Advertisement

 

அத்தியாயம் 5

 

இதமான தென்றலாய்

குளிரும் பனித்துளியாய்

நீ என்னை

நனைக்கும் போது

பற்றும் காதல் தீ!!!!!!

 

“இதுகளை வேற சமாளிக்கணுமா? அடியேய் எங்க டி இருக்க? சீக்கிரம் கண் முன்னாடி வந்துரு செல்லம். நீ வந்துட்டேன்னா அப்படியே உன்னை கூட்டிட்டு உலகம் முழுக்க சுத்த போயிருவேன். இந்த அறுவை நாடகத்தை எல்லாம் பாக்க வேண்டாம்”, என்று நினைத்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் விஷ்ணு.

 

அவன் நுழைந்ததும் அவனை “வா வா விஷ்ணு? ஏன் லேட் செல்லம்? உனக்காக தான் காத்துட்டு இருக்கோம்”, என்று புவனா கொஞ்சி கொஞ்சி பேசியதும் “அம்மா இப்படி கேவலமா நடிக்காத”, என்று தான் சொல்ல தோன்றியது விஷ்ணுவுக்கு.

 

அதை சொல்ல முடியாமல் “ரூம் போயிட்டு வரேன் மா”, என்றான்.

 

“சரி பா, போயிட்டு வா”, என்று சொன்னது தான் தாமதம் ஒரே தாவலாய் மாடி ஏறி சென்று தன்னுடைய அறைக்குள் மறைந்தான்.

 

பின் நிதானமாக, தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வேறு உடை அணிந்து கம்பீரமாக வந்தவனை வந்திருந்த அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தார்கள்.

 

எதையும் கண்டு கொள்ளாமல் கீழே வந்தவன் அம்மா மற்றும் அப்பாவின் அருகில் போய் நின்று கொண்டான்.

 

பிரதாப் மற்றும் புவனா இருவரும் சேர்ந்து கேக் கட் செய்தார்கள். இருவரையும் மாற்றி மாற்றி ஊட்டும் படி செய்தான் விஷ்ணு.

 

பின் இருவரும் அவனுக்கு ஒரு துண்டை ஊட்டினார்கள். அது வரை அனைத்தும் சரியாக நடந்தது.

 

“இப்போது முக்கியமான விஷயம் சொல்ல போகிறேன்”, என்று பிரதாப் ஆரம்பித்ததும் விஷ்ணு மண்டையில் பல்ப் எரிந்தது. எதுவோ தவறாக நடக்க போகிறது என்று அவன் அடி மனது ஓலமிட்டது.

 

அவன் மனதை கூறு போடும் விசயத்தை தான் செய்தார் பிரதாப். “கூடிய சீக்கிரம்  என் நண்பனின் மகள் டிம்பிள்க்கும், என்னுடைய ஒரே மகனுக்கும் திருமணம் முடிக்க போகிறோம்”, என்று பிரதாப் சொன்னதும் “நோ”, என்று கத்தி இருந்தான் விஷ்ணு.

 

இதை யாருமே எதிர் பார்க்கவில்லை. புவனா மற்றும் பிரதாப்க்குமே  அவன் கத்தியது அதிர்ச்சி தான்.

 

விஷ்ணு இது வரை தன்னுடைய பெற்றோர்களை யார் முன்னிலையிலும் விட்டு கொடுத்ததோ அவமான படுத்தியதோ இல்லை. அதனால் “அவனை பேசி சரி கட்டி விடலாம். எல்லார் முன்னாடியும் சொல்லிட்டா அதுக்காகவாது கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவான்”, என்று நினைத்து தான் பிரதாப் இப்போது சொல்லியது.

 

ஆனால் அவன் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. டிம்பிள் முகம் புன்னகையை தொலைத்து, அங்கே  கோபம் குடி கொண்டிருந்தது.

 

அங்கே வந்திருந்தவர்களிடம் சலசலப்பு கேட்டது. எதையும் கண்டு கொள்ளாமல் பிரதாப் முன் போய் நின்றான் விஷ்ணு.

 

அவன் முறைப்பை கண்டு கொள்ளாமல் “என்ன விஷ்ணு சந்தோசம் தான?”, என்று கேட்டார்  பிரதாப்.

 

“சந்தோசம் இல்லை டேட். யாரை கேட்டு இப்படி எல்லார் முன்னாடியும் சொன்னீங்க? நான் தான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல? எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு. இந்த பேச்சை இதோட விட்டுருங்க. என் கல்யாணம் என் விருப்ப படி தான் நடக்கும்”, என்று சொன்னவன் விறுவிறுவென்று தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

 

இங்கே புவனாவின் முகமோ கோபத்தில் சிவந்து போனது. அவமானத்தில் சிறுத்து போனது.

 

டிம்பிள் குடும்பமும் அதே அவமானத்துடன் தான் நின்றார்கள். கூட்டம் மெதுமெதுவாக களைய ஆரம்பித்தது. எல்லாருமே சென்று விட்டார்கள். டிம்பிள் குடும்பம் மட்டும் இருந்தது.

 

பிரதாப்போ “அவசர பட்டுட்டோமோ? கொஞ்சம் ஆற போட்டுருக்கலாமோ?”, என்று காலம் கடந்து யோசித்தார்.

 

இப்போதைக்கு புவனாவை சமாதான படுத்துவது தான் முக்கியம் என்று நினைத்து அவள் அருகில் சென்று அவளுடைய தோள் மீது கை வைத்தார்.

 

அந்த கையை வெடுக்கென்று தட்டி விட்டவள் “எனக்கு இவங்க ரெண்டு பேரோட கல்யாணம் நடந்தே ஆகணும். இத்தனை பேர் முன்னாடி எனக்கு நடந்த அவமானம் போகணும்னா இவங்க எல்லாரையும் கூப்பிட்டு கல்யாணத்தை நடத்தணும்”, என்று வெறியோடு சொன்னாள் புவனா.

 

“புவி ப்ளீஸ், கொஞ்சம் ஆறப்போடு. அவன் இப்படி செய்வான்னு நானே எதிர் பாக்கலை”

 

“இன்னும் எல்லாம் ஆற போட முடியாது. ஏற்கனவே சொல்லி மூணுமாசம் ஆகிட்டு. எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும்”, என்று கோபத்துடன் சொன்னவள் அங்கிருந்த வேலைக்காரி வள்ளியை அழைத்து “விஷ்ணுவை கூட்டிட்டு வா”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

 

அறைக்கு வந்தே விஷ்ணுவோ அவளுடைய நினைவை தரும் சட்டையை எடுத்து முகத்தை மூடி படுத்து விட்டான். “அம்மா, அப்பாவை கஷ்ட படுத்தி அவமான படுத்திட்டோமே”, என்று ஒரு மனமும் “இப்படி பேசலைன்னா அவளையே உனக்கு கட்டி வச்சிருவாங்க. பரவால்லயா?”, என்று மற்றொரு மனமும் யோசித்து கொண்டிருந்தது.

 

குழப்பத்துடன் படுத்திருந்தவனின் காதில் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் எரிச்சலுடன் கதவை திறந்தவன் வள்ளியை பார்த்து சிறிது கோபம் தணிந்தான்.

 

“என்ன வள்ளி? சொல்லு”

 

“அம்மா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க ஐயா”

 

“ஹ்ம்ம், எல்லாரும் போய்ட்டாங்களா?”

 

“போய்ட்டாங்க ஐயா”

 

“சரி நீ போ, நான் வரேன்”, என்று சொன்னவன் அறைக்குள் வந்து “அம்மா அப்பாவிடம் என்ன எல்லாம் பேசணும், அவர்களை எப்படி சமாளிக்கணும்”, என்று முடிவு செய்தான்.

 

“எப்படியும் இந்த கல்யாணத்தை நிப்பாட்டனும்”, என்று முடிவுடன் அவன் கீழே வரும் போது “எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தணும்”, என்று முடிவுடன் அவன் வரவை எதிர்பார்த்தாள் புவனா.

 

கீழே வந்த விஷ்ணு, “சாரி டேட். நான் வேணும்னு செய்யலை. நான் தான் முன்னாடியே சொன்னேன்ல? அப்புறம் ஏன் இப்படி செஞ்சீங்க?”, என்றான்.

 

“அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம், அதை பத்தி பேசி என்ன ஆக போகுது. ஆனா உன் அம்மா முடிவா இருக்கா. இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கணும்ன்னு”, என்றார் பிரதாப்.

 

“அதுக்கு அவங்க தான் கல்யாணம் பண்ணனும். என்னால எல்லாம் முடியாது”, என்று நக்கலாக சொன்னான் விஷ்ணு.

 

“ஏன் முடியாது? ஏன்னு கேக்குறேன்? இந்த கல்யாணம் நடந்தே தீரணும். டிம்பிள் தான் இந்த வீட்டு மருமக”, என்றாள் புவனா.

 

“அம்மா, முதல்ல டென்ஷனை குறைங்க. நீங்க சொல்றதுக்கு எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. எனக்கு பிடிக்கணும் முதல்ல. இவளை கண்டாலே எனக்கு பிடிக்கலை”

 

“உனக்கு பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நாங்க முடிவு செஞ்சா போதும்”

 

“வாட், நீங்க முடிவு செய்யணுமா? மாம், இது என்னோட லைப். நான் தான் முடிவு எடுக்கணும்”, என்று கடுப்புடன் சொன்னான் விஷ்ணு.

 

அவன் “மாம்”, என்று அழைத்ததிலே அவனுடைய கோபத்தை உணர்ந்தார்கள் பிரதாப்பும் புவனாவும்.

 

புவனா அவனிடம் தன்னை “மாம்”, என்று தான் அழைக்க சொல்லுவாள். ஆனால் விஷ்ணுவோ “அப்படி கூப்பிட்டா பாசமாவே இருக்காதும்மா. நான் அம்மான்னு தான் சொல்லுவேன். அப்பாவையே டேடின்னு கூப்பிடுறது பிடிக்கலை. வேற வழி இல்லாம கூப்பிடுறேன் “, என்று சொல்லி விடுவான்.

 

இன்று கோபத்தில் அவன் “மாம்”, என்று அழைத்திருந்தான். அவன் மனநிலை உணராத புவனாவோ “நீ என்ன நினைச்சிட்டு இருக்க? உன் இஷ்டத்துக்கு ஆடலாம்னா? இந்த வீட்டுக்கு மருமகளா வரதுக்கு டிம்பிள்க்கு மட்டும் தான் தகுதி இருக்கு. ஒன்னும் இல்லாதவளை மருமகளா ஆக்கணும்னு நினைக்கிறியா? அந்த ரம்யா மாதிரி”, என்று கேட்டாள்.

 

“மாம், முதல்ல புரிஞ்சிக்கோங்க. அவ என்னோட பிரண்ட். அப்புறம் ஒன்னும் இல்லாதவளை கல்யாணம் பண்ணா தான் என்ன தப்பு? நமக்கு இவ்வளவு சொத்து இருக்கும் போது ஏழை பொண்ணை கட்டுனா என்ன? புரிஞ்சிக்கோங்க மா. டேட் சொல்லுங்க டேட். எனக்கு தேவை நல்ல ஒழுக்கமான பொண்ணு”, என்று சொல்லி டிம்பிளை ஒரு பார்வை பார்த்தான்.

 

அவன் பார்வையில் கூனி குறுகி போனாள் டிம்பிள். “விஷ்ணு, அவங்க முன்னாடியே இப்படி பேசுறது நாகரீகம் இல்லை. அவங்க மனசு கஷ்ட படாதா?”, என்று கேட்டார் பிரதாப்.

 

“அவங்களை யாரு இங்க இருக்க சொன்னா?”, என்று விஷ்ணு கத்தியதும் டிம்பிள் குடும்பம் அப்படியே வெளிநடப்பு செய்தது.

 

அவர்கள் போனதும் “முடிவா சொல்றேன் விஷ்ணு. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சே ஆகணும்”, என்றாள் புவனா.

 

“நானும் முடிவா சொல்றேன். நல்ல குணமான ஒரு ஏழை பொண்ணை கல்யாணம் பண்ணிப்பனே தவிர உங்க பணக்கார சொசைட்டி பொண்ணை கட்டிக்கவே மாட்டேன்”

 

“ஏன் சொல்ல மாட்ட? என்ன தான் பெரிய இடத்துல வளந்துருந்தாலும் உன் அம்மாவை மாதிரி தான நீயும் இருப்ப? பிறந்த இடத்து பீடை எப்படி ஒழியும்?  உன்னை பெத்தவ ரத்தம் தான உன் உடம்புல ஓடுது. அப்படி தான நீயும் இருப்ப? ச்சி லோக்கல்”, என்று புவனா சொல்லி முடித்ததும் “புவனா”, என்று கத்திய பிரதாப் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்திருந்தார்.

 

கன்னத்தை பிடித்து கொண்டு அவரை முறைத்தாள் புவனா. பதிலுக்கு முறைத்தவர் “விஷ்ணுவை பாரு”, என்றார்.

 

அவனோ புவனா சொன்னதை கேட்டு இடிந்து போய் நின்றிருந்தான். அவன் முகத்தில் இருந்த வருத்தத்தை கண்ட புவனா, தான் அவசர பட்டு பேசியதை நினைத்து வருந்தினாள்.

 

“காலம் கருதி வருந்தி என்ன பயன்? விதி படி அனைத்தும் நடந்தே தீரும்”, என்று நினைத்து கொண்டார் பிரதாப்.

 

அவன் அருகில் சென்ற புவனா விஷ்ணுவின் தோளில் தன் கையை வைத்தாள்.

 

அந்த கையை எடுத்து தன் கையுடன் சேர்த்து கொண்டவன் “நிஜமாவே நான் உங்க மகன் இல்லையாம்மா?”,  என்று கேட்டான்.

 

“விஷ்ணு, என்ன உளறிட்டு இருக்க? உன் அம்மா கோபத்துல பேசுனது. எதையும் யோசிக்காத. இப்போதைக்கு உனக்கு கல்யாணம் வேண்டாம் அப்படி தான? உன் ரூம்ல போய் ரெஸ்ட் எடு.போ”, என்றார் பிரதாப்.

 

“அம்மா கோபத்துல பேசுனாலும் அவங்க கண்ணுல பொய் இல்லை. எனக்கு உண்மை தெரியணும். நீங்க ரெண்டு பேரும் என்னோட அம்மா அப்பா இல்லையா?”, என்று கேட்கும் போதே அவனுக்கு அழுகையில் வார்த்தை குழறியது.

 

“அப்படி எல்லாம் இல்லை விஷ்ணு. நீ எங்க மகன் தான்”, என்று பிரதாப் சொன்னதும் அவருடைய கையை எடுத்து தன் தலை மீது வைத்தவன் “என் மேல சத்தியம். என்னோட அம்மா அப்பா யாருனு நீங்க சொல்லியே ஆகணும்”, என்றான்.

 

அவன் கண்களில் மட்டும் நிற்காமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. “நிஜமாவே நீ என்னோட பையன் தான் விஷ்ணு. சத்தியமா நீ என் பையன் தான்”, என்றார் பிரதாப்.

 

“அப்ப அம்மா ஏன் அப்படி சொன்னாங்க?”

 

“உண்மையை நீ தெரிஞ்சிக்கணும்னு விதி இருக்கும் போது யாரால மாத்த முடியும்? நீ என்னோட மகன் தான். ஆனா புவனா வயித்துல நீ பிறக்கலை”, என்று பிரதாப் சொன்னதும் மனது மொத்தமாக கலங்கியது விஷ்ணுவுக்கு.

 

“டேடி தப்பான ஆளா இருந்துருப்பாரோ? அது மூலமா நான் பிறந்தேனா? ஒரு வேலை அம்மாவை இவர் ரெண்டாவது கல்யாணம் செஞ்சிருப்பாரோ? என்னை பெத்தவங்க தான் முதல் அம்மாவோ? அவங்க செத்து போயிருப்பாங்களோ?”, என்று கண்ட படி யோசித்தான் விஷ்ணு.

 

“நீ அறிவியல் முறை படி பிறந்தவன் டா. என்ன புரியலையா?  எனக்கு குழந்தை பிறக்கலைன்ன உடனே இவ்வளவு அதிகமா சொத்து இருந்தும் வாரிசு இல்லைன்னு எல்லாரும் குறை பேசுனாங்க. அதனால நீ வாடகை தாய் மூலமா பிறந்த. உன் அப்பாவோட உயிரணுவை ஒரு பொண்ணோட கர்ப்பப்பைல செலுத்தி, அப்படி பிறந்தவன் நீ. உன்னோட அம்மா யாருன்னு எங்களுக்கே தெரியாது’, என்று குண்டை தூக்கி அவன் தலையில் போட்டாள் புவனா.

 

மொத்தமாக  இடிந்து போனான்  விஷ்ணு. காதில் கேட்பவற்றை எல்லாம் அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தான் தப்பான விதத்தில் பிறக்க வில்லை என்று அறிந்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

 

ஆனால் தாய்  யாரென்றே தெரியாது  என்பதை தான் அவனால் தாங்க முடிய வில்லை.

 

அருகில் இருந்த சோபாவில் அமர்ந்த விஷ்ணு தலையை பிடித்து கொண்டான்.

 

இத்தனை நாள் சாதாரணமாக இருந்த வாழ்க்கை திடீரென கருமை படர்ந்தது போல ஆனது. “இத்தனை நாள் அம்மாவா இருந்தது அம்மா இல்லையா? அப்ப என்னை பெத்த அம்மா யாரு? எங்க இருக்காங்க?”, என்று எவ்வளவு யோசித்தும் அவனுக்கு விடை கிடைக்க வில்லை.

 

திடீரென வாழ்க்கையை பிரட்டி போட்டது போல உணர்வை அடைந்தான் விஷ்ணு. அவன் அருகில் சென்று அமர்ந்த பிரதாப் “விஷ்ணு”, என்றார்.

 

“ஏன் பா, ஏன் இப்படி? என்னோட அம்மா யாரு? ஏன் இதை இத்தனை வருஷம் மறைச்சீங்க?’

 

“இங்க பாரு விஷ்ணு, இது சொல்ல கூடிய விஷயம் இல்லை. அது மட்டுமில்லாம சொன்னா நீ இப்படி இடிஞ்சு போயிருவேன்னு தெரியும். கோபத்துல அவளையும் அறியாம புவனா சொல்லிட்டா”

 

“ஆமா விஷ்ணு, சாரி. நீ எங்க மகன் டா. நான் சொன்னதை மறந்துருப்பா”, என்றாள் புவனா.

 

“எப்படிம்மா மறக்க முடியும்? தெரியாம இருந்தா ஒன்னும் இல்லை. ஆனா இப்ப என்னோட அம்மா யாருனு தெரியாம என்னால எப்படி இருக்க முடியும்? எனக்கு அவங்களை பாக்கணும்”, என்று கலங்கிய குரலில் சொன்னான் விஷ்ணு.

 

“வேண்டாம் விஷ்ணு, அதெல்லாம் பழைய குப்பை பா. பணத்துக்காக வாடகை தாயா வர சம்மதிச்சாங்க. அவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கணுமா?”

 

“ம்ம், ஆனா அவங்களை பாக்கணும்னு தோணுது டேட், அவங்க கூட உறவு கொண்டாடணும்னு தோணலை. ஆனா யாருனு தெரிஞ்சிக்கணும்னு தோணுது. ப்ளீஸ் சொல்லுங்க”

 

“நிஜமாவே அவங்க யாருன்னு தெரியாது விஷ்ணு”

 

“டேட் ப்ளீஸ், எதாவது விவரம் சொல்லுங்க. நீங்க நினைச்சா கண்டு பிடிக்கலாம். ப்ளீஸ்”

 

“உங்க அப்பாவுக்கு விவரம் தெரியாது. ஆனா எனக்கு தெரியும்”, என்றாள் புவனா.

 

“நிஜமா மா? எங்க இருக்காங்க அவங்க?”, என்று  ஆர்வத்துடன் கேட்டான் விஷ்ணு.

 

“நீ நான் சொல்ற பொண்ணை கட்டிக்கிறேன்னு சொல்லு. நானும் விவரம் சொல்றேன்”

 

“பிளாக்மெயில் பண்றீங்களா மா? இந்த கலவரத்துலயும் உங்க ஆசை நடக்கணும்ல?”

 

“எப்படியும் வச்சிக்கோ. ஆனா விவரம் வேணும்னா நீ நான் சொல்றதை கேட்டே ஆகணும்”

 

“சரி நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்க விவரம் சொல்லுங்க. எனக்கு இப்ப அது தான் முக்கியம்”

 

“பேச்சு மாற மாட்ட தான?”

 

“மாற மாட்ட தான?”

 

“மாற மாட்டேன் மா சொல்லுங்க”

 

“எனக்கு அவங்க இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாது. அவங்க தமிழ்நாட்டுல உள்ளவங்க. நம்ம டாக்டர் பிங்கி இருக்காங்கல்ல? அவங்க மூலமா தான் தெரியும். பிங்கி கிட்ட கேட்டா தான் எல்லா விவரமும் தெரியும்”

 

“அப்படியா?”, என்று கேட்டவன் அடுத்த நிமிஷம் டாக்டர் பிங்கியை போனில் அழைத்தான்.

 

“ஏய் விஷ்ணு, எப்படி இருக்க? சொல்லு டா”, என்றார் பிங்கி.

 

“ஆன்ட்டி நலம் விசாரிக்கிறது எல்லாம் அப்புறம். எனக்கு முதல்ல எங்க அம்மாவோட விவரம் வேணும்”, என்று அவன் கேட்டதும் “விஷ்ணு”, என்று அதிர்ச்சியாக அழைத்தார் அவர்.

 

“ஆமா ஆன்ட்டி எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அவங்களை பத்தி சொல்லுங்க. இப்ப எங்க இருக்காங்க? சொல்லுங்க சீக்கிரம்”

 

“மெடிக்கல் டீட்டைல் வெளிய சொல்ல கூடாது விஷ்ணு”

 

“ஆன்ட்டி ப்ளீஸ், சொல்றதுனால எந்த பிரச்னையும் வராது. நான் அவங்க லைப்ல குழப்பம் பண்ண போகலை. அவங்களை பாக்கணும்னு ஆசை படுறேன். ப்ளீஸ்”

 

“சரி அவங்க அட்ரஸ் அனுப்புறேன். ஆனா இப்ப அங்க தான் இருக்காங்களான்னு தெரியாது”

 

“பரவால்ல நான் பாத்துக்குறேன். நீங்க வாட்சப் பண்ணுங்க, தேங்க்ஸ்”, என்று சொல்லி போனை வைத்தவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

சில நொடிகளில் அவனுக்கு அட்ரஸ் வந்திருந்தது. அதை பார்த்ததும் “டேட், நான் அம்மாவை போய் பாக்க போறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்தான்.

 

ஆழ்ந்த குரலில் “விஷ்ணு”, என்று அழைத்த பிரதாப் அங்கே கவலையாக இருந்த புவனாவை காண்பித்து “அப்ப இவ யாரு டா?”, என்று கேட்டார்.

 

புவனா அருகில் சென்றவன் “நீங்க மட்டும் தான் மா என்னோட அம்மா. அவங்களை பாத்துட்டு நான் வந்துருவேன். எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சரியா?”, என்று அவளை சமாதான படுத்தினான்.

 

“ஹ்ம்ம் சரி விஷ்ணு. அதை விடு அப்புறம் கல்யாணம் எப்ப வச்சிக்கலாம்?”

 

“யாருக்கு கல்யாணம்?”, என்று கேட்டு புவனாவுக்கு மேலும் பி. பி ஏற்றினான் விஷ்ணு.

 

“விஷ்ணு விளையாடாத நீ நான் சொல்ற பொண்ணை கட்டிக்கிறேன்னு சொன்ன தான?”

 

“அம்மா, அது அடுத்த ஜென்மத்துல. அதுவும் அவ நல்லவளா பிறந்தா. சாரி உங்களை ஏமாத்தி அட்ரஸ் வாங்க தான் அப்படி சொன்னேன். சரி நான் கிளம்புறேன். டேட் சென்னைக்கு டிக்கட் போடுங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

 

முகம் சிவக்க நின்றாள் புவனா. அவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவளருகே நின்றார் பிரதாப்.

 

சிறிது நேரத்தில் புவனாவை சமாதான படுத்திவிட்டார் பிரதாப். “விஷ்ணு அவனை பெத்தவளை கண்டு பிடிச்சா, நம்மளை அம்மா, அப்பான்னு நினைக்க மாட்டானா பிரதாப்? அவங்க கூடவே போயிருவானா? இவன் என் மகன் இல்லைனு தெரிஞ்சா எல்லாரும் என்ன பேசுவாங்க? சொசைட்டில யாருமே நம்மளை மதிக்க மாட்டாங்க பா”, என்றாள் புவனா.

 

“விஷ்ணு சின்ன வயசுல இருந்து பணக்காரனா வாழ்ந்தவன். அவன் போய் ஒரு கஷ்ட படுற வீட்ல இருப்பானா? கவலை படாத. பாத்துட்டு வந்துருவான் புவி. நீ கொஞ்சம் இந்த விசயத்தை பேசாமல் இருந்துருக்கலாம்”

 

“கோபத்துல சொல்லிட்டேங்க. அவன் நம்மளை விட்டு போக மாட்டான் தான?”

 

“போக மாட்டான் புவி”, என்று சொன்ன பிரதாப் அறியவில்லை. இந்த உலகத்தில் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதது தாய் பாசம் என்று. அது கிடைத்தால் விஷ்ணு என்ன செய்வான்?

 

தீ பற்றும் …….

 

Advertisement