Advertisement

மிட்டாய் புயலே-21

இன்று காலை பதினொரு மணி, சுந்தரராஜனின் திதி முடிந்து, சாக்க்ஷியின் வீட்டில் முக்கியமான சொந்தங்கள் மட்டும் இருந்தனர்.

வரதன், அவர்களின் பங்காளிகள் மற்றும் சாக்க்ஷியின் தாய் மாமா, என ஆண்கள் அனைவரும் உணவு முடித்திருந்தனர். ஒவ்வெருவராக கிளம்ப, வீடு கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தது.

இப்போது வரதன், சாக்க்ஷியின் தாய்மாமா மேகநாதனிடம், சாக்க்ஷி அன்று சொன்னவைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அண்ணன் இல்லாத இந்த நிலையில், தான் மட்டுமே எந்த முடிவும் எடுக்க முடியாது அல்லாவா அதனால் தனக்கு பிறகு இந்த குடும்பத்தில் அதிக அக்கறை கொண்டவர். மேலும் உரிமையும் உடையவர் என்பதால் எல்லாம் விரிவாக சொன்னார் வரதன்.

இப்போது பெண்கள் உணவு உண்டுக் கொண்டிருந்தனர். சாக்க்ஷியும்தான். அவளின் காதெல்லாம் இங்கு ஹாலிலேயே இருந்தது.

கலவையான மனநிலை, ஏதும் சொல்வதற்கில்லை என்பது போல் முகம் இருக்க. தன்னுள் ஒடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

இன்னும் கதீஷுடன் பேசவில்லை. தன் தந்தையின் திதிக்கு கூட சொல்லவில்லை அவனிடம். அவனும் அவளை அழைக்கவில்லை. எனவே இருவர்க்கும் இது என்ன நிலை என புரியவில்லை.

இந்த ஒரு வாரத்தில் சாக்க்ஷி தன் சித்தப்பாவிடம் எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் அவர் ஏற்க தயாராகயில்லை, ‘உன்னுடைய திருமணம்தான் முதலில்’ என தன் பிடியிலேயே நின்றார்.

சாந்தா என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தார். அவராலும் பேச முடியவில்லை.

சாக்க்ஷி, வெளியே அமைதியாகவும் திமிராக்கவும்தான் வளம் வந்தாள். ஆனால் உள்ளுக்குள், சில்லு சில்லாக நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவனை பார்க்க வேண்டும் போல் மனம் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருந்தது.

எங்காவது ஓய்ந்து உட்கார்ந்தால் அழுது விடுவோமோ என்று, தனியே எங்கும் அமர்வதில்லை அவள். மில்லில் இருக்கும் வரை நிமிர்வாக இருப்பவள், வீடு வந்தாள், அமைதியாகினாள்.

இன்றும் அப்படிதான், சாக்க்ஷி அமைதியாக இருந்தாள் ஆனால் மனம் மட்டும் அவளிடம் இல்லை. எங்காவது அவன் நினைவு வந்து விட கூடாது என போராடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் பாவம், அவனே வந்து நின்றான் “ஆன்டி….” என்ற அழைப்போடு.

அங்கு ஹாலில் அமர்ந்திருந்த மேகநாதன் “வா ப்பா” என்றார்.

வரதனின் பேச்சு நின்று, ஆராய்ச்சி பார்வை வந்தது அவர் முகத்தில். லேசாக தலையசைத்தார் கதீஷை பார்த்து அவ்வளவே.

கதீஷ் “நல்லாருக்கீங்களா மாமா” என்றான் மேகநாதனை பார்த்து. அவரும் தொடர்ந்து “இருக்கோம் பா” என்றவர்.

“சாப்பிடலாம் ப்ரகதீஷ்…. வாப்பா” என்றார்.

“இல்ல மாமா, கொஞ்ச நேரம் ஆகட்டும், இப்போதான் டீ சாப்பிட்டு வந்தேன்.” என்றான் நழுவும் விதமாக.

மேகலை வெளியே வந்து நின்றார் “எங்க ஆன்டி உங்க பொண்ணு, ஒரு வார்த்தை சொல்லல இப்படின்னு… எங்க…. கூப்பிடுங்க அவள” என்றான்.

இது நேரம் வரை வரதன், இவன் வரவு குறித்து ஒரே யோசனையில் இருக்க…. ஒருவேளை ‘சாக்க்ஷி சொல்லியிருப்பாளோ’ என எண்ணியிருந்தார்.

ஆனால் கதீஷ் சொல்லும் விதத்தை பார்த்தால் அப்படி இல்ல போலவே என அவர் தனது சிந்தனையில் இருக்க, மேகலைதான் “சாப்பிட்டுட்டு இருக்கா பா, வருவா” என்றார் அமைதியாக.

சாக்க்ஷிக்கு ‘ஆன்டி’ என்ற அவனின் குரல் கேட்கவும், வந்துவிட்டானா என கண்ணீர்தான் வந்தது. ஏன் என தெரியாமலே, எதற்கு என தெரியாமலே, நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.

அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை, கையில் எடுத்துக் கொண்டு, கிட்செனின் சென்று நின்றுகொண்டாள். சுவரில் சாய்ந்து.

எங்கே அவன் குரல் கேட்க கேட்க, எல்லோர் எதிரிலும் அவன் முன் போய் நின்று விடுவோமோ என பயம். மனம் அவன் எதிரில் மானசீகமாக மண்டியிட, இவள் இங்கு ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.

வெளியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர், கதீஷின் கண்களும் அவளை ரகசியமாக தேடிக் கொண்டிருந்தது. வரதனும், மேகநாதணும் கதீஷிடம், ‘சாக்க்ஷி சொல்லியது குறித்து கேட்பதா, இல்லை அவனே சொல்வானா’ என பார்த்துக் கொண்டிருந்தனர்.

கதீஷிற்கு இவர்களின் குறு குறு பார்வை எதையோ உணர்த்தினாலும், சாக்க்ஷி சொல்லிவிட்டாளா என தெரியாமல் என்ன சொல்வது, ஏது கேட்பது என புரியாமல் அவனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

அக்க்ஷராதான் உள்ளே சென்று “க்கா, போதும் வா, அங்க ஒருத்தரா உட்கார வைச்சு, எல்லோரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க, நீ இங்க நின்னு கனவு கண்டுக்கிட்டு இருக்க, போ… போய் கதீஷ் அண்ண… இல்ல, மாமாவ பாரு” என சுள்ளென விழுந்தாள்.

அதில்தான் சாக்க்ஷிக்கு அவனின் நிலை புரிய, ‘அய்யோ இன்னும் என்ன என்ன சோதனையோ அவனுக்கு’ என கைகழுவிக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

பட படப்பாக வந்தவளுக்கு, அழகான தருணமாக மாறியது. இவள் செல்ல… முன்னே கண்ணில் பட்டது அவன் உருவம்தான், வரதனும் நாதனும் இவளிற்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க,

கதீஷ் தனி சேரில், கலையாத கேசமும், திணறும் உடல் மொழியுமாக, முகம் லேசான வெட்கத்தை காட்ட, அதை மறைத்து அவன் இயல்பாக பேச முயற்சிக்க என தன் கதீயே அவளிற்கு இந்த ஷனத்தில் சுந்தரனாக தெரிந்தான்.

விழியெடுக்காமல் அவனை பார்த்துக் கொண்டே வந்தவள், அவனும் இவள் வருவதை விழி நிமிர்த்தி பார்த்த போது,

சாக்க்ஷி லேசாக கண்களில் ‘சூப்பர்’ எனும் விதமாக இரு கண்களையும் மூடி திறந்து ஜாடை காட்டி, இயல்பாய் “சித்தப்பா..” என அழைத்தாள்.

வரதன் திரும்பவும் சாக்க்ஷி “ இவர் ப்ரகதீஷ், சித்தப்பா, நான் சொன்னேல்ல சித்தப்பா” என்றவள் திணற தொடங்கினாள்.

இப்போது கதீஷுக்குதான் சுவாரசியம் கூடியது. அழகாக புருவம் உயர்த்தி அவளை பார்த்திருந்தான் ‘எல்லாம் சொல்லிவிட்டாளா’ என.

இப்போது கர்வம் கூடியது அவன் முகத்தில். கூடவே அவளின் வெட்கத்தை ரசிக்க தொடங்கினான்

அவர்களின் குறு குறு பார்வைக்கு அர்த்தம் புரிந்தது. தானே, பேச தொடங்கினான், இயல்பாய் “ஹேய் சொல்லிட்டியா” என்றான், சாக்க்ஷியை பார்த்து. முகத்தில் அத்தனை பிரகாசம்.

“தேங்க்ஸ் சாக்க்ஷி” என்றான் அவளிடம்.

பிறகு மேகலையை பார்த்து “சாரி ஆன்டி, இப்போ சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்க பொண்ண நான் கல்யாணம் செய்துக்க ஆசை படறேன் ஆன்டி” என்றான்.

மேகலை ஏதோ சொல்ல வர.

கதீஷே தொடர்ந்தான் “நடந்தது எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு, நானே சரி பண்றேன், ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஆன்டி “ என்றான். எந்த விதமான தயக்கமும் இல்லை அவன் குரலில்.

யாரும் எதுவும் பேசவில்லை ஒரு இரண்டு நிமிடம் அமைதி எல்லோரிடத்திலும். அவனே தொடர்ந்தான் “கொஞ்சம் டைம் வேணும் அவ்வளவுதான், மற்றபடி இவ என்னோட பொறுப்பு…” என்றான் கண்ணில் சிரிப்புடன்.

வரதன் “என்ன… ஏதுன்னு தெரியலைப்பா, ஆனா நீங்க இருவரும் உலகம் தெரிஞ்ச்சவங்க, இப்போது என் பொண்ணுக்கும், அக்க்ஷராவிற்கும் வரன் வந்திருக்கு, கேட்கறவங்களுக்கு என்ன பதில் சொல்றது….. “ என யோசனையாக, மேகநாதனை பார்த்தார்.

இதற்கெல்லாம் அசராத கதீஷ் “இவ மட்டும்தான் வேனும்னு, நான் கூட்டிட்டு போய்டுவேன் அங்கிள், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாதுதான்.

ஆனா, காலத்துக்கும் அந்த சாயல்…. அவள் மேல் விழுந்துக்கிட்டே   இருக்கும் அங்கிள். அதனால்தான், அவள கௌரவமாதான் எல்லோரும் பார்க்கணும், அது எனக்கு ரொம்ப முக்கியம் அங்கிள், அதுக்குதான் இந்த டைம்….

உங்களுக்கு நான் சொல்லன்னும்ம்னு இல்ல, நீங்க தங்கைகளுக்கு பாருங்க அங்கிள்…… நானும் சீக்கிரமே எங்க வீட்டில் பேசறேன்” என தனது நிலைமையை அழகாக விளக்கினான்.

பெரிய சிக்கல் இது. இது உடனே தீர்ந்தாலும் தீரலாம், இல்லை வருடங்கள் கூட ஆகலாம். எதை நம்பி பெண்ணை காத்திருக்க வைப்பது என பெரியவர்களுக்கு யோசனை.

ஆனாலும் கதீஷின் பேச்சும், அவர்களை யோசிக்கவும் வைத்தது எனவே மேகநாதன் “சரி தம்பி, நாங்களும் கூடிய வரைக்கும், தள்ளி போட முயற்சி பண்றோம், நீங்களும் உங்க வீட்டில் பேசுங்க” என்றார் அரை மனதாக.

அக்க்ஷராதான் பாயசம் எடுத்து வந்து தந்தாள் கதீஷிற்கு. வாங்கி பருகியவன், சிறிது நேரம் அமர்ந்திருந்தவன். அனைவரிடமும் சொல்லிக் கொண்டு, கண்ணால் சாக்க்ஷியிடம் விடை பெற்று கிளம்பிவிட்டான்.

அதன்பின் வரதனும், நாதனும் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் இருவரும் சென்று, பிள்ளைகளின் ஜாதகம் பார்த்து வந்தனர். இரண்டு பெண்களுக்கும் மாப்பிள்ளை ஜாதகம் பொருந்தி இருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் குலதெய்வ கோவில் பூஜை. அதனால் அதற்கான அழைப்புகளும், ஏற்பாடுகளும் நடக்க தொடங்கின. வரதன் குடும்பமும், நாதன் குடும்பமும் இங்கேயே தங்கினர்.

சாக்க்ஷி, அன்று வீட்டில் கதீஷை பார்த்ததுடன் சரி. அதன் பின் அவளிற்கு நேரமில்லை, வேலைகள் அவளை இழுத்துக் கொண்டன.

சித்தப்பா இப்போது மில்லை பற்றி எதுவும் கேட்கவில்லை. இவளும் அவரிடம் வேலை விஷயமாக எதுவும் சொல்வதில்லை. மற்றபடி அவர்கள் இருக்கும்வரை வீடு கலகலப்பாக இருந்தது.

சாக்க்ஷியும், மாலையில் சீக்கிரம் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். நீண்ட நாள் கழித்து உற்சாகம் வந்தது அவளுள்.

குலதெய்வ பூஜையும் சிறப்பாக முடிந்தது. வரதன் அனைத்தையும் சிறப்பாகவே செய்திருந்தார். சொந்தங்கள் எல்லோருக்கும் சந்தோஷமே.  

நேரமும் காலமும் கூடி வரும் போது எதுவும், யாருக்காகவும் நிற்பதில்லை. அதுபோல்தான், இப்போது கீர்த்திக்கும், அக்க்ஷராவிற்கும் நேரம் வந்துவிட்டது.

அடுத்த வாரத்தில் பெண் பார்க்க வந்தனர். அங்கே காங்கேயத்தில் சித்தப்பாவின் வீட்டில். சாக்க்ஷிக்கு செல்ல வேண்டும் என ஆசைதான் ஆனால், எதோ ஒன்று தடுத்தது.

அனைவரும் ‘வா’ என்றனர். அவளுக்குத்தான் என்னவோ போல் இருந்தது. “இல்லம்மா, நான்….. எனக்கு வேலையிருக்கு… நான் நாளைக்கு வரறேன்” என தள்ளி நின்றாள்.

அக்க்ஷரா எவ்வளவோ கெஞ்சியும் அசையவில்லை அவள் “இல்ல டா, கன்பாம் ஆகட்டும், எல்லாம், நான்தான் செய்வேன்…. இந்த ஒரு தடவ மட்டும் ப்ளீஸ் “ என்றாள் சாக்க்ஷி. காதல் சில சின்ன சின்ன காவுகளை கேட்கும்… இப்படிதான்.

இரு மாப்பிள்ளைகளுக்கும் பிடித்திருந்தது. அக்க்ஷராவின் மாப்பிள்ளை சாரதிக்கு, வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், உடனே திருமணம் வைக்க வேண்டியிருந்தது.

அது மட்டுமே அவர்களின் ஒரே நிபந்தனை. மற்றபடி சாக்க்ஷியின் விஷயங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. எனவே இப்போது அக்க்ஷராவின் திருமணமே முதலில் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதில் சாக்க்ஷிக்குதான் நிரம்ப மகிழ்ச்சி, ‘தன்னால் எங்கே தன் தங்கையின் திருமணத்தில் ஏதேனும் சிக்கல் வருமோ என எண்ணியிருந்தவளுக்கு இந்த செய்தி அவ்வளவு சந்தோஷத்தை தந்தது.

உடனே கதீஷை அழைத்து இந்த செய்தியை சொன்னாள். குரலில் துள்ளல் இருந்தது. பழைய உற்சாகம் வந்திருந்தது பேச்சில். ஆரம்பிக்கும் போதே “கதீ…… “ என்றாள்.

அந்த பக்கம் அமைதிதான் பேசவேயில்லை அவன். நேசனாக கோவம் அவனிற்கு, ‘எத்தனை நாள், ஒரு போன்… செய்ய கூட தோனல’ என அவன் எண்ணிக் கொண்டு காதில் வைத்திருந்தான். அவளின் உற்சாகத்தை ரசித்த வண்ணம்.

திரும்பவும் அவள் “கதீ…” என்றாள் உற்சாகம் வடிந்த குரலில்.

அவன் அமர்த்தலான குரலில் “என்ன டி வைச்சிருக்க கதீக்கு” என்றான்.

சாக்க்ஷிக்கு இங்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “அத விடுங்க, அக்க்ஷராக்கு பிக்ஸ் ஆகிடுச்சி” என்றாள். அதே உற்சாகத்துடன்.

இவன் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை “ம்கூம்………” என்றான். அவ்வளவுதான் சொன்ன இவளிற்குதான் சப்பென ஆகியது.

“சரி வைக்கிறேன், பிஸியா இருக்கீங்க போல” என சொல்லி வைத்தும் விட்டாள்.

ஆனாலும் திரும்பவும் கதீஷே போன் செய்தான் “சாரி டா, ஏதோ கொஞ்சம் யோசனை. ம்…….. சொல்லு , என்ன சொன்னாங்க” என்றான் பொறுப்பாய். அதில் மகிழ்ந்தவள் அனைத்தையும் சொல்லி முடித்தாள் அவனிடம்

இன்னும் ஏதோ அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள், அவனும் ம்…. என கேட்டுக் கொண்டான். அவன் ஏதோ சொல்ல வர, அதை அவள் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை.     

பொறுக்க முடியாத கதீஷ் “என்னடி, என்ன பேசினாலும் காதுல வாங்க மாட்டேங்கிற, இப்போ வரேன், பாக்கணும்.” என்றான் கறாராக.

மணி அப்போதே இரவு எட்டு, வீட்டில் வேறு எல்லோரும் அங்கு சித்தப்பா வீட்டில் இருக்கிறார்கள், எனவே சாக்க்ஷி தயங்க “இ. இல்ல கதீ……, எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

இவனிற்கு கோவம் வந்தது “ஒன்னும் பண்ண மாட்டேண்டி, இத்தனை வருஷமா, பக்கத்திலேயே வைச்சு அழகு பார்த்தவன்…… என்னமோ  இப்போதான், என்னை புதுசா பாக்கறா… வரேன் வரேன்” என்றவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்த பத்து நிமிடத்தில் வந்தும் விட்டான். கையில் ரசகுல்லா பார்சலுடன். வந்தவனை பார்த்தவள் “வசந்திக்கா, கதீஷுக்கு ஒரு காபி” என்றாள் சிரித்துக் கொண்டே.

அதற்கெல்லாம் அசராமல் “அக்கா, காபி இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு மொட்ட மாடிக்கு கொண்டு வாங்கக்கா” என்றவன் தன் போல் மேலே சென்றான்.

இப்போது அவன் பின்னாலேயே செல்ல வேண்டி இருந்தது சாக்க்ஷிக்கு. மேலே வந்ததும் சாக்க்ஷி “ஹய் கார பொரியா…” என்றாள். அவன் கையில் வைத்திருந்த பார்சலை பார்த்து.

“ஏன் டி, இன்னுமா நான் கார பொரி வாங்கி தருவேன். இது வேற” என்றான்.. ஒரு மார்க்கமாய்.

சாக்க்ஷி தள்ளியே நின்றாள். அவனும் ஏதும் சொல்லவில்லை, அதிலிருந்து ரசகுல்லாவை எடுத்து அவளிடம் தந்தான், ஸ்பூனுடன். அந்த திட்டின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான் அவளையே பார்த்தவண்ணம்.

சாக்க்ஷியும் அவன் அருகிலேயே அமர்ந்து உண்ண தொடங்கினாள்… வசந்திக்காவும் காபி கொடுத்து சென்றார். பேச்சு இருவருக்கும் இயல்பாக வரவில்லை.

ஏதேதோ பேசினார்.. திணறி திணறி, நட்சத்திரங்களை எண்ணினர், அந்த தடுமாற்றத்தை அவன் உடைக்கவில்லை. அவளின் வெட்க முகத்தை நெருங்கவில்லை… அவளுடன் இந்த, ஏகாந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தான் கதீஷ்.

 

 

 

   

 

 

       

   

    

   

   

Advertisement