Advertisement

மிட்டாய் புயலே-25

எல்லா சடங்குகளும் தொடங்கின, ஒவ்வென்றிலும் சாக்க்ஷியும் தனது, பங்கை இனிதே செய்தாள். இப்போது இந்த நொடியை தான் இழக்க கூடாது. மேலும் ஆசையுடன் அனைத்தையும் எதிர்பார்த்திருந்த கதீஷின் எண்ணத்தையும் புறக்கணிக்க கூடாது. என எண்ணம் வந்ததது அவளுள். மற்றெதெல்லாம் மனதின் அடியாழத்தில் சென்றது சாக்க்ஷிக்கு

எனவே கண்ணில் ஈரமும், அவன் மேல் ஈர்ப்புமாக, தனது கதீயை பார்த்த வண்ணமே, அனைத்தையும் செய்தாள் சாக்க்ஷி. பெண் வீடு சென்று வந்தனர். பிறகுதான் மாப்பிள்ளை வீடு சென்றனர்.

சாக்க்ஷிக்கு, ஏதோ பழகிய இடத்திற்கு செல்லும் நிலைதான், ஒரு தயக்கம், படபடப்பு எதுவும் இல்லை அவளிடம் .ஆனால் கதீஷின் வீடு முற்றிலும் மாறியிருந்தது. ஆர்த்தி எடுத்து பூங்கொடியும், பாக்கியமும் மணமக்களை உள்ளே அழைத்தனர்.

பெண் மாப்பிள்ளை அமரவைக்கப்பட்டு, பால் பழம் கொடுத்து, பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்கி என ஒவ்வென்றாக முடிந்து. சற்று தளர்ந்து அமர்ந்திருந்தனர் இருவரும்.

கதீஷ் “ம்மா… நாங்க மேல ரூமுக்கு போகவா” என ஹாலில் இருந்தே கேட்டான். ‘ஐயோ…’ என அக்காக்கள் அவனை பார்த்து முறைக்க…

அவனின் மாமாதான் “பார்ரா அவசரத்த…….. மாப்பள, அதெல்லாம் அப்புறம்……..  இப்போ நீ மட்டும் வேணா, மேல போ…. தங்கச்சிய என் பொண்டாட்டி பார்த்துக்குவா” என நக்கல் தொனியில் சொல்லவும்தான் கதீஷ்க்கு ஏதோ புரிய, அசடு வழிய நின்றிருந்தான் அங்கு.

இப்போது, இன்னும் சிரிப்பலை நீண்டது. ஒருவழியாக கதீஷ் மேலே சென்றான். சாக்க்ஷியை ஜெயா, தங்களின் அப்பா அம்மா அறைக்கு அழைத்து சென்றார்.

ஜெயம் “சாக்க்ஷி, டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு, நான் அப்புறம் வந்து எழுப்பறேன்….” என்றார். சாக்க்ஷி ஏதும் சொல்லவில்லை “ம்.” என்றாள் அவ்வளவுதான்.

ஜெயம், பாக்கியம் என எல்லோரும் நன்றாகத்தான் பேசுகிறார்கள். ஆனால் இவளால்தான் ஒன்ற முடியவில்லை அவர்களிடம். ஆனால் அதுவும் இவளை உறுத்திக் கொண்டே இருந்தது.  

இப்போதும் கூட ஜெயம் பேசி சென்றார்தான் நான் ஏன், ஒன்றும் பேசவில்லை என இந்த சத்தமில்லா தனிமை அவளை யோசிக்க வைத்தது.

தனக்கு எது என்றாலும் அப்பாவை தேடும் அவள் மனம் இப்போதும் அவரைத்தான் தேடியது….. அப்பாவின் நினைவு வந்தது அவளிடம். ‘அப்பா இல்லையே’ என பெருமூச்சு வந்தது. அவருடன் இருந்தது… பேசியது என ஏதோ நினைவு….  

இன்றைய நிலை நினைவு வர…. மாற்ற முடியாதது இது…. நான் ஆசைப்பட்டது… எனவும் தோன்ற தொடங்கியது….. குழம்ப தொடங்கினாள் அவள்…

ஆம், முதலில் நான்தானே சொன்னேன்… ‘யார், என்ன’ என தெரியாதவரிடம்… அதுவும், என்னை பெண் பார்க்க வந்தவரிடம், எப்படி வெளிவந்தது அவன் பெயர்…. என இப்போதும் யோசித்தும் கிடைக்கவில்லை அதற்கான விடை. லேசாக சிரிப்பு கூட வந்தது. அன்றைய நினைவில்.

ஆக எல்லாம் தொடங்கியது என்னிடமிருந்து. எனவே இப்போது அவனை, அவர்கள் வீட்டை ஒதுக்கி வைப்பது தவறுதானே என தோன்ற தொடங்கியது.

கதீஷின் வீட்டில் எல்லோரும் எங்களுக்காக இறங்கி வந்திருக்கின்றனர். ஆனால் நான் என்ன செய்தேன். ஜெகன் மாமாவும் வந்து பேசி பார்த்து விட்டார் நான்தான் ஒதுங்கியிறுக்கிறேன்.

மாற்ற வேண்டும்…. இதுவல்லவே நான்…. எங்கோ, உள்ள நிராசையை இங்கே காட்டுவது முறையல்லவே.

இதென்ன நாடகமா, சினிமாவா…. யாரவது வந்து ‘உன் அப்பா இருந்திருந்தால், கதீஷை உனக்கு தந்திருப்பார்’ என சொல்லி தேற்ற…  என உணர தொடங்கினாள்.

அப்போது…. கர கரவென கண்ணீர் வழிய, மேலே பார்த்து “அப்ப்பா…. உங்க பொண்ணு தேடிக்கிட்டே இருப்பாப்பா…. உங்கள….. நினைச்சுகிட்டே இருப்பா ப்பா… எப்போதும்… ஏன் பா…. போனீங்க…..

எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிப்பா….

நீங்கதான் இல்ல… பார்க்க..

எ…எனக்கு கதீஷ ரொம்ப பிடிக்குதுப்பா…….” என சொல்லி யாருமற்ற அறையில், தேம்பி தேம்பி அழ தொடங்கினாள் சாக்க்ஷி.

தொடர்ந்து அவளே “எல்லாகிட்டையும் சொல்லிட்டேன் பா…. அவன் வேணும்ன்னு…..

ஆனா, உங்ககிட்ட மட்டும்தான் நான் சொல்லல……

ஐயோ தப்பு செய்துட்டேன்ப்பா………. சொல்லியிருந்தா……… க்……

சொல்லியிருந்தா… எனக்கு இந்த வேதனை இல்லாமல் போயிருக்குமே ப்பா….

சாரி பா….

சாரிப்பா…..” என நீண்ட நேரம் அவளுடைய அழுகை தொடர்ந்தது.

நல்லவேளை அவளை தேற்றுவார் யாரும் இல்லை, வேண்டாம். அவளை யாரும் தேறவும் வேண்டாம்… ஏனென்றால், அவளை உறுத்திய விஷயங்கள் எல்லாம் கண்ணீராய் கரைந்து கொண்டிருந்தது, இப்போது….  

அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் எப்போதும் இடைவெளியே இருப்பதில்லை போலும்…. அது, தந்தை இருக்கும் போது என்றாலும் சரி, அவர் இறந்த பின் என்றாலும் சரிதான் போல….

எங்கோ ஆரம்பித்த சிந்தனை… எப்போதும் போல் தன் தந்தையிடமே முடிந்தது அவளுக்கு.

வெகு நேரம் அழுது ஓய்ந்து போய் படுத்திருந்தாள் சாக்க்ஷி. மனதில் ஒரு தெளிவு வந்தது. தந்தை உடனிருக்கும் போது, அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் நினைவு வந்தது.

சுந்தரம் சொல்லுவார்…… “இதே நிலை எப்போதும் இருக்காது பாப்பா…. நாமும் சூழ்நிலைக்கு தக்க மாறனும்…. அப்போதான் வளர முடியும்” என்பார்.

ஏனோ இப்போது அந்த வார்த்தைகள்தான் நினைவு வந்தது சாக்க்ஷிக்கு. அதனை மந்திரமாக பற்றிக் கொண்டாள் சாக்க்ஷி.

அனைவரும் அவள் உறங்குகிறாள் என நினைத்திருந்தனர். ஆனால் மேகலைக்குதான் மனம் முழுவதும் அந்த அறை வாசலிலேயே காவல் இருந்தது.

தாய்க்கு புரியாதா, மகளின் நிலை. இப்படி உறவுகள் எல்லாம் வெளியே இருக்க, உறங்க முடியாது சாக்க்ஷியால் என தெரியும் அவர்க்கு.

எனவே, வெகு நேரம் கழித்து அக்க்ஷராவை மட்டும் அந்த அறைக்கு சென்று, சாக்க்ஷியை பார்த்து பேசி வர செய்தார்.  

அக்க்ஷரா சென்று கதவை தட்டவும், சாக்க்ஷிக்கு கொஞ்சம் ஸ்மரணை வந்தது. எங்கு இருக்கிறேன் நான், என்ன செய்கிறேன்… இந்த கோலத்தில் என்னை சொந்தங்கள் பார்த்தாள் என்ன ஆகும் என யோசித்தவள், யார் தட்டுகிறார்கள் என தெரியாமலே….

“குளிச்சிக்கிட்டு இருக்கேன், ஒரு பத்து நிமிஷம் வந்திடுறேன் க்கா” என்றாள்… ஜெயம் என நினைத்து.

அக்க்ஷராவும் சிரித்தபடியே சென்று தன் அன்னையிடம் சொன்னாள். மேகலைக்குதான் ஒன்றும் புரியவில்லை. ஆனால் என் மகள் எதையும் சாமாளிப்பாள் என எண்ணிக் கொண்டார்.     

சாக்க்ஷியும், சொன்னது போலவே குளித்தது, உடை மாற்றி வெளியே வந்தாள். இயல்பாய் இருந்தாள். வீடே சொந்த பந்தத்தால் நிறைந்து வழிந்தது.

மெதுவாக வெளியே வந்த சாக்க்ஷி, அந்த வீட்டின், ஒவ்வெரு இடமாக விழி விரித்து பார்த்தாள். அனைத்தும் மாறியிருந்தது. சில பல மாறுதல்களுடன் வீடு புதிதானது போல் இருந்தது.

அவனின் வளர்ப்பு உயிரினம் எல்லாம், பண்ணை வீட்டுக்கு மாற்றி இருந்தான். இப்போது, அந்த இடத்தில் தரை போல் சிமெண்டில் போட்டு, மேலே ஷீட் போட்டு, வந்தவர்கள் அமர்வதற்கான சேர்கள் போடப்பட்டிருந்தன.

அங்கேதான் பூங்கொடி இருக்கவும், இப்போது சாக்க்ஷி இயல்பாய் கேட்டாள் “எங்கத்த…. வீரா, ஜகு யாரையும் காணம்” என்றாள். பூங்கொடிக்கு இந்த வார்த்தையில் திடுக்கிட்டு திரும்பினார்.

இதுவரை தேவைக்காக மட்டுமே சாக்க்ஷி எல்லோரிடமும் பேசியிருந்தாள். முன்போல், அதில் ஒட்டுதல் தெரியவில்லை கதீஷின் வீட்டினருக்கு. எனவே பூங்கொடி முதல் ஜெயா வரை அனைவருக்கும் பெண் பார்த்து வந்ததிலிருந்து ஒரு வலி இருக்கத்தான் செய்தது.

சின்னதிலிருந்து பார்த்ததால் சாக்க்ஷியின் குணம் தெரியும். எனவே அவளின் ஒதுக்கம் கொஞ்சம் பயத்தை தந்தது. மேலும் இதை வீட்டு பெண்கள் எதிர்பார்த்தனர்.

அவர்கள், அவளிடம் நடந்து கொண்ட முறை இப்போது நினைத்தால், ரொம்ப சிறுபிள்ளைத்தனம் போல் தோன்றியது இருவருக்கும். எனவே சாக்க்ஷியிடம் இயல்பாகவே பேசினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும் என கூட தோன்றியது பூங்கொடிக்கு, ஆனால் எந்த நிலையிலும் அதை செய்யவில்லை அவர். ஏதோ ஒன்று தடுத்தது அவரை.

எனவே அதை ஈடு செய்யும் விதமாக நன்றாக பேசினார். நிறைய செய்தார். புடவை, நகை என எல்லாம் ஒன்றிற்கு இரண்டு பங்காகவே செய்து… தனது பெருந்தன்மையை காட்டினார் பூங்கொடி.

இது நல்லாதா, கேட்டதா என்பதை விட… சில பெரியவர்களை மாற்றவே முடியாது. காலம், காலமாக இப்போடிதான் அவர்கள்.  

இப்போது சாக்க்ஷியாக, பூங்கொடியை அத்தை என்றழைக்கவும் அவர் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தார். இப்போது அவருக்கு என்ன சொல்வது எப்படி அவளிடம் இயல்பாக பேசுவது என பெரிய போராட்டம்.  

 

Advertisement