Advertisement

அத்தியாயம் 6

 

ஒளிரும் தேவதையாக

கண் முன் தோன்றிய

உன்னை கண்டால்

பற்றும் காதல் தீ!!!!!!

 

தன்னுடைய அறைக்குள் வந்த விஷ்ணுவுக்கு தலை வலித்தது. வாழ்வில் இவ்வளவு பெரிய குழப்பம் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.

 

“ஏன் எனக்கு மட்டும் எதுவுமே நல்லது நடக்க மாட்டிக்கு. மனசுக்கு புடிச்சவ கண் முன்னாடி இல்லை. அது கூட பரவால்ல. ஆனா அவளை பாத்ததே இல்லை. அதை விட கொடுமை யாரென்றே தெரியாதவளோடு வாழ்ந்தது.  இப்ப என்னை பெத்ததும் யாருன்னு தெரியலை. இனி அம்மாவை கண்டு பிடிச்சு, கண்ணுக்கு தெரியாத காதலியை கண்டு பிடிச்சுன்னு வாழ்க்கை தேடலிலே முடிய போகுதா?, என்று யோசித்து கொண்டிருந்தான்.

 

“பிளைட் டிக்கட் புக் பண்ணிட்டேன் விஷ்ணு”, என்று பிரதாப் போனில் அழைத்து  சொன்னதும் அலெக்ஸை போனில் அழைத்தான் விஷ்ணு.

 

“சொல்லு விஷ்ணு, என்ன இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“தூக்கத்துல எழுப்பிட்டேனா? சாரி டா”

 

“அதெல்லாம் விடு, ஏதும் பிரச்சனையா?”

 

“அதெல்லாம் இல்லை. ஒரு ஹெல்ப் வேணும்”

 

“என்ன ஹெல்ப் விஷ்ணு?”

 

“நான் ஒரு அட்ரஸ் அனுப்புறேன். சென்னைல இருந்து அந்த ஊருக்கு போகணும். எப்படின்னு தெரியலை. உனக்கு எதாவது ஐடியா தெரிஞ்சா சொல்லு”

 

“என்ன தமிழ்நாடு பத்தியா? சரி அனுப்பு, சொல்றேன்”, என்று அலெக்ஸ் சொன்னதும் விஷ்ணு அனுப்பி வைத்தான்.

 

கூகுள் மேப் எடுத்து அந்த இடத்தை தேடினான் அலெக்ஸ். விஷ்ணுவை போனில் அழைத்ததும் “சொல்லு அலெக்ஸ், ஐடியா கிடைச்சதா?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“நான் கூகுள் மேப்ல தான் டா பாத்தேன். சென்னைல இருந்து கார்ல போயிரு. தேவை இல்லாம மாறி மாறி எல்லாம் போக வேண்டாம். அது மதுரைன்னு போட்ருக்கு”

 

“நானும் பாத்தேன். சரி பாத்துக்கலாம்”

 

“ஹ்ம்ம், ஆனா நீ ஏன் அங்க போற?”

 

“ஒரு முக்கியமான வேலை டா. அப்பா போக சொன்னாங்க”

 

“ஓ, சரி நானும் வரட்டுமா?”

 

“வேண்டாம் வேண்டாம் நான் போய்க்குவேன். உனக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு. நான் வர எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. ஆபிஸை ரம்யாவை பாத்துக்க சொல்லிரு. நானும் அவளுக்கு காலைல போன் பண்ணி சொல்றேன். நீயும் பாத்துக்கோ”

 

“சரி டா, எப்ப கிளம்புற?”

 

“நாளைக்கு காலைல பத்து மணிக்கு பிளைட்”

 

“சரி விஷ்ணு, காலைல ஏர்போர்ட்ல உன்ன பாக்குறேன். நல்லா தூங்கு. குட் நைட்”

 

“குட் நைட் அலெக்ஸ்”, என்று சொல்லி போனை வைத்தான் விஷ்ணு.

 

தன்னுடைய கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. வாழ்க்கையை நினைத்து ஒரு வித கவலையும், இனி என்ன நடக்கும் என்ற படபடப்பும் அவனை நிம்மதியாக தூங்கவிடவில்லை.

 

யோசித்த படியே படுத்திருந்தவன் அவனை அறியாமலே தூங்கி போனான். காலையில் கண் விழித்ததும், தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து கொண்டு கிளம்பி கீழே வந்தான்.

 

அவனுடைய லக்கேஜ் பேகை கார் டிரைவர் எடுத்து சென்றார். பிரதாப் மற்றும் புவனா முன்பு நின்றான் விஷ்ணு.

 

இருவருமே முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்றார்கள். அவர்களை பார்த்து சிரிப்பு வந்தது விஷ்ணுவுக்கு. இத்தனை நாள் பாசம் என்றே என்னவென்று காட்டாதவர்கள் இன்று இப்படி நிற்பது அவனுக்கு வித்தியாசமாக பட்டது.

 

“அம்மா நான் கிளம்புறேன். போயிட்டு வரேன் டேட்”, என்றான் விஷ்ணு.

 

“சீக்கிரம் போயிட்டு வா விஷ்ணு”, என்று பிரதாப் சொன்னதும் “அது என்ன சீக்கிரம்? ஒரு வாரத்துல நீ திரும்பிறனும், அவங்க கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி”, என்றாள் புவனா.

 

“சரி மா. டேட் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் விஷ்ணு.

 

ஏர்போர்ட்க்கு அவன் வரும் போது அங்கு ரம்யா மற்றும் அலெக்ஸ் நின்றார்கள். அவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன்னுடைய பயணத்தை துவங்க தயாரானான் விஷ்ணு. வாழ்க்கை பயணமே இப்போது தான் அவனுக்கு துவங்கி இருக்கிறது என்று அறியாமலே பயணம் செய்தான் விஷ்ணு.

 

விமானத்தில் ஏறி அமர்ந்ததும் மனம் முழுவதும் ஒரு குழப்பமாக இருந்தது. அவன் மனது அமைதியின்மையால் அவனை அலைக்கழித்தது.

 

ஒரு வழியாக அவன் சென்னை வந்து இறங்கியதும், வெளியே வந்து ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்தான். பின் அங்கே குளித்து முடித்தவன் மணியை பார்த்தான். கடிகாரம் நான்கு என்று காட்டியது. பின் ஒரு காரை புக் செய்தான். அது மட்டுமில்லாமல் தான் செல்லவிருக்கும் இடத்தை பற்றியும் விசாரித்தான்.

 

“இப்போது கிளம்பினால் நடு ராத்திரியில் அந்த ஊருக்கு போக வேண்டும்”, என்று புக் செய்யும் இடத்தில் சொன்னதால்  இரவு கிளம்பினால் காலை போய் சேரலாம் என்று எண்ணி இரவு பதினோரு மணிக்கு காரை வர சொன்னான்.

 

அதன் பின் அப்படியே அமர்ந்திருந்தவன் “அம்மாவையே இப்ப தான் தேட போறேன்? இனி உன்ன எப்படி தேட போறேனோ? எப்படி டி எனக்கு தெரியாமலே என்னை திருடிட்டு போயிருக்க? நீ எப்படி இருப்ப? என்னை எப்படி உனக்கு தெரியும்? எப்ப என்னை முதல் முதல்ல பாத்த”, என்று மனதினுள் அவன் இதயம் கவர்ந்தவளிடம் பேசினான்.

 

அப்படியே தூங்கியவன் எழுந்தது மாலை ஐந்து மணிக்கு. ரூம் சர்வீஸை அழைத்து காபிக்கு சொல்லியவன் அதை குடித்து முடித்து விட்டு கிளம்பி வெளியே சென்றான். தனக்கு தேவையான அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்கியவன் மீண்டும் அறைக்கு வர எட்டு ஆகி விட்டது.

 

அதன் பின் அவன் எல்லாம் எடுத்து வைத்து உணவு உண்டு முடிக்க மணி பத்தை தொட்டது.

 

சரியாக பதினோரு மணிக்கு அவனை அதிகம் காக்க வைக்காமல் காரை எடுத்து கொண்டு வந்துவிட்டான் டிரைவர்.

 

எல்லாவற்றையும் கார் டிக்கியில் அடைத்து விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ததும் அவன் அருகில் ஏறி அமர்ந்தான் விஷ்ணு.

 

“பின்னாடி உக்காரலாம்ல சார்?”, என்று கேட்டான் டிரைவர்.

 

“பரவால்ல? பகல்ல நல்லா தூங்கிட்டேன். உங்க கிட்ட பேசிட்டே வந்தா உங்களுக்கும் தூக்கம் வராது தான? ஆமா உங்க பேர் என்ன?”

 

“மணி”, என்று இழுத்தான் டிரைவர். “நான் மணியை கேக்கல. உங்க பேரை கேட்டேன்”, என்றான் விஷ்ணு.

 

“விளையாடாதீங்க சார். என்னோட பேர் தான் மணி. மணிகண்டன். ஆமா நீங்க ஊருக்கு புதுசா சார்?”

 

“ஹ்ம்ம் ஆமா மணி”

 

“பாத்தாலே தெரியுது. ரொம்ப சோக்கா இருக்கீங்க சார். அப்படியே வெள்ளைக்கார துரை கணக்கா”

 

“வெள்ளைக்கார துரையா? நான் வெள்ளையா இல்லையே”

 

“ஐயோ ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார். ரொம்ப வெள்ளை இல்ல தான். ஆனா கலர் கலர் தான? என் கலர் கிட்ட எல்லாம் நீங்க வர முடியுமா?”, என்று சிரித்து கொண்டே சொன்ன மணி அப்படியே கண்ணின் கருவிழியின் கலரில் இருந்தான்.

 

“கலர் எல்லாம் பெருசு இல்லை மணி. மனுசங்க மனசு தான் முக்கியம்”

 

“சார், அப்படியே என் பொண்டாட்டி மாதிரியே பேசுறீங்க? அவளும் இப்படியே தான் சொல்லுவா”

 

“எப்படி?”

 

“அவ நல்ல கலர் சார். எங்க கல்யாணம்  லவ் மேரேஜ். அதனால அவ கலர் எல்லாம் முக்கியமே இல்லன்னு பேசுவா”

 

“லவ் மேரேஜா? சூப்பர். சொல்லுங்க உங்க கதையை கேப்போம். எனக்கு காதல் கதை கேக்க ரொம்ப பிடிக்கும்”

 

“அது ஒரு காமெடி கதை சார். பக்கத்து வீட்டு பொண்ணு தான் என் பொஞ்சாதி. நான் கார் ட்ரைவர் அப்படிங்குறதுனால வெள்ளையும் ஜொள்ளையுமா திரியுவேனா? உடனே பிடிச்சிருச்சு போல? அப்படி இப்படி எங்கயாவது நின்னு நம்மளையே முறைச்சு முறைச்சு பாக்கும். என்ன தான் பாக்குறானு எனக்கே லேட்டா தான் சார் தெரிஞ்சது. அப்புறம் என்ன? அப்படியே பார்வையிலே சரி பண்ணியாச்சு. ஆனா சார், அப்படியே சிரிக்கவும் செய்யாம முறைக்கவும் செய்யாம ஒரு தினுசா பாத்துட்டு போகும் போது அப்படியே புல்லரிக்கும் சார்”

 

“ஹா ஹா சூப்பர் கதை. இப்பவும் புல்லரிக்கா?”

 

“புல்லு எங்க அரிக்க? அவ தினமும் அடிக்கிற விளக்குமாறு தான் அரிக்குது”

 

“என்னது அடியா? அப்ப லவ்?”

 

“லவ் இல்லாமலா அஞ்சு வருசத்துல ரெண்டு பிள்ளை பெத்துட்டேன்? அதெல்லாம் அடி எல்லாம் வாங்கிக்கணும். அதுல கூட ஒரு சுகம் இருக்கு சார்”

 

“நல்லா இருக்கு உங்க கதை. பசங்க என்ன பண்றாங்க?”

 

“ரெண்டும் பசங்க தான். பெரியவன் ஒரே சேட்டை. சின்னது பிறந்து நாலு மாசம் தான் ஆகுது”

 

“உங்களை தேட மாட்டாங்களா? கை குழந்தையை வச்சிட்டு உங்க மிஸ்ஸஸ் கஷ்ட படுவாங்களே”

 

“கூட அம்மா அப்பா இருக்காங்க சார். ட்ரைவர் வேலைக்கு வந்துட்டு இதெல்லாம் பாத்தா முடியமா சார்? உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா சார்?”

 

“ஆகல, ஆனா ஆன மாதிரி தான்”

 

“பாத்தீங்களா? படிச்சவங்கன்னு காட்டுறீங்க?”

 

“என்ன?”, என்று புரியாமல் கேட்டான் விஷ்ணு.

 

“பின்ன என்ன சார்? எங்களை மாதிரி பட்டுன்னு சொல்லாம சுத்தி வளைக்குறீங்களே?”

 

“எனக்கே தெரியாத ஒன்னை எப்படி நான் உங்களுக்கு சொல்லுவேன்?”

 

“ஏன் சார் ஒன் சைடா?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“என்ன சார்? உங்களையுமா ஒரு பொண்ணு வேண்டாம்னு சொல்லுச்சு”

 

“நான் எங்க அப்படி சொன்னேன்? அவ என் மேல உயிரையே வச்சிருக்கா”

 

“அப்ப நீங்க வேண்டாம்னு சொல்லிடீங்களா? நம்மளை நேசிக்கிற பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் சார். விட்றாதீங்க”

 

“விட மாட்டேன். கண்டிப்பா அவ கிடைச்சதும் கல்யாணம் தான்”, என்று விஷ்ணு சொன்னதும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் மணி.

 

“என்ன ஆச்சு மணி?’

 

“உங்களுக்கு என்ன ஆச்சு சார்? கிடைச்சா கல்யாணம்னு சொல்றீங்க?”

 

“ஓ அதுவா? காரை எடுங்க சொல்றேன். என்னை ஒரு பொண்ணு விரும்புது. ஆனா யாருனு தெரியலை. உங்களுக்கு இந்த கதை புரியாது. ஆனா கண்டிப்பா அவளை கண்டு புடிச்சு என் கல்யாணத்துக்கு உங்களை கூப்பிடுவேன் போதுமா?”, என்று சிரித்து கொண்டே கேட்டவனுக்கு தெரியாது, அவன் திருமணம் அவனை மீறி, எதுவோ முகம் தெரியாத பெண்ணுடன் நடக்க போகிறதென்று.

 

விருப்பமில்லாமல் தான் அவளுடைய கழுத்தில் தாலியை கட்டுவான் என்னும் போது அந்த நேரத்தில் மணி என்ற டிரைவரையா ஞாபகம் வைத்திருக்க போகிறான்?

 

“நல்லா பேசுறீங்க சார்? ஆமா உங்க சொந்த ஊர் எது?”

 

“டெல்லில இருந்து வரேன்”

 

“அங்க இருந்து எதுக்கு இந்த பட்டிக்காட்டுக்கு வரீங்க”

 

“ஒருத்தங்களை பாக்க வந்துருக்கேன். ஊர் எப்படி”

 

“அதான் சொன்னேனே பயங்கரமான பட்டிக்காடு. ரொம்ப வறண்டு போன பூமி சார். இப்ப தமிழ்நாட்டுல எல்லா இடமும் அப்படி தான் ஆகிட்டு வருது. இது கொஞ்சம் முன்னாடியே ஆனா ஊர்”

 

“ஆனா இங்க நல்ல செழிப்பா இருக்கும்னு சொல்லுவாங்களே”

 

“விவசாயம் செஞ்சா இருக்கும் சார். ஆனா கடனை வாங்கி பயிர் வச்சா அந்த கடனை அடைக்க கூட விளையலைன்னா எவன் தான் சார் விவசாயம் பாப்பான்? அப்படியே அவங்க அவங்க தெரிஞ்ச ஊருக்கு போய் ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சிக்கிறாங்க”

 

“ஓ”, என்று கேட்ட விஷ்ணுவுக்கு மனம் பாரமாகி போனது. தன்னை பெற்றெடுத்தவள் உயிரோட இருப்பாளா? என்ற நினைவு திடீரென்று முளைத்தது.

 

“நான் ஏன் பிறந்தேன்? ஒரு ஏழைக்கு பணத்தேவையை போக்கவா? ஒரு பணக்கார தம்பதியரின் கவுரவத்தை காப்பாற்றவா?”, என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் வலித்தது நிஜம்.

 

“என்ன சார்? ரொம்ப பேசி பிளேட் போட்டுடேனா? அப்படியே கண்ணசருறீங்களா? கவலை படாதீங்க. நான் தூங்க மாட்டேன். படுத்துகோங்க”, என்று சிரித்தான் மணி.

 

மணியின் வெகுளியான சிரிப்பை கண்டு அனைத்தையும் மறந்த விஷ்ணு “அப்படி எல்லாம் இல்லை மணி. எதுவோ யோசனை. எனக்கு தூக்கம் வரலை. வரும் போது தூங்குறேன்”, என்று சொல்லி விட்டு மணியை பேச வைத்து கேட்டு கொண்டே சென்றான் விஷ்ணு.

 

மணியும் வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்ததால் விஷ்ணுவுக்கு இந்த பயணம் பிடித்திருந்தது.

 

ஆனால் மணி இரண்டு மணி ஆகும் போதே அமர்ந்த படியே தூங்கி போனான் விஷ்ணு. அவன் தூங்குவதை கண்டு எழுப்பி பின்னாடி படுக்க சொல்லலாம் என்று நினைத்த மணி பின் எழுப்ப வேண்டாம் என்று விட்டு விட்டான்.

 

மணிக்கு இரவு பயணம் பழக்க பட்ட ஒன்று என்பதால் அவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

 

காலையில் ஆறு மணி போல் கொட்டாவி விட்டு கொண்டே கண் விழித்த விஷ்ணு மணியை பார்த்து அழகாக புன்னகைத்தான்.

 

அவன் சிரிப்பில் மணியே மயங்கி போனான். அது மட்டுமல்லாமல் “சார், இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சா எல்லா பொண்ணும் உங்க பின்னாடி தான்”, என்று சொல்லி சிரித்தான்.

 

“இப்படி எல்லாம் சிரிப்பு காட்டாதீங்க மணி. நைட் பேசிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன், சாரி”

 

“தூங்குறதுக்கு எதுக்கு சார் சாரி? உங்களை பின்னாடி படுக்க வைக்கணும்னு நினைச்சேன். ஆனா அசந்து தூங்குனீங்களா? விட்டுட்டேன்”

 

“பரவால்ல? சரி ஊரு எப்ப வரும்?”

 

இன்னும் அரை மணி நேரத்துல பைபாஸ்ல இருந்து ஒரு ரோடு பிரியும் சார். அந்த ரோட்ல போனா ஒரு மணி நேரம் ஆகும். ஒரு எட்டு மணிக்கு போயிரலாம். திருப்பி எப்ப வருவீங்க?”

 

“தெரியலை மணி அங்க போன அப்புறம் தான் நிலைமை தெரியும்”

 

“சரிங்க சார். காரை எங்கயும் நிறுத்தணுமா? அவரச வேலை இருக்கா?’

 

“நிறுத்துங்களேன். எதாவது வாட்டர் இருக்குற இடமா இருந்தா குளிச்சிட்டு போக வசதியா இருக்கும். நீங்க வேற நான் போற ஊரே பட்டி காடுன்னு சொல்றீங்க?”

 

“அதும் சரி தான் சார். இருங்க போற வழில எங்கயாவது நிறுத்துறேன்”, என்று சொல்லி பத்து நிமிடத்தில் ஒரு காட்டாறை கண்டவன் அங்கே காரை நிறுத்தினான்.

 

பின் அங்கேயே காலை கடன்களை முடித்தவர்கள் அங்கேயே குளியலை முடித்தார்கள்.

 

விஷ்ணுவுக்கு இது புதுவிதமான அனுபவமாக இருந்தது. மீண்டும் பிறந்ததை போல உணர்ந்தான் அதுவும் வெகுளியான மணியின் தோழமை அவனை மிகவும் சந்தோசம் கொள்ள வைத்தது.

 

பின் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தவர்கள் கதையையும் ஆரம்பித்தார்கள். ஊர் எல்லை வந்ததும் “இது தான் சார் நீங்க கேட்ட ஊர். ஒரு வழியா வந்துட்டோம். பாத்தீங்களா? எப்படி கிடக்குன்னு?”, என்று மணி கேட்டதும் கண்களை சுழல விட்டான் விஷ்ணு.

 

சுற்றி வயல், வரப்பு, ஏரி என்று செழித்திருக்க வேண்டிய அந்த இடம் ஒரே முள் செடியும் களை செடியும் நிறைந்து காணப்பட்டது.

 

அந்த ஊரே மணி சொன்னது போல பட்டிக்காடு போல தான் இருந்தது. மணி மேலும் ஊருக்குள் வண்டியை செலுத்தினான். இன்னும் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு தான் வீடுகள் தென் பட்டது. ஒரு பெட்டி கடை முன்பு வண்டியை நிறுத்திய மணி  “சார் யார் வீட்டுக்கு போகணும்னு இந்த கடைல இருக்குற ஆள் கிட்ட கேளுங்க. நான் காரை நிறுத்திட்டு வரேன் “, என்றான்.

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொன்ன விஷ்ணு காரில் இருந்து இறங்கி அந்த பெரியவர் அருகில் சென்றான்.

 

பட்டத்து இளவரசன் மாதிரி காரில் இருந்து இறங்கிய அவனை கண்டு அந்த பெரியவர் திகைத்தார் என்றால் சுற்றிலும் தங்கள் வேலையை பார்த்து கொண்டிருந்த அனைவரும் அவன் புறம் பார்வையை திருப்பினார்கள்.

 

பெரியவர் அருகில் போன பிறகு தான் பெற்ற தாயின் பெயரையே டாக்டரிடம் கேட்காமல் வந்த தன் மடத்தனம் புரிந்தது விஷ்ணுவுக்கு.

 

“இப்ப எப்படி விசாரிக்க? விசாரிக்க கூடிய விஷயமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் உள்ள பெண் பணத்தேவைக்காக என்னை பெற்றெடுத்தாள். அவள் யாரென்று கேட்க முடியுமா? இப்போது இந்த உண்மையை சொன்னால் அந்த பெண்ணின் வாழ்வு பாழாகாதா?

 

முகம் தெரியாத தன்னுடைய அன்னையின் நிலைமையை யோசித்தான் விஷ்ணு. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கிளம்பி வந்த தன் மடத்தனத்தை நொந்தவன் எதையும் விசாரிக்காமல் திரும்பி நடந்தான்.

 

“எப்பா நீங்க அன்னலட்சுமி மகன் தான?”, என்று கேட்டு அவனை திகைக்க வைத்தார் அந்த பெரியவர்.

 

அதிர்ச்சியாக திரும்பியவன் அவரை குழப்பமாக பார்த்தான். அன்னலட்சுமி யாரென்றே தெரியாதவன் என்ன பதில் சொல்லுவான்.

 

அதற்குள் அங்கிருந்த ஒரு ஆள், “என்ன சித்தப்பு யார் இவுக? நீங்களும் எதையோ விசாரிக்கீங்க?”, என்று கேட்டார்.

 

“இல்லை சோமு. உனக்கு அடையாளம் தெரியலையா? இந்த தம்பியை நல்லா பாரு. அப்படியே அன்னலட்சுமி மாதிரியே இருக்கு”, என்றார் பெரியவர்.

 

“அட ஆமா, எனக்கும் இப்ப தான் ஜாடை பிடி படுது. அதுவும் நம்ம தேன் மொழி மாதிரியே இருக்காங்கல்ல?”

 

“யாரு டா இவன் கூறுகெட்டவன்? ஒரே நேரத்துல பிறந்த ரெட்டை பிள்ளைகள். ஜாடை ஒத்து போகாம இருக்குமா? தேனு பொண்ணா போச்சு. இல்லைன்னா இந்த தம்பி மாதிரியே இருந்துருக்கும்”, என்று பெரியவர் சொன்னதும் மேலும் குழப்பமானான் விஷ்ணு.

 

“தாத்தா அவுக இத்தனை வருஷம் கழிச்சு அன்னலட்சுமி அத்தையை பாக்க வந்துருக்காக. பாவம் தவம் இருந்து பெத்து யாருக்கோ தத்து கொடுத்து, ரொம்ப நொந்து போய்ட்டாங்க. இப்ப இப்படி வளந்து நிக்குற பிள்ளையை பாத்தா அத்தை ரொம்ப சந்தோச படும். அவுகளை விசாரிக்காம விடு தாத்தா”, என்றான் மற்றொருவன்.

 

“அதுவும் சரி தான், வாங்க தம்பி நான் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி பெரியவர் முன்னே நடந்ததும் அவர் பின்னே நடந்தான் விஷ்ணு.

 

“உங்க அம்மா இருக்காளே அவ எனக்கு சித்தப்பா மக தான். நீ அவ வயித்துல இருந்தப்ப மெட்றாசுல தான் அவ இருந்தா. ஏன்னா உங்க அப்பன் ஒரு குடிகாரன். வாழ்வோ சாவொன்னு இருந்தவனை அங்க கொண்டு போனதுனால தான் காப்பாத்த முடிஞ்சது”, என்று அவர் சொன்னதும் தன்னுடைய அன்னை தான் அந்த அன்னலட்சுமி என்று விஷ்ணுவுக்கு புரிந்தது. மேலும் பெரியவர் பேச்சை செவிமடுத்தான்.

 

“ஆனா அப்புறம் ஆண் ஒன்னு, பொண்ணு ஒன்னு பொறந்துருக்குறதா செய்தி வந்துச்சு. கடைசில தேன் மொழியை மட்டும் தூக்கிட்டு புருஷன் உயிரையும் மீட்டெடுத்து இந்த ஊருக்கு வந்தா. உன்னை கேட்டதுக்கு என் புள்ளையை பணத்துக்கு தத்து கொடுத்துட்டேன் அண்ணனு கதறுனா. கடைசி வரைக்கும் என் தங்கச்சி கண்ணீர் வடிச்சிட்டு தான் இருக்கா.  அதோ அந்த வீடு தான் போய் பாருப்பா. நான் காப்பி தண்ணி போட்டு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்குள் சென்று விட்டார் அவர்.

 

விஷ்ணுவுக்கு பாதி புரிந்தது. தன்னுடன் மற்றொரு குழந்தை பிறந்திருக்கிறது என்றும் தன்னை தத்து கொடுத்ததாக ஊரில் சொல்ல பட்டிருக்குறதும் புரிந்தது.

 

நடுங்கும் நெஞ்சத்துடன் அந்த வீட்டின் முற்றத்தில் போய் நின்றான். அவன் பின்னே வந்த மணி “காரை நிறுத்திட்டு வந்தேன் சார். இங்க தான் நீங்க தேடி வந்தவங்க இருக்காங்களா சார்?”, என்று கேட்டான்.

 

“ம்ம்”, என்று சொன்னவன் அந்த குடிசையை கண் இமைக்காமல் பார்த்தான். தான் வாழ்ந்த வீட்டில் இது போன்ற குடிசைகள் ஆயிரம் அமைக்கலாம் என்ற எண்ணம் வந்து அவன் கண்ணை கலங்க வைத்தது.

 

அப்போது அவனுடைய முக ஜாடையில் ஒரு பெண் வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் புரிந்தது அவள் தான் தேன்மொழியென்று.

 

வார்தையற்று அவளையே பார்த்து கொண்டிருந்தவனை கண்ட தேன்மொழி “அண்ணே”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள்.

 

இப்படி ஒரு வரவேற்பை அவன் எதிர்பார்க்கவே இல்லை. “நிஜமாவே நீ தானா அண்ணே? என் கண்ணையே நம்ப முடியலையே”, என்று குதூகலித்த தேன் மொழியின் கண்கள் கண்ணீரை சொரிந்தது. அவளை பார்த்து விஷ்ணுவும் அழுதான்.

 

ஒரு விஷயமும் புரியாமல் முழித்து கொண்டிருந்தான் மணி.

 

தீ பற்றும் …….

 

Advertisement