Advertisement

 

அத்தியாயம் 13

 

பாலைவனமாக இருந்த

என் வாழ்க்கையில்

நீர் வீழ்ச்சியாக

நீ வருவாயெனில்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

முதல் நாள் அந்த பல்கலை கழகத்தினுள் நுழைந்த ரிஷி  சுற்றி இருந்தவர்களையும் இடங்களையும் பார்வையிட்டு கொண்டே சென்றான்.

 

தன்னுடைய டிபார்ட்மென்ட் தேடி பிடித்து அங்கு சென்றவன் அங்கிருந்தவர்களிடம் “எந்த கிளாஸ்”, என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்று அமர்ந்தான்.

 

நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். தமிழ்நாடை போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது அந்த கிளாஸ் ரூம்.

 

அங்கிருந்தவர்களும் உடையில் இருந்து அனைத்திலும் மாறு பட்டிருந்தார்கள்.

 

அலங்கோலமாக அணிந்திருந்த பெண்களை பார்த்து பார்வையை திருப்பி கொண்ட ரிஷி “மூணு வருஷம் இதுங்க கூட தான் குப்பை கொட்டணுமா?”, என்று எண்ணி கொண்டான்.

 

“இங்க வந்தா நம்ம ஊரு பொண்ணுங்க கூட சேலை, சுடிதார் எல்லாம் மறந்துருவாங்க போல? அட வேதா கூட சுடிதார் போடலையே”, என்று நினைத்தவனுக்கு அவள் போட்டிருந்த உடை நினைவில் வந்தது.

 

மேலே பெண்கள் அணியும் சட்டையும், கீழே பாவாடையும் போட்டிருந்தாள். “பரவால்ல என் செல்லம், இப்படி வயிறு தெரியுற மாதிரி,  தொடை தெரியுற மாதிரி எல்லாம் போடலை”, என்று நினைத்து அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தான்.

 

அப்போது “ஹாய், ஐ அம் ஜான்”, என்ற குரல் கேட்டு திரும்பினான். அவன் அருகில் அமர்ந்திருந்தான் ஒரு இளைஞன். பதிலுக்கு புன்னகைத்தவாறே இவனும் “ஹலோ”, என்று சொல்லி தன்னை அறிமுக படுத்தி கொண்டான் ரிஷி.

 

ஜானின் வெளி நாட்டு ஆங்கிலத்தில் சிறிது சிரம பட்டாலும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு திணறி திணறி பதில் சொல்லி சமாளித்தான் ரிஷி.

 

சிறிது நேரத்திலே ஜானின் மீது ஒரு நட்பின் இழை உருவானது. சிரித்த முகத்துடன் இருந்த ஜானை ரிஷிக்கு பிடித்து போனது.  ஒன்றே ஒன்றை தவிர.

 

அது என்னவென்றால் வாய் ஓயாமல் பேசி கொண்டே இருந்தான் ஜான். பாதி புரிந்தும் பாதி அனுமானத்திலும் புரிந்து கொண்டு பதில் சொல்லி கொண்டிருந்தான் ரிஷி.

 

“இவன் கிட்ட நல்ல பேசுன பிறகு பிளேட் போடுறதை குறைக்க சொல்லணும்”, என்று ரிஷி நினைத்து கொண்டு இருக்கும் போதே அங்கு மின்னல் வேகத்தில் வந்து நின்றாள் அருந்ததி ரவிச்சந்திரன்.

 

ஹை கீல்ஸ் செருப்புடன் குர்தா மற்றும் ஜீன்ஸுடன் மேடையில் ஏறி நின்றாள் அவள்.

 

“என்ன இந்த பொண்ணு வந்த உடனே அங்க போய் நிக்குது?”, என்று ஜான் காதில் ஆங்கிலத்தில்  கிசு கிசுத்தான் ரிஷி.

 

ஜானும் தெரியவில்லை என்னும் விதமாய் உதட்டை பிதுக்கினான். மற்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

 

ஆனால் மேலே ஏறி நின்றவளோ அங்கிருந்த புராஜெக்ட்டரை ஆன் செய்தாள். பின் அனைவரையும் பார்த்து திரும்பியவள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

 

அப்போது தான் அவள் அவர்களுக்கு கிளாஸ் எடுக்க வந்திருக்கிறாள் என்பதையே உணர்ந்தான் ரிஷி.

