Advertisement

அத்தியாயம் 17

 

ஆபத்தில் இருந்து

காக்கும் மன்னவனாக

என்னை காக்க

நீ வருவாயெனில்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

மாலை நான்கு மணிக்கு ஜான் தன்னுடைய காரை எடுத்து கொண்டு ரிஷியை அழைக்க வந்து விட்டான். அவன் வேகத்தை பார்த்து சிரித்த ரிஷி “உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன்? நீ இவ்வளவு சீக்கிரம் வந்துருக்க? அவளே நைட் தான டா வர சொன்னா?”, என்று கேட்டான்.

 

அசடு வழிந்த ஜான் “சீக்கிரம் போனா அரு கூட கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் அதான்”, என்றான்.

 

“அதுக்கு இப்பவேவா அங்க போக முடியும்?”

 

“சரி சரி மெதுவாவே போகலாம்.  நீ கிளம்பி வா. அப்புறம் வேதாவை கூப்பிட போனும். அப்புறம் அரு வீட்டுக்கு போக சரியா இருக்கும்”

 

“ஆமா, அப்படியே பாஞ்சு பாஞ்சு காதலை சொல்ல போற மாதிரி தான் வேகம். கண்ணால மட்டும் தான ரெண்டு பேரும் பேசுறீங்க. இரு குளிச்சிட்டு வரேன். அப்புறம் உன் அருமை தங்கச்சிக்கு போன் பண்ணு. இல்லைன்னா அவ வேற லேட் ஆக்குவா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான் ரிஷி.

 

அவன் குளித்து முடித்து வரும் போது வெளியே சோகமாக அமர்ந்திருந்தான் ஜான்.

 

“என்ன ஆச்சு ஜான்?”

 

“வேதா போன் எடுக்கலை. அவ எப்ப கிளம்பி, நாம எப்ப அரு வீட்டுக்கு போக?”

 

“ஹா ஹா! உனக்கு உன் பிரச்சனை”, என்று சிரித்த  ரிஷி “என்ன பண்ண? அந்த வாலு, மதியமே நல்ல தூக்கத்துல தான் கால் பண்ணா. இன்னும் பெட்டை விட்டே எந்திச்சிருக்க மாட்டா. சரி சரி நாம போய் அவளை எழுப்பலாம்”, என்று சொல்லி கிளம்ப சென்றான். பின் இரண்டு நாளுக்கான உடையை எடுத்து வைத்தான்.

 

இருவரும் வேதாவின் அறைக்கு வரும் போது அவள் தூங்கி கொண்டு தான் இருந்தாள்.

 

கதவை திறப்பதற்கு முன் ஜானை ஷாப்பிங் போக சொன்னான் ரிஷி.

 

அவனை முறைத்த ஜான், “நீ ரொமான்ஸ் பண்ண இதுவாடா நேரம்?”, என்று கேட்டான்.

 

“அரை லூசு, நான் ஸாப்பிங்ன்னு சொன்னது ஸீபாக்கு எதாவது வாங்க தான். நீ தான் அவளை கரெக்ட் பண்ணி வச்சிருக்கியே? பாக்கும் போதெல்லாம் அந்த பாப்பா உன்னை அப்படியே கட்டிக்குது. அவளுக்கு எதாவது வாங்கு”

 

“ஹி ஹி நான் மறந்துட்டேன். அரை மணி நேரத்துல வாங்கிருவேன். அவளையும் அதுக்குள்ள கிளம்பிற சொல்லு ரிஷி”, என்று சொல்லி விட்டு சென்றான்.

 

கதவை திறந்து உள்ளே சென்றவுடன் அவன் கண்ணில் பட்டது அவளுடைய வெண் பாதங்களும் வளவளவென்று இருந்த அவளுடைய வயிறும் தான்.

 

தூக்கத்தில் அவளுடைய மேலாடை சற்று மேலே ஏறி இருந்தது. “நல்ல வேளை. ஜானை அனுப்பிட்டோம்”, என்று நினைத்தவனின் கண்கள் முழுவதும் அவள் இடையில் தான் இருந்தது.

 

“ரொமான்ஸ் பண்ண இப்ப நேரம் இல்லை டா”, என்று ஜான் சொல்வது போல பிரம்மை வந்ததும் தன்னை உலுக்கி கொண்ட ரிஷி “இவளை விட்டு தள்ளியே இருக்கணும்னு நினைச்சாலும் முடிய மாட்டிக்கே”, என்று எண்ணி கொண்டு “ஏய் எந்திரி டி. நேரம் ஆகிட்டு”, என்று எழுப்பினான்.

