோடு போடுவது, தெரு விளக்கு அமைப்பது, தடுப்பூசி போடுவது, ஊர் திருவிழா, வறட்சி காலத்தில் தேவையான உதவி என எல்லாவற்றிக்கும் அவரை தேடுவர் மக்கள்.

அப்படியே பெண்களிடம் அறிமுகமானார் கார்த்தியாயினி…. இவரும் பெண்களுக்கு சின்ன உதவி செய்வது, பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லுவது, நல்லது கேட்டதுக்கு முன் நிற்பது என தன் கணவன் வழியில் ஒன்றினார்.

அப்போது தன் மகன் ராமலிங்கத்தை கவனிக்க தவறினார். அவர்களின் பெற்றோர்தான் பார்த்துக் கொண்டனர். எனவே புவனன் விஷயத்திலும் அதுவே நடந்தது….

இவன் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே தாத்தா சுந்தரமூர்த்தி தவறிவிட…. அப்போதிலிருந்து எல்லாம் பாட்டிதான் அவனிற்கு. புவனன் தன் பாட்டியை பார்த்து, தன்னுள்…. உள்வாங்க தொடங்கினான்…  

கவர்மென்ட் ஸ்கூல்லில்தான் படித்தான். எல்லா விளையாட்டுகளிலும் அவனை ஈடுபட செய்வார். அப்போதிலிருந்தே அவனிற்கு NCC மேல் ஆர்வம்…. பள்ளியில் அதற்கென பயின்றவன். ஒரு போட்டியின் போது மான்போர்ட் ஸ்கூலை வென்று…. பரிசு பெற்று தந்தான்… தனது பள்ளிக்கு.

அப்போத்திலிருந்து பள்ளி அவனை கொண்டாட தொடங்கியது. எந்த விளையாட்டு என்றாலும் முன் நிற்பான். ப்ராக்டிஸ் என அனைவரையும் படுத்தி வைப்பான். வெல்லும் வரை ஓயவே மாட்டான். அப்படிதான் தெரியும் தீபிக்கு அவனை.    

புவனின் பாட்டியும் அவனின் எண்ணத்திற்கே வலு சேர்த்தனர். அவன் எண்ணப்படியே பள்ளிபடிப்பை முடித்து கல்லூரியில் B.Com முடித்து அதற்கென உண்டான தேர்வு எழுதி நேரே இராணுவ பயிற்சிக்கு சென்றான்.

அந்த நேர்த்தியும், அந்த பயிற்ச்சியும் அவனை மிகவும் ஈர்த்தது. விரும்பி பயின்றான். நெடுமான் போல் உயரமாக…. ஓட்ட வெட்டிய மிலிட்டரி கட்…. அந்த பச்சை வண்ண சீருடையின் பெருமை தெரிந்து…. செய்யப்படும் ஒவ்வெரு அசைவும் அவ்வளவு நேர்த்தியானது… அவனிற்கு

எத்தனை பெரிய பதவியாக இருந்தாலும் நான் ஒரு சோல்ஜர் …. இராணுவ வீரன் என சொல்லுபோது தோன்றும் பெருமிதமும்…. கர்வமும் வேறு எதிலும் வராது போலும். அப்படிதான் உணர்ந்தான் புவனேஷ்வர்.

இப்படி.. தான் ஆசைப்பட்ட வேலையை செய்து முடித்து. ஒரு ஆத்மா திருப்தியோடு வீடு வந்திருக்கிறான். அப்படியே அவனின் இன்னொரு கொள்கையும் நடந்தால்…. மிகவும் சந்தோஷப்படுவான் அவன்.

அவனிற்கு தனக்கு வரும் மனைவி…. அவர்களின் குடும்பமாவது ஏதேனும் ஒரு வகையில் இராணுவத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்பினான். அது அந்த விட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

இரண்டு வருடம் முன்பு…. விடுமுறையில் வரும்போதே….. ஆனந்தி தன் மகனிற்கு திருமணம் செய்ய வரன் பார்த்தார். அப்போது அவன் அந்த மனநிலையில் இல்லை எனவே மறுத்துவிட்டான்.

அவனின் பாட்டியும்… எப்போதும் போல் அவனுடன் ஒத்து பேசி, அவன் எண்ணத்திற்கு வலு சேர்க்க…. தொடங்கும் போதே…. திருமண பேச்சு நின்றது.

ஆனால் இப்போது கார்த்தியாயினி பாட்டி, அவனிற்கு திருமணத்திற்கு ஒரு வரன் பார்த்திருக்கிறார்… அனால், அது யாருக்கும் பிடித்தமில்லை… புவனன் உற்பட…. யருக்கும் விருப்பமில்லை.

                       %%%%%%%%%%%%

இப்படியே  பாட்டியும் பேரனும் பேசியபடியே அமர்ந்திருக்க…. உள்ளே வந்தார் ராமலிங்கம் அவனின் தந்தை…. “வா ஈஸ்வர்…. எப்படி இருக்க…. சாப்பிட்டியா…” என கேட்டுக் கொண்டிருந்தார்.

