Advertisement

மிட்டாய் புயலே-18

ஜெகனுக்கு, சாக்க்க்ஷியின் மேல் எந்த வருத்தமோ, கோவமோ கிடையாது. எப்போதும் போலதான் அவளை பார்த்தார். ஆனால் சுந்தராஜன் மீதுதான் ஏதோ கோவம்.

ஆனால், அதை காட்ட இப்போதுதான் அந்த மனிதர் இல்லையே. எனவே, அன்று அவளின் வீட்டில் சென்று பார்த்தபோது கூட அவளைத்தான் ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தார் ஜெகன்.

அவளிடம் பழைய கல கலப்பு இல்லை என்றாலும், ஒரு நிமிர்வு தெரிந்ததை, கண் வழியாக படித்துக் கொண்டார் ஜெகன். எனவே, லேசாகத்தான் அவளிடம், கதீஷ் பற்றி பேசினார். இன்னும் சொல்ல போனால்… கோடு காட்டினார் அவ்வளவுதான்.

ஆனால், சின்னதிலிருந்து தனக்கு கற்பித்த ஆசானை தெரியாதா சாக்க்ஷிக்கு. எனவே அவரின் எண்ணம் தெரிந்துதான் “எனக்கு கதீஷ் வேண்டாம்’ என சொன்னாள்.

எப்படி, ராஜன், தன் மகனை தன்னிடத்திற்கே வந்து ‘பார்த்துக்க’ என மிரட்டி சென்றாரோ, அப்படிதான் செய்தார் ஜெகன். எனவே இது பெரியவர்களுக்கான ஈகோ மோதல், இதில் தெரியாமல் மாட்டியது கதீஷும் சாக்க்ஷியும்தான்.

எனவே ஜெகன், அவனின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவே காத்திருந்தார். காரணம் சாக்க்ஷி சொல்லிய ‘இவன் வேண்டாம்’ என்ற வார்த்தைதான், அவருக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது.

அதனால் அவனின் கேள்விக்கெல்லாம் அசருபவராக இல்லை அவர் பொறுமையாக சொன்னார் “ஒத்து வராது டா, விடு” என்றார்.

நல்ல கனமான குரல் அவருடையது. இவரின் சாயல்தான் கதீஷ். எனவே அவனின் அண்ணன் என சொல்லுமளவு நல்ல இளமையான தோற்றம்தான் ஜெகனுக்கு.

எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தங்க ப்ரம் போட்ட கண்ணாடி, வழுக்கை இல்லாத, அடர் சிகை, அதை செயற்கையாக மெருகூட்டி, இன்னும் பளபளப்பாக வைத்திருந்தார்.

வயதிற்குண்டான தள்ளாமை இல்லாது, வெண்மையான உடையணிந்து, எப்போது நிமிர்ந்தமர்ந்து, அனைவரையும் நேர் பார்வை பார்த்து,  அவர் பேசும் போது, அவரது பேச்சுற்கு, யாராக இருந்தாலும், தலையாட்டவே தோன்றும்.

அப்படிபட்டவர் இன்று தன் மகனிடமும், அதே த்வனியில் பேச தொடங்கினார் “எனக்கும் நீ கேட்டு, மாட்டேன்னு சொல்றது சங்கடம்தான். ஆனா, முதல் கோணல் டா…. ம்………… என்னடா, உன் கண்ணுக்கு வேறு யாரும் தெரியலையா” என்றார்.

ஆற்றாமையாக வந்தது அவரது குரல். வரமாக வந்தவன் கேட்கிறான். அதுவும் இது வரையில் இல்லாத பிடிவாதத்துடன் கேட்கிறான் என ஒரு பெருமூச்சு வந்தது அவரிடம்.

சுந்தரராஜன் உயிருடன் இருந்த போது, அவர், வந்து மில்லில் பேசி சென்றதுதான் இன்னமும் மனதில் நின்றது ஜெகனுக்கு. ஜெகனும்  பெரிதாக எடுக்கவில்லை இவர்களின் நட்பை.

ஆனால், ஜெகனிற்கு தன் மகனை குறித்து ராஜன் பேசியது பெரிய அவமானமாக இருந்தது. எனவே, அங்கே தொடங்கியது சாக்க்ஷியின் குடும்பத்தின் மீதான ஒரு வெறுப்பு, எப்படி என தெரியாமலே வந்து ஒட்டிக் கொண்டது அவரிடம் வீம்பு.

எனவேதான், அப்போதே திருமணம் செய்ய வேண்டும் தன்மகனிற்கு என நின்றார் ஜெகன். அதானல் யாராக இருந்தாலும் பேசி முடித்துவிடலாம் எனதான் நினைத்தார்.

ஆனால், இவர் கேட்ட உடன் கதீஷ், ‘அவளை நேசிக்கிறேன்’ எனவும், கொஞ்சம் கோவம் வந்தது. அவனிற்கு புரியவைத்து விடலாம் என இதுநாள் வரை நினைத்திருந்தார் போலும்.

ஆனால் கதீஷ் “சொல்லுங்கப்பா, எதா இருந்தாலும் சொல்லுங்க, இனி அவளை விட்டு வேறு ஒருத்தி என் வாழ்வில் வருவதெல்லாம் நடக்காத காரியமப்பா” என்றான்.

ஜெகன் இப்போது பொறுமையாக பேசினார், தன் மகனிடம் புரிய வைக்கும் த்வனி, நான் சொன்னால் என் மகன் கேட்பான் என்ற எண்ணத்துடன் பேசினார் “இல்லாடா, முதலிலேயே ராஜனுக்கு இதில் பிடித்தமில்ல போல, அதான், அன்னிக்கு வந்து எங்கிட்ட சொல்லிட்டு போனான்.

அது ஏன் ராஜன் அப்படி சொன்னான் தெரியலை. அதனால, விட்டுடலாம். இப்போது சுந்தர்ராஜன் இருந்தாலாவது பராவாயில்லை. இப்போது அவரும் இல்லாத நிலையில், இதற்காகவே காத்திருந்தது போலாகிவிடும்.

மேலும், அந்த பொண்ணுக்கு பெருசா, உன் மேல விருப்பம் இல்ல போல, நீதான் தொங்கிக்கிட்டு திரியற” என்றார்.

பின் அவனை நேர் பார்வை பார்த்தவராக “மேலும் நீ மாப்பிளையா வேண்டாம்னு சொன்ன வீட்டிலிருந்து பெண்ணெடுக்க எனக்கு விருப்பமில்லை.

அதுக்குதான் நாங்க போய் அவங்க வீட்டில் பேசிட்டு வந்தோம். இவ்வளவு நடந்தது போச்சு. ம்……… இப்படி எல்லா இடத்திலையும் தட்டி தட்டி போகுதுடா….” என்று பெருமூச்சு விட்டவர்.

தொடர்ந்தார் “இவ்வளவு நடந்ததுக்கப்பறம், நாள பின்ன, நான் போய் சம்மந்தின்னு நிக்க முடியாது. மேலும் ஏதோ அவங்க சித்தாப்பாவும் வரதில்லையாம் அவங்க வீட்டுக்கு,

நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்குடா, யாரும் இல்லாத வீட்டிலிருந்து பெண்ணெடுக்க முடியுமா, ஆச பட எதுவும் தேவையில்லை. ஆனா, கல்யாணம்னா, எல்லாம் பார்ப்பாங்க………….. நான் பார்ப்பேன்” என்றார்.

கதீஷுக்கு பெருமூச்சு எழுந்தது. தன் மனதில் இதெல்லாம்தான் இவர், காரணமாக சொல்லுவார் என அவன் பட்டியலிட்டு வைத்திருந்தவற்றை, அடி மாறாமல் சொல்லி, அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஜெகன்.

அவனின் இந்த வெறித்த பார்வையை பார்த்தவர் “இந்த இடம் வேண்டாம்னா, விடு வேறு பார்க்கலாம்.

இல்ல இப்போ வேண்டாம்னா விடு, இன்னும் ஒரு வருஷம் சென்று கூட பார்க்கலாம்.” என்றதும்,

பூங்கொடி “ம்க்கும்…. இப்போவே வயசு 30 ஆக போது… இன்னும் எ” என ஏதோ சொல்ல வந்தார் அவர்.

அதற்குள் ஜெகன் “குறுக்க பேசாத” என்றார் மனைவியை பார்த்து.

பின் மீண்டும் அவனை பார்த்து  “இங்க பாரு, நான் சொல்ற பொண்ண கட்டிக்கிறேன்னு சொல்லு, நாங்களும் உனக்கு கொஞ்சம் நேரம் தரோம், நீ இந்த கருமத்தையெல்லாம் தலை முழுகிட்டு வா, நல்ல பெண்ணா, அவளை விட நல்ல பெண்ணா, பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.” என்றார் அவனை பார்த்துக் கொண்டே

இப்போதும் அவற்கு தன் மகன் தன் பேச்சைத்தான் கேட்டாக வேண்டும்  என அவ்வளவு பிடிவாதம் அவரின் குரலில் “என்ன புரியுதா…………..” என்றார் முடிவாக.

கதீஷ் இப்போதும் அசராமல் “தேங்க்ஸ் பா, இததான் நான் உங்ககிட்ட இருந்து எதிர் பார்த்தேன், அந்த வகையில் நான் சரியா யோசிக்கிறேன்னு நினைக்கிறேன்” என்றவன்.

தன் கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தவன் “இந்த சின்ன சின்ன காரணத்தை விட, இந்த கதீஷ் ரொம்ப பெரியவன் பா, ம்……. என்ன சொல்ல, யோசிக்கலாம்ப்பா” என்றான்.

ஏதோ அலட்டிக் கொள்ளதவனாக சொன்னான், இதை கேட்ட ஜெகனுக்கு அப்படியே தன்னை பார்ப்பது போல் தோன்றியது. ஆக, தந்தையும் மகனும் ஒரே புள்ளியில் எதிர் எதிரே நின்றனர்.

இதையெல்லாம் பார்த்திருந்த ரங்கராஜனுக்கு எப்போதும் போல் தன் மருமகன் மேல் தனி மரியாதை வந்தது. கூடவே ‘எனக்கு ஒரு பொண்ணில்லாம போச்சே’ என தோன்றியது.

சீறி பாய்ந்து சுழன்றடிக்கும் புயலை விட, மாலை தென்றல் போல் இனிமையை யார்தான் வேண்டாம் என்பர். அப்படிதான் ப்ரகதீஷ். தினம் வீசும் தென்றல் போல் இனிமையானவன்.  

அதன்பின் அவன், வீட்டில் நிற்கவில்லை.  நேரே, அங்கு மாட்டியிருந்த புல்லட் சாவி எடுக்க, அந்த ஹங்கரே, எல்லா சாவிகளுடனும் கீழே விழுந்தது.

பூங்கொடி “ஏன் டா, பொறுமையா…..” என இன்னும் ஏதோ சொன்னார். ஆனால் அதை கேட்க கதீஷ் அங்கில்லை.

வரும் போது காரில் வந்தவன், இப்போது புல்லட் எடுத்து பறந்திருந்தான். இப்போது அவன் கோவமெல்லாம் தந்தை மீதில்லை சாக்க்ஷி மீதுதான்.

ஜெகன் சொன்ன எல்லா வார்த்தையையும் விட அவனை பாதித்தது “அவளுக்கு உன்னை பிடிக்கலை போல, நீதான் பின்னாடி சுத்தற“ என வார்த்தைதான் அவனை ஆழம் பார்த்தது.

இதுவரையில் கதீஷின் எண்ணமோ, நான் சொல்லவில்லை அவளும் கேட்கவில்லை. ஆனால் எங்களுக்குள் நான் சொல்ல வேண்டிய தேவையோ, அவள் கேட்டே ஆக வேண்டிய நிலையோ இல்லை.

அப்படிதான் எங்களின் நட்பு இருந்ததா, இல்லையே, ‘அவள் நகம் கடிக்கும் அமைப்பை பார்த்தே அவளுக்கு என்ன தேவை’ என நான் சொல்லுவேன்.

அப்படிதானே அவளும், என் வண்டியின் சத்தத்தை வைத்தே என் மனதின் நிலை சொல்லுவாளே’ அப்படி இருக்கையில் எதை வைத்து இவர் இப்படி சொல்கிறார்.

ஒரு வேலை, நேசம் என வரும்போது, அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமோ, பேசிக் கொண்டே இருக்க வேண்டுமோ, அவளை என் கையசைவில் வைத்திருக்க வேண்டுமோ….

ஒரு வேலை எல்லோருக்கும் தெரியும் படி, ஜோடியாக சுற்ற வேண்டுமோ புரியவில்லையே………. ஐயோ……………. என்றானது கதீஷிற்கு.     

அவளிடம் பேசியே தீர வேண்டும், அவள் வாய் மொழியாக, என் நேசத்தை கேட்டே ஆக வேண்டும் என எண்ணம் எழுந்தது அவனுள்.

அவளின் மில் நோக்கி வண்டி பறந்தது. மதியம் மணி 2ஆக போகிறது. சாக்க்ஷி இப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தாள். எனவே, அப்போதுதான் வெளியே வந்தாள்.

வேலு காருடன் மில் வாசலில் தயாராக நின்றிருந்தான். மில் ஆட்கள் உணவு இடைவேளைக்கு சென்றிருந்ததால், இவள் பொறுமையாக போனை பார்த்தவாறு வந்து கொண்டிருந்தாள்.

மில்லில் பெரிதாக காவல் எல்லாம் இல்லை. எனவே கதீஷின் புல்லட் ‘சர்’ என காருக்கும் சாக்க்ஷிக்கும் நடுவில் வந்து நின்றது.

சாக்க்ஷிக்கு என்ன, ஏது, யார் என எதுவும் புரியவில்லை. மில்லில் கண்ணெதிரில் யாரும் இல்லை வேலுவை தவிர, வேலு காரினுள் அமர்ந்தவன் இறங்கவே இல்லை.

கதீஷ் வந்து நின்ற வேகத்திலேயே, சாக்க்ஷியிடம் “ஏறு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். வண்டியை ரைஸ் செய்து கொண்டே.

சாக்க்ஷி ஏதோ தியட்டரில் ‘மாயா படத்தை’ தனியாக பார்த்தவள் போல் நின்றாள் ஒன்றும் ஓடவில்லை அவளுக்கு. திரும்பவும் கதீஷ் “ம், ஏறு “ என்றான். தெறிக்கும் குரலில்.

அப்போதுதான் வந்திருப்பது கதீஷ் என புரிய, சாக்க்ஷிக்கு அவனின் வேகமும், அவன் வார்த்தைகளை கடிந்து துப்பிய விதமும், அவனிடம் விளையாட சொல்லியதா, இல்லை அவள் ஏதோ நல்ல மூடில் இருந்திருப்பாள் போல “உன்னோடு எல்லாம் வரமுடியாது, என் ப்ரன்டோடு மட்டும்தான் போவேன், கிளம்பு நீ” என்றாள்.

கதீஷுக்கு அவளின் நிலை என்ன தெரியும் “என்னடி ஆளாளுக்கும் என்ன வெச்சு விளையாடுறீங்களா” என உறுமினான், இப்போது அதற்கு ஏதுவாக வண்டியின் சத்தம் அதிகமாக கேட்டது.

சாக்க்ஷி அவனை தாண்டிக் கொண்டு செல்ல போக, இப்போது திரும்பவும் அவள் முன் சென்று வண்டியை நிறுத்தினான். அவனை முறைக்க, “போலாம்… ஏறு” என்றான்.

அவள் “எங்க போகணும்” என்றாள்.

“தெரியல, வா, ஏன்…. என் கூட வந்ததே இல்லையா” என்றான்.

இப்போது இவள் “கார்ல போலம், வெயிலா இருக்கு” என்றாள்.

அவன் “வேலு” என்றான். இப்போதுதான் தலைகாட்டினான் வேலு. உடனே புல்லட் சாவியை அவனிடம் தந்தவன். அவனிடமிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு “போய் சாப்பிட்டு வா” என்றான் அவனிடம்.

