Advertisement

அத்தியாயம் 17

 

கண்ணுக்கு தெரியாத

காதல் விலங்கால்

என்னை சிறை

பிடிக்கும் போது  

பற்றும் காதல் தீ!!!!!

 

அந்த வார இறுதியில் அருள் வீட்டுக்கு வந்தான். அவனையே சுத்தி வந்தாள் ஜான்சி.

 

“அன்னம்”, என்று அழைத்த படி வந்தாள் வடிவு.

 

“என்னங்க அண்ணி?”

 

“எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஜான்சி பிள்ளையை பாத்தியா? நம்ம அருள் பையனையே வட்ட மடிக்கிறாப்புள்ள இருக்கு. அவனையே சுத்திட்டு திரியுது. அவனையே அள்ளி பருகுறாப்புல பாத்துட்டு இருக்கு”

 

“அட அப்படியா? நேத்து கூட என்கிட்ட வந்து அருள் எப்ப வருவாங்கன்னு துருவி துருவி கேட்டா. நான் ஏன்னு கேட்டதுக்கு விஷ்ணு அண்ணன் கேக்க சொன்னார்னு மழுப்புனா”

 

“பாத்தியா நான் சந்தேக பட்டது சரியா போச்சு”

 

“ஏன் அண்ணி உங்களுக்கு பிடிக்கலையா? ஜான்சி ரொம்ப தங்கமான பொண்ணு. அருள் வாழ்க்கை மறுபடியும்….”

 

“நீ சொல்ல வரது புரியுது அன்னம். என் பையன் வாழ்க்கை மறுபடியும் தளிர் விட்டுச்சுன்னா எனக்கு சந்தோசம் தான். வயசு கோளாறா இருக்க கூடாதேன்னு தான் கொஞ்சம் குழப்பம்”

 

“அருள் ரொம்ப நல்ல பையன் அண்ணி. அவன் வாழ்க்கை நல்ல படியா அமையும். ரெண்டு நாள் இங்கன தான இருக்க போறான். ரெண்டு பேருக்கு இடையில என்ன நடக்குதுன்னு பாப்போம்”

 

“நீ சொல்றதும் சரி தான். எல்லாம் நல்ல படியா நடந்தா சரி தான். கடவுள் தான் பாத்துக்கணும்”

 

“கடவுள்னு சொன்ன அப்புறம் தான் ஞாபகம் வருது. நாம குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வருவோமா அண்ணி?”

 

“ஹ்ம்ம் உங்க அண்ணன் உயிரோட இருந்தப்ப குடும்பமா போனது. அதுக்கப்புறம் இத்தனை வருசம் ஆகிட்டு”

 

“என்னக்கா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”, என்ற படி அங்கு வந்தார் ஆறுமுகம்.

 

“குலதெய்வம் கோவிலுக்கு போகலாமான்னு அன்னம் கேக்குறா?”

 

“ஹ்ம்ம் போகலாமே”, என்று அவரும் சொன்னதும் பிள்ளைகளை அழைத்து விசயத்தை சொன்னார்கள்.

 

“எல்லாரும் சரி”, என்று சொல்லவும் விஷ்ணு ஆவலாக ஒப்புதல் அளித்தான்.

 

“எப்ப போறோம்? பக்கத்துல தான? பஸ் இருக்கா? இல்லைன்னா கார் சொல்லவா மா?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“அதெல்லாம் வேண்டாம் பா. மூணு மணி நேரம் ஆகும். அந்த ரோட்ல காரும் போக முடியாது. எல்லாரும் நம்ம செந்திலோட டக்கர்ல போகலாம்”

 

“ஹ்ம்ம் அங்க எப்படி இருக்கும் மா. பெரிய ஊரா?”

 

“இல்லை பா, அது காட்டுக்குள்ள இருக்கு. சாமிக்கு பொங்கலை வச்சு சாமி கும்புட்டுட்டு சாப்பிட்டு வந்துரலாம்”

 

“ஹ்ம்ம் சரி மா. எப்ப போகலாம்?”

 

“அருள் நாளைக்கு நைட் கிளம்பிருவான். அதனால நாளைக்கு விடியும் போதே கிளம்பிரலாம். பிரியா,தேவையானதை எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கோ . தேனும் நீயும் தான்”

 

இருவரும் “சரி”, என்று சொன்னதும் அந்த பேச்சு வேறு பக்கம் அப்படியே நகர்ந்தது.

 

“எப்படி ஒரு பேச்சு கூட சிரிக்காம இருக்கான்?”, என்று தனக்குள் கேட்டு கொண்டே அருளை நோட்டம் விட்டாள் ஜான்சி.

 

அதை அன்னமும் வடிவும் பார்த்து விட்டு தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வையை பறி மாறி கொண்டார்கள். ஜான்சியை இவர்களை தவிர மற்றொரு ஆளும் கவனித்தது.

 

அது வேற யாரும் அல்ல. அருளே தான். முதல் முறை அவள் பார்வையை கண்டவுடனே புரிந்து கொண்டான்.

 

இந்த குழப்பத்துக்கு தான் இங்கே வராமல் இருக்க எவ்வளவோ முயன்றான்.

 

ஆனாலும் “எல்லாரும் இருக்கறப்ப நீ இல்லாதது என்னவோ போல இருக்கு அருளு”,  என்று அழைக்கும் பாசமிகு அத்தையை கஷ்ட படுத்த கூடாது என்று தான் அவன் வந்ததே.

 

“இந்த பொண்ணுக்கு எப்படி புரிய வைக்க?”, என்று நினைத்தவன், “இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ? விஷ்ணு அத்தான் கூட அவளும் டெல்லிக்கு போயிருவா. அப்புறம் எல்லாம் சரியாகிரும்”, என்று நினைத்து கொண்டவன் முடிந்த அளவு அவளிடம் இருந்து தள்ளியே இருந்தான்.

 

ஆனால் அவன் தள்ளி போனதால் அவனை நெருங்கும் ஆவல் கொண்டாள் ஜான்சி. அவளை கண்ட போது ரம்யா மற்றும் அலெக்சிடம் பேசியதை போல சாதாரணமாக அவளிடமும் அவன்  பேசி இருந்தால் அவளும் எதையும் பெரிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டாள்.

 

அவன் அவளை விளக்கி வைத்த விதமே அவன் மேல் அவளுக்கு ஆர்வம் வர வைத்தது. எல்லாரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் வேளையிலும் திருட்டு தனமாக அவளுடைய கள்ள பார்வை அவனை தொட்டு செல்வதை கண்டு அவனுக்கு தான் கலவரமாக இருந்தது.

 

“வாரத்தில் வீட்டுக்கு வரும் இரண்டு நாட்களையும் கஷ்ட பட்டு போக்கணும்”, என்று நினைத்து கொண்டான்.

 

மதியம் மூன்று மணிக்கு அனைவரும் சாப்பாட்டை முடித்து பேசி கொண்டிருக்கும் போது அவள் பார்க்கும் பார்வையை தாங்க முடியாமல் “நான் வீட்டை போய் பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

விடும் அழகாக எழும்பி இருந்தது. என்ஜினீரியரான அவனுக்கு அங்கே என்ன வேலை இருந்து விட போகிறது. ஒரு வேலையும் இல்லாமல் சும்மா அதை சுற்றி வந்தான்.

 

மாலை ஐந்து மணியானதும் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து வந்தவன் அங்கே நீட்டி கொண்டிருந்த கம்பியை பார்க்காமல் அதில் இடித்து கொண்டான்.

 

“ஆ”, என்று அலறியவன் தலையில் இருந்து வந்த ரத்தத்தை கர்ச்சிப்பால் துடைத்த படியே வந்தான்.

 

வீட்டுக்கு வந்ததும் அவனை முதலில் பார்த்தது ஜான்சி தான். அவள் தான் அவன் எப்போது வருவான் என்று தவம் இருந்தாளே?

 

“ஐயோ ரத்தம்”, என்று கத்தியவள் அடுத்த நிமிடம் உள்ளே ஓடி விட்டாள்

 

அதற்குள் வீட்டில் இருந்து மற்றவர்கள் வெளியே வந்து விட்டார்கள். “ஐயோ என் பிள்ளைக்கு என்ன ஆச்சு?”, என்று பதறிய படியே வந்த வடிவை அப்படியே கை அமர்த்தி தடுத்து விட்டான் அருள். அடி பட்ட பாவனையுடன் அங்கிருந்து நகர்ந்தாள் வடிவு.

 

“செந்தில் வண்டி எடுய்யா. அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ. ஐயோ என் பிள்ளை வலி தாங்காதே”, என்று கலங்கிய படி அவன் தலையை வருடி விட்டு கொண்டிருந்தாள் அன்னலட்சுமி.

 

“எனக்கு ஒன்னும் இல்லை அத்தை. சின்னதா இடிச்சிடுச்சு. இதுக்கெல்லாம் ஆஸ்பத்திரியா?”, என்று அன்னலட்சுமியை சமாதான படுத்தினாலும் “உள்ளே ஓடியவள் என்ன ஆனாள்?”, என்று கேள்வி அவனுக்குள் எழுந்தது.

 

உள்ளே சென்றவளோ கையில் மருந்தோடு வெளியே வந்தாள். “தேனக்கா கொஞ்சம் வெள்ளை துணி வேணுமே”, என்று கேட்ட ஜான்சி “அம்மா நகருங்க நான் மருந்து கட்டுறேன்”, என்று சொல்லி அவன் அருகே அமர்ந்தாள்.

 

“அதெல்லாம் வேண்டாம் நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி எழ பார்த்தவனை விஷ்ணு “அமைதியா உக்காருங்க அருள். ஜான்சி கட்டு போடட்டும்”, என்று அவன் தோளை பிடித்து அமர வைத்து விட்டான்.

 

“இந்த ஊர்ல உள்ளவங்க தான் கண்ணு வச்சிட்டாங்க. இன்னைக்கு சுத்தி போடணும்”, என்று புலம்பி கொண்டிருந்தாள் அன்னலட்சுமி.

 

மனதில் தோன்றிய உணர்வுகளை வெளியே சொல்ல முடியாத தன் நிலையை கண்டு “செஞ்ச பாவத்துக்கு தண்டனை”, என்று எண்ணி கொண்டாள் கொண்டாள் வடிவு.

 

கட்டு போட்டு கொண்டிருந்த ஜான்சி கண்கள் கலங்கியது. அந்த கண்ணீருக்கு விடை தெரியாமல் அசையாமல் அமர்ந்திருந்தான் அருள்.

 

அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் அன்னத்திடம் பேசி கொண்டிருந்த அருள் அருகில் வந்து நின்றாள் ஜான்சி.

 

“என்ன மா?”, என்று கேட்டாள் அன்னலட்சுமி.

 

“வேற கட்டு போடணும் மா”

 

“போட்டு விடு ஜான்சி. அருளு நல்ல தூங்குய்யா?”, என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தனிமை கொடுக்க எழுந்து சென்று விட்டாள் அன்னலட்சுமி.

 

அவன் தலையில் இருந்த கட்டை பிரிக்க ஆரம்பித்தாள். அந்த அறையில் அமைதி மட்டும் நிலவியது. அவளுக்கு தெரியாமல் அவள் முகத்தை பார்த்த படியே இருந்தான் அருள்.

 

கருமமே கண்ணாக தன் வேலையை தொடர்ந்தவள் ஈரத்தில் பஞ்சை நனைத்து காயத்தை சுத்த படுத்தினாள்.

 

வலியில் “ஆ”, என்றான் அருள். அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவள் வார்த்தைக்கு வலிக்குமோ என்று பயந்து “வலிக்குதா?”, என்று கேட்டாள்.

 

அருகில் கேட்ட அவள் குரலிலும் அந்த உதட்டிலும் தன் பார்வையை பதித்திருந்தவன் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் சிலையாக அமர்ந்திருந்தான்.

 

அவன் பார்வையை கண்டு குழம்பியவள் மருந்தை வைத்து கட்டினாள். பின் எழுந்து சென்றவளை “ஒரு நிமிஷம்”, என்று சொல்லி தேக்கி நிறுத்தினான் அருள்.

 

திரும்பி பார்த்தவள் அவனே சொல்லட்டும் என்று அமைதியாக நின்றாள்.

 

“இப்படி கட்டு போடுறது டாக்டர் கடமைன்னு எடுத்து கிட்டாலும் உங்க கண்ணுல இருக்குற கரிசனைக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியலை?”

 

அவனையே பார்த்தவள் “நான் எதுக்காகவும் யாருக்காகவும் இது வரை அழுதது இல்லை”, என்று சென்றாள்.

 

“நான் என்ன கேட்டேன்? இவ என்ன சொல்றா?”, என்று யோசித்தவனுக்கு விடை கிடைத்தது.

 

“இவ கண்ணில் தோன்றிய கரிசனத்துக்கு அர்த்தம் கேட்டால், யாருக்காகவும் இல்லாம உனக்காக தான் அழுதேன்னு சொல்றா. அப்படின்னா நாம நினைச்சது சரியா போச்சு. இவ கிட்ட இதை பத்தி பேசணுமே” என்று நினைத்து

 

“ஜான்சி ஒரு நிமிஷம்”, என்று சொல்லி போகும் அவளை நிறுத்தினான் அருள்.

 

“என்ன ஆச்சு காயம் வலிக்குதா?”

 

“இல்லை உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

 

“இப்பவா? சரி பேசுங்க”

 

“என்னோட ரூம்ல வேண்டாம். மொட்டை