 

அலறி அடித்து எழுந்தவள் அவனை பார்த்து விழித்தாள். “அருந்ததி வீட்டுக்கு போகணும்னு சொன்னேன்ல? கிளம்பு”, என்றான ரிஷி .

 

அவனுடைய ஒதுக்கத்தை கவனித்தவள் “கால் மணி நேரத்துல வந்துறேன். நல்லதா மூணு டிரஸ் மட்டும் எடுத்து வை டா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றாள்.

 

அவனுக்கு பிடிச்சதை எடுத்து வைத்தவன் அவளுடைய உள்ளாடை பிரிவில் இருந்து பார்வையை விலக்கி தலையை  உலுக்கி கொண்டான்.

 

குளித்து முடித்து வந்தவளை பார்த்தவன் “என்ன எடுத்து வைக்கன்னு தெரியலை. பங்க்சன், சோ கொஞ்சம் கிராண்டா எடுத்து வச்சிக்கோ. நான் ஜான் வந்துட்டான்னான்னு பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.

 

அவன் முதுகையை பார்த்தவள் “ரொம்ப பண்ற டா நீ”, என்று முனங்கி விட்டு கிளம்பினாள்.

 

பின் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள், அவன் எடுத்து வைத்த உடையையும் கூடவே  ஒரு சேலையையும் எடுத்து வைத்தாள்.

 

அவன் சிறிது நேரம் கழித்து “கிளம்பிட்டியா வேதா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.

 

“ஹ்ம்ம், உன்னோட பேக்லே எல்லாம் வச்சிரலாமா? இல்ல தனியா வைக்கவா?”

 

“அதுலே வச்சிரு. எதுக்கு இன்னொன்னு? இரு எடுத்துட்டு வரேன்”

 

எல்லாம் எடுத்து வைத்து இவர்கள் கிளம்பி இருக்கும் போது தான் ஜான்  வந்து சேர்ந்தான்.

 

அவர்கள் கிளம்பி நின்றதை பார்த்து ஈ என்று சிரித்து வைத்தான்.

 

அவனை வினோதமாக பார்த்தவள்  “ரிஷி இவன் என்னடா வாயெல்லாம் பல்லா இருக்கான்?”, என்று கேட்டாள்.

 

“அவனோட ஆள் வீட்டுல தங்க போனா அவனுக்கு குஷியா இருக்காதா? அதான் அப்படி இருக்கான்”, என்று சிரித்த ரிஷி வேதாவுக்கு சீட் பெல்ட்டை அணிவித்தான்.

 

காரும் அருந்ததி வீட்டை நோக்கி பயணித்தது. வேதா மற்றும் ரிஷியின் விதியும் அவர்களுடனே பயணித்தது.

 

வீட்டு வாசலிலே அவர்களை வரவேற்க நின்றாள் அருந்ததி. அந்த மாளிகையை அலங்காரம் செய்ய பட்டு கொண்டிருந்தது.

 

ஜானோ வலது காலை எடுத்து வைத்து அந்த மாளிகைக்குள் பிரவேசித்தான். அந்த பிரமாண்ட மாளிகையை பார்த்து மிரண்ட வேதா  ரிஷியின் கைகளை பற்றி கொண்டாள்.

 

அவன் கைகள் பற்றியதும் சகஜமாக உணர்ந்தவள் அந்த இடத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

 

தன்னுடைய வீட்டினர் அனைவரும் கூடியிருக்கும் இடத்துக்கு மூவரையும் அழைத்து சென்றாள் அருந்ததி.

 

ஏற்கனவே ஜானை அவர்களுக்கு தெரியுமாதலால் ரிஷியையும் வேதாவையும்  அனைவருக்கும் அறிமுக படுத்தினாள்.

 

“உன்னோட பிரண்ட்ஸ்க்கு ரூமை காட்டு அரு மா “, என்று அருந்ததியின் தந்தை சொன்னதும் அவர்களை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றாள்.

 

மேலே மூவரையும் அழைத்து சென்றவள் “இந்த ரெண்டு ரூம்ல நீங்க தங்கி கோங்க”, என்றாள்.

 

“சரி”, என்று சொல்லி விட்டு ஜானும், ரிஷியும் ஒரு அறைக்குள் சென்று விட்டார்கள்.

 

மற்றொரு அறைக்குள் வேதாவை அழைத்து சென்றாள் அருந்ததி.

 

இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள். “சரி வேதா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் டின்னருக்கு உங்களை கூப்பிட வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் அருந்ததி.

 

அப்படியே வேதாவும் தூங்கி விட்டாள். இங்கே ரிஷியும் நல்ல தூக்கத்தில் இருந்தான். ஜான் மட்டும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

 

மெதுவாக எழுந்து வந்தவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். சிறிது இருட்டி இருந்தது. மாளிகை முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது.

 

அப்படியே பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் ஷீபாவை தோள்களில் போட்டு தூங்க வைத்து கொண்டிருந்த அருந்ததி பட்டாள். அவன் முகம் முழுவதும் ஒளிர்ந்தது.

 

அவளுடைய ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து கொண்டிருந்தான் ஜான். ஏனோ அவளை தன்னுடைய மனைவியாகவும் அவள் கையில் உள்ள குழந்தையாகவும் தங்கள் வீட்டில் அவள் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றி வைத்தது.

 

ஷீபா சிறிது நேரத்திலே தூங்கவும் அவளுடைய அண்ணி சுலக்ஷனா குழந்தையை வாங்கி கொண்டு சென்றாள்.

 

வீட்டுக்குள் செல்ல திரும்பிய அருந்ததி கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தாளோ அப்படியே ஜான் இருந்த அறையை நோக்கி தலையை திருப்பினாள்.

 

கீழே இருந்து பார்த்தால் அவனை காண முடியாது தான். ஆனால் அவள் தன்னை தான் தேடுகிறாள் என்ற உற்சாக ஊற்று அவன் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது. சிரித்து கொண்டே ரிஷி அருகில் படுத்தவன் நிம்மதியான உறக்கத்தை தழுவினான்.

 

கதவை தட்டும் சத்தத்தில் கண் விழித்த ரிஷி, எழுந்து கதவை திறந்தான். அங்கே அருந்ததி நின்றிருந்தாள்.

 

“எல்லாரும் நல்லா தூக்கமா? வேதாவும் எந்திரிக்கவே இல்லை? வந்தவுடனேயும் எதுவும் சாப்பிட வேண்டாம்னு சொல்லிட்டீங்க. எல்லாருக்கும் பசிக்கும். சாப்பிட போகலாமா?”, என்று கேட்டாள் அருந்ததி.

 

அவளை பார்த்து சிரித்தவன், “சரி அருந்ததி. நீ போ நான் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு ஜானை எழுப்பினான். அவனை முகம் கழுவ பாத்ரூம் அனுப்பி விட்டு வேதா அறைக்கதவை தட்டினான். அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். “இந்த நாய் தூங்கிட்டுன்னா எழுப்புறது கஷ்டமே. போன் அடிச்சா தான் எந்திப்பா”, என்று நினைத்து கொண்டு தன்னுடைய போனை எடுத்து அவளுடைய எண்ணுக்கு அழைத்தான்.

 

அவன் நினைத்த படி போன் சத்தத்தில் பதறி எழுந்தாள் வேதா. போனை எடுத்து காதில் வைத்தவள் சொல்லு டா என்றாள்.

 

“சாப்பிட போனும் டி. எந்திச்சு கிளம்பு”, என்று சொல்லி விட்டு போனை அணைத்தான்.

 

பின் மூவரும் கீழே சென்றார்கள். கீழே அவர்களுக்காக அருந்ததி மட்டும் காத்திருந்தாள்.

 

“எங்க அருந்ததி யாரையும் காணும்?”, என்று கேட்டான் ரிஷி.

 

“எல்லாரும் அவங்க அவங்க ரூம்ல இருப்பாங்க. அவங்களுக்கு அங்கேயே சாப்பாடு போயிரும். நாம சாப்பிடலாம்”, என்று சொல்லி வேலைக்காரியை அழைத்து பரிமாற்ற சொன்னாள்.

 

வேதா, ரிஷி, அருந்ததி மட்டும் பேசி கொண்டே சாப்பிட்டார்கள். ஜான் மட்டும் அவர்கள் பேசுவதை கேட்கிறேன் என்று பெயர் பண்ணி கொண்டு அருந்ததியை சைட் அடித்து கொண்டே இருந்தான். அது தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்தார்கள் மூவரும்.

 

சாப்பிட்டு முடித்ததும் தோட்டத்தில் வைத்து அவர்கள் அரட்டை தொடர்ந்தது. பத்து மணியை தாண்டியும் அவர்கள் அரட்டை நடந்தது.

 

ரிஷி தான் “தூங்க போகலாம்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.

 

“காலைல எங்கயாவது வெளிய போகலாம். இப்ப போய் நல்லா தூங்குங்க. எதாவது வேணும்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க. குட் நைட்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் அருந்ததி.

 

அதன் பின் அனைவரும் உறக்கத்தை தழுவினார்கள். காலையில் ரிஷி போன் செய்ததால் தான் எழுந்தாள் வேதா.

 

அதன் பின் மூவரும் குளித்து முடித்து கிளம்பிய போது மணி ஒன்பது ஆகி இருந்தது. அருந்ததி இவர்களை சாப்பிட அழைத்து செல்ல வந்தவள் கிளம்பி இருப்பதை பார்த்து “அப்ப சாப்டுட்டு சுத்தி பாக்கலாம்”, என்று சந்தோசத்துடன் சொன்னாள்.

 

சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்றவர்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தார்கள். வேதாவுக்கு பல பரிசுகள் அவள் மறுக்க மறுக்க வாங்கி கொடுத்தாள் அருந்ததி.

 

மதியம் ஐந்து மணிக்கே வீட்டில் இருக்க வேண்டும் என்று அருந்ததியின் அம்மா அர்ச்சனா சொல்லி இருந்ததால் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

 

வீட்டுக்கு சென்றவர்களை எதிர் கொண்ட அர்ச்சனா “ஆறு மணிக்கு பார்ட்டி இருக்கு. எல்லாரும் கிளம்புங்க”, என்று சொல்லி சென்றாள்.

 

“இப்ப என்ன பார்ட்டி?”, என்று கேட்டாள் வேதா.

 

“அதான் மேரேஜ் பார்ட்டி. இங்க சின்னதா கல்யாணம் மாதிரி பண்ணுவாங்க”

 

“அது காலைல தான பண்ணனும்?”

 

“காலைல யாரு வருவா ? இங்க நைட் தான். சரி சூப்பரா கிளம்பி வாங்க”, என்று அவர்களை போக சொன்னாள்.

 

ஐந்தே முக்கால் ஆகும் போதே கிளம்பி விட்டாள் வேதா. தன்னை கண்ணாடியில் பார்த்தவள் தான் அணிந்திருந்த புடவையை பார்த்தாள். இதற்கு முன்பு மூன்று வருடங்களுக்கு முன்பு புடவை அணிந்தது நினைவில் வந்தது.

 

ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. வெளியே வந்தவள் ரிஷியின் அறைக்கதவை தட்டினாள்.

 

கதவை திறந்த ரிஷி ஆணி அடித்ததை போன்று நின்று விட்டான் அவள் தோற்றத்தை கண்டு. அவன் பார்வையில் அப்படியே உடல் முழுவதும் சிலிர்த்தாள் வேதா.

 

அவனோ வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

 

“இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா ரிஷி?”, என்று கேட்டு கொண்டே அங்கே வந்த ஜானின் குரலில் இருவரும் நடப்புக்கு திரும்பினார்கள்.

 

வேதாவை பார்த்த ஜான் “வேதா இந்த டிரஸ் உனக்கு அழகா இருக்கு”, என்று சொல்லி சிரித்தான்.

 

அவனை பார்த்து சிரித்தவள் “கீழ போகலாமா?”, என்று கேட்டாள்.

 

இப்போது வாய் ஓயாமல் ஜானும் வேதாவும் பேசி கொண்டே கீழே சென்றார்கள்.மௌனமாக அவர்களை பின் தொடர்ந்தான் ரிஷி.

 

சிறிது நேரத்தில் வர துவங்கிய கூட்டத்தை பார்த்து மூவரும் திகைத்தார்கள். வேதா தன்னாலே ரிஷியுடன் ஒட்டி கொண்டாள். இந்த முறை அவள் கைகளை இறுக  பற்றி கொண்டான் ரிஷி. “கூட்டத்தை பாத்தாலே மேடம்க்கு என்ன தான் ஆகுமோ?”, என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

 

அருந்ததியும் இவர்களுடன் வந்து நின்று கொண்டாள். “ஏய் அரு, என்ன உங்க அம்மா, அப்பா பொண்ணு மாப்பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணலை? சாதாரணமா இருக்காங்க?”, என்று கேட்டாள் வேதா.

 

அவர்களை பார்த்த அருந்ததியும் புருவம் உயர்த்தினாள். பின் அவளுடைய அன்னை அருகே சென்றவள் “அம்மா, நீ என்ன இந்த டிரஸ் போட்டுருக்க?”, என்று கேட்டாள்.

 

“ஏண்டி இந்த டிரஸ்க்கு என்ன? இது விலை என்னன்னு தெரியுமா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.

 

“ப்ச், அதெல்லாம் கிராண்டா தான் இருக்கு. ஆனா உனக்கும் அப்பாவுக்கும் தான கல்யாணம்? அந்த மாதிரி டிரஸ் போடல?”

 

“போடி அரட்டை, நானும் உன் அப்பாவும் கல்யாணம் பண்ணாமலா நீயும் உங்க அண்ணனும் பிறந்தீங்க?”, என்று சொல்லி சிரித்தாள் அர்ச்சனா.

 

“இந்த அம்மாவுக்கு என்ன லூசு பிடிச்சிடுச்சா?”, என்று திகைத்து விழித்தாள் அருந்ததி.

 

அவள் கன்னத்தை தட்டிய அர்ச்சனா “நீ உன் அண்ணியை கூட்டிட்டு வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

வேதாவிடம் சொல்லி விட்டு சுலக்ஷனா அறைக்கு சென்றாள் அருந்ததி.

 

அப்போது எல்லாருடைய கவனமும் வெளியே பாய்ந்தது. அங்கே விலைமதிப்புள்ள கார் வந்து நின்றது. அர்ச்சனாவின் அண்ணன் வருணும்,அவளுடைய அப்பா விஜயனும் அந்த காரின் அருகே விரைந்தார்கள்.

 

“யார் வாரா?”, என்று பார்ப்பதற்காக எல்லாருடைய கவனமும் அங்கு சென்றது.

 

அப்போது விலை உயர்த்த கோர்ட் சூட் அணிந்து மாப்பிள்ளை தோரணையுடன் காரில் இருந்து இறங்கினான் வசந்த்.

 

அவனை பார்த்ததும் திகில் அடித்தது போல உறைந்து போனான் ரிஷி. இவன் அவனுடைய கனவில் வந்தவன். “இவன் எப்படி இங்க?”, என்று யோசித்தவன் வேதாவை பார்த்தான். அவளோ சாதாரணமாக “இவன் யாரா இருக்கும்?”, என்ற ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.

 

அந்த பார்வையை கண்டு கடுப்பான ரிஷி, “நாம அங்க போய் உக்காரலாமா?”, என்று கேட்டான்.

 

“இரு டா, ஹீரோ மாதிரி எவனோ வந்துருக்கான். யாருனு பாத்துட்டு போவோம்”, என்று சொல்லி அவனுக்கு வெறி ஏத்தினாள். அனைவருடைய வரவேற்புக்கு இடையில் கம்பீரமாக நடந்து வந்தான் வசந்த்.

 

அவனையே தான் வேதா, ரிஷி, ஜான் மூவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். “ரொம்ப முக்கியமானவன் போல?”, என்று நினைத்து கொண்டான் ஜான்.

 

அங்கிருந்தே ஒவ்வொரு பக்கமும் பார்வையை பதித்து கொண்டே வந்த  வசந்த் தூரத்தில் இருந்தே வேதாவை பார்த்தான். அவன் முகத்தில் ஒரு சலனம் வந்தது. அதை அவன் நொடியில் மறைத்து கொண்டாலும் ரிஷியின் கண்களில் இருந்து அது தப்ப வில்லை.

 

பின் விழா ஆரம்பமானது. வசந்தின் கண்களும் அடிக்கடி வேதாவின் மேல் பட்டு பட்டு விலகியது. ரிஷி எரிச்சலின் உச்சத்தில் இருந்தான். ஜானோ உள்ளே சென்ற அருந்ததிக்காக தவம் இருந்தான்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement