Advertisement

மிட்டாய் புயலே-20

சாக்க்ஷி வீட்டினுள் நுழையும் போதே பேரமைதி…. சித்தி உள்ளே சமையலறையில் இருக்க, சித்தப்பா மட்டும் வெளியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

முறையாக வரவேற்றாள் “வாங்க சித்தப்பா” என்றாள்,

வரதராஜன் “வா சாக்க்ஷி, நல்லா இருக்கியா, என்னம்மா இப்படி இளைச்சு போய்ட்ட” என்றார். சாக்க்ஷி லேசாக சிரித்தாள்.

“சித்தி, கீர்த்தனா, கெளதம் எல்லாம் எப்படி இருக்காங்க“ என்றாள்.

“சித்தி வந்திருக்காம்மா” என்றவர் “உள்ளதான் இருக்கா, போய் பார்”  என்றார்.

இவள் எழுந்து உள்ளே செல்லவும், அவர்கள் இருவரும் வெளியே வரவும் சரியாக இருந்தது. மேகலை கையில் சிற்றுண்டி தட்டுடன் வந்தார். சாக்க்ஷியின் சித்தியின், ‘சாந்தா’ அவரின் கையில் காபி கப் இருந்தது.

அவரை பார்த்ததும் “வாங்க சித்தி” என்றாள்.

அவரும் “நல்லா இருக்கியாம்மா, நீதான் மில்லுக்கு போற போலிருக்கு, என்னாமோம்மா, ராஜன் மாமா தன் பிள்ளைக்களுக்கு தைரியத்தை கொடுத்திருக்கார், அதான் இப்படி நீ தனியா சாமாளிக்கிற” என்றார் பாராட்டாக.

சாக்க்ஷிக்குதான் ஜில் என்றிருந்தது. எல்லோரிடமும் இப்படி எதிர்பார்ப்பவள இல்லைதான் , ஆனால், தன்னால் முடியாது என்று சொன்னவரின் மனைவி தன்னை பாராட்டவும். கொஞ்சம் நெகிழ்ச்சிதான் வந்தது அவளிற்கு. எனினும் முகத்தில் எதுவும் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

மேகலை “போ சாக்க்ஷி, முகம் கழுவி வா” என்றார். அவளும் உள்ளே சென்று ரெப்ரெஷ்ஷாகி வந்தமர்ந்தாள் ஹால் சோபாவில்.

மேகலை, வரதராஜனுக்கு பிடிக்குமென வெங்காய பகோடா செய்ய சொல்லியிருந்தார் வசந்தியை. அதன் வாசம் அந்த வீடு முழுவதும் பரவியிருக்க..  

சாக்க்ஷி, தனது அம்மாவும் சித்தியும் ஏதோ ஊர் கதை பேசுவதை வாய்  பார்த்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்கு பிறகு, ஒரு இலகுவான மனநிலை அவளிடம்.

மெதுவாக, தொண்டையை கனைத்து ஆரம்பித்தார் வரதராஜன் “சாக்க்ஷி, அண்ணா திதி வருதும்மா, அதுக்கு ஏற்பாடு செய்யணும். அப்புறம் குலதெய்வ கோயிலுக்கு போகணும், கிடா விருந்து வைக்கணும்.

நம்ம பங்காளி, அத்தைங்க எல்லாம் கூப்பிடனும், வேலையிருக்குமா, அடுத்த வாரம் வருது.” என்று நிறுத்தினார்.

சாக்க்ஷி “நீங்க சொல்ற படி செய்திடலாம் சித்தப்பா” என்றாள். ஆனால் மனதில், இன்று கதீஷுடன், தான் இருந்த நிலை வந்து அவளை கூனி குறுக வைத்தது.

அதற்குள் ஒரு வருடம் முடிந்துவிட்டதா, அதற்குள் நான் அப்பாவை மறந்து விட்டேனா, கதீஷை தேட தொடங்கி விட்டேனா.. என அவள் மனம் அலைபாய்ந்தது.

தொடர்ந்து அதை குறித்து வரதராஜன் சொன்னதற்கு எல்லாம் ‘சரி சரி’ என மண்டையை உருட்டினாள். வரதனும் வந்த வேலையில் பாதியை மட்டும்தான் சாக்க்ஷியிடம் சொன்னார், மற்றதை தனது அண்ணியிடமே சொன்னார். மேலும் சொல்லியிருந்தாலும் இவள் அதற்கும் சரி எனதான் சொல்லியிருப்பாள். அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள் சாக்க்ஷி.

மேலும் இன்னும் ஒருமணி நேரம் இருந்து, பேசிவிட்டு கிளம்பினர் இருவரும்.

கதீஷ், நேரே தனது சின்ன அக்கா வீட்டிற்கு சென்றான். சாக்க்ஷியிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து அவன் மனம் அவன் வசம் இல்லாமல் பறந்து கொண்டிருந்தது.

எனவே அலுவலகம் செல்ல தோன்றவில்லை, வீட்டிற்கு செல்லவும் மனதில்லை எனவே தன் அக்காவை பார்க்க வந்திருந்தான்.

ஜெயத்தின் வீடு அங்கேயே, கடைவீதியில் இருந்தது. இவர்களது ஊரிலிருந்து சற்று தள்ளி, சிறிய அளவினதான கிராமத்தில் இருக்கும்.  

நெடுநாள் கழித்து வீட்டுக்கும் வரும் தம்பியை பார்த்ததும், முகமெல்லாம் சந்தோஷ ரேகைதான். துள்ளி குதிக்காதா குறைதான் ஜெயம் “வாடா, வா.. வா…… எப்படியிருக்க“ என்றார்.

ஜெயம் வீட்டில் மானமார் மாமியாருடந்தான் இருக்கிறார்கள். அவர்கள் தன் பெண் வீட்டிற்கு சென்றிருப்பதால் இப்போது, ஜெயம் மட்டும் தனியே வீட்டில் இருந்தார். பிள்ளைகள் பள்ளி, மாமா கடைக்கு சென்றிருந்தார்.

ஜெயத்தின் வரவேற்பில், ஏதேதோ பேச வந்தவன் இந்த துள்ளலில் அதனை எல்லாம் மறந்து போனான். அமைதியாக பேசிக் கொண்டிருந்தான். ஆனால் ஜெயம் “என்னடா… ஏதாவது, பிரச்சையா” என்றாள்.

ஒரே ஊரே என்றாலும் தம்பி, இப்படி அக்கா வீட்டிற்கு சும்மா கூட வர மாட்டான் என தெரியும் அதனால் கேட்டாள் ஜெயம்.

கதீஷ் “இல்லக்கா, அதெல்லாம் இல்லாக்கா, சொல்ல போனா ரொம்ப சந்தோஷமா இருக்கேன், எங்க…., வீட்டுக்கு போனா, ஏதாவது மூடு கெட்டுமோன்னு, சும்மா வந்தேன்” என்றான் தன் அக்காவிடம் மறையாது.

ஜெயத்திற்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை “என்னடா, இப்படியெல்லாம் பேசற, என்னாச்சு” என்றாள்.

ஒன்றும் சொல்லவில்லை அவன் அமைதியாக இருந்தான். காபி எடுத்து வந்து தந்தாள். பிள்ளைகள் பள்ளி முடித்து வரவும் அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

ஜெயமும் விடாது அவனை துருவி துருவி கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், இவன் பகிர வேண்டும் என்று நினைக்கவில்லை போலும், பிள்ளைகளுடன் விளையாடிய படியே நேரத்தை கடத்தினான்.

இரவு, தன் மாமா வந்த பிறகு உணவு முடித்துதான் கிளம்பினான். வண்டியில் வீடு செல்ல செல்ல ஒரே யோசனை, அவளிடம் சொல்லிவிட்டேன். எப்படி செய்ய போகிறேன் என அதனை நினைத்துதான் யோசனை.

ஏனோ சாக்க்ஷிக்கும் போனே செய்யவில்லை கதீஷ். வீட்டிற்கு வர பிடிக்காதவனாக, நேரே பங்க் சென்றுவிட்டான். நடுநிசியில்தான் வீடு வந்தான். பூங்கொடி கேள்வி கேட்காமல் கதவை திறந்து விடவும் அப்பாடா என சென்று படுத்துக் கொண்டான்.

அதிகாலையிலேயே ஜகுவுடன் ஜாக்கிங் சென்றான். வெகு நாள் கழித்து இந்த பழக்கம் இப்போதுதான் வந்தது. நேரே அவர்களின் பண்ணை வீடு நோக்கி சென்றனர் இருவரும்.

மனதில் ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். ஜகு அவனை தன் மூச்சுக் காற்றால் சீண்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் ஒரே சிந்தனை அவனிடம்.

சாக்க்ஷிக்கும் அந்த விடியல் அக்க்ஷராவின் போனில் தொடங்கியது. “அக்கா, எப்போ வந்து கூட்டிட்டு போற, நேற்றே வருவேன்னு நினைச்சேன்” என்றாள் கோவமாக.

சாக்க்ஷி ‘ஐயோ எப்படி மறந்து போனேன் ‘ என நினைத்து “தோ இப்போ வந்துடுவோம் டா, கிளம்பிட்டோம் டா” என்றாள் பரபரப்பாக.

அக்க்ஷராவிற்கு கடைசி வருடமிது எக்ஸாம் முடிந்து, நேற்று பிரன்டுடன் ஒருநாள், என அந்த ஒரு நாளும் முடிந்து காத்திருந்தாள். சாக்க்ஷி இன்று காலை வருவதாகத்தான் சொல்லியிருந்தாள், அதனால்தான் இந்த அழைப்பு.

ஆனால், நேற்றைய தனது மன குழப்பத்தில் சாக்க்ஷி எல்லாவற்றையும் மறந்திருந்தாள். எனவே, இப்போது அடித்து பிடித்து கிளம்பி, வேலுவையும் ரெடியாக சொல்லி ஒரு வழியாக கிளம்பி சென்று கொண்டிருக்கிறாள்.

வேலுதான் “என்னக்கா, அண்ணன பார்த்துட்டு வந்து எல்லாத்தையும் மறந்துட்டியாக்கா” என்றான். சிரித்தபடியே

“டேய்….. ஏண்டா நீ வேற” என்றாள் சலிப்பாக.   

கதீஷ் சரியாக அந்த நேரம் போன் செய்தான், போனை எடுக்கவில்லை சாக்க்ஷி. ஏனோ மனம் நேற்று தன் சித்தப்பா வந்து சென்றதிலிருந்து ஒரு நிலையில்லை. எனவே, ஏதேனும் பேசி அவனை காயப்படுத்தி விடுவோமா…. என்ற பயம் அவளிற்கு. அதனால் போனை எடுக்கவில்லை அவள்.

அவனும் ஏனோ அதன் பிறகு போனே செய்யவில்லை. அந்த அமைதியுனுடே அக்க்ஷராவை அழைத்து வந்தாள்.

அன்று இரவுதான், மேகலை கேட்டார் சாக்க்ஷியிடம் “என்னமா முடிவு செய்திருக்க” என்றார்.

சாக்க்ஷி என்னவென கேட்டாள் “என்ன மா, எத பத்தி” என கேட்க.

மேகலை “ஏன்ம்மா, சித்தப்பா ஒன்னும் சொல்லல” என்றார்.

“ஏன் என்ன சொன்னார் “ என்றார் இவள் ஒரு ஆராய்ச்சி பார்வையாக

மேகலையிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது  “இல்லா டா, கீர்த்தனாக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்களாம், இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சுதுல்லா, அதான்.

பெரியவ நீ இருக்கும் போது, எப்படி அவளுக்கு செய்யறது, அதான் உன் கிட்ட பேச சொன்னாங்க, ஏதோ அவங்க பார்த்த இடத்தில், ஒரு வரன் இருக்காம், ஜாதகம் வாங்கி வந்திருக்காங்க.

அப்பாவோட திதி முடிஞ்சி, ஜாதகம் பார்த்துட்டு, சொல்றேன்னு சொல்லியிருக்கேன், என்ன புரியுதா, உனக்கப்புறம் அக்க்ஷரா இருக்கா, எல்லாம் செய்யுற உனக்கு… நான் சொல்ல வேண்டியதில்லை….. புரிஞ்சி நடந்துக்கோ “ என்றார். முதன் முறையாக மேகலை குரல் உயர்த்தினார் சாக்க்ஷியிடம்.

இந்த மேகலையின் குரலே சாக்க்ஷியை தயங்க வைத்தது. ஏனோ, தன் அன்னையிடம் இப்போது கதீஷை குறித்து பேச முடியவில்லை அவளால்.

அதனால் சாக்க்ஷி “ம்மா, இப்போதான் லோன் வாங்கி, என் வேலையை தொடங்கி இருக்கேன்,

சும்மா நம்ம இஷ்டத்துக்கு செய்ய முடியாது, ஏன் எல்லோரும் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க, என்னால இப்போ கல்யாணத்த பத்தி யோசிக்க முடியாது.” என கத்தியவள் பொறுமையாக தன் அம்மாவின் அருகில் வந்தவள்.

“நீ வேறு என்னவேண்ணா சொல்லு கேட்கறேன், ஆனா ப்ளீஸ் ம்மா, என்னை… இப்போ கல்யாணம் செய்துக்க சொல்லாத…. “ என்றவள் தன் அன்னையின் பதிலை எதிர்பார்க்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அக்க்ஷராவும் இதையெல்லாம் பார்த்துதான் இருந்தாள், அவளிற்கு ஏதோ புரிவது போல்தான் இருந்தது. ஆனால் அக்கா இப்படியெல்லாம் இறங்கி பேசுபவள் இல்லையே எனவும் தோன்றியது.

அக்க்ஷராவும் “விடேன்ம்மா… அவதான் ஏதோ குழப்பத்தில் இருக்கால்ல, கொஞ்ச நாள் போனதும், பேசுங்களேன்…… வேணுன்னா, அவங்க பொண்ணுக்கு செய்ய சொல்லுங்க” என்றாள்.

மேகலை “அவளுக்குத்தான் என்னாமோ…….. எல்லாம் தட்டி தட்டி போகுது” என புலம்பியவாறே உள் எழுந்து சென்றுவிட்டார். அவரின் துயரம் வார்த்தையால் சொல்ல முடியாது.

இரு பெண்களை திருமணத்திற்கு வைத்துக் கொண்டு இருப்பது. எவ்வளவு பெரிய திடமான மனிதரையும் உறுத்தும் விஷயம் அது. அதுவும் மேகலை போன்றவர்களுக்கு இன்னும் கவலையைத்தான் கொடுத்தது.

அக்க்ஷரா வெகு நேரம் வெளியவே அமர்ந்திருந்தாள். அப்பா இல்லாத நிலை அவளை துரத்தியது. அப்பா இல்லையே என தோன்ற தொடங்கியது அவளிற்கு.

சாக்க்ஷியை நினைத்துதான் பயம் வந்தது. அக்கா எதை நோக்கி செல்கிறாள் என தங்கையாக ஒரு பயம். யார் சொல்லியும் கேட்கமாட்டாலே என்ற பயம் எனவே தன் அப்பா மீது அது திரும்பியது. .

புதிதாக ஒரு இடம் செல்லும் போது வழிகாட்டி எவ்வளவு முக்கியம் என இப்போதுதான் உணர தொடங்கினாள் அவள். இந்த பக்கம் போக கூடாது, வண்டி கத்துக்கோ, இது படி, இந்த கல்லூரி நல்லது என சொல்லிய தந்தை இப்போது இல்லாதது…. உணர முடிந்தது.

கை பிடித்து நடந்து, சில இடங்களில் தூக்கி, சில இடங்களில் துரத்தி என அவர் சொல்லிய வழி, இப்போது நடக்க நடக்கத்தான் அவர் இல்லாமல் தூரமாக தெரிந்தது அக்க்ஷராவிற்கு.

எனவே ‘எல்லாம் நால்லதாக செய்து தாருங்கள் பா’ என வேண்டினாள் அக்க்ஷ்ரா. அதன் பிறகே சிறிது உறக்கம் வந்தது அவளிற்கு.

மறுநாள், சாக்க்ஷி சீக்கிரமே மில்லிருக்கு சென்றுவிட்டாள். இன்று, புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தில், மிஷினை மாற்றம் செய்ய போகிறார்கள் எனவே சீக்கிரம் சென்றுவிட்டாள்.

இன்னும் இரண்டு மிஷினிற்கு ஆடர் செய்துள்ளாள். அதன் வருகையையும் எதிர்பார்த்திருந்தாள். இப்போது மில்லின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டு ஒரே கணக்கின் கீழ் வந்தது.

இப்போது அதை குறித்து பேச ஆடிட்டர் ஆபீஸ் செல்ல வேண்டும், ஈரோட்டிற்கு. வேலு அரிசி லோடு இறக்க, திருப்பூர் வரை சென்றிருப்பதால், இவளே காரெடுத்து சென்றாள்.

வருவதற்கே மாலையானது. நேரே வீட்டிற்கு சென்றுவிட்டாள். இவளை பார்த்தவுடன் அக்க்ஷரா “க்கா, ஏன் க்கா, சாப்பிட வரல, வேலுவையும் கூட்டி போல” என்றாள். கண்டிக்கும் குரலில்.

“கொஞ்சம் வேலை டா, “ என சாதாரனாமாக சொன்ன, அக்காவின் முகம் பார்க்கும் போது, ஏதோ ஓய்ந்து போனது போல் தெரிந்தது. எனவே “ஏன்க்கா, நானும் நாளைக்கு உன் கூட மில்லுக்கு வரவா” என்றாள்.

அதிசயமாக பார்த்தாள் அவளை சாக்க்ஷி, ஒன்றும் சொல்லாமல் “சரி … போலாம்” என்றாள்.

மேகலை காப்பியுடன் வந்தார் “மதியம் சாப்பிட்டியா சாக்க்ஷி“ என்றார்.

“சாப்பிட்டேன்ம்மா” என்றவள். காபி கப் வாங்கி குடிக்க தொடங்கினாள்.

“என்ன சாக்க்ஷி சொல்ற, ஜாதகம் பார்க்கவா” என்றார்.

இதை கேட்டதும் என்ன நினைத்தாலோ “ம்மா, நான் கதீஷை கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன்” என்றாள். தன் அம்மாவின் முகம் பார்த்து. ஒரு  பயம், தயக்கம் ஏதும் இல்லை அவளிடம் நிமிர்வாகவே சொன்னாள்.

மேகலை சங்கடமாக அவளை பார்க்க, அக்க்ஷரா சந்தோஷமாக அவளை பார்த்தாள். அவளே முதலில் பேசினாள் “எனக்கு, தெரியும்க்கா, நீ கதீஷ்ண்ணாவதான், கட்டிப்பேன்னு, அத சொல்ல ஏன் க்கா, இத்தனை வருஷம், அப்பா இருக்கும் போதே சொல்லியிருந்தா, இந்நேரம் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கும்…. போக்கா” என்றவள் அவளை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

சாக்க்ஷி லேசாக சிரித்துக் கொண்டே தன் அம்மாவை பார்த்தாள். அவர் என்ன சொல்வது என தெரியாமல் அமர்ந்திருந்தார். அன்று வந்து ஜெகன் பேசியது என்ன, இவளும் அவரிடம் பேசியது என்ன, இப்போது இவள் சொல்லுவது என்ன’ என அவருக்குதான் என்ன என்ன என உள்ளுக்குள், தட தடத்தது.

இப்போது, தான் சொல்லுவதற்கு எதுவும் இல்லை எனதான் தோன்றியது மேகலைக்கு. ஆனாலும் மனது கேட்காமல் “இது ஒத்து வருமா..” என்றார்.

சாக்க்ஷி “கதீஷ்  பாத்துக்குவார் ம்மா, நீ ஏன் கவலை படர, எல்லாம் சரியா வரும், என்னை நினைத்து கவலை படாமல், நீ அக்க்ஷராக்கு, அந்த வரன் பாருங்க, நானும் சித்தப்பா கிட்ட பேசன்றேன்” என்றாள்.

மேகலையின் முகம் இன்னும் தெளியாமல் இருக்கவும், “நான் இப்பவே சித்தப்பா கிட்ட பேசறேன் “ என்றவள் போனை எடுத்து, அவருக்கு டையல் செய்தாள்.

அவரும் “ஹலோ சாக்க்ஷி, நானே உன்ன கூப்பிடனும்ம்னு நினைச்சேன் ம்மா” என்றார்.

சாக்க்ஷி “சொல்லுங்க சித்தப்பா, என்ன விஷயம்” என்றாள்.

“உங்க மாமா நம்பர் அனுப்பு, அவருக்கு சொல்லணும், அப்பா திதி பத்தி “ என்றார். பின்பு “சொல்லும்மா , என்ன விஷயம் “ என்றார்.

“நாளைக்கு நானும் அம்மாவும், அங்க வரோம், நேரில் பேசலாம்“ என்றாள்.

மறுநாள், சாக்க்ஷியும், மேகலையும் அங்கு காங்கேயம் சென்றனர். அன்றே தன் சித்தப்பாவிடம் சொன்னாள் சாக்க்ஷி “நான் கதீஷைதான் திருமணம் செய்வேன்” என்றாள்.

முதலில்லேயே இவளுக்கும் அவருக்கும் ஆகாது. எனவே அவரும் “என்ன மில்ல பார்த்துக்கவும், சம்பாதிக்கவும்… திமிர் வந்ததா” என்றார்.

அவர் அப்படி பேசுபவர்தான், தெரியும் எல்லோருக்கும். ஆனால் சாக்க்ஷி அமைதியாக பேசினாள், இப்போது நான் பழைய சாக்க்ஷி இல்லை என்று  சொல்லும் விதமாக அமைதியாக பேசினாள் ஆனாலும், நிலையாக நின்றாள்.

அவரின் இந்த சீண்டல் வார்த்தைகளை காதில் வாங்காமல், பொறுமையாக பேசினாள். அதில் அவளின் சித்தி சாந்தா கொஞ்சம் சுதாரித்தார்.

சாக்க்ஷியே எதிர்பாரா நேரத்தில் அவளிற்காக பேசினார், புரியவைத்தார் “பெண் ஒருவரை பிடித்திருக்கு என்பதாலேயே நாம் எதிர்க்க கூடாது. முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு நல்லது, கேட்டது தெரியாது அதனால் எதிர்ப்பார்கள்.

ஆனால், இவள் விஷயம் பொறுத்த வரை, தெரிந்த பையன், நம் கண் முன் வளர்ந்தவர்கள்… ஏதேனும் காரணம் சொல்லுங்கள் இது வேண்டாம் என்பதற்கு” என அவர் பேச பேச சற்று சமாதானம் ஆனார் வரதன்.

ஆனாலும் “அண்ணன் வேண்டாம் எனத்தானே நினைத்தார்” என்றார்.

சாந்தா விடாமல் “தன் மகளின் வாயால், ஒருவனை பிடித்திருக்கிறது என கேட்ட பின், அவர் வேண்டாம் என்றிருக்க மாட்டார்” என்றனர்.

சாக்க்ஷிக்கு இந்த வார்த்தை அப்படி ஒரு தெளிவை தந்தது. ‘ஆம் என் அப்பா அப்படி சொல்லியிருக்கமாட்டார்’ என தான் தோன்றியது. எனவே தன் சித்தியை கட்டிக் கொண்டாள்.

இதுநாள் வரை அவரை முழுதாக, தான் புரிந்து கொள்ளவில்லையோ எனதான் தோன்றியது அவளிற்கு. இப்படியான ஒட்டுதல் இதுவரை அந்த குடும்பத்துடன் இல்லை எனலாம். அப்படியிருக்க எப்படி புரிந்து கொள்வது.

அதற்குள் வரதன் “சரி பெண் கேட்டு வர சொல், இருவருக்கும் முன், உன்னுடைய திருமணம் நடக்க வேண்டும்….” என்றார். சாக்க்ஷிக்கு முச்சடைத்தது. வாலு போச்சு கத்தி வந்தது…. டும்… டும்…. டும்…..

“இல்ல சித்தப்பா, அவங்க வீட்டில் நம் மேல் கோவம், அதான் கதீஷ் கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்றாங்க” என்றாள்.

இப்போது இவர் சாந்தவை பார்க்க, சாந்தாவோ பாவமாக சாக்க்ஷியை பார்க்க, விடை தெரியாதா விடுகதையாய் ஜெகன்தான் தோன்றினார் இப்போது சாக்க்ஷிக்கு.

    

 

   

  

 

Advertisement