Advertisement

பௌர்ணமி வர்ணம் – 11

பாட்டி ஈஸ்வரை தேடி சென்றார். அங்கு ராமலிங்கத்தின் அறையில் வர்ணாவுடன் அமர்ந்திருந்தான்… கூடவே தன்யாவும் சித்தும் இருந்தனர்.

சித் ஈஸ்வரிடம் “யாரு சித்தப்பா…இது “ என்றான் வர்ணாவை காட்டி.

ஈஸ்வர் “உன் தங்கை… என்னோட பொண்ணு” என்றான்.

சித் ”இவ்வளோ நாள் எங்க இருந்தாங்க….” என்றான். அவனின் யோசனையில் விளையாட்டு தனம் மட்டுமே….

தன்யா… ஈஸ்வரிடம் வரலாமா வேண்டாமா… என சித்துடன் நின்று தன் சித்தப்பாவையே பார்த்திருந்தாள்… கோலிகுண்டு கண்களால்.

தன்யாக்கு…. தன் சித்தப்பா மேல் பயமே இல்லாமல் சாய்ந்திருக்கும்…. பாப்பாவை பார்க்க… ஏதோ போல் இருந்தது ’அப்படின்னா…. நம்மையும் ஒன்னும் செய்ய மாட்டாங்களா….’ என நினைத்து வர்ணாவையும் தன் சித்தப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் இப்போது தன்யாவை பார்க்க…. அவளும் பயமின்றி தன் சித்தப்பாவை பார்த்துக் கொண்டிருந்தாள்… ஈஸ்வர் “இங்க வாங்க ஸ்ரீ…” என்றான்.

மெதுவாக தன் அண்ணனின் கை விட்டு ஈஷ்வரின் அருகில் சென்றாள். அவளையும் இப்போது தூக்கி தன் மடிமீது அமர்த்திக் கொண்டான்… வர்ணா இப்போது “க்கா…. ப்பூவன்… அக்கா…” என தன்யாவின் கைபிடித்து கீழே இறங்கி விளையாட தொடங்கினர் இருவரும்.  

ஈஸ்வர் இப்போது சித்தார்த்தை பார்த்து “இது வரை கோயம்புத்தூர்ல இருந்தாங்க, நான் இப்போதானே வந்தேன்… அதான் நம்ம கூட வந்துட்டாங்க” என்றான் நேரே சித்தார்த்தின் கண் பார்த்து….. நம்பிக்கையான உடல்மொழியால்… சொன்னான். இன்னொரு முறை இந்த விஷயத்தில் சித்திற்கு சந்தேகம் வர கூடாது என பொறுமையாக சொன்னான்.

வர்ணாவிடம் “அண்ணா சொல்லுடா.. ” என்றான் ஈஸ்வர். வர்ணா, ஆசையாகவே அழைத்தாள் “ண்ணா…” என சித்’தான் சற்று தயங்கினான். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைதானே…. அதுவும் ஒரு பதினைந்து நிமிடம்தான்   அதன்பின் மூவரும் அடிதடி ஆட்டம்தான்… ஈஸியாக இணைந்து கொண்டனர் குழந்தைகள்.

தீபி மேலே சென்றாள்…. அவளிற்கு இப்போதே வீட்டிற்கு சென்றாள் தேவலாம் போல் ஒரு எண்ணம், தனிமை தேவையாக இருந்தது. தன் நட்புகளை கூட பார்க்க முடியவில்லை. ஏதோ மனம் முழுக்க… ஒரு நெருடல்… யாரோ ஒருவரின் இசைக்கு தான் மயங்குவதாக தோன்றியது.

இப்படியேதான் குறு குறுப்பில் கதவை திறந்தாள் தீபி, திறந்து உடன்… முச்சடைத்தது தீபிக்கு… நல்ல பெரிய அறை… நடுவில் ஒரு கட்டில் அதை தவிர ஒரே ஒரு கபோர்ட்… கதவை திறந்த உடன் இடதுபுறம் ஒரு மினி ப்ரிட்ஜ்…..

கதவின் வலப்புறம் ரெஸ்ட் ரூம்… அதற்கு நேர் எதிரே பெரிய பால்கனி.. ரெஸ்ட் ரூமை ஓட்டினார் போன்று மூலையில் ஒரு செல்ப்… அதில் அவன் வாங்கிய பரிசு கோப்பைகள்… ப்ரம் செய்யப்பட்ட செர்டிபிகேட்கள், குரூப் போட்டோக்கள் என அழகாக இருந்தது…. அதுதான் அவளின் அதிர்ச்சிக்கு காரணம்.