 

அவளை பார்த்த உடன் எதுவுமே தோன்றாத ரிஷிக்கு அவள் பேச ஆரம்பித்ததும் “எப்பா என்னா பொண்ணு டா சாமி”, என்று தான் நினைக்க தோன்றியது.

 

அப்படி ஒரு ஆளுமையான குரலில், இதழ்களில் வற்றாத புன்னகையுடன் பேசி கொண்டிருந்தாள் அருந்ததி.

 

இவனை விட சிறு பெண்ணாக தான் தெரிந்தாள். “படிச்சு முடிச்ச உடனே இவ வேலைக்கு வந்திருக்கணும்”, என்று நினைத்து கொண்டான் ரிஷி.

 

அருந்ததியோ தன்னை பற்றி பேசி விட்டு ஒவ்வருவரையும் பற்றி விசாரித்து கொண்டே வந்தாள்.

 

தன்னருகே வந்தால் என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு ஜானை பார்த்தான் ரிஷி.

 

அவனோ அருந்ததியையே வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான். ஆண் பெண் ஈர்ப்பு நாட்டை பொறுத்து மாறுமா என்ன?”

 

இவர்கள் அருகே அவள் வந்ததும் ஜான் தன்னை பற்றி சொன்னான்.

 

அவன் முடித்ததும் ரிஷி ஆரம்பிக்கும் போது “நீங்க ரிஷி பிரம் இந்தியா”, என்று சொல்லி அவனுக்கு சாக் கொடுத்த அருந்ததி அடுத்து அவன் இது வரை என்ன செய்தான் என்று எல்லாமே கேட்டாள்.

 

குழப்பத்துடனே அனைத்துக்கும் பதில் சொன்னான் ரிஷி.

 

அந்த கிளாசில் மொத்தமே பதினஞ்சு பேர் தான் அமர்ந்திருந்தார்கள்

 

ரிஷியிடம் பேசிய பின்னர் முன்னே சென்றவள் “இன்னைக்கு கிளாஸ் எதுவும் வேண்டாம். ஆனா நீங்க எதுல எல்லாம் கான்செண்ட்ரேட் பண்ணனும்னு கொஞ்சம் டிப்ஸ் மட்டும் சொல்றேன். அறிவியல் என்பது சமுத்திரம் மாதிரி. ஒரு நாளும்  வற்றவே வற்றாது. அதுல புது புது உயிர்கள் வருவது போல மனுஷங்களுக்கு புது புது வியாதிகள் வந்து கொண்டே இருக்கும். நான் இப்ப சொல்ல போவது ஒரு டிப்ஸ் தான், நீங்க இதை தவிர வேற எதை பத்தினாலும் ரெசெர்ச் செய்யலாம்.

 

நீங்க செலெக்ட் பண்றதை வச்சு தான் கேண்டிடேட் அண்ட் ஸ்டாப் பிரிப்பாங்க.

உங்களுக்குன்னு ஒரு ஸ்டாப் அலாட் பண்ணி அவர் தான் உங்களுக்கு கைட் பண்ணுவார். உங்க இன்டெரெஸ்ட்டை பொறுமையா டிசைட்  பண்ணுங்க.”, என்று ஆரம்பித்து என்ன என்ன பிரிவுகள் இருக்கு, அதை பத்தி எதில் படிக்கணும், அதற்கு பிறகான வேலை என்று அனைத்தையும் சொன்னவள் அவர்களிடம் சிரிக்க சிரிக்க பேசினாள்.

 

அவளை அனைவருக்கும்   பிடித்து விட்டது. கொள்ளை கொள்ளும் அழகுடனும், மனம் மயக்கும் புன்னகையுடன் இருந்த அவளை பிடிக்காமல் இருந்தால் தான் அதிசயம்.

 

ஜானோ அவளை கண்டு மயங்கியே போனான். ஒரு தோழமையோடு ரிஷியிடமும் பகிர்ந்து கொண்டான்.  அதை கேட்டு சிரிப்புடன் “வெள்ளை காரன் கூட ஜொள்ளு விடுறான்”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷி.

 

“தினமும் உங்களுக்கு இரண்டு மணி நேரம் கிளாஸ் இருக்கும். மற்ற நேரத்துல எல்லாம் நீங்க லேப்ல தான் ஸ்பென்ட் பண்ணனும். அதுக்கான யூனிபார்ம் பத்தி லேப்ல சொல்லுவாங்க”, என்று அருந்ததி சொன்னதும் ஒருவன் “லேப் நேரம் எவ்வளவு?”, என்று கேட்டான்.

 

“இரண்டு மணி நேரம் கட்டாயம், அதுவும் உங்களை கைட் பண்ற டாக்டர் எப்ப பிரியா இருக்காங்களோ அது படி இருக்கும். இந்த ஒன் வீக் உங்களுக்கு எதுவும் இல்ல. வெறும் கிளாஸ் தான். லேப் செக்சன் நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆரம்பிக்கும்.  அப்புறம் கேன்டீன் இருக்கு. நீங்க எப்ப வேணுமோ அப்ப சாப்பிட்டுக்கலாம். ஸ்டுடென்ட்ஸ் யாரும் அதுக்கு பணம் கொடுக்க வேண்டாம். வேற எதாவது டவுட் இருந்தா கேட்டுக்கோங்க. நாளைல இருந்து நீங்க எம்.பி.பி. எஸ் ல படிச்ச எல்லாத்தையும் ஒரு தடவை ரீகால் பண்ணலாம். ரிஷி அண்ட் ஜான் நீங்க மட்டும் படிச்சு கொஞ்ச இயர் ஆச்சு. ஆனாலும் கவலை இல்லை, உங்களுக்கு தான் ஒர்கிங் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கே. சோ கவலை இல்ல. அப்புறம் லைப்ரரில நீங்க ரெபர் பண்ணிக்கோங்க. ஓகே ஆல் தி பெஸ்ட்.  இப்ப நீங்க கேம்பஸ் சுத்தி பாருங்க. மெய்ன் ஆபிஸ்ல கோர்ஸ் மெட்டீரியல் வாங்கி கோங்க. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

அடுத்து ஜானும் ரிஷியும் எழுந்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அருந்ததி சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்தார்கள்.

 

கிளம்பும் போது தன்னுடைய வீட்டுக்கு ரிஷியை அழைத்தான் ஜான்.

 

“இன்னொரு நாள் வரேன்”, என்று சொன்னவுடன் ஜான் கிளம்பி விட்டான்.

 

“லைப்ரரி மட்டும் போய் பார்க்கலாம்”, என்று நினைத்து உள்ளே போன ரிஷி  அங்கேயே சிறிது நேரம் மூழ்கி விட்டான்.

 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் கண்ணில் அங்கு சென்று கொண்டிருந்த அருந்ததி சிக்கினாள். உடனே அவளை அழைத்தான் ரிஷி.

 

“ஹெலோ மேம்”, என்ற குரலில் திரும்பி பார்த்த அருந்ததி ரிஷியை பார்த்து புருவம் உயர்த்தி விட்டு “ஹாய் ரிஷி, கால் மீ அரு, ஆர் அருந்ததி. டோன்ட் கால் மீ மேம்”, என்று ஆரம்பித்து அவன் அழைத்த காரணத்தை கேட்டாள்.

 

“யு ஆர் இன்ஸ்பைரிங் மீ”, என்று ஆரம்பித்து “என்னை விட கம்மியான வயசுல எங்களுக்கே கிளாஸ் எடுக்க வந்தது எனக்கு ஆச்சர்யமாகவும்  அதே நேரம் பொறாமையாவும் இருக்கு”, என்று ஒரு பிரமிப்புடன் கூறினான்.

 

சாதாரணமாக கவனித்து கொண்டிருந்தவள் அவனுடைய பேச்சில் கவர பட்டு புன்னகையுடன் அவன் பேச்சை கேட்டு கொண்டிருந்தாள். “இங்க படிச்சதுனால தான் என்னால என் திறமையை வளத்துக்க முடிஞ்சது. எனக்கு ரிசர்ச் சைட் அவ்வளவு இன்டெரெஸ்ட் இல்லை. அதனால டீச்சிங் ப்ரொபெஸன் எடுத்தேன். மித்த படி புகழ்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை ரிஷி, ரிஷி தான உங்க பேரு?”, என்று தமிழிலே பேசினாள்.

 

அவள் பேச்சை கேட்டு வியப்பாக பார்த்தான் ரிஷி. “என்ன இப்படி பாக்குறீங்க?”, என்று கேட்டாள் அருந்ததி.

 

“இல்லை என்னை எப்படி தமிழன்னு கண்டு பிடிச்சீங்க? என்னோட ஓட்ட இங்கிலீஸ் வச்சா?”

 

“நோ நோ, உங்க இங்கிலிஷ் வெல். அப்புறம் கிளாஸ் வரதுக்கு முன்னாடி ஸ்டுடண்ட்ஸ் லிஸ்ட் பாத்ததுல டீடெயில்ஸ் பாத்தேன். தமிழனுக்கு தமிழனை பாத்தா பிடிக்காம இருக்குமா? சோ உங்க டீடெயில்ஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகிட்டு. எதனால இத்தனை வருஷ கேப்? யு ஜி முடிச்ச உடனே பண்ணிருக்கலாமே”

 

“அதெல்லாம் பெரிய கதை. அப்புறம் சொல்றேன். நீங்க எங்கயோ கிளம்புறீங்க போல?”

 

“யா, என்னோட கைடு வர சொல்லி இருந்தார். விசிகன் அவர் பேர். நம்ம டிபார்ட்மென்ட் ஹெட் தான். உங்க பீல்டுல நீங்க என்கிட்ட, இல்லைன்னா அவர் கிட்ட டவுட் கேட்டுக்கலாம்”

 

“டவுட் வந்தா இப்போதைக்கு உங்களையே  கேக்குறேன். ரிசர்ச் எப்படி ஸ்டார்ட் பண்ண தெரியலை. நீங்க கைட் பண்ண முடியுமா?”

 

“கண்டிப்பா பண்றேன் ரிஷி, நாளைல இருந்து டிஸ்கஸ் பண்ணலாம். பர்ஸ்ட் நம்ம டாபிக்ல எது ரிலேட்டடா உங்களுக்கு இன்டெரெஸ்ட்ன்னு சர்ச் பண்ணுங்க. டவுட்னா கேளுங்க. என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க “, என்று சொல்லி நம்பர் கொடுத்தவள் அவன் எண்ணையும் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றாள்.

 

அவனும் சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். பின் வெளியே வந்தவன் வேதாவை அழைத்தான்.

 

“ஏய் என்ன டா மணி பதினொன்னு தான் ஆகுது. அதுக்குள்ளே பண்ணிட்ட? கிளாஸ் இல்லையா? என்று கேட்டாள் வேதா.

 

“இல்லை டி. நாளைல இருந்து தான் இருக்குமாம். லைப்ரரி போய் பாத்துட்டு வந்தேன். அப்புறம் என்ன செய்ய தெரியலை. அதான் உனக்கு கால் பண்ணேன்”

 

“ஓ, இன்னும் டைம் இருக்கே. நீ ஹாஸ்டல் போறியா?”

 

“அங்க சரி போர். நீ லீவ் போட்டுட்டு வரியா?”

 

“என்ன லீவா?”

 

“ரொம்ப வேலை செய்ற மாதிரி சீன போடாத டி”

 

“எருமை, சரி நீ அப்ப என்னோட ரூம்ல வெயிட் பண்ணு. நான் ஒரு மணி நேரத்துல வரேன்”

 

“ஹ்ம்ம் சரி வேதா. ரூம் கீ எங்க இருக்கும்?”

 

“கீ தேவை இல்லை டா. ரிஷின்னு பாஸ்வார்ட்  அடி. ஓபன் ஆகிரும்”

 

“ஓ ஓகே டி. சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் ஒரு டேக்சி பிடித்து அவளுடைய அறைக்கு போனான்.

 

பாஸ் வேர்ட் போடும் போது “இதுல கூட என்னை தான் நினைச்சிப்பியா வேதா?”, என்று எண்ணி கொண்டே அவன் பெயரை அடித்தான்.அதுவும் திறந்து கொண்டது.

 

ரூமுக்குள் சென்றதும் அவளுடைய வாசனையை ஆழ்ந்து அனுபவித்தவன் கதவை அடைத்து விட்டு அங்கிருந்த அனைத்து பொருள்களையும் பார்த்து கொண்டிருந்தான்.

 

அறையில் பெரிதாக ஒன்றும் இல்லை. உடைகள், மேக்கப் ஐட்டங்கள் ஒரு கரண்ட் அடுப்பு, அதன் அருகே சில பாத்திரங்கள், ஒரு கட்டில், ஒரு டேபிள், இரண்டு சேர் இருந்தது. கூடவே  ஒரு அட்டாச் பாத்ரூமும்.

 

இவனுடைய ஹாஸ்டல் அறையை காட்டிலும் சிறியதாக தான் இருந்தது.

 

அந்த கட்டிலில் அமர்ந்தவன் அவள் படுக்கும் தலையணையில் முகத்தை புதைத்தான்.

 

இன்னும் அவள் வாசனை அவனுக்குள் செல்வது போல இருந்தது.

 

“இந்த ஒரு ஜென்மத்துல மட்டும் இல்லை டி. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை மட்டும் தான் பொண்டாட்டியா கடவுள் கிட்ட கேப்பேன். அவரே கன்ப்யூஸ் ஆக போறாரு பாரு”, என்று வாய் விட்டே புலம்பியவன் அவளை பற்றிய நினைவுகளுடனே உறங்கி போனான்.

 

வேலை முடிந்து வந்த வேதாவோ அறையை திறந்து உள்ளே வந்தாள். அவளுடைய தலையணையை கட்டி அணைத்து குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவனை பார்த்து அவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது. அவன் அருகில் சென்றவள் மெதுவாக அவன் தலையை கோதி கொடுத்தாள்.

 

பின் தன் கையை எடுத்து விட்டு ரிஷி ரிஷி என்று எழுப்பினாள்.

 

கண் விழித்த ரிஷியோ தூக்க கலக்கத்துடன் அவளை பார்த்தான். அது மட்டுமல்லாமல் “ஏண்டி எழுப்புன?”, என்று கேள்வி வேறு கேட்டான்.

 

அவனை முறைத்தவள் “வேண்டுதல்”, என்றாள்.

 

“ப்ச் போடி, செம கனவு தெரியுமா? நீ கெடுத்துட்ட”

 

“அப்படி என்ன கனவு சாருக்கு?”

 

“நீ அப்படியே எனக்கு தலையை தடவி கொடுத்துட்டே இருந்தியா? அப்படியே சுகமா இருந்துச்சு?”, என்று அவன் சொன்னதும் “அப்பாடி கனவுன்னு நினைச்சிட்டான்”, என்று நினைத்து வெளியே கிளம்ப ஆயத்தமானாள்.

 

“ஏய் லூசு வேதா நான்  சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ கண்டுக்காம போற?”, என்று கேட்டான் ரிஷி.

 

“நீயே அது வீணா போன கனவுன்னு சொல்லிட்ட? பிறகு என்ன?”

 

“பிறகு என்னவா? கனவு போனா போகுது. நான் நிஜத்துலே கோதி விடுறேன்னு சொல்லலாம்ல டி?”

 

“ஹா ஹா, இந்த ஆசை வேற இருக்கா? கனவுகள் எப்போதும் நிஜமாகும்னு அறிஞர்கள் சொல்லிருக்காங்க மிஸ்டர் ரிஷிவர்மன். ஆனால் கற்பனை கனவுகள் நிஜமாகாது. தேவை இல்லாம வெட்டி பேச்சு பேசாம எந்திருச்சு கிளம்பு, வெளிய போலாம்”, என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்று விட்டாள் வேதா.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement