Advertisement

அத்தியாயம் 4

 

அழகான மாலை

பொழுதில் உன் விரலோடு

விரல் சேர்த்து

நடக்கும் போது

பற்றும் காதல் தீ!!!!!!

 

கண் முன் இருந்த முத்து முத்தான கை எழுத்து தான் தன்னுடைய தலை எழுத்துக்கான சொந்த காரியின் கை எழுத்து  என்று தெரியாமல் அதை வாசித்தான் விஷ்ணு.

 

“என் உயிரினும் மேலான விஷ்ணு”, என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம். அந்த வார்த்தையில் ஒரு நிம்மதி பரவ “யாரும் தப்பான ஆள் இல்லை”, என்ற நிம்மதியுடன் கட்டிலில் அமர்ந்தவன் மேலும் படித்தான்.

 

“விஷ்ணு… அழகான பெயர். இந்த பெயரை நான் எத்தனை தடவை சொல்லி பாத்துருக்கேன்னு எனக்கே தெரியாது. உங்களுக்கு என்னை தெரியாது. ஆனால் என்னோட உலகமே நீங்க தான். அதுவும் உங்களுக்கு தெரியாது. என்ன உங்களோட கற்பை சூறையாடி எதாவது நோயை உங்களுக்கு கொடுத்துருப்பேன்னு பயமா? உங்களுக்கு எதாவது நோய் வந்தா அதை நான் வாங்கிக்கனும்னு நினைப்பேனே தவிர ஒரு நாளும் அப்படி  செய்ய மாட்டேன். நேத்து நடந்ததுக்கு நான் என்ன சொல்லனு தெரியலை. அது என்னையும் அறியாம நடந்தது. நான்… நான்…. உங்களை பாத்த சந்தோஷத்தில்… என்னையே அறியாம… என்னையே கொடுத்துட்டேன்”

…..

 

“இதனால என்னை தப்பா நினைப்பீங்களா விஷ்ணு? சத்தியமா நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை விஷ்ணு. நேத்து என்னை உங்க கிட்ட இழந்ததோ, உங்களை எனக்காக எடுத்துகிட்டதோ முழுக்க முழுக்க என் காதலுக்கான சமர்ப்பணம். நேத்து நடந்தது எனக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருந்த காதல் தீயை அணைக்க நடந்ததுன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு என்னையும், என் காதலையும் உங்க கிட்ட வெளிபடுத்த முடியாத உயரத்தில் நீங்க இருக்கீங்க? அப்புறம் எதனால லெட்டர் எழுதுனேன்னு கேக்குறீங்களா? உங்களுக்கு எந்த மனசங்கடமும் வர கூடாதுன்னு தான். இன்னொன்னு உண்மையை சொன்னா வேற பொண்ணு உங்க வாழ்க்கையில் வர முடியாதேன்னு ஒரு சின்ன பொறாமையும் தான். உண்மை தெரிஞ்சா நீங்க வேற பொண்ணை கட்டிக்க மாட்டிங்கள்ல? அப்படி ஒரு சுயநலத்துல தான்”

….

 

“இந்த உலகத்தில் இப்ப யார் சந்தோசமா இருக்கான்னு கேட்டா கண்டிப்பா நான்னு தான் சொல்லுவேன். இதுக்கு அப்பறம் என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. எனக்கு இந்த சந்தோசமே போதும். ஒழுங்கா விடியாத இந்த காலைல நாலு மணிக்கு உங்க முகத்தை பாத்துட்டு உங்களுக்கே லெட்டர் எழுதிட்டு இருக்கிறதை என்னால நம்பவே முடியலை விஷ்ணு. நீங்க கண்ணு முழிச்சிட்டா என்னால உங்க கண்ணு முன்னாடி இருக்க முடியாது. அதுக்குள்ள நான் உங்களை விட்டு போயாகணும். கடவுள் மனது வைத்தால் உங்களை மறுபடியும் பாக்க வாய்ப்பு கிடைக்கலாம். இல்லை கிடைக்காமலும் போகலாம். எதனால உங்க மேல காதல்னு தெரியாது. ஆனா உங்களை அவ்வளவு பிடிக்கும். அந்த மீராவுக்கு கண்ணன் மேல இருந்த காதல் மாதிரி. என்னோடதும் அப்படி பட்டது தான்”

 

…..

 

“அழகா இருக்கீங்க விஷ்ணு. அப்படியே கட்டி புடிச்சு, உங்க முகம் புல்லா முத்தம் கொடுத்துட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கு. உங்க நெஞ்சுல சாஞ்சுக்கணும். இவ்வளவு நேரம் சாஞ்சிருந்தேன் தெரியுமா? அதுவும் நீங்களும் என்னை கட்டி புடிச்சிருந்தீங்க? சந்தோசமா இருந்தது. ஆனா நீங்க நினைவில்லாம இருக்குறது தான் கஷ்டமா இருக்கு. இனி இப்படி குடிக்காதீங்க விஷ்ணு. எல்லாமே சரியா போகும். எதுக்காகவும் வருத்த பட கூடாது. என் விஷ்ணு சிரிச்சிட்டே இருக்கணும். நீங்க கஷ்ட பட்டா எனக்கும் வலிக்கும்”

 

….

 

“உங்க கூடவே நான் வந்தா என்னை ஏத்துப்பீங்களா விஷ்ணு? எனக்கு அதுவும் பயமா இருக்கு? நான் அசிங்கமா இருந்தாலும் என்னோட காதலுக்கு உங்க கிட்ட பதில் இருக்குமான்னு தெரியலை. இப்ப உங்களை விட்டு பிரிஞ்சு போகணும். கஷ்டமா இருக்கு. நைட் ஒரு மணில இருந்து  இந்த நாலு மணி வரை உங்க கூட இருந்த பொக்கிஷமான தருணங்கள் என் மனதில் அழியாத அழகான சுவடுகள். ஐ லவ் யூ விஷ்ணு. என்னோட மனசுல பற்றிய காதல் தீ ஒரு நாள் உங்க மனசுல பற்றி எறிந்ததுன்னா கண்டிப்பா உங்க கண் முன்னாடி நான் வருவேன். நான் இப்ப போறேன். போறதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடுத்துட்டு தான் போவேன்”

 

…..

 

“என்ன டா இப்படி கேவலமா பேசுறேன்னு நினைக்கிறீங்களா விஷ்ணு? எனக்கு உங்க கிட்ட இப்படி பேசவோ இருக்கவோ தப்பா தெரியலை. எந்த பொண்ணும் தன்னோட கணவர் கிட்ட இதை தான் எதிர்பாப்பா. அதை தான் நானும் செய்றேன். இத்தனை நாள் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் தெரியுமா? என்னோட தலையணை தான் நீங்கன்னு நினைச்சு உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேன். அது நீங்களாவே இருக்கணும்னு ஆசையா இருக்கு. நான் நினைக்கிறது பேராசைன்னும் தெரியும். ஆனால் காதல் நிஜங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எனக்கு நிழலோ நிஜமோ? உங்களோட வாழ்க்கை எதுவா இருந்தாலும் பிடிக்கும். அப்புறம் எதுக்குமே கவலை படாம இருங்க. எந்த விஷயத்துக்கும் உடைஞ்சு போக கூடாது. அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? உங்க நெஞ்சுல உள்ள மச்சம் அழகா இருக்கு. இன்னும் என்ன எல்லாமோ சொல்ல தோணுது. ஆனா அதுக்கான நேரம் எனக்கு இல்லை. லவ் யு விஷ்ணு, பை”, என்று முடித்திருந்த கடிதத்தில் “இப்படிக்கு உங்கள் மனைவி”, என்று முடித்திருந்தாள் அவள்.

 

முழுதாக படித்து முடித்ததும் அப்படியே அவன் உடல் முழுவதும் சிலிர்த்தது. கை கால்களில் எல்லாம் மயிர் கூச்செறிந்தது. “என் மேல ஒரு பொண்ணுக்கு இவ்வளவு காதலா? அப்படி அவளுக்கு நான் என்ன செஞ்சேன்? முகத்தை கூட நான் பாத்தது இல்லையே? எங்க இருக்க நீ? உன் பேர் என்ன? எதையுமே சொல்லாம போய்ட்டேயே?”, என்று வாய் விட்டே புலம்பியவனுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

 

“எனக்காகவும் ஒரு ஆள் இருக்காங்க”, என்று நினைத்து மனதெல்லாம் நிறைந்து போனது.

 

“என்னை பிடிக்கும் என்று சொன்னதுக்காகவே உன்னையும் எனக்கு பிடித்து விட்டதே பெண்ணே”, என்று அவன் மனது அவசர கவிதை எழுதியது.

 

இது வரை விஷ்ணு அன்பென்ற ஒன்றை உணர்ந்ததே இல்லை. புவனா மற்றும் பிரதாப்பிடம் அவர்களின் செல்வ புதல்வனுக்கான முக்கியத்துவம் இருந்திருக்கிறதே ஒழிய அவனுடைய மனதுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க  படவில்லை. அப்படி இருக்கையில் தனக்காக அவளையே தந்து காதலையே காணிக்கையாக்கி சென்றிருக்கிறாளே? அவளை அவன் மனது நாடாமல் என்ன செய்யும்? இப்போதே அவள் யாரென்று அறிய அவன் மனம் பரபரத்தது.

 

“இப்படி காதலை சொல்லி முகத்தை மறைத்து சென்றவளே! இனி உனக்காக தான் என்னுடைய மனமும், என் உடலும். எந்த சூழ்நிலையிலும் வேறு பெண்ணின் நிழல் கூட என்னை தீண்ட அனுமதிக்க மாட்டேன். இது நீ எனக்காக கொடுத்த காதல் காணிக்கை மீதான என் சத்தியம். உன்னை தேட கூட என்னால முடியாது. எந்த ஒரு தகவலும் இல்லாம எப்படி உன்னை தேடுவேன்? ஆனா கண்டிப்பா கடவுள் உன்னை என்கிட்டே சேர்ப்பார். அது வரை உன் மீதான என் காதலும் வளரும்” , என்று சபதம் எடுத்தான்.

 

அன்றில் இருந்து அவனுக்கு அந்த சட்டை மட்டுமே அவனுடைய ஆறுதல். துவைத்தால் அவளுடைய வாசனை போய் விடும் என்பதால் அப்படியே வைத்திருந்தான். அன்றைய இரவை நினைவு படுத்தி பார்த்து பார்த்து சந்தோச படுவான்.

 

எல்லாவற்றையும் விஷ்ணு சொல்லி முடித்ததும் அலெக்ஸை பார்த்தான். அவனோ பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தான். அவன் தோளை தொட்டு உலுக்கிய விஷ்ணு “என்ன ஆச்சு அலெக்ஸ்?”, என்று கேட்டான்.

 

“நான் என் கனவுல கூட நினைக்காத கதையா இருக்கு டா. இப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அது யாரா இருக்கும் டா? அந்த பொண்ணு மட்டும் உனக்கு கிடைச்சா லக்கியஸ்ட் பெர்சன் நீ தான் டா”, என்று பிரமிப்பாக சொன்னான் அலெக்ஸ்.

 

“அது என்ன கிடைச்சா? கண்டிப்பா கிடைப்பா”

 

“ஆமா அந்த லெட்டர் எங்க இருக்கு? அதை நான் பாக்கலாமா?”

 

“கண்டிப்பா பாக்க கூடாது.  அது பெர்சனல். நான் முழுசா உங்கிட்ட சொல்லலை. சொல்லவும் கூடாது. அப்புறம் அதுல இருந்து எதுவுமே கண்டு பிடிக்க முடியாது. என்ன செய்ய தெரியலை”

 

“பேசாம அந்த ஹோட்டல்ல போய் விசாரிப்போமா டா?”

 

“அங்கயும் என்ன தகவல் கிடைக்கும்? எனக்கு நம்பிக்கை இல்லை. அவ வேணும்னே மறைஞ்சு இருக்கா. அவ தான் சொல்லிருக்காளே டா? எப்ப என்னோட மனசுலயும் காதல் பற்றி எரியுதோ அன்னைக்கு வருவேன்னு. அப்புறம் என்ன? கண்டிப்பா என் முன்னாடி வருவா. அது வரை அம்மா அப்பாவை தான் சமாளிக்கணும்”

 

“ஹ்ம்ம்…”, என்று சொன்ன  அலெக்ஸ் எதையோ யோசித்து கொண்டிருந்தான்.

 

“என்ன அலெக்ஸ் யோசிக்கிற?”

 

“இல்லை அது வந்து… ஒரு வேளை உன்னோட குழந்தையோட வந்து தான் உன்னை பாப்பாளோ, என்னவோ?”

 

“கண்டிப்பா அப்படி பண்ண மாட்டா ? ஏன்னா அவ என்னை அந்த அளவுக்கு விரும்புறா. அப்படி இருக்கும் போது என்னோட உயிரை அவள் வயிற்றில் சுமந்தா அந்த சிசுவும் அவளுக்கு முக்கியம். அந்த குழந்தைக்கு அப்பாவின் பாசம் தெரியாம வளர்க்க மாட்டா. கவலை படாத அலெக்ஸ். கண்டிப்பா என்னோட பொண்டாட்டிக்கு தாலி கட்டின அப்புறம் தான் எங்களுக்கு குழந்தை பிறக்கும்”

 

“உனக்கு ஏதும் கவலை இல்லையா டா? கூலா இருக்குற?”

 

“ஒரே ஒரு கவலை தான், அவ வேணும். சீக்கிரமா அவ என் கையில் கிடைக்கணும். அவளை மாதிரியே நானும் அவளை உருகி உருகி லவ் பண்ணனும். இதை கவலைன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்ப ஆசை வருது டா அவ மேல? சில நேரம் உயிரை குடிக்கிற ராட்சசின்னு தோணுது, சில நேரம் மடி தாங்குற தேவதைன்னு தோணுது”

 

“டேய் விஷ்ணு நீ இப்படி கவிதையா எல்லாம் பேசுவியா?”

 

“நீ என்னை ஓட்டாத அலெக்ஸ்”

 

“ஆமா விஷ்ணு, ஒரு லெட்டர் படிச்சா காதல் வருமா? பாத்து பழகினாலே உண்மையான காதல் வருமான்னு டவுட். சும்மா நாலு வார்த்தை எழுதி வச்சதை எல்லாம் வச்சு உனக்கு எப்படி காதல் வந்துச்சு?”

 

“அலெக்ஸ், நீ படம் பாப்ப தான?”

 

“ஆமா பாப்பேன்”

 

“படம் பாத்து அழுத்துருக்கியா?”

 

“ஹ்ம்ம் சென்டிமென்டல் படம் பாத்து அழுதுருக்கேன்”

 

“சரி நாவல் படிச்சு அழுதுருக்கியா?”

 

“நாவல் படிச்சா எப்படி அழுகை வரும்?”

 

“படம் பாத்தா மட்டும் ஏன் வருது?”

 

“அதுல கண் முன்னாடி ஒரு உருவத்தை பாக்குறோம்ல? அவங்க பீலிங்ஸ் நமக்கு கண்ணுல தெரியுது”

 

“ஹ்ம்ம், நான் எப்படி தெரியுமா? ஒரு நாவல் படிச்சு கூட அழுவேன். எனக்கு அந்த உருவங்கள் எல்லாம் மனக்கண்ணில் தெரியும். புக்ல உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் இருக்கு டா. அது நமக்கு எல்லாத்தையும் உணர்த்தும். அது மாதிரி தான், அவளோட லெட்டரும். அவ கண் முன்னாடி இருந்து இதை பேசி இருந்தா அவளோட முகத்துல உருவாகுற எக்ஸ்பிரேஷன்ல அவளோட காதல் கூட எனக்கு புரியாமல் இருந்துருக்கலாம். ஆனா இப்ப அவ காதல், அவளோட பீலிங், என் மேல உள்ள ஆசை, என்னை பிரிய முடியாம அவ தவிக்கிற தவிப்புன்னு எல்லாத்தையும் என்னால உணர முடியுது டா.  அப்புறம் முக்கியமான விஷயம். இந்த விஷயம் நம்மளோட போகட்டும். உன் ஆள் ரம்யா கிட்ட உளறி வைக்காத”

 

“என்னது என் ஆளா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் அலெக்ஸ்.

 

“நடிக்காத, அதெல்லாம் எனக்கு தெரியும்”

 

“அட நீ வேற? அவ பிரண்ட் டா. அவ காதுல விழுற மாதிரி சொல்லிராத. பத்திர காளி தான். அதை விடு. இப்ப என்ன டா செய்ய போற?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“தெரியலை டா. ஆமா கேக்கணும்னு நினைச்சேன்? நான் குழப்பமா இருக்கேன்னு ரம்யா தான் உன்கிட்ட போட்டு கொடுத்தாளா?”

 

“வேற யாரு விஷ்ணு சொல்லுவா. அவ தான் ஒரு வாரமா உன்னை விசாரிக்க சொல்லி குடைச்சல் கொடுத்துட்டே இருந்தா. நானும் வரணும்னு நினைப்பேன். எதாவது வேலை வந்துரும். அவ முகத்தை தூக்குவா. இன்னைக்கு தான் எப்படியோ வந்துட்டேன். ஆனா வந்த பிறகு தான் தெரியுது. நீ இங்க பெரிய சிக்கலை உருவாக்கி வச்சிருக்கன்னு”

 

“ஹ்ம்ம், பாக்கலாம் என்ன தான் நடக்குதுன்னு. சரி எங்க அப்பா என்னை கூப்பிட்டுட்டே இருக்காங்க. இப்பவும் போகலைன்னா நேராவே வந்துருவாங்க”

 

“என்ன பங்க்சனா?”

 

“ஹ்ம்ம் ஆமா டா, அம்மா அப்பாவுக்கு வெட்டிங் டே. நீ வரியா?”, என்று தர்ம சங்கடத்துடன் தான் கேட்டான் விஷ்ணு. ஏனென்றால் விஷ்ணுவுக்கே தெரியும் தன்னுடைய வீட்டுக்கு அலெக்சோ,  ரம்யாவோ வர மாட்டார்கள் என்று.

 

“நான் உன் வீட்டுக்கு வந்தேன்னு வை, உன் அப்பா திட்ட, எனக்காக நீ பேசனு தேவை இல்லாத வாக்குவாதம் தான் ஆகும். எல்லாம் நடக்குற விஷயம் தான? நீயும் முழுமனசோட கூப்பிட்டுருக்க மாட்ட? உனக்கு பிடிச்ச பொண்ணை உனக்கு கட்டி வைக்கிறோம். அதுக்கு பின்னாடி எல்லா கொண்டாட்டமும் உன் வீட்ல தான். ஏன்னா அதுக்கப்புறம் உன் வீட்டுக்கு வந்தா உன் அப்பா கண்டுக்க முடியாதுல்ல?”, என்று சிரித்த நண்பனை கட்டி கொண்டான் விஷ்ணு.

 

“ஏண்டா விஷ்ணு ஒன்னு கேக்கணும். அது வந்து வந்து”

 

“என்ன டா?”

 

“இல்லை கொஞ்சம் பெர்சனலா இருக்கும். அதான்”

 

“கேளு முடிஞ்சா சொல்றேன்”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“அன்னைக்கு அந்த பொண்ணு உன் கூட இருந்தப்ப உனக்கு அவளை பத்தின எதாவது அடையாளம் நினைவு இருக்கா? எதாவது முகத்துல தழும்பு, மச்சம் இப்படி?”

 

“இல்லை டா, ஆனா ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியும். அது மட்டும் நடந்தா ஈஸியா அவளை கண்டு பிடிச்சிருவேன்”

 

“ஏய், சூப்பர் டா. என்ன அது?”

 

“அவளோட வாசனை. அவளை இறுக்கி கட்டி புடிச்சேன்னு வை கண்டிப்பா கண்டு பிடிச்சிருவேன்”, என்று விஷ்ணு சொன்னதும் தலையில் அடித்த அலெக்ஸ் “அதுக்காக ஒவ்வொரு பொண்ணையும் கட்டி புடிச்சா டெஸ்ட் பண்ண முடியும்? போடா. அப்புறம் இன்னொரு டவுட்”

 

“என்ன டா?”

 

“இல்லை விஷ்ணு.. உண்மையிலே அன்னைக்கு தப்பு நடந்ததுன்னு உனக்கு தெரியுமா? ஒரு வேளை அப்படி எதாவது செட் பண்ணிருந்தா?”

 

“செட் பண்ணதுக்கு இது என்ன கொலையா? அவ என்னோட வாழ்ந்துருக்கா டா. என்ன நடந்ததுன்னு தெரியாம இருந்தாலும் நம்மால உணர முடியும் தான? அப்புறம் அவளை முழுசா நான் நம்புறேன். மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டா. தேவை இல்லாம அவளை பத்தி தப்பாவோ சந்தேகமாவோ யோசிக்காத”

 

“சரி கடவுள் வழி விடுவார். நீ வீட்டுக்கு போ. நானும் கிளம்புறேன். ரம்யாவை  பாத்துட்டு போகணும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அலெக்ஸ் சென்றதும் தன்னுடைய காரை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றான் விஷ்ணு.

 

வீட்டுக்குள் சென்றதுமே அவன் மனநிலை மாறி விட்டது. அலெக்சிடம் இத்தனை நாள் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டது அவனை அறியாமலே ஒரு வித சந்தோசத்தை கொடுத்திருந்தது. இப்போது இருந்த கூட்டத்தை பார்த்தவனுக்கு லேசாக தலை வலி வந்தது.

 

தீ பற்றும் …….

 

Advertisement