Advertisement

அத்தியாயம் 10

 

என்னை அழகான

சிற்பமாக செதுக்கும்

உளியாக நீ

இருப்பாயானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

ரிஷி சொன்னதை கேட்ட சுஜாதா “இதுக்கா இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு திரியுற? நோயாளிங்க  கூட ரிஷி டாக்டருக்கு என்ன ஆச்சு? எங்க கிட்ட சரியாவே பேச மாட்டிக்கார்ன்னு கேக்காங்க?”, என்று சிரித்தாள்.

 

“ப்ச், நீ என்ன சுஜி சிரிக்கிற? என் நிலைமை எனக்கு தான் தெரியும். அவளை பாத்ததுல இருந்து இப்ப வரைக்கும் அவ கூட பேசாம இருந்தது இல்லை தெரியுமா? கண்டிப்பா அவளும் பீல் பண்ண தான் செய்வா. என்னாலயும் சுத்தமா அவ இல்லாம இருக்க முடியலை. என்ன செய்யன்னே தெரியலை”, என்று பாவமாக சொன்னான் ரிஷி.

 

“டேய், நீ எந்த காலத்துல இருக்க?”, என்று மறுபடியும் சிரித்தாள் சுஜாதா.

 

“கடுப்பை கிளப்பாத சுஜி. என்னை பாத்தா உனக்கு சிரிக்கிற மாதிரி இருக்கா? நல்லா தூங்கி எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியுமா டி? வீட்ல எல்லாருமே அவ நினைப்பாவே தான் இருக்கோம். எத்தனை மெயில் அனுப்பிட்டேன். ஆனா அவ ரிப்லை பண்ணவே இல்லை. எனக்கு என் வேதா வேணும்”

 

“என்னோட பையன் எனக்கு அந்த பொம்மை வேணும்னு கேக்குற மாதிரி இருக்கு, நீ கேக்குறது”

 

“ப்ச்”

 

“என்ன சலிச்சிக்குற?”

 

“போ சுஜி”

 

“இங்க இருந்துட்டு வேதா வேணும்னு கேட்டா எப்படி டா கிடைப்பா?”

 

“அது தான் எனக்கும் தெரியுமே? அவளை பாக்க முடியாம தான் தவிச்சிட்டு இருக்கேன்”

 

“அடேய் லூசு,  ஒரு என்ஜினீயர் பாரின் கிளம்பினா ஒரு டாக்டரா உன்னால அவ பின்னாடியே போக முடியாதா என்ன? அங்க போய் நீ வேணும்னு சொல்லு டா”

 

“சுஜிஜிஜிஜிஜி”

 

“என்ன சுஜி? அவளை தேடி போறதை  விட்டுட்டு இங்க இருந்து பினாத்திக்கிட்டு  இருக்க? இந்நேரம் நீ அவ கூட இருந்திருக்க வேண்டாமா? அவ கோப பட்டாலும் நீ தான் அவ பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு அவளை சமாதானம் செய்யணும். இங்க இருந்து கிட்டு என் சோக கதையை கேளு, தாய் குலமேன்னு பாடிட்டு இருக்க?”

 

“நீ சொல்றது நல்ல ஐடியா தான். ஆனா அவ வேலை விசயமா போயிருக்கா டி. அப்புறம் எப்படி அவ பின்னாடியே அலைஞ்சு சமாதான படுத்த? எனக்கு ஒர்க் இங்க இருக்கு. நான் எப்படி பாரின் போறது? சும்மா அவ முன்னாடி போய் நின்னா ஒரே நாள்ல எல்லாம் அவ சமாதானம் ஆக மாட்டா சுஜி”

 

“உன்னை யாரு சமாதானம் பண்றதுக்கு போக சொன்னது?”

 

“பின்ன?”, என்று குழப்பமாக கேட்டான் ரிஷி.

 

“லூசு, வெறும் எம். பி. பி. எஸ் டிகிரி வச்சிக்கிட்டு என்ன பண்ண போற? எனக்கு கல்யாணம் ஆகிறுச்சு. பொண்ணா இதுக்கு மேல நான் படிச்சு என்ன செய்ய போறேன்? எனக்கு இந்த போஸ்ட் ஓகே. ஆனா நீ இப்படியே இருக்க போறியா? ஒரு தடவை என்கிட்டே நீ பெரிய சர்ஜன் ஆகணும்னு சொல்லிட்டு இருந்த தான? அப்புறம் என்ன? அது விசயமா போக வேண்டியது தான? படிப்புக்கு படிப்பும் ஆச்சு. காதலுக்கு காதலும் ஆச்சு”

 

“ஏய், சூப்பர் சுஜி. தேங்க்ஸ் டி”

 

“அதை நீயே வச்சிக்கோ, அப்புறம் உடனே எம். எஸ் க்கு  ஆன்லைன்ல அப்ளை பண்ணு. உன் மார்க், அப்புறம் எக்ஸ்பீரியன்ஸ்க்கு  கண்டிப்பா கிடைக்கும். இப்ப அவாய்லபிலிட்டி இருக்குனு கேள்வி பட்டேன். இனி தான இந்த இயர்க்கு கோர்ஸ் ஆரம்பிக்கும்? அப்ளை பண்ணு டா”

 

“தேங்க்ஸ் மா. இது எனக்கு தோணவே இல்லை. இது மட்டும்  இல்லை. எதுவுமே தோணலை. இப்ப தான் ரிலாக்ஸ்சா இருக்கு. இன்னைக்கே அப்ளை பண்றேன். பாய்”, என்று துள்ளி குதித்து கொண்டு ஓடினான்  ரிஷி.

 

பழைய ரிஷியை பார்த்து விட்ட சந்தோஷத்தில் தன் வேலையை தொடர்ந்தாள் சுஜாதா.

 

இத்தனை நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு துள்ளி குதித்து வந்த ரிஷியை பார்த்து சாருலதா கண்களில் சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.

 

“ஏங்க, இங்க பாருங்களேன். நம்ம ரிஷியை?”, என்று சோமுவிடம் காட்டினாள். அவருக்கும் சந்தோசமாக இருந்தது.

 

“டேய், என்ன ஆச்சு டா? இத்தனை நாள் கழிச்சு உன் முகத்துல ஒளிவட்டம் தெரியுது?”, என்று கேட்டாள் சாரு.

 

“ஒண்ணும் இல்லை மா. சும்மா தான்”, என்றான் ரிஷி.

 

“நம்புற மாதிரி இல்லையே. என்னனு சொல்லு, ஒழுங்கா”

 

“எனக்கு சில லட்சம் பணம் தேவையா இருக்கும் மா”

 

“பணம் தான? உங்க அப்பா எதுக்கு இருக்காரு? அவர் அதை ரெடி பண்ணுவார்”

 

“என்னது லட்ச கணக்குலயா?”, என்று இதயத்தில் கையை வைத்த சோமு மனைவியையும் மகனையும் அதிர்ச்சியாக பார்த்தார்.

 

“அவர் கிடக்குறார் ரிஷி. பணமெல்லாம் ஏற்பாடு செஞ்சிரலாம்? எதுக்கு பணம்? கிளினிக் வைக்க போறியா?”, என்று கேட்டாள் சாருலதா.

 

“கிளினிக் வைக்கிற அளவுக்கு நான் இன்னும் பெரிய மனுசனா ஆகல. நான் ஹையர் ஸ்டடிஸ்  பண்ண போறேன். அதுக்கு தான்”

 

“படிக்கவா? நல்ல விசயம் தான். டெல்லி சைட் எதாவது யூனிவர்சிட்டி பாரு டா”, என்றார் சோமு.

 

“இங்க எல்லாம் வேண்டாம். நான் பாரின்ல படிக்க போறேன் பா”

 

“என்னது பாரினா? அட பாவி, என் பணமெல்லாம் கரையுமே? இப்ப என்ன திடிர்னு இந்த யோசனை?”

 

“எதுக்குன்னா? என்னோட வேதாவை பிரிஞ்சு என்னால  இருக்க முடியலை. அதனால அவளை பாக்க போறேன்”

 

“அடேய், நீ லவ் பண்றதுக்கு என்னோட பணம் தான் கிடைச்சதா?”

 

“அப்பா, நீங்க சேத்து வச்சிருக்குற சொத்து எனக்கு தான? அப்புறம்  என்ன?”

 

“ஹா ஹா, பொழைச்சிக்குவ டா. சரி வேதா இருக்குற இடம் தெரியுமா?”

 

“அதை கண்டு பிடிக்கிறது பெரிய விசயமா? அவ ஆபிஸ் பேரை வச்சே கண்டு பிடிச்சிரலாம். நான் இன்னைக்கே அதை கண்டு பிடிச்சிருவேன். இருங்க நான் அத்தை மாமாகிட்ட சொல்லிட்டு வரேன்”, என்று வேதா வீட்டுக்கு சென்றவன் “நான் உங்க பொண்ணை  தேடி போக போறேன் அத்தை”, என்றான்.

 

அதை கேட்டு அவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது. “சந்தோசமா போய் அவளை தர தரன்னு இழுததுட்டு வா ரிஷி”, என்றாள் சீதா.

 

“இழுத்துட்டு வர மாட்டேன். என் பொண்டாட்டியை அப்படியே தூக்கிட்டு வருவேன். ஆனா மூணு வருஷம் கழிச்சு தான்”

 

“என்ன ரிஷி சொல்ற?”, என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

 

“நான் ஹையர் ஸ்டடிஸ் பண்ண போறேன். வேதா இருக்குற நாட்டுல போய் படிச்சிட்டு அவளையும் கடத்திட்டு தான் இந்தியா வருவேன்”, என்று சொல்லி விட்டு  சிரித்து கொண்டே வேதாவின் அறைக்கு சென்றவன் அவளுடைய அறையை குடைந்து ஜெகனின் நம்பரை எடுத்தான்.

 

பின் அவனை அழைத்து அவளை பற்றி விசாரித்தான்.

 

ஜெகனுக்கு ரிஷி மேல் உள்ள கோபத்தால் தான் வேதா  பாரின் கிளம்பி போனாள் என்று தெரியும். ஆனால் எதனால் கோபம் என்று தெரியாது.

 

அதனால் “ஹாய் ரிஷி, எப்படி இருக்கீங்க?”, என்று ஆரம்பித்து அவள் இருக்குமிடம் அனைத்தையும் சொன்னான். அது மட்டுமில்லாமல் “எனக்கு ஆபிஸ் அட்ரஸ் தெரியும். ஆனா அவ எங்க தங்கி இருக்கான்னு தெரியாது. ஆபிஸ்ல கேட்டீங்கன்னா கண்டு பிடிச்சிரலாம். நான் வாட்சப்ல ஆபிஸ் அட்ரஸ்  அனுப்புறேன். நீங்களாவது போய் அவளை கூட்டிட்டு வாங்க. மேடம் சரியாவே இல்லை. எங்க யாரோடவும் பேசுறதே இல்லை”, என்றான் ஜெகன்.

 

“தேங்க்ஸ் ஜெகன். கண்டிப்பா சரியாருவா”, என்று சிரித்தான் ரிஷி.

 

“ஆமா, எதனால உங்க மேல கோபா இருக்கா?”

 

“எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க இருந்தது. ஆனா அது நான் மூணு வருசம் அப்புறம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன். அதான் கோப பட்டு போய்ட்டா”

 

“ஓ”, என்று சொன்ன ஜெகனுக்கு வேதாவின் வலி புரிந்தது. நிராகரிப்பின் வலியை அவன் அனுபவித்தது தான?

 

“அவ கோபத்தை சரி செஞ்சிருவேன் ஜெகன். அப்புறம் அங்கேயே எம். எஸ் பண்ணலாம்னு இருக்கேன்”

 

“ஓகே ரிஷி, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி கேப்பியா இருக்கணும். அது தான் எங்க ஆசையும். நான் இப்ப டீடெயில்ஸ் அனுப்புறேன்?”

 

“ஓகே ஜெகன் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

 

பின் அவன் அட்ரஸ் அனுப்பியதும் இடத்தை குறித்து கொண்டவன் அவள் இருக்கும் நாட்டில் உள்ள யுனிவர்சிட்டியில் மேல் படிப்புக்காக பதிவு செய்தான்.

 

அடுத்து வந்த ஒரு வாரமும் அனுப்பிய அப்ளிகேஷனுக்கு பதில் வருமா என்ற எதிர்பார்ப்பிலே கழிந்தது.

 

அங்கிருந்து மெயில் வந்ததும் துள்ளி குதித்தவன் அடுத்த இரண்டு வாரத்தில் விமானத்தில் ஏறி விட்டான். பெற்றவர்களும் ஆனந்தமாகவே வழி அனுப்பி வைத்தார்கள்.

 

விமானத்தில் இருந்து இறங்கியதும் ஒரு ஹோட்டலுக்கு சென்றவன் அங்கே சென்று குளித்து முடித்து விட்டு நேராக அவனுக்கு சீட் கிடைத்த யுனிவர்சிட்டியை அணுகினான்.

 

அங்கே பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்தவன் அங்கே தங்க ஹாஸ்டலுக்கும் சேர்த்து அட்மிசன் போட்டான்.

 

பின் ஹாஸ்டல் சென்று அறைக்குள் அனைத்தையும் வைத்தவன், அடுத்த நிமிடமே ஒரு டேக்சி பிடித்து அவளுடைய ஆஃபீஸ் நோக்கி சென்றான்.

 

அவன் அங்கே செல்லும் போது மணி  நான்கு ஆகி இருந்தது. இந்நேரம் அவ இங்க இருப்பாளா மாட்டாளான்னு தெரியலையே?”, என்று நினைத்து கொண்டே அங்கிருந்த பெண்ணிடம் விசாரித்தான்.

 

அவளோ, “வேதா ஷிபிட் முடிந்தது”, என்று சொன்னதும் அவளிடமே வேதா தங்கி இருக்கும் இடத்தை பற்றி விசாரித்தான். அவள் அட்ரஸ் தந்ததும் சந்தோசத்துடன் வேதாவை பார்க்க அவளுடைய வீட்டுக்கு சென்றான்.

 

பின் அவள் அறையை கண்டு பிடித்து அவள் அறை கதவை ஒரு வித படபடப்புடன்  தட்டினான்.

 

மூன்று மணி போல் தான் வேலை முடிந்து வந்தாள் வேதா. பின் எதுவும் செய்ய தோன்றாமல் படுத்து விட்டாள்.

 

இரண்டு மணி நேரம் அடித்து போட்ட படி உறங்கி கொண்டிருந்தவள் யாரோ ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள்.

 

தூக்க கலக்கதோடு எழுந்து அமர்ந்தவள்  “யாரு கூப்பிடுறா? பக்கத்து ரூம்ல இருந்து யாராவது தட்டுறாங்களோ?”, என்று நினைத்து கொண்டே  கதவை திறக்க சென்றாள்.

 

தன்னுடைய அரைகுறை உடையை பார்த்தவள் “இப்ப வரேன்”, என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு வேறு உடையை மாற்றினாள்.

 

உள்ளே இருந்து வந்த வேதாவின் குரலில் உயிர்த்தான் ரிஷி. கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது, அவள் குரலை கேட்டு.  அவளுடைய குரலில் அவன் இதயமே அதிர்ந்தது.

 

“வேதா வேதா”, என்று நினைத்து கொண்டே அவன் இதயம் வேகமாக துடித்தது. “என்னை பாத்த உடனே எப்படி முழிப்பா? கண்டிப்பா நான் இங்க வருவேன்னு எதிர் பார்த்திருக்கவே மாட்டா”, என்று நினைத்து கொண்டே அவளுடைய தரிசனத்துக்காக ஆவலாக காத்திருந்தான்.

 

உடையை மாற்றி விட்டு கதவை திறந்தவள் அவனை சாதாரணமாக பார்த்து  “போ உனக்கு வேலையே இல்லை. என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா டா?”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.

 

எதை எதையோ எதிர் பார்த்து காத்திருந்த ரிஷி, இந்த வரவேற்பில் நொந்து போனான். பின் அவள் இதை கனவு என்று நினைத்து உளறுகிறாள் என்று எண்ணி முகம் முழுவதும் சிரிப்புடன் “ஹாய் செல்ல குட்டி”, என்று கை அசைத்த படி அறைக்குள் நுழைந்தான் ரிஷி.

 

“இது என்ன கனவு இப்படி எல்லாம் வருது?”, என்று வாய் விட்டு புலம்பிய படியே  திரும்பி அவனை பார்த்தாள்.

 

“ஏய் லூசு, இது கனவு இல்லை டி”, என்று அவன் சொன்னதும் கண்களை கசக்கி கொண்டு மறுபடியும் பார்த்தாள்.

 

அவள் கோலத்தை பார்த்தவன் கதவை அடைத்து விட்டு அவள் அருகே சென்று நின்றான். திகைத்து போய் அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் வேதா.

 

அவள் திகைப்பை கண்டு ஒரு புன்னகையை சிந்திய ரிஷி “இப்ப இது கனவு இல்லைன்னு நிரூபிக்கவா?”, என்று சொல்லி கொண்டே  அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

எதுவும் தோன்றாமல் சிலை என நின்றாள் வேதா. அவனுக்கோ இத்தனை நாள் பார்க்காத ஏக்கம், அவளுடைய கோபம், பிரிவு, அவள் நினைவு என வாட்டி வதக்கி இருந்ததால் அவளை இனி விலகவே கூடாது என்று எண்ணி அவளை இறுக்கி அணைத்தவன் அவளுடைய உதடுகளை சிறை செய்தான்.

 

அதிர்ச்சியில் விழி விரித்து நின்ற வேதா கண்கள் சொருக அப்படியே மயங்கினாள். எதிர்பாராமல் நடந்த அவனுடைய வருகை, கனவா நினைவா என்று தெரியாத முத்தம் என அனைத்தும் அவளை நிலை குலைய வைத்தது.   

 

இது தெரியாமல் அவள் உதட்டில் தொலைந்திருந்தவன் அவள் தலை சாயவும் தான் சுயநினைவுக்கு வந்தான். இப்போது அதிர்ச்சியாக முழிப்பது ரிஷியின் முறையானது.

 

அதிர்ச்சியில் அவள் இருப்பது அவனுக்கு தெரியும் தான். ஆனால் இப்படி மயங்கி விழும் அளவுக்கு போவாள் என்று அவனே எதிர்பார்க்க வில்லை.

 

கைகளில் இருந்து நழுவி கொண்டிருந்தவளை அப்படியே கைகளில் அள்ளியவன் அவளுடைய படுக்கையில் அவளை கிடத்தினான்.

 

பின் அவளையே ரசித்த படி அவள் அருகில் அமர்ந்தவன் இத்தனை நாள் பார்க்காததை ஈடு கட்டும் வகையில் இமைக்க மறந்து பார்த்து கொண்டே இருந்தான்.

 

சுவாசத்தால் அவள் மார்பு மட்டும் ஏறி இறங்கி கொண்டிருந்தது. மற்ற படி அசைவில்லாமல் படுத்திருந்தாள்.

 

“என்னை பத்தி மட்டும் தான் நீ நினைப்பன்னு தெரியும். என்னை பத்தியே  நீ கனவு கண்டுட்டு இருக்குறதுனால தான நான் நிஜத்தில் வந்ததை கூட உன்னால நம்ப முடியலை. அப்படி பாசம் வச்சிருக்க? அப்புறம்  ஏண்டி உனக்கு எதுக்கு இந்த வெட்டி வீராப்பு? பாரு கழுத்து எலும்பு எல்லாம் தெரியுது? சாப்பிடாம கிடந்துருக்க என்ன?”, என்று வாய் விட்டே புலம்பியவன் அவளுடைய தலையை வருடி விட்டான்.

 

“ஒரு முத்தத்தை கூட ஒழுங்கா கொடுக்க விடுறாளா? கண்ணு முழிச்சு என்னை பாத்தா இப்ப காட்டு கத்து கத்துவா”, என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது.

 

“போதும் அவளை ரசிச்சது.  முதல்ல மயக்கத்துல இருந்து அவளை எழுப்பு”, என்று குரல் கொடுத்தது மனசாட்சி.

 

அங்கிருந்தே கையை மட்டும் நீட்டி அருகில் இருந்த தண்ணீரை எடுத்தவன் அவள் முகத்தில் தெளித்தான்.

 

மெதுவாக கண்களை திறந்தாள் வேதா. எதிரில் அவனை கண்டதும் அதிர்ச்சியாக முழித்தாள்.

 

“இப்ப எப்படி ரியாக்ட் பண்ணுவா?”, என்று நினைத்து ஒரு எதிர்பார்ப்போடு அவளையே பார்த்து கொண்டிருந்தான் ரிஷி.

 

ஆனால் அவளோ “ரிஷி”, என்று கூவலோடு அவன் கழுத்தை கட்டி கொண்டாள். அவளிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை அவன் எதிர்பார்க்க வில்லை. ஒரு நொடி திகைத்த ரிஷி அடுத்த நொடி அவளை அணைத்து கொண்டான்.

 

அவன் தோள் வளைவில் முகம் புதைந்திருந்த வேதாவோ “ரிஷி, ரிஷி ஏன் டா என்னை தனியா விட்ட? எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நீ இல்லாம நான் நல்லாவே இருக்க மாட்டேன்னு தெரியும் தான? அப்புறம் ஏன் என்னை போக விட்ட? நான் கிளம்பும் போதே என்னை தடுத்துருக்கலாம்ல? இங்க வந்து நான் நானாவே இல்லை தெரியுமா? என்னால ஒழுங்கா சாப்பிட கூட முடியலை. எப்ப பாத்தாலும் உன்னோட நினைப்பு தான். இப்ப நீ என்னை இவ்வளவு தூரம் தேடி வருவேன்னு நான் நினைக்கவே இல்லை தெரியுமா டா?  எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு. என் ரிஷி எனக்கு கிடைச்சிட்டான். இனி உன்னை விட்டு இருக்கவே மாட்டேன். நீ ஏன் டா இவ்வளவு நாள் கழிச்சு வந்த? முன்னாடியே வந்துருக்கலாம்ல?”, என்று கண்களை மூடி புலம்பி கொண்டே இருந்தாள்.

 

அவள் முதுகை நீவி விட்டு கொண்டே அவளை அமைதி படுத்த முயன்றான்.

 

கொஞ்சம் அவள் அழுகை குறைந்ததும் அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளுடைய கண்ணீரை துடைத்து “இப்படியா டி அழுவ?”, என்று கேட்டான்.

 

“நீ இல்லைன்னா நான் அழ தான செய்வேன்?”, என்று அழுது கொண்டே சிரித்தாள் வேதா.

 

அவள் நெற்றியில் இதழ் பதித்த ரிஷி, பின் ஒரு வேகத்துடன் அவள் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தான். அவன் முத்தத்தை அவளும் ரசித்த படி இருந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து அவள் கண்களை பார்த்தவன் “நானும் நீ இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் டி”, என்றான்.

 

அவன் காதலில் கரைந்த வேதா “சரி சரி எனக்கு அம்மா, அப்பாவை பாக்கணும். அத்தை மடில தூங்கணும். மாமா கூட விளையாடணும். கல்யாணத்தை வேணும்னா மூணு வருஷம் கழிச்சே வச்சிக்கலாம். இங்க வேண்டாம். வா, போய் டிக்கட் இருக்கான்னு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு  அவனிடம் இருந்து விலகினாள்.

 

“ஐயையோ! இவ என்ன இப்படி உடனே சமாதானம் ஆகிட்டா? இப்ப உடனே கிளம்பி போனா, எம். எஸ் எப்படி படிக்கிறது?”, என்று திருதிருவென்று விழித்தான்.

 

“என்ன டா முழிக்கிற? உனக்கு உடனே போக கஷ்டமா இருந்தா சொல்லு. நாம ஒரு வாரம் வேணா இங்க சுத்தி பாத்துட்டு இந்தியா போகலாம். நீ இல்லாம நான் எந்த இடமும் இது வரை பாக்கலை தெரியுமா?”, என்றாள் வேதா.

 

“இல்லை டி, வேதா. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”

 

“என்ன சொல்லணும்? சரி அதெல்லாம் அப்பறம். முதலில் டிக்கட் போட்டா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”

 

“வேதா, நாம இப்ப இந்தியா போகல”

 

“சரி அடுத்த வாரம் ஓகே வா?”

 

“அடுத்த வாரமும் இல்லை. இனி மூணு வருஷம் நீ இங்க தான் இருக்கணும்”, என்று ரிஷி சொன்னதும் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் வேதா.

 

“இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற போகுது”, என்று நினைத்து கொண்டு பாவமாக அவளை பார்த்தான் ரிஷி.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement