Advertisement

 

அத்தியாயம் 2

 

அழகான இரவில்,

தெரியும் வெண்ணிலவில்,

உன் திருமுகம்

காணும் நேரங்களில்

பற்றும் காதல் தீ!!!!!!!

 

அலெக்சின் பார்வையை கண்ட விஷ்ணு “என்ன டா எனக்கு லூசு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா?”, என்று கேட்டான்.

 

“ம்ம்”, என்று உண்மையை சொன்னான் அலெக்ஸ்.

 

“தெரியும் நீ இப்படி தான் நினைப்பேன்னு. நான் சொன்ன விஷயம் அப்படி. ஆனா அது தான் டா உண்மை”

 

“எப்படி விஷ்ணு முடியும். அதுவும் உனக்கே தெரியாம?”, என்று கொஞ்சம் தர்ம சங்கடமாக கேட்டான் அலெக்ஸ். ஏனென்றால் என்ன தான் உயிர் நண்பனாக இருந்தாலும் அவனுடைய பெர்சனல் விசயத்தை பற்றி பேச அலெக்ஸுக்கு தயக்கமாக இருந்தது.

 

“தெரியாமன்னு இல்லை. நான் சுயநினைவுல இல்லைன்னு வச்சிக்கலாம்”, என்று இழுத்தான் விஷ்ணு.

 

“தயவு செஞ்சு முழுசா சொல்றியா? எனக்கு புரியவே இல்லை”

 

“ஹ்ம்ம் சொல்றேன்”, என்று சொல்லி பழைய நினைவுகளை அவனிடம் அசை போட துவங்கினான் விஷ்ணு.

 

விஷ்ணு அமெரிக்காவில் இருந்து வந்த உடனே பிரதாப்க்கும் அவனுக்கும் வாக்கு வாதம் ஆரம்பித்தது. மேனேஜ்மேண்ட் பொறுப்பை அவர் ஏற்று கொள்ள சொன்னால் அதை முடியாதென்று மறுத்தவன் அவர் பிடிவாதம் பிடிக்கவே ஐ டி கம்பெனியை மட்டும் தன்னுடைய பொறுப்பில் ஏற்று கொண்டான்.

 

அங்கு என்ஜினீயராக வேலை செய்து கொண்டிருந்தவள் தான் ரம்யா. அவன் கம்பெனி பொறுப்பை ஏற்றதும் அவனுக்கு ஆதி முதல் அனைத்தையும் சொல்லி கொடுத்து அவனுக்கே குருவானவள். இந்த நான்கு வருடத்தில் அவனுடைய உயிர் தோழியாக ஆனாள்.

 

அவளுடைய மாமனின் மகன் தான் அலெக்ஸ். அவளை பார்க்க வரும் போது தான் விஷ்ணுவும், அலெக்ஸும் பார்த்து கொண்டது.  இப்படி தான் இவர்கள் மூவரின் நட்பும் உருவானது.

 

எல்லாம் நல்ல படியாக தான் போய் கொண்டிருந்தது. நான்கு வருடங்களாக தன்னுடைய துறையில் நல்ல வளர்ச்சியை கொண்டு வந்தான் விஷ்ணு.

 

அனைவரும் பாராட்டும் படி தான் இருந்தது அவன் செய்கைகள். ஆனால் அவனுக்கு  அவனுடைய பெற்றோர்கள் செய்யும் செய்கைகள் மட்டும் பிடிப்பதில்லை.

 

திடீரென்று எதாவது விழா கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்து வேண்டாத கூட்டத்தை கூப்பிட்டு கூத்தடிக்கும் செய்கையை அறவே வெறுத்தான் விஷ்ணு.

 

அன்றைய நாள் முழுவதும் வீட்டுக்கே வராமல் ரம்யா அல்லது அலெக்ஸ் இல்லை கேசவன் யாருடனாவது வெளியே சுற்ற போய் விடுவான்.

 

இதை பிரதாப் கண்டித்தால் இருவருக்கும் வாக்கு வாதம் வந்துவிடும். ஆனால் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளாத பெற்றோர்களை வைத்து கொண்டு அவனும் தான் என்ன செய்வான். மொத்தத்தில் அவனை சுற்றி இருக்கும் சொசைட்டியை வெறுத்தான்.

 

இதில் இவன் ரம்யாவுடன் வெளியே செல்வதை யாரோ ஒருவர் பிரதாப்பிடம் சொல்லி, அவர் அவனை விசாரித்த விதமே அவனுக்கு அருவருப்பை தந்தது.

 

“விஷ்ணு, போயும் போயும் உனக்கு இழுத்துட்டு சுத்த நம்ம கம்பெனி ஸ்டாப் தான் கிடைச்சாளா?”, என்று அவர் கேட்டதும் முகத்தை சுளித்தவன் தன்னுடைய அப்பாவா இப்படி ஒரு பேச்சை பேசுகிறார் என்று தான் நினைத்தான்.

 

“அசிங்கமா பேசாதீங்க டேட். அவ என்னோட பிரண்ட். அப்புறம் யார் கூட பேசணும் பேச கூடாதுனு சொல்றதுக்கு ஐ அம் நாட் சைல்டு”, என்றான் விஷ்ணு.

 

“அவங்க எல்லாம் பணத்துக்கு அடிபோடுறவங்க. இனி அப்படி அவங்க கூட எல்லாம் பிரண்ட்ஷிப் வச்சிக்காத. இனி அவளோட வெளிய சுத்துனா நான் அவளை வேலைய விட்டு தூக்க வேண்டி இருக்கும்”

 

“அப்படி மட்டும் செஞ்சா அடுத்த நிமிஷம் உங்க கம்பெனில இருந்து நான் வெளிய போக வேண்டி இருக்கும். அப்புறம் நான் ஏன் அடிக்கடி அது உங்க கம்பேனின்னு சொல்றேன்னு இப்ப புரியுதா? அங்க உள்ள ஸ்டாப்பை நீங்க நினைச்சா வெளிய அனுப்பலாம், அப்படி தான?”, என்று நக்கலாக கேட்டான் விஷ்ணு.

 

ஆனால் அவன் அவ்வளவு சொல்லியும் ரம்யாவை நேரில்  சென்று தன்னுடைய மகனுடன் பழக கூடாது என்றும், அவளை கேவலமாகவும் பேசினார். அவர் பேசியதை தாங்க முடியாமல் அடுத்த நாளே வேலை வேண்டாம் என்று கடிதம் எழுதி அனுப்பி விட்டாள் ரம்யா.

 

ஆனால் விஷ்ணு அவளுடைய வீட்டுக்கே  வந்துவிட்டான். தன்னுடைய தந்தை பேசியதை அறிந்ததும் ரம்யாவிடம் அவன் கேட்ட ஒரே கேள்வி “அவர் சொன்ன அர்த்தத்தில் தான் என்கூட நீ பழகினியா?”, என்று தான்.

 

துடித்து நிமிர்ந்தவள் அவனை முறைத்தாள்.

 

“இல்லைனு தெரியுதுல்ல? அப்புறம் என்ன அவர் சொன்னதை பெருசா எடுத்துக்குற? உனக்கு என் நட்பு வேணுமா? இல்லை வேண்டாமா? வேணும்னா எனக்காக எங்க அப்பா சொல்றதை பெருசா எடுத்துக்காத. எடுத்துகுறது என்ன? அவர் சொல்றதை நீ காது கொடுத்து கேக்கணும்னு கூட அவசியம் இல்லை. இல்லைன்னா உன்னோட இஷ்டம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அடுத்த நாளில் இருந்து வேலைக்கு சென்றாள் ரம்யா. அதை அறிந்து கொதித்து போன பிரதாப் அவளை வந்து மறுபடியும் பார்க்கும் போது அப்படி ஒருவர் எதிரே இருக்கிறார் என்று கூட எண்ணாமல் அங்கிருந்து அகன்று  விட்டாள் ரம்யா.

 

அதன் பின் பிரதாப்பும் பின் வாங்கி விட்டார். விஷ்ணுவுக்கு தான் அவனுடைய  பணக்கார வாழ்வு பிடிப்பதில்லை. இருக்கும் பணத்தை வைத்து அவர்கள் செய்யும் ஆடம்பரங்களும், அலும்புகளும் அவனுக்கு பிடிப்பதில்லை.

 

ஆனாலும் அதே வீட்டில் சாதாரண மனநிலையில் நடமாடி கொண்டிருந்தான் விஷ்ணு. ஆனால் ஒரு நான்கு மாதத்துக்கு முன்பில் இருந்து நிலைமை முற்றிலும் மாறி போனது.

 

ஒரு நாள் புவனாவின் பிறந்த நாள் என்று சொல்லி அவளுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரவழைக்க பட்டார்கள்.

 

அன்றைக்கு வேலை முடிந்து இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு சென்றான் விஷ்ணு. அப்போது வீடு முழுக்க அலங்காரம் செய்ய பட்டு ஜெகஜோதியாக ஜொலித்து கொண்டிருந்தது.

 

அதை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் வந்ததும் அவன் எதிரே வந்தாள் புவனா.

 

“ஹாய் அம்மா, ஹேப்பி பர்த்டே”, என்று அவன் சொன்னதும் “விஷ்ணு அதெல்லாம் அப்புறம். சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு வா. கெஸ்ட் எல்லாம் வந்துருவாங்க”, என்றாள்.

 

“அம்மா ப்ளீஸ், ரொம்ப டயர்டா  இருக்கு. உங்க பிரண்ட்ஸ் எல்லார் கூடயும் நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. நாம தான் நைட்டே கேக் பண்ணிட்டோமே ப்ளீஸ்”, என்று கெஞ்சலாக சொன்னான் விஷ்ணு.

 

“நோ நோ, நீ கட்டாயம் இருந்தே ஆகணும். நீ இல்லைன்னா எல்லாருக்கும் நானும் அப்பாவும் எப்படி  பதில் சொல்ல முடியும்? ப்ரீஸ்டீஜ் என்ன ஆகுறது. போ போ கிளம்பி வா”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

 

எரிச்சலோடு தன்னுடைய அறைக்கு வந்தான் விஷ்ணு. கையில் இருந்த பைலை தூக்கி இருந்தவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

 

ஒரு சாதாரண பையனாக அவனும் அதே சாதார நிலையில் அவனுடைய அம்மாவும் இருந்திருந்தால் “டயர்டா இருந்தா ரெஸ்ட் எடு”, என்று அந்த அம்மா சொல்லி இருப்பாளோ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

எரிச்சலோடு குளியல் அறைக்கு சென்றவன் ஷவரின் அடியில் நின்றான். சிறிது நேரத்தில் தலை வலி குறைந்தது போல உணர்ந்தான்.

 

விலை உயர்ந்த டிரஸ் அவனுடைய கட்டிலின் மேல் இருந்தது. தன்னுடைய அம்மாவின் வேலை என்று நினைத்து கொண்டவன் அதை எடுத்து அணிந்தான்.

 

பின் கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்து கொண்டிருந்தான். விளம்பர மாடலை போல் அமர்ந்திருந்த அவன் முகம் மட்டும் புன்னகையை தொலைத்திருந்தது.

 

கீழே சென்றால் என்ன நடக்கும் என்று அவன் அறிந்ததே. வலிய வந்து இளித்து இளித்து பேசுபவர்களிடம் முகம் மாறாமல் சிரித்த படி பேச வேண்டும். முகத்துக்கு எதிரே அவர்கள் கூறும் பாராட்டை கண்டு கொள்ளாமல் அதே நேரம் அமைதியாகவும் ஏற்க வேண்டும். இதுவே வாடிக்கை என்பதால் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.

 

அப்போது அவனுடைய தொலைபேசி அடித்தது. புவனா தான் அழைத்தாள். “கீழே இருந்துட்டு போன் வேற”, என்று கடுப்புடன் நினைத்து கொண்டு போனை எடுத்தான்.

 

“விஷ்ணு எல்லாரும் வந்துட்டாங்க. நீ மட்டும் தான் வரணும். சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டு புவனா போனை வைத்ததும் மேலும் எரிச்சல் வந்தது.

 

இப்போது அவன் கீழே போனால் எல்லாரும் ஆவென்று அவனையே பார்ப்பார்கள். யோசிச்சிட்டு இருந்த நேரத்துல அப்பவே கீழே போய் இருந்துருக்கலாம்”, என்று நினைத்து கொண்டு கீழே சென்றான்.

 

அவன் நினைத்த படி தான் நடந்தது. எல்லாரும் அவனையே தான் பார்த்தார்கள். தர்ம சங்கடத்துடன் கீழே சென்றவன் பிரதாப் அருகில் போய் நின்று கொண்டான்.

 

அதன் பின் கேக் கட் செய்து அனைவரும் புவனாவை வாழ்த்தும் வரை அனைத்தும் சரியாக நடந்தது.

 

அதன் பின் பிரதாப் அவனுக்கு சிறிய அதிர்ச்சியை கொடுத்தார். “என்னோட மனைவியின் பிறந்த நாள் விழாவின் போது உங்களுக்கு மற்றொரு சந்தோஷமான செய்தியை சொல்ல ஆவலாக இருக்கிறேன். என் மகனுக்கு ஏற்ற மணமகளை நாங்கள் கண்டு கொண்டோம். கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிப்போம். இப்போது பார்ட்டி துடங்கட்டும்”, என்று பிரதாப் அறிவித்ததும் குழப்பத்துடன் அனைவரும் உணவு உண்ண சென்றார்கள்.

 

விஷ்ணுவோ, பிரதாப் அருகில் சென்று “என்ன டேட் இது? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை”, என்று கேட்டான்.

 

“ஏன், நாங்க முடிவெடுக்க கூடாதா?”, என்று மனத்தாங்களுடன் கேட்டாள் புவனா.

 

“அம்மா, நான் அப்படி சொல்லலை. எனக்கும் சர்ப்ரைஸா? அதான் கேட்டேன். சரி உங்க விருப்ப படியே செய்ங்க. நான் ஒன்னும் கேக்கலை. ஆனா பொண்ணு யாருன்னாவது தெரிஞ்சிக்கலாம் தான?”, என்று சிரித்து கொண்டே கேட்டான்.

 

“பங்க்சன் முடிஞ்ச அப்புறம் சொல்றோம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள் இருவரும். குழப்பத்துடன் இருந்தான் விஷ்ணு.

 

அதன் பின் அது யாரா இருக்கும் என்ற யோசனையோடு அங்கிருப்பவர்களிடம் பேசி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மது விருந்து ஆரம்பமானது. அதன் பின் தான் மெல்ல மெல்ல அவனுடைய எரிச்சல் அதிகமானது. கூடவே தன்னுடைய தந்தையும், தாயும் கூட தண்ணீரில் மிதப்பதை பார்த்தவனுக்கு முதல் முறையாக பயம் வந்தது.

 

“இவங்களே இப்படி இருக்காங்கன்னா, இவங்க பாக்குற பொண்ணு எப்படி இருக்கும்?”, என்று யோசனை ஓடியது.

 

“விஷ்ணு வாழ்க்கை ஒரு முறை தான். அதை எப்படி வாழணும்னு நீ தான் முடிவெடுக்கணும்”, என்று இடித்துரைத்தது மனசாட்சி.

 

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வாசல் பக்கம் வந்தவன் நேராக கார்டன் சென்றான்.

 

அங்கே அவன் கண்ட காட்சி அவனை கொதி நிலைக்கே கொண்டு சென்றது.

 

ஒரு இளம்பெண்ணை கட்டி அணைத்து ஒரு வாலிபன் முத்தம் கொடுத்து கொண்டிருந்தான். “ச்சி”, என்று சொல்லி முகத்தை திருப்பி விட்டு அங்கிருந்து சென்றவன் தன்னுடைய காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

 

தனக்கு பிடித்த பாடலை ஓட இருந்த அப்படியே சீட்டில் சாய்ந்தவனுக்கு வாழ்க்கையை நினைத்து முதல் முறையாக பயம் வர ஆரம்பித்திருந்தது.

 

சிறிது நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தார்கள்.

 

மொத்தமாக அனைவரும் வெளியேறியதும் “ரூம் க்கு போய் படுப்போம்”, என்று எண்ணி உள்ளே வந்தவன். அங்கே பிரதாப், புவனா, கூடவே அம்மாவின் தோழி வெல்வட், அவளுடைய கணவர் கேசவ் இருப்பதை கண்டு அவர்கள் அருகே சென்றான். அவர்களுடன் கார்டனில் முத்தமிட்டு கொண்டிருந்த பெண்ணும் இருந்தாள்.

 

ஒரு வித அருவெறுப்புடன் “டேட், நான் ரூம் போறேன். குட் நைட் மா”, என்று சொல்லி விட்டு மாடி ஏற போனான்.

 

“இரு விஷ்ணு, உனக்கு பாத்துருக்க பொண்ணை பத்தி உனக்கு தெரிய வேண்டாமா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் புவனா.

 

அமைதியாக நின்றான் விஷ்ணு. “நாங்களே சொல்றோம். இங்க இருக்காளே, டிம்பிள் இவ தான் நாங்க உனக்கு பாத்துருக்க பொண்ணு. டிம்பிள் என் பையனை பிடிச்சிருக்கா?”, என்று பிரதாப் கேட்டதும் “வாட்?”, என்று கத்தி விட்டான் விஷ்ணு.

 

“என்ன ஆச்சு விஷ்ணு?”, என்று கேட்டாள் வெல்வட்.

 

அவள் கேள்வியை கண்டு கொள்ளாமல், “டேட் இந்த மாதிரி காமெடி எல்லாம் இனி பண்ணாதீங்க. எனக்கு தூக்கம் வருது பை”, என்று சொல்லி விட்டு திரும்பினான்.

 

“காமெடி இல்லை விஷ்ணு. இவ தான் இந்த வீட்டு மருமக. நாங்க பேசி முடிவெடுத்துட்டோம்”, என்றாள் புவனா.

 

“அது ஒருநாளும் நடக்காது. கண்டிப்பா இவளை என்னால கல்யாணம் பண்ண முடியாது”, என்று விஷ்ணு சொன்னதும் முகம் கன்றினாள் டிம்பிள்.

 

“புவி என்ன இது? ஏன் விஷ்ணு இப்படி பேசுறான்?”, என்று கேட்டாள் வெல்வட்.

 

“நீ டென்ஷன் ஆகாத வெல்வட். இந்த வீட்டுக்கு டிம்பிள் தான் மருமக. விஷ்ணு. இதை யாராலயும் மாத்த முடியாது”

 

“அம்மா, இவ நல்ல பொண்ணு இல்லை மா. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இன்னொருத்தனை கட்டி புடிச்சு முத்தம் கொடுத்துட்டு இருந்தா”, என்று விஷ்ணு சொன்னதும் “ஆன்ட்டி உங்க பையன் என்னை ரொம்ப கேவல படுத்துறாரு”, என்று சொன்னாள் டிம்பிள்.

 

“விஷ்ணு, அதெல்லாம் இங்க சகஜம். இதெல்லாம் பெருசா எடுத்துக்காத”, என்று புவனா சொன்னதும் அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் பிரதாப்பை பார்த்தான்.

 

“நம்ம சொசைட்டில இதெல்லாம் சகஜம் விஷ்ணு. இந்த மாசம் கடைசில கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்கோம்”, என்று பிரதாப் சொன்னதும் “யாருக்கு கல்யாணம்?”, என்று கேட்டு அவரை வெறுப்பேற்றினான் விஷ்ணு.

 

“விஷ்ணு, இந்த கல்யாணம் நடந்தே தீரும். டிம்பிள் தான் இந்த வீட்டுக்கு மருமக. அடுத்த வாரமே கல்யாணத்தை அனௌன்ஸ் பண்ணிருவேன்”, என்று பிரதாப் சொன்னதும் “அது ஒரு நாளும் நடக்காது. நான் கேவலமானவளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. உங்க யாரையும் எனக்கு பாக்கவே பிடிக்கலை நான் வீட்டை விட்டே போறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து வாசல் நோக்கி சென்றவன் “அம்மா நான் போறேன் நீங்க தடுக்க கூட செய்யலைல?”, என்று கேட்டான்.

 

“நீ என்னைக்கு இருந்தாலும் திரும்பி வந்து தான் ஆகணும். டிம்பிள் தான் எங்களுக்கு மருமக. இப்ப எங்க போவ? அந்த பிச்சைக்காரி ரம்யா வீட்டுக்கு தான? அவ கூட எப்படி வேணும்னாலும் நீ இரு. ஆனா டிம்பிள் தான் உன் வைப்”, என்று புவனா சொன்னதும் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான் விஷ்ணு.

 

காரை எடுத்து கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி கொண்டே இருந்தான்.

 

தன்னுடைய அம்மா அப்பாவே இப்படி ஒரு காரியத்தை தனக்கு செய்வார்களா என்று அதிர்ச்சியாகவும் அதே சமயம் இதில் இருந்து எப்படி மீள்வது என்று குழப்பமாகவும் இருந்தது.

 

தீ பற்றும் …….

 

Advertisement