Advertisement

பௌர்ணமி வர்ணம் – 21

மறுநாள் காலை, எட்டுமணிக்கு தீபி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்… அப்போதுதான், வர்ணாவை தூக்கிய படி கீழிருந்து மேல் வந்ததான் ஈஸ்வர்.

தீபி பரபரப்பாக இருக்கவும், இன்று கமலநாதனை பார்ப்பதால் இந்த படபடப்பு என எண்ணி தன் வேலையை பார்த்தான் ஈஸ்வர்.

எனவே, வர்ணாவிடம் போனை கொடுத்து விட்டு, குளிக்க சென்றான். ஈஷ்வரின் போன் ஒலிக்க தொடங்கியது.

வர்ணா அதனை கட் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள். பத்து நிமிடம் சென்று வந்தவன். திரும்பவும் போன் ஒலிக்கவும் “ஏன் தீபா, அவகிட்ட இருந்து வாங்கி பார்க்க மாட்டியா, யாருன்னு” என கேட்க…

தீபி திரும்பி அவனை ஒருதரம் பார்த்து விட்டு, ஏதும் சொல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஷ்வரும் அவளின் பதிலை எதிபார்க்காதவனாக. வர்ணாவிடம் “குடுடாம்மா… யாரு பார்க்கலாம்” என மெதுவாக பேசியபடியே வாங்கினான் போனை. ஈஷ்வரின் அட்வகேட்டிடமிருந்து போன்… அதனை பார்த்தவுடன் பால்கனிக்கு சென்று பேச தொடங்கினான்.

தீபி இப்போது வர்ணாவை அழைத்து சென்று குளிக்க வைத்து… கூட்டி வந்திருந்தாள். இன்னமும் போன் பேசி முடியவில்லை ஈஸ்வர். தீபியின் போன் ஒலிக்க தொடங்கியது. வர்ணாவை கிளப்பிக் கொண்டே பேச தொடங்கினாள் தீபி.

வர்ணா அழகான ஜீன் த்ரீ போர்த்தில்… வைட் கலர் டாப்பில்… நின்றிருக்க. அவளின் தலையை வாரிய படி தீபி, போன் பேசியபடியே இருந்தாள்.

ஈஸ்வர் பேசி முடித்து உள்ளே வர… அவனிற்கு வந்த தகவல் இவன் எதிர்பார்ப்பது போல் நடப்பதாக தோன்ற… சின்ன புன்னகையுடனே உள்ளே வந்தான்.

தீபியையும் வர்ணாவையும் பார்த்தவன்… ஆசையாக, தீபியின் பின்புறம் வந்து அவளின் இடையில் ஒரு கை வைத்தபடி, மறு கையால் அவளின் மற்ற கையை பிடித்தபடி வர்ணாவிற்கு, தானும் தலை வாரிவிட தொடங்கினான்.

தீபி அவனை திரும்பி முறைத்தவள், அவனிடமே சீப்பை கொடுத்துவிட்டு, தனியே சென்று போனில் பேச தொடங்கினாள்.

ஈஸ்வர் சிரித்தபடியே தன் பெண்ணிற்கு தலை வாரி, அவளின் மிக்கி பௌவ் வைத்து அழகு பார்த்தவன்… இன்று எல்லாம் என் வசம் என எண்ணி வர்ணாவை உச்சிமுகர்ந்தான்.    

வர்ணாவும் அவனிடம் “ப்பா… குத்து…” என சிணுங்கினாள். ஈஸ்வர் சிரித்தபடி “அப்பாக்கு, ஒரு முத்தா குடுடா…” என்க.

வர்ணாவும் தீபியை பார்த்து திருட்டு முழி முழித்துவிட்டு ரகசிய குரலில்  “ப்பா, ப்ரிஜ்ல… பாத்தி… ரோஸ் மில்க்… வைச்சிக்கா…. எனக்கு மட்டும் தரவேயில்ல… நீ தரியா..ப்பா…” என பேரம் பேச தொடங்கினாள்.

கண்ணை உருட்டி உருட்டி தனது குட்டி தேவதை, ஆசையை சொல்லும் போது, மறுக்க தோன்றுமா… தந்தைகளுக்கு. ஈஸ்வர்க்கு தன்போல் தலை, சம்மதத்தை சொல்ல…

வர்ணா, கட்டிலிலிருந்து எட்டி தாவி “ப்பா… சூப்பர்த் ப்பா“ என அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, அவன் முத்தம் தந்த போது குத்துகிறது என சொன்ன அவனின்… மீசை முடிமீதே… முத்தம் வைத்தாள் அவனின் பொன்மான்.        

ஈஸ்வர் வர்ணாவை ஆசையாக அள்ளிக் கொண்டவன்… தனது இறுகிய கன்னங்களிரண்டிலும் … தன் மான்குட்டியின்.. அன்பு பரிசை வாங்கியபடி கீழே சென்று, அவள் கேட்ட அந்த ரோஸ் மில்க்கை எடுத்து கொடுத்துதான் நிமிர்ந்தான்.

ஆனந்தி “ஏண்டா காலையிலேயே கொடுக்கற, சாப்பிட மாட்டாடா… மதியம் கொடுக்கலாம்” என கடிய..

ஈஸ்வர் “பரவாயில்லாம்மா…. ஒரு நாள்தானே…. விடும்மா” என்றபடி மடக் மடக்கென அந்த குளிச்சியை அப்படியே விழுங்கும் தன் மகளையே பார்த்திருந்தான் ஈஸ்வர்.

தீபி கீழே வந்தாள்… பூஜை அறை சென்று இரண்டு நிமிடம் சென்று, நேரே டைனீங் அறைக்கு வந்தாள்… அப்போதுவரை குளித்து முடித்து… இன்னும் உடை கூட அணியாமல், தன் மகளுக்கு குடிக்க கொடுத்து விட்டு அவளின் வாயை துடைத்து விட்டுக் கொண்டிருந்தான் ஈஸ்வர்… இடுப்பில் டவலை கட்டியபடி.

தீபி அவனை முறைத்தபடியே, “அத்த… நான் பாண்டிசேரி போறேன்… ஈவ்னிங்தான் வருவேன்… அவரும் வெளியே போறாரு போல, வர்ணாவை பார்த்துக்கோங்க அத்த, ரொம்ப அழுதா சொல்லுங்க அம்மாவ வர சொல்றேன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் அவளின் பேச்சை கேட்டவன் “என்ன தீபா, எங்க போற, நான் நைட் சொன்னேனே… கமலநாதன் வருவாரு இப்போ… நீ இங்க இருக்கணும்” என்றான்.

தீபி அவனை பார்த்து “நான் எதுக்கு இங்க, அவரு வந்தா மாமாவும் நீங்களும் பேசுங்க…. எனக்கு வேலையிருக்கு,

இன்னிக்கு பாண்டிசேரி சைட் பார்க்க, பில்டர்ஸ் வராங்க… நான் கண்டிப்பா இருக்கனும்” என்றாள். அழுத்தமாக

ஈஸ்வர், கத்த தொடங்கினான் “ஏண்டி இப்படி படுத்தற, நான் சொன்னேன்ல்ல, இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாலுன்னு… நீபாட்டுக்கு கிளம்பி போற” என தொடங்க..

தீபி “ஏங்க, எனக்கு என்ன வேலையிருக்கு இங்க,

நீங்கதான் பேசணும் அவர்கிட்ட, அப்புரமாதானே சைன் பண்ணனும் இன்னிக்கு இல்லையே…. சைன் பண்றப்போ நான் வரேன்… நீங்க பேசுங்க…

என் அப்பா வந்திருகாங்க… பெரியவங்க பேசுங்க…. நீங்க பாருங்க, எனக்கு அவசரம்ங்க.. நான் சீக்கிரம் வர பார்க்கிறேன். ப்ளீஸ்” என கெஞ்ச தொடங்கினாள்.

ஈஸ்வர் “என்னமோ செய்… உன் இஷ்ட்டம்… கிளம்பு… கிளம்பு” என கத்தியபடியே மேலே சென்றுவிட்டான்.

கார்த்தியாயினி பாட்டி வந்து தீபியிடம் “ஏன்ம்மா… அவந்தான் இருன்னு சொல்றான்ல்ல… நீ ஏன் அடம் பிடிக்கிற” என்றார்.

தீபி “கமலநாதன் என்னை பார்த்தா, இன்னும் அதிகமா கோவபடுவார் பாட்டி…

அப்புறம் புவன் கேட்கவே வேண்டாம்… ஏதாவது பேசிட்டா… பயமா இருக்கு பாட்டி… அவர் செய்து வைச்சிருக்க வேலைக்கு….” என சொல்லி ஒரு பெருமூச்சுடன் நிறுத்த…

பாட்டி “அப்படியெல்லாம் இல்லமா, நீ இங்க இருந்தாலே அவன் அமைதியா இருப்பான்… ” என்றார் அமைதியாக அவளை பார்த்தபடி.

தீபி நேர்பார்வையாக அவரை பார்க்க…. “ஈஸ்வர் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கான்ம்மா இந்த சந்தர்ப்பத்துக்கு,

அவன் கமலநாதனுக்கு எதிரா என்ன செய்தான்னு தெரியல…

ஆனா எதா இருந்தாலும் நீ இல்லாம எப்படி பேச முடியும் அவனால, நீயும் வர்ணாவும் முக்கிய ம்மா அவனுக்கு….

வேற எதையும் போட்டு குழப்பிக்காம, இங்க இரு, மத்தத பெரியவங்க பார்த்துப்பாங்க” என்றார் வேண்டுதலாக ஆரம்பித்த அவரின் குரல், இறுதியில் கட்டளையில் முடிய… தீபி தலையை உருட்டி சம்மதம் சொன்னாள்.

நேரம் சென்றது ஈஸ்வர் போன் பேசிக் கொண்டிருந்தான்… எல்லோரும் தயாராகவே இருந்தனர். கதிரேசன் இங்கு ஈஸ்வர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வர்ணா “தாத்தா  “ என ஆசையாக வந்து ஒட்டிக் கொண்டாள். சுந்தரி அம்மாவும் வந்திருந்ததால்… வர்ணாவிற்கு செல்லம் கொஞ்ச நேரம் போதவில்லை…     

ஈஸ்வர் வரவேற்றதுடன் சரி, இறுகி போய் அமர்ந்திருந்தான், அவன் கண்ணில் இன்னும் தீபி படவில்லை. கதிரேசன் பொதுவான நலம் விசாரிப்புக்கு பிறகு தன் மாப்பிள்ளையிடம் “விடுங்க தம்பி… நீங்க செய்தது சரிதான், வரட்டும்… போன்ல பேசும்போதே பாதி காரைஞ்ச்சிட்டான்… மீதிய நாம பேசிடலாம்….” என்றார் தெளிவாக.

ஈஸ்வர் இறுக்கமாகவே அமர்ந்திருந்தான்… முகத்தில் தீபி தன்னுடன் இல்லையே… எப்படி செல்லலாம் என்றே ஓடிக் கொண்டிருந்தது.

“இதோ இப்போது வேறு கமலநாதன் வந்து விடுவார்… வரட்டும் வாயே திறக்க கூடாது அவர்” என்றும், தீபியின் மேல் உள்ள கோவமும் அவர்மேல் சேர்ந்து கொள்ள, தன் மாமனாரின் பேச்சிற்கு “ம்…” கொட்டி அமர்ந்திருந்தான். எதுவும் பேசாமல்.

முதலில் கமலநாதனின் அட்வகேட் வந்தார். அதனை தொடந்து கமலநாதன், தருணின் தந்தை… இன்னும், சில பெரியவர்கள் என ஐந்து நபர்கள் வந்தனர் அவர்கள் சார்பாக.

ஏனோ கமலநாதன் அலட்டிக் கொள்ளவில்லை… அமைதியாக அமர்ந்தார். தருணின் தந்தைதான் “இவ்வளவு தூரம் சென்றிருக்க வேண்டாம்…” என்றார் ஆற்றாமையாக.

தீபி இப்போதான் உள்ளிருந்து வந்து ஈஷ்வரின் அருகில் நின்றபடி வரவேற்றாள்… ஈஸ்வர் அவளையே அதிசியமாக பார்க்க தொடங்கினான். பின் இயல்புக்கு மாறி, ஒரு திடமாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். முகத்தில் மாற்றமில்லை ஆனால், உடல்மொழியில் தீபியின் இருப்பு அவனை திடமாக்கியதோ.

ஆனந்தி, தானே அனைவருக்கும் குடிக்க காபி எடுத்து வந்து தந்தார்.

தருணின் தந்தையின் கேள்விக்கு, யாருக்கும் பதில் சொல்ல விருப்பமில்லை போல, அமைதியாக அமர்ந்திருந்தனர். அந்த நிமிடங்களை கடக்க அனைவரும் பாணத்தை பருக தொடங்கினர்.

சங்கடமான நொடிகள்தான், இதை ஈஸ்வர்தான் கொண்டுவந்தான், ஆனால் வேறு வழியும் இருக்கவில்லை அவனிற்கு. பொறுமையாக கமலநாதன்போல் செயல்பட, அவனிடம் நேரமில்லை… எனவேதான் இந்த அதிரடி….

ராமலிங்கத்திற்கு, இது உறவை பிரித்து வைக்கும், பகையைதான் வளர்க்கும் என நினைத்தார்…. ஆம், கதிரேசன் போன் செய்து ஈஷ்வரின் செயல்களை தனது சம்மந்தியிடம் கூறியிருந்தார்.

மற்றபடி ஈஸ்வர் தனது மனைவி தவிர யாருக்கும் சொல்லவில்லை தருணை கடத்தியது பற்றி.

பின், ஈஷ்வரின் அட்வகேட் சில பத்திரங்களை அவர்கள் முன் வைக்க… கமலநாதனின் அட்வகேட் எல்லாவற்றையும் படித்து காண்பித்தார் சத்தமாக.

அதில் முதலில் தீபியின் சார்பாக இருந்தது. வர்ணா பெயரில் உள்ள எந்த  சொத்திலும், எந்த உரிமையும் கோரமாட்டோம் என எழுதி இருந்தது.

இது கமலநாதன் பெயருக்கு முற்றிலுமாக மாற்றப்படும் என எழுதப்பட்டது.

ஆனால், எப்போது வேண்டுமானாலும் வர்ணாவை பார்ப்பதற்கு கமலநாதன் குடும்பம் வந்து செல்லலாம் என சொல்லப்பட்டது.

மற்றபடி வேறு எதுவும் வர்ணாவின் விஷயத்தில் அவர்களுக்கு முடிவெடுக்க உரிமையில்லை என எழுதப்பட்டது. அதில் தீபியும் கமலநாதனும் கையெழுத்திட்டனர்.

இது பெரிய விஷயமாக தெரிந்தது கதிரேசனுக்கு. அப்பாடா என பெருமூச்சு விட்டார் அவர். எங்கே கலாட்டாக்கள் செய்து விடுவார்களோ என பயந்தவர் கதிரேசன்தான்.

என்னதான் அரசியல் பலம் இருந்தாலும், குடும்பம், சொந்தம் என வரும்போது…. சற்று அமைதியாகத்தான் இருந்தார் கதிரேசன். ஏனெனில் கமலநாதனை பற்றி அனுபவத்தால் உணர்ந்தவர் அவர் மட்டுமே.  

கமலனாதனிடம் ஈஷ்வரின் அட்வகேட், “அவர்களுக்கு வர்ணாவை தத்தெடுப்பது குறித்து எந்த மறுப்பும் இல்லை” என்ற கடிதம் பெறப்பட்டது. கூடவே “எந்த வகையிலும் தொந்தரவு தருவதில்லை” என்ற கடிதமும் பெறப்பட்டது.

ஆக எல்லாவகையிலும் ஈஸ்வர், கமலநாதனிடமிருந்து பூரணமாக வர்ணாவையும் தீபியையும் விலக்கி, தனக்கு சொந்தமாக்கி கொண்டான்.

இப்போதுவரை ஈஷ்வரும் கமலநாதனும் எந்த இடத்திலும் பேசவில்லை. இருவரும் அமைதியாகவே இருந்தனர். அது மற்றவர்களுக்கு நிம்மதியாக கூட இருந்தது.

இப்போது தருணின் தந்தை “என் மகனை இன்னும் கண்ணில் காட்டவில்லை” என்றார் சற்று குரலை உயர்த்தி.

இப்போதும் ஈஸ்வர் வாயை திறக்கவில்லை… அவனின் அட்வகேட்தான் “உங்க வீட்டில், போன் செய்து கேளுங்கள்” என்றார் ஒரே வார்த்தையாக.

கதிரேசனும், ராமலிங்கமும்தான் பொறுமையாக கமலனாதனிடம் பேசினர்… ஈஷ்வரின் நிலை குறித்து சற்று விளக்கி, இதை இப்படியே மறந்துவிடும் படி கூறினர்.

கமலநாதனுக்கு சற்று சங்கடமாக இருந்தாலும் ஒரு மணி நேர பேச்சு வார்த்தையில் சற்று இலகியவராக “ஏதோ நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், என் பேத்தியபத்தி யோசிக்கலை” என வருந்தினார். கூடவே “இனி என்னால் எந்த தொல்லையும் இருக்காது” என்றார் உறுதியாக.

அந்த வார்த்தையே போதுமானதாக இருந்தது மணமக்களின் தந்தைகளுக்கு… அதன் பிறகு வீட்டு விருந்தனராக கமலநாதனை சிறப்பாக கவனித்தனர் ஈஷ்வரின் குடும்பமும், தீபியின் பெற்றோரும்.

மதியம் உணவு முடிந்தே சென்றார் கமலநாதன். தருணின் தந்தை அப்போதே கிளம்பிவிட்டார். மற்ற எல்லோரும் கிளம்பியாகிற்று… கமலநாதன் தவிர.

கமலநாதன் இருந்து, சற்று பேசி, உறவை முறித்துக் கொள்ளாமல், அமைதியாக தன் பேத்தியுடன் நேரம் செலவழித்து சென்றார். அதனை யாரும் தடுக்கவில்லை… சொல்லபோனால் ஈஸ்வர் அதனை அனுமதித்தான்.

பாட்டி உற்பட பெரியவர்கள் அனைவரும் பயந்ததிற்கு நேர்மாறாக… கமலநாதனின் செயல் அமைதியாகவே இருந்தது.   

அவர் இருந்ததால், ஈஸ்வர் மேலே சென்றுவிட்டான். ஒரு சாதித்த நிம்மதி அவனிடம், அதை யாரிடமும் காட்டாமல், அமைதியாக சென்று உறங்கிவிட்டான்.

கமலநாதன் கிளம்பும் முன் தீபியிடம் தனிமையில் சற்று பேசினார்… தன் பேத்தியை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார். வர்ணாவிற்கென தனியாக கத்தை பணத்தை கொடுத்து “எதாவது வாங்கி கொடும்மா” என்றார். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் தீபி. அமைதியாக விடைபெற்று சென்றார்.

அப்பாடா என்றனது அனைவருக்கும்… அரைமணி நேரம் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர் அவரவர் சிந்தனையில்.

ஆனந்திதான் முதலில் சுதாரித்து தீபியிடம் “போம்மா, இன்னும் ஈஸ்வர் சாப்பிடலை, கூப்பிடு அவனை “ என்றார்.

வர்ணா இன்னும் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தாள், தீபி வர்ணாவிடம் “அம்மு வா அப்பாட்ட போலாம்” என அழைக்க… மற்றவரின் காதுகளுக்கு எப்படியோ கதிரேசனுக்கும், சுந்தரிக்கும் இன்ப தேன் வந்துதான் பாய்ந்தது காதில்.

வர்ணாவும் ஆசையாக துள்ளி வர இருவரும் ஈஸ்வரிடம் சென்றனர்… ஈஸ்வர் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்… வர்ணா போகும் போதே “ப்பா, ப்பா..” என சத்தத்துடன் செல்ல, விழித்துக் கொண்டான் ஈஸ்வர்.

வர்ணா “ப்பா, பாட்டி சாப்பட கூப்ட்டாங்க…” என மழையில் மிழற்ற… ஈஷ்வர் அதனை ரசித்து “ம்..” என்றான்.

திரும்பவும் வர்ணா அதே மழலையில் சொல்ல… ஈஸ்வர் “அப்பாக்கு தூக்கம் வருதே, அப்புறமா சாப்பிடுறேன்னு பாட்டிகிட்ட சொல்லு” என்றான்.

வர்ணா “மம்மு சாப்பிட்டாதான் தூக்கம் நல்லா வரும்… சாப்பட்டு தூங்கலாம்” என அவளும் பொறுமையாக சொல்ல, அவனும் எழாமலே வர்ணாவிடம் பேச்சை வளர்க்க, அந்த மான்குட்டியும் தந்ததையை அரட்டி, மிரட்டி எழ வைத்தாள்.

அவன் திரும்பவும் படுக்க போக, “ம்மா…. வா.. வா… ப்பாவ தூக்கு… தூக்கு” என அழைக்க, இத்தனை நேரம் இவர்களை ரசித்திருந்த தீபி அருகினில் வந்து ஈஸ்ரின் முதுகை பிடித்து தள்ளி நிற்கவைக்க,

வர்ணா கை தட்டியபடி, நின்ற ஈஸ்வரை, கைபிடித்து அழைக்க தொடங்கினாள் “வா ப்பா…” என.

இப்போதும் ஈஸ்வர் தீபியை கண்டுகொள்ளவில்லை. தீபி வர்ணாவிடம் “அம்மு, இரு அப்பா, பிரஷ்ஷாகி வருவாங்க…” என்றாள்.

ஈஷ்வரும் ரெஸ்ட் ரூம் சென்று வந்தவன், வர்ணாவிடம் “வாங்கடா, நாம கீழ போலாம்” என சொல்லியபடி தனது மான்குட்டியை தூக்கியபடி திரும்ப…

செல்லும் அவனை, பின்னாலிருந்து…. தீபி அணைத்திருந்தாள் கண்ணில் நீர் கோர்க்க.

அவன் இது வரை பேசாது இருந்தது ஏதோ செய்ய, தன் மேல்தான் தவறு என எண்ணி,  என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக இருந்தவள்… அவன் போகிறான் எனும்போது மனது கேட்டகாமல் அணைத்திருந்தாள்.

தீபிக்கு இரவிலிருந்தே.. அவன் மனது சொல்லிய வார்த்தையில், மிகவும் அமைதியாகியது அவளின் மனம். நாங்கள் இருவருமே அவனை ஈர்த்திருக்கிறோம்… இதில் யாருக்காக யாரை பிடித்தால் என்ன…. அவனின் மனைவியாக அதுதான் எனக்கு கெளரவமே… என தெளிந்தாள் தீபி…

எனவே காலையில் எப்படி இருந்தாலும் ஈஸ்வர் பார்த்துக் கொள்வான் என நினைத்தாள். மற்றபடி அவனை விட்டு தன் வேலைகளை பார்க்கும் எண்ணம் இல்லை அவளிடம்.

ஆனால் ஈஸ்வர்க்கு, “தான் நேற்று சொன்னது ஏதோ பிடிக்கவில்லை போல” என நினைத்துவிட்டான். அதனால்தான் அவள் தன் வேலை பார்க்க செல்கிறாள் என்ற எண்ணம் வந்தது. எனவே பேசாமல் விட்டுவிட்டான்.

கமலநாதன், வந்த பிறகு ஹாலில் அவளை பார்த்தது அவனிற்கு, ஏதோ சொல்லமுடியாத தொம்பை தந்தது என்னமோ உண்மைதான்… ஆனாலும், “நான் இருன்னு சொல்லி இவள் எப்படி கிளம்பறேன்னு சொல்லம்ன்னு” ஒரு கோவம் அவனிடம், அதுவே… இதுவரை அவனை படுத்துகிறது.  

எனவே, ஈஸ்வர் “விடுடி… எனக்கு பசிக்குது” என்றான். அவளின் அணைப்பை ஏற்காது.

 

 

  

Advertisement