Advertisement

அத்தியாயம் 19

 

உன் ஒற்றை

வார்த்தையை அழகான

கவிதை என்று எண்ணி

வாழும் நொடிக்காக

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

எட்டு மணிக்கே வேதா படுத்து விட்டதால் ஒரு பத்து மணி போல் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது. இரவு எதுவும் சாப்பிடாததால் வயிறு பசியில் ஓலமிட்டது.

 

புரண்டு புரண்டு பார்த்தவள் தூக்கம் வராமல் எழுந்து வெளியே வந்தாள். ஆங்காங்கே அருந்ததியின் உறவினர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள் .

 

மெதுவாக கீழே இறங்கி வந்தவள் நேரடியாக சமையல் அறைக்கு சென்றாள்.

 

அவளை பார்த்ததும் சமையல் காரன் சாப்பாடு எடுத்து கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லி அதை வாங்கி கொண்டவள் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டாள்.

 

அதன் பின் தான் ரிஷியின் நினைவே வந்தது. “இன்னைக்கு யாருமே சாப்பிடலை. என்னை தவிர?”, என்று நினைத்து கொண்டு கையை கழுவி விட்டு மேலே வந்தாள்.

 

அப்போது வசந்த் மாடிக்கு ஏறி செல்வது கண்ணில் பட்டது. ஏற்கனவே அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருந்ததால் “இப்ப பேசலாம்”, என்று நினைத்து அவன் பின்னே சென்றாள்.

 

கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பின் “வீட்ல இத்தனை பேர் தூங்காம தான இருக்காங்க. எதாவது ஆபத்துனா கண்டிப்பா காப்பாத்துவாங்க”, என்று முடிவெடுத்து சென்றாள்.

 

இவள் மேலே சென்ற போது, வசந்த் புகை பிடித்து கொண்டே வானத்தை பார்த்து கொண்டிருந்தான்.

 

அந்த காட்சியை பார்த்த வேதா, “எப்படி இயற்கையை ரசிச்சிட்டு இருக்கான்? இவன் எப்படி கெட்டவனா இருக்க முடியும்? கண்டிப்பா, பேசுனா அருந்ததியை விட்டு போயிருவான். போய் பேசலாம்”, என்று நினைத்து கொண்டு அவன் அருகில் சென்றவள் “ஹலோ”, என்று அழைத்தாள்.

 

அந்த நேரத்தில் அப்படி ஒரு குரலை எதிர்பார்காதவன் அதிர்ந்து திரும்பினான். எதிரில் நின்றவளை கண்டதும் அவன் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் பரபரத்தது.

 

நமக்கு கிடைக்க வேண்டிய பொருள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு உணர்வை அடைந்தான் வசந்த். சத்தியமாக அவளை இந்நேரம்  எதிர் பார்க்கவே இல்லை.

 

அவன் பேயை பார்த்தது போல நிற்பதை பார்த்தவள் ஆங்கிலத்தில் “உங்களிடம் கொஞ்சம் பேசணும்”, என்றாள்.

 

தலை அசைத்து அதற்கு சம்மதம் சொன்னான் வசந்த். “இங்க பாருங்க வசந்த். நீங்க யாருனு எனக்கு தெரியாது. நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க. உங்க கல்யாண விசயத்துல மூக்கை நுழைக்கிறேன்னு நினைக்காதீங்க. அருந்ததி என்னோட பிரண்ட். அவ வேற ஒரு பையனை விரும்புறா. நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க”, என்றாள்.

 

பேச்சில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு அசைவிலும் அவனை கவர்ந்தாள் வேதா. அழகான அந்த சூழ்நிலையில் சிறிது சிறிதாக அவன் மனநிலை மயக்கத்து சென்று கொண்டிருந்தது. அவளை பார்த்து சிரித்தவன் “நிறுத்தலைன்னா ?”, என்று கேட்டான்.

 

“இங்க பாருங்க உங்க நல்லதுக்காக தான் சொல்றேன். வேற பையனை விரும்புற பொண்ணை கல்யாணம் பண்ணா உங்க லைப் நல்லா இருக்காது”

 

“ஓ அப்படியா? அப்ப என்னோட நிலைமை? என்னை யாரு கட்டிப்பா?”, என்று நக்கலாக கேட்டான் வசந்த்.

