Advertisement

அத்தியாயம் 14

 

நீ தரும்

காயங்களை கூட

சுகமாக சேமிக்கும்

நொடி வருமெனில்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவளோ அமைதியாக அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள்.

 

அவளை பார்த்து சிரித்த ரிஷி, “கிளம்பலாமா வேதா?”, என்று கேட்டான்.

 

அவனை ஏற இறங்க பார்த்தவள்  “தூங்கு மூஞ்சி இப்படியேவா வர போற?”, என்று கேட்டாள்.

 

“வேற எப்படி வர? முகம் மட்டும் தான் கழுவணும்”

 

“இல்லை டா. டிரஸ் எல்லாம் கசங்கி போய் இருக்கு. இப்படியே வந்தா நல்லா இருக்காது”

 

“ஓ அதுவா? அதுக்கு என்ன செய்ய? இன்னும் ஹாஸ்டல் போய் மாத்த முடியுமா? இன்னைக்கு இதே இருக்கட்டும். வா போகலாம்”

 

“ப்ச் இரு வரேன்”, என்றவள் தன்னுடைய உடைகளின் இடையில் இருந்து ஒரு சட்டையை எடுத்து அவனிடம்  கொடுத்தாள்.

 

வியப்பாக அவளை பார்த்தவன் “இது என்னோட ஷர்ட் தான? இது எப்படி இங்க வந்துச்சு?”, என்று கேட்டான்.

 

“கை கால் முளைச்சு வந்துச்சு. வாயை மூடிட்டு கிளம்பி வா”

 

“இப்ப நீ சொல்லலைன்னா நான் வர மாட்டேன். இது என்னோட சட்டை தான். அடிக்கடி நீ இதையே என்னை போட சொல்ற சட்டை. அம்மா தான் எங்கயோ வச்சிட்டாங்கன்னு நினைச்சேன்.இது எப்படி இங்க வந்துச்சு?”

 

“என்னோட ரிஷி பிரண்ட் நியாபகமா  ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்தேன் போதுமா?”, என்றாள் வேதா.

 

அவள் பதிலை கேட்டு சிரித்து விட்டு கிளம்ப போனான். அவன் வருவதுக்குள் காரை புக் செய்தாள் வேதா. அவன் கிளம்பி வரும் போது தன்னுடைய ஹேண்ட்பேகில் குளிருக்கான கோர்ட்டை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.

 

சிறிது நேரத்தில் காரும் வந்துவிட மகிழ்ச்சியுடன் இருவரும் கிளம்பி போனார்கள்.

 

இங்கு வந்ததில் இருந்து வேதா அதிகமாக எங்கும் சென்றதில்லை. வந்து ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்திருந்தாலும் அவளை வீட்டில் உள்ளவர்களின் நினைவு அதிகமாக வாட்டியது. புது இடம், புது வேலை, புதிய மனிதர்கள் என்று வாழ்க்கையை எதிர் கொள்ள சிறிது சிரம பட்டாள்.

 

அதை விட விவரம் தெரிந்ததில் இருந்து தன்னுடனே இருந்த ரிஷியின் பிரிவு அவளை முழுவதுமாக புரட்டி போட்டது.

 

தான் இங்கே தனியே வந்தது தப்போ என்று பல முறை சிந்தித்தாலும் “அவன் எப்படி என்னை வேண்டாம்னு சொல்லலாம்?”, என்ற வீம்பும் கூடவே இருந்தது.

 

வெளியே எங்கும் செல்லாமல் வேலைக்கு செல்வது, தன்னுடைய அறைக்குள் பதுங்குவது என்றிருந்த வேதா இன்று மனம் முழுவதும் சந்தோஷத்துடனும், முகம் முழுவதும் புன்னகையுடனும் அவனுடன் அமர்ந்திருந்தாள்.

 

கார் வேகம் எடுத்தது. இருவரும் எதையோ பேசிய படியே அந்த பயணத்தை ரசித்தார்கள் .

 

காரை ஓட்டிய டிரைவரும் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே,

அங்குள்ள முக்கிய இடங்களை காட்டிய படியே வந்தார். ஒவ்வொன்றையும் பார்த்தவர்கள் வாரம் ஒரு நாள் வெளிய போகணும் என்று முடிவு செய்தார்கள்.

 

சிறு வயதில் இருந்தே அவனுடன் ஊரை சுற்றும் போதும் றெக்கை இல்லாமல் பறப்பாள் வேதா. அவளுக்கு நண்பர்களுடன் செல்வதை விட ரிஷியுடன் போவது தான் பிடிக்கும். ஊரில் இருக்கும் போதும் இருவரும் ஊர் சுற்றி கொண்டே இருப்பார்கள். இப்போது அந்த நினைவுகள் இருவருக்குள்ளும் ஒன்றாக எழுந்தது.

 

ட்ரைவர் காண்பித்த இரண்டு இடங்களை பார்த்தவர்கள் கடைசியாக அவர் அழைத்து சென்ற கோயிலுக்கு சென்றார்கள்.

 

அமைதியாக அதேநேரம் மனதுக்கு இதமாக கடவுளிடம் வேண்டுதலை வைத்து விட்டு வெளியே வரும் போது “சாப்பிட போகலாமா”, என்று கேட்டான் ரிஷி.

 

“வேண்டாம் டா, சாப்பாடு வாங்கிட்டு ரூம் போயிரலாம்”

 

“ஹ்ம்ம் சரி”, என்ற ரிஷி டிரைவரிடம் ஹோட்டலை பற்றி விசாரித்தான்.

 

அவரும் ஒரு ஹோட்டல் முன் வண்டியை நிறுத்தி அங்கு உணவு நன்றாக இருக்கும் என்றார்.

 

அவனோ அங்கிருந்து பார்ஸல் வாங்கி கொண்டு வந்தான். அவர் ஏன் அங்கு அமர்ந்து சாப்பிட வில்லை என்று கேட்டார்.

 

அவரை பார்த்து சிரித்தவன் அவர் காதில் எதையோ சொன்னான் . அதை கேட்டதும் அவர் புன்னகை அதிகமாக விரிந்தது. இந்த நாடகத்தை பார்த்து கொண்டிருந்த வேதா குறுகுறுவென்று அவர்களை பார்த்தாள்.

 

கண்களால் என்னவென்று விசாரித்தாள். சிரித்து கொண்டே அவளை பார்த்து கண்களை சிமிட்டினான் ரிஷி.

 

அவனை முறைத்தாள் வேதா. மேலும் “ரூம்க்கு வா உனக்கு இருக்கு”, என்னும் விதமாய் சைகை செய்தாள்.

 

சிரித்த படியே காரில் ஏறி அமர்ந்தான். டிரைவரும் சிரித்த படியே காரை அவளுடைய ரூமுக்கு விட்டார்.

 

உள்ளே முதலில் சென்ற ரிஷி அப்படியே கட்டிலில் படுத்து விட்டான்.

 

கதவை பூட்டி விட்டு உள்ளே வந்த வேதா மேலே போட்டிருந்த கோர்ட்டை கழட்டி அதை அவன் மீதே வீசினாள்.

 

சிரித்து கொண்டே எழுந்து அமர்ந்தவன் “ஏன் டி?”, என்றான்.

 

“என்ன ஏன்? நீ அவர் காதுல என்ன டா சொன்ன? அவர் ஏன் என்னை பாத்து சிரிச்சார்? எதுக்கு எருமை கண்ணடிச்ச?”, என்று மூச்சு வாங்க கேள்வி கேட்டாள் வேதா.

 

“ஹா ஹா சும்மா”

 

“சிரிக்காத, பதில் சொல்லு. என்ன சும்மா?”

 

“சொன்னா சண்டை வரும். சோ வேண்டாம்”

 

“சண்டையா? அப்படி என்ன சொல்ல போற? அவர் சாதாரணமா கேட்டார். நீயும் சாதாரணமா பதில் சொல்ல வேண்டியது தான? அதுக்கு எதுக்கு கண்ணடிக்கணும்? அவர் காதுல நீ என்ன சொன்ன?”

 

“ஏண்டி கிஸ் அடிச்சாலும் திட்ற? கண்ணடிச்சாலும் திட்ற? என்ன டி உன் பிரச்சனை?”

 

“நீ பேச்சை மாத்தாத. நீ எதையோ மனசுல வச்சிட்டு தான் அப்படி செஞ்ச?”

 

“ஆமா,  இப்ப யாரு இல்லைன்னு சொன்னது?”

 

“அப்ப சொல்லு”

 

“இல்லை பொது இடத்தில் வச்சு சாப்பிட்டா நீ ஊட்டி விடலைன்னு கோப படுவ. அதனால உனக்கு பொது இடத்தில வச்சு சாப்பிட பிடிக்காதுன்னு சொன்னேன்?”, என்று சொன்னவன் குரலில் சிரிப்பிருந்தது. சந்தேகமாக அவனை பார்த்தவள் சரி எதுக்கு கண்ணடிச்ச?”, என்று கேட்டாள்.

 

“ஒரு நாள் மொட்டை மாடில வச்சு சாக்லேட் சாப்பிட்டதை நினைச்சு பாத்தேன். உனக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். நீ தான் டுயூப் லைட் ஆச்சே? இப்பவாது நான் எதை சொல்றேன்னு நியாபகம் இருக்கா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான்.

 

“எருமை முத்தம் கொடுத்ததை நினைவு படுத்துறான். இவனை….”, என்று நினைத்து பல்லை கடித்தவள்  குப்பென்று சிவந்த முகத்தை மறைத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள். அவளுடைய பேச்சற்ற மௌனத்தை ரசித்தவன் “அழகி டி”, என்று மனதுக்குள் கொஞ்சி கொண்டான்.

 

பாத்ரூமில் இருந்த வேதாவுக்கும் அன்றைய நியாபகங்கள் கண் முன் நிழலாடியது. அவன் முத்தத்தில் தான் மயங்கியதை நினைத்து பார்த்தவளுக்கு இப்போது உடல் சிலிர்த்தது.

 

“இப்ப கல்யாணம் ஆகிருந்தா ரெண்டு பேரும் என்ன நிலையில் இருந்துருப்போம்”, என்று நினைவு வந்ததில் தவித்து போனாள் வேதா.

 

தன்னுடைய நினைவு போகும் போக்கை நினைத்து தன்னையே கடிந்து கொண்டவள் “இந்த எருமையை சீக்கிரம் அடிச்சு ஹாஸ்டலுக்கு பத்தனும்”, என்று முடிவெடுத்து வெளியே வந்தாள்.

 

அவனோ இருவரும் சாப்பிடுவதுக்கு எடுத்து வைத்து கொண்டிருந்தான். முகத்தை சரியாக வைத்து கொண்டே அவனருகே அமர்ந்தாள் வேதா.

 

இடையில் ஊட்டி விட வந்தவனை “நான்  ஒன்னும் பாப்பா இல்லை”, என்று சொல்லி அடக்கி விட்டாள்.

 

அவனும் அடுத்து எதுவும் சீண்டாமல் சாதாரணமாக பேசியதால் அவளும் சகஜமாகிவிட்டாள்.

 

இருவரும் பேசிய படியே உணவை முடித்தார்கள். இது வரை அனைத்தும் சரியாக தான் சென்றது அவள் உதட்டுக்கு மேலே சிறு உணவு துணுக்கு ஒட்டி இருக்கும் வரை.

 

சாதாரணமாக அதை துடைக்க தான் ரிஷி அவளருகே தன் கையை கொண்டு சென்றான். ஆனால் துடைத்த அவன் விரல்களோ அப்படியே அவள் உதட்டில் கோலம் போட்டது.

 

“என்ன டா? சாப்பாடு ஒட்டி இருக்கா?”, என்று சாதாரணமாக கேட்டவளின் வார்த்தைகள் அவன் கண்கள் அவள் உதட்டின் மீது படிவதை பார்த்து வாய்க்குள்ளே புதைந்து போனது.

 

கை ரேகை நிபுணர் ரேகையை ஆராய்ச்சி செய்பவர் போல அவளின் உதட்டின் ரேகையை ஆராய்ச்சி செய்தான் ரிஷி.

 

அவளுடைய தடையில்லா மௌனம் கலையாமல் இருந்ததில் தன்னுடைய இரு விரலால் அவளுடைய கீழுதட்டை பிடித்து இழுத்தான்.

 

படக்கென்று அவள் தட்டி விடவும் தான் சுயநினைவுக்கே வந்தான் ரிஷி.

 

இருவரும் தங்கள் மனநிலையை மறைக்க தங்களுக்குள் போராடினார்கள் . “இதுக்கு மேல இங்க இருந்தா இருக்குற நல்ல மனநிலை ஸ்பாயில் ஆயிரும்”, என்று நினைத்த ரிஷி “சரி வேதா, டைம் ஆகிட்டு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து விட்டான்.

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொன்ன வேதா வேறு எதுவும் பேச வில்லை. ஹாஸ்டலுக்கு வந்த ரிஷியின் நினைவுகள் அனைத்தும் வேதாவையே சுற்றியே இருந்தது.

 

அவளை பற்றிய நினைவுகளுடனே தூங்கி போனான். வேதாவோ அவனால் எழுந்த தாபத்தை அடக்க முடியாமல் ஏண்டா கல்யாணம் வேண்டாம்னு சொன்ன? எதுக்கு டா ஆசை காட்டி மோசம் செஞ்ச?”, என்று நினைத்து நினைத்து கண்ணீர் விட்டாள். சிறிது நேரத்தில் அப்படியே கண்ணயர்ந்தாள்.

 

காலை எப்போதும் போல் அழகாக விடிந்தது. அதன் பின் இருவரும் போனில் பேசி கொள்வதோடு சரி. ஆனால் வார கடைசியில் அவளுடைய அறைக்கு சென்று விடுவான் ரிஷி. அன்று முழுவதும் வெளியே சுற்றி விட்டு இரவு ஹாஸ்டலுக்கு வந்துவிடுவான்.  இப்படியே நாட்கள் எப்போதும் போல் அழகாக நகர்ந்தது.

 

இடையில் ஒரு நாள் ஜான் “வீட்டுக்கு வா டா”, என்று ரிஷியை அழைத்தான்.

 

“ஹ்ம்ம் சரி டா”, என்று சொன்ன ரிஷியும் அன்று மாலை “நாளைக்கு ஜான் வீட்டுக்கு வரியா வேதா?”, என்று அவளிடம்  கேட்டான்.

 

“நானா? சரி டா, நீ வந்து பிக்கப் பண்ணிக்கோ”, என்று சம்மதம் சொன்னாள் வேதா.

 

வேதா இது வரை ஜானை பார்த்ததில்லை. ஆனால் ரிஷி அவனை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்வி பட்டிருக்கிறாள்.

 

அன்று காலையே வேதாவை அழைக்க சென்று விட்டான் ரிஷி. இருவரும் ஜானின் வீட்டுக்கு சென்றார்கள்.

 

ஜானின் வீட்டில் போய் இறங்கியதும் அந்த இடத்தை வெகுவாக ரசித்தாள் வேதா.

 

மிக பெரியதாக இருந்தது அவனுடைய வீடு. “உன் பிரண்ட் செம பெரிய பார்ட்டி போல டா ரிஷி?”, என்று கேட்டாள் வேதா.

 

“அப்படி தான் போல டி. பாரேன் எவ்வளவு பெரிய வீடு. ஆனா அவன் அப்படி காமிச்சிக்கிட்டது இல்லை. சரி  வா உள்ள போகலாம்”, என்று சொல்லி அழைப்பு மணியை அழுத்தினான்.

 

கதவை திறந்த ஜான் அவர்களை அன்புடன் வரவேற்றான்.

 

வேதா தான் அவனை பார்த்து திகைத்து போனாள். வெள்ளையர்களுக்கான நிறத்தில் இருந்தாலும் வெகு அழகாகவே இருந்தான்.

 

உள்ளே சென்ற வேதா “உன் பிரண்ட் சும்மா சூப்பரா இருக்கான் டா”, என்று சொல்லி சிரித்தாள்.

 

“ஏய் சும்மா இரு டி. அவன் என்ன நினைப்பான்?”, என்று ரிஷி அவளை அடக்கினான்,

 

“போடா லூசு அவனுக்கு என்ன தமிழா தெரிய போகுது? சூப்பரா இருந்தா சூப்பர்னு தான சொல்ல முடியும்?”,என்று வேதா சொன்னவுடன் “என்னை விட அழகா?”, என்ற கேள்வியை கண்களில் தாங்கி சிறு சிணுக்கத்துடன் அவளை பார்த்தான்.

 

அவன் கேள்வியை உணர்ந்தவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டாள். அதற்குள் ஜானின் குரல் அவர்களை கலைத்தது.

 

அவர்களை அமர சொன்ன ஜான் அவர்களுக்கு சாப்பிட கொடுத்தான். பின் அவர்கள் எதிரே அமர்ந்து பேசி கொண்டிருந்தான். வேதாவும் அவனிடம் நன்றாக தான் பேசினாள். ஆனால் சிறிது நேரத்திலே  நொந்து விட்டாள்.

 

அப்போது ஜானை பார்க்க ஒருவன் வந்தான். ஜான் அருகே வந்தவன் ஜானிடம் சில பைல்களில் கையெழுத்தை வாங்கினான்.

 

அப்போது “ஏண்டா ரிஷி? எப்படி டா இவன் கூட கிளாஸ்ல உக்காந்துருக்க? கஷ்ட காலம். இப்படி பேசியே சாகடிக்கிறான். ஆள் அழகா இருந்து என்ன செய்ய? சரியான ப்ளேடா இருக்கான் டா”, என்றாள் வேதா.

 

“என்ன செய்ய? அனுபவிச்சு தான் ஆகணும். சரியான லொட லொட தான். நானே கம்மியா இவன் எப்ப டா பேசுவான்னு இருக்கும். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எங்க ப்ரோபாஷர் அருந்ததி இருக்காங்கல்ல?”

 

“ஆமா, அப்படியே புகழ்ந்து தள்ளுவியே? அவங்களுக்கு என்ன?”

 

“அவங்களுக்கு என்ன வா? சார் அவங்களை சரியான சைட் அடிப்பார் தெரியுமா?”

 

“என்னது அப்படியா?”

 

“ஆமா டி. அப்படியே கண்ணால காதலை பரப்புவான். ஆனா பாவம்”

 

“ஏண்டா?”

 

“அங்க இருந்து தான் ரெஸ்பான்ஸ் வராது”

 

“ஐயையோ, இவனை எப்படி டா அவங்களுக்கு பிடிக்காம போகும்? ஆள் சூப்பரா தான இருக்கான்?”

 

“ஏண்டி, அதை நாம சொல்ல முடியுமா? லவ் எப்ப யார் மேல வரும்னு யாருக்கு தெரியும்? ஏன், எனக்கு உன் மேல வரலையா? அதே மாதிரி தான்”

 

“இப்ப எதுக்கு அதை பேசுற?”, என்று அவள் பேசி முடிக்கவும் கை எழுத்து போட்டு கொண்டிருந்த பைலை அந்த ஆளிடம் கொடுத்து விட்டு இவர்களிடம் திரும்பினான்.

 

“அவன் பாக்கான். நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கலாம்”, என்று சொன்ன ரிஷி ஜானை பார்த்தான்.

 

அப்போது வேதா தான் “வீட்டில் வேற யாரும் இல்லையா ஜான்?”, என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

 

“யாரும் இல்லை”

 

“ஆமா, நானே கேக்கணும்னு நினைச்சேன். ஏன் யாரும் இல்லை? எல்லாரும் எங்க போயிருக்காங்க? அம்மா அப்பா எங்க?”, என்று கேட்டான் ரிஷி.

 

“அவங்க அவங்க வீட்ல அவங்க இருக்காங்க”, என்று விரக்தியான குரலில் சொன்னான் ஜான்.

 

“என்ன ஆச்சு ஜான்?”

 

“அம்மா அப்பா பிரிஞ்சி போய் வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. கூட பிறந்தது யாரும் இல்லை. ஆனா அதிகமா சொத்து சேத்து வச்சிட்டு தான் போயிருக்காங்க”, என்று ஜான் சொல்லி முடிக்கவும் அங்கே அமைதி நிலவியது.

 

“சின்ன வயசுல இருந்து தனியா தான் இருக்கியா?”

 

“ஹ்ம்ம் ஆமா ரிஷி. பக்கத்து வீட்டு அங்கிள் மட்டும் தான் எனக்கு உறவு. அவருக்கும் யாருமே இல்லை. அவரும் நானும் தான் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாரு. அவர் கூட தான் நான் இந்தியா எல்லாம் வந்துருக்கேன். இன்னும் ஒரு குட் நியூஸ் சொல்லவா?”

 

“குட் நியூஸா? என்ன ஜான்?”, என்று சாதாரணமாக தான் கேட்டான் ரிஷி.

 

“அவர் தான் எனக்கு பலவருஷமா தமிழ் குரு. எனக்கு அவர் தான் தமிழ் சொல்லி தந்தார்”, என்று அவன் புன்னகையுடன் சொல்லி முடிக்கவும் அதிர்ச்சியாக ரிஷியும் வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். அவர்களை பார்த்து அழகாக சிரித்தான் ஜான்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement