Advertisement

மிட்டாய் புயலே-4

 

கதீஷ் என்ற அலறல் கேட்டாலும், அவனால் அதற்கு செவி சாய்க்க முடியவில்லை. இத்தனை நாட்களில் சிரித்தே கடந்தவர். இப்போது இதுபோல் ஒரு வார்த்தை சொல்லவும், அது தங்கள் குடும்பத்தினரே என்றாலும் பொருக்க முடியாது. இது தோழியின் தந்தை வேறு…. எனவே, மனது நிற்காமல் சுழன்றது.

இத்தனை நாள் எதோ சிறுபிள்ளையாய் எண்ணி இருக்கலாம். இப்போது சொந்தமாக தொழிலை செய்பவனிடம், ஏதோ யாரென்றே தெரியாதவன் போல் ஒரு பேச்சு பேசிவிட்டாரே…

நான் ஏதோ, இவர் பெண்ணின் பின்னால் சுற்றுவது போல் ஒரு வார்த்தை. எங்களை நம்பவில்லையா அவர். இன்று, எவனோ சொல்லிவிட்டான் என்பதற்காக என்னை, என்னை போய், இங்கு வராதே என சொல்லிவிட்டார் என அவன் எண்ணம் ஓட்டம் அந்த கட்டத்தை தாண்டவில்லை.

வீட்டிற்கு வந்தவன், குளித்து கிளம்பி, உணவு உண்ண, உணவு மேசைக்கு வர,  பூங்கொடிதான் “என்ன சொன்னா உன் சாக்கி” என நீட்டி நீட்டி கேட்டார் அவன் மனநிலை உணராமல்.

வாய் வரவில்லை அவனிற்கு. ஏதாவது அங்கு நடந்தை சொல்லி தங்களை தாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை அவன். எனவே “வேலையிருக்கும்மா” என எழுந்துவிட்டான்.

இங்கு சாக்க்ஷி, எந்த கேள்வியும் தன் தந்தையை கேட்கவில்லை. ஏனோ தோன்றவில்லை. எப்போதும் எதிர்த்து சண்டை செய்பவள். இப்போது அமைதியானாள்.

நேரே தன் அறைக்கு சென்றவள். குளித்து தயாராகி, கதீஷை பார்ப்பதற்காக, அவனின் பெட்ரோல் பங்க், வேலை நடக்குமிடத்திற்கு சென்றாள்.

எல்லா இடமும் அவளே தேடினாள்…… எங்கும் அவன் இல்லை, அவர்களின் ரைஸ் மில்லிற்கு சென்றாள், அங்கும் இல்லை அவன். அவன் எப்போதும் கல்லூரிக்கு செல்லமாட்டான். எனவே, எங்கு சென்றான் என புரியவே இல்லை. போன் செய்யவும் தோன்றவில்லை. நேரே பார்த்து ஆகவேண்டும் எனதான் தோன்றியது.

இத்தனை நாட்கள் போட்ட சண்டையெல்லாம் எதோ சிறுபிள்ளை சண்டை. ஆனால் இப்போது நடப்பது, தங்களது உணர்வுகள் குறித்தது,

இவர்களின் நட்பு பற்றி வெளியே பேசும்போது கடந்த அவர்களால், வீட்டில் சொல்லி, புரியவைக்க நேரம் தரவில்லையா, இல்லை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லையா’ என இப்போது நொந்துதான் போனாள். எங்கும் அவன் இல்லாத நிலையில் நேரே வீட்டிற்கு சென்றுவிட்டாள்.   

ஏதும் தோன்றவில்லை, ஒரு வாரமும் சென்றது. இவளும் போன் செய்யவில்லை, அவனும் போன் செய்யவில்லை. இவள் மட்டும் சென்று தன் நண்பர்களை பார்த்து வருவாள். அவள் இருக்கிறாள் என தெரிந்து, இவன் வருவதில்லையா, இல்லை வெளியூர் சென்றுவிட்டானா, இன்னும் தெரியவில்லை அவளிற்கு.

பழைய நட்பும், அவர்கள் வழக்கடித்த நாட்களும் அவள் கண்முன்னே விரிந்தது. ‘அந்த சுதந்திர வானமும், கேள்வியே கேட்காத காற்றும்  இப்போது இல்லை’ எனதான் தோன்றியது அவளுக்கு.

எதேற்கெடுத்தாலும் விளக்கம், எல்லோரின் பார்வை மாற்றங்கள் என நட்பில், பிரிவு என்னும் விளிம்பையும் இப்போது அனுபவிப்பதாகவே தோன்றியது.

இதெல்லாம், பார்த்த ராஜனுக்கு, மனது சங்கடம்தான். ஆனால், இது தீர்க்க வேண்டியது, அவரது பார்வையில். ஒரு பெண்ணின் தகப்பானாய் தோன்றியது.  அதனால், அமைதியாக இருந்தார்.

ராஜன், இப்போது இன்னும் தீவிரமாக தேடினார் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையை. ஆனால் ஒன்னும் அமையவில்லை. சாக்க்ஷிக்கு, இப்போது திருமணத்தில் நாட்டம் செல்லவில்லை.

சாக்க்ஷி மேல் படிப்புக்காக அவள் படித்த பழைய கல்லூரியிலேயே, விண்ணப்பித்தாள். அவளின் தந்தை அதற்கும் எதிர்த்தார். அவளிடம் “நீ கோயம்புத்தூர் போய் படி” என்றார்.

அவள் அதனை காதில் கூட வாங்கவில்லை. தனது அம்மாவிடம் மட்டும் பேச்சு சென்றது. தானே பீஸ் கட்டினாள். பெரிதாக எதற்கும் தன் தந்தையை தொந்தரவு செய்யவில்லை. எந்நேரமும் வீட்டில் பொருக்க முடியாத ஒரு நிசப்தம்.

இதோ இதோ என அவர்கள் இருவரின், கல்லூரியும் தொடங்கியது. அக்க்ஷரா ஹாஸ்டளுக்கு கிளம்பினாள். இறுக்கங்கள் சற்று குறைந்தது. வீடு இயல்பு நிலைக்கு சென்றது.

சாக்க்ஷிக்கு இந்த கல்லூரி நாட்கள் இனிதாகவே தொடங்கியது. குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்கள். வகுப்புகளில் ஒரு சுதந்திரம், மாணவர்களிடம் கொஞ்சம் பொறுப்பு என ஒரு பொறுப்பானா பெண்ணாக உருவாக தொடங்கினாள்.

ஆனால், அப்போது அறிமுகமாகினர் இரு நண்பர்கள். கதீஷின், நண்பனின் தம்பிகள். இவளிற்கும் புது நட்புகள் கிடைத்ததில் சந்தோஷமே. எனவே, எங்கோ இழந்ததை, இங்கே தேட தொடங்கினாள்.

குழம்பிய மன நிலையில் இருந்தவளுக்கு. அந்த xy யின் கலகலப்பு பிடித்தே இருந்தது. யோசிக்க தோன்றவில்லை. சுற்றி சுற்றி வந்தனர் அவளையே. எந்நேரமும் யாரோ ஒருவர் உடனிருந்தனர்.

வகுப்புகளை கட் அடிக்க கற்று கொண்டாள், கேண்டின்தான் இருப்பிடமாக மாற்றிக் கொண்டாள். கொஞ்சம், கொஞ்சமாக கட்டுபாடுகளை உடைக்கும் நிலைக்கு சென்றாள். தன் நிலையிலிருந்து மாறி போனாள். அவளிற்கே தெரியாமல்.

உள்ளுரில் ‘பெரியயிடத்து பெண், தங்கள் கூட நட்பாக பழகினாள் பெருமைதான்’ என எண்ணிதான், தொடர்ந்தனர். அவளும் எந்த ஒதுக்கமும் இல்லாமல், இயல்பாய் பழகவும், கல்லூரி காலத்தில் இருக்கும் வாலிபர்களுக்கு இப்போது ஆசை உண்டானது.  

இப்போது இந்த நட்பு எண்ணும் வட்டம் காதல் எண்ணும் நிலைக்கு எடுத்து சென்றனர். அந்த xசும், yயும். யாருடன் என்ற போட்டியும் எழுந்தது.

அன்று அழகான மாலை நேரம், சாம்பலும், நீலமும் கலந்த புதிதான ஏதோ ஒரு நிறத்தில் வானம், வஞ்சனையின்றி தன் அன்பை, வாசமாய், மழையாய்  மாற்றி, மண்ணில் பரப்ப…. “சோ” வென மழை. கல்லூரி அப்போதுதான் முடிந்தது.

லாங் பெல்லின் சப்த்தம், அந்த மழையின் சப்தத்தை கிழிக்க, கூட்டிற்கு திரும்பும் பறவைகளாய் மாணவ, மாணவிகள் ஓட்டமெடுக்க. இந்த நண்பர்கள் குழாம் மட்டும் தேங்கி நின்றது.

‘இவர்கள் நண்பர்கள்தான்’ என நம்பி நின்றிருந்தாள் அவள். ஆண்களின் யூகம் வேறு, யுத்திகள் வேறு போல…

எப்போதும், தனது ஆக்டிவாவில்தான் கல்லூரிக்கு வருவது. ஆதிதொட்டே அதுதான் பழக்கம் அவளிற்கு. இப்போது வீட்டில் தந்தை பேச்சையும் கேட்பதில்லை. எனவே, யாருக்கும் அடங்கா கன்றாக சுற்ற தொடங்கினாள்.

கதீஷின் மேல் கோவம்தான் பொங்கியது. எனவே நினைப்பதே கிடையாது அவனை. இப்போது இங்கு ஏன் நிற்கிறோம் என தெரியாமலே நின்றிருந்தாள். இந்நேரம், மழை என்றால், தன்னை அழைத்து செல்ல காரெடுத்து வரும் தன் நண்பனை தேடினாலோ என்னவோ….

ஏனோ, மனம் அவனை தேட தொடங்கியதோ, மழையும் வலுக்க தொடங்கியது. அந்த xஸூம் yயும் இப்போது தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டனர்.

‘யார் இவளை கூட்டி செல்வது’ என்பதுதான்.  சின்ன திட்டம் அவளை ஒரு அரைமணி நேரம், தங்களது வண்டியிலோ அல்லது எங்கோ நிறுத்தி வைத்து, அதன்பின் ஊருக்குள் கூட்டி செல்வது என்ற கணக்கு அது. இது மாணவர்களுக்கு அந்த நேர த்ரில்.

சொல்லுவதற்கு இது எதோ விளையாட்டாய் தெரிந்தாலும், இது மிகவும் சிரமமே. வயது பெண்ணுடன் யாராவது பார்த்துவிட்டால், தொலைந்தார்கள். ஆனால், அப்படி இவன் கொண்டுபோய் வீட்டில் சேர்த்துவிட்டால், ஊரில் ஒரு வாரத்திற்கு இவர்கள் பேச்சுதான். சிலசமயம், அடுத்த கட்டம் கூட செல்லும்.

பேச்சு கொடுத்தனர் அவளிடம் “சாக்க்ஷி, வா நான் கூட்டி போறேன், நீ தனியா போக வேண்டாம். எவ்வளோ மழை பெய்யுது. வா, வண்டி இங்க இருக்கட்டும். காலையில எடுத்துக்க.” என்றான் x.

y “ஹே நான்தான் பக்கத்தில் இருக்கேன் நான் கூட்டி போறேன், நீ கிளைபு x, நான் பார்த்துக்கிறேன்” என்றான் இயல்பாய். இப்படி இருவரும் பேசிக்கொள்ள, இன்னும் கதீஷ் நினைவு அதிகமாக, இவள் இருவரையும் கண்டுகொள்ளவில்லை முதலில்.

எல்லோரும் கிளம்பியிருப்பதை பார்த்து, இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவளை வற்புறுத்த தொடங்கினர். அரைமணி நேரம் சென்ற நிலையில், அந்த ‘மணிண்ணா’ கல்லூரியை, வலம் வர தொடங்கினார். இவர்களை பார்த்தார்.

யோசனையுடன் ஆண்களை பார்த்தவர், சாக்க்ஷியிடம்  “ஏன், இங்க நிற்கற கண்ணு, தம்பி வரேன் சொல்லியிருந்ததா” என்று கேள்வி கேட்டார். அவள் திரு திருவென விழித்தபடி “இல்லண்ணா, மழை நிக்கட்டும்ன்னு பார்த்தேன்.” என்றாள்.

“போம்மா, ஆபிஸ் ரூம்ல்ல இரு,” என்றார் அவளையே பார்த்து.  “நீங்க கிளம்புங்கப்பா” என்றார், அவர்கள் இருவரையும் பார்த்து.

யாரும் அசையவில்லை. நின்றது, நின்றபடியே இருக்க. xஸும் yயும் திரும்பவும் இவளையே பாவமாக பார்க்க.

ஏதோ, அவர்கள்தான் பாவமாக தெரிந்தனர் இவளிற்கு. அவளிற்காக இவ்வளவு நேரம் இருத்து இருக்கின்றனர். அவர்களை அவமானப்படுத்துவதா என தோன்ற

யோசிக்கவே இல்லை அவள் “சரி போலாமா” என்றாள். இருவரும் இன்னும் நல்லவர்களாக. “நீ இங்கயே இரு, அவரு என்னமோ, எங்கள வில்லன் மாறி பார்த்துட்டு போறாரு” என தூபம் போடா, எதோ சொல்லி சாமாதானம் செய்து அவர்களுடன் வெளியே வந்தாள்.

“மணிண்ணா, நான் xஸுடன் போறேன். வண்டி இங்க இருக்கட்டும்.” என சொல்ல, “இரும்மா, வானம், இப்படி இருட்டி நிக்குது நீ கிம்பறேன்கிற” என்க. “அதான் ப்ரிண்ட்ஸ் இருக்காங்களே”  என சொல்லி கிளம்பினாள் அவர்களுடன்.

xவண்டியின் பின்னால், அமர்ந்திருந்தாள். y அவர்களுடன் சென்றான். மணிண்ணாக்கு மனது கேட்க்காமல், அவர்கள் சென்றதும் “கதீஷுக்கு” போன் செய்து சொன்னார்.

அதுவரை ப்ர்கதீஷும், ஏதோ ஒரு வைராக்கியத்தில் இருந்தவன். இப்போதும் பெரிதாக எடுக்கவில்லை. ‘யார் என்ன செய்ய முடியும்.  தெரிந்த கல்லூரி, தெரிந்த நபர்கள், நடுவில் எல்லாம் அவளிற்கு பழக்கமான இடம்தான், இதில் எதற்கு இந்த தகவல் எனக்கு’ எனதான் தோன்றியது.

ஆனால், இத்தனைநாள் தன்னை அடக்கி வைத்திருந்தவன். இப்போது யாரோ ஒருவரின் மூலம் அவள் நிலை குறித்து அறிந்தவனால் அமர முடியுமா என்ன!. தலை தெரிந்தது. ஆம், வலித்தது. ‘எதற்காக இந்த தகவல் எனக்கு’ என சிந்தை.

‘அவளின் திருமண செய்தி தெரியாமல், அவளை பார்க்க கூடாது’ என்ற எண்ணம் எழுந்தது முதல், அதை, கொள்ளகையாக பிடித்துக் கொண்டான் அவன். நட்பு என்ற உறவை புரியவைக்க நினைத்தான்.

‘மணிண்ணா, இது போல் ஒரு சொல் சொல்லுகிறார் என்றால். ஏதோ, அவர் மனதை உறுத்தியிருக்க வேண்டும்.’ என்ற எண்ணம் எழுந்தது.  எனவே நிற்கவில்லை, கிளம்பிவிட்டான்.

இவர்கள் கல்லூரி ஹைவேஸ்ஸில் இருப்பதாள், ஊருக்குள் வர பதினைந்து மையில் பயண தூரம். மழை வேறு இவளின் உடையை நனைத்திருக்க, மழையில் பயணம்.

இப்போதுதான் அவளின், உள் மனம் கொஞ்சம் விழிக்க தொடங்கியது. ஏதோ உறுத்தல் அந்த இடத்தில், ஒரு நெருடல், ‘தனக்கு சாதகமான சூழல் இல்லை’ என உள்மனம் அவளிடம் சொன்னது.

அந்த x ஆகப்பட்டவன் “என்ன சாக்க்ஷி, ஏன் நெளியற, உட்கார முடியலையா, என்னை பிடிச்சிக்கோ”  என சொல்லி அவளின் கைகளை எடுத்து, தனது புறம் இழுத்தான் வண்டி ஓட்டிக் கொண்டே.

அந்த அமைதியான சாலை, x தன் புறமாக அவளை இழுக்க இழுக்க மனது ஓலமிட தொடங்கியது. ‘இல்லை இது ஏதோ தவறு, நட்பு கரம் இல்லை இது’ என உணர தொடங்கினாள்.

பின்னாடியே இதனையெல்லாம் பார்த்துக் கொண்டே நமுட்டு சிரிப்புடன் ‘வாழறாண்டா அவன்’ என உள் மனதில் பொருமிக் கொண்டே, y வந்து கொண்டிருந்தான்.

இவள் தனது கைகளை சீட்டின் கீழே உள்ள பிடிமான கம்பியை விட்டு எடுக்காமல், “நீ நேரா ஓட்டு x, நான் பார்த்துக்கிறேன்” என தெளிவாகவே சொன்னாள்தான்.

‘கதற கதற தன்னை ஒருவன் தொட்டால்தான், அவன் மிருகமா. என் விருப்பமில்லாமல் என் விரல் நகம் தொடுகின்றவனும் மிருகம்தான்’ என உணர்ந்த தருணம் அது. இந்த நிலையிலிருந்து, அவள் எப்படி வெளிவருவது என யோசித்திருக்க.

அந்த x “மழை அதிகமாகுது, நாம் கொஞ்சம் நிற்கலாம்” என சொல்லி அங்கேயிருந்த ஒரு மரத்தடியில் நிறுத்தினான். கூடவே வந்து நின்றான் y.

அவளும் “சரி நான் பஸ் ஸ்டாப் போயிக்கிறேன். தேங்க்ஸ்” என சொல்லி வண்டியிலிருந்து இறங்கியதே போதும், என நடக்க தொடங்க.

அந்த y அவளை வழி மறித்து “என்ன சாக்க்ஷி, ஏன், இவ்வளோ பயம், நாங்க கூட்டி போறோம்,  பாரு இங்க எங்கயும் ஸ்டாபிங்கே இல்ல, இரு” என தன்மையாகவே சொன்னான்.

அவளும் சுற்றியும் பார்க்க, பெரிய வெட்ட வெளி, நிழல் தரும் மரம் கூட இவர்கள் நின்றிருந்த ஒன்றுதான், சாலையோரம் இருந்தது. மற்றெதெல்லாம் ஏதோ சின்ன சின்ன மரம். காடாக தெரிந்தது. எப்போதும் வந்து போகும் வழியும் கூட. ஆனால், இப்போதுதான், இவள் கருத்தில் பதிந்தது.

மனது வேறு இங்கிருந்து செல், செல் என கத்திக்கொண்டிருக்க. அறிவோ எங்கு செல்ல என தேடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கண்ணில் கர கரவென கண்ணீர் இறங்க, கண்கள் சிவந்தது.

மழையில் நனைந்து உடலில் ஒட்டிய ஆடையுடன், கண்ணில் நீருடன், yயை நிமிர்ந்து பார்க்க. இப்போது அவன் பார்வை சொன்ன செய்தியை படித்தவள் திரும்பி நின்றுக் கொண்டாள்.

x இப்போது உரிமை கொண்ட நண்பனாய், அந்த மரத்திலிருந்து வெளியே வந்து, “அங்கு வா சாக்க்ஷி, மழையில், பார் தலையும் நனைன்ச்சிடுச்சி” என சொல்லி, அந்த பாலித்தீன் கவரை எடுத்துவிட்டு, அவளின் தலையிலிருந்து வழிந்த நீரை துடைக்க.

நடுங்கி போனாள் பெண்ணவள், இப்போது ‘போ’ எண்ணும் விதமாக y யும் அவள் கையை பற்றி தள்ள,  மனதில் தைரியம் இருந்தாலும் ‘விடுங்கடா, கையை’ என வார்த்தைகள் வரவில்லை. அவர்களிடம் இருப்பதும் நட்பு எண்ணும் கத்திதான்.    

இப்போது அந்த வழியாக ஒரு இன்னோவா, வந்தது. இவளை அப்போதுதான், இருவரும் கைபிடித்து அழைத்து சென்றனர். இரு ஆண்களுக்கு நடுவில் சாக்க்ஷியின் முகத்தை கண்டவன், காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

பத்தடி தூரம் சென்றுதான் கார் நின்றது. இறங்கி வந்தான் ப்ரகதீஷ், “சாக்கி” என்றான். இவளிற்கு முதலில் புரியவேயில்லை. இவள் அங்கேயே நிற்க. இன்னும் அருகில் வந்து “சாக்கி” என்றான்.

இப்போதுதான் கண்கள் நிமிர்ந்து பார்த்தாள். இதுவரை, எப்படி செல்வது என நினைத்திருந்தவள். இப்போதுதான் ‘தன்னை காக்க வந்துவிட்டான்’ என உணர்வு வந்தது.

பார்த்தவளது, கண்களின் நடுக்கம் குறைந்து, அது அவளின் கைகளில் வந்து அமர்ந்து கொண்டது. அந்த xஸும் yயும் அவள் கையை இப்போதுதான் விட்டனர். யாரென பார்க்க ‘ஐயோ’ என்றானது இருவருக்கும்.

இருவரும் “அண்ணா, நாங்கதான் ண்ணா, சொல்ல சொல்ல கேட்காமல் பஸ் புடிச்சு போறேன்னு வெளியே போனாண்ணா……. அதான், கூட்டிட்டு வந்தோம்.” என நல்லவர்களாக சமாளிக்க.

அவன், அமைதியாக இப்போது சாக்க்ஷியை பார்க்க, அவளின் உடல் நடுங்கியது. இப்போது ஏதும் கேள்வி கேட்க வேண்டாம் என உணர்ந்தவன். “நாளைக்கு காலேஜில் பேசிக்கலாம், கிளம்புங்க” என்றான் ப்ரகதீஷ்.

“வா சாக்கி” என அவளை அழைத்து சென்றான். காரின் கதவை திறக்க கூட முடியவில்லை அவளால், கைகள் நடுங்கியது. அவனே கதவை திறக்க, அமர்ந்து கொண்டாள்.

இவனும் எதுவும் பேசாமல் வண்டியை எடுக்க. கண்களை மூடவில்லை அவள். வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள். இருவருக்கும் என்ன பேசுவதேன்றே தெரியவில்லை.

இவனிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டிற்கு செல்வதா, இப்படியே இவள் அங்கு சென்றாள் ‘அவங்க அப்பா என்னதான் முறைப்பாரு’ என்ன பண்ணறது என தெரியாமல் யோசித்தவன், அவளை அழைத்தான் “சாக்கி” என.

அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்தினான். அவனின் அழைப்பில் இவளால் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. கூனி குறுகி போனாள். ஏதோ அவள்தான் தவறு செய்தவள் போல் ஒரு எண்ணம் அவள் மனதில் வந்து அமர்ந்துகொள்ள, அவளால் தலை நிமிர்த்தி அவனை பார்க்க முடியவில்லை.

அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை. தன்னிலையை அவனிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், முதல் முறையாக ஒரு சங்கடம் வந்து அமர்ந்து கொண்டது அவளுள்.

அவனே கேட்டான் “வீட்டுக்கு போலாமா”  என பொறுமையான குரல், அந்த குரலில் அவ்வளவு அனுசரனை. வீறிட்டு அழும் குழந்தையை, தாய் ஏதும் கேட்காமல், முத்தமிடும் அன்புபோலிருந்தது அது.

அவளிற்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. தலையை மட்டும் ஆட்டினாள் ‘போலாம்’ என்பதாக அவனை பார்க்கவில்லை. அவனிற்கோ இவளின் நிலை புரிந்தாலும், ‘என்ன’ என்று கேட்டு அவளை சங்கடபடுத்த விரும்பவில்லை அவன்.

அவனது கண்ணிலும் வலி, இப்படி ஒடுங்கி அவன் பார்த்ததேயில்லை. எந்நேரமும், முகமும், கண்ணும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அதனை பார்க்க முடியாதவனாக, தனது கூலரை எடுத்து அணிந்து கொண்டான்.

“தண்ணி குடி, முகத்தை கழுவு” என சொன்னான். அவனை ஏறிட்டு பார்க்கவில்லை. மற்ற நேரமாக இருந்தால், அவனின் கூலரை பிடுங்கி இருப்பாள். இப்போது ஏதும் தோன்றவில்லை.

அவளிற்கு அவன் கூலர் அணிந்தால் பிடிக்காது. ‘என்ன பார்த்து பேச எதுக்கு கூலர், எதோ திருட்டுத்தனம் செய்யறவன் மாறியிருக்க’ என்பாள்.  இப்போது ஏதும் சொல்லாமல் அமைதியாக அவன் சொன்னதை செய்தாள்.

அவளின் வீட்டிற்கு அழைத்தான் ப்ரகதீஷ், அவளின் அம்மாவிடம் ‘வெந்நீர் வைக்க சொல்லியவன், இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவோம்’ என சொல்லி போனை வைத்தான்.

அப்படியே அவளை இறக்கிவிட்டவன். தான் இறங்காமல் தன் வீடு நோக்கி காரை செலுத்தினான். இறங்கியவளுக்கு, அதெல்லாம் தெரியவில்லை போல, நேரே தன் அம்மாவிடம் சென்றவள், அவரை கட்டிக் கொண்டு ஒரே அழுகை.

 

   

 

  

        

  

   

 

 

 

           

 

       

 

   

 

    

Advertisement