Advertisement

 

அத்தியாயம் 9

 

உன் புடவை

நுனி என்னை

தீண்டும் போது

பற்றும் காதல் தீ!!!!!!

 

“ஹ்ம்ம் விஷ்ணு தான். என்னோட விஷ்ணுவே தான்”, என்று புன்னகையுடன் சொன்னாள் சத்யா.

 

“அப்ப தெரியாதுன்னு சொன்ன? அவர் கிட்டயே நீங்க யாருனு கேட்ட?”, என்று கேட்டாள் காவ்யா.

 

“பாத்த தான? அவர் எப்படி இருக்காருன்னு. ஆனா நம்ம நிலைமை? அவரெல்லாம் வேற லெவல். அதனால என்னை பத்தி அவர் கிட்ட எப்படி காட்டிக்க முடியும்?”

 

“அப்ப உன் காதல்? உங்க ஹாஸ்பிடல் டாக்டர் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்ப இவரை நினைச்சு தான முடியாதுனு சொன்ன? இப்ப இப்படி சொல்ற? இவர் கிட்ட உன் காதலை சொன்னா தான டி உனக்கு கல்யாணம் நடக்கும்?

 

“காதல் இல்லை டி. அது வேள்வி. கண்டிப்பா அது நிறைவேறும். நிறைவேறலைன்னா கூட கவலை பட மாட்டேன். கடைசி வரைக்கும் அவர் தான் என் கணவன். ஆனா என்னால இப்ப காதலை சொல்ல முடியாது”

 

“மண்டை காயுது எனக்கு ஒன்னுமே புரியலை”

 

“அதை அப்புறம் பாக்கலாம். இப்ப கல்லு காயுது அடுத்த தோசை ஊத்து”, என்று சொல்லி விட்டு அவனுக்கு சட்னியை எடுத்து சென்றாள்.

 

தன்னுடைய தோழியின் வாழ்க்கையாக இருக்கும் அவனுக்கு சந்தோசத்துடன் அடுத்த தோசையை ஊற்றினாள் காவ்யா.

 

“எனக்கு போதும். சாரி ரொம்ப நாள் கழிச்சு நல்லா சாப்பிட்ட மாதிரி இருக்கு. ரொம்ப சாப்பிட்டுட்டேன். தேங்க்ஸ்”, என்றான் விஷ்ணு.

 

“பரவாயில்லை”, என்று சொல்லி கொண்டே அவன் எச்சி தட்டை எடுத்து கொண்டாள். அதே தட்டில் தான் தன்னுடைய உணவையும் அவள் முடித்தாள் என்பது அவளும் காவ்யாவும் அறிந்த உண்மை.

 

பதினோரு மணிக்கு வந்த மணி “போகலாமா சார்?”, என்று கேட்டான்.

 

“போகலாம் மணி”, என்று சொல்லி காரில் அவனருகில் அமர்ந்தான் விஷ்ணு. ஒரு பேகை எடுத்து கொண்டு காரில் ஏற வந்தாள் சத்யா.

 

“பின்னாடி உக்காந்துக்கோ சத்யா”, என்றான் விஷ்ணு. காவ்யாவிடம், சத்யா விடை பெற்ற பிறகு கார் கிளம்பியது.

 

“ஏன் சார், எனக்கு ஒரு டவுட். அந்த பிரியா பொண்ணு வரலையா? அந்த ராங்கி ரெங்கம்மாவை கூட்டிட்டு வராம சத்யா அப்படிங்குற இந்த பொண்ணை கூட்டிட்டு வந்துருக்கீங்க?”, என்று கேட்டான் மணி.

 

அடுத்த நொடி அவன் மண்டையில் நங்கென்று கொட்டினாள் சத்யா.

 

“ஆஹ்”, என்று தலையை தேய்த்த படி இருவரையும் பார்த்தான் மணி. இருவர் பார்வையும் புரியாமல் “என்ன சார் இது?”, என்று கேட்டான்.

 

“ஹா ஹா இவ தான் நீ சொன்ன ராங்கி ரெங்கம்மா. அப்ப நானும் இப்படி பேசி தான் இவ கிட்ட மாட்டிகிட்டேன். நான் கொட்டுல இருந்து தப்பிச்சிட்டேன். நீ மாட்டிக்கிட்ட”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“அப்ப சத்யான்னு சொன்னீங்க”

 

“முழு பேரு சத்யபிரியாவாம். கழுதைக்கு பேரு முத்துமாலையாம்”, என்று சொல்லி அவளை பாத்து நக்கலாக சிரித்தான்.

 

அவளோ அவனை எரித்து விடுவது போல முறைத்தாள் சத்யா.

 

“உங்களுக்கு எப்படி சார் இப்படி எல்லாம் பழமொழி தெரியும்?”, என்று சிரித்தான் மணி.

 

“ஆமா ஆமா இவர் பேரு மட்டும் ரொம்ப அழகான பேரு பார். விஷ்ணு கொஸ்னு”, என்று சொல்லி சிரித்தாள் சத்யா.

 

“அவளுக்கு தன் பெயர் எப்படி தெரியும்?”, என்ற யோசனை சிறிதும் இல்லாமல் அவளுடன் “என் பேருக்கு என்ன குறைச்சல்?”, என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடு பட்டான் விஷ்ணு.

 

மணியும் சேர்ந்து கொண்டதால் இருவரும் அவளை குறை சொல்லிய படியே வந்தார்கள். வெகு நாள்களுக்கு பிறகு உற்சாகமான மனநிலையில் இருந்தான் விஷ்ணு.

 

சிறு வயதில் இருந்தே இப்படி அவனுடன் சண்டை போட, கூட ஒரு ஜீவன் இருந்ததில்லை. இன்று அந்த இடத்தை நிரப்பிய சத்யாவுடன் சண்டை இடுவது அவனுக்கு பிடித்திருந்தது.

 

வெகுநாள்களாக சந்தோசத்தை தொலைத்த முகத்துடன் நடமாடி கொண்டிருந்த சத்யா இன்று அவனை கண்டதும் அவளுடைய இயல்பான குணம் தலை தூக்க அவனுடன் வார்த்தை போரில் மல்லுக்கு நின்றாள்.

 

“ஏம்மா, இந்தா பேச்சு பேசுறீங்களே? என்ன வேலை செய்றீங்க?”, என்று மணி கேட்டதற்கு “ஹாஸ்ப்பிட்டலில் நர்ஸ்”, என்று சத்யா சொன்னால் “இவ கூட வேலை பாக்குறவங்க கண்டிப்பா ஹாஸ்ப்பிட்டலுக்கு தான் போகணும். இவளுக்கு எல்லாம் எந்த மடையன் வேலை கொடுத்தானோ?”, என்று ஓட்டினான் விஷ்ணு.

 

இப்படியே அவர்கள் சண்டை தொடர்ந்தது. அந்த பயணம் அழகானதாக அமைந்தது. மூவரும் ஒரு பொட்டு கூட தூங்க வில்லை.

 

மணி காலை ஒன்பது ஆகி இருந்தது. அன்று மாதிரி ஊருக்கு செல்லாமல் நேராக ஹாஸ்ப்பிட்டலுக்கு போக சொன்னான் விஷ்ணு.

 

ஹாஸ்ப்பிட்டலில் இறங்கியதும் மூவரும் உள்ளே சென்றார்கள். அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் தேன்மொழி.

 

இவர்களை பார்த்து முகம் முழுவதும் புன்னகையுடன் ஓடி வந்தவள் சத்யாவை இறுக கட்டி கொண்டாள்.

 

“நீ வரவே மாட்டியோன்னு நினைச்சேன் பிரியா. வந்தது சந்தோசமா இருக்கு”, என்று சந்தோசமாக சொன்னாள் தேன்மொழி.

 

“உன் பாசமலர் அண்ணன் தான் இழுத்துட்டு வந்துட்டாரே. சரி நான் என் செல்லத்தை பாக்க போறேன். உங்க அண்ணனை கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டிட்டு வா. அத்தைக்கு அதிக சந்தோசம் உடனே வேண்டாம்”, என்று சொல்லி அவனை ஒரு முறை முறைத்து விட்டு உள்ளே சென்றாள் சத்யா.

 

“அம்மா எப்படி இருக்காங்க. கண்ணு முழிச்சிட்டாங்களா? என்னை பத்தி ஏதும் கேட்டாங்களா மா??”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“இல்லைண்ணே. நான் சொல்லலை. நீ வந்து பாத்துக்கட்டும்னு விட்டுட்டேன். இப்ப நல்லா இருக்காங்க. சரி எப்படிண்ணே, நீ கூப்பிட்ட உடனே  பிரியா வந்தா? வரவே மாட்டான்னு நினைச்சேன்”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“வர மாட்டேன்னு சொன்னா, திமிர் பிடிச்சவ. மிரட்டி கூட்டிட்டு வந்துருக்கேன்”

 

“ஹா ஹா மிரட்டுனியா? அவளை எல்லாம் மிரட்ட முடியுமா?”

 

“நீ என்ன அவளை வந்த உடனே கொஞ்சுற? இப்பவும் அவளை பாராட்டுற? அவ நம்ம அம்மாவை அழ வைக்கிறவ மா?”

 

“ஹ்ம்ம், ஆனாலும் அவ மனசையும் பாக்கணுமே அண்ணா. அவ மனசுல என்ன இருக்குனு தெரியாம அம்மாவும் அவளை கல்யாணத்துக்கு கட்டாய படுத்துனா அவ என்ன செய்வா? அதான் கோப பட்டு போய்ட்டா”

 

“என்னது கல்யாணமா? நீ என்ன மா சொல்ற? அவ அம்மாவை அழ வைக்கலையா?”

 

“அது ஒரு பெரிய கதை. போன வாரம் அம்மாக்கு திடிர்னு உடம்புக்கு முடியலை. இப்படி தான் ஹாஸ்ப்பிட்டலில் சேத்தோம். ஆனா அம்மா உடனே எனக்கு கல்யாணம் வைக்கணும். நான் ரொம்ப நாள் வாழ மாட்டேன்னு ஒரே அழுகை. ஆனா எனக்கும் செந்தில் மாமாக்கும் ஏற்கனவே பேசி வச்சதுனால தான் சரினு சொல்லியாச்சு. ஆனா பிரியாவுக்கும் கல்யாணம் வைக்கணும்னு அம்மா ஒரே அடம். எப்பவுமே எதிர்ப்பா சொல்ற அப்பாவும் அத்தையுமே அவ கல்யாணத்தையும் வைக்கணும்னு சொன்னாங்க. ஆனா அவ வேண்டாம்னு சொல்லிட்டா”

….

 

“அவ அம்மா மேல உயிரையே வச்சிருக்கா. அம்மாக்காக உயிரையும் கொடுப்பா. ஆனா அவ அம்மா பேசுனதுக்கு எதிரா பேசுனது இந்த தடவை தான். எல்லாரும் எவ்வளவோ பேசி பாத்துட்டோம். கடைசில நான் இனி இங்க வரவே மாட்டேன் அத்தை. இப்ப கூட சாக சொல்லுங்க செத்துறேன். ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம். இனி என்ன நடந்தாலும் இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டா”

 

“இவ்வளவு விஷயம் நடந்துருக்கா? நான் வேற இது தெரியாம இங்க என்ன நடந்தாலும் நான் பொறுப்புன்னு சொல்லிருக்கேனே? என்ன நடக்க போகுதோ?”, என்று யோசித்தவனின் சிந்தனையை தடை செய்தது தேன்மொழியின் குரல்.

 

“அண்ணா வா, அம்மாவை பாப்போம்”, என்று சொல்லி அவன் கையை பற்றி அழைத்து சென்றாள்.

 

கொஞ்சம் படபடப்பான மனதுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் விஷ்ணு. அங்கே அன்னலட்சுமி எழுந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்ணை தன் கைகளால் பொத்தியிருந்த சத்யா “அத்தம்மா இப்ப உனக்கு ஒரு ஆளை காட்ட போறோம். நீ யாருன்னு கண்டு பிடிக்கணும். கண்ணை திறக்க போறேன்”, என்று குதூகலத்துடன் சொல்லி கொண்டிருந்தாள் சத்யா.

 

கண்களில் நீர் வழிய நின்றிருந்தான் விஷ்ணு. ஆவலே உருவாக நின்றாள் தேன்மொழி.

 

“ஏய் பிரியா, என்ன டி சின்ன புள்ள மாதிரி விளையாடிட்டு இருக்க? என்னைய பாக்க யார் வந்துருக்காக? யாரையும் கல்யாணம் கட்டி கூட்டியாந்துட்டியா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் அன்னலட்சுமி.

 

அவன் அன்னையின் குரலில் கண்களை இறுக மூடி திறந்தான் விஷ்ணு. அவர்களை அதிகம் தவிக்க விடாமல் அன்னலட்சுமியின் கண்களை திறந்தாள் சத்யா.

 

கண்ணை திறந்த அன்னலட்சுமிக்கு ஒரு நிமிடம் தன் கண்களையே நம்பமுடியவில்லை. தன்னுடைய ஜாடையில் ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் நின்ற விஷ்ணுவை அவள் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.

 

கண்கள் கலங்க, உதடு துடிக்க அவனை பார்த்தாள். உதட்டில் இருந்து ஒரு வார்த்தையையும் அவளால் வெளி கொணர முடியவில்லை. இது உண்மையா என்னும் விதமாய் தேன்மொழியை பார்த்தாள்.

 

“அம்மா, நம்ம அண்ணா மா. உன் பையன். உன்னை தேடி வந்துருக்கான் மா”, என்று கண்ணீருடன் சொன்னாள் தேன்மொழி.

 

அவனும் அசையாமல் பார்த்து கொண்டே இருந்தான். அவன் கண்களிலும் கண்ணீரின் தடம். இந்த காட்சியை கண்டு சத்யாவின் கண்களும் கலங்கியது.  தன்னை சமாளித்தவள் “அத்தான், அத்தை கிட்ட வாங்க”, என்று சொன்னாள்.

 

அருகில் வந்தவன் வாய் நிறைய நடுங்கும் குரலில்  “அம்மா”, என்று அழைத்தான்.

 

அந்த நொடியில் உயிர்த்தாள் அன்னலட்சுமி. இந்த உலகத்தில் தாய் மற்றும் மகன் பாசத்துக்கு மதிப்பில்லாமல் போகுமா”

 

“ராசா…”, என்று கதறி விட்டாள் அன்னலட்சுமி. அடுத்த நொடி கட்டிலை அடைந்தவன் தன் அன்னையை இறுக தழுவி கொண்டான்.

 

இந்த பாச போராட்டத்தை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த மணியின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. அதே நேரம் சாப்பாடு கொடுக்க வந்த செந்திலும் அவர்களை கலைக்காமல் வாசலிலே நின்று விட்டான்.

 

“அம்மா”, என்ற வார்த்தையை தவிர்த்து எதுவுமே பேச வில்லை விஷ்ணு. அன்னலட்சுமியோ “கடவுளே என் செல்வத்தை ஒரு தடவையாவது கண்ணால பாத்துட்டு தான் கண்ணை மூடணும்னு வேண்டினதை நிறைவேத்துட்ட. என் தங்கத்தை என் கண்ணுல காமிச்சிட்ட. என் வேண்டுதல் வீண் போகலை. என்னோட மறு பிம்பமா வந்து நிக்குதே. என் ரத்தம். இப்படி இந்த ஜென்மத்துல பிரிச்சு வச்சு என்னை பதங்கொலைய வச்ச உன்னை திட்டுனேனே? என்னை மன்னிச்சிரு மாரியாத்தா. என் புள்ளைய கண்ணுல காட்டிட்ட. இதை விட வேற என்ன வேணும் எனக்கு. இப்பவே என் உயிர் போனா கூடா சந்தோசம் தான்”, என்று புலம்பி கொண்டே இருந்தாள்.

 

வலுவிழந்தது போல இருந்த அவளுடைய கைகள் அவனை அப்படி ஒரு இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் அவனை இனி தவற விடமாட்டேன் என்ற எண்ணமே தெரிந்தது.

 

தன் அன்னையின் முகத்தை இரு கைகளிலும் தாங்கியவன் “இப்படி எல்லாம் பேசாதீங்க மா. உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது. நீங்க ரொம்ப  வருஷம் எங்க கூட இருப்பீங்க”, என்று சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

 

அவள் கண்ணீரோ நிற்காமல் பெருகி கொண்டே இருந்தது. “அழாதீங்க மா, எனக்கு கஷ்டமா இருக்கு”, என்றான் விஷ்ணு.

 

“இல்லை ராசா, இத்தனை நாள் எதுக்கு டா வாழுறோம்னு அழுவேன். ஆனா உன்னை என்னைக்காவது கண்ணால கண்டுற மாட்டோமான்னு தோணும். என் தங்கம் உன்னை பாத்துட்டேன். இது சந்தோஷத்துல வந்த கண்ணீருப்பா. என்னால நம்ப முடியலையே. என்னை விட்டு போகாத ராசா. உன் மடில தான் இந்த உசுரு போகணும். நீ கொல்லி வச்சா தான் என் கட்டை வேகும்”, என்று சொன்னவள் வாயை நடுங்கும் விரல்களால் மூடினான் விஷ்ணு.

 

அவனை பார்த்து கண்ணீருடன் சிரித்தவள் அப்படியே அவன் முகத்தை இரு கைகளிலும் வலித்து தன் தலையில் வைத்து அழுத்தி திஷ்டி கழித்தாள். “அப்படியே ராசா கணக்கா இருக்க அப்பு. தேனு தேனும்மா அண்ணனை பாத்தியாத்தா? அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் பாரு. என் பிள்ளை வந்துட்டான், இனி எனக்கு கவலை இல்லை”, என்று வார்த்தையால் குதூகலித்தாள் அந்த அன்னை.

 

“ஐயோ, எவ்வளவு நேரம் தான் இந்த அழுகாச்சி நாடகத்தை நாங்க எல்லாம் பாக்குறது. போர் அடிக்குது”, என்று சொல்லி  நிலைமையை சகஜமாக்கினாள் சத்யா.

 

“ஏய் வாயாடி, இங்க நாடகமா நடத்திட்டு இருக்கோம். என் பிள்ளை வந்துருக்கான்னு நானே பூரிச்சு போய் இருக்கேன்”, என்றாள் அன்னலட்சுமி.

 

“அத்தம்மா, நீ அழுதா எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல? பின்ன நான் அப்படி தான் சொல்லுவேன்”

 

“அழமாட்டேன் ஆத்தா, சரி வீட்டுக்கு போவோமா? என் பிள்ளைக்கு என் கையால வாய்க்கு ருசியா சமைச்சு போடணும். இப்பவே போகலாம்”, என்று குழந்தை போன்று குதூகலித்தாள் அன்னலட்சுமி.

 

ஏற்கனவே டாக்டர் இன்று செல்லலாம் என்று சொல்லி இருந்ததால் “இப்பவே போகலாம்”, என்று செந்திலும் சொல்லி விட்டதால் அனைவரும் கிளம்பினார்கள்.

 

காரில் செல்லும் போது ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்தாள் அன்னலட்சுமி. அவளை பார்த்த சத்யா “என்ன அத்தம்மா? இவ்வளவு நேரம் சந்தோசமா இருந்த? இப்ப முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள்.

 

“அதானே என்ன மா ஆச்சு?”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“ஏட்டி, எனக்கு உன் அப்பாவையும், அத்தையையும் நினைச்சு தான் பயமா இருக்கு. அவுக வாயை திறந்தாலே அசிங்கமா பேசுவாங்க. இதெல்லாம் என் பிள்ளைக்கு தெரிஞ்சா வருத்த படுவானே. நாக்குல நரம்பில்லாம பேசுற அவுக முன்னாடி போய் நின்னா என் பிள்ளை அந்த பேச்சை தாங்குவானா?”

 

“அம்மா, அண்ணனுக்கு நான் நேத்தே எல்லாம் சொல்லிட்டேன். அண்ணன் புரிஞ்சிக்குவாங்க. அதுக்காக அவுங்களுக்கு நாம விசயத்தை மறைக்க முடியுமா? இப்பவே என்ன சண்டையை இழுக்க காத்திருக்காகளோ?”

 

“விடு அத்தம்மா. எல்லாத்தையும் உன் பிள்ளை பாத்துக்குவாக. பாக்க ஆஜானு பாகுவா இருக்காங்க. இவங்களை பாத்தாலே, அம்மாவும் மாமாவும் நடுங்கிருவாங்க. நீ இனியாவது கவலை இல்லாம இரு”

 

தேன்மொழி சொன்னது போல அங்கே சண்டையை ஆரம்பிக்க தான் காத்திருந்தார்கள். வடிவும் ஆறுமுகமும்.

 

“ஆமா, இப்படி வாரத்துல ஒரு நாள் உன் பொண்டாட்டி ஆஸ்பத்திரில போய் கிடந்துக்குறாளே, பீடை. இவ வந்ததுல இருந்து சனியனா தான் இருக்கு. நம்ம வீட்டுக்கு”, என்றாள் வடிவு.

 

“ஆமாக்கா. இவளை எல்லாம் எப்பவோ வீட்டை விட்டு துரத்தணும்னு சொன்னேன். நீ தான் என்னை ஊருல தப்பா பேசுவாங்க. வீட்லே அடிமையா கிடக்கட்டும்னு சொல்லிட்ட”, என்ற ஆறுமுகம் “சரிக்கா, நான் போறேன்”, என்றார்.

 

“வீட்டுக்கு தான போற?”

 

“ஆமா ரெண்டு நாளா வீட்டுக்கு போகலை. இங்கயே இருந்துட்டேன். அவ  ஆஸ்பத்திரில இருக்கான்னே, நம்ம பரமன் தான் சொன்னான். அங்க போய் என்ன செய்யன்னு தான உன் வீட்டுலே இருந்தேன். இப்ப ரெண்டு கழுதையும் வந்துருக்கும்”

 

“இரு நானும் வரேன். ஒரு எட்டு அவளையும் பாத்துட்டு தேன்மொழியையும் செந்திலையும் இங்க கூட்டிட்டு வரணும். எவ்வளவு நாள் தான் அங்கேயே இருப்பாக? ரெண்டு நாள் இங்க இருந்துட்டு புது வீட்டுக்கு போகட்டும்”

 

“சரிக்கா, வா”, என்று அவர் சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள்.

 

தீ பற்றும் …….

 

Advertisement