Advertisement

அத்தியாயம் 3

 

உந்தன் அழகிய

நயனத்தால் என்னை

பார்க்கும் போது

பற்றும் காதல் தீ!!!!!!

 

“எங்கே செல்வது?”,  என்று தெரியாமல் நடு ரோட்டில் காரை நிறுத்தினான் விஷ்ணு. அப்படியே சீட்டில் சாய்ந்த படி அனைத்தையும் யோசித்து கொண்டிருந்தான்.

 

“என்கிட்ட எல்லாமே இருக்கு. ஆனா அம்மா, அப்பா இப்படி இருக்காங்களே? எல்லாரையும் ஏதாவது குறையோட தான் கடவுள் படைப்பாங்களா? நான் இப்ப என்ன செய்யணும்? இப்ப அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா என்னோட வாழ்கை நரகமா ஆகிறதா? கண் முன்னாடியே அவளோட கீழ்த்தனமான குணத்தை பார்த்த நான், எப்படி அவ கூட வாழ முடியும்? அம்மா, அப்பாவுக்கு எப்படி புரிய வைக்க? எதுவுமே வேண்டாம், இந்த சொத்து, சுகம் எதுவுமே வேண்டாம்னு எங்கயாவது போயிறலாமா? ஆமா போயிரலாம். நாம ரெண்டு நாளாவது எங்கயாவது போனா தான் அம்மா அப்பா என்னை புரிஞ்சிப்பாங்க. எங்க போறன்னே சொல்லாம போயிரலாம். ஆமா இப்படி தான் செய்யணும்”, என்று யோசித்தவன் கண்ணில் “ஹோட்டல் மெரிடியன்”, என்ற நியான் எழுத்துக்களால் பொறிக்க பட்டிருந்த விளம்பர பலகை பட்டது. நேராக அங்கே சென்றவன் காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றான். தனக்கென்று ஒரு அறையை புக் செய்தவன் தன்னுடைய அறைக்கு சென்றான்.

 

கட்டிலில் கண்களை மூடி படுத்திருந்தவனுக்கு ஒரு பொட்டு கூட தூக்கம் வர வில்லை. எதை எதையோ கண்ட படி யோசித்து கொண்டிருந்தவனின் யோசனையை நிறுத்த அவனுடைய போன் அடித்தது. வீட்ல உள்ளவங்களோ என்று நினைத்து எடுத்து பார்த்தான். அதே போல் பிரதாப் தான் அழைத்திருந்தார்.

 

“சரி தான் அதுக்குள்ளே தேடிட்டாங்க.  நான் வீட்டுக்கு ரெண்டு மூணு நாள் போகலைன்னா கண்டிப்பா டேடி என்னை கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ண மாட்டார்”, என்று நினைத்து போனை எடுக்காமல் விட்டான்.

 

இன்னும் இரண்டு முறை அழைத்த பிரதாப் அதன் பின் அழைக்க வில்லை. சிறிது நேரம் கழித்து மறுபடியும் அவனுடைய போன் அடித்தது. எடுத்து பார்த்தான். அலெக்ஸ் அழைத்தான். அவனுடைய அழைப்பை எடுத்து காதில் வைத்த விஷ்ணு “சொல்லு டா”, என்றான்.

 

“என்ன சொல்லு டா? எங்க இருக்க? அப்பா எனக்கு கால் பண்ணி கேக்குறாரு? மணி பதினொன்னு ஆக போகுது. வீட்டுக்கு போகலையா விஷ்ணு?”

 

“போகலை, போக போறதும் இல்லை”

 

“விஷ்ணு, என்ன ஆச்சு டா?”, என்று அலெக்ஸ் கேட்டதும் நடந்ததை சொன்னான் விஷ்ணு.

 

“அதுக்காக வீட்டை விட்டு போனா சரியா?”

 

“சரி தான். எனக்கு இப்ப வீட்டுக்கு போக பிடிக்கலை டா”

 

“எங்க இருக்க இப்ப நீ?”

 

“சொன்னா நீ உடனே இங்க வந்து நிப்ப? எனக்கு கொஞ்சம் தனிமை தேவை படுது. கவலை படாத. நான் சேபா தான் இருக்கேன். நீ தூங்கு குட் நைட்”, என்று சொல்லி விட்டு போனை அணைத்து போட்டான் விஷ்ணு.

 

சிறிது நேரத்தில் அவனுடைய அறைக்கதவு தட்ட பட்டது.  எழுந்து சென்று கதவை திறந்தான். அங்கே ஹோட்டலில் பணி புரிபவன் நின்றிருந்தான்.

 

“வணக்கம் சார், சாப்பிட எதாவது வேணுமா? டிரிங்க்ஸ் எதாவது கொண்டு வரவா?”

 

“வேண்டாம், சாப்பிட தோணலை. தேங்க்ஸ். நீங்க போங்க”, என்றான் விஷ்ணு.

 

“தப்பா எடுத்துக்காதீங்க? உங்களை பாக்க ரொம்ப ரெஸ்ட்லெசா இருக்கு. இன்னையோட எங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இருபத்தி அஞ்சு வருஷம் ஆகுதுன்னு கீழே பார்ட்டி நடக்குது. அதுல கலந்து கிட்டா நல்லா இருக்கும். முடிஞ்சா வாங்களேன்”

 

விஷ்ணுவுக்கும் தூக்கம் கிட்ட கூட நெருங்காததால் “சரி போவோம்”, என்று நினைத்து அவனுடன் சென்றான்.

 

அங்கே போய் அமர்ந்ததும் அவன் முன்னே கிளாஸை நீட்டினான் அந்த பணியாள்.

 

“தேங்க்ஸ்”, என்று அதை பெற்று கொண்டவன் மெதுமெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

 

விஷ்ணு மொடா குடிகாரன் எல்லாம் இல்லை. இது போன்ற பார்ட்டிகளில் மட்டும் அடுத்தவர்களுக்காக சிறிது குடிப்பான்.

 

இன்றும் அதே போல் மெதுமெதுவாக உறிஞ்சி கொண்டே அங்கிருந்தவர்களையும், நடக்கும் விழாவையும், சில ஜோடிகள் நடனம் ஆடி கொண்டிருப்பதையும் பார்வையிட்டு கொண்டே இருந்தான்.

 

அப்போது அவன் எதிரே ஒரு பெண் வந்து அமர்ந்தாள். அவளை பார்த்ததும் அவனை முகத்தை சுளிக்க வைத்தது அவளுடைய உடை. கழுத்துக்கு கீழே தாராளமாக இறங்கி அழகை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருந்தது.

 

இவனை பார்த்ததும் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி இளித்து வைத்தவள் அவனை நடனமாட அழைத்தாள்.

 

அதில் எரிச்சல் ஆனவன் “நான் வரலை. வேற ஆளை பாருங்க”, என்று தன்மையுடன் தான் சொன்னான்.

 

ஆனால் அவளோ “உன்னை மாதிரி அழகா இங்க யாரும் இல்லை”, என்று சொல்லி கொண்டே அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் தொடையில் கையை வைத்தாள்.

 

கையை வெடுக்கென்று தட்டி விட்டவன் “இந்த நிமிஷம் இங்க இருந்து நீ போகலைனா, நான் அடிச்சு விரட்ட வேண்டி இருக்கும்”, என்று அடி குரலில் சீறினான்.

 

அடுத்த நிமிஷம் அவனை பயப்பார்வை பார்த்தவாறே அங்கிருந்து அகன்றாள். விஷ்ணுவோ எரிச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி கொண்டிருந்ததை மொத்தமாக வாய்க்குள் கவிழ்த்தான்.

 

இவனிடம் வந்து பேசிய பெண்ணோ மற்றொருவனுடன் நெருக்கமாக ஆடி கொண்டிருந்தாள். அவனுக்கு டிம்பிள் நினைவுக்கு வந்தாள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மேலே எழுந்தது. அதன் பின் கையில் எடுத்த கிளாஸை அவன் வைக்கவே இல்லை.

 

“எல்லாத்தையும் மறக்கணும் மறக்கணும்”, என்று தனக்குள்ளே சொல்லி கொண்டே உள்ளே தள்ளி கொண்டே இருந்தான் விஷ்ணு.

 

அறைக்கு செல்ல எழுந்தான் விஷ்ணு. அளவுக்கு மீறி குடித்ததால் அவனால் நிலையாக நிற்க கூட முடியவில்லை.

 

மறுபடியும் தொப்பென்று நாட்காலியில் அமர்ந்தவன் அப்படியே டேபிளில் தலையை கவிழ்த்து கொண்டான்.

 

சிறிது நேரம் கழித்து அவனை அந்த பணியாள் தான் எழுப்பினான்.

 

தள்ளாடி நின்றவனை தாங்கி பிடித்தவன் “சாரி சார் இந்த அளவுக்கு நீங்க போவீங்கன்னு எதிர் பாக்கலை.வாங்க உங்களை ரூம்ல விடுறேன்”, என்றான்.

 

“நீங்க என்னை இங்க கூட்டிட்டு வந்ததுனால தான் நான் சந்தோசமா இருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்”, என்று குளறலாக பேசினான் விஷ்ணு.

 

“சரி சார் வாங்க ரூம்க்கு போகலாம்”

 

“பணம் பே பண்ணணுமே?”

 

அதெல்லாம் வேண்டாம், இன்னைக்கு பிரீ தான், வாங்க”

 

“நானே போய்க்குவேன்”

 

“இல்லை சார் நீங்க தடுமாறுறீங்க. நானே விடுறேன்”, என்று சொல்லி அவனை அழைத்து சென்றான்.

 

அந்த பணியாளிடம் “ஒரு கெட்ட பொண்ணை கல்யாணம் பண்ண சொல்றாங்க? எப்படி முடியும்? நீங்களே சொல்லுங்க?”, என்று உளறி கொண்டே வந்தவன் ரூம் அருகே வந்ததும் “இது தான என் ரூம்? நானே போறேன். தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

 

விஷ்ணு அறைக்குள் சென்றதும் அவனும் சென்று விட்டான். கதவை கூட ஒழுங்காக அடைக்காமல் உள்ளே சென்ற விஷ்ணு கட்டிலில் அமர்ந்தான். அதன் பின் நடந்தது எதுவும் அவனுக்கு தெளிவாக நினைவில்லை.

 

அடுத்த நாள் அலெக்ஸ் வந்து எழுப்பியதும் தான் கண் விழித்தான் விஷ்ணு. எதிரே அலெக்ஸை பார்த்ததும் “டேய், நீ எப்ப வந்த?”, என்று கேட்டு விட்டு தலையை அழுந்த பிடித்து கொண்டான்.

 

“இப்ப தான் வரேன். ஆமா ஏன் கண்ணு எல்லாம் சிவந்திருக்கு? நைட் சரியா தூங்கலையா?”

 

“அப்படி எல்லாம் இல்லை டா. சரி நீ எப்படி என்னை இங்க இருக்கேனு கண்டு பிடிச்ச?”

 

“நான் பாக்குறதே அந்த வேலை தான். என்னோட நண்பனை என்னால கண்டு பிடிக்க முடியாதா? உன் காரை வச்சே உன்னை கண்டு பிடிச்சிட்டேன்”

 

“சரி சரி அப்பா கிட்ட சொல்லிராத”

 

“அவர் கிட்ட சொல்லிட்டு தான் டா இங்கயே வந்தேன்”, என்று அலெக்ஸ் சொன்னதும் அவனை முறைத்தான் விஷ்ணு.

 

“சின்ன குழந்தை மாதிரி நீ கோப பட்டுட்டு இருந்தா பிரச்சனை சரியாகிருமா? நீ தான் பேஸ் பண்ணனும்? உன்னை மீறி எதுவும் நடக்காது. ஒழுங்கா வீட்டுக்கு போ. சரியாகிரும்”

 

“ஹ்ம்ம் போகலாம்”, என்று சொல்லி எழுந்தவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. அது மட்டுமல்லாமல் அப்போது தான் அவனையே அவன் பார்த்தான்.

 

அவனையே பார்த்து கொண்டிருந்த அலெக்ஸ்சும் “இப்படியே வா டா வர போற? ஆமா உன் சட்டை எங்க?”, என்று கேட்டு அதை தேடினான்.

 

விஷ்ணுவும் தேடினான். அது ஒரு ஓரத்தில் மேஜை மீது மடித்து வைக்க பட்டிருந்தது.

 

“அழுக்கு சட்டையை மடிச்சு வேற வச்சிருக்க டா?”, என்று கேட்டு கொண்டே அதை எடுத்து கொண்டு வந்தவன் “இதை போடு, கார்ல தான போக போறோம்? வீட்ல போய் குளிச்சிக்கோ”, என்று கையில் கொடுத்தான்.

 

அதை குழப்பத்துடன் வாங்கி அருகில் வைத்தவனை வேற எதையும் யோசிக்க விடாமல் “சீக்கிரம் வா டா”, என்றான் அலெக்ஸ்.

 

“இரு அலெக்ஸ், பாத்ரூம் போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவனுக்கு குளிக்கணும் போல இருந்தது. அங்கே கிடந்த டவலை எடுத்து குளிக்க ஆரம்பித்தவனுக்கு தன் உடலிலே நடந்த மாற்றமும் தெரிந்தது.

 

அதிர்ச்சியானவனுக்கு இரவு நடந்தது எதுவும் நினைவில்லை. “சட்டையை நான் கழட்டலை”, என்று நினைத்து கொண்டே தலையை பிடித்த படி யோசித்தவனுக்கு மெதுமெதுவாக தான் உணர்ந்த பெண்மையின் பரிசமும், ஒரு விதமான வாசனையும் நினைவில் வந்தது.

 

தன்னுடைய தலையில் தானே அடித்து கொண்டான். எதுவோ பெரிய தவறு நடந்ததை உணர்ந்தவனுக்கு அதிகமான குழப்பமும் ஒரு வித பயமும் வந்திருந்தது.

 

வெளியே சென்றவன் “அலெக்ஸ் எனக்கு எதாவது சாப்பிட வாங்கிட்டு வாயேன்”, என்று சொல்லி அவனை எழுப்பி விட்டு தன்னுடைய சட்டையை, கட்டிலை என்று மொத்தமாக அந்த அறையை ஆராய்ந்தான்.

 

அவன் நினைவில் வந்த வாசம் அந்த சட்டையில் வருவது போன்று உணர்ந்தான் விஷ்ணு. எதையும் கண்டு பிடிக்க முடியாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்தவன் மெதுமெதுவாக நேற்றைய நிலையை நினைவு கூர்ந்து பார்த்தான்.

 

“இப்படி என்னோட நிலை தெரியாத அளவுக்கா குடிப்பேன்? ஒரு வேளை நேத்து ஒரு பொண்ணை திட்டுனேன்ல? அவ வந்து இப்படி எதுவும் செஞ்சிருப்பாளோ?”, என்று நினைத்தவனுக்கு நேற்று அவள் அருகில் வந்து அமர்ந்த போது எழுந்த வாசனை இப்போதில்லாதது, அவள் இல்லை என்ற உறுதியை தந்தது.

 

உணவை வாங்கி வந்த அலெக்ஸ் இவனை குழப்பமாக பார்த்தான். “விஷ்ணு என்ன டா ஆச்சு? ஒரு மாதிரி இருக்க? கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு”

 

“நேத்து பயங்கரமா தண்ணி அடிச்சிட்டேன் டா. அதான் ஒரு மாதிரி இருக்கு”, என்று சொல்லி சமாளித்தான் விஷ்ணு.

 

“இது வேறையா? இதுக்கு தான் நீ வெளிய இருக்க கூடாதுனு  நினைச்சேன். சரி சாப்பிடு. கிளம்பலாம்”

 

“ஹ்ம்ம்”, என்று சொல்லி உணவை உண்டான். நேற்று இரவும் எதுவும் உண்ணாததால் இருந்த பசியில் அனைத்தையும் உண்டவன் கைகழுவ சென்றான். பின் வந்து அந்த சட்டையை எடுத்து போட்டவன் அலெக்ஸுடன் கிளம்பி சென்றான்.

 

கீழே வந்ததும் அலெக்ஸ் பில் காட்டும் போது அங்கு வந்த பணியாள் விஷ்ணுவை பார்த்து “சாரி சார்,நேத்து உங்களை கூட்டிட்டு போய் குடிக்க வச்சிட்டேன்ல?”, என்றான்.

 

அவனை பார்த்து புன்னகைத்த விஷ்ணு “அதை விடுங்க. அப்புறம் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். நான் நேத்து என்ன பண்ணேன்? என்ன நடந்ததுன்னு எனக்கு ஞாபகமே  இல்லை. தப்பா ஏதும் நடந்து கிட்டேனா? என் ரூம்க்கு யாரும் வந்தாங்களா?”, என்று ஒரு வித பட படப்புடன் கேட்டான். “ஒரு வேளை எதாவது பொண்ணை தானே அழைத்து வந்திருப்போமோ?”, என்று குழப்பத்தில் கேட்டான்.

 

அவனை குழப்பமாக பார்த்தவனோ “அப்படி எல்லாம் இல்லை சார். நீங்க அதிகமா குடிச்சிட்டு அப்படியே உக்காந்துடீங்க? பணம் கொடுக்கணுமான்னு கேட்டிங்க? நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம்… ஆன்… ஞாபகம் வந்துட்டு. கெட்ட பொண்ணை கல்யாணம் செய்ய முடியுமான்னு புலம்புனீங்க? அப்புறம் நீங்க உள்ள போனதும் நான் போய்ட்டேன். அப்பவே நேரம் ஆகிடுச்சு  சார். அதுக்கப்புறம் யாரும் வந்துருக்க மாட்டாங்க. ஏன் சார் எதையும் காணுமா? நான் எதுவுமே எடுக்கலை சார்”, என்று ஒப்பித்தான் அவன்.

 

“அப்படி எல்லாம் இல்லை. சும்மா தான் கேட்டேன்”, என்று சொல்லி கொண்டே தன்னுடைய சட்டை பையில் இருந்த பர்ஸை எடுத்தான்.

 

எடுக்கும் போது அவன் கையில் சிக்கியது ஒரு பேப்பர். “இது என்ன பேப்பர்?”, என்று நினைத்து கொண்டே பர்ஸை மட்டும் எடுத்து, அவனுக்கு பணம் கொடுத்தான். சந்தோசத்துடன் பெற்று கொண்டு அவன் சென்றதும் “வா டா கிளம்பலாம்”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தான் அலெக்ஸ்.

 

அந்த பேப்பரை மறந்து விட்டு “வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, ஹாஸ்பிடல் போய் ஒரு ஊசி போடணும்”, என்று நினைத்து கொண்டே தன்னுடைய காரை எடுத்தான்.

 

“நான் முன்னாடி போறேன் டா. பாத்து வா”, என்று சொல்லி விட்டு அவன் வந்த காரை ஓட்டி கொண்டு சென்றான்  அலெக்ஸ். அவன் காரை தொடர்ந்து சென்றான் விஷ்ணு.

 

வீட்டுக்கு சென்றதும் புவணாவையும், பிரதாப்பையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் விஷ்ணு.

 

“கொஞ்ச நாள் அவன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசாதீங்க சார்”, என்று சொல்லி விட்டு சென்றான் அலெக்ஸ்.

 

அறைக்கு சென்ற விஷ்ணு உடனே அந்த சட்டையை கழட்டினான். அப்போது அவன் கையில் மறுபடியும் தட்டு பட்டது அந்த காகிதம்.

 

“என்னையும் அப்பாவையும் பழி வாங்க எதிரிகள் யாரவது தெரியாத நோயை எனக்கு கொடுத்துட்டு போயிருப்பாங்களோ?”, என்று நினைத்தவனுக்கு பட படவென்று வந்தது.

 

அந்த பேப்பரை விரித்து பார்ப்பதற்குள் அவனுக்கு பயங்கரமாக வியர்த்து கொட்டியது.

 

கைகள் நடுங்க அதை பிரித்தான் விஷ்ணு.

 

தீ பற்றும் …….

 

Advertisement