Advertisement

அத்தியாயம் 16

 

என் தாகம்

தீர்க்கும் மழை

நீராக நீ

வரும் நொடிக்காக

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

“ம்ம்”, என்று சொன்ன வேதாவின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிந்தது. அதில் சிலிர்த்து போனான் ரிஷி.

 

உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தன்னை அதிகம் நாடுகிறாள் என்று ரிஷிக்கு புரியாமல் இல்லை. “இதை உனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள கூடாது”, என்று மூளைக்கு புரிந்தாலும் மனம் முழுவதும் நிறைந்திருப்பவளை இவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் போதும் தொடாமல் விலகி இருக்க அவன் என்ன முனிவனா?

 

அவன் மனதில் ஏற்கனவே இருக்கும் தாபத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தான். இப்போது வேதா தூண்டியதால் அவனுக்கு வசதியாக போனது.

 

“வேதா”, என்று அவள் காதருகே பேசிய ரிஷியின் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.

 

ம்ம்”, என்று முனங்கிய வேதாவின் குரலிலும் அதே தாபம் தென்பட்டதிலும், அவள் தந்த நெருக்கத்தில் அவன் கைகள் முன்னேறியது. இடையில் பதிந்த அவனுடைய கைகள் மெதுவாக அவளுடைய இரவு உடையை தாண்டி வெற்றிடையில் பதிந்தது. அதில் வேதாவின் உடல் சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பை உணர்ந்தவனோ அவள் காதில் “என்னால முடியல டி. என்னன்னவோ செய்ய தோணுது. என் பிறந்தநாள் முடிஞ்சு அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்கலாம் டி?”, என்றான்.

 

“எதுக்கு?”, என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் கேட்டாள் வேதா.

 

“எதுக்கா? எனக்கு நீ முழுசா வேணும். இப்பவே வேணும்னு தோணுது? ஆனா தப்புனு தோணுது டி”

 

“தப்பு இல்லை எடுத்துக்கோ. அதுவும் இப்பவே”, என்று வேதா  சொன்னதை கேட்டு ரிஷி தான் திகைத்தான்.

 

“இப்பவா? லூசா டி? கல்யாணம் முடியனும்ல?”

 

“கல்யாணம் எல்லாம் வேண்டாம். ஆனா என்னை எடுத்துக்கோ. நாம கடைசி வரை ஒன்னாவே இருக்கலாம்”, என்று வேதா சொன்னதும் ரிஷியின் பொங்கிய உணர்வுகள் அனைத்தும் வடிந்தன.

 

அவளை விட்டு விலகியவன், அவள் முகத்தை பார்த்து “இப்ப நீ சொன்னதுக்கு என்ன கேவலமான அர்த்தம்னு தெரியுமா?”, என்று கேட்டான்.

 

அவன் கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறியவள் “எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நீ கல்யாணத்தை பத்தி பேசினா நான் இப்படி தான் பேசுவேன்”, என்றாள்.

 

“ஏன் வேதா? நான் தான் எல்லாமே சொன்னேன்ல டி? என்னை நீ நம்புவ தான? நம்ம வாழ்க்கை ரகசியம் அப்படி இருக்கு. எல்லா பிரச்சனையும் முடிஞ்சிட்டு. உனக்கும் என்னை பிடிக்கும். அப்புறம் என்ன டி?”

 

“ப்ச் தெரியலை. எனக்கு பிடிக்கல. இதுக்கு தான் நீ இங்க தங்க வேண்டாம்னு சொன்னேன்”, என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

 

உறக்கத்தை தொலைத்தான் ரிஷி.

 

அடுத்த நாளும் அவளுக்கு காச்சல் சிறிது இருக்க தான் செய்தது. பகல் முழுவதும் அவளை கவனித்து கொண்டவன் முன் தினம் நடந்ததை மறந்து சகஜமாக அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தான். ஆனால் அன்றைய இரவில் அவளிடம் “நான் ஹாஸ்டல் கிளம்புறேன்”, என்றான்.

 

அவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் “இன்னைக்கும் எனக்கு காச்சல் சரியாகலையே? இன்னைக்கு மட்டும் ஏன் போற?”, என்று கேட்டாள்.

 

“என்னோட பீலிங்சோட விளையாடுறதே இவளுக்கு வேலையா போச்சு”, என்று நினைத்து அவளை முறைத்தவன் “என்னோட அத்தை பொண்ணு இந்த ஊருக்கு வந்து கலாச்சாரத்தை மறந்து இந்த ஊர் முறை படி வாழ சொல்றா. இன்னைக்கும் இங்க இருந்தா அதுக்கு நானும் அடி பணிஞ்சிருவேனோன்னு பயமா இருக்கு. என் கற்பை என்னோட பொண்டாட்டிக்காக பத்திர படுத்தி வைக்கணுமே?”, என்று சொல்லி அவளை வெறுப்பேற்றி விட்டு தான் அங்கிருந்து நகர்ந்தான்.

 

சென்ற அவனை பார்த்து முறைப்பதை தவிர வேற எதுவும் அவளால் செய்ய முடியவில்லை.

 

அன்றைய நாளில் இருந்தே வேதாவிடம் சிறிது விலகியே இருந்தான் ரிஷி. அவளுடன்  தனிமையாக இருக்கும் தருணத்தை தவிர்த்தான். எதுக்கு நெருங்குவானேன், அதன் பின் தவிப்பானேன்?

 

மூன்றாவது வருடமும் வெற்றிகரமாக முடியும் தருவாயில் இருந்தது.

 

தன்னுடைய பிறந்த நாளை ஊரில் போய் கொண்டாடலாம் என்று யோசித்தான் ரிஷி. இருவரின் பெற்றோர்களும் அதையே சொல்ல அவனும் அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே இந்தியா கிளம்ப முடிவு செய்தான்.

 

அதை வேதாவிடம் சொன்னதுக்கு “ஓ”, என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னவள் “அப்ப என்கூட இங்க செலெப்ரெட் பண்ண மாட்டியா?”, என்று கேட்டாள்.

 

அவளை முறைத்தவன் “லூசா டி நீ? நாம ரெண்டு பேரும் சேந்து தான் இந்தியா போறோம். அங்க போய் கொண்டாடலாம்”, என்றான்.

 

“நீ போ. நான் வரலை”, என்று சொல்லி அவனுக்கு பி. பி யை ஏற்றினாள் வேதா,

 

“அறைஞ்சு பல்லை கழட்டிருவேன். ஒழுங்கா வேலையை ரிசைன் பண்ணு. அத்தை, மாமா, அம்மா, அப்பா எல்லாரும்  பாவம் டி”

 

“அதுக்கு? நான் என்ன செய்ய? நான் டெய்லி அவங்களை பாத்துட்டு தான இருக்கேன்?”

 

“விடியோல பாத்தா போதுமா? அவங்க நாம எப்ப அங்க வருவோம்னு நாளை எண்ணிக்கிட்டு இருக்காங்க”

 

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது”

 

“உனக்கு வேதானு சரியா தான் டி பேரு வச்சிருக்காங்க. அப்ப அப்ப வேதாளம்னு நிரூபிக்குற? நான் வந்த அன்னைக்கு வா இந்தியா போலாம்னு சொன்ன தான?”

 

“ஆமா சொன்னேன். ஆனா நீ அன்னைக்கா கூட்டிட்டு போன? மூணு வருஷம் கழிச்சு தான கூப்பிடுற?”

 

“ஏண்டி புரிஞ்சிக்க மாட்டிக்க?”

 

“நான் புரிஞ்சு தான் சொல்றேன். நான் அங்க வரல”

 

“அதான் ஏன்?”