 

“உங்களுக்கு என்ன? அழகா இருக்கீங்க? பாத்தாலே பணக்காரங்க மாதிரி தெரியுறீங்க. அப்புறம் என்ன? நிறைய பொண்ணு கிடைக்கும். அருந்ததியை விட்டுருங்க”

 

“அழகா இருக்கீங்க”, என்ற அவளுடைய வார்த்தையில் தன்னை அழகனாக உணர்ந்தான் வசந்த். பின் சிரித்து கொண்டே “சரி உங்க பிரண்டோட எனக்கு கல்யாணம் நடக்காது.நான் நிறுத்திருறேன்”, என்றான்.

 

“நிஜமாவா? ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு திரும்ப போனாள்.

 

“அதுக்குள்ள போனா எப்படி? நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல. உன் பிரண்ட் கூட நடக்க இருக்குற கல்யாணம் தான் நிக்கும். ஆனா நம்ம கல்யாணம் நடக்கும்”, என்று சொல்லி அவள் தலையில் குண்டை தூக்கி போட்டான்.

 

“வாட்”, என்று அதிர்ச்சியாக கூச்சலிட்டவளுக்கு “ரிஷி எப்படி இவனை பத்தி சரியா கனிச்சான்?”, என்ற சிந்தனை எழுந்தது.

 

“என்ன அதிர்ச்சி? அருந்ததி கூட இருந்த கல்யாணம் வியாபார சம்பந்த பட்டது. ஆனால் உன்னை பாத்த அப்புறம் எனக்கு உன்னை தவிர வேற எதுவுமே நினைவு இல்லை.எனக்கு நீ வேணும்”, என்று சொன்னான் வசந்த்.

 

“மிஸ்டர் நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியுதா? எல்லாரும் உங்களை பத்தி சொல்லும் போது நான் தான் நல்லவர்னு நினைச்சிட்டேன். இப்ப தான் தெரியுது, எல்லாரும் சொன்னது உண்மைன்னு. உங்க கிட்ட பேசி வேஸ்ட். குட் பை”, என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவளை நெருங்கியவன் அவள் கைகளை பற்றினான்.

 

அதிர்ந்து திரும்பியவள் கையை உதறி விடுவிக்க பாத்தாள். “என்ன முடிவு சொல்லாம போற? எப்ப நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்?”, என்று கேட்டான் வசந்த்.

 

“அதுக்கு வாய்ப்பே இல்லை. கையை விடு. என் ரிஷிக்கு தெரிஞ்சது, உன்னை கொன்னுருவான்”

 

“தேவை இல்லாம எவனையோ பத்தி பேசி என்னை எரிச்சல் மூட்டாத. எனக்கு நீ வேணும்”

 

“அது ஒரு காலத்துலயும் நடக்காது. நீ அருந்ததியையும் கல்யாணம் பண்ண முடியாது”

 

“உன்னை கல்யாணம் பண்ண முடியாது. ஆனா நீ இப்ப இங்க இருந்து எப்படி போறேன்னு பாக்குறேன்”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கினான்.

 

அவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் அவனிடம் இருந்து விடுபட போராடி கொண்டே “கை….. கையை…. எடு. கத்துனா என்ன ஆகும்னு தெரியுமா? உன் மானம் தான் போகும்”, என்றாள்.

 

“இப்ப எப்படி கத்துவேன்னு பாக்குறேன்?”, என்று சொல்லி கொண்டே தன்னுடைய கையால் அவள் வாயை அடைத்தான்.

 

அதிர்ச்சியாக விழித்து கொண்டு தடுக்க முடியாத நிலையில் இருந்தாள் வேதா. இப்படி வந்து இவனிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்த படி “எப்படி தப்பிக்கலாம்?”, என்ற சிந்தனையில் இருந்தாள்.

 

“இந்த மூணு மணி நேரமா . மனசு முழுக்க தீயா எரிஞ்சது. நீ வந்து பேசி அதை அனைச்சிட்ட. இப்ப உடம்புல எரியுற தீயை அணைக்கவும் நீ வேணும்”, என்று சொல்லி கொண்டே அவளை கட்டி பிடிக்க பார்த்தான் வசந்த்.

 

ரிஷி சொல்லியும் கேக்காத மடத்தனத்தை நொந்தவள் அவனை பய பார்வை பார்த்தாள்.

 

மானின் பார்வையோடு மயிலின் அழகோடு இருந்தவள் தன்னுடைய கைக்குள் இருக்கிறாள் என்பதை நம்ப முடியாதவனாக இருந்தான் வசந்த். ஏதோ கை விட்டு போன பொருள் மீண்டு வந்தததை போல அவன் மனதில் நிம்மதி வந்திருந்தது. எத்தனையோ பெண்களை நெருங்கி இருக்கிறான். ஆனால் இப்படி ஒரு உணர்வை அவன் அடைந்ததில்லை.

 

அவனை அறியாமலே ஒரு பரவசம் வந்திருந்தது. அவன் தன்னுடைய நினைவுகளில் மூழ்கி இருந்த தருணத்தை பயன்படுத்தி தன்னுடைய வாயை மூடி இருந்த அவனுடைய கையை நறுக்கென்று கடித்து வைத்தாள் வேதா.

 

“ஆ”, என்று அலறியவன் அவள் தப்பித்து ஓடுவதை அறிந்து அவளை விரட்டினான். அடுத்த நொடி அவனே எதிர்பார்க்காத விபரீதம் நடந்தது.

 

அதே நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்த ரிஷி “வேதா”, என்று அலறிய படி எழுந்தான்.

 

அவனுடைய அலறலில் அருகில் படுத்திருந்த ஜானும் எழுந்து கொண்டான்.

 

“என்ன ஆச்சு ரிஷி?”

 

“தெரியலை. ஒரு கெட்ட கனவு. எனக்கு வேதாவை உடனே பாக்கணும்”

 

“இப்பவா? அவ நல்லா தூங்கிருப்பா”

 

“ஹ்ம்ம், ஆனா பாக்கணும். அப்ப வேற அவளை அடிச்சிட்டேன். இரு அவளுக்கு போன் பண்றேன்”, என்று சொல்லி அவளை அழைத்தான்.

 

ரிங் போய் கொண்டிருந்தது. “ஐயோ எடுக்க மாட்டிக்காளே”,என்று பதட்டமானவன் எழுந்து அவள் அறைக்கு செல்ல கிளம்பினான்.

 

வசந்த் கையில் இருந்து தப்பிக்கணும் என்று எண்ணிய வேதா அவசரமாக காலை எடுத்து வைத்து டெக்கரேஷன் செய்தவர்கள் போட்ட வயர்  தடுக்கி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தாள்.

 

வசந்த் சத்தியமாக இதை எதிர்பார்க்க வில்லை. அவள் விழுந்ததும் கீழே கூச்சல் குழப்பம் ஏற்படுவதை உணர்ந்தவன் இப்போது தான் எட்டி பார்த்தால் நிச்சயம் அனைவருக்கும் சந்தேகம் வரும் என்று  உணர்ந்து  எட்டி பாக்காமல் மாடியில் இருந்து இறங்கி  ஓடினான்.

 

அப்போது தான் வேதாவின் அறைக்கு சென்று கொண்டிருந்த ரிஷியின் மீது மோதி நின்ற வசந்த் அவனை பார்த்து திக் பிரம்மை பிடித்தது போல ஆனான்.

 

“இவன் என்ன இப்படி முழிக்கான்?”, என்று ரிஷி நினைத்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்து ஓடியே விட்டான் வசந்த். குழப்பத்துடன் வேதாவின் அறைக்கதவை தட்டியவனுக்கு அடுத்த அதிர்ச்சியாக அவள் அறை கதவும் தொட்டதும் திறந்து கொண்டது.

 

“கதவை திறந்து வச்சிட்டு என்ன பண்றா?”, என்று எண்ணி கொண்டே உள்ளே போய் அவளை தேடினான். அதற்குள் ஜானும் அங்கே வந்துவிட்டான். இருவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

 

ரிஷிக்கு பதற்றம் தொற்றி கொண்டது. அவசரமாக அவன் வெளியே வரவும் அவர்கள் எதிரே மூச்சு வாங்க அருந்ததி நிற்கவும் சரியாக இருந்தது.

 

அவளை பார்த்து மேலும் குழம்பியவர்கள் கேள்வியாக அவளை பார்த்தார்கள்.

 

“சாரி ரிஷி”, என்றாள் அருந்ததி. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“சாரியா? என்ன ஆச்சு அருந்ததி? எதுக்கு அழுற? நானே உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன். வேதாவை காணும். உன் ரூம்க்கு வந்தாளா?”

 

“வேதா…. வேதா …. வேதா மாடில இருந்து தவறி கீழே விழுந்துட்டா?”

 

“வாட்?”, என்று அதிர்ச்சியாக கத்திய ரிஷி அடுத்த நொடி கீழே ஓடினான்.

 

“இரு ரிஷி. நான் சொல்றதை கேளு”, என்று சொல்லி கொண்டே அவன் பின்னே ஓடி வந்த அருந்ததியை ரிஷியும், ஜானும் கண்டு கொள்ளவே இல்லை.

 

கீழே கூட்டமாக அருந்ததியின் உறவினர்கள் நின்றிருந்த இடத்துக்கு சென்றான். அதற்குள் அவர்களை நெருங்கிய அருந்ததி “வேதாவை அப்பாவும், அண்ணாவும் சேந்து ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க. அவளுக்கு ஒன்னும் ஆகாது. வா நாம போகலாம்”, என்று சொல்லி காரை எடுக்க விரைந்தாள்.

 

கண்களில் நீர் வழிய ஜானின் கையை இறுக்கி பற்றி கொண்டு காரை நோக்கி சென்றான் ரிஷி. இவர்கள் அங்கே சென்ற போது அவள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள்.

 

“அவளை பாக்கணும் அருந்ததி. எதாவது பண்ணு ப்ளீஸ்”, என்று கெஞ்சலுடன் வேண்டினான் ரிஷி.

 

பெரிய டாக்டரிடம் பெர்மிஷன் கேட்டு அவனை உள்ளே அழைத்து சென்றாள் அருந்ததி.

 

அவரும் அவர்களை உள்ளே அனுப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த வேதாவை பார்த்தவனின் உயிரே அவனை விட்டு சென்றது போல உணர்ந்தான்.

 

“இது தான் எங்களுக்கு நீ வைக்கும் பரிட்சையா? இப்படி என் வேதாவை நீ வதைப்பன்னு தெரிஞ்சிருந்தா உங்கிட்ட மறுபிறவியே கேட்டிருக்க மாட்டேனே”, என்று மானசீகமாக கடவுளிடம் பேசியவன் அவளை தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடினான்.

 

அவன் நிலை அறிந்து அவனை வெளியே அழைத்து வந்து விட்டாள் அருந்ததி.

 

உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷி. தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்ற பட்டாள் வேதா.

 

“இப்போதைக்கு ஆபத்து இல்லை. ஆனால் அவங்க கண்ணு முழிச்ச பிறகு தான் நிலைமை என்னன்னு  சொல்ல முடியும்”, என்று குண்டை தூக்கி போட்டார் மருத்துவர். அப்படியே நாற்காலியில் சரிந்து விழுந்தான் ரிஷி. ஜானும், அருந்ததியும் அவனை தாங்கி கொண்டார்கள்.

 

அருந்ததியின் வீட்டினரும் அவளிடம் “பாத்துக்கோ அரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

 

கொஞ்சம் சமநிலைக்கு வந்த ரிஷி “ஆபத்து வரும்னு தான் எனக்கு தெரியுமே. ஆனா கண்டிப்பா எல்லாம் சரியாகிரும்ன்னு  தான அந்த சாமிஜி சொல்லிருக்கார். கண்டிப்பா வேதா சரியாகிருவா”, என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

 

அவன் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பியதும் “வேதா எதுக்கு அந்த நேரத்துல மாடிக்கு போனா?”, என்று பேச்சை ஆரம்பித்தாள் அருந்ததி.

 

சட்டென்று ரிஷிக்கு விஷயம் புரிந்து போனது. “அவள் எதற்காக சென்றிருப்பாள்?”, என்று யோசித்தவன் வசந்த் நடவடிக்கையை நினைவு படுத்தி நடந்ததை யூகித்து விட்டான்.

 

“அருந்ததி, நீ உங்க வீட்டுக்கு கால் பண்ணி அந்த வசந்த் எங்க இருக்கானு கேளேன். சும்மா பேச்சுவாக்கில் கேளு?”, என்றான்.

 

“இப்ப எதுக்கு அவனை பத்தி கேக்குறான்?”, என்று யோசித்தாலும் அவன் சொன்னதை செய்தாள் அருந்ததி.

 

தன்னுடைய தாயை அழைத்து கேட்டாள் அருந்ததி. கல்யாணம் வேண்டாம்னு சொன்னவள், இப்படி மாப்பிள்ளையை பற்றி விசாரித்தும் “இங்க வீட்ல தான் மாப்பிள்ளை இருக்கார் அரு”, என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா சொன்னதை ரிஷியிடம் சொன்னாள் அருந்ததி. அடுத்த நிமிடம் “ஜான் நீ வேதாவை பாத்துக்கோ. நாங்க இப்ப வந்துறோம். அருந்ததி என் கூட வா”, என்று சொல்லி அவளை அழைத்து சென்றவன் “காரை உன் வீட்டுக்கு விடு”, என்றான்.

 

குழப்பத்துடன் அவன் சொன்னதை செய்தாள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கு அருந்ததி பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து நழுவி அருந்ததி சொல்லி இருந்த வசந்த் அறைக்கு சென்றான்.

 

கதவை தட்டி விட்டு காத்திருந்தான் ரிஷி. “யாரோ என்னவோ?”, என்று பயத்துடன் கதவை திறந்த வசந்த் அந்நேரம் ரிஷியை அங்கு எதிர்பார்க்க வில்லை.

 

அவன் யோசனையை கூட கண்டு கொள்ளாமல் அதிரடியாக உள்ளே நுழைந்த ரிஷி அவனை பிரட்டி எடுத்து விட்டான். ஆரம்பத்தில் அடிக்க முயற்சி செய்த வசந்த் அதன் பின் அவன் அடிக்கும் அடிகளை தடுக்கும் முயற்சியில் இறங்கினான்.

 

அவனை ரிஷி அடித்து துவைத்து கொண்டிருக்கும் போதே ரிஷியை தேடி வந்த அருந்ததி திகைத்தாள்.

 

ரிஷியை தடுத்து நிறுத்தியவள் “என்ன ஆச்சு ரிஷி? எதுக்கு இவனை அடிக்கிற?”, என்று கேட்டாள்.

 

“வேதா க்கு இப்படி ஆனதுக்கு இவன் தான் காரணம் அருந்ததி. உன்னோட கல்யாணத்தை நிப்பாட்ட இவன் கிட்ட பேசணும்னு வேதா சொன்னா. பேசவும் செஞ்சிருக்கா. இவன் தான் அவளை பிடிச்சு தள்ளி விட்டுருக்கான். அப்ப பயத்தோட இவன் ஓடி வந்தான். எல்லாத்துக்கும் இவன் தான் காரணம்”, என்று ரிஷி சொல்லும் போதே “ஆமா டா நான் தான் காரணம். அவளை அடைய தான் நினைச்சேன். ஆனா அவளே தடுக்கி விழுவானு எதிர்பாக்கலை. அவ செத்துட்டாளா இருக்காளா? உயிரோட இருந்தா அவள் எனக்கு தான். உன்னை கொன்னுட்டு அவளை அடையுவேன் டா”, என்று திமிராக பேசிய வசந்த் அருந்ததியை பார்த்து  “நீ என்னோட பொண்டாட்டி அப்படிங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை”, என்றான்.

 

“ச்சீ”, என்று முகத்தை திருப்பி கொண்டாள் அருந்ததி.

 

மறுபடியும் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டான் ரிஷி. “இவனை அப்புறம் பாப்போம் ரிஷி.நாம வேதாவை முதல்ல கவனிக்கணும். இப்படியே நீ அடிச்சா அவன் செத்துருவான்”, என்று சொல்லி அவனை அழைத்து கொண்டு சென்றாள்.

 

“என்னையா டா அடிக்கிற? உன்னை கொன்னுட்டு அவளை அடையுவேன். இல்லைன்னா அவளை கொன்னுருவேன்”, என்று வன்மத்துடன் எண்ணி கொண்டான் வசந்த்.

 

அன்று முழுவதும் வேதா கண் விழிக்க வில்லை. மூவரும் அவள் எப்போது கண் விழிப்பாள் என்று காத்திருந்தார்கள். அடுத்த நாளும் அதே நிலை தொடர்ந்ததால் இந்தியா செல்லும் பயணத்தை ரத்து செய்தான் ரிஷி.

 

Advertisement