Advertisement

ஹரே கிருஷ்ணா

மிட்டாய் புயலே

அழகான எதிர் வெய்யில் நேரம், மாலை சரியாக 3:50, காங்கேயத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், அந்த எதிர் வெய்யிலை எதிர்க்கும் வண்ணம், தனது கருப்பு நிற ஸ்பென்டர் வண்டியை, கிட்ட தட்ட விரட்டிக் கொண்டிருந்தான் பிரகதீஷ்.

ஆனால், மனமெல்லாம் அவளிடமே இருந்தது, மேலும் ‘வருவாளா என்னோடு, வரவேண்டுமே என்னோடு’ என்ற யோசனை மட்டுமே அவனிடம். வண்டி தன் போல், சொல்லி வைத்தார் போன்று அந்த ஆர்ட்ஸ் காலேஜ் முன் நின்றது.

அங்கிருந்த வாட்ச்மேன்னை பார்த்து, ‘வரேன்’ எனும் விதமாக தலையசைத்து விட்டு, நேரே வண்டியை செலுத்தினான், ப்ரின்ஸிபல் அறை நோக்கி.

அவனை பார்த்த அட்டன்டரும் ‘என்ன, ஏது’ என எதுவும் கேட்க்காமல் “வாங்க தம்பி, அய்யா உள்ள தான் இருக்காங்க” என்றார்.

“தேங்க்ஸ் ண்ணா” என்றவன். லேசாக கதவை தட்டி, அனுமதி பெற்று, உள்ளே சென்றான்.      

“குட் ஈவினிங் சர்” என்றான். தன் கண்ணாடியை, டேபிளிலிருந்து எடுத்து அணிந்த வண்ணம், அப்படி ஒரு ஊடுருவும் பார்வையுடன் “சொல்லுங்க பிரகதீஷ்” என்றார், அந்த கல்லூரி முதல்வர்.

‘ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருக்கிறேன்’ என அவரின் கேசம் சொன்னாலும், அவரின் துல்லிய பார்வையும், உடல் மொழியும் ‘அப்படி ஒன்றும் இல்லை, நான் இப்போது தான், 30 வயதை கடக்கிறேன்’ என சொல்லும் விதமகா தான் இருக்கும்.

ப்ரகதீஷின், தாய் மாமா ரங்கராஜன் அவர். “அது “ என ஆரம்பித்தவன் “சர், சாக்ஷியோட அப்பாக்கு உடம்பு ரொம்ப முடியல, அதான், உங்கள பார்த்து சொல்லிட்டு கூட்டி போகலாம்னு வந்தேன்” என்றான். குரலில் ஒரு படபடப்பு இருந்தது.

“ம்” என்றவர்,  ஏதும் சொல்லாமல் தனது மேசையில் இருந்த பெல் அடித்து, அட்டண்டரை அழைத்தார்.

அட்டண்டர் உள்ளே வரவும், கண்ணால் பிரகதீஷை காட்டி “ம்” என்றார், அந்த அட்டண்டரிடம். அவரும் புரிந்தது போலே, “வாங்க தம்பி” என்றார்.

“தேங்க் யூ சர்” என் சொல்லி, அந்த அட்டன்டரின் பின்னால் சென்றான். அந்த நன்றியை ஏற்றது போல் கூட காட்டிக் கொள்ளவில்லை ரங்கராஜன், அமைதியாக இருந்தார். அது அவனிற்கும் தெரியும், ஆனாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன்.

ஆனால், ரங்கராஜனுக்கு தான் கோவம், ‘ஒரு போன் செய்தால், அவளை அனுப்பி வைக்க போகிறேன், இப்போது இவன் தான் வரவேண்டுமா, அவளை அழைத்து செல்ல, எல்லாம் அக்காவையும், மாமாவையும் சொல்லணும், அவனை கண் மூடித்தனமாக நம்புவது’ என்ற எண்ணம் அவருக்கு. அதனால் தான், இந்த அலட்சியம் அவர்க்கு, அவனிடம்.

மற்றபடி, தன் மாப்பிள்ளை தங்க கம்பி அவருக்கு. அவருக்கு மட்டுமல்ல, வீட்டிலுள்ள அனைவருக்கும் தான். ‘இவர்கள் இருவரின் தோழமை தவிர, அவனிடம் வேறு குறைகளே இல்லை’ என எண்ணும் அவனின் சொந்த பந்தம்.

இந்த பத்து நிமிட நேரத்தில் கல்லூரி நேரம் முடிவடைந்தற்கான பெல் சத்தமும் கேட்க, பிரகதீஷ் ‘எங்கே அவள் சென்றுவிடுவாளே’ என முன்னால் வேகமாக சென்றான்.

ஆம், அவளை பற்றி அவனுக்கு தெரியும். ஆதலால் தான், இந்த அவசரம். சரியாக MBA முதல் வருட, வகுப்புகளின் அறையில், முன்னே போய் நின்றான்.   

அவன் செல்வதற்கும், அவள் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. அவள் அருகில் சென்றவன்  “சாக்ஷீ” என அழுத்தமாக அழைத்தான்.

திடுமென தெரிந்த குரல் கேட்கவும், தன்னை அழைக்கவும், நிமிர்ந்து பார்க்க. நின்றிருந்தான் அங்கு. தூண்ணோடு தூணாக, அந்த தூண் மேல் தன் தோளை சாய்த்த வண்ணம், தனது பொறுமையை எல்லாம், தன்னிரு கைகளில் இழுத்து பிடித்திருப்பவன் போல், கைகட்டி  நின்றிருந்தான் அவன்

பார்த்த இவளிற்கு ‘அவனின் முகம் சரியில்லாது’ போல் ஒரு தோற்றம், அந்த நிலை பார்த்தே அவளுக்கு புரிந்தது, தன் தந்தைக்கு தான் ஏதோ என.

ஆம், அவர்க்கு தான், போன வாராத்தில் ஒரு நாள் ஹார்ட் அட்டக் வந்தது. அதிலிருந்து இந்த நான்கு நாட்களாக மருத்துவ மனையில் தான் இருக்கிறார்.

மீண்டும் இது போல் நிகழாதிருந்தால், அறுவை சிகிச்சை செய்யலாம் என்றிருந்தனர் மருத்துவர்கள். எனவே மருத்துவ மனையிலேயே இருந்தார் அவர்.

இன்று தான், கொஞ்சம் பராவயில்லை அதனால், இவள் கல்லூரி வந்திருந்தாள். இப்போது இவன் வரவும், அவள் உள்ளம் நடுங்கியது.      

அப்படி இவள் கல்லூரி செல்லும் நேரம்,  இவன் அங்கு தான் மருத்துவமனையில் இருந்தான். இவள் சார்பாக. அப்போது தான், அவரின் நிலை மோசமாக, அதை பார்த்தவன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அப்போது இல்லை. மேலும், யார் இருந்தாலும் இவன் தான் வந்திருப்பான் அவளை அழைக்க. அதனால் இவனே வந்தான், இவளை அழைத்து போக.

இதையெல்லாம் அவளால் உணர முடியும். ஆனாலும், அவனை நெருங்கி செல்லாது, விடு விடுவென இவள், தனது பஸ் நோக்கி செல்ல, “சாக்ஷி …… ஹே ய்.” என இவன் உறும, நிற்கவில்லை அவள்.

நாலே எட்டில் அவளின் முன்பு வந்து நின்றான். “கூப்பிட்டுட்ட்டு இருக்கேன்ல்லா, நீ வாக்குல போற” என்றான். அவ்வளவு தான், கடந்த பத்து நாட்களாக, இவனை பார்க்காது இருந்த தாக்கம், இன்று காலை இவனை நேரில் பார்த்த கோவம் அனைத்தும், தீப்பிடித்த வார்த்தைகளாக வெளி வந்தது அவளிடமிருந்து.        

“யார் டா நீ, நீ எதுக்கு இங்க வந்த, நான் பார்த்துக்கிறேன்.“ என கட கடவென அவன் முகத்தை பார்க்காமல் நடந்தாள் சாக்ஷி.

அவனும் விடாமல் “அப்புறமா, சண்டைய போட்டுக்கலாம், இப்போ கிளம்பு, அப்பாக்கு ரொம்ப முடியல” என அவளின் கையை முரட்டுத்தனமாக பற்ற, எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ அவளுள்.

“விடுடா, எங்கப்பாவ நான் போய் பார்த்துக்கிறேன். கூட வந்த, நான் போக மாட்டேன்” என தன் கோவத்தையெல்லாம் அந்த குரலில் கொண்டு வந்து, வார்த்தைக்கு அதிர்வு தராமல், அந்த பனை மரத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆம், அப்படி தான் அழைப்பாள் அவனை. பார்த்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தாள், சொல்லியே வண்ணமே இருந்தாள். ஒரு அடி எடுத்து வைக்கவில்லை.

உள்ளுக்குள் ‘தன் தந்தை குறித்து நடுக்கம் இருந்தாலும், இவனுடன் நான் போக மாட்டேன்’ எனும் விதமாக, பிடிவாதமாக நின்றிருந்தாள்.

அவளை விட இரண்டு வயது பெரியவன், இந்த கல்லுரி தாளாளரின் மகன். இப்படி நிறைய பெருமைகள் அவனுக்கிருந்த போதிலும். அவளிற்கு மட்டும், அவன் இன்னும் விளையாட்டு தோழனே.

வினையாகும் தோழனும் அவனே. எப்போதும், எங்கும் கூடவே நிற்பான்.  யாரிடமும் அதிகம் பேசமாட்டான். அவள் கேட்டால் அன்றி, உதவி செய்யவே மாட்டான். அவளிடம் மட்டுமே உண்மை சொல்வான். இன்னும் அழுத்தி அவள் கேட்டாள், அனைத்து சொல்லும் தோழனவன்.       

எனவே தான், ‘அவளை தன்னால் அடக்க முடியாது’ என தெரியும். அதனால் தான், தனக்கு தானே சொல்லிக் கொண்டே வந்தான் ‘அவள் என்னோடு வர வேண்டும்’ என. இப்போதும் இவள் அசையாமல் நிற்க.

பொறுமையான குரலில் அவளின் கையை இன்னும் இறுக பற்றி, “வான்னு சொல்லேறேன்ல” என்க. இந்த செயல் அவளை எரிச்சல் படுத்த,  இப்போது கொஞ்சம் கோவம் குறைந்து, வீம்பு வந்தது அவளிடம்

சுற்று புறம் கண்ணில் பட சற்று மரியாதையாக, “நீ போ, நான் போய் பார்த்துக்கிறேன்” என பல்லை கடித்தவாறு சொன்னாள்.

அதற்குள் அந்த அட்டண்டர் வந்து சாக்ஷியிடம் “உன்ன பார்க்க தான்ம்மா தம்பி வந்தாரு, உங்கள போக சொன்னாங்க சர்” என சொல்லி தன் வேலை முடிந்தது எனும் விதமாக அந்த இடம் விட்டு நகர.

அவரை அழைத்தாள் சாக்ஷி “மணிண்ணா, உங்க வண்டி சாவி கொடுப்பிங்களா, நான் நாளைக்கு தரேன் “ என கேட்டாள். இப்போது அவளது கண்ணில் வேறு நீர் சேர்ந்தது.

தவிப்புடன், அவனை தவிர, ‘தன்னை யாராவது காப்பார்களா’ என்னும் விதமான பார்வையுடன், அந்த அட்டண்டரிடம் அவள் கேட்க… கை, கால் வெலவெலத்து போனது அந்த மணிண்ணாக்கு.

இந்த கல்லூரியில் வேலை செய்பவர்கள் அனைவரும், எதோ ஒருவகையில் எல்லோருக்கும் தெரிந்தவர்களாக தான் இருந்தனர். சில கிராமங்களை இணைக்கும் விதமான, ஒரு சிறிய கல்லூரி அது.

மேலும், வணிக நோக்கமில்லாது செயல்பட்டு, சின்ன சின்ன கிராமங்களில் உள்ள மாணவர்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவதால். இது போன்று உரிமைகளும், உதவிகளும் அங்கு சகஜம்.

எனவே, தன் முதலாளியின் தோழி, அவரும் கூடவே இருக்கிறார். தான் வண்டி தருவதா, வேண்டாமா, என அந்த மணிண்ணா அச்சமாக, லேசாக அங்கு நின்றிருந்த, பிரகதீஷை பார்க்க.

அதை பார்த்த சாக்ஷி, ‘இவனை மீறி எதுவும் நடக்காது’ என உள்ளுக்குள் புலம்பியவள், ‘போடா, நான் நடந்தே கூட போவேன், உன்னுடன் வர மாட்டேன்’ என தன்னுள் சபதமே செய்து கொண்டாள்.     

இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன், அதற்கெல்லாம் அசராது, தனக்கு பின்னால் மாட்டியிருந்த பையை எடுத்து, இறுக்கமாக தன் நெஞ்சோடு சேர்த்தனைத்தவள், திரும்பி நடக்கலானாள்.

இந்த நேரத்திலும் தனது பிடிவாதத்தை விடாது இருக்கும் அவளை பார்க்க எரிச்சல் தான் வந்தது அவனிற்கு. ஆனாலும் அவள், எப்போதும் இப்படி தான் கோவமெல்லாம் வராது, ஆனால் வந்தால், எளிதில் அவளை சமாளிக்க முடியாது. தொடர்ந்து ஒரு மாதமானாலும் பேசாமல் இருப்பாள் அவனிடம். ஆம், எல்லாம் அவனிடம் மட்டும் தான்.

இந்த வீம்பு, பிடிவாதம், கோவம், தண்டிப்பது இப்படி எல்லாம் அவனிடம் மட்டும் தான், அதற்கு எல்லாம், அவனும் தலையாட்டுவது தான் இங்கு பெரிய விஷயம்.    

இப்படி அவள், நிர்கதியாய் செல்வது பிடிக்காமல், “சாக்கி “ என  அழைத்தான். அவள் திரும்பவில்லை, திரும்பவும் அழைத்தான், அவள் மதிக்காமல் நடக்க, வேகமாக நடந்து அவளின் முன் வந்தவன், “இந்தா “ என தனது வண்டி சாவியை அவளிடம் தூக்கி போட்டான்.

இவள் அதனை அனிச்சையாய் கேட்ச் பிடிக்க “எடுத்து போ” என்றான். அதற்கு மேல் நிற்காமல், அவனின் வண்டியெடுத்து கிளம்பினாள். தனது ரோஷமெல்லாம் விடுத்து, அவனிடம் தோற்றே கிளம்பினாள், ஆனால் அதை அவள் உணரும் நிலையில்லை.

பிரகதீஷும் ஒரு பெருமூச்சோடு, அவள் பின்னாலேயே அந்த மணியண்ணாவின் வண்டியெடுத்து கிளம்பினான்.

அவளிற்கு, தனது கீர் வண்டியை கற்று கொடுத்ததும் அவனே, மேலும் அவளிற்கு குதிரை ஏற்றமும் தெரியும், கற்று தந்ததும் அவனே. இப்படி நிறைய….   

இப்போது, காங்கேயத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை அது. சாக்ஷி வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே விரைய, அங்கு ICU முன்பு ஊர் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஊரிலுள்ள சற்று பெரிய தலைகளில் அவரும் ஒருவர், எனவே அவரை சார்ந்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். இவளை பார்த்தவுடன் சற்று வழி விட்டு விலக, பின்னால் தெரிந்த ப்ரகதீஷின் சாயல் கண்டு, அவர்கள் தங்களுக்குள் சல சலக்க ஆரம்பித்தனர்.

அவனை பார்த்து சிலர் “வாங்க தம்பி “ என்றும் சிலர் “க்கும்” என கனைத்து திரும்பிக் கொள்ளவும் செய்தனர்.

‘இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்’ என எண்ணியவன் எதையும் பொருட்படுத்தாமல், அவளுடன் உள்ளே சென்றான்.

அங்கு தனது உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருந்தார் சாகஷியின் தந்தை, நர்ஸ் அவளை மட்டும் உள்ளே அனுமதிக்க, உள்ளே சென்றாள். அவளிற்கு அந்த நிலையை ஏற்கவே முடியவில்லை.

இன்று காலையில் பார்த்த போது ‘தேறி வந்துவிடுவார் என்றிருந்த தனது தந்தையா’ என நினைக்கும் விதமாக, கண்ணில் மட்டும் உயிர் வைத்து காத்து இருந்தார்.   

குடுத்தினர் அனைவரையும் உள்ளே இருந்தனர், கடைசியாக பிரகதீஷும் உள்ளே சென்று வெளியே வந்தான். அவரின் ஆத்மா நிம்மதியாகவே  விடைபெற்று சென்றது.

அதன்பின், தங்களது இருப்பிடம் வந்து, எல்லா காரியங்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சித்த படி நிறைவாகவே நடந்தது. எல்லாவற்றிலும் பிரகதீஷ் இருந்தான்,  ‘மற்றவர்கள் தன்னை மதித்தார்கள், மதிக்கவில்லை எதையும் அவன் பார்க்கவில்லை’ தனது தோழி என்பவளுக்காக. அங்கேயே இருந்தான்.

அவளின் குடும்பத்திலும், அனைவருக்கும் அவனை தெரியும். எல்லோரும் பார்த்துதான் இருந்தனர் அவனை. சின்ன மரியாதையுடனான தலையசப்புடன் நகர்ந்து விடுவர்.

காரணம் ஒரே ஊர், ஒரே இனம் ஆனால், சாக்ஷியின் வீட்டை விட இவர்கள் பிரிவு வேறு. மற்றபடி இருவரும் சரிசமாமான செல்வாக்கு பெற்றவர்கள். ஊரின் நல்லது, கேட்டது அனைத்திற்கும் முன் நிற்பவர்கள்.

சாக்ஷியின் தங்கை தான், அவனுக்கு அவ்வபோது காபி, தண்ணீர் கொடுத்து அனுப்பினாள்.

மறுநாள் காலையில் எல்லாம் முடியும் வரை இருந்து, அதன் பிறகே வீடு சென்றான். ஒரே ஊர் என்பதால், அவனது தந்தை சாக்ஷியின் வீட்டிற்கு சென்று வந்தார் அவ்வளவே.

அவனது வீட்டில் அவனை யாரும், ஏதுவும் கேட்டகவில்லை. அவன் அங்கு தான் சென்று வந்திருப்பான் என தெரியும், கேட்டாலும் பதில் வராது. சொன்னாலும் கேட்க மாட்டான்.

எனவே அவனை யாரும் எதுவும் கேட்பதில்லை. இவனும் குளித்து கிளம்பி தனது பெட்ரோல் பங்க சென்றுவிட்டான்.         

  

 

         ,

Advertisement