Advertisement

மிட்டாய் புயலே-3

 

ஒரு வருடம் முன்பு

இதோ, இதோ என இந்த B.com இறுதியாண்டின், இறுதி தேர்வும் முடிந்தது. சாக்ஷிக்கு ஏனோ, மனமே பாரமாக இருந்தது. அதிகம் தோழிகள் இல்லாவிட்டாலும், அளவான நட்புடன், தனக்கென ஒரு வட்டம் போட்டு சுற்றும் வெண்ணிலவாக, வலம் வந்தவளுக்கு இந்த கல்லூரியின் இறுதி நாள் வலிக்கதான் செய்தது.   

எல்லோரு வீட்டிலும் போல், சாக்க்ஷியின் வீட்டிலும் திருமண பேச்சை எடுத்தனர்.

சாக்க்ஷி பெரிதாக நினைக்கவில்லை. தன்னை வேலைக்கு அனுப்பமாட்டார்கள் தெரியும். எனவே அவளின் மனநிலையிலும் திருமணம் என்ற எண்ணம் இருந்தது. எனவே எதிர்க்கவில்லை. அழகாக சம்மதம் சொன்னாள்.

சாக்ஷியின் சித்தி வழி சொந்தத்தில், ஒரு மாப்பிள்ளை வந்தது. மிகவும் சந்தோஷம் இவர்கள் வீட்டில். துரிதமாக வேலைகள் நடந்தன. பெண் பார்க்கும் வைபவமும் வந்தது.

சாக்ஷக்கு, என விருப்பங்கள் இருந்தது. அதை பற்றிய பேச்சுகள் எல்லாம் தனது தோழனுடன், நிறைய பேசியிருக்கிறாள். இப்போது அதெல்லாம்தான் நினைவில் வந்தது.

நிறைய படித்திருக்க வேண்டும். கொஞ்சம் சிரிக்க வைக்கவும் தெரியனும். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். என்னை அழைத்து செல்ல தயங்கும் இடங்களுக்கு, அவர் பழகாதவறாக இருக்க வேண்டும் என நிறைய கனவுகள். அத்தனையும் கதீஷிற்கு தெரியும்.

இந்த கனவுகளுடந்தான் மாப்பிள்ளை போட்டோவை பார்த்தாள். சொந்தமாக மில் இருக்கிறது என்றார்கள். வெளிநாடு சென்று படித்தவர் என்றார்கள். இதெல்லாம் மனதில் வர அந்த மாப்பிள்ளையின் போட்டோவை பார்க்க, அழகா சிரித்தபடி நின்றிருந்தான்.

இவளிற்கு பார்த்தவுடன் மனதில் பதியவில்லை என்றாலும், மற்ற காரணங்கள் எல்லாம் ஒத்துவர சரியென்றாள். இந்த புகைப்படத்தை, வாட்ஸ் அப்பில், ப்ரகதீஷிற்கு அனுப்பியும் வைத்தாள்.

இரவுதான் பார்த்தான் ப்ரகதீஷ், உடனே போன் செய்தான். அவளின் குரல் ஏனோ சோர்ந்து தெரிந்தது. “ஹலோ “ என்றவளிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் கூட இல்லை, அதனை மனதில் குறித்துக் கொண்டவன் அவளை கலகலப்பாக்க “புது பொண்ணு” என்றான் எடுத்த உடன், அதற்கு கூட சண்டைக்கு வரவில்லை அவள். அமைதிதான்.

“என்ன யோசனை” என்றான், அவளின் அமைதி பொறுக்க முடியாமல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்.

அவனே தொடர்ந்தான் “மாப்பிள்ளை சூப்பரா இருக்காரு மாரியாத்தா, பட்டன்னு ஒகே சொல்லிடு “ என்றான். இன்னும் அவள் வாய் திறக்கவில்லை. இந்த அமைதியெல்லாம் அவளிற்கு வரவே வராது. அமைதிக்கும், அவளிற்கும் அப்படி ஒரு உடன்படிக்கை.

இப்போது இவனிற்கு கோவம் வந்தது, ஆழ்ந்த குரலில் “என்ன பிரச்சனை” என்றான். அந்த குரல் சொன்னது ‘உன்னிடம் விளையாடவில்லை நான், பதில் வேண்டும்’ என்றது.

இந்த மொழி, இத்தனை வருட பழக்கத்தில், ஏதோ ஒன்றிரண்டு முறை வந்தது உண்டு. அதனால், சட்டென பதில் வந்தது அவளிடமிருந்து “பயமா இருக்கு “ என்றாள்.

இந்த வார்த்தைகயை எப்படி எடுப்பது என புரியவில்லை அவனிற்கு. அவளின் எண்ணம் தெரியும், தன் அக்காக்கள் எல்லாம் சந்தோஷமாக தானே இருந்தனர், இவளிற்கு எதுக்கு பயம் என தோன்றியது.

எனவே, இது திருமணம் எண்ணும் போது பெண்களுக்கு இயல்பாய் வரும் பயம் என புரிந்தவன் “பெண் பார்த்துட்டு போகட்டும், போன் நம்பர் வாங்கி பேசலாம், அப்புறம் யார்ரா நீ, எங்க ரெண்டு பேர் நடுவுல வரன்னு கேட்ப, பயப்படாத, ப்ரீயா இரு” என மிக நீண்ட விளக்கம் சொல்லி ஒரு வழியாக அவளை சமாதனாப்படுத்தி போனை வைத்தான்.   

மறுநாள் காலை வீடு கலகலப்பானது, ப்ரகதீஷ் இல்லை என்ற எண்ணம்தான் இருந்தது சாக்ஷியிடம், மற்றபடி சரியான நேரத்திற்கு எல்லாம் நடந்தது.

பெண்ணும் மாப்பிள்ளையும் தனியே பேச சென்றனர். சாக்க்ஷிக்கு பட படப்பு, வீட்டின் பின் பக்கமுள்ள மருதாணி செடியின் அருகில் நின்றாள். சேலை கட்டியதால் வந்த படபடப்பு என நினைத்திருந்தாள்.

அருகில் அவளிற்கு பார்த்த மாப்பிள்ளை வந்து நின்றான். “ஹாய்” என சொல்லி தனது பெயரை சொன்னான். “என்ன படிச்சிருக்கீங்க” என்றான். இவளிற்கு என்ன சொன்னாள், என தெரியவில்லை.

அந்த மாப்பிள்ளை “யாரு கதீஸ்” என்ற கேள்வியை கேட்டான்.

அவனின் குரலில் நிமிர்ந்து, அவனை பார்க்க, அவன் மீண்டும் புருவம் உயர்த்தி “யாரு” என்றான் கேள்வியாய். இவள் தடுமாறி நிற்க.

அவனும் “நீங்கதான், சொன்னீங்க, அதான் நான் கேட்கிறேன் யாரு கதீஷ்” என்றான்.

இப்போது இவள் நிமிர்ந்து கொண்டாள் “என்னோட பிரின்ட், சாரி, தெரியாம வந்துடிச்சு. நான் இப்போதான், B.com எழுதியிருக்கேன்” என்றாள். அந்த நிகழ்வு அவளின் அனிச்சை செயலாய் வெளிப்பட்டு விட்டது.

ஆனால், அந்த புது நபருக்கு இது புரியாது. “ஓ” என ஒரு வார்த்தையில் நிறுத்திக் கொண்டார் அவர். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று, அனைவருடனும் அமர்ந்து கொண்டார்.

எல்லோரும் கிளம்பி சென்றனர், பதிலே சொல்லாமல். சாக்க்ஷியின் தந்தைக்குதான் சற்று வருத்தம். இது ஏதோ ஒரு வகையில் இவர்கள் சொந்தம். எனவே அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருந்தார்.

மேலும் இது முடிவாகிவிட்ட நிலையில், சும்மா, போர்மல்லிட்டிக்கு வந்து பெண் பார்த்தனர். மற்றபடி போட்டோ பார்த்தாகிவிட்டது. இரு வீட்டிற்கும் பிடித்திருந்த நிலையில், ‘ஏன், பதில் சொல்லாமல் சென்றனர்’ என தான், யோசனை சுந்தரராஜனுக்கு.

மெதுவாக இரண்டு நாள் கழித்து சாக்க்ஷியின் சித்திக்கு போன் செய்து சொல்லிவிட்டனர். “ஏதோ, அந்த பொண்ணு வேற பையன் பேர் சொல்லுதாம், எங்க பையன் வேணாம்ன்னு சொல்லறான்” என்றனர்.

இதை எப்படி எடுப்பது என தெரியவில்லை. ஆனாலும் இந்த செய்தியை சுந்தர்ராஜனுக்கு சொல்லிவிட்டார், அவரின் தம்பி.. மேலும் இது ஒரு நிகழ்வாக சொந்தங்கள் மத்தியில் பரவியது.

ஆனால் சாக்க்ஷியிடம், யாரும், எதுவும் கேட்கவில்லை. அவளின் அம்மாதான், மனது கேட்காமல், ஒருநாள் சொல்லிவிட்டார்.

அவளின் தந்தை அவளை பார்த்திருந்தாரே தவிர ஏதும் கேட்கவில்லை. இப்போது சாக்க்ஷியால் இதனை மறுக்க முடியவில்லை. எனவே, “ஆமாம், சொன்னேன். தெரியாம, வாய் தவறி வந்துடுச்சி, என்ன பண்ண முடியும்” என்றாள் அதிரடியாய்.

அவளின் அன்னைக்கு, அவளை அப்படியே, நாலு சாத்து சாத்தலாம் என கோவம் வந்தது. “இதென்ன பேச்சு சாக்ஷி” என்றார். இப்போது அவளின், அன்னை, தந்தை இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

என்ன கேட்பது, என்ன சொல்வது என தெரியாமல் இருவரும் அமைதியாக நிற்க. சாக்ஷிக்கும் அதே நிலைதான். அவளின் மனம் என்னவென அவளிற்கே தெரியாத நிலையில், ஒரு நிகழ்வு நடந்து முடிந்தே விட்டது.

‘இதில் எனது தவறு இருக்கிறது, என அவளிற்கு தோன்றவேயில்லை.’ அதனால், “வரேன்ம்மா” என சொல்லி கிளம்பினாள்.

“கல்லூரியும் இல்லை, அப்பாவும் இங்கதான் இருக்கார், நீ எங்க போறே” என்றார் அவளின் தாய் மணிமேகலை.       

இதென்ன கேள்வி என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள் “அங்க இமயன, எடுத்து வரேன்ம்மா. கதீஸ்தான், ஊரில் இல்லையே, நான் போய் ஒரு எட்டு, பார்த்துட்டு வரேன். எல்லாம் என்ன பண்றாங்க தெரியலை” என இவள் புலம்பிய வண்ணம், யாரையும் சட்டை செய்யாமல், ப்ரகதீஷின் வீட்டுக்கு கிளம்பினாள்.

இவர்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சுந்தரராஜனும் வெளியே கிளம்பிவிட்டார். வீட்டில் தனியாக மணிமேகலைதான், என்ன நடக்கும் என தெரியாமல் இருந்தார்.

ப்ரகதீஷின் வீட்டிற்கு சென்றால், இவளை எதிர் பார்த்தே, எல்லா ஜீவனும் அங்கிருந்தது. இவளை பார்த்த உடன் ஜகு கனைத்து சப்தமிட, இப்போது புதிதாக வந்துள்ள குட்டி துஷ்யந்த்தும், சிறிதாக அவளிற்கு அடிமையாகி இருந்ததால், அதுவும் கனைத்து தனது இருப்பை சொன்னது.

கதீஷின் அம்மாவும் இதனை பார்த்துவிட்டு “நீ வந்தவுடன சத்தத்தை பார்த்தியா, நான் இவ்வளவு நேரம் இங்க தானிருந்தேன், ஒன்னும் என்னை கண்டுக்கல” என்றார். அதன்பின் வேறு எதுவும் யோசிக்கவில்லை அவள்.

அங்கிருந்துவிட்டு, மாலைதான் வீடு வந்தாள் சாக்ஷி. மணிமேகலைதான் அவளை கண்ணில் வலியோடு பார்த்திருந்தார். அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை சாக்க்ஷி. வீடு ஒருவித அமைதி நிலைக்கு சென்றது.

அந்த வார விடுமுறையில்தான், முதல் வருட சமஸ்டர் முடிந்து அக்ஷரா வீட்டிற்கு வருகிறாள். அதானல் வீடு சற்று மாற்றம் கொண்டது.

அன்று முழுவதும் வீடு கலகலப்பாக இருந்தது. ஏதோ இழந்தது போல் இருந்த வீட்டை கொஞ்சம் தன் வருகையால், புதுப்பித்தாள் அக்ஷரா.

மாலை இருவரும் பின்புறம் உள்ள சிமென்ட் திட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அக்கா, தங்கைக்குள் எப்போதும் ஒரு ஒற்றுமை இருக்கும். அதிகமாக  அடித்துக் கொள்ளமாட்டார்கள்.

அக்க்ஷரா, வெளியிலேயே தங்கி படிப்பதால் கூட இருக்கலாம், அவர்களின் அம்மா வந்து, எதோ சிற்றுண்டி கொடுக்க வரவும், அக்ஷரா “என்னக்கா, மாப்பிள்ளை ஓகே வா” என கேட்க்கவும்தான். தன் அன்னையை பார்த்தாள், சாக்க்ஷி ‘இவளிடம் எதுவும் சொல்லவில்லையா’ எனும் பார்வை அது.  

மணிமேகலையும் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர, இந்த ஒருவாரமாக இருந்த இறுக்கம், சாக்க்ஷியை, என்னமோ செய்ய “ம்மா, என்ன செய்ய சொல்ற, நான் ஏதும் தப்பா சொல்லம்மா” என்றாள் அத்தனை வலி அந்த குரலில்.

சாதாரணாமாக விளக்கம் எல்லாம் சொல்லவே மாட்டாள், பிடிக்கவில்லை என்றாள் அவ்வளவுதான். அதற்கு மேல் வார்த்தைகள் வராது அவளிடமிருந்து. இது போல கெஞ்சல் மொழி எல்லாம் அவள் சொல்வதே இல்லை.

இப்படி அவள் கேட்கவும், செல்வதற்காக திருபியவர், அப்படியே இவளிடம் திரும்பினார். இத்தனை நாள், கேட்க நினைத்ததை கேட்டேவிட்டார். “மறைக்காமா சொல்லுடாம்மா, நீ ப்ரகதீஷ விரும்புறியா” என்றார். அந்த பார்வையில் தவிப்பு மட்டுமே இருந்தது.

இது போல் வார்த்தைகள் எல்லாம் கல்லூரியில் கேட்டே அவளிற்கு பழக்கம். அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லமாட்டாள். நெருங்கியவர்கள் என்றால் சிரிப்பு. கொஞ்சம் தூரமானவர்கள் என்றால், ஒரு முகத்திருப்பலில் கடந்து விடுவாள்.

இப்போது வீட்டில் எனவும், கோவம் வந்தது அவளிடம் ‘என்னை தெரியாத’ என்ற கோவம். எழுந்து செல்லும் நிலையில்தான் இருந்தாள். ஆனால், கேட்பது அம்மா, தன் வாய் மொழியாக கேட்க நினைக்கிறார் என்ற எண்ணம் எழ “இல்லம்மா, இனி இப்படி கேட்காத” என்றாள். பல்லை கடித்துக் கொண்டு.

அவளின் தாய்க்கு இந்த கோவமெல்லாம் கண்ணில் தெரியவில்லை. அப்படியொரு நிம்மதி. லேசாக சிரித்தவாறே அந்த இடம் விட்டு சென்றார்.

அதன்பின் சாக்க்ஷி, நடந்ததை தன் தங்கையிடம் சொன்னாள். அக்ஷராவும் எதுவும் பதில் சொல்லவில்லை. பின் அந்த வீட்டில், இந்த பேச்சு எழவில்லை.

சுந்தர்ராஜனுக்கும், தன் பெண்ணிற்கு, விரைவில் திருமணம் முடிக்க வேண்டும்” என எண்ணி, இன்னும் விரைவாக திருமணத்திற்கு பார்த்தார்.         

இந்த பத்து நாட்கள் ப்ரகதீஷ், ஊருக்கு சென்றதால், அவனிடம் ஏதும் சொல்லவில்லை சாக்ஷி. பெண் பார்த்து சென்ற அன்று அவன் போன் செயாதலால், ஒரு கோவத்தில் இருந்தாள். ‘ஒரு போன் செய்து கூட கேட்கவில்லை’ என்ற கோவம்.

அதனால் இவளும் போன் செய்யவில்லை. கதீஷ் இரண்டுநாள் கழித்து போன் செய்தாலும், இவள் பேசவில்லை.   

இன்று வந்து விடுவான் என தெரியும். எனவே சீக்கிரமே எழுந்து அமர்ந்திருந்தாள். அதற்கு மேல் அவளாள் பேசாமல் இருக்க முடியாது. இந்த ஒரு வாரமே பல்லைகடித்துக் கொண்டு பொறுத்திருந்தாள். அப்படியிருக்க இன்று வருகிறான எனவும் கொஞ்சம் ஆசுவாசமானாள்.

ப்ரகதீஷும், ஏதோ பல காலம் பார்க்காதவன் போல் வந்து நின்றான் காலையிலேயே,  ஜாக்கிங் பெண்ட் அணிந்து, ஒரு டார்க் ப்ளு டி ஷர்ட் அணிந்து, வேர்க்க, விறு விறுக்க வந்து நின்றான் சாக்க்ஷி வீட்டின் முன்பு.

அக்க்ஷராதான் முன் பக்கமிருந்தாள், “வாங்கண்ணா” என்றவள் “பின்னாடியிருக்கா” என சொல்லி, திரும்பவும் பேப்பர் படிக்க தொடங்கினாள்.

சாக்ஷியின் தந்தை, அங்கு ஹாலில் அமர்ந்திருந்தார், அவரை பார்த்து “குட் மோர்னிங் அங்கிள்” என பளீரென சிரித்தான் ப்ரகதீஷ். அவர் அங்கு அமர்ந்திருக்கவும் “என்ன அங்கிள் எப்போ நிச்சையம்” என கேட்டான்.

அவர் இப்போதுதான் கொஞ்சம் மறக்க தொடங்கியவரிடம், திரும்பவும் நியாபகபடுத்துவது போல், அந்த நிகழ்வையே கேட்கவும் “உன் பிரின்ட் ஒன்னும் சொல்லலையா” என்றார் கோவமாக.

“இல்ல அங்கிள் நான்தான் போன் பன்னல, கொஞ்சம் வேலை அதிகம், அதான்” என தன் தோழியை விட்டு கொடுக்காமல் சொல்ல,

அதற்கு அவனிடம் பதில் சொல்லாமல் “சாக்க்ஷி…” என்றார்.

அங்கிருந்து வந்தவள், கதீஷை பார்க்கவும் “இங்க வா கதீஸ் “ என அழைத்து சென்றாள். அவனிடம் “காபி குடிச்சியா” என்றாள்..

“இல்ல“ என்றான். அவள் உள்ளே செல்ல போக, “சாக்கி, பசிக்குது ஏதாவது பிஸ்கட்ஸ் இருந்தா எடுத்து வா” என்றான். தன் வயிற்றில் தாளமிட்டபடி.

இப்படியாக காலை நேரத்திலேயே மொட்டைமாடிக்கு சென்றனர் இருவரும். இவனிடம் எல்லாம் சொன்ன பிறகுதான், சற்று நிம்மதியானால் சாக்க்ஷி.

அவனிற்கு, இது பெரிதாக தெரியவில்லை போல. அதே சமயம், மனதில் எதோ, இனம் புரியாத உணர்வு வந்து அழுத்தியது அவனை. அமைதியாக இருந்தான் ஏதும் பேசவில்லை.

ஒன்பது மணிக்குதான் இறங்கி வந்தனர், அதுவும் சூரியன், கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். அதனால்தான் வந்தனர்.

இப்போது ரெடியாகி உணவு மேசையில் அமர்ந்திருந்த சுந்தரராஜன், இன்னும் இவன் இங்கிருப்பதை பார்த்து, இத்தனை வருடங்கள் தோன்றாத எண்ணமாக, அவன் மேல் எரிச்சல் வந்தவராக “என்னப்பா, இன்னும் இங்க இருக்க, கிளம்பல” என்றார்   

அவனும் நழுவ எண்ணி “இதோ கிளம்பிட்டேன் அங்கிள்” என்றான்.

இப்போது யோசிக்கவில்லை ராஜன் “இனி, இங்க அதிகம் வராதப்பா” என்றார். இதை சொல்லும் போது அவனை பார்க்கவில்லை அவர். தங்கள் பிள்ளைகள் போல்தான் இதுவரை, இரு வீட்டிலும் பார்த்திருந்தனர். அப்படியிருக்க, இந்த வார்த்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

சாக்ஷியின் அம்மாவும், தங்கையும் இவர்களையே பார்க்க. சாக்க்ஷி, தன் அப்பாவிடம் “என்னப்பா” என்றாள்.    

அவர் நிமிர்ந்து கூட யாரையும் பார்க்கவில்லை, தன் தட்டிலேயே கண்ணாக, அந்த இட்டிலிகளை பொறுமையாக, சாம்பாரில் தோய்த்து, அதைவிட பொறுமையாக தன் வாயில் இட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

நிசப்தமாக இருந்தது அந்த இடம், ப்ரகதீஷ் அந்த ஒரு நிமிடம்தான், நின்றான். அமைதியாக சென்றுவிட்டான். முதல் முறை, அவனிடம் ஆண் என்ற எண்ணத்தை தோன்ற செய்தார். ஆம், நட்பிற்கு ஆண் பெண் பேதம் தெரியாது. இப்போது தன் வார்த்தையாள் தெரியவைத்தார்.   

சாக்ஷி “கதீஷ், கதீஷ்” என கூப்பிட கூப்பிட சென்றுவிட்டான்.

 

     

Advertisement