 

“வந்தா கல்யாணத்தை பத்தி பேசுவாங்க”

 

“ஆமா, என் பிறந்தநாள் முடிஞ்ச உடனே நமக்கு கல்யாணம் தான்”

 

“அது தான் பிடிக்கலை”

 

“மறுபடி அப்படியே சொல்லாத வேதா. இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க?”

 

“அப்படி தான் டா இருப்பேன். உனக்கென்ன உன் வேலைய பாத்துட்டு போ”

 

“ப்ச், பிடிக்கலைன்னா நான் உன் கிட்ட வந்தாலே ஏண்டி மயங்கி போற? செருப்பால அடிச்சு விரட்ட வேண்டியது தான?”

 

அவன் சொன்னதை கேட்டு முகம் சிவந்தவள் “எப்படி கேக்கான் பாரு? பண்ணி”, என்று மனதுக்குள்  திட்டி கொண்டு “ஏன்னா நான் லவ் பண்றேன். அதனால நீ தொட்டா நான் உருகி போறேன். போதுமா?”, என்றாள்.

 

அதை கேட்டு மகிழ்ந்தவன் “அப்புறம் ஏண்டி பிடிவாதம் பிடிக்கிற?”, என்று கேட்டான்.

 

“ஏன்னா, உன்னோட காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை”, என்று சொன்னவள் குரல் தழுதழுத்தது. அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

 

“வேதா”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் ரிஷி.

 

“ஆமா, நம்பிக்கை இல்லை. இன்னும் சொல்ல போனா நீ லவ் பண்ணுறியான்னு கூட எனக்கு தெரியலை. நீ லவ்க்காக என்ன செஞ்ச? முதல்ல லவ்வை வந்து சொன்னது நான் தான். அப்புறம் யாரோ ஏதோ சொன்னாங்கன்னு என்னை வேண்டாம்னு சொன்ன? என்னை தேடி வந்துருக்கான்னு சந்தோச பட்டா படிக்க வந்துருக்கன்னு சொல்ற? என் மேல நம்பிக்கை இல்லையானு கேக்குற? நம்பிக்கை உருவாக்க நீ என்ன செஞ்ச? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ உன் மேல, உன் காதல் மேல, கல்யாணம் மேல எதுலயும் நம்பிக்கை இல்லை. நான் உன்னை புரிஞ்சு வைக்கலைன்னு கூட நினைச்சிக்கோ. யாரோ சொன்னாங்கன்னு என்னை வேண்டாம்னு சொன்ன நீ, மறுபடியும் அதையே செய்ய மாட்டேன்னு என்ன நிச்சயம்?”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான் ரிஷி. அவனுடைய கல்லூரி பார்க்கில் வைத்து தான் இருவரும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

அவள் சென்றதும் அப்படியே அமர்ந்திருந்தவனை ஜான் தான் வந்து அழைத்தான்.

 

அவனுடன் எழுந்த சென்ற ரிஷியின் காதில் வேதாவின் வார்த்தைகளே ஓடி கொண்டிருந்தது.

 

“என்ன ஆச்சு ரிஷி?”, என்று கேட்டான் ஜான்.

 

“ப்ச், உன் காதல் மாதிரி என்னோட காதலும் அந்தரத்தில் தான் ஜான் தொங்குது. இந்தியா வர மாட்டேன்னு சொல்றா? ஒரு வாரத்தில் என் பிறந்த நாள் வருது. அன்னைல இருந்து சரியா ஒரு மாசத்துக்குள்ள எங்க கல்யாணம் நடந்தாகணும். இவளுக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை. வீட்ல இருந்து டெய்லி கல்யாண ஏற்பாடு செய்யட்டுமா செய்யட்டுமான்னு கேட்டுட்டு இருக்காங்க. பைத்தியமே பிடிக்குது ஜான்”, என்றான் ரிஷி.

 

“எல்லாம் சரியாகிரும்”, என்று சொன்ன ஜானுக்கே எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இல்லை.

 

அவன் முகமும் சோகத்தை அப்பி இருக்க தன்னுடைய பிரச்சனையை ஒதுக்கி வைத்த ரிஷி, ஜானை சகஜமாக்க “உன் காதலை அருந்ததி கிட்ட சொல்லேன் டா”, என்றான்.

 

“சொல்லி அவ மறுத்துட்டா என்னால தாங்க முடியாது. அதுக்கு அவ லவ் பண்ணுவாளா மாட்டாளான்னு எதிர்பார்க்குறதே போதும். அப்புறம் டிக்கட் கிடைச்சிட்டா?”

 

“அதெல்லாம் கிடைச்சிட்டு. இன்னைல இருந்து நாலாவது நாள் கிளம்பணும். அவளுக்கும் சேத்து தான் எடுத்திருக்கேன். பிசாசு மலை இறங்க மாட்டிக்கா”

 

“என்னோட ஸ்வீட் தங்கச்சியை நீ பிசாசு சொன்னா நானும் உன் கூட பேச மாட்டேன்”, என்று சொல்லி முறுக்கி கொண்டான் ஜான்.

 

அவன் சிறுபிள்ளை தனமான செய்கையில் சகஜ நிலைக்கு திரும்பினான்  ரிஷி.

 

அடுத்த நாள் முழுவதும் வேதவிடம் பேசாமல் இருந்தான் ரிஷி. அதில் வேதா தான் தவித்து போனாள். அவளுடைய அழைப்பையும் அவன் ஏற்கவில்லை.

 

ரிஷியின் மனதிலும் அந்த கேள்வி எழத்தான் செய்தது. “அவள் கேட்ட மாதிரி என் காதலை அவளுக்கு நான் தான் புரிய வைக்காமல் இருந்துருக்கேனோ?”, என்று தனக்குள் கேட்டு கொண்டான்.

 

இப்போது அவளிடம் என்ன பேசவென்றே அவனுக்கு தெரிய வில்லை. “ஊருக்கு போகணும், இவளை சம்மதிக்க வைக்கணும். கல்யாணத்துக்கு தடை ஏதும் வருமான்னு”, யோசித்து யோசித்து அவளிடம் பேசுவதை தவிர்த்தான்.

 

அடுத்த நாள் தான் கல்லூரி கடைசி நாள். தங்களுடைய ப்ராஜெக்ட் டாக்டரை பார்த்து வாழ்த்துக்களை பெற்று கொண்டு அங்கிருந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள் ரிஷியும் ஜானும்.

 

ஜான் தான் ரிஷி இந்தியா செல்வதை நினைத்து பிழிந்து பிழிந்து அழுது கொண்டிருந்தான்.

 

அவனிடம் “நீ நினைச்சா அங்க வந்து என்னை பாக்கலாம் ஜான்”, என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான் ரிஷி.

 

அப்போது அவர்கள் எதிரே வந்து அமர்ந்தாள் அருந்ததி.அவள் திடீரென்று வருவாள் என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த ஜான் இவளை பார்த்ததும் அசடு வழிந்த வாறே முகத்தை துடைத்தான்.

 

“என்ன ரிஷி, ஒரே இங்க தண்ணியா கொட்டி கிடக்கு? காலே வைக்க முடியலை”, என்று ஜானை பார்த்து கொண்டே ரிஷியிடம் கேட்டாள் அருந்ததி.

 

“என் பிரண்ட் என்னை நினைச்சு அழுறான். பாவம் அவனுக்குனு யார் இருக்கா? நானும் கிளம்புறேன்னு அவனுக்கு கஷ்டமா இருக்கு”, என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான் ரிஷி.

 

“ஏன், அவனுக்கு நாங்க எல்லாம் இல்லையா? இன்னொரு தடவை யாரும் இல்லைனு சொல்லாத ரிஷி”, என்று படபடவென்று சொன்ன அருந்ததி ஜான் முகத்தில் வந்த ஒளிர்வை கண்டதும் “இங்க யாருமே தனி இல்லை. உன் பிரண்ட் கிட்ட சொல்லு கவலை படாம இருக்கணும்னு. சரி நீங்க ரெண்டு பேரும் அடுத்து என்ன செய்ய போறீங்க?”, என்று பேச்சை மாற்றினாள்.

 

“ஊருக்கு போய் ப்ரைவேட்ல வேலைக்கு சேந்துட்டே கவர்ன்மென்ட்ல அப்ளை பண்ணனும்”, என்றான் ரிஷி.

 

“ஏன் கிளினிக் போட போறதில்லையா?”, என்று கேட்டாள் அருந்ததி.

 

“எங்க அப்பாக்கு அதுக்கும் பணம் கேட்டா நெஞ்சு வலியே வந்துரும். கொஞ்ச நாள் ஆகட்டும். ஆமா நீ என்ன ஜான் பண்ண போற?”

 

“அழகான பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பெத்துக்க போறேன்”, என்று அருந்ததி கண்களை பார்த்து கொண்டே வெட்கமில்லாமல் சொன்னான் ஜான்.

 

அவன் சொன்னதை கேட்டு வெட்கத்துடன் முகத்தை திரும்பியவள் டேபிளுக்கு அடியில் ஜானின் காலில் ஒரு மிதி மிதித்தாள்.

 

ஜானிடம் இருந்து ஒரு ரியாக்சனும் வரவில்லை என்றவுடன் “சரி ரிஷி, நான் கிளம்புறேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வரணும்”, என்றாள்.

 

“வீட்டுக்கு எதுக்கு?”, என்று கேட்டான் ரிஷி.

 

“எங்க அம்மா அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம்”

 

“இங்க அந்த பங்க்சன் எல்லாம் கொண்டாடுவாங்களா?”

 

“இனி வர ஜெனெரேஷன்ல கொண்டாட மாட்டோம். ஆனா அம்மா அப்பாவுக்கு தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். நான் வேதா கிட்டயும் சொல்றேன். முதல் நாள் நைட் வந்துட்டு அடுத்த நாள் புல்லா இருந்துட்டு அடுத்த நாள் தான் கிளம்பணும். அதுக்கு ரெடியா வாங்க”

 

“அத்தனை நாளா? கண்டிப்பா முடியாது அருந்ததி. இன்னும் மூணு நாள் தான் இருக்கு நாலாவது நாள் நான் இந்தியா கிளம்புறேன்”

 

“ஆமா மூணு நாள் இருக்குல்ல? நாலாவது நாள் நைட் தான பிளைட்? அப்புறம் என்ன?”

 

“நான் வேதா கூட அவுட்டிங் போறேன். அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணலைன்னா உண்டு இல்லைன்னு ஆக்கிருவா. நீ வேணா ஜானை இன்வைட் பண்ணு”, என்று சொல்லி ஜானின் நெஞ்சில் பாலை வளர்த்தான் ரிஷி. அதில் ஆனந்த பட்டு போனான் ஜான்.

 

“அவனையும் சேத்து தான் கூப்பிடுறேன். ரெண்டு பேரும் வரலைன்னா கொன்றுவேன் பாத்துக்கோ. நானும் மூணு வருசமா கூப்பிடுறேன். ஏமாத்திட்டே இருக்க? இனி எப்ப உன்னை பாக்க முடியுமோ? ஒழுங்கா வந்துரு.ஜான் நீயும்”, என்று சொன்னவள் கண்டிப்பா உங்களை எதிர்பார்ப்பேன்”, என்று சொல்லும் போது ஜான் கண்களை பார்த்த படியே சொன்னாள்.

 

அதில் கவர பட்ட ஜானோ, ரிஷியின் காதில் “என் டார்லிங் இவ்வளவு கெஞ்சுது. நீ வர மாட்டேன்னு சொல்ற. ஒழுங்கா மண்டையை ஆட்டலைன்னா, இங்க ஒரு பொண்ணு உன்னை சுத்தி சுத்தி வருதுன்னு வேதா கிட்ட போட்டு கொடுத்துருவேன்”, என்று ஆங்கிலத்தில் கூறினான்.

 

“ஐயையோ, ஆளை விடு ஜான்”, என்ற ரிஷி அருந்ததி புறம்  திரும்பி, “இப்ப என்ன நாங்க மூணு பேரும் வரணும். அவ்வளவு தான? கண்டிப்பா வரோம் போதுமா?”, என்றான்.

 

சிரிப்புடன் தலையை ஆட்டிய அருந்ததி “தேங்க்ஸ் ரிஷி, நான் கிளம்புறேன்”, என்று அவனிடம் கூறி விட்டு ஜானிடம் கண்களால் விடை பெற்றாள்.

 

அதில் புத்துணர்ச்சியுடன் தலையை பலமாக ஆட்டினான் ஜான்.

 

அப்போது “அருந்ததி”, என்று அழைத்தான் ரிஷி.

 

“என்ன ரிஷி?”

 

“நீ மிதிச்சது என்னோட கால்”, என்று சொல்லி சிரித்தான்.

 

அவன் சொன்னதை கேட்டு முகம் சிவப்பதை தடுக்க முடியாமல் ஜானை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து ஓடியே போய் விட்டாள்.

 

இவர்கள் பேச்சை புரியாமல் பார்த்து கொண்டிருந்த ஜானிடம் நடந்தவற்றை சொல்லி ரிஷி சிரித்தும் “எனக்கு கிடைக்க வேண்டிய அந்த கால் டச் உனக்கு கிடைச்சிட்டே”, என்று வருந்தினான் ஜான்.

 

அவனை மேலும் கீழும் பார்த்த ரிஷி “அது டச் இல்லை ஜான். மிதி. இருந்தாலும் உனக்கு காதல் முத்திடுச்சு. அப்புறம் ஜான், என்ன நடக்குது இங்க? எதோ கண்ணாலே பேசிக்கிறீங்க? ஓகே ஆகிடுச்சா?’, என்று கேட்டான்.

 

“எங்க? அவ என்ன நினைப்பில் இருக்கான்னு எனக்கே தெரியல. அப்படி மட்டும் ஓகே சொன்னா அப்படியே சிறகில்லாம பறப்பேன் ரிஷி”, என்றான் ஜான்.

 

“கவலை படாத ஜான். ரெண்டு நாள் அவங்க வீட்ல தான தங்க போறோம்? கண்டிப்பா அவ மனசை தெரிஞ்சிக்கலாம். உங்க கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிட்டு தான் நாங்க இந்தியா போறோம் சரியா?”

 

“நடக்கும் தான?”, என்று கேட்ட ஜானின் கேள்வியில் அதிக ஆர்வமும் சிறிது எதிர்பார்ப்பும் இருந்தது.

 

அவனுக்கு விருப்பமான பதிலை சொல்லி அவன் மனநிலையை மாற்றிய ரிஷி தன்னுடைய அறைக்கு வந்தான்.

 

கட்டிலில் சாய்ந்தவன் தன்னுடைய போனை எடுத்து பார்த்தான். அதில் பல தடவை வேதா அவனை அழைத்திருந்தாள். “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ராட்சசி”, என்று வாய் விட்டே புலம்பிய ரிஷி போனை தூக்கி கட்டிலில் போட்டான்.

 

“இந்த மூணு நாள்ல கண்டிப்பா உன் மனசை மாத்தியே ஆவேன் டி. நான் செத்து போய் இந்த ஜென்மத்தையும் உன் கூட வாழாம இழக்க விரும்பலை. இந்த ரிஷி மேல உனக்கு இருக்குற காதலை உன்னை ஒத்துக்க வைக்கல, நான் ரிஷி இல்லை”, என்று தனக்குள் சூளுரைத்து கொண்டான்.

 

அதன் பின் மனது கொஞ்சம் சமாதானம் ஆனதை போல உணர்ந்தான் ரிஷி.

 

சிறிது நேரம் கழித்து அவனை அழைத்தாள் வேதா. “இப்போதாவது போனை எடுப்பானா?”, என்று தவிப்புடன் தான் அழைத்தாள்

 

“சொல்லு டி”, என்றான் ரிஷி.

 

அவன் எடுத்ததும் சந்தோச பட்டவள் அவனுடைய சாதாரண குரலை கேட்டு திகைத்தாள். “ஒரு நாள் பேசாம இருந்ததுக்கு எதாவது சமாதான படுத்துவானு பார்த்தா இப்படி பேசுறான்”, என்று மனதுக்குள் திட்டி கொண்டு வெளியே சாதாரணமாக “ரூம்க்கு வந்துட்டேன் டா “, என்றாள்.

 

“தெரியுது சொல்லு”

 

“என்ன டா ஒரு மாதிரி சலிப்பா சொல்ற?”

 

“அப்படி எல்லாம் இல்லை டி. ஒரு விஷயம் யோசிச்சிட்டு இருந்தேன்”

 

“அப்படி என்ன உருப்படாத விசயத்தை யோசிச்ச?”

 

“இல்ல அருந்ததி அவ வீட்டுக்கு நம்மளை இன்வைட் பண்ணா. அவங்க அப்பா அம்மாவுக்கு ஏதோ பங்க்சனாம்.  அதான் என்ன பண்ணணு யோசிச்சேன்”

 

“ஹ்ம்ம் என்கிட்டயும் சொன்னா”

 

“என்ன பண்ண?”

 

“போகலாம் டா. ரொம்ப நாளா அவளும் கூப்பிட்டுட்டே இருக்கா. நீ இந்தியா போன அப்புறம் எப்ப வர?”

 

“ஹ்ம்ம் சரி டி”

 

“ஏய் கேக்கணும்னு நினைச்சேன். காதல் மன்னனும் வரானா?”

 

“அவன் இல்லாமலா? அதை ஏன் கேக்குற? ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிறாங்க”

 

“பார் டா, சூப்பர். அவனை நான் நாளைக்கு பாத்துக்குறேன். அவன் லவ் ஓகே ஆச்சுன்னா சந்தோசமா இருக்கும்”

 

“ம்ம்”

 

“என்ன டா ம்ம்? என்ன ஆச்சு டல்லா ஆகிட்ட?”

 

“ஒன்னும் இல்லை. அவன் லவ்வாவது ஜெயிச்சா நல்லது தான்”, என்று வறண்ட குரலில் சொன்னான் ரிஷி.

 

அவன் குரலில் வலித்த மனதை சரி செய்தவள் “நாளைக்கு எப்ப கிளம்பணும்?”, என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.

 

ஒரு பெருமூச்சுடன் “ஜான் கிட்டயும் அருந்ததி கிட்டயும் பேசிட்டு சொல்றேன். பை வைக்கிறேன்”, என்றான்.

 

“அதுக்குள்ளயுமா? கொஞ்சம் நேரம் பேசுவ தான?”

 

“பேச இப்ப ஒன்னும் இல்லை வேதா. ஒரு மாதிரி தலை வலிக்குது. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

 

கண்களில் வழிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் வேதா.

 

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அவரவர் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள். அன்று மாலையும் வந்தது.

 

அருந்ததி வீட்டுக்கு முதல் ஆளாக கிளம்பினான் ஜான்.

 

அவர்களுக்கு கிடைக்க போகும் அதிர்ச்சிகளை அறிந்திருந்தால் அங்கு மூவரும் செல்லாமல் இருந்திருப்பார்களோ என்னவோ?

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement