Advertisement

அத்தியாயம் 7

 

முத்தமென்னும் மோக

முள்ளைக் கொண்டு

என்னை நீ

தீண்டும் போது

பற்றும் காதல் தீ!!!!!!

 

தன்னை யாரென்றே சொல்லாமல் பெற்ற தாயை பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்து தான் விஷ்ணு வந்தது. ஆனால் அவனை அந்த ஊரே அடையாளம் கண்டுபிடித்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதே நேரம் தனிமையில் பல முறை தவித்த விஷ்ணு இன்று தேன்மொழியின் “அண்ணன்”,  என்ற வார்த்தையில் மெய் சிலிர்த்தான்.

 

“உள்ள வாண்ணே. எங்களையா பாக்க வந்த? உன்னோட அம்மா, அப்பா உன்னை விட்டுட்டாங்களா? நீ எப்படி இருக்க? உன்னை பத்தி தான் அம்மா பேசிட்டே இருக்கும்”, என்று பேசி கொண்டே அவன் கையை பற்றி உள்ளே இழுத்து கொண்டு போனாள் தேன்மொழி.

 

ஒரு வித நெகிழ்ச்சியுடன் அவள் பின்னே சென்றான் விஷ்ணு. தையல் தைப்பதற்கு வைத்திருந்த ஒரு ஸ்டூலை இழுத்து போட்டவள் “இங்க சேரு எல்லாம் இல்லைண்ணே. இதுல உக்காரு”, என்றாள்.

 

அமைதியாக அதில் அமர்ந்தவனுக்கு வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வரவில்லை. ஆனால் தேன் மொழியோ அங்கே இங்கே என்று அந்த குடிசையினுள் அலைந்தாள். அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

 

அவளை பார்த்தே அவளுடைய சந்தோசத்தை அளவிட்டவன் “தேன்மொழி இங்க வாயேன்”, என்று சொல்லி வாயை திறந்தான் .

 

அதிர்ச்சியாக அவனை பார்த்தவன் ஓடி வந்து “என்னை யாண்ணே கூப்பிட்ட?”, என்று கேட்டாள்.

 

“ஹ்ம்ம், நீ ஏன் டென்ஷன் ஆகுற? எனக்கும் என்னோட மனநிலையை ஹேண்டில் பண்ண தெரியலை. நான்… எனக்கு அம்மா பத்தி… நம்ம அம்மா பத்தி.. உங்க யாரை பத்தியும் எதுவும் தெரியாது…. நீ மெதுவா சொல்லு நான் கேக்குறேன். அதுக்கு முன்னாடி அம்மா எங்க? எங்க போயிருக்காங்க? அவங்களை பாக்கணுமே”, என்றான்.

 

அவள் முகம் நொடியில் வாடி போனது. “அம்மா… அம்மா… ஆஸ்பத்திரியில் இருக்காங்க”, என்று அவள் சொன்னதும் அதிர்ச்சியானான் விஷ்ணு.

 

“நீ என்ன சொல்ற மா? என்ன ஆச்சு?”

 

“என்ன சொல்றது? அம்மாவை அழ வச்சே இதயத்தை பலகீனமா ஆக்கிட்டாங்க. நேத்து திடிர்னு நெஞ்சு வலி வந்துட்டு. ராத்திரி ரெண்டு மணிக்கு என் வீட்டுக்காரர் தான் ஆஸ்பத்திரிக்கு டக்கர்ல கூட்டிட்டு போனார். இங்க ஊருல யாருக்கும் தெரியாது. அம்மாவை பாக்க தான் கிளம்பிட்டு இருக்கேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள்.

 

அப்போது தான் அவள் கழுத்தில் மின்னிய தாலிக்கயிறை கண்டான் விஷ்ணு. அதன் நிறத்தை வைத்தே திருமணம் முடிந்து அதிக நாட்கள் ஆகவில்லை என்று புரிந்தது.

 

“எனக்கு அம்மாவை பாக்கணும். நானும் வரேன். வேற பெரிய ஹாஸ்ப்பிட்டலில் பாக்கலாம்”

 

“சரிண்ணே. நீ பதட்ட படாத. அடிக்கடி அம்மா இப்படி படுத்துக்கும். நீ தான் வந்துட்டல்ல? எல்லாம் சரியாகிரும். இரு நான் கஞ்சி அடைச்சிட்டு வரேன். நாம போவோம். நீ சாப்பிடுறியா?”

 

“எனக்கு இப்ப எதுவும் வேண்டாம் மா”

 

“சரி கிளம்புவோம்”

 

“ஹ்ம்ம்”, என்று சொன்ன விஷ்ணு “யாரு அம்மாவை இப்படி கஷ்ட படுத்துறது?”, என்று கேட்டான்.

 

“யாரு படுத்துவா? அப்பாவும், அந்த ஆளோட அக்காவும் தான். இப்ப புதுசா மூணாவது ஆளும் சேந்திருக்கு. எல்லாரும் நம்ம அம்மாவை அழ அழ வைக்காங்க. இவங்களுக்கு பயந்துட்டே எனக்கு அவசரமா அம்மா கல்யாணத்தை முடிச்சது. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது. பெருசா எல்லாம் செய்யலை. நம்ம ஊரு மலை கோயில்ல வச்சு தான் மாமா தாலி கட்டினாரு. பாவிக அம்மாவை ஒரு நாளும் நிம்மதியா இருக்க விடுறது இல்லை. போகும் போது எல்லாம் சொல்றேன். போவோமா?”

 

“ஹ்ம்ம்”, என்றவன் “மணி காரை எடுங்க. ஹாஸ்பிடல் போகணும்”, என்றான்.

 

“சரி சார்”, என்று சொல்லி விட்டு காரை எடுக்க  ஓடினான் மணி.

 

அவன் காரை எடுத்து வருவதுக்குள் வீட்டை பூட்டி சாவியை எடுத்த தேன்மொழி சாவியை பக்கத்துக்கு வீட்டு பாட்டியிடம் கொடுத்து “அந்த ஆள் வந்தா கொடுத்துரு பாட்டி”, என்று சொல்லி விட்டு வந்தாள்.

 

விஷ்ணுவும், தேன்மொழியும் காரில் ஏறியதும் மணி காரை வேகமாக செலுத்தினான். “இப்ப சொல்லு மா. உங்களை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என்னோட அம்மா வேற ஒருத்தங்கன்னு எனக்கு இப்ப தான் தெரியும். இங்க வந்து பாத்தா உங்க நிலைமையே வேற மாதிரி இருக்கு? என்ன ஆச்சு அம்மாவுக்கு?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“நீயும், நானும் பிறந்தது தாண்ணே அம்மாவுக்கு பிரச்சனை.  அம்மாவை அப்பா கட்டின புதுசுல நல்லா தான் வச்சிருக்காரு. ஆனா அப்பாவோட அக்கா காரி அதான் நம்ம அத்தை வடிவு இருக்காளே? அவ அம்மாவை நல்லா வாழ விட கூடாதுன்னு அப்பாவை ஏத்தி ஏத்தி விட்டுருக்கா”

 

….

 

“முதல்ல ஒழுங்கா இருந்தவருக்கு என்னைக்கு தன்னால ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு தெரிஞ்சதோ அன்னைல இருந்து அந்த கோபத்தை அம்மா மேல காட்ட ஆரம்பிச்சிருக்காரு. அதும் விரக்தில குடில இறங்கி மோசமா ஆகிட்டாரு. உயிருக்கே ஆபத்து அப்படிங்குற நிலமைல தான் அவரை மெட்றாஸ்க்கு கொண்டு போக சொன்னாங்க. ஆனா பணத்துக்கு என்ன பண்ணணு முழிக்கும் போது தான் ஒரு டாக்டர் அம்மா கிட்ட அறிவியல் முறைப்படி குழந்தை பெத்துக்குறதை பேசி பணம் தரேன்னு சொல்லி மெட்றாஸ்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க”

 

….

 

“அப்பாவை காப்பாத்தணும். இன்னொன்னு அவரை ஊருல யாரும் தப்பா பேச கூடாதுனு முடிவெடுத்து அம்மா இதை செஞ்சிருக்காங்க. அப்ப அம்மாவுக்கு துணையா நின்னது நம்ம காந்தி மாமா தான். வடிவு அத்தையோட வீட்டுக்காரர். இப்ப அவர் உயிரோட இல்லை. அம்மா குழந்தை பெத்து தரேன்னு எழுதி கொடுத்ததுனால அப்பாவை மருத்துவம் செஞ்சு காப்பாத்திருக்காங்க”

 

….

 

“ஆனா அந்த வக்கிரம் புடிச்ச அத்தை காரியும், அப்பாவும் சேந்து அம்மாவை அசிங்கமா பேசி.. பேசியே காய படுத்திருக்காங்க. ஊருகாரங்க யாருக்கும்   தெரியாது. தெரிஞ்சா அப்பாவுக்கு குழந்தை பிறக்கலைனு தப்பா பேசும்னு காந்தி மாமா உயிரோட இருக்கும் போதே சொல்லி வச்சதுனால அப்பாவும் அத்தையும் இந்த விசயத்தை ஊருக்கு சொல்லலை. ஆனா அம்மாவை இப்ப வரைக்கும் பேசிட்டு தான் இருகாங்க. என்னையும் எவனுக்கு பொறந்தவளோனு தப்பா தான் பேசுவாங்க”, என்று அழுதவளை சமாதான படுத்தினான் விஷ்ணு.

 

தன் அன்னையையும், தங்கையையும் அழ வைத்த மூவரையும் கொல்லும் வெறி வந்தது. “நீ அழாத டா. இனி நான் பாத்துக்குறேன். இனி உங்களை யாரும் கஷ்ட படுத்த மாட்டாங்க. இன்னொரு ஆளும் சேந்துருக்குன்னு சொன்னியே? அது யாரு? அவங்களும் அம்மாவை கஷ்ட படுத்துறாங்களா?”

 

“ஆமா அண்ணே, அவ தான் ரொம்ப படுத்துறா”

 

“அவ யாரு?”

 

“பிரியா. அப்பாவோட அக்கான்னு சொன்னேன்ல? அவ மக தான். காந்தி மாமா பொண்ணு. இப்ப அவளால தான் அம்மாக்கு ரொம்ப கவலையே”, என்று சொல்லி முடிக்கும் போது ஹாஸ்பிடல் வந்திருந்தது. முகம் தெரியாத அந்த பிரியா மேல் கொலை வெறியே வந்தது விஷ்ணுவுக்கு.

 

அவளை பற்றி விசாரிப்பதற்குள் கீழே இறங்கிய தேன் மொழி “வாண்ணே. அம்மாவை போய் பாப்போம்”, என்று சொல்லி விட்டு உள்ளே அழைத்து சென்றாள்.

 

மணியும் விஷ்ணுவும் அவள் பின்னே சென்றார்கள். உள்ளே சென்றதும் ஒரு அறை முன்பு போய் நின்றாள் தேன்மொழி.

 

அவள் அருகில் போய் நின்றதும் “அண்ணே இவர் தான் என்னோட வீட்டுக்காரர்”, என்று சொல்லி செந்திலை அறிமுக படுத்தி வைத்தாள் தேன்மொழி.

 

“யாரு தேனு இவுக?”, என்று கேட்டான் செந்தில்.

 

“மாமா, எனக்கு ஒரு அண்ணா இருக்குன்னு சொல்லிருக்கேன்ல. அது இவங்க தான்”

 

சம்பிரதாயமாக இருவரும் ஒருவரை பார்த்து சிரித்து கொண்டார்கள்.

 

“அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“எப்பவும் போல நெஞ்சு வலின்னு தான் கொண்டு வந்தோம். ஆனா இந்த முறை ரொம்ப அதிகம் போல. டாக்டர் சொல்றேன்னு சொல்லிருக்கார்”, என்றான் செந்தில்.

 

“நான் அவங்களை பாக்கலாமா?”

 

“உங்க அம்மாவை பாக்க யார் கிட்ட கேக்கணும். புள்ள தேனு, அண்ணனை உள்ளாரா கூட்டிட்டு போ. நான் வீட்டு வரைக்கும் போய்ட்டு வரேன். டாக்டர் வந்தா என்னன்னு கேளுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

“உள்ள வாண்ணே’, என்று அழைத்து சென்றாள் தேன்மொழி.

 

ஒரு வித படபடப்போடு நடுக்கத்துடன் உள்ளே சென்றான் விஷ்ணு. அங்கே கிழிந்த நாராய் கட்டிலில் படுத்திருந்தாள் அன்னலட்சுமி.

 

இப்படி ஒரு நிலைமையை கண்டிப்பாக அவன் எதிர்பார்க்கவே இல்லை. மருந்தின் மயக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

 

“பாத்தியா அண்ணே அம்மாவை. எப்படி படுக்க வச்சிருக்கங்க பாரு”, என்று கண்ணீர் சிந்தினாள் தேன்மொழி.

 

மஞ்சள் பூசிய அந்த அழகு முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ திடீரென்று புவனாவின் நினைவு வந்தது.

 

“என்ன மா இது? இப்படி இருக்காங்க”, என்று கேட்ட அவன் கண்களும் கலங்கியது.

 

“இப்படியாவதுஇருக்காங்களேண்ணே. அது மனசு முழுக்க ரணம். கட்டுன புருஷனே நம்பலைன்னா அந்த பொம்பளை மனசு என்ன பாடு படும். அம்மா மனசால என்னைக்கோ செத்துருக்கும். வாழ்க்கைல என்ன பாவம் செஞ்சதோ? அதுக்கு எதுமே நல்லது நடக்கலை”, என்று அவள் அழுது கொண்டே பேசி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நர்ஸ் “உங்களை டாக்டர் கூப்பிடுறார்”, என்று சொல்லி விட்டு போனாள்.

 

“பாத்துக்கோ மணி”, என்று சொன்ன விஷ்ணு “வா மா, டாக்டரை போய் பாப்போம்”, என்று முன்னே நடந்தான்.

 

நாற்பது வயதிருக்கும் அந்த மருத்துவர் முன்பு அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

 

“நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும்?”, என்று கேட்டார் டாக்டர்.

 

‘நான் அவங்க பையன். இது என்னோட தங்கச்சி டாக்டர். அம்மாவுக்கு என்ன ஆச்சு?”

 

“வயசானா எல்லாருக்கும் நோய் வரும். இவங்களுக்கு கொஞ்சம் அதிகமா வந்துருக்கு. அவங்க மனசு தான் காரணம். இன்னும் சொல்லணும்னா அவங்க இதயம் பலகீனமா இருக்கு. யோசிச்சு யோசிச்சு மூளைக்கும் இதயத்துக்கும் அதிகமா வேலை கொடுத்தா என்ன ஆகும்?  அழுத்தம் அதிகமா கும். அப்படி தான் அவங்களுக்கு ஆகியிருக்கு. மனசு சந்தோசமா இருந்தாலே இதை சரி பண்ணிரலாம். அவங்களுக்கு என்ன கவலைன்னு கேட்டு சரி பண்ணுங்க”

 

“எங்க அப்பா தான் டாக்டர் குறையே. அவங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டார்”, என்றாள் தேன்மொழி.

 

“இனி இப்படி நடக்காம பாத்துக்கோங்க மா. அவங்க இன்னும் டென்ஷன் ஆனா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு இருக்கு. நேரத்துக்கு சாப்பிட வச்சு கவலை இல்லாம பாத்துக்கோங்க. எல்லாம் சரியா போகும். உங்க அப்பாவுக்கு புரிய வைங்க. இப்படியே விட்டா நாளைக்கு அவங்க உயிருக்கே ஆபத்து வரலாம். ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. இன்னைக்கு இங்கயே இருக்கட்டும். நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”

 

“தேங்க் யு டாக்டர்”, என்று சொல்லி விட்டு விஷ்ணு எழுந்ததும் அவனுடன் வெளியே வந்தாள் தேன்மொழி.

 

“அம்மா கண்ணு முழிக்க நேரம் ஆகும் போல. நீ வீட்டுக்கு போயிட்டு வரியாண்ணே?”

 

“நான் பாக்க வந்ததே அம்மாவை தான். ஆனா இப்படி இருப்பாங்கன்னு எதிர் பாக்கலை. நான் இங்கயே இருக்கேன் மா”

 

“எல்லாம் கவலை தான். வேற என்ன? அதான் நீ வந்துட்டியே. அவளும் வந்துட்டா அம்மா நல்லா ஆகிருவாங்க”

 

“யாரு மா?”

 

“அதான் பிரியான்னு சொன்னேன்ல? அவளை தான் பாக்கணும்னு கேட்டுட்டே கிடப்பாங்க. உன்னை பாத்தாலே அவங்களுக்கு பாதி உயிர் வரும்னா அவளையும் பாத்தா முழுசா எந்திச்சிருவாங்க. பாவி அம்மா கிட்ட முகத்தை காட்டாம கூப்பிட்டாலும் வராம அவளும் பழி வாங்குறா”

 

“அவ மேல அம்மாவுக்கு கோபம் கிடையாதா?”

 

“அம்மாவுக்கு யார் மேலையும் கோப பட தெரியாது. என்ன செய்ய? அவ மேல பாசம் வச்சு தொலைச்சிட்டாங்களே. அந்த திமுருல தான  இங்கன வராம இருக்கா”

 

“அவ வந்தா அம்மா சந்தோச படுவாங்களா?’

 

“சந்தோசமா? நீ வேற? பிரியா பிரியான்னு உருகுவாங்க. ஆனா அவ தான் பிடிவாத காரியாச்சே. கண்டிப்பா இந்த பக்கம் வர மாட்டேன்னு சொல்லிருக்கா”

 

“அவ இப்ப எங்க இருக்கா?”

 

“சென்னைல தான் வேலை பாக்குறா”

 

“சரி மா, நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்”

 

“அண்ணா”

 

“அம்மாவுக்காக நான் இது வரைக்கும் எதுவுமே செய்யலை. அவங்க நினைச்ச இதையாவது செய்றேன்”

 

“அவ வர மாட்டா அண்ணா”

 

“அது என் பொறுப்பு. அட்ரஸ்”

 

“உன் மச்சான் கிட்ட தான் இருக்கும்”

 

“சரி நீ அம்மாவை பாத்துக்கோ. அம்மா கிட்ட நான் வந்ததை சொல்லாத. நான் வீட்டுக்கு போய் என்னோட பொருள் எல்லாம் வச்சிட்டு உன் வீட்டுக்காரர்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு சென்னைல போய் அவளை கூட்டிட்டு வரேன்”

 

“சரிண்ணே, பத்திரமா போய்ட்டு வா”

 

“சரி மா, மணி கிளம்பலாமா?”, என்று கேட்டு கொண்டே அவன் திரும்பும் போது “அண்ணே”, என்று அழைத்தாள் தேன்மொழி.

 

“என்ன மா?’

 

“நீ திருப்பி வந்துருவ தான? மறுபடியும் வராம இருந்துருவியா?”, என்று குரல் நடுங்க கேட்டாள்.

 

“கண்டிப்பா வந்துருவேன் மா. நீ கலங்காம இரு. அப்புறம் ஹாஸ்பிடல் பில் எல்லாம் நீ கட்ட வேண்டாம். டாக்டர் கிட்ட நான் இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு நாளைக்கு நானே கட்டிறேன். வரேன் மா”

 

“சரிண்ணே”, என்று சொன்னவள் தன்னுடைய அன்னை அருகில் அமர்ந்து கொண்டாள்.

 

மணியுடன் வீட்டுக்கு சென்ற விஷ்ணு தன்னுடைய பெட்டியை வீட்டில் வைத்து விட்டு செந்திலிடம் அட்ரஸை கேட்டான்.

 

“அவ வர மாட்டா. திமிர் பிடிச்சவ. என்ன டா, அடுத்த வீட்டு பொண்ணை திட்டுறேன்னு நினைக்கிறீங்களா?”, என்று தயக்கத்துடன் கேட்டான் செந்தில்.

 

“ஹ்ம்ம்”, என்றான் விஷ்ணு.

 

“அவ வேற யாரும் இல்ல. என் தங்கச்சி தான்”, என்று செந்தில் சொன்னதும் “இன்னும் எத்தனை அதிர்ச்சியை தான் நான் தாங்குவேன்”, என்று சொன்னது விஷ்ணுவின் இதயம்.

 

“உங்க தங்கச்சியா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான்.

 

“ஆமா, எங்க வீட்ல மூணு பேர். என் தம்பி அருள், அப்புறம் கடைசி பிரியா. அத்தைக்கு பிரியா மேல உயிர். ஆனா வீம்பு பிடிச்சிட்டு இருக்கா. நீங்க போய்  கூப்பிட்டாலும் வர மாட்டா. அத்தைக்கு என்ன ஆனா அவளுக்கு என்ன? நீங்க வீணா அலையணும்னு தான் சொல்றேன்”

 

“எனக்கு எல்லாமே புதிரா இருக்கு. எனக்கு இப்போதைக்கு தேவை எங்க அம்மாவோட சந்தோசம். அதுக்காக கண்டிப்பா உங்க தங்கச்சியை கூட்டிட்டு வருவேன். நீங்க அம்மாவை பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு மணியுடன் கிளம்பினான்.

 

வரும் போது வாய் ஓயாமல் பேசிய படியே வந்த மணி இப்போது அமைதியாக காரை ஓட்டினான்.

 

“என்ன மணி வரும் போது பேசிட்டே வந்தீங்க. இப்ப அமைதியா வரீங்க?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“சார் மனசு சந்தோசமா இருக்குற மாதிரி எதுமே நடக்கலையே சார். நேத்து சிரிச்ச முகத்தோட காருல ஏறுனீங்க. ஆனா இன்னைக்கு உங்க முகத்துல சந்தோசமே இல்லை. எனக்கு தெரிஞ்ச விஷயமே என்னால தாங்க முடியலை. அனுபவிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்? அதான் பேச்சு வரல சார்”

 

“ஹா ஹா, கஷ்டமா தான் இருக்கு. ஆனா எனக்கு அம்மா கிடைச்சிட்டாங்களே. ஏதோ ஒரு நினைப்புல தான் இங்க வந்தேன். ஆனா எனக்கு இங்க ஒரு குடும்பமே இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணனும். அம்மாவை சந்தோசமா வச்சுக்கணும்”

 

“அப்ப ஊருக்கு திரும்பி போக மாட்டிங்களா சார்?”

 

“தெரியல மணி. என்ன செய்யணும்னு புரிய மாட்டிக்கு. அம்மாவை கஷ்ட படுத்துற மூணு ஜீவனை சரி செஞ்சிட்டா ஓரளவு அம்மா சரியாகிறவங்க”

 

“பேசாம மூணு போரையும் போட்டு தள்ளிறலாமா சார்?”

 

“ஐயோ மணி நீங்க வேற? அதெல்லாம் வேண்டாம், சொல்லி பாப்போம். புரியலையா, அம்மாவை விட்டு மூணையும் அப்புற படுத்திறணும்”

 

“இப்ப அந்த பொண்ணை அழைச்சிட்டு வர போறோம். உங்க தங்கச்சி சொன்னதை பாத்தா அது வரும்னு தோணலை சார்”

 

“வரலைனா எங்க அம்மாக்காக கடத்திட்டு கூட வருவேன். அப்புறம் நீங்க சென்னைல என்னை டிராப் பண்ணிட்டு வேற டேக்சிக்கு ஏற்பாடு பண்ணிருங்க. இன்னும் எங்க எல்லாம் அலைய வேண்டி இருக்கோ என்னவோ? உங்களுக்கும் ரெண்டு நாள் ரெஸ்ட் இல்லை. நீங்களும் வீட்டுக்கு போகணுமே”

 

“சார் பணத்துக்காக சொல்லலை. இப்ப நான் வேற டேக்சி ஏற்பாடு செஞ்சு கொடுத்தா உங்களை பாதிலே தவிக்க விட்டு போற மாதிரி இருக்கும் சார். வேணும்னா ஒன்னு பண்ணலாம். நான் உங்களை அந்த பொண்ணு வீட்டாண்ட இறக்கி விட்டுட்டு எங்க வீட்டுக்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு வரேன். நீங்க அவசரம்னா போன் பண்ணுங்க. நாம அந்த மங்கம்மாவை காருல… இல்லை இல்லை…. டிக்கில தூக்கி போட்டுட்டு வந்துரலாம்”

 

“ஹா ஹா, சரி தான்”, என்று சிரித்த விஷ்ணுவுக்கு “அவளை எப்படி கூட்டிட்டு வர போறோம்”, என்ற சிந்தனை எழுந்தது.

 

இரண்டு நாள்களாக யோசித்து யோசித்து அவன் மூளை சூடாகி போய் இருந்தது. ஓய்வுக்காக அவன் உடலும் மனமும் கெஞ்சியது.

 

தீ பற்றும் …….

 

Advertisement