மற்றபடி… சுத்தமாக துடைத்து வைத்த அறை… அவன் துடைத்த துண்டு கூட…. அங்கு இல்லை, பெர்ப்யூம், சீப்பு என  எல்லாம் அது… அது… அந்தந்த இடத்தில் அனைத்தும் சுத்தம்… அனைத்தும் நேர்த்தி….

மெதுவாக ரெஸ்ட்ரூம் சென்று வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் தீபி. எங்கே பார்க்க கூடாது, எதை கண்டுகொள்ள கூடாது என நினைத்தாளோ அங்கேயே அவளின் கண்கள் சென்றது.

அந்த கட்டம் போட்ட சட்டத்தில் இருந்த அவனின் செர்டிபிகேட்கள் அவளை இழுக்க தொடங்கியது…. அருகில் சென்று பார்க்க தொடங்கினாள்.

வரிசையாக நின்று…. ஒரு பெரிய கோப்பையை ஏதோ மில்டரி ஆபீசர் தர இவன் வாங்கிக் கொண்டிருந்தான் NCC டிரஸ்ஸுடன். கீழே பத்தாம் வகுப்பு ஊர் பெயர்… வருடம் ஆகியவை எழுதி இருந்தது. இப்படியே அடுத்தடுத்த வகுப்பு போட்டு, போட்டோஸ்.

அதே மிடுக்கான முகம் இப்போதும்… அதே விரட்டும் த்வனி இப்போதும்… எங்கேயும் மாறவில்லை அவன். என்ன நான் பேச வந்தாலே விலகி செல்வான்… இப்போது தானாகவே வந்து திருமணம் செய்து நிற்கிறான்.

நான் நினைவில் இருக்கிறேன் போல… அப்படியே நினைவிலேயே இருந்திருக்கலாம்…. இரக்கம் காட்டி இருக்க வேண்டாம் என அவளின் நினைவு…. அந்த போட்டோவின் பின்னோடு செல்ல இருந்ததை தடுத்து நிறுத்தினாள்.

அடுத்தது ஒரு மில்டரி பட்ச் குரூப் போட்டோ.. அனைவரும் மில்டரி உடையில் செருக்குடன்…. கேப் சகிதம் நிமிர்ந்து… நிற்கும் அழகான புகைப்படம்… அதில் எல்லோரும் ஒரே மாதிரி தெரிந்தனர். அவனை தேடி வருடியது அவளின் சுட்டு விரல்….

இப்படி நிறைய கேடயம்…. கோப்பை என நிரம்பி வழிய…. இறுதியாக மூன்று ப்யில் இருந்தது…. பிரித்து பார்க்க…. எல்லாம் செர்டிபிகேட்கள்….

ரன்னிங் ரேஸ் தொடங்கி… கபடி, வாலிபால் NCC என நிறைய…. மொத்தம் 167 செர்டிபிகேட்கள் கிட்ட தட்ட ஒருமணி நேரம் பார்த்தாள் அதனை மட்டுமே.

ஏனோ மனது கொஞ்சம் இறுக தொடங்கியது. எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு… பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.

சுழல தொடங்கிய மனதை, ஓரிடத்தில் நிறுத்த தொடங்க அது முடியவே இல்லை…. இப்போதும் ‘யாரோ ஒருவரின் இசை…. எனக்கானது அல்ல…’ என மனதுள் சொல்ல தொடங்கினாள்… ‘எனக்காக இல்லை, எதுவும் எனக்காக இல்லை….’ என அழுத்தி சொல்லிக் கொண்டாள்.  

தூங்கும் வர்ணாவை தூக்கியபடி தன்னறைக்கு வந்தான் ஈஸ்வர்… அறை திறந்திருக்க… மெல்ல அவளை கட்டிலில் கிடத்தி… கதவை சாற்றி AC போடுவதற்காக பால்கனி கதவையும் சாற்ற செல்ல அங்கு ஓரமாக நின்று… எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் தீபி.

ஈஸ்வர் “உள்ள வா தீபா…” என்றான்.

சின்ன திடுக்கிடுதலுடன்  தீபி பார்க்க.. நின்றிருந்தான் ஈஸ்வர்.  அமைதியாக நின்றாள் அங்கேயே…. தீபி உள்ளே வருவதாக தெரியவில்லை ஈஸ்வர்க்கு. இவனும் ஏதும் சொல்லாமல் கதவை சாற்றி விட்டான்.

தீபி நின்றிருந்த அந்த பால்கனி வழியாக பெரிய அப்பார்ட்மென்ட், சில வீடுகளின் முகப்பு எனதான் தெரியும்… எனவே அதனயே வெறித்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்று ‘புவன் சென்றிருப்பான்’ என தீபி உள்ளே செல்ல….

அங்கே குழந்தையை ஒட்டி… தலைக்கு மேலே கைகளை வைத்தபடி…  ஷார்ட்ஸ்க்கு மாறி… ஒரு க்ரே கலர் டி ஷர்ட்டுடன் உறங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

அப்படிதான் தெரிந்தது தீபிக்கு… அமருவதற்கு வேறு…. ஒன்றும் இல்லாததால்… கட்டிலின் மறுபக்கம் சென்று அமர்ந்தாள்… போனை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்…

திரும்பி படுத்தான் ஈஸ்வர்… இப்போது அவனின் கண்கள் அவளையே பார்க்க தொடங்கியது… ஒரு சில நொடிகளில் கண்டு கொண்டாள் தீபி… எழுந்து நின்றுவிட்டாள் பொருக்க முடியாமல்…

உள்ளே இவ்வளவு நேரம் கனன்றது எல்லாம் ஈஷ்வரின் பார்வையில் விமோசனம் பெற… அவளின் உதடுகள் இறுகி துடிக்க “எப்படியோ வாழ்க்கை கொடுத்திட்டீங்க….” என்றாள் எதுவும் என்னை பாதிக்காது என்ற த்வனியுடன் வந்தது வார்த்தை.

ஈஸ்வர் நிமிர்ந்து படுத்துக் கொண்டான்… அவனை அறியாமல் ஒரு  பெருமூச்சு எழுந்தது. லேசாக திரும்பி அவளை பார்த்தான் ஈஸ்வர்….

பதில் வேண்டும் என அழுத்தமாக அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்த்து நின்றிருந்தாள் தீபி.

என்ன சொல்லுவது என தெரியவில்லை ஈஷ்வருக்கு…. “எடுத்துகிட்டேன்…. அவ்வளவுதான்…” என்றான் மெல்லிய குரலில் அழுத்தமாக கண்களை மூடியவாறே….

அப்படி ஒரு வெறுமை… தீபியின் உடலில் தெரிய…. தொய்ந்து போய் அமர்ந்துவிட்டாள் கட்டிலில்.. ‘எப்படி பதில் சொல்றான்…’ என ஓய்ந்து போனது தீபிக்கு.

பூரணி “கொழுந்தனாரே…. தம்பி…” என மெதுவாக கதவை தட்டியபடி அழைக்கும் சத்தம் கேட்டது. ஈஸ்வர் கண்களை திறக்கவில்லை. தீபிதான் போய் கதவை திறந்தாள்.

ஏதோ இருவரும் பேசும் சத்தம் கேட்டது…. திரும்பவும் கதவை சாற்றும் சத்தம் கேட்டது. உள்ளே வந்த தீபி “எல்லோரும் கிளம்பிட்டாங்களாம்…. மதியம் விருந்துக்கு கிளம்ப சொன்னாங்க….” என்றாள்.

இவனும் ஏதும் சொல்லவில்லை…. அவளும் ரெஸ்ட்ரூம் சென்று பிரஷ்ஷாகி வர…. ஈஸ்வர் எழுந்து ரெஸ்ட்ரூம் செல்ல, இவள் வெளியே கதவை தாள் போட்டுவிட்டால்…

கடகடவென புடவை மாற்றினாள் சரியாக ப்ரில்சை வைக்கும் நேரம் கதவை தட்டினான் ஈஸ்வர். தீபி மனதுள் ‘தட்டட்டும்…. நல்லா தட்டட்டும்…” என நினைத்துக் கொண்டு… சரியாக கட்டி முடித்து கதவை திறந்தாள்.

மெல்லிய சிரிப்புடன் வெளியே வந்தவனது காதில் ஏதோ முனு முனுப்பு சத்தம்…. கூடவே…. வளையலின் சத்தம்… அவள் புடவையை உதறி மடிக்கும் போது… அப்படி இப்படி என கைகை ஆட்டும் போது அவனை இம்சிக்க தொடங்கியது.

மேலும் ஒரு பாக் கீழே இருந்தது. அதன் மேல் இருத்த மல்லிகை… அந்த ac அறை முழுவதும் நிறைய…. மணம்… ஈஸ்வர்க்கு தனது அறையே இப்போது அன்னியமாய் தெரிந்தது.

இது இனி இப்படி தானோ… நான் பழகிக்கொள்ள வேண்டுமோ… என முயன்று… தனக்குள் சொல்லிக் கொண்டிருக்க ….

தீபி தனது ஐயன் செய்த கூந்தலை… சிறிய கேச் கிளிப்பில் அடக்கி, காலையில் வைத்த அதே பொட்டை திருத்தி வைத்து… அவர்கள் கொடுத்த மல்லிகை பூவில் சிறிதாக…. கத்தரியால் கத்தரித்து வைத்துக் கொண்டு தூங்கும் வர்ணாவை தூக்கி கொண்டு வெளியே சென்று விட்டாள்.

ஈஸ்வர் பெ… பே..பேவென விழித்தபடி நின்றிருந்தான். இவ்வளவு நேரம் வெளியே நின்றிருந்த கோவம் இப்போதுதான் அவனுள் ஒட்டியதை போல… “தீபா…. இரு…. “ என்க

அவள் அடுத்த அறைதாண்டி.. அங்கிருந்த ஹாலை தாண்டி கீழே இறங்க கால்களை படியில் வைத்திருந்தாள்… பின்னோடு ஆவேசமாக வந்தவன் அவளின் முழங்கையை பற்றி “சொல்லிகிட்டே இருக்கேன்…” என சற்று சத்தமாக சொல்லி… மேலே இழுத்தான்…

வர்ணாவுடம் அவன் மேலேயே விழுந்தாள் தீபி… ’டங்ன்னு’ சத்தம் கேட்கல அவ்வளவுதான் மற்றபடி இரும்புதான் என நினைத்தாள் தீபி, வர்ணா தூக்கத்தில் “ம்மா…மா” என்றாள்… இவன் நெஞ்சில் மோதியதால், இவன் இன்னமும் உறுத்த விழித்தான் தீபியை…

தீபியும் “என்ன..” என அலட்சியத்துடன் கேட்க…. அவளின் பிடியை விடாது ரூம்மிற்கு அழைத்து வந்தவன்… கதவை சாற்றி… “இரு சேர்ந்து போலாம்…” என்றவன் தானும் ரெடியாக தொடங்கினான்.

இதெல்லாம் கீழே நன்றாக கேட்கதான் செய்தது. யாரும் எதுவும் கேட்காத மாதிரியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஈஸ்வர் கொஞ்ச நேரத்தில் ரெடியாகி…. வர்ணாவை அவளிடமிருந்து வாங்க…. விழித்துக் கொண்டாள் வர்ணா. தீபி “அம்மு… தோ தோ… போலம்ம்டா….” என தட்டி கொடுக்க… முகத்தில் அத்தனை தாய்மை.

கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ஈஸ்வர்… அவளின் இறுக்கங்கள் தளர… தன் பெண்ணிடம் மட்டும் கவனம் குவிய…. தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு குழந்தையின் முதுகை வருட….

நின்றபடியே கரைந்து கொண்டிருந்தான் ஈஷ்வர்…  ‘இவ்வளவு நாள் தனியாக எப்படி தவித்தாளோ..’ என எண்ணியவன் தாயவளின் தலையை வருட தொடங்கினான் மென்மையாக, அவன் கைபிடிக்கும் போது தீபி நினைத்தாளே… இவன் இரும்பேதான் என…. ஆனால் இப்போது… குழைந்து வெண்ணையாய்…. நீவியது அவன் விரல்கள்…. அவள் கேசத்தில்.

பட்டென நிமிர்ந்தவள் “இரக்கம்… வேண்டாமே எனக்கு… ப்ளீஸ்” என்றாள் இறைஞ்சுதலாக தீபி. சட்டென கையை எடுத்துக் கொண்டான் ஈஸ்வர்… இங்கே யார் காயம் படுத்தபட்டனர், காயம்பட்டனர்  என தெரியவில்லை.

பின் தன்னிரு கைகளையும் தட்டி விட்டு நிமிர்ந்து கொண்டு வர்ணாவை அழகாக தூக்கிக் கொண்டு நடக்க தொடங்கினான். பின்னோடு சென்றாள் தீபி அவனின் பாக் எடுத்துக் கொண்டு.

இப்படியாக இருவரும் கீழே இறங்கி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். காரில் பின்பக்கம் வர்ணாவை வைத்துக் கொண்டு தீபி அமர்ந்துகொள்ள, இவன் வண்டி எடுத்தான்.

அங்கு ஆவலுடன் எதிர்பார்த்து, தீபி வீட்டினர் நின்றிருந்தனர்.

நடேசன் முகூர்த்தம் முடியவும் கோவிலில் இருந்து கிளம்பிவிட்டார் சத்தமில்லாமல். ஏதேனும் பிரச்சனை ஆகிவிட கூடாதென. எனவே மணமக்களை காண அவரும் ஆசையாக நின்றிருந்தார்.

யாரையும் ஏமாற்றாமல் சிரித்த முகமாகவே இறங்கினான் ஈஸ்வர். தீபியும் சங்கடபட்டவாறே இறங்கினாள். வர்ணா முழுதாக விழித்து… புல் போர்மில் இருந்தாள்.

ஆகவே தீபியின் நண்பர்கள் அனைவரும்…. ஈஷ்வரின் சிரிப்பிலே… கண் வைத்து வரவேற்க தொடங்கினர். உள்ளே அழைக்கப்பட்டு முறையான சம்பிரதாயங்கள் செய்து மணமக்கள் இலகுவாக அமர தொடங்கினர்.

அதிகமான கூட்டம் இல்லை…. எல்லாரும் நண்பர்கள், மற்றும் வீட்டு பெரியவர்கள்தான் எனவே தீபி சற்று இலக தொடங்கினாள்.

வர்ணா கிஷோரை பார்த்ததும் “ம்மாமா…” என அவனிடம் ஓட்ட தொடங்கினாள்… கிஷோரும் அவளை அழைத்து சென்று குளிக்க வைத்து உடை மாற்றி அழைத்து வந்தான். இதை பார்த்த ஈஸ்வர்…. அமைதியாகவே இருந்தான் பல்லை கடித்துக் கொண்டு.

பாட்டியும் மற்ற ஈஸ்வர் குடும்பமும் வந்து இறங்கினர் இப்போதுதான். அவர்களையும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.

சுந்தரி “வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என அழைத்தார். எல்லோரும் உண்டு முடித்து… அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…

கதிரேசன், ஈஸ்வரிடம் “மாப்பிள்ளை போங்க ரெஸ்ட் எடுங்க… வாங்க” என மேலே அழைக்க.

ஈஸ்வர் “இல்ல அங்கிள்…. கொஞ்ச நேரம்…. “ என அமர்ந்திருந்தான்.

நட்பு வட்டம் எல்லாம் எப்போது… எப்போது என பார்த்திருக்க…. ஈஷ்வரின் வீட்டினர் கிளம்பினர். ஈஷ்வரின் அருகே அமர்ந்தது… தீபியின் தோழர் படை.

கிஷோர் “வாங்க மேலே போலாம்…” என சொல்ல.. வினோவும் நந்தனும் அமைதியாக கிளம்பினர். கிஷோர் மித்ராவையும், சீமாவையும் பார்த்து “வாங்க எல்லோரும்…“ என அழைத்தான்.

அனைவரும் தீபியுடன் மேலே சென்றனர்… பின்னோடு வர்ணாவும் வந்தாள்.

அது…. ஹோம் தியேட்டர் அறை, பின் பக்கமெல்லாம் தியேட்டர் போன்று சீட்களுடன்…. ஸ்க்ரீன்னுக்கு அருகில்… நிறைய இடம் அதில் சேர்களுடன் அமர்ந்தது அந்த படை.

சின்ன அறிமுகம் நடந்தது ஈஸ்வர்க்கு…. வினோ “என்னை தெரியுதா….” என்றான் ஈஸ்வரிடம்.

ஈஸ்வர் “ம்…. தீபா இததான் அன்னிக்கு கேட்டா…… எனக்குதான் மறந்து போச்சு….. அதுக்கப்பறம் இப்போதான் என் பிரின்ட்கிட்ட இருந்து பழைய போட்டோ வாங்கி பார்த்தேன்…. நீங்களும், தீபாவும் இருந்தீங்க… அப்போ  நீங்க எய்த்து படிப்பீங்களா… “ என பொறுமையாக பேசினான்.

வினோ “நீங்க டுவள்த்…. உங்கள தீபி பெங்களூர்ல பாத்துட்டு கரெக்ட்டா சொல்லிட்டா…. ஆனா, எனக்கும் இப்போதான் கொஞ்சம் நியாபகம் வருது…” என்றான்.

தீபி அய்யோ என தலை குனிந்து அமர்ந்திருந்தாள்… ஈஸ்வர் சுவாரசியமாக கதை கேட்டுக் கொண்டிருந்தான்.. பின் எல்லோருடனும் பேச்சு சென்றது.

தீபி சற்று பேச தொடங்கினாள் எல்லாவற்றையும் மறந்து நண்பர்களுடன் அரட்டையில் கலந்தாள்… எப்போதோ கிடைக்கும் சந்தர்ப்பம் என்பதால்… கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.

இப்போது ஈஸ்வர் அமைதியாகினான்… தீபி நந்தனுடன் “ஏன்…. நீ எப்போதும் எங்கள அவாய்ட் பண்ற… உன் பொண்டாட்டி வந்த உடன…. நீ வரதே இல்ல…. எந்த கெட்டுகேதர்க்கும்… “ என ப்ரேமியின் முன் அவனின் தலையை பிடித்து ஆட்டியபடி….

ப்ரேமி “நல்ல கேளு…. எப்போதும் இந்த சில்லி கூட்டத்துல நம்மள சேர்த்து விட்டுட்டு…. அவரு தனியா என்ஜாய் பண்றாரு…” என எல்லோரையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து வார…  

பொங்கியது அந்த படை… ”பார்ரா… புதுச வந்த பொண்ணுக்கு தில்ல… நம் பிரிண்ட்ஷிப்ப இவனே மதிக்கல… அதான்“ என மித்ரா சொல்ல

நந்து “இனி இப்படி நடக்காது…. விடுங்க…. பிள்ளைகளா…” என்றான்.

சீமா “டேய்… அதென்ன பிள்ளைகள், அப்படி சொல்லாதடா…. வர்ணா வேற இருக்கா, எனக்கெல்லாம் இமேஜ் இருக்கு டா” என நந்தாவை ரெண்டு அடி வைக்க…

ப்ரேமி “இன்னும் என்ன, என்னை புது பொண்ணு ன்னு சொல்லிக்கிட்டு, அதான் ஈஸ்வர் அண்ணா வந்தாச்சுல்ல, இப்போ அவர்தான் புது மாப்பிள்ளை இத எப்படி, எங்க செலப்ரட் பண்றதுன்னு சொல்லுங்க…” என புதிதாக ஆரம்பித்தாள்.

தீபி நந்துவிடமிருந்து நழுவி வந்து அமர்ந்து கொண்டாள் தனியே…. இப்போது நந்து “சொல்லுங்க ஈஸ்வர் எப்போ வைச்சுக்கலாம் நம்ம மீடிங்க…. இந்த தடவ டூ டேஸ்… ட்ரிப் போட்டுக்கலாம்…” என சொல்ல.

ஈஸ்வர் “இன்னும் ரிசப்ஷன் முடியலை…. அதுக்கப்புறம் பாக்கலாம்… “ என்றான் தனியே அமர்ந்திருந்த தீபியை பார்த்தபடி.

இதனை கவனித்த நந்தன், ஈஸ்வருடன் தனியே சென்றான்… “ஈஸ்வர்…. தீபி அப்படிதான்…. நல்லாவே இருப்பா, தீடிர்னு சைலென்ட் ஆகிடுவா… எங்களுக்கு தெரியும்.. எதனாலன்னு, ஆனா மாத்த முடியல…” என சொல்லிக் கொண்டிருக்க

ஈஸ்வர் லேசாக உதடு வளைத்து சிரித்தான்…. “நந்து…. நான் அவளை மாத்த வரல…. எனக்கு அது தேவையுமில்லை… வர்ணா, அவ மட்டும்தான் இப்போ பார்க்க வேண்டியவ…. இப்போ இதுதான் என் பதில்…. நீங்க யாரும் அதிகமாக எதையும் எதிர்பார்க்காதீங்க…“ என்றான் நகாசு வார்த்தைகள் இல்லாமல்… நேரடியாக.

    

 

  

 

        

 

   

 

   

 

     

 

  

 

  

   

Advertisement