புவனன் “ம்… இல்லப்பா…” என்றவன் அமைதியாய் டைனீங்க ரூம் சென்றான்.  அன்னைக்கு உதவினான். கிட்செனில் இருந்து உணவுகளை எடுத்து வந்தான்… தட்டுகளை மேசையின் மீது வைத்தான் இப்படி வேலைகள் செய்து கொண்டிருந்தான்….

உடை மாற்றி வந்த அவனின் அப்பா, அவன் உடை கூட மாற்றாமல் இருப்பதை பார்த்து, கேட்டார் “என்ன டா, டிரஸ் சேஞ்சய் செய்யலையா…” என்றார்.

புவன் “ச்… இல்லப்பா… ராம்ம பார்த்துட்டு வரேன் பா….” என்றான்.

ஆனந்தி “நீ இன்னிக்கு வரேன்னு தெரியும்…. அவனே வரல…. நீயேன் போற….” என்றார்.

புவன் “நான் போவேன்….. அப்புறம்” என்றான் எதையும் காட்டாது… இவ்வளவு நேரமிருந்த இலகு தன்மை காணாமல் போயி… ஒரு துடைத்து வைத்த குரலில் சொன்னான். கொஞ்சம் சிடு மூஞ்சிதான் புவன் என தோன்றியது ஆனந்திக்கு. அமைதியாகிவிட்டார் அவர்.

ராமலிங்கமும் ஆனந்தியைதான் பார்த்தார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனந்தி பரிமாற அனைவரும் உண்ண தொடங்கினர். இயல்பாய் பேச்சு வர கொஞ்ச நேரம் ஆனது.

அது அவனின் இயல்பா, அல்லது அவன் இருந்த இடம் அப்படியா என தெரியாது. நொடியில் கோவம் வரும். மற்றவர் மனதை… அவனே அறியாமலே புன்படுத்திவிடுவான்.  

                     %%%%%%%%%%%%%

தீபி…. காலை எழுந்ததிலிருந்து நேற்றைய சிந்தனையிலேயே இருந்தாள். ஆனாலும் அவளின் அன்றாட வேலைகள் தொடர்ந்தன. நேரே அந்த ஜிமிற்கு சென்றாள்.

அவளின் சித்தப்பாவின் யோசனை அது. இவள் வெளியே காலை ஐந்து மணிக்கெல்லாம் ஜாக்கிங் செல்வது…. பாதுகாப்பில்லை என எண்ணி அருகிலுள்ள ஜிம்மில் சேர்க்க செய்தார்.

இயல்பிலேயே நல்ல அழகான உடல்வாகு தீபிக்கு, ஜிமிற்கு வரவேண்டிய சூழல் இல்லைதான் ஆனால்…. அவளின் கலோரிசை பான் செய்வதை விட, தனிமையை பான் செய்யவே இந்த… ஏற்பாடு….

முன்பெல்லாம் தூக்கம் என்பதே இராத… இரவுகளில்…. எப்போதடா.. விடியும்…. என எண்ண வைத்த இடம் இது. அவளின் அன்றாட வேளைகளில் தவிர்க்க முடியாத ஒன்று…  

வொர்க் அவுட் முடித்து வந்தவள்… கந்தன் கொண்டு வந்து கொடுத்த கஞ்சியுடன் பேப்பரில் மூழ்கினாள். அரைமணி நேரம் முடித்து எழுந்து குளித்து கிளம்பி… ரெசார்ட் செல்ல தயாராக வந்தாள்.

கதிரேசன் “லக்ஷ்மி… இன்னைக்கு அந்த பாண்டிச்சேரி நிலம் பார்க்க நான் அங்க போறேன்…. நீ இங்க பார்த்துக்க…. வீக் டேஸ்தான்…. ஒன்னும் வேலையில்ல… பார்த்துக்க” என்று சொல்லி கை துடைத்து கொண்டிருந்த டவலை… கந்தனிடம் கொடுத்து கிளம்பி விட்டார். அவளின் பதிலையோ, தலையசைப்பையோ எதிர்பார்க்கவில்லை அவர். அவர் இரண்டு எட்டு எடுத்து வைக்க கூட இல்லை.

தீபியின் போன் அடித்தது… அதை தொடர்ந்து அவளின் சத்தம் வேறு… “சித்தப்பா…” என்று. உடனே திரும்பி கண்களால் தேடினார் அந்த போனை கதிரேசன்.

தன் அண்ணன்தான் அழைத்திருப்பார் என தெரியும்… அவளின் அலறல் அதை சொல்லியது. பொறுமையாக எடுத்து “என்ன ண்ணா,” என்றார் சாந்தமாக.

அந்த பக்கம் என்ன பேசினாரோ… “ம்… வருவாண்ணா…. அடுத்த வாரம் தானே… பாக்கலாம் நான் பேசுறேன்… “ என்றவர்.

“நீ எங்க இருக்க….” என்றார். அவர் என்ன சொன்னாரோ..

