Advertisement

மிட்டாய் புயலே-17

சாக்க்ஷிக்கு முகமே இறுகிக் கிடந்தது. ஆனாலும், கண்கள் மட்டும் செல்லும், அவனையே பார்த்திருந்தது. இப்போது போனை எடுத்து “ம்மா, எடுத்தாச்சா, எங்க இருக்கீங்க ” என பேசிக் கொண்டே அவர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றாள்.

படம் முடிந்து வேலுவும் வர, லேசாக கொறித்துவிட்டு, இவர்கள் கிளம்பினர். கூடவே கிளம்பினான் கதீஷும். வேலுவும், கதீஷும், முன்னும் பின்னும் என போட்டி போட்டு கொண்டே வண்டி ஒட்டினர்.

அக்க்ஷரா இதையெல்லாம் கண்டும் காணாதவள் போல் வந்தாள். மேகலைக்கு இதெல்லாம் தெரியவேயில்லை. சாக்க்ஷி, எதையும் காட்டாத முகபாவம் தான்.

ஆனால், உள்ளுக்குள் ஒரு பெருமிதம்தான் ‘இப்படி எல்லோர் முன்னாலையும் எப்படி படுத்தறான்’ என செல்லமாக முனு முனுக்கவும் செய்தாள்.

போட்டி போட்டுக் கொண்டே நேரத்திற்கு வீடு வந்தனர். செல்லும் போது இருந்த இறுக்கம், இப்போது இல்லை சாக்க்ஷியிடம். சற்று இயல்பாக இருந்தாள். முகம் பொலிவாக இருந்தது.

இரவு உணவின் போது அக்க்ஷராதான் “என்ன க்கா, நடந்தது அங்க, சொல்லு க்கா, நான் யார்கிட்டயும் சொல் மாட்டேன்” என ரகசிய குரலில்  கேட்க.

சாக்க்ஷி மேகலையை ஒரு பார்வை பார்த்தாள், பின் தன் தங்கையின் புறம் திரும்பி முறைத்தவாரே உண்ண தொடங்கினாள். அக்க்ஷராதான் “க்கா.” என ராகம் இழுத்தாள்.

என்ன சொல்லுவாள் சாக்க்ஷி எனவே, வாயே திறக்கவில்லை. உண்டு முடித்து எழுந்துவிட்டாள். அப்படியே தன் அறைக்கும் நழுவினாள். ‘எங்கே அமர்ந்தாள், இவள் வேறு கேள்வி கேட்பாளோ’ என எண்ணியே சென்றாள்.

இப்போது, அக்க்ஷரா ஹாலின் ஷோபவிலேயே படுத்த வண்ணம், நியூ இயர் கொண்டாட்டத்திற்காக, டிவி நிகழ்ச்சிகளில் முழ்க தொடங்கினாள். கூடவே மேகலையும்தான்.

ஆனால், தனிமையில் இருந்த சாக்க்ஷிக்கு, இப்போது அக்க்ஷராவின் கேள்வியை விட, அவனின் நினைவு வந்து ஒட்டிக் கொள்ளவும் திணறினாள். ஹைய்யோ ஏண்டா வெளியே சென்றோம்! என்றானது அவளிற்கு.

இதுவரை தள்ளி வைத்தவனை, அருகில் உணர்ந்து, அவன் அருகாமையை உரசி, அவன் வாசம் நாசி வழி நுகர்ந்து, மூடிய விழி வழியே அல்லாது தனது நுண்ணுணர்வால் உணர்ந்தவனை விட்டு நகர வில்லை அவளின் மனம்.

விழி மூட விடவில்லை அவனின் நினைவு ‘எப்படி வந்தான், காரியவாதி, சரியான லூசு, எப்படிதான் இதுகெல்லாம் நேரமிருக்கோ’ என வகை தொகையில்லாமல் திட்டுகிறாளா, கொஞ்சுகிறாளா என தெரியாமலேயே புலம்பியபடியே படுத்திருந்தாள்.

ஆனால், ப்ரகதீஷ் இவளிற்கு நேர் மாறாக இருந்தான். அங்கிருந்து வரும் போதே கேக் வாங்கி வந்திருந்தனர். உணவு உண்டு, அங்கேயே அமர்ந்து அனைவருடனும் அரட்டை கச்சேரிதான்.

அக்காக்கள், அவர்களின் கணவன்மார்கள், பிள்ளைகள் என வீடே சற்று சத்தமாக இருந்தது. இரவு பனிரெண்டு மணிக்கு கேக் கட் செய்து, பிள்ளைகள் எல்லாம் “ஹாப்பி நியூ இயர் ……..” என கத்த, இவனும் அவர்களுடன் சேர்ந்து கத்தி கொண்டிருந்தான்.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து, மாமாக்கள் தத்தமது துணையுடன் அறை நோக்கி செல்ல, இவன் பிள்ளைகளுடன் ஹாலிலேயே உருண்டான். எனவே, இன்று தப்பித்தான் கதீஷ்.

சாக்க்ஷி ஒரு வழியாக விடியற் காலைதான் உறங்கவே தொடங்கினாள். இன்று முக்கியமான வேலையிருப்பதால் சாக்க்ஷிக்கு எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்தது.

எழும் போதே கண்ணெரிச்சல், தலை வின் வின் என தெறிக்க தொடங்கியது. ஆனாலும் முயன்று, எழுந்து குளித்து வெளியே வந்தாள்.

அப்போதுதான் மேகலை ஹாலிலேயே உறங்கும் அக்க்ஷராவை எழுப்பிக் கொண்டிருந்தார் “எழுந்து உள்ளே போய் தூங்குடா, தங்கம்” என மென்மையாய் எழுப்பிக் கொண்டிருந்தார்.

சாக்க்ஷி நேராக பூஜை அறைக்கு சென்றவள் சிறிது நேரம் கண்மூடி வணங்கிவிட்டு, சந்தனம் வைத்து வெளியே வந்தாள். இன்னும் அக்க்ஷரா அசையாமல் இருக்க

சாக்க்ஷிதான் “அக்க்ஷரா…” என ஒரு குரல், அதட்டலாக வந்தது. நேற்றிருந்த அமைதியான குரல் இல்லவே இல்லை. கேட்ட அக்க்ஷரா, வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

கண்களை திறக்க முடியாமல் திறந்து சிமிட்டி, சிமிட்டி சாக்க்ஷியை பார்க்க, அவளின் ஹாஸ்டல் வார்டன் போலவே தெரிந்தாள் சாக்க்ஷி, அவளின் கண்ணிற்கு. சிரிப்புதான் வந்தது அக்க்ஷராவிற்கு.

ஆனாலும், அக்காவை மறக்காமல் வாழ்த்தினாள் அவள் “போடி……… ஹாபி நியூ இயர்” என்றாள் அடிக் குரலில்.

சாக்க்ஷி “ம்… ஹாப்பி நியூ இயர்…….. போ உள்ள போய் படு” என சொல்ல அப்போதும் உறுமியவாறே சொல்ல.

அக்க்ஷ்ரா “போடி, பொறாமை பிடித்தவளே” என முனகிக் கொண்டே எழுந்து சென்றாள். சாக்க்ஷியும் லேசாக சிரித்தபடி உணவு மேசை நோக்கி சென்றாள்.

அதன் பிறகு ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட்டாள் அவள். மணி ஒன்பது கூட ஆகவில்லை ஆனாலும் மில்லிற்கு கிளம்பிவிட்டாள். வேலு கூட “ஆனாலும் இவ்வளவு சின்ஸியரா இருக்க கூடாது க்கா” என்றான்.

மில்லில் இப்போதுதான் ஓரிருவர் வர தொடங்கியிருந்தனர். அப்படி இப்படி என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், செந்திலும் வந்தார் “ஹாப்பி நியூ இயர் பாப்பா” என்றார்.

இவளும் பதிலுக்கு விஷ் செய்தவள் “அங்கிள் என்னாச்சு, ஆடிட்டர் யாரோ இன்னிக்கு வருவாங்கன்னு சொன்னிங்க “ என்றாள்.

“வந்துடுவார்ம்மா…. நேற்றே பேசிட்டேன், S.A புட்ஸ்க்கு லோன்னும் அவரே செய்து தருவார்ம்மா…” என்றார்.

“யாரு அங்கிள், நம்ம ஊரா, உங்களுக்கு தெரிஞ்சவங்களா” என கேட்க, சிரித்தார் “எல்லாம் நமக்கு வேண்டியவங்கதாம்மா” என்றார் மொத்தமாய்.

ஏதும் சொல்லவில்லை சாக்க்ஷி அமைதியானாள். சரியாக சொன்ன நேரத்திற்கு வந்தார். சாக்க்ஷிக்கு அவரை பாரத்துடன் கோவம்தான் வந்தது. அவரின் கூடவே வந்து கொண்டிருந்த செந்திலை முறைத்தாள்.

அவர் கதீஷின் ஆடிட்டர். ஏற்கனவே இவளுக்கு பழக்கமானவர்தான். ஆனால், சாக்க்ஷிக்கு வேறு ஏதோ தோன்றியது.

எனவே “வாங்க சர், நல்லா இருக்கீங்களா” என கேட்டவள், அவர்கள் கவனத்தை ஈர்க்காமல் “டூ மினிட்ஸ்” என சொல்லி போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

போகும் போதே கால் செய்து கொண்டே சென்றாள். மறுமுனையில் உடனே எடுத்து “சொல்லடி என் சுந்தரி……….” என்றான் கதீஷ். அப்படியொரு உற்சாக குரல்.

இதை கேட்ட உடன் வீற்றிருந்த தலை வலி மீண்டும் வந்தது சாக்க்ஷிக்கு அது அமில மழையென அவன் மேல் பொழிந்தது “என்ன எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எங்க சித்தப்பா மாதிரி நீயும் முடிவே பண்ணிட்டியா,

இல்ல என்னை, அடிமையா வைச்சுக்கனும்னு நினைக்கிறியா.

என்னோட விஷயத்துல நீ நிறைய தலையிடுற,

நான் சும்மா இருக்கறதுனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதே…..” என தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் அவனை பேசவே விடாமல் பொரிந்து தள்ளினாள் கண்ணில் நீர் வேறு திரண்டு நின்றது.

என்னதான் இப்படி எல்லாம் பேசினாலும், மனதின் ஒரு ஓரமாக அவனின் செயல்கள் அவளுக்கு யானை பலத்தை தந்தது நினைவில் வந்தது. கண்ணீர் தந்தது.

ஒரு வழியாக குரல் கமர அமைதியானாள் அவள். கதீஷுக்கு இங்கு பெருமூச்சு எழுந்தது. என்ன சொல்லுவது என தெரியவில்லை

“முடிச்சிட்டியா” என்றான் கோவமா வருத்தமா என தெரியாத குரலில்.

சாக்க்ஷி அமைதியாக இருக்க. ‘எதற்கு இந்த சத்தம்’ என இப்போதுதான் புரிய தொடங்கியது அவனிற்கு.

“யாரு வந்திருக்கா, ஆடிட்டரா” என்றான். பதில் வராது என தெரியும்.

அவனே தொடர்ந்தான் “உனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லல டி, நான் கூட இருக்கேன்னுதான் சொன்னேன்” என்றான் கதீஷ்.

சாக்க்ஷி “எதுக்கு, ‘நாளைக்கு எல்லாம் என் பையன்தான் செய்தான்’ என உங்க அப்பா சொல்லிக்கவா” என்றாள் வெடுக்கென.

“இல்ல டி, இவர் என்னோட கணக்கை பார்க்கறவர். அப்பாக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை” என்றான் அவளிற்கு புரிய வைக்கும் நோக்குடன்.

“எனக்கு வேண்டாம்” என்றாள். சங்கடமே படாமல்.

கதீஷுக்கு மண்டை காய்ந்தது, எப்படி இவளிற்கு புரிய வைப்பது என. அவளே தொடர்ந்தாள் “என் வரையில் நீ எது செஞ்சாலும் சரி, ஆனா, இது என்னோடது, முழுசா என்னோடதாவே இருக்கட்டும், இதில் நீங்க எங்கயும் வரக் கூடாது” என்றாள்.  மரியாதையாகவும் இருந்தது, சில சமயம் அதுவும் இல்லாமாலும் இருந்தது அவளின் பேச்சில்.

அவன் பேசவேயில்லை அமைதியானான். சாக்க்ஷியே தொடர்ந்தாள் “நான் இப்போ, அவர் கிட்ட போர்மல பேசி அனுப்புறேன், மத்தத நீ பேசிக்க………. என்ன “ என்றாள்.

கதீஷ் “யாரு என்னன்னு தெரியாம உள்ள விட்டா, அப்புறம் நீதான் கஷ்ட்ட படனும்” என்றான்.

“இல்ல, நான் பார்த்துக்கிறேன், எனக்கு தெரிஞ்ச மேம் பையன் சேல்ஸ் டக்ஸ்ல இருக்கானாம், கேட்டு சொல்றேன்னு சொன்னாங்க” என்றாள்.

“எங்க நம்ம காலேஜ்லியா” என்றான்.

“ஆம்..” என்றாள். அதன் பிறகு யாரு, என்ன என விவரம் கேட்டுக் கொண்டான் அவள் வாய் மொழியாகவே.

சாக்க்ஷி “பை, வைக்கிறேன்” என்றாள்.

கதீஷ் அவசரமாக “ஏய்…. ப்ளீஸ் நியூ இயர் விஷ்ஷாவது சொல்லுடி” என்றான்.

மனசாட்சியே இல்லாமல் “பை…” என்றாள். வைத்தும் விட்டாள் அவனின் ராட்சசி.

உள்ளே சென்றவள் பத்து நிமிடம் பேசி அவரை அனுப்பி வைத்தாள். அதன் பிறகு செந்திலுக்குதான் ராகுகால பூஜைகள் நடந்தது. இனி எதற்கும் கதீஷை கேட்க கூடாது என சொல்லி சென்றாள்.

செந்தில்தான் ‘நான் எங்கமா கேட்கறேன், அவரா செய்யறாரு’ என எண்ணிக் கொண்டார். வெளியே சொல்லவில்லை.

அன்று மறுநாள், அக்க்ஷரா கல்லூரிக்கு கிளம்பினாள். வீடும் பழைய நிலைக்கு வந்தது. கதீஷ் வீட்டிலும் எல்லோரும் கிளம்பினர். வீடே விரோச் என ஆனது அவனிற்கு.

போகும் போது அவனின் பெரிய அக்கா “இந்த மே மாசத்துக்குள்ள, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற” என மிரட்டி விட்டே சென்றார் கதீஷை.

இப்படி அவனை தனது தொழிலின் உள்ளேயே அனுமதிக்கவில்லை சாக்க்ஷி. எல்லாம் அவள் திட்டமிட்ட படி நடந்தது. இப்போது தனது தந்தையின் நண்பருக்கு மட்டும் விற்பனை செய்தவள். இப்போது தனியாக SA புட்ஸ் என்ற பெயரில், மொத்த வியாபாரமும் செய்ய ஆரம்பித்தாள்.

அதற்காக வங்கியில் லோன் பெற்றாள். புதிதாக வேலையாட்கள் சேர்ந்தனர். மில்லின் இடத்திலேயே முன்னாலேயே, SA புட்ஸுக்கு என தனியாக கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன.    

இப்படி சின்ன சின்ன பாதம் வைத்து கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்தாள். ஆனால் இது ஜெகன்நாதனுக்கு சற்று பயத்தை  தந்தது. எப்படியும் தன் மகனை தன் விருப்படி செய்திடலாம் என நினைத்தவரின் எண்ணம் எல்லாம் வீண் என ஆனது. ஆம் அவனின் நடவடிக்கைகளும் அவரின் காதுகளுக்கு வர தொடங்கியது.

கதீஷ் எதையும் நேரடியாக செய்வதில்லைதான். ஆனால் சுற்றி சுற்றி தொழில் வட்டத்தில் இருப்பவர்களால் உணர முடியும் தானே. இவளின் இந்த வளர்ச்சி எப்படி என, கண்ணை மூடிக் கொண்டு மற்றவர்கள் சொல்லுவர் சாக்க்ஷியின் பின்னால் யார் இருக்கிறார் என.

அதனாலும் ஒரு அடி தள்ளிதான் இருந்தனர் அவளிடமிருந்து. மேலும் அவளின் வியாபாரமும் போட்டியில்லாதது. சிங்கமாக தனித்து நின்றது.

அப்படி இவர்கள் சுற்று வட்டாரத்தில் இவர்களின் புகழ் மலையளவு வளர தொடங்கியது. எங்கும் எப்போதும் ‘சாக்க்ஷி கதீஷ்’ என சேர்ந்தே ஒலிக்க தொடங்கியது.    

அதில்தான் சற்று யோசிக்க தொடங்கினார் ஜெகன். எனவே மிரட்டலில் இறங்க தொடங்கினார். இப்போது கதீஷின் தாய்மாமா கொண்டு வந்த வரன், இவர்களை துரத்த தொடங்கவும். சேர்ந்து கொண்டார் ஜெகன்.

வீட்டில் தினமும் சண்டை, எதிர்த்து பேசாத கதீஷையும் பேச வைத்தார். கலகலப்பு இல்லை என்றாலும் அமைதியாக இருந்த வீடு இப்போது எந்நேரமும் சங்கடங்களை சுமந்தது.

சாக்க்ஷியிடம் நியூ இயர் அன்று பேசியதுதான், அதன் பிறகு இந்த இரண்டு மாதங்களாக பார்க்க கூட இல்லை அவளை, அவன். இதையெல்லாம் சொல்ல கூட அவளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

இப்போதெல்லாம் முகம் எப்போதும் இருண்டு கிடந்தது. எந்த நேரத்தில், யாரிடம் எரிந்து விழுவான் என தெரியாமல் அவனிற்கு பயந்து வேலையாட்கள் வேலை செய்தனர்.

சாக்க்ஷிக்கு, போன் செய்யவோ, நேரில் சென்று பேசவோ ஏதோ தடுத்தது அவனை. தன்னை சரி செய்து கொண்டு அவளை பார்க்க வேண்டும் என அவனுக்குள்ளும் எண்ணம் எழ தொடங்கியது.

ஆனால் அதற்கு நேர் மாறாக இன்று, வீட்டிலிருந்து கதீஷுக்கு அழைப்பு சென்றது. அவனின் தாய் மாமா வந்திருந்தார். எனவே அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்தான். வராமலும் இருக்க முடியவில்லை.

ஆனால் இந்த வளர்ந்தவனை தான், கையில் கத்தியில்லாத குறையாக மிரட்டிச் சென்றார் ரங்கராஜன். ஆம் அப்படிதான் நடந்தது. “இன்னும் பத்து நாளில் பெண் பார்க்க நாள் பார்த்திருக்கின்றோம் மாப்பிள்ளை” என்றார்.

கதீஷுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை, என்னை பற்றி தெரிந்தே செய்பவர்களுக்கு என்ன சொல்லுவது என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

பூங்கொடி “என்னப்பா, தம்பி, சரின்னு சொல்லுடா” என பாசமாக ஆரம்பித்து, அதட்டலாக முடித்தார்.

இதையெல்லாம் ஜெகன் பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வளவுதான். அதுதான் இப்போது கதீஷை நோகடித்தது.  இப்படி ஆளாளுக்கு எதோ தன்னை கட்டயபடுத்துவதாக தோன்ற தோன்ற.

கதீஷ் முடிவு செய்து கொண்டான் எதாக இருந்தாலும் இன்று விடை கிடைக்க வேண்டும் என.

ஆனால் தளரவோ, தடுமாராவோ இல்லை அவன் “சின்னதிலிருந்து வளர்த்த அவளை ஏன் ப்பா இப்போ உங்களுக்கு பிடிக்காமா போச்சு” என்றான் கேள்வியாக.

பின் அவனே தொடர்ந்து “ஏதோ தெரியாதவளா இருந்தா பரவாயில்லை, ஆனா, சாக்க்ஷிய ஏன் பா வேண்டாங்கறீங்க” என்றான் நேரடியாக. குரலில் தெரிந்தே ஆக வேண்டும் என்ற உறுதி இருந்தது.  

இந்த நேரடி கேள்வியில் வீடு சற்று அமைதி கொண்டது. யாரும் இந்த நேரத்தில் அந்த பேச்சை விரும்பவில்லை என அவர்களின் முகமே காட்டி தந்தது.

பூங்கொடி “என்ன டா பேச்சு இது” என்றார்.

 

  

      

 

    

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

Advertisement