Advertisement

மிட்டாய் புயலே-5

ஒரு வழியாக அழுது தீர்த்து, அவளின் அன்னை, அதட்டலில் குளித்து முடித்து வந்தாள். தன் அறையிளிருந்தவளுக்கு, ஒரே யோசனை ‘எப்படி, எங்கு தவறினேன்’ என.

கொஞ்சம் சிந்தனை வந்த பிறகே அவளால் அந்த நிகழ்விலிருந்து வெளிவர முடிந்தது. அதற்குள் தன் அன்னை, காபி எடுத்து வரவும் அதனை வாங்கிக் கொண்டாள்.

இப்போது அவளிடம் கொஞ்சம் தெளிவு வரவும் மணிமேகலை கொஞ்சம் பொறுமையாக “என்னாச்சு தங்கம், அப்படியொரு அழுகை”  என சிரித்த படியேதான் கேட்டார்.

இப்போதுதான் தன் முட்டாள்தனம் புரிய, என்னவென சொல்லமுடியும் தன் அன்னையிடம் எனவே “ஒண்ணுமில்லம்மா, மழை, கதீஷ் வர லேட் ஆதனால பயந்துட்டேன், அதான்” என்றாள். தயங்கி தயங்கி.

மணிமேகலை அவளை சந்தேகத்துடன் பார்க்க, இப்போது சிரித்துக் கொண்டே “ம்மா, போ ம்மா ஒண்ணுமில்ல” என்றாள் சாதரணாமாக. லேசில் அழுபவள் இல்லையே என்ற எண்ணம் எழுந்தாலும், கதீஷுடன் ஏதாவது சண்டையாக இருக்கும் என அந்த தாய் மனம் நினைத்து, எழுந்து சென்றது.

கதீஷுக்கு, வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை, ‘என்ன செய்வது, என்ன செய்வது’ என, அவன் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ‘இப்படி தங்களது கல்லூரியில் நடப்பதும், அதுவும் தன் தோழிக்கே நடப்பதும். அதனை கண்டு நான், அமைதியாக இருந்தால், எவ்வளவு பெரிய தவறை நான் செய்தவனாவேன்.’ என பலமான சிந்தனை அவனிடம்.  

அந்த வனாந்தரத்தில், ஏகாந்த சூழலில், இரண்டு ஆண்களுக்கு நடுவில் அவளை பார்த்ததும். அவனிடம் ஏறிய கோவத்திற்கு அளவேயில்லைதான். ஆனால், ஏதோ ஒன்று அவனை, நிற்க செய்ய, பேசி மட்டும் விட்டுவிட்டான்.

ஆனால், வீட்டிற்கு வந்தவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. ‘ஏதேனும் செய்தே ஆகவேண்டும், பயம் வேண்டும். பயம் வந்தால்தான், அமைதியாக இருப்பார்கள், இவர்களை போன்றவார்கள்’ என்ற எண்ணம் எழுந்தது.

எனவே, போனை எடுத்து, தனது ரைஸ் மில்லில் வேலை செய்யும், ‘மாரியப்பனுக்கு’ அழைத்தான் ப்ரகதீஷ்.

‘வண்டி நம்பர், எந்த வழியில் வருகிறார்கள்’ என எல்லா விவரமும் சொன்னான் ‘ஒருவருக்கு கை, ஒருவருக்கு கால்’ என்ற விவரமும் சொன்னான்.

ஓர், ஒரு மணி, நேரம் கழித்து அந்த மாரியப்பனிடமிருந்து போன் வந்தது “அய்யா, முடிஞ்சிதுங்கைய்யா” என்றான். இப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்தான் ப்ரகதீஷ்.

‘எங்களை நம்பி பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்க்கு, நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்’ எனும் போது. இது தவறாக தெரியவில்லை போலும் அவனிற்கு. அமைதியாக இப்போதுதான் ஓரிடத்தில் அமர்ந்தான் அவன்.