“ஏன் வீட்டுக்கு வரல… நேர பாண்டிச்சேரி வரிங்களா….”

……………..

“சரி…. அடுத்த வாரம்…. நேர்ல பேசிக்கலாம்” என்றார். போனை வைத்து விட்டு, கிளம்பி சென்றுவிட்டார் கதிரேசன்.

தீபி இதே மனநிலையில்தான் கிளம்பினாள் ரேசொர்ட்டுக்கு, அங்கு சென்றதிலிருந்து வேலை ஏதும் ஓடவில்லை. தன் தந்தையின் போனிலேயே நின்றது மனம்.

ஒரு ரௌண்ட்ஸ் போயி வரலாம் என கிளம்ப… அப்போதுதான் வந்தான் தருண்பாண்டி. அவளின் மாமனார் வகையில் தூரத்து உறவு… தொழில் பழகட்டும் என அனுப்பிருந்தார் அவளின் மாமனார்.  

எத்தனை நாள் ஆனாலும் அவளால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர் அவளின் மாமனார் கமலநாதன். எப்போது எப்படி பேசுவார் என தெரியாது.  

எனவே அவரின் போக்கு மட்டும் இவளிற்கு இன்னும் விளங்கவே இல்லை. ஒரு சமயம் தன் தந்தை போல்…. ‘அப்பா பாக்குறவங்கள …. கல்யாணம் செய்துக்கணும்’ என்பவர்.

மறு சமயம் ‘தருண் என் பையன் மாதிரிம்மா, உன்னை நால்லா பார்த்துக்கிரானா’ என்பார். இந்த இரண்டை கேட்கும் போதோ, சொல்லும் போதோ குரலிலோ பார்வையிலோ வேறுபாடோ மாற்றமோ இருக்காது.  

ஆனால் தருணின் செயல் எல்லாம் வேலை செய்வதை தவிர இவளை பார்ப்பதாகவேதான் இருந்தது. கதிரேசன் இருந்தால்… இருக்குமிடம் தெரியாமல் இருப்பவன்.. அவர் இன்று வரவில்லை எனவும் அவள் முன் வந்து நின்றான்.

மாநிறமாக… தாட்டியமான உடல்வாகுடன்…. அவளை பார்க்கும் போது மட்டும் அந்த உருவத்திற்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு வழிசலான சிரிப்புடன் நிற்பான். இன்றும் அப்படிதான்… நின்றிருந்தான்.

எழுந்தவள்…. அறையினுள் இவன்.. வந்துடன் இன்னும் எரிச்சலானது தீபிக்கு. எப்போதும் அவனை பெரிதாக மதிக்கமாட்டாள். ஏன் அவன் அங்கு இருப்பதாக கூட காட்டிக் கொள்ளமாட்டாள்.

வந்தவன் “ஹாய்… எப்படி இருக்க…. தீபிகா… மாலினி பாப்பா… எப்படி இருக்கு…” என்றவன் அந்த சேரில் அமர்ந்து கொண்டே… “எங்க…. ரெண்டு நாளா காணம்… சொல்லிட்டு போக மாட்டியா…”  என உரிமை த்வனியில் கேட்க….

இத்தனை நாள் தன் மாமனாரை கருத்தில் கொண்டு மரியாதையாக நடந்து கொண்டவளுக்கு…. இன்று ஏனோ இந்த பேச்சை கேட்ட முடியவில்லை… தலை வின் வின் என தெரித்தது…. கண்மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வரத்தான் நினைத்தாள்.

ஆனால் திரும்பவும் தருண் “என்ன…. தீபிகா…” என ஏதோ சொல்ல வர… அவளின் டேபிள்லில் அவளின் கையில் தட்டு பட்டது…. அவளின் லேப்டாப்…. இருப்பதிலேயே அதுதான் வெயிட்டானது. தூக்கியாடித்தாள் அவன் மூக்கை குறி வைத்து.

எதிர்பார்க்காத இந்த தாக்குதலில்…. அவனால் லேசாகத்தான் நகர முடிந்தது…. அவனின் கன்னத்து பகுதியை பதம் பார்த்தே விழுந்தது அவளின் லேப்…. புசு புசுவென வீங்க தொடங்கியது.

அவனை நன்றாக முறைத்தவள் “நான் உன் அண்ணி…. இன்னொரு தடவ என் பேர் உன் வாயில் வந்தது…..” என்றவள் தனது சேரிலேயே சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அவன் மேலிருந்த பார்வையை விளக்காமல்.

தருணுக்கு சொல்ல முடியாத அவமானம். வலிக்காத மாதிரியே இன்னும் அமர்ந்திருந்தவன் “நான் பெரியப்பாவ…. பேச சொல்றேன்” என்றான். இவளும் அமைதியாக இருக்க. எழுந்து சென்றான் நிதானமாக ஒன்றுமே நடவாதவன் போல்.      

  

 

     

  

 

 

.

 

  

    

  

 

Advertisement