Advertisement

 

அத்தியாயம் 8

 

என் ஒற்றை

பார்வையை தாங்க

முடியாமல் நீ

தலை குனிகையில்

பற்றும் காதல் தீ!!!!!!!

 

சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஒன்றின் பல் மருத்துவ பிரிவில் சுத்தம் செய்ய பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை மீண்டும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சத்யா.

 

அவள் உடையே அவள் அந்த ஹாஸ்ப்பிட்டலின் நர்ஸ் என்று சொல்லாமல் சொன்னது.

 

தலையை இறுக்க பின்னி கொண்டை போட்டு ஒரு நிமிர்வுடன் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தவளின் முகம் மட்டும் சாந்தமாக இருந்தது.

 

குத்துவிளக்கின் சுடர் போல பிரகாசிக்கும் அவள்  அழகு பார்ப்பவரை நிச்சயமாக திரும்பி பார்க்க வைக்கும்.

 

ஒரு வித அலைப்புறுதலுடன் அவள் இருந்தாலும் கை மட்டும் அவளை அறியாமலே அவளுடைய வேலையை செய்து கொண்டிருந்தது.

 

அப்போது “சத்யா எல்லாம் தயாரா இருக்கா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான் இளம் பல் மருத்துவன் விஜய் ஆனந்த்.

 

தன்னுடைய சிந்தனையில் இருந்து கலைந்த சத்யா “எஸ் டாக்டர். உங்களுக்காக தான் வெயிட் பண்றேன். எல்லாம் ரெடியா இருக்கு.  பேஷண்டை வர சொல்லவா?”, என்று இன்முகத்துடன் கேட்டாள்.

 

“வீட்ல பொண்டாட்டியா காத்திருக்க சொன்னா நர்சா காத்துருக்கேன்னு சொல்றாளே”, என்று மனதில் நினைத்தவன் தன்னுடைய சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டு அன்றைய வேலையை கவனித்தான்.

 

விஜய் அதே ஹாஸ்ப்பிட்டலில் நான்கு வருடங்களாக வேலை செய்கிறான். சத்யா இங்கே வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது.   வந்த உடனே அவளுடைய அழகினாலும், திறமையினாலும் கவர பட்ட விஜய் ஒரு மாலை பொழுதில் தன்னுடைய காதலை அவளிடம் கூறி விட்டான். அதுவும் காதல் என்று சொல்லாமல் திருமணத்தை பற்றி தான் பேசினான்.

 

அழகான புன்னகையுடன் அவன் பேச்சை தடுத்தவள் தன்னுடைய மறுப்பையும் தெளிவாக சொல்லி விட்டாள். அதன் பின்னர் அவன் அவளிடம் வேலையை தவிர வேற எதையும் பேசுவதில்லை.

 

அவன் கண்ணியத்தை கடை பிடித்ததால் சத்யா தன்னுடைய வேலையை அங்கேயே தொடர்ந்தாள்.

 

அவனும் வீட்டில் அன்னையின் தொல்லை தாங்காமல் வேறு பெண் பார்க்க சொல்லி விட்டான். ஆனாலும் அவன் மனதில் ஒரு குறுகுறுப்பு உண்டு. “அவ வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் என்ன குறைஞ்சு போய்ட்டேன்? ஒரு வேலை பல் டாக்டர்னு பிடிக்கலையோ?”, என்ற கேள்வி எப்போதுமே அவன் மனதில் எழும்.

 

வரிசையாக பல்லை பிடுங்க காத்திருப்பவர்களை ஒவ்வொருவராய் இருவரும் கவனித்து சிகிச்சை பார்த்து முடிப்பதற்குள் இருட்டி விட்டிருந்தது.

 

“டாக்டர் மணி ஏழு ஆகிடுச்சு. நான் கிளம்பலாமா?”, என்று கேட்டாள்  சத்யா.

 

“ஓகே சத்யா, நானும் இப்ப கிளம்பிருவேன். குட் நைட்”, என்று அவளிடம் சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

தன்னுடைய பேகை எடுத்த சத்யா லிஃப்டை தவிர்த்து படிகளில் இறங்கி வந்தாள். ஹாஸ்ப்பிட்டலில் இருக்கும் தெருவில் இருந்து இரண்டாவது தெருவில் தான் அவளுடைய வீடு இருக்கிறது.

 

வீடு என்றால் வீடு இல்லை. இவளும் அவளுடைய தோழி காவ்யாவும் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள்.

 

காவ்யா ஒரு ஐ. டி கம்பெனியில் வேலை செய்கிறாள். சத்யா சென்னைக்கு வந்த  புதிதில் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்த போது தான் காவ்யாவை சந்தித்தாள். அதன் பின் இருவரும் தோழிகளாகி தனி வீடு எடுத்து தங்கி விட்டனர்.

 

ஹாஸ்ப்பிட்டலை விட்டு வெளியே இறங்கி நடந்த சத்யா மணியை பார்த்தாள். “மணி எட்டு தான் ஆகுது. கண்டிப்பா இன்னும்  காவ்யா வந்திருக்க மாட்டா. காய் கறி வாங்கிட்டு போகலாம்”, என்று நினைத்து தேவையானவற்றை வாங்கியவள் தன்னுடைய வீட்டுக்கு  சென்றாள்.

 

காவ்யா வண்டி இல்லை என்றதுமே அவள் வர வில்லை என்று முடிவு  செய்து தன்னுடைய கை பையில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்தவள் உள்ளே சென்று எல்லாவற்றையும் வைத்து விட்டு கதவை மூடி கொண்டாள்.

 

பின் பாத்ரூம் சென்று குளித்து விட்டு இரவு உடையை மாற்றினாள். அப்போதும் காவ்யா வந்திருக்க வில்லை.

 

“இன்னைக்கு மேடம்க்கு ரொம்ப வேலை போல? நல்லா பசியில் வருவா. எதாவது சமைப்போம்”, என்று சொல்லி கிட்சன் உள்ளே சென்றவள் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தாள்.

 

“சார், இந்த அட்ரஸ் தான் போட்ருக்கு”, என்று சொல்லிய படியே காரை நிறுத்தினான் மணி.

 

“ஆமா மணி, சரி நான் பாத்துக்குறேன். நீ வீட்டுக்கு கிளம்பு. நான் உனக்கு கால் பண்றேன்”

 

“பாத்து சார். பொம்பளையா பூதமான்னு தெரியலை.மிரண்டுறாதீங்க. நான் வேணா துணைக்கு வரவா?”

 

“ஹா ஹா, பூதமா? அவ எல்லாம் ஒரு ஆளு. அவளுக்கு பயந்துகிட்டு. எங்க அம்மாக்காக வந்துருக்கேன். இல்லைன்னா இவளை எல்லாம் திரும்பி பாப்பேனா? நீங்க போய் குழந்தைகளை பாருங்க. நல்லா சாப்புடுங்க. என் கூட சேந்து நீங்களும் சரியா சாப்பிடலை”

 

“சரி சார். வேலை முடிஞ்சதும் கால் பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் மணி.

 

யோசனையோடு நடந்தவன் அந்த வீட்டு கதவை தட்டினான். வெங்காயத்தால் துளிர்த்த கண்ணீரை  துடைத்து கொண்டே வெட்டி கொண்டிருந்தவள் கதவு சத்தம் கேட்டு “வந்துட்டாளா?”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்து கதவை திறந்தாள்.

 

அங்கே முதுகு காட்டி நின்றிருந்தான் விஷ்ணு. “யாரு நீங்க?”, என்று கேட்டாள் சத்யா.

 

அந்த குரலின் இனிமையில் ஒரு நொடி கவர பட்டவன் திரும்பி அவளை பார்த்தான்.ஆனால் அவன் முகத்தை கண்டு அடுத்த நொடி மயங்கி கீழே விழுந்தாள் சத்யா.

 

விஷ்ணுவோ அப்படி ஒரு அதிர்ச்சியில் நின்றான். முதலில் அவளுடைய அழகு அவனை வசீகரித்தது நிஜம். அடுத்து அவள் கண்களில் இருந்த கண்ணீர் அவள் அழுத்திருக்கிறாள் என்று காட்டியது. அடுத்து மயங்கியது, அவனை திகைக்க வைத்தது.

 

“கடவுளே இந்த பொண்ணுக்கு என்ன துக்கமோ? எதையும் சாப்டுட்டு சாக இருந்தாளோ? தப்பான நேரத்துல வந்துட்டேனா? இப்ப என்ன செய்ய?”, என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தான்.

 

அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் மூக்கில் கை வைத்து பார்த்தான். அங்கே சுவாசம் இருந்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறினான் விஷ்ணு.

 

இத்தனை விஷயமும் வாசல் படியில் நடந்ததால் அது வேற அவனுக்கு திகைப்பை அளித்தது. “யாராவது பாத்தா ஏதோ அவளை மயங்க வச்சிட்டு திருடிட்டு போக வந்தவன் மாதிரி இருக்குமே”, என்று அவன் யோசனை ஓடியது.

 

அவள் கன்னத்தை தட்டியவன் “ஹலோ என்னங்க ஆச்சு? கண்ணை திறங்க”, என்று சொன்னான். அவளோ அசைவில்லாமல் கிடந்தாள்.

 

அப்போது “யாரு டா நீ? அவளை என்ன டா செஞ்ச?”, என்று பதட்டமான குரல் கேட்டது. அதிர்ச்சியில் திரும்பி பார்த்தான் விஷ்ணு. அங்கே கோபமாக நின்ற காவ்யா அடுத்த நொடி சத்யாவின் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டாள்.

 

“போச்சு டா. நினைச்ச மாதிரியே நடந்துட்டு”, என்று நினைத்த விஷ்ணு “ஹெலோ மேடம், நான் ஒன்னும் செய்யலை. இந்த பொண்ணு தான் ஏதோ தற்கொலை முயற்சி செஞ்சதோ என்னவோ? நான் கதவை தட்டினேன். கதவை திறந்த உடனே மயங்கி விழுந்துட்டு”, என்றான்.

 

“என்ன? தற்கொலை முயற்சியா?”

 

“ஆமா , அவ கண்ணுல கண்ணீரா இருந்துச்சு”

 

“அதெல்லாம் இருக்காது. சாப்பிடாம இருந்துருப்பா. ஒரு நிமிஷம் அவ காலை பிடிங்க. உள்ள படுக்க வைப்போம்”, என்று காவ்யா சொன்னதும் வேண்டா வெறுப்பாக அவள் காலை பிடித்தவன் அவளை கட்டிலில் படுக்க உதவி செய்தான்.

 

இருவரும் சேர்ந்து அவளை கட்டிலில் படுக்க வைத்தார்கள். “ஆமா நீங்க யாரு?”, என்று கேட்டாள் காவ்யா.

 

“நான் விஷ்ணு. பிரியாவை பாக்க வந்தேன். அவளோட அத்தைக்கு உடம்பு சரி இல்லை. அவளை கூட்டிட்டு போக வந்தேன். இங்க வந்தா இப்படி எல்லாம் நடக்குது”

 

“அன்னலட்சுமி அத்தைக்கு தான?”

 

“ஆமா, இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஹாஸ்பிடல் போகணுமா?”, ஒரு மனிதாபிமான அடிப்படையில் கேட்டான் விஷ்ணு.

 

“ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்டா. கொஞ்ச நேரத்துல சரியாகிருவா. எதுக்கும் தண்ணி தெளிச்சு பாப்போம். நீங்க உக்காருங்க”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி அங்கிருந்த சேரில் அமர்ந்தான். தண்ணீர் எடுத்து வந்த காவ்யா, சத்யா முகத்தில் தண்ணீர் அடித்தாள். அப்போதும் அவள் கண் விழிப்பதாக இல்லை.

 

அப்போது “பிரியா எப்ப வருவாங்க?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“கண்ணு  முழிச்ச பிறகு”, என்று அசால்டாக சொன்னாள் காவ்யா.

 

“வாட்?”

 

“இவ தான் சார் பிரியா. ஏய் எந்திரி டி”, என்று அவள் கன்னத்தை தட்டினாள் காவ்யா.

 

“சத்யா…”, என்று கேள்வியாக இழுத்தான் விஷ்ணு.

 

“அவ முழு பேர்  சத்யபிரியா”

 

“ஓ”, என்ற விஷ்ணு  சத்யா முகத்தை பார்த்தான். அவள் முகத்தை பார்த்ததும் எதுவோ ஒரு உணர்வு அவனை அறியாமலே அவன் மனதில் வந்து போனது.

 

அதை கவனிக்காமல் விட்டவன் “பூனை மாதிரி இருந்துட்டு எங்க அம்மாவையா அழ வைக்கிற? உனக்கு இருக்கு டி. உன்னை, உன் அம்மா அப்புறம் உன்  மாமாவை நான் சும்மா விடுறேனா பாரு?”, என்று மனதுக்குள் கருவி கொண்டான்.

 

நிதானமான கண் விழித்த சத்யா, மலங்க மலங்க விழித்தாள். “ஏய் என்ன டி ஆச்சு?”, என்று  காவ்யா கேட்டதும் சுயநினைவுக்கு வந்த சத்யா அங்கு இருந்த விஷ்ணுவை பார்த்தாள். அவள் உள்ளம் அப்படியே படபடவென்று அடித்து கொண்டது.

 

“இவன் எப்படி இங்க வந்தான்?”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள். அவனோ அவளை முறைத்த படி இருந்தான்.

 

“எதுக்கு இப்படி முறைக்கிறான்?”, என்று நினைத்து கொண்டு எழுந்து நின்றவள் “சாரி மதியம் சாப்பிடலை. அதான். ஆமா நீங்க யாரு?”, என்று அவனை பார்த்து கேட்டாள்.

 

“உன் அண்ணன் தான் அட்ரஸ் கொடுத்தாங்க. உன் அத்தைக்கு உடம்பு சரி இல்லை”

 

“ஆமா தெரியும். ஹாஸ்பிடலில் சேத்துருக்காங்கன்னு அண்ணன் சொன்னான்”, என்று சாதாரணமாக சொன்னவளை கண்டு அவன் உள்ளம் கொதித்தது.

 

கோபத்தை மறைத்தவன் மரியாதையை கை விட்டு “நாம இப்ப ஊருக்கு போகணும். நீ கிளம்பு”, என்றான்.

 

“நானா? நான் எதுக்கு கிளம்பணும்? இந்த விஷயமா யாரும் என்னை பாக்க வர கூடாதுனு சொல்லிருந்தேனே? உங்களை யாரு வர சொன்னா? ஆமா நீங்க யாரு”, என்று திமிராய் கேட்டதும் அவன் கோபம் மேலும் பெருகியது.

 

“ஏய், பொண்ணா டி நீ? அங்க அம்மா உன்னை பாக்கணும்னு ஆசை படுறாங்க. நீ மனசாட்சியே இல்லாம பேசுற? நான் யாருன்னு கேட்டல்ல? அன்னலட்சுமி எங்க அம்மா போதுமா? அவங்க உன்னை பாக்கணும்னு நினைக்கிறாங்க. அதான் உன்னை கூப்பிட வந்தேன்”, என்று கத்தினான் விஷ்ணு.

 

“ஹெலோ மிஸ்டர், நீங்க யாரா வேணா இருந்துட்டு போங்க. இந்த டி போடுற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க சொல்லிட்டேன். எங்க அத்தையை பாக்குறதும் பாக்காததும் என்னோட இஷ்டம். நீங்க யாரு இந்த விஷயத்தில்  தலை இட?”, என்று அவளும் கோபமாய் கேட்டாள்.

 

இருவர் சண்டையை பார்த்து என்ன செய்ய என்று தெரியாமல் நின்றாள் காவ்யா.

 

“என்னோட அம்மாக்காக  நீ வந்து தான் ஆகணும்”

 

“நானும் யாருக்காகவும் வர முடியாதுன்னு சொல்லிட்டேன்”

 

“ஏய், கொலைவெறியை கிளப்பாத. ஒழுங்கா நீ இப்ப கிளம்பணும். அவங்களுக்கு ஹார்ட் பலவீனமா இருக்காம்”

 

“சாரி, பட் என்னால வரமுடியாது”

 

“விளையாடுறியா?”

 

“உங்க கூட ஓடி பிடிச்சு விளையாட நீங்க என் அத்தை மகன் பாருங்க”, என்று வார்த்தையை விட்டவள் அது உண்மை தான் என்பது நினைவு வந்து உதட்டை பல்லால் கடித்து கொண்டாள்.

 

அவள் செய்கையில் வந்த புன்னகையை அடக்கி கொண்டு “சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உன் அத்தை மகன் தான். நீ இப்ப வந்தே ஆகணும்”, என்றான்.

 

“நானும் முடியாதுன்னு சொல்லிட்டேன்”

 

“நீ என்ன சொல்றது உன்னை தூக்கிட்டே போவேன் டி. நீ வந்து தான் ஆகணும்”, என்று சொன்னவன் அவளை நோக்கி இரண்டடி நடந்தான்.

 

அதை பார்த்தவள் “ஐயோ நில்லுங்க. நான் வரேன்”, என்று சொல்லி பின்வாங்கினாள்.

 

“அப்படி வா வழிக்கு. சீக்கிரம் கிளம்பு”

 

“சார், ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. அங்க நான் வர முடியாது. எனக்கும் சில கொள்கைகள் இருக்கு. அங்க வந்தா நான் ரொம்ப கஷ்ட படுவேன். அதனால தான் மனசை கல்லாக்கிகிட்டு ஒதுங்கி இருக்கேன். விட்டுருங்களேன்”, என்று கெஞ்சலில் இறங்கினாள் சத்யா.

 

“எங்க அம்மா ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்க சத்யா. நீ அதை முதல்ல புரிஞ்சிக்கோ. இன்னும் அவங்க என்னை பாக்கல. அவங்களுக்கு பிடிச்ச உன்னை அவங்க கண்ணு முன்னால நிறுத்திட்டு தான் அவங்க பையன்னு முன்னாடி போய் நிக்கணும்.  ப்ளீஸ் நீ வா”

 

அவள் ஏறி பேசும் போது அவனும் அப்படியே பேசினான். அவள் இறங்கி பேசும் போது அவனும் அப்படியே பேசியதால் என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தாள் சத்யா.

 

“அங்க வந்தா தர்மசங்கடமான சூழ்நிலை நிறைய வரும் சார்”

 

“அதெல்லாம் வராது. எனக்கு அம்மாவோட சந்தோசம் வேணும். இத்தனை வருஷம் கழிச்சு அவங்களை பாக்குறேன். அவங்க எப்படி இருக்காங்க தெரியுமா? இப்படி பாக்கவா நான் இவ்வளவு தூரம் வந்தேன்னு இருக்கு ? உனக்கு அத்தைன்னு பாசம் இல்லாம இருக்கலாம். ஆனா என்னை பெத்தவங்க. ப்ளீஸ் என்னால பாக்க முடியலை. நீ உங்க அம்மா, அப்புறம் உன் மாமா தான் அம்மாவை ரொம்ப கொடுமை படுத்துறீங்க? ஆனாலும் உங்க மேல எல்லாம் அம்மா ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. ப்ளீஸ் நீ ஒரு தடவை வந்து அவங்களை பாரு”

 

“இது என்ன புது கதை”, என்று தோன்றியது அவளுக்கு. அது மட்டுமல்லாமல்  அவன் இது வரை யாரிடமும் கெஞ்சியது இல்லை என்றும் புரிந்தது சத்யாவுக்கு.

 

“சரி வரேன். அங்க நடக்குற எல்லாத்துக்கும் நீங்க தான் பொறுப்பு. அத்தை செய்ற காரியத்துக்கு எல்லாம் நீங்க தான் பொறுப்பு ஏத்துக்கணும்”

 

“அம்மாவா? அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாங்க. சரி நான் பாத்துக்குறேன். நீ வந்தா போதும்”

 

“ஹ்ம்ம் சரி”

 

“இப்பவே போகலாமா?”

 

“ஹஸ்ப்பிட்டல்ல லீவ் சொல்லணும்”

 

“எவ்வளவு நேரம் ஆகும்?”

 

“போன்ல சொல்லிக்கலாம். ட்ராவல்ஸ்ல டிக்கட் இருக்கானு கேக்கணும்”

 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ கிளம்ப மட்டும் செய்”

 

இவ்வளவு நேரம் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காவ்யாவை பார்த்த சத்யா  “சாப்பிட எதாவது செய் டி கவி”, என்றாள்.

 

“ஹ்ம்ம்”, என்று அவள் சொல்லி விட்டு காவ்யா சென்றதும் அவனை பார்த்தாள். அவன் என்னவென்பதாய் அவளை பார்த்தான்.

 

“ஒன்னும் இல்லை. நீங்க நீங்க வெளிய உக்காந்துருங்க.  நான் கிளம்புறேன்”, என்று அவள் சொன்னதும் வெளியே வந்தான் விஷ்ணு. அவனுடனே கதவு வரை வந்தவள் அவனை பார்த்த படியே கதவை சாத்தினாள்.

 

“இவ பார்வைக்கு என்ன அர்த்தம்?”, என்று யோசித்தவன் அதை விடுத்து மணியை போனில் அழைத்தான்.

 

“சொல்லுங்க சார். கிளம்பணுமா?”, என்று கேட்டான் மணி.

 

“ஆமா, சாரி மணி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

 

“என்ன சார்? என் வேலையே அது தான? இப்ப கிளம்புறேன். ஆனா அங்க வர ஒரு மணி நேரம் ஆகும். வெயிட் பண்றீங்களா?’

 

“ஒரு மணி நேரமா? “

 

“ஹ்ம்ம் ஆமா சார். அவசரமா?”

 

“அதெல்லாம் இல்லை. நீங்க மெதுவா வாங்க. நாங்க இங்க கிளம்பவே ரெண்டு மணி நேரம் ஆகும். அன்னைக்கு மாதிரி பதினோரு மணிக்கே கிளம்பலாம். நீங்க பேமிலி கூட கொஞ்ச நேரம் இருங்க’

 

“ஓகே சார், நான் வந்துருவேன். சரி அந்த மங்கம்மா வர சம்மதிச்சிட்டாளா சார்?”

 

“சம்மதிச்சிட்டா மணி? சரியான ராங்கி புடிச்சவ. கஷ்ட பட்டு சம்மதிக்க வச்சேன். வந்த கோபத்துக்கு நாலு அப்பு அப்பனும் போல இருந்தது”

 

“ஹா ஹா உங்களையே கோப படுத்திட்டாங்களா? சரி சார் நான் வரேன்”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி வைத்து விட்டு திரும்பிய விஷ்ணு திகைத்தான். அங்கே பத்திரகாளியாக முறைத்து கொண்டிருந்தாள் சத்யா.

 

“நான் ராங்கி புடிச்சவளா? என்னை அப்பனும்னு நினைசீங்களா? நீங்க அடிக்கிற வரை என் கை வேடிக்கை பாக்குமோ?”, என்று கண்களில் கனலோடு கேட்டவளை கண்டு சங்கடமாக புன்னகைத்தவன் “ஐயோ சாரி, நான் விளையாட்டுக்கு சொன்னேன்”, என்றான்.

 

“உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க, நான் சும்மா இருக்கணுமா?

 

“மேடம் பிளீஸ். எனக்கு உங்க கூட பேசுற அளவு ஸ்ட்ரென்த் இல்லை. மூணு நாளா ஒரே அலைச்சல். கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாம சுத்திட்டு இருக்கேன். கொஞ்சம் பாவம் பாத்து விட்டுரு… விட்டுருங்க “, என்று கெஞ்சலாக பேசி சமாளித்தான் விஷ்ணு.

 

அவனை முறைத்து விட்டு சென்றவள் திரும்பி வரும் போது கையில் சாப்பாட்டு தட்டுடன் வந்தாள்.

 

மதியம் வரும் வழியில் மணி வாங்கி தந்த உணவை வேண்டா வெறுப்பாக உண்டவனுக்கு இப்போது வயிறு பசித்தது.

 

இப்போது அவள் கையில் கொடுத்த தட்டை வாங்கியவன் நின்ற படியே உண்ண ஆரம்பித்தான். “நின்னுட்டே சாப்பிட்டா அத்தைக்கு பிடிக்காது. உக்காந்து சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

 

அவள் அடுத்த தோசை சூடாக எடுத்து வரும் போது அவன் தட்டில் இருந்தவற்றை காலி செய்து விட்டு அடுத்த தோசைக்காக காத்திருந்தான். அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவன் தட்டில் தோசையை  வைத்தாள்.

 

அவள் தோசை எடுத்து வருவதும் அது காலியாவதுமாக இருந்ததை பார்த்த காவ்யா “அடியே உன் அத்தை பையன் என்ன இப்படி திங்குறான். தோசை சுட்டு சுட்டு கை வலிக்குது”, என்றாள்.

 

அவள் அருகில் சென்று அவள் தோளில் கை போட்ட சத்யா, “என் புருசனுக்கு தோசை சுட்டு தர முடியாதா டி? பின்ன எப்படி கல்யாணத்துக்கு அப்பறம் நாங்க உன் வீட்டுக்கு வருவோம்?”, என்று கேட்டு கண்ணடித்தாள்.

 

அதிர்ச்சியில் வாயை பிளந்து நின்றாள் காவ்யா. “சத்யா நீ என்ன சொல்ற? இவர்? இவர்?”

 

தீ பற்றும் …….

 

Advertisement