Advertisement

அத்தியாயம் 18

 

உன் இதய

சிறையில் அடை

பட்டிருக்கும் சுகம்

கிடைக்குமானால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

தன்னுடைய அண்ணியை அழைக்க வந்த அருந்ததியோ ஷீபாவை கையில் தூக்கி கொண்டு “அண்ணி, அம்மா உங்களை வர சொன்னாங்க”, என்றாள்.

 

“இதோ இப்ப கிளம்பிறலாம் அரு மா. ஆமா, நீ என்ன இந்த டிரஸ் போட்ருக்க? நல்லாவே இல்லை”, என்றாள் சுலக்ஷனா.

 

“அண்ணி நிஜமாவா?”, என்று கேட்டவளுக்கு சிறிது நேரத்துக்கு முன் கிளம்பி ஜான் கண் முன் நின்ற போது அவன் பார்த்த மயக்கும் பார்வை நினைவில் வந்தது. “இன்னும் அவன் கண்ணுக்கு அழகா தெரியணும்”, என்று நினைத்து கொண்டாள் அருந்ததி.

 

“ஹ்ம்ம், ஆமா அரு. ரொம்ப கிராண்டா இல்லை. என்கிட்டே இருக்க டிரஸ் ட்ரை பன்றியா?”

 

“ஹ்ம்ம் சரி அண்ணி. ஆனா நேரம் ஆகலையா? அம்மா திட்டுவாங்க”

 

“அதெல்லாம் ஆண்ட்டி ஒன்னும் சொல்ல மாட்டாங்க”

 

சுலக்ஷனா கொடுத்த ட்ரெஸ்ஸை பார்த்தவள் “இது ரொம்ப கிராண்டா இருக்கு அண்ணி”, என்றாள்.

 

“அதான் அழகா இருக்கும். நீ போடு”

 

“சரி”, என்று சொல்லி அதை மாற்றி கொண்டே “ஆமா, அம்மா எதுக்கு கிராண்டா டிரெஸ் பண்ணல?”, என்று கேட்டாள்.

 

“நானும் கேட்டேன் அரு. அத்தை அதுவே போதும்னு சொல்லிட்டாங்க”

 

“ஹ்ம்ம், பாருங்க இதுல எப்படி கிராண்டா இருக்கேன். நான் தான் கல்யாண பொண்ணு மாதிரி இருக்கேன். மாத்திரவா அண்ணி?”

 

“ஏய் அரு, சூப்பரா இருக்கு. உன்னை பாக்குறவங்க எல்லாம் மயங்கியே விழ போறாங்க. இரு ஹேர் ஸ்டைல் மட்டும் மாத்துறேன்”, என்று சொல்லி சரி செய்தாள்.

 

“இந்த அலங்காரத்தில் என்னை பார்த்தால் ஜான் முகம் எப்படி மாறும்?”, என்று  நினைத்து பார்த்து புன்னகைத்து கொண்டாள் அருந்ததி.

 

ஷீபாவை தூக்கி கொண்டு அருந்ததியை கைகளில் பிடித்து கொண்டு கீழே இறங்கி வந்தாள் சுலக்ஷனா.

 

எல்லாருடைய பார்வையும் அவர்களை நோக்கி திரும்பியது. ஆனால் அருந்ததியின் பார்வையோ ஜானை நோக்கி சென்றது.

 

அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்து வியந்தே போனான் ஜான். வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த ஜானை பார்த்து சிரித்த ரிஷி அவன் அருகில் சென்று “உன் ஜொள்ளு பால்ஸை குளோஸ் பண்ணு ஜான்”, என்றான்.

 

“ஜொள்ளு”, என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாதலால் தன்னை சரி செய்து கொண்டான் ஜான்.

 

அவன் கண்களில் வழிந்த காதலை கண்டு பூரிப்பான அருந்ததி, ஜான், ரிஷி, வேதா நின்றிருந்த இடத்தை பார்த்து நடந்து வர இரண்டு அடி எடுத்து வைத்தவளை “இங்கே வா அரு”, என்று கை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றாள் சுலக்ஷனா.

 

குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று அழைத்து செல்கிறார்கள் என்று எண்ணி அமைதியாக சென்றாள் அருந்ததி.

 

ஆனால் அவளை வசந்துக்கு எதிரில் நிறுத்தியதும் திகைத்து போனாள். சுற்றி இருந்தவர்களின் பார்வையில் இருந்த வித்தியாசம், எதிரில் இருந்தவனின் புன்னகை, தன்னுடைய பெற்றோர்களின் முகத்தில் இருந்த ஆனந்தம் அனைத்தையும் பார்த்தவளுக்கு எதுவோ சரி இல்லை என்று தோன்றியது.

 

தன்னாலே அவளுடைய கண்கள் ஜானை நோக்கி சென்றது. அங்கு மூவருமே குழப்பத்துடன் நின்றார்கள். அந்த இடத்தை விட்டு நகர பார்த்த அருந்ததியை  அவள் அன்னை அர்ச்சனா நகர விட வில்லை.

 

திகிலுடன் நின்றிருந்த அருந்ததியின் தலையில் இடியை இறக்கினார் அவளுடைய தந்தை விஜயன். வசந்தை தன்னுடைய “மாப்பிள்ளை”, என்று ஆங்கிலத்தில் அறிமுக படுத்தி கொண்டிருந்தார்.

 

அதிர்ச்சியில் அவரை பார்த்த அருந்ததி உடனே ஜானை பார்த்தாள். அவனோ தலையில் இடி விழுந்தது போல துடித்து போய் நின்றான். அவனுக்கு இருபுறமும் ரிஷியும் வேதாவும் நின்று அவன் கையை இறுக்கமாக பிடித்திருந்தார்கள். பின் அவனை அப்படியே வெளியே அழைத்து சென்றான் ரிஷி. அவர்களுடன் சென்றாள் வேதா.

 

இன்றைக்கே மோதிரம் மாற்றி நிச்சயம் என்று சொல்லி கண் முன்னே மோதிரம் நீட்ட பட்டதும் அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள் அருந்ததி.

 

எல்லாரும் அவள் மயங்கி விழுந்ததில் பரபரப்பானார்கள். திரும்பி பார்த்த ரிஷி ஜானை அழைத்து காண்பித்தான். அவனும் குழப்பத்துடன் மேடையை பார்த்தான். அங்கே அவளுடைய அண்ணன் வருண் அருந்ததியை தூக்கி சென்று கொண்டிருந்த காட்சி பட்டது.

 

“ரிஷி அவளுக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான் ஜான்.

 

“தெரியலை ஜான். எனக்கு என்னமோ அவளுக்கும் இந்த கல்யாணம் விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீ எதுக்கும் வொரி பண்ணாத”, என்றான் ரிஷி.

 

அதிர்ச்சியில் மயங்கி சரிந்தவள் தன்னுடைய அறையில் உள்ள கட்டிலில் இப்போதும் மயக்கத்தில் தான் இருந்தாள். சுற்றி அவளுடைய உறவினர்கள் இருந்தார்கள். அவர்களுடன் வசந்தும் நின்றான். ஏனோ அவன் மனது சஞ்சலத்துடன் இருந்தது.

 

வெளியே செல்ல சொல்லி அவன் மனது வற்புறுத்தியது. ஆனால் சூழ்நிலை கைதியாக நின்றான். கண் முன்னே நாளைய மனைவி மயக்க நிலையில் இருக்கும் போது வெளியே எப்படி செல்வது?

 

ஆனால் அவன் மனம் முழுவதிலும் வேதாவே தான் இருந்தாள். அவள் யாரென்று கூட அவனுக்கு தெரியாது. ஆனால் உள்ளுக்குள்ளே ஒரு இனம்புரியாத ஆசை அவனை ஆட்கொண்டது.

 

ஒரு வழியாக அருந்ததி கண் விழித்ததும் ஆள் ஆளுக்கு அவளை நலம் விசாரித்தார்கள். குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தவள் அவர்கள் நலம் விசாரிப்பில் எரிச்சல் அடைந்து  “கொஞ்சம் எல்லாரும் வெளிய போறீங்களா?”, என்று கத்தி விட்டாள்.

 

” ஏய் கத்தாம எந்திரிச்சு ஸ்டெஜேக்கு வா. என்கேஜ்மென்ட் நடக்கணும். எல்லாரும் வெயிட் பண்றாங்க”, என்றாள் அர்ச்சனா.

 

தன்னுடைய அம்மாவை முறைத்த அருந்ததி “உனக்கு அறிவு இல்லையாமா? நான் உங்கிட்ட கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேனா?”, என்றாள்.

 

“நீ தான் இப்ப அறிவு கெட்டத்தனமா பேசுற அரு. மரியாதையா எழுந்து வா. பாரு மாப்பிளை முகம் வேற சுருங்கி போச்சு. சீக்கிரம் வா”

 

“மாப்பிள்ளையா இவனா? உங்க எல்லாருக்கும் என்ன தான் ஆச்சு? எனக்கு இவன் மாப்பிள்ளையா? இவனை பத்தி எல்லாருக்கும் தெரியும் தான? போயும் போயும் இந்த பொறுக்கியை போய் கல்யாணம் பண்ணுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க”, என்று சொல்லி விட்டு முகம் திருப்பி கொண்டாள்.

 

அவள் பேச்சில் முகம் கன்றினான் வசந்த். “இந்த திமிருக்கு தான் டி உன்னை கட்டியே ஆகணும்னு பிடிவாதத்துல இருக்கேன்”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டு “வருண் உன்னோட சிஸ்டர் கிட்ட சொல்லி வை. அவ என்னை மட்டும் தான் மேரேஜ் பண்ணி ஆகணும்”, என்றான்.

 

“கோப படாதீங்க மாப்பிளை. அவளை நாங்க சரி பண்ணிக்கிறோம். நீங்க வாங்க. ரெஸ்ட் எடுங்க. வருண் மாப்பிள்ளையை ரூம்க்கு கூட்டிட்டு போ”, என்றார் விஜயன்.

 

“முதலில் வந்துருக்குறவங்க கிட்ட என்கேஜ்மென்ட் கேன்சல் ஆகிட்டு. நேரடியா கல்யாணம் தான்னு அனௌன்ஸ் பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு வருணுடன் சென்றான் வசந்த்.

 

“சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் பெண்ணுக்கு மயக்கம். கல்யாண தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.  அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லவும்”, என்று விஜயன் அனைவரிடம் சொல்லி விட்டார். அதன் பின் விருந்து ஆரம்பமானது.

 

என்ன தான் கோபமாக பேசினாலும் இந்த சுழலுக்குள் இருந்து எப்படி தப்ப போகிறோம் என்று கவலையில் இருந்தாள் அருந்ததி. அதை விட அவள் மனதில் அவள் எழுப்பிய கனவு கோட்டை. அதை எப்படி அவளால் சிதைக்க முடியும்? யோசித்து யோசித்து தலை வலி தான் வந்தது.

 

அதே நேரம் வாய் ஓயாமல் பேசி கொண்டிருக்கும் ஜான் தன்னுடைய அறையில் அமைதியே உருவாய் அமர்ந்திருந்தான். அவன் அருகில் ரிஷியும் வேதாவும் இருந்தார்கள்.

 

“வேதா நீ போய் என்ன நிலைமைன்னு அருந்ததி பார்த்து விசாரியேன்”, என்றான் ரிஷி.

 

“சரி டா”, என்று சொல்லி விட்டு அருந்ததி அறைக்கு சென்றாள் வேதா.

அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த அர்ச்சனா “நீயாவது அவளுக்கு சொல்லி புரிய வை மா. நல்ல இடம். கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிறா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

“உன் காதலுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு டா ஜான்”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டு உள்ளே சென்றாள்.

 

வேதாவை பார்த்ததும் அருந்ததியின் கண்கள் கலங்கின. அவளை ஆறுதலாக அணைத்து கொண்டாள் வேதா

 

“பாரு வேதா எப்படி பண்ணிட்டாங்கன்னு. நான் எதிர்பாக்கவே இல்லை தெரியுமா?”

 

“சரி விடு அரு”

 

“எப்படி விடுறது? கல்யாணம் பண்ணனும்னு கம்பல் பண்றாங்க”

 

“பண்ண சொன்னா பண்ணிக்க வேண்டியது தான? ஆளும் அழகா இருக்கார்”, என்று சொல்லி போட்டு வாங்கினாள் வேதா.

 

“பாம்பு கூட பளபளன்னு அழகா தான் இருக்கும் வேதா. இவன் அந்த பாம்பை விட கொடுமையானவன். பொம்பளை பொறுக்கி. இவன் எப்பவும் பொண்ணுங்க கூட தான் சுத்துவான். உனக்கு புரியுது தான? அவ்வளவு மோசமானவன்”

 

“உங்க வீட்ல அது தெரியாதா?”

 

“தெரியாதாவா? எல்லாம் தெரியும்”

 

“அப்புறம் ஏன்?”

 

“பெரிய பணக்காரன் அது தான். அது மட்டுமில்லாம இங்க உள்ள கலாச்சாரத்துக்கு அது தப்பு கிடையாதே. ஆனா நான்…. என் மனசுல….”

 

“உன் மனசுல… உன் மனசுல என்ன அரு?”

 

“உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? என் மனசுல ஜான் தான் இருக்கான். அவனை தவிர வேற யாரையும் எனக்கு பிடிக்காது”

 

“ஏய் அரு, நிஜமாவா?”

 

“ஆமா, எனக்கு எப்பவோ அவனை பிடிக்கும். ஆனா நான் சொன்னது இல்லை”

 

“ஏன் அவன் கிட்ட சொல்லலை?”

 

“சொல்லணும்னு சந்தர்ப்பம் வரலை. ஆனா இப்ப இந்த சந்தர்ப்பம் இப்படி வரும்னு எதிர்பாக்கலை”

 

“இப்ப என்ன செய்ய போற அரு?”

 

“தெரியலை”

 

“அந்த கெட்டவன் கிட்ட பேசி பாரேன்”

 

“பேசுறதா? நீ வேற? அவன் என்னோட அண்ணனுக்கு நல்லா தெரிஞ்சவன். அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான். அப்ப எல்லாம் என்னை எதாவது சீண்டுவான். நான் சரமாரியா திட்டிட்டு போயிருவேன். அதுக்கு பழி வாங்க தான் வந்துருக்கான்”

 

“அப்ப மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்துரு”

 

“அதெல்லாம் அவன் மனசு மாற மாட்டான் வேதா. எனக்கு கல்யாணம்னு சொன்ன உடனே ஜான் முகம் ஒரு மாதிரி ஆச்சு. அவன் இப்ப எப்படி இருக்கான்? எனக்கு அவனை பாக்கணும் போல இருக்கு”

 

“பாக்கணும் போல இருக்குனு எதுக்கு இங்க நின்னு சொல்லிட்டு இருக்க? வா”, என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் வேதா.

 

அவசரமாக அருந்ததியை அழைத்து கொண்டு ஜானின் முன்னால் நிப்பாட்டினாள். ஜான் மறுபடியும் வைத்த கண் எடுக்காமல் அருந்ததியை பார்க்க ஆரம்பித்தான்.

 

பதிலுக்கு அவள் பார்வையும் அவனை காதலாக தழுவி கொண்டது. ரிஷி கேள்வியாக வேதாவை பார்த்தான். அவள் எல்லாம் சுபம் என்னும் விதமாய் கண்களை மூடி திறந்தவள் அவன் கைகளை பற்றி இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.

 

ரிஷியும், வேதாவும் சென்ற உடனும் அருந்ததியும் ஜானும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே நின்றார்கள்.

 

தான் வாயை திறந்து எதுவும் சொல்லாமல் அவனும் பேச போவதில்லை என்று உணர்ந்த அருந்ததி “ஜான்”, என்று அழைத்து பேச ஆரம்பித்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. ஒரே எட்டில் அவளை நெருங்கியவன் எதுவும் பேச வேண்டாம் என்னும் விதமாய் அவள் உதடுகளில் விரலை வைத்தான். அவள் கண்ணீரை துடைத்தவன் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து “ஐ லவ் யு”, என்று உச்சரித்தான்.

 

“ஜான்”, என்று கூவிய படியே அவன் நெஞ்சில் சாய்ந்தவளை தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டான் ஜான்.

 

அவள் கண்ணீர் நிற்கும் வரை அவளை ஆறுதலாக அணைத்திருந்தவன் அவள் சகஜ நிலைக்கு திரும்பியதும் சிறிது எல்லை மீறினான்.

 

முகம் முழுவதும் தன்னுடைய உதடுகள் கொண்டு ஓவியம் வரைய ஆரம்பித்தான். தன்னை முழுவதுமாக அவன் கைகளில் கொடுத்தவள் அவன் தொடுகையில் கரைந்தாள்.

 

வார்த்தைகளால் இது வரை வர்ணிக்காத காதலை இப்போது உதடுகளால் பரிமாறி கொண்டிருந்தான் ஜான்.

 

தனக்கென்று கொடுத்திருந்த அறைக்கு ரிஷியை அழைத்து வந்த வேதா “நீ சொன்னது சரி தான் ரிஷி. அரு க்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அவ ஜானை தான் விரும்புறா. இப்ப ரெண்டு பேரும் காதலை சொல்லிப்பாங்க”, என்று சந்தோசமாக சொன்னாள்.

 

ரிஷியும் சந்தோசத்துடன் “சூப்பர். இனி ஜான் லைப் நல்லா இருக்கும்”, என்றான்.

 

“இல்லை டா, அதுல சின்ன சிக்கல் இருக்கு. அருந்ததிக்கு எப்படி கல்யாணத்தை ஸ்டாப் பண்ணனும்னு தெரியலை”

என்று ஆரம்பித்து அவனை பற்றிய விவரங்களை சொன்னாள் வேதா.

 

“அவன் கேடு கெட்டவன்னு எனக்கு தான் தெரியுமே”, என்று மனதில் நினைத்து கொண்டு “அருந்ததி சரி போல்ட் டி. அதெல்லாம் அவ பாத்துக்கு வா”, என்றான்.

 

“இல்லை டா, அவ பாவம். என்ன பண்ணணு தெரியலைன்னு அழுதா”

 

“அது டென்ஷன்ல அழுத்துருப்பா. அப்புறம் சரியாகிருவா. நீ தேவை இல்லாம யோசிக்காத”

 

“அது எப்படி யோசிக்காம இருக்க முடியும்? அவளுக்கு நாம தான ஹெல்ப் பண்ணனும்”

 

“என்னது ஹெல்பா? என்ன டி உளறுற?”

 

“உளறலை. எனக்கு ஒரு ஐடியா தோணிருக்கு”

 

“என்னது?”

 

“அந்த மாப்பிள்ளைக்கிட்டயே போய் பேச வேண்டியது தான்”, என்று வேதா சொன்னதும் எரிச்சலின் உச்சத்திற்கே சென்ற ரிஷி “லூசா நீ? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உன் வேலைய மட்டும் பாரு. அவங்க லைஃபை அவங்க பாத்துப்பாங்க”, என்றான்.

 

“நீ எப்ப டா இப்படி சுயநலமா மாறுன? நாம தான நம்ம பிரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ணனும்”

 

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நாம இப்பவே கிளம்புவோம் வா”

 

“நான் வர மாட்டேன். நான் அந்த ஆள் கிட்ட பேசி அரு க்கு ஹெல்ப் பண்ணிட்டு தான் வருவேன்”

 

“வேதா, பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். சின்ன பிள்ளை தனமா எதுவும் செய்யாத”

 

“இல்லை நான் கண்டிப்பா அவன் கிட்ட பேச தான் போறேன்”

 

“ப்ச், அவனே கெட்டவன்னு சொல்ற? அவன் உன்னையே கட்டிக்கிறேன்னு சொல்லுவான் டி”

 

“ஹா ஹா, சொன்னா என்ன? கட்டிக்க வேண்டியது தான்”, என்று வேதா சொன்னதும் இடி என ரிஷியின் கரம் அவளுடைய கன்னத்தில் இறங்கியது.அப்படியே கீழே போய் விழுந்தாள் வேதா.

 

இப்படி திடீர் என்று அடிப்பான் என்று எதிர்பார்க்காததால் சட்டென்று நிலை குழைந்தாள் வேதா.

 

கண்களில் நீரோடு தரையில் அமர்ந்திருந்தவள் அவனை அடி பட்ட பார்வையை பார்த்தாள்.

 

அந்த பார்வையில் பதறி போனான் ரிஷி. தான் அடித்தது அதிக படி என்று அவனுக்கும்  தோன்றியது. அவனுக்கு வசந்தை பார்த்ததில் இருந்தே மனது ஒரு நிலையில் இல்லை. அவன் மீதிருந்த கோபத்தை வேதா மீது காட்டியவன் அவள் கண்ணீரை கண்டு துடித்து வேகமாக அவள் அருகில் சென்றான்.

 

அவன் அருகே வந்ததும் முகத்தை திருப்பி கொண்டாள் வேதா. அதை பார்த்து ரிஷி உதடுகளில் அழகான புன்னகை உதயமானது. சிறு வயதில் இருந்தே அவள் கோபத்தில் இப்படி தான் அமர்ந்திருப்பாள். இப்போது அதை நினைத்து பார்த்தவன் “சாரி டி”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தை தொட்டான். அவன் கைகளை தட்டி விட்டாள் வேதா.

 

உல்லாசமாக சிரித்த ரிஷியின் கண்கள் ஆவலாக அவளை அளவிட்டது.

 

அவளை நெருங்கி அமர்ந்தவன் கிசுகிசுப்பான குரலில் “வேதா”, என்று அழைத்தான்.அவன் முகத்தில் இருந்த பாவனையில், கண்களில் வழிந்த காதலில் தடுமாறி போனாள் வேதா. உடனே அவசர அவசரமாக எழுந்து நின்றாள். கூடவே ரிஷியும் எழுந்து விட்டான்.

 

அவள் கால்கள் அவளை அறியாமலே பின்னோக்கி சென்றன. அவனும் அவளை நோக்கி முன்னேறினான்.

 

யாரும் இல்லாத அந்த இரவு பொழுதில் அந்த காதலர்களை பார்த்து நிலவு மேகத்தில் மறைந்து மறைந்து வெட்க பட்டது.

 

அவனோ அவளை அணுஅணுவாய் ரசித்த படியே முன்னேறினான். கடைசியில் அங்கிருந்த சுவரில் தட்டி நின்றாள் வேதா.

 

அதற்கு பின் எங்கே செல்வது என்று தடுமாறி போய் அவன் முகத்தை பார்த்தவள் அவன் கண்களை காண முடியாமல் தலை குனிந்தாள்.

 

அவனுக்கோ சேலையில் இருந்த அவளுடைய அழகு, கண்களில் இருந்த வெட்கம், அவளுடைய முக சிவப்பு அனைத்தும் சேர்ந்து வேறு ஒரு உலகத்துக்கே சென்றது போல இருந்தது.

 

முடிவில் அவளை நெருங்கியே விட்டான். அவளுடைய மூச்சு காற்றை உணரும் தூரத்தில் நெருங்கியவன் அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி நின்றான்.

 

அவ்வளவு நெருக்கத்தில் அவனை கண்டதில்  அவள் தளிர் உடல் நடுங்கியது. அந்த நடுக்கத்தை மறைக்க கீழுதட்டை பல்லால் கடித்தாள் வேதா.

 

அவ்வளவு நேரம் அவள் முகத்தில் வந்து போன உணர்வலைகளை ரசித்து கொண்டிருந்தவனை அந்த காட்சி ஊமத்தம் கொள்ள செய்தது.

 

கையை எடுத்து அவள் நாடியில் வைத்து அவள் தலையை நிமிர்த்தினான். அவளோ கண்களை இறுக மூடி கொண்டாள். இத்தனை நாள் வைராக்கியம் எதுவுமே அவளுக்கு நினைவில்லை.

 

முழுமையாக தன்னை பெண்ணாக உணர வைத்து கொண்டிருப்பவனை பற்றி மட்டுமே அவள் எண்ணங்கள் சுழன்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவள் கன்னங்கள் சிவந்தது.

 

மெதுவாக தன் விரலை அவள் வாயருகே கொண்டு சென்ற ரிஷியோ அவள் பல்லில் இருந்து அவளுடைய உதட்டை விடுவித்தான். அந்த தொடுகையே ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணியது வேதாவுக்கு.

 

அதை உணர்ந்த ரிஷியோ ஒரு சிரிப்புடன் “வேதா”, என்று அழைத்தான்.

 

கண்களை திறவாமலே “ம்ம்”, என்று முனங்கினாள் வேதா.

 

“கண்ணை திறந்து என்னை பாரேன்”, என்று அவன் சொன்னதும் மாட்டேன் என்னும்  விதமாய் அவள் தலை இடவலமாக ஆடியது.

 

“ப்ளீஸ் டி”, என்று கொஞ்சலுடன் கெஞ்சியது ரிஷியின் குரல்.

 

அந்த குரலில் கரைந்தவள் கண்களை திறந்து அவன் பார்வையை சந்தித்தாள். அதில் தெரிந்த வேட்கையில், அவனுடைய காதலில் வெட்கத்துடன் அவள் கண்ணிமைகள் மறுபடியும் மூடி கொண்டது.

 

அவளுடைய நிலைமையை உணர்ந்தவனோ அதற்கு மேல் அவளை பார்த்து கொண்டு மட்டும் இருக்க முடியாமல், அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

அவள் பல்லிடையில் மாட்டிய உதட்டுக்கு விடுதலை கொடுத்த அவனே இப்போது அவள் உதடுகளை சிறை செய்தான்.

 

அவன் தந்த முத்தத்தை தாங்க முடியாதவளாக அவன் தோள்களை பற்றி கொண்டாள்.

 

முத்தத்தில் மெய் மறந்த ரிஷியே மொத்தமாக அவள் உதடுகளில் தொலைந்தான்.

 

அவளுடைய இடையில் பதிந்த கைகளோ அவளுடைய வெற்றிடையில் ஊர்ந்தது.

 

முத்த ஊர்வலத்தையும் கைகளின் சேட்டைகளையும் தாங்க முடியாமல் அவன் மீதே சாய்ந்தாள் வேதா. அவளுடைய இந்த செய்கையில் அவளை தன்னுடன் இறுக பிணைத்து கொண்டான் ரிஷி.

 

இந்த முத்தம் முடியவே கூடாது என்று நினைப்பவன் போல அவளுடைய இதழ் தேனை பருகி கொண்டிருந்தான் ரிஷி.

 

இருவருக்கும் மூச்சு வாங்கவே அவள் உதடுகளில் இருந்து விலகினான். அப்போதும் கண்களை மூடியே இருந்தாள் வேதா.

 

அவள் நெற்றி கன்னம் என்று மெதுவாக முத்தத்தை பதித்தவன் மீண்டும் அவள் உதடுகளில் தொலைந்தான்.

 

“முத்தமிட்டே சாகடித்து விடுவான் போல”, என்று அவள் எண்ணும் அளவுக்கு இருந்தது அவன் செய்கை. அதில் அவளும் அவனுடன் கலந்து காணாமல் போய் விட எண்ணினாள்.

 

வயிற்றில் ஊர்ந்து கொண்டிருந்த கை சற்று மேலேறவே சுயநினைவுக்கு வந்த வேதா அவன் கைகளை தடுத்தாள். அதில் சுயநினைவுக்கு வந்த ரிஷியும் “இதுக்கு மேல போனா விபரீதமா ஆகிடும்”, என்று எண்ணி அவளை விட்டு விலகி நின்று அவளை பார்த்தான்.

 

“செல்ல குட்டி, ரொம்ப நாள் கழிச்சு சேலைல பாத்தேனா? அதான் என்னலாமோ ஆகிட்டு. இதுக்கு மேல முடியாது கண்ணம்மா. இந்தியா போன உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் டி”, என்று எப்பவும் பாடும் பல்லவியை பாடினான் ரிஷி.

 

கல்யாணம் என்ற வார்த்தையில் அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் அணிவகுத்து சிறு வலியை கொடுத்தது.

 

“இப்ப  கல்யாணத்துக்கு சரி சொல்வது தான் சரியானது. ஆனால் உடனே சொன்னா நல்லா இருக்காது. கொஞ்சம் சீண்டி பாத்துட்டு சொல்லலாம்”, என்று சரியாக தவறாக முடிவு செய்து “என்னது கல்யாணமா? லூசா நீ? நமக்குள்ள எதுக்கு கல்யாணம்? அதெல்லாம் நடக்கவே நடக்காது. மறுபடி மறுபடி இதையே பேசாத. எரிச்சலா இருக்கு. என் முடிவை நான் தெளிவா சொல்லிட்டேன்” என்று முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு சொன்னாள் வேதா.

 

நல்ல மனநிலையில் இருந்தவனின் மனம் அப்படியே வறண்டு போனது போல ஆனது. அவன் முகமும் புன்னகையை தொலைத்தது.

 

“கஷ்ட படுத்தாத வேதா. நான் வேணும்னு செய்யலைன்னு என்னோட நிலையை விளக்கிட்டேன். இதுக்கப்புறமும் நீ இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி? நான் உன்னை நெருங்குற அப்ப எல்லாம் இப்படியே சொல்லி கஷ்ட படுத்துற?”, என்று தழைந்தே பேசினான்.

 

“என்னது நான் கஷ்ட படுத்துறேனா? அப்படி என்ன கஷ்ட படுத்திட்டேன்? நீ படுத்துனதை விடவா நான் படுத்திட்டேன்? நானா உன்னை நெருங்க சொன்னேன்? நானா உன்னை விலக சொன்னேன்?

நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி நம்ப வச்சு ஆசை காட்டி மோசம் செஞ்சியே? அதே மாதிரியா நான் செஞ்சேன்?”

 

“ஐயோ? அதுக்கு பழி வாங்குறியா டி? மன்னிச்சிறேன் டி”

 

“முடியாது முடியாது”

 

“அதான் ஏன்?”

 

“ஏன்னா, பிடிக்கலை. மறுபடியும் சொல்றேன் கேட்டுக்கோ. நீ என்னோட பிரண்ட் மட்டும் தான். நமக்குள்ள காதல், கல்யாணம் அப்படின்னு எதுவும் இல்லை. இனி இதை பத்தி என்கிட்டே பேசாதே”

 

“என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? பிரண்ட் பிரண்ட்னு சொல்ற? அப்ப எதுக்கு இவ்வளவு நேரமும் என் கைக்குள்ள அப்படி நின்னியாம்? எந்த  பிரண்டும் இப்படி ஒரு காரியமும் செய்ய மாட்டாங்க. நான் தான் உன்னை பாத்து தடுமாறி கிட்ட வந்தேன்னா, நீ என்னை செருப்பால அடிச்சு விரட்ட வேண்டி தான? எதுக்கு அப்படி சொக்கி போய் நின்ன? பிரண்டாம் பிரண்டு. பிரண்டுன்னு சொல்லி எதுக்கு பிரண்ட்ஸிப்பை கேவல படுத்துற? இப்ப என்ன நான் கல்யாணத்தை பத்தி பேச கூடாது அவ்வளவு தான? பேசல போதுமா? இன்னும் காதல் கல்யாணம்னு எதை பத்தியும் பேசல. இப்ப உனக்கு சந்தோசம் தான? இனி வேதா வேதான்னு நாய் மாதிரி உன் பின்னாடி அலைஞ்சா செருப்பால அடி. அடிச்சதுக்கு சாரி. நீ தூங்கு. நான் போறேன். குட் நைட்”, என்றவன் வெளியே சென்று விட்டான்.

 

அவனை தடுக்க கூட தோன்றாமல் சிலை போல் நின்றாள் வேதா. விளையாட்டுக்கு செய்ய நினைத்து அது வேறு மாதிரி முடிந்ததை நினைத்து கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

 

தன்னுடைய தவறு அவளுக்கும் புரிந்தது. இதை எப்படி சரி செய்ய என்று சிந்தித்த படியே கட்டிலில் படுத்தாள்.

 

வெளியே வந்த ரிஷியோ அவனுடைய அறைக்கு போகும் போதே கதவு திறந்து தான் இருந்தது. “ஜான் உள்ளே இல்லை”, என்று நினைத்து கொண்டு தான் உள்ளே சென்றான்  உடனே அவன் போய் நின்றது ஷவரின் அடியில் தான்.

 

அவன் மனம் உலைக்களமாக கொதித்தது. அவளால் ஏற்பட்ட அழகான உணர்வுகளை அவளே வார்த்தையால் கொன்றது அவனுக்கு கோபத்தை கிளப்பியது.

 

ஒவ்வொன்றையும் யோசித்து பார்த்தவனின் கண்களில் கன்னத்தை பிடித்து கொண்டு நின்றவள் தோற்றமே மின்னி மறைந்தது.

 

“அவ கண்ணுல தான் காதலை பாத்தியே டா? பின்ன எதுக்கு அவ பேச்சை பெருசா எடுத்துக்குற? இந்த லூசு சிரியஸாவே சொல்லலை. விளையாடிருக்கா. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல?  பாவம் அவ”, என்று அவன் மனசாட்சியே அவனை கேள்வி கேட்டது.

 

“இவ வசந்த் விசயத்துல வேற எதாவது செஞ்சிற கூடாது. பொறுமையா பேசுனா புரிஞ்சிக்குவா. சரி இப்ப  மேடத்தை சமாதான படுத்துவோம்”, என்று எண்ணி அவளை போனில் அழைத்தான்.

 

அவளோ நன்கு உறக்கத்தில் இருந்தாள். கோபத்தில் தான் போனை எடுக்க வில்லை என்று நினைத்து மேலும் வருந்தியவன் “காலையில் போய் அவளை சமாதான படுத்தனும்”, என்று முடிவெடுத்து விட்டு உறங்கினான்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement