Advertisement

 

அவனை பார்த்ததும் சிரித்த விஷ்ணு “எப்படி இருக்கீங்க ?”, என்று கேட்டான்.

 

“நல்லா இருக்கேன் சார்”

 

“இங்க எங்க வந்தீங்க?  வேலைக்கு போகலையா?”

 

“இன்னைக்கு ஆப் சார். வீட்டுக்கு கொஞ்சம் பொருள் வாங்க வந்தேன். உங்களை பாத்தேனா? ஒன்னு சொல்லணும்னு ஞாபகம் வந்துச்சு. அதான் வந்தேன்”

 

“ஹ்ம்ம் சொல்லுங்க”

 

“உங்க கல்யாண போட்டோ பேப்பர்ல பாத்தேன் சார்”

 

“ஹ்ம்ம் ஆமா அவசரமா கல்யாணம் நடந்தது. எனக்கும் வேற நிறைய வேலை இருந்தது. உங்களை எல்லாம் கூப்பிட முடியலை”, என்று நிஜமான வருத்தத்தில் சொன்னான் விஷ்ணு.

 

“பரவால்ல சார். அப்புறம் சொல்லணும்னு நினைச்சேன். நீங்க முதல் நாள் ஹோட்டல் வந்த அன்னைக்கு என்னை தேடி யாராவது வந்தாங்களான்னு கேட்டீங்க தான?”

 

“நிம்மதியா இருக்கும் போது இவன் என்ன பழசை கிண்டுறான்?”, என்று நினைத்து கொண்டு “ஆமா யாரும் வந்தாங்களா?”, என்று கேட்டான்.

 

“ஆமா சார். எனக்கு நீங்க கேட்டப்ப ஞாபகம் இல்லை. ஆனா அன்னைக்கு உங்க கூட வந்தவங்க, அதான். சார். நீங்க கல்யாணம் பண்ணிருக்கீங்களே? அந்த பொண்ணு தான் நீங்க முதல் நாள் ஹோட்டல் வந்த அன்னைக்கு கூட வந்து விஷ்ணு எந்த ரூம்ல தாங்கி இருக்கார்ன்னு கேட்டுச்சு? அதை அன்னைக்கு சொல்ல வரும் போது அவங்க உங்களை அவசரமா கூட்டிட்டு போய்ட்டாங்க. நானும் வேலைல அப்பறம் மறந்துட்டேன்”

 

“என்னது முதல் நாள் நான் டிரிங்க்ஸ் பண்ண அன்னைக்கு சத்யாவை நீங்க இங்க பாத்தீங்களா? என்னை பத்தி விசாரிச்சாளா?”

 

“ஆமா சார் கேட்டாங்க. நீங்க யாருன்னு கேட்டேன். அவங்க உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்றதா சொன்னாங்க. ஆனா அன்னைக்கு எதுக்கு கண்டுக்காம போனாங்கன்னு தெரில. இப்ப உங்களை பாத்த உடனே சொல்லணும்னு தோணுச்சு. சரி சார் ரெண்டு பேருக்கும் என்னோட கல்யாண வாழ்த்துக்கள்”

 

“ஆன், சரி தேங்க்ஸ். இன்னொரு நாள் பாக்கலாம்”, என்று சொல்லி காரில் ஏறி அமர்ந்தான் விஷ்ணு. மனம் முழுவதும் குழப்பமாக இருந்தது. இது வரை நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தான். அனைவரின் குரலும் அவன் காதில் இப்போது விழுவது போல இருந்தது.

 

“விஷ்ணு எந்த ரூம்ல தங்கி இருக்காங்கன்னு கேட்டாங்க சார்…. உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்றதா சொன்னாங்க…. சத்யாவுக்கு ஹிந்தி தெரியும் விஷ்ணு…. அவ நிறைய தடவை டெல்லிக்கு வந்துருக்கா… நான் யாரையும் லவ் பண்ணலை… இப்ப இந்த நிமிஷம் என் மனசுல உங்களை தவிர யாரும் இல்லை…. அத்தைக்காக திட்டம் போட்டு தான் உங்களை கல்யாணம் செஞ்சேன்….  காலைல இருந்து சாப்பிட்டிருக்க மாட்டா. அதான் இப்ப மயங்கி விழுந்துட்டா….என்னை கல்யாணம் பண்ண அப்புறம் அந்த பொண்ணை நீங்க எப்படி நினைக்கலாம்….. அதான் சட்டையை துவைச்சேன்…”

 

“ஆக, சத்யா தான் இந்த லெட்டர் எழுதிருக்கா”, என்று நினைத்தவன்  மனதில் இருந்த பாரம் அனைத்தும் நீங்கியது போல உணர்ந்தான். இதயத்தை மயிலிறகு கொண்டு வருடுவது போல இருந்தது விஷ்ணுவுக்கு.

 

புன்னகையுடன் அமர்ந்திருந்தவன் “எப்படி இப்படி எல்லாம் நடந்தது. அவளை நான் பாத்தது கூட கிடையாது. அப்புறம் எப்படி என் மேல காதல்? அதுவும் அவளையே கொடுக்குற அளவுக்கு. எதுக்கு பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும்? எல்லாத்துக்கும் மேல எதுக்கு இப்ப இந்த லெட்டர் எழுதணும். அவ காதல் கதையவே என்கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கிறாளா? இப்ப நான் நினைக்கிறது சரி தானா? ரெண்டு பேரும் ஒரு ஆள் தானா? இத்தனை நாள்ல அவளோட வாசனையை என்னால ஏன் கண்டு பிடிக்க முடியலை. சத்யா தான் அந்த பொண்ணா இருக்கணும். இப்போதைக்கு தொண்ணுறு சதவீதம் உறுதியாகிட்டு. இன்னும் அவ எழுத்தை பாத்தா மீதியும் தெரிஞ்சிரும்”, என்று  நினைத்து உடனே காரை வீட்டுக்கு செலுத்தினான்.

 

காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றதும் அவனை தேடி மேலே இருந்து இறங்கி வந்தவளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. அது மட்டுமல்லாமல் அவள் கண்களில் வழிந்த காதலில் ஒரு நிமிடம் அவனே அசைவற்று நின்று விட்டான். அவளுடைய புரியாத பார்வைக்கு அர்த்தம் இன்று விலகியது.

 

தன் சிந்தனையை ஒதுக்கி வைத்தவன், அவளை பார்த்து சிரித்தான். “அத்தான் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க?”

 

“ஹ்ம்ம் வேலை குறைவா இருந்தது அதான். அம்மா அப்பா எங்க?”

 

“தெரியாதே என்கிட்ட சொல்லலையே? டீ தரவா ?”

 

“ஹ்ம்ம் நான் ரெபரஷ் ஆகிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு மேலே சென்று விட்டான். அறைக்குள் அவளுடைய டைரி, புக் எதுவும் இல்லாததால் வேறு வழி இல்லாமல் குளிக்க சென்றான்.

 

அவன் கீழே வரும் போது அவன் கையில் டீயை கொடுத்தாள் சத்யா. அதை வாங்கி கொண்டவன், எதையோ யோசித்த படியே இருந்தான்.

 

“என்ன ஆச்சு அத்தான்?”

 

“இல்லை அம்மா ஞாபகம் வந்துருச்சு”

 

“அத்தை ஞாபகமா? போன் பண்ணி பேச வேண்டியது தான?”

 

“இல்லை வரும் போது ஓரு யோசனை. ஒரு நாள் அம்மா சொன்னது ஞாபகம் இருக்கு. அவங்களுக்கு யாராவது லெட்டர் எழுதுனா ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்”

 

“ஆமா அத்தான். அத்தம்மாக்கு லெட்டர் போட்டா ரொம்ப பிடிக்கும். நானே படிக்கும்போது அவங்களுக்கு லெட்டர் தான் எழுதுவேன். நீங்களும் எழுதுங்க”

 

“அதான் யோசிக்கிறேன். எனக்கு தமிழ் பேச தான் தெரியும். எழுத தெரியாது. ஆனா அம்மாக்கு இங்கிலிஷ் தெரியாது”

 

“இது பெரிய விசயமா? நீங்க சொல்லுங்க நான் எழுதுறேன்”, என்று சொல்லி அவளே அவன் வலையில் விழுந்தாள்.

 

“ஏய் நிஜமாவா? அப்ப இப்பவே எழுதுவோம்?”

 

“நீங்க டீ குடிங்க அத்தான். நான் பேப்பர் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து சென்றாள்.

 

அதன் பின்னர் தான் சொல்ல சொல்ல அன்னலட்சுமிக்கு கடிதத்தை எழுதினாள் சத்யா. எழுதி முடித்தவள் “இப்படிக்கு உங்கள் அன்புள்ள மகன்னு எழுதிருக்கேன். கையெழுத்து போடுங்க அத்தான்”, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தாள்.

 

முத்து முத்தான கை எழுத்தை பார்த்து அவனுக்கு அனைத்தும் அவள் வேலை தான் என்று புரிந்தது. அவன் வாழ்க்கையில் விளையாடியது அவன் மனைவியே தான்.

 

“இதை பத்தி முதலில் இருந்து  விசாரிக்கணுமே”, என்று நினைத்து கொண்ட விஷ்ணு அவளிடம் “வெளியே போய்ட்டு வரேன் சத்யா”, என்று சொல்லி விட்டு அலெக்ஸை தேடி சென்றான்.

 

“என்ன டா இந்த நேரத்தில் ஆபிஸ்க்கு வந்துருருக்க?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“ஒரு முக்கியமான விஷயம் அலெக்ஸ். அதான் உங்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”, என்றான் விஷ்ணு.

 

“முக்கியமான விஷயமா? என்ன?”

 

“இல்லை ரம்யாக்கு ஒரு அலையன்ஸ் வந்துருக்கு. பையன் நல்ல வேலைல இருக்கான். உங்கிட்ட சொல்லி அவங்க வீட்லே பேச சொல்லலாம்னு நினைச்சேன். உங்க அத்தை கிட்ட, அதான் ரம்யா அம்மா கிட்ட பேசுறியா?”

 

அமைதியாக அமர்ந்திருந்தான் அலெக்ஸ்.

 

“நான் கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன அமைதியா உக்காந்துருக்க?”

 

“இனி ரம்யாவுக்கு மாப்பிள்ளை எல்லாம் பாக்க வேண்டாம் விஷ்ணு”, என்று தீவிரமான குரலில் சொன்னான் அலெக்ஸ்.

 

“ஏன் அவளுக்கும் மேரேஜ் பண்ணி வைக்கணும்ல? அடுத்த வருசம் நீ ஜான்சிக்கே பண்ணி வைப்ப? அப்ப ரம்யாவுக்கு பண்ண வேண்டாமா? அவளோட அம்மாவும் எத்தனை நாள் தான் பொண்ணை பத்தி நினைச்சு கவலை படுவாங்க?”

 

“அத்தை எதுக்கு கவலை படணும்? அதான் மாப்பிள்ளையா நான் இருக்கேனே?”

 

“வாட்? அன்னைக்கு கேட்டதுக்கு லவ் எல்லாம் இல்லைன்னு சொன்ன?”

 

“லவ் எல்லாம் இருக்கான்னு தெரியாது. ஆனா என்னால அவளை வேற யாருக்கும் விட்டு தர முடியாது”

 

“என்ன லாஜிக்கோ? எப்படியோ சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிக்கோ”

 

“ஹ்ம்ம் சரி விஷ்ணு. நான் அவ கிட்ட பேசுறேன்”

 

“ரம்யா உன் ஆள் உன் கிட்ட கல்யாணத்தை பத்தி பேச வருவான் மா. இறுக்கி பிடிச்சுக்கோ”, என்று மனதில் நினைத்து கொண்டு “எனக்கு இம்மீடியட்டா டைவர்ஸ் பேப்பர்ஸ் வேணும் டா”, என்றான்.

 

அவன் சொன்னதை கேட்டு குழம்பியவன் “நீ என்ன கேட்ட?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“உன் காதுல சரியா தான் விழுந்தது அலெக்ஸ். எனக்கு டைவர்ஸ் பேப்பர்ஸ் வேணும்”

 

அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தான் அலெக்ஸ்.

 

“டேய் எருமை பயந்துட்டியா? நான் விளையாட்டுக்கு தான் சொல்றேன். சத்யாவை கொஞ்சம் ஏமாத்தணும்”, என்றான் விஷ்ணு.

 

“என்னது நீயுமா?”, என்று கேட்டான் அலெக்ஸ்

 

“என்னது நீயுமா? என்ன உலறுற?”

 

“ஹி ஹி அது வந்து… அது… அது வந்து…நானும் ரம்யாவுக்கு சும்மா ஷாக் கொடுக்கலாம்னு நினைச்சேன். அதான்”

 

“ஓ அப்படியா? நான் சொன்னேன்ல டா? என்னை ஒரு பொண்ணு விரும்புதுன்னு”

 

“ஆமா லெட்டர் எல்லாம் காமிச்சியே?”

 

“அந்த பொண்ணு சத்யா தான் டா. பிராடு என்னை நல்லா ஏமாத்திருக்கு”

 

“என்னது சத்யாவா? என்ன சொல்ற நீ? என்னால நம்ப முடியலையே”

 

“என்னாலயும் தான் நம்ப முடியலை. இன்னும் விவரம் எல்லாம் தெரியாது. மெதுவா தான் கேக்கணும். அதுக்கு முன்னாடி ஷாக் கொடுக்கணும்”

 

“சரி டா. எப்படியோ சந்தோசமா இருந்தா சரி. நம்ம மோகன் லாயரா தான இருக்கான்? அவன் கிட்ட பேப்பர் ரெடி பண்ணி வைக்க சொல்றேன்”

 

“அட ஆமா. சரி நான் கால் பண்ணி பேசிக்கிறேன். நீ சீக்கிரம் ரம்யா கிட்ட பேசு”, என்று சொன்ன விஷ்ணு கிளம்பி விட்டான்.

 

அவன் போனதும் நிம்மதியாக மூச்சு விட்ட அலெக்ஸ் ரம்யாவை போனில் அழைத்தான்.

 

“என்ன அலெக்ஸ்?” என்று கேட்டாள் ரம்யா.

 

“அத்தையை இன்னொரு தடவை யார் கிட்டயும் உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லி சொல்ல கூடாது. அதான் மாப்பிள்ளை நான் இருக்கேன்ல? தேவை இல்லாம உன்னை வேற ஒருத்தனுக்கு விட்டு கொடுக்க முடியாது புரிஞ்சுதா? அப்புறம் என்னோட மொபைல் இப்ப சுவிட்ச் ஆப் பண்ண போறேன். ஒரு ரெண்டு நாளைக்கு என்னை தேடாத. ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போறேன். வந்து கல்யாணம் பத்தி பேசிக்கலாம்”, என்று படபடவென்று பேசியவன் போனை அணைத்து போட்டான்.

 

அவன் பேசியது எல்லாம் கனவா நினைவா என்று தெரியாமல் குழம்பி நின்றாள் ரம்யா.

 

அதே நேரம் “இன்னைக்கு என்ன போன் பண்ண இவ்வளவு நேரம்?”, என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு கேட்டு கொண்டிருந்தாள் ஜான்சி.

 

“வேலை இருந்துச்சு மா. நீயும் உன் படிக்கிற வேலையை முடிக்கட்டும்னு நினைச்சேன்”, என்று அவளை சமாதான படுத்தினான் அருள்.

 

இருவரும் போனில் உரையாட ஆரம்பித்து வெகு நாட்கள் ஆனது.  ஜான்சி டெல்லி வந்த பிறகு இரண்டு நாட்கள் அவனிடம் இருந்து போன் வரவே இல்லை. மூன்றாவது நாள் யோசித்து யோசித்து ஜான்சியை மறக்க முடியாமல் கடைசியில் மறக்க தோன்றாமல் அவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று உணர்ந்து தான் அவளை போனில் அழைத்தான்.

 

அவன் அழைப்பில் அப்படியே சந்தோஷத்தில் சிதறி தான் போனாள் ஜான்சி. நிம்மதி மற்றும் சந்தோசத்துடன் அவன் அழைப்பை ஏற்றாள். இருவரும் தங்கள் காதலுக்கு உயிர் கொடுத்தார்கள்.

 

அன்றில் இருந்து தினமும் இரவு இரண்டு மணி நேரம் இவர்களின் உரையாடல் இருக்கும். அலெக்ஸ் காதுக்கு விசயம் போய் அவனும் அது அருள் தான் என்று தெரிந்து நிம்மதி ஆகி விட்டான்.

 

இன்று அந்த இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரம் கழித்து அவன் பேசியதால் தான் இந்த செல்ல சண்டை. அவளை சமாளிக்க அவனுக்கா தெரியாது?

 

அலெக்ஸ் ஆபிசில் இருந்து வீட்டுக்கு சென்று இறங்கிய விஷ்ணு சத்யாவை தேடிய படியே உள்ளே வந்தான்.

 

முகம் முழுவதும் புன்னகையுடனும் கண்கள் முழுக்க காதலுடனும் அவன் எதிரே வந்தவள் “அத்தான் வந்துட்டிங்களா? இன்னைக்கு தான் சீக்கிரம் வந்துட்டிங்கன்னு சந்தோச பட்டேன். மறுபடியும் போய்ட்டிங்க. போங்க” என்று சொல்லி அவனை முறைத்தாள்.

 

அவள் முகத்தின் உணர்வுகளை பார்த்து அவளை இறுக்கி கட்டிக்க சொன்ன மனதை அடக்கியவன் “ஒரு இடத்துக்கு போகனும் சத்யா. நீயும் கிளம்பு”, என்றான்.

 

“வெளிய போறோமா? சீக்கிரம் ரெடியாகுறேன்”, என்று சொன்னவள் உடனே கிளம்பி விட்டாள்.

 

“வாடி வா. உனக்கு இன்னைக்கு இருக்கு. என் கண்ணுலையே மிளகா பொடியை தூவி அலைய விட்டள்ள? உன்னை ஒரு மூணு நாளாவது வெறுப்பேத்துறனா இல்லையான்னு பாரு”, என்று மனதுக்குள் கருவி கொண்டான் விஷ்ணு.

 

மகிழ்ச்சியுடன் அவன் அருகே காரில் ஏறி அமர்ந்ததும் புன்னகையுடன் காரை கிளப்பினான் விஷ்ணு.

 

“மோகனிடம் அழைத்து செல்லலாம்”, என்று நினைத்தவன் “எதுக்கு தேவை இல்லாம அவனை டிஸ்டர்ப் பண்ணனும்? இவ கிட்ட இன்னைக்கு முழுசா பேசிறலாம்”, என்று நினைத்து கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு அவளை அழைத்து சென்றான்.  

 

இரவு டின்னர்க்கு அந்த ஹாலே அலங்கரிக்க பட்டிருந்தது.

 

மிதமான இசை, மெல்லிய வெளிச்சம் என்று அந்த சூழலே ரம்மியமாக இருந்தது. விஷ்ணு ரசித்தானோ இல்லையோ சத்யா ஆழ்ந்து ரசித்தாள்.

 

“சூப்பரா இருக்கு அத்தான் இந்த ஹால்”, என்றாள் சத்யா.

 

“ஹ்ம்ம் வா”, என்றவன் ஒரு ஓரமான டேபிளுக்கு அழைத்து சென்றான். அவன் அருகே அமர சொல்லுவான் என்று அவள் எதிர்பார்க்க அவளை நேர் எதிரே அமர சொன்னான்.

 

வேறு வழி இல்லாமல் அவன் எதிரே அமர்ந்தாள் சத்யா. அவளுக்கு விருப்பமானதை கேட்டு இருவருக்கும் உணவை கொண்டு வர சொன்னான்.

 

கொண்டு வந்ததும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவன் மனதுக்குள் பிளான் போட்டு கொண்டிருப்பது தெரியாமல் அவள் கலகலவென்று பேசிய படியே சாப்பிட்டாள். அதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லி கொண்டிருந்தான் விஷ்ணு.

 

சாப்பிட்டு முடித்ததும் “உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும் சத்யா”, என்றான் விஷ்ணு.

 

“என்ன அத்தான்?”

 

“நாம இப்ப ஒரு இடத்துக்கு போக போறோம். அது எங்கன்னு முன்னாடியே சொல்லிரலாம்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்”

 

“இன்னும் எங்க போறோம்? மூவி பாக்க போறோமா?”

 

“இல்லை லாயரை பாக்க போறோம்”

 

“லாயரா? ஏன் எதாவது பிரச்சனையா?”

 

“ஹ்ம்ம் பிரச்சனைன்னு சொல்ல முடியாது. பட் டைவர்ஸ் பண்ண லாயரை தான பாக்க போகணும்”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை ஊன்றி பார்த்தான். அதிர்ந்து போனாள் சத்யா.

 

“அத்தான்”, என்று அதிர்ச்சியாக அழைத்தவளுக்கு அடுத்த வார்த்தை பேச வாய் வரவில்லை.

 

தீ பற்றும் …….

 

Advertisement