சின்ன தவறாக இருக்கும் போதே, தண்டனை பெரிதாக இருக்குமென, சொல்ல வேண்டுமோ, இல்லையேல் காரியம் மிஞ்சி விடுமோ…

இது போன்ற கோழைகள் எப்போதும் தண்டிக்க பட வேண்டியவர்கள்தான். எனவே, ப்ரகதீஷ் அதில் உறுதியாய் நின்றான். எது வரினும் பார்த்துக் கொள்ளலாம் எனதான்.  

தான் நினைத்ததை முடித்தவுடன், தன் எண்ணம் முழுவதும், சாக்க்ஷியிடம் சென்றது. ‘என் முகத்தை, அவளால் பார்க்க கூட விடாமல் செய்துவிட்டான்கள்’ என்ற எண்ணம் எழுந்தது அவனுள். உடனே தனது தோழிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் “கூல் ஆகிடியா” என அனுப்பினான்.

இப்போது இருவரும் பேசிக் கொள்ளவதில்லை என்பதெல்லாம் நினைவில் இல்லை. அவளின் தடுமாற்றம் மட்டுமே மனதில் பதிந்தது. எனவே அவள் சங்கடத்தை போக்கதான், அவளிடம் பேசாமல் கூட வந்தான். இப்போதும் அப்படியே மெசேஜ் மட்டும் அனுப்பினான்.

அவளிடமிருந்து ரிப்லே வரவில்லை. பார்த்ததற்கான அறிகுறியும் இல்லை. இப்போதுதான் அவன் மனம் கனத்து போனது. அவளை தள்ளி நிறுத்த முடியவில்லை. சின்னதான, திருட்டுத் தனமான ஆசை வந்தது அவனுள், ‘அவ அப்பா இல்லைனா, போய் பார்த்துட்டு வந்திரலாம்’ என தோன்ற.

உடனே தன் தலையில், தானே அடித்துக் கொண்டான். ‘என்ன செய்கிறேன் நான்’ என திட்டியும் கொண்டான். அதனை தொடர்ந்து அமர பிடிக்காதவனாக, எழுந்து தன் தொழில் பார்க்க சென்றான்.   

இரவு முழுவதும் இருவர்க்கும் உறக்கம் வரவில்லை.

மறுநாள், காலையில் கல்லூரிக்கு கிளம்பினாள் சாக்க்ஷி, மனது அமைதியடையவில்லை அவளிற்கு. அவன்களை ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்தது அவளுள்.  

எனவே, அன்று சீக்கிரமே, பரபரப்பாக, கல்லூரிக்கு சென்றுவிட்டாள், தன் தந்தையுடன்தான் சென்றாள். வகுப்பில் போய் முதலில் அமர்ந்து கொண்டாள். கல்லூரி தொடங்கியது, இன்னும் அந்த xyயும் வந்திருக்கவில்லை.

ப்ரகதீஷ், எப்போதும் கல்லூரிக்கு வருவதில்லை. இன்று ஏனோ அவனிற்கு மனது கேட்கவில்லை. ‘இன்று போய் அவளை பார்த்தே ஆகவேண்டும்’ என தோன்றியது. வீட்டிற்குதான் செல்ல முடியாது. இங்கு ஓர் எட்டு போய் பார்த்து வந்திடலாம், என்ற எண்ணம் எழ, கிளம்பிவிட்டான்.

உணவு உண்ணும் முன் தன் தந்தையிடம் “அப்பா, நான் இன்னைக்கு காலேஜ் போறேன் நீங்க மில்லுக்கு போய்டுங்க, நான் நேர அங்க பார்த்துட்டு, பங்க் போறேன்” என்றான்.

எப்போதும் காலையில் ஜெகன் கல்லூரிக்கு சென்று, ஒரு ரௌண்ட்ஸ் வந்து விட்டுதான் ரைஸ் மில்லிற்கு செல்வார்.

எனவே, எப்போதும் கதீஷ் முதலில் ரைஸ் மில்லிற்கு சென்றுவிட்டு, தனது பெட்ரோல் பங்க் செல்வான், இப்போதுதான் கட்டிக் கொண்டிருக்கிறான் அங்கு சென்வான்.

இன்று, இப்படி தன் மகன் சொல்லவும், ஜெகன் “என்ன விஷயம்” என்றார் எடுத்த உடன், முதலில் தயங்கினாலும் ‘அவருக்கும் தெரிய வேண்டியது தானே’ என நினைத்து எல்லாம் சொன்னான். அந்த பெண் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

அவரால, அது யாரென யூகிக்க முடிந்தது. எனவே தடுக்கவில்லை, “கவனமாக செய், மேனேஜ்மெண்டுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது” என்றார் கண்டிப்புடன்.

தலையை மையமாக உருட்டி வைத்தான் ப்ரகதீஷ். அதன்பின் உணவு உண்டு இருவரும் கிளம்பினர்.

இப்போது இவன் கல்லூரிக்கு வரவும், அவனின் தாய் மாமாதான், கல்லூரி முதல்வர். எனவே, அவன் வந்து தன் தந்தை சீட்டில் அமரவும், ‘என்ன’ என பார்த்திருந்தார். அவனுடன் இப்போதெல்லாம் பேசுவதில்லை. எனவே ஒரு ஆராய்ச்சி பார்வை மட்டுமே.     

அவனும் ரொட்டீன் வொர்க் முடித்து, தன் தந்தை போல் ரௌண்ட்ஸ் கிளம்பினான். சாக்க்ஷியின் வகுப்பறை வரவும், சற்று பொறுமையாகவே நடந்தான். அவளை பார்க்கும் நோக்குடன்.

சாக்க்ஷியும் கவனித்து விட்டாள் அவனை. அவன் முகத்தை இப்போதுதான் இவளால் பார்க்க முடிந்தது. நிம்மதியானான் கதீஷ். ‘தெளிஞ்சிட்டா’ என சிரித்துக் கொண்டான் தன்னுள்.

அவளின் நிமிர்வை பார்த்தும், கொஞ்சம் திருப்தியாக, கிளம்பி விட்டான், தனது அலுவல் பார்க்க. சாக்க்ஷிக்கு xy வராதது குறித்து கோவம்தான் வந்தது. இப்போது, அது இன்னும் அதிகமாகியது. ஆம், மறாவது நாளும் அவர்கள் வரவில்லை.

இப்படியே ஒருவாரம் சென்றது. அடுத்த வாரம்தான், அவர்கள் கல்லூரிக்கு வந்தனர். அதுவரை ப்ரகதீஷே கல்லூரிக்கு வந்தான். இன்று, xக்கு ஏதோ கையில் அடியாம், கழுத்தில் தொட்டில்கட்டி கொண்டு வந்தான். yக்கு காலில் அடியாம், பிடிமானத்துடன் வந்தான்.

வகுப்புக்கு கூட வரவில்லை. கல்லூரி அலுவலகத்திற்குதான் வந்தனர். இவளிடம் வந்து, வகுப்பு தோழிகள் சொல்ல, தானும் அலுவலக அறைக்கு விரைந்தாள்.

தாளாளர் அறையில்தான் இருந்தனர் போலும். xy யின் பெற்றோர் வெளியே நின்றனர். உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. இவள் மணியை பார்த்தவள் “மணிண்ணா, உள்ள… அங்கிள்ளா இருக்காங்க, நான் வரவா, கேளுங்கண்ணா” என்று கேட்க

மணிண்ணா, “இல்லம்மா தம்பிதான் இருக்கு, நீ இப்போ, போக வேண்டாம்மா” என்றார்.

கேட்பாளா இவள், பெர்மிஷன் கூட கேட்கவில்லை, திடீரென உள்ளே நுழைந்துவிட்டாள். ‘அவன்களை நாலு அடியாவது அடித்துவிட வேண்டும்’ என இவள் கோவமாக உள்ளே செல்ல…. அங்கு அவர்கள் அமர்ந்திருந்த நிலை பார்த்து அதிர்ந்துதான் போனாள்.

உள்ளே, ‘மேல்மூச்சு, கீழ்மூச்சு’ வாங்க, நின்றவளை பார்த்து அமர்ந்திருந்த இருவரும், பயத்தில் எழுந்து நிற்க, இப்போது தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைதியானாள். அவளின் கண்கள் தன்போல் ‘தனது கதீஷை பார்த்தது’.

அவனும், கண்களை, சிறிதாக மூடி திறந்து ‘அடிக்க கூட செய்யலாம்’ என அவளிடம் தைரியம் சொல்லியதோ.. ஒரு நொடி அவன் கண்களையே உற்று பார்த்தாள்.

பின் இவர்களின் புறம் திரும்பி “சீ, நீங்கல்லாம் ப்ரிண்ட்ஸ், ச்சீய், உங்கள தொட்டா கூட பாவம்” என்றவள் திரும்பி நடக்க போக.

ப்ரகதீஷ் “சாக்க்ஷி, நில்லு” என்றான். அவள் என்னவென திரும்பி பார்க்க. ப்ரகதீஷ், கண்ணால் xy யிடம், ஏதோ ஜாடைக்காட்ட அவர்களும் “சாரி சிஸ்டர்” என்றனர் அவளிடம். அதற்குமேல் ஒரு ஷணம் கூட கல்லூரியில் அவர்களை நிற்க விடவில்லை அவன்.

சாக்க்ஷியிடம் “நீ கிளாஸ்ஸுக்கு போ, மாலை நான் வரேன், வெயிட் பண்ணு” என சொல்லி அனுப்பினான். அவனின் குரலில் எங்கும் ஒட்டுதல் இல்லை.  

இப்போதுதான், சாக்க்ஷிக்கு சற்று நிம்மதி. மனது ஒரு நிலையில் நின்றது. தனது கதீஷ் குறித்து பூரித்து போனது.

பத்து நாளிற்கு பிறகு இப்போதுதான் வகுப்புகளில் நாட்டம் சென்றது. அந்த xy குறித்த சிந்தனையை தூக்கி தூர எரிந்தாள். கொஞ்ச கொஞ்சமாக எல்லோருடனும் கலந்து பேச தொடங்கினாள்.

மாலை இவளை காக்கவைக்கவில்லை வந்துவிட்டான் சரியான நேரத்திற்கு ப்ரகதீஷ்.

காரில் ஏறி அமர்ந்ததும் “என்ன செஞ்ச கதீஸ் அவங்கள” என்றாள், தெரிந்தே ஆகவேண்டும் என்ற குரலில் கேட்க. அவன் “உனக்கெதுக்கு அதெல்லாம் விடு, நீ ப்ரீயா இரு” என்றான் நண்பனாக.

இன்னும் இன்னும் அழுத்தி கேட்க, அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. இவளும் அமைதியாக வந்தாள், அதன் பிறகு ஏதும் கேட்கவில்லை. வீடு வந்ததும் இறங்கும் போது “தேங்க்ஸ், கதீ” என்றாள்.   

ஏதும் சொல்லவில்லை அவன். இப்போது கண்ணாடி எடுத்து அணிந்து கொண்டான். ஒரு தலையசைப்புடன் சென்றுவிட்டான். நீ, உள்ளே வாவென இவள் அழைக்கவில்லை. அதையும் அவன் எதிர்பார்க்கவில்லை போல.

ஆனால், இந்த காட்சியை, அப்போதுதான் மதிய உறக்கம் முடிந்து எழுந்த வந்து ஹாலில் அமர்ந்திருந்த ராஜன் பார்த்திருந்தார் கோவமாக.

அவருக்கு, இத்தனை நாள் தன் பெண், தன் பேச்சை கேட்டு, அவனுடன் பேசவில்லை என்ற எண்ணத்தில் இருந்தவர். இந்த காட்சியை பார்க்கவும் கோவம் வந்தது.

உள்ளே வந்தவளிடம் “வீட்டில், அப்பா பேச்சை கேட்பதேயில்லை” என்றார். சற்று கோவம் வந்தது அவர் குரலில்.

சாக்க்ஷி “அப்பா, ப்ளீஸ் இன்னைக்குதான் அவன் வந்தான். நாங்க, இதுவரை நீங்க சொன்ன மாதிரிதான் இருந்தோம். இன்னைக்கு எதோ காலேஜ் வந்தான் அப்படியே கூட வந்தேன். அவ்வளவுதான். ம்…ச்ச்சே” என கோவத்தில் ஆரம்பித்த அவளின், குரல் வலியில் முடிந்தது. சாதாரண நிகழ்வு, தன் தந்தைக்கு இப்போது பெரிதாக தெரிகிறதே என்ற எண்ணம் எழுந்தது அவளுள்.

மனதளவில் எரிச்சலாக கூட இருந்தது. இத்தனை வருடங்கள் தெரியாத குற்றம் இப்போது மட்டும் ஏன்! என கேள்வி எழுந்தது அவளுள்.

எப்போதும் அவன் உடனிருந்தே பழகி விட்டவளுக்கு, எதையோ தொலைத்தது போல் ஒரு வெறுமை. காலையில் ஜாக்கிங் போகும் போது வருவான். மாலை வீடு வரும் போது அவளை பார்த்து விட்டுதான் செல்வான். ஆனால் இந்த இரண்டு மாதங்களாக அவனுடன் போனில் கூட தொடர்பு இல்லை.

புரியாதாது போல் நடிப்பவர்களிடம் என்ன சொல்வது. தனக்கு சீக்கிரம் திருமணம் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள் அவள். அப்போதுதான், அவன் பழைய படி தங்கள் வீட்டிற்கு வருவான் என்று எண்ணம் வந்துவிட்டது அவளுள்.     

அங்கோ பூங்கொடி, கல்லூரி நேரத்திற்கு இவன் வீடு வரவும் “என்னடா சாக்க்ஷி வந்திருக்காளா” என்றார் ஆவலாக.

இவனிற்கு கோவம் வந்தது “வரலம்மா, ம்ச்ச்…. என்ன வேண்ணும் இப்போ” என்றான் எரிச்சலாக.

பூங்கொடி “என்ன டா சண்டையா, அவள, இந்த பக்கம் காணவே காணம்” என்றார் சிரித்தவாறே.

அத்தனை நாள் குழப்பமா, இல்லை இன்று அவளின் கண்களை பார்க்க முடியாத ஏமாற்றமோ, இல்லை இவன் எந்த மனநிலையில் இருந்தானோ, ஏதோ ஒன்று அவனை உந்த “அவ அப்பாக்கும் எனக்கும்தான் சண்டை, பாவம் அவ என்ன பண்ணா” என்றான்.

‘பக்’ என சிரித்துவிட்டார் அவனின் தாயார். ஆனால் அவனால் சிரிக்க முடியவில்லை. கதீஷ் எழுந்து செல்ல போக, அவனின் சோகமான முகம் கண்டு “என்னடா “ என்றார்.

ஏதும் சொல்லவில்லை அவன். தனது அறைக்கு மேலே சென்றுவிட்டான். எப்போதும் ப்ரகதீஷ் இப்படி இல்லையே என தோன்றியது அந்த அன்னைக்கு. என்ன ஆச்சு இவனிற்கு, முன் போல் கலகலப்பாக இல்லை. எப்போதும் அமைதியாக இருக்கிறான் என தோன்றியது.

இப்போது திரும்பவும் எதோ தன்னை எதற்குள்ளோ இழுப்பது போல் உணர்ந்தான் கதீஷ். இது வரை அழகா இருந்த அவன் எண்ணம் எல்லாம் இப்போது கொஞ்சம் சாயம் போனதாக தோன்றியது.

எங்கோ ஒரு புள்ளியில் சிக்கியது போல் ஒரு உணர்வு. நாளை வேறு, சென்னை செல்ல வேண்டும் என்ற நிலையில் அதற்கான வேலையை கூட பார்க்காமல் இப்படி ஏதோ விட்டத்தை பார்த்து சும்மா அமர்ந்திருப்பதாக அவனிற்கே தோன்றியது.

தனக்கு தானே சொல்லிக் கொண்டான் ‘வேண்டாம், வேண்டாம்’ என. கேட்குமா அவன் மூளையின் வார்த்தை மனதிற்கு.  

    

 

          

 

             

Advertisement