வேலு “சரிண்ணா” என்றான். கூடவே சாக்க்ஷியையும் பார்த்தான் வேலு. அவள் தலை சரி என்பதாக அசையவும்தான் கிளம்பினான்.

கதீஷ் வண்டி எடுக்க சாக்க்ஷி ஏறி அமர்ந்ததும், விருட்டென பறந்தது கார்,  சாக்க்ஷி தன் அம்மாவை போனில் அழைத்தாள் “ம்மா, கதீஷ் கூட வெளிய போறேன்ம்மா, வர கொஞ்சம் லேட் ஆகும்” என்றாள்.

அந்த பக்கம் என்ன சொன்னார்களோ “ம்…. இல்லம்மா, சரி” என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டன. போனை வைத்திருந்தாள் சாக்க்ஷி.

அவன் முகம் பார்க்க அவளிற்கு ஏதோ சரியில்லை எனதான் தோன்றியது. முன் போல் இயல்பாய் அவனிடம் கேட்க முடியவில்லை. எனவே அமைதியாக இருந்தாள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து வண்டி, தனது பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியவன். போனில் யாருக்கோ அழைத்து பேசினான். சிறிது நேரத்தில் வண்டியருகே ஒரு பணியாளன் வந்து உணவு கவரை தந்து விட்டு சென்றார்.

திரும்பவும் கார் அந்த ஆள் அரவமற்ற சாலையில் பறந்தது. ஒரு அரை மணி நேரம் வண்டியை விரட்டியவன், ஏதோ பொட்டல் காடு போல இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினான். இறங்கும் சூரியன் சுட்டெரித்தது.   

சாக்க்ஷிக்கு ‘இவன் ஏதோ பிளான் பண்ணிதான் கூட்டி வந்திருக்கான்’ என தோன்றியது.

கதீஷ் “வா சாப்பிடலாம்” என்றான். தானே இறங்கி, அந்த பார்சல் கவருடன் பின் சீட்டிற்கு சென்றான். உணவுகளை பிரித்து வைக்க தொடங்கினான்.

சாக்க்ஷி பின் சீட்டிற்கு வந்தவள், கதீஷை முறைக்க தொடங்கினாள். ‘நான் இங்க பதறி போய் உட்கார்ந்திருக்கேன், இவன் என்னமோ பிக்னிக் வந்த மாதிரி சாப்பாடு எடுத்து வைக்கிறான்’ என கோவம் அவளிற்கு.

ஆனால் கதீஷ் நிலைமையோ மிகவும் மோசம் அவனிற்கு என்ன கேட்பதேன்றே தெரியவில்லை, ஏதோ கோவத்தில் கூட்டி வந்து விட்டான். காரில் வர வர மனம் அதிர தொடங்கியது அவனிற்கு.

என்ன கேட்பேன் அவளிடம், ‘என்னை பிடிச்சிருக்கா கேட்பேனா, இல்லை, நீ வேண்டும் என சொல்வேனா’ எப்படி கேட்பேன் எப்படி பெறுவேன் என பலத்த யோசனை அவனிடம்.

நட்பு என்ற வட்டத்திலேயே சுற்றி வந்தவன். அதை தாண்டும் போதும்,  எப்படி தன் நேசத்தை சொல்லுவது என தெரியாமல்தான், கையை முருக்குவதும், அவளிடம் மரியாதை எதிர்பார்ப்பது என விளையாடியவன்.

இப்போது எவ்வகையில் அவளை கையாள்வது, என தெரியாமல் விழி பிதுங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேசம்ன்னா என்ன அவ்வளவு ஈசியா…….. இல்ல சாக்க்ஷிதான் அவ்வளவு ஈஸியா… தவம் செய்யும் பக்த்தனுக்கு, கடவுள்….. வரம் தர வரும்போது, வருமே ஒரு தடுமாற்றம் அந்த நிலையில் இப்போது அவளின் கதீஷ்.     

 

  

 

   

       

 

    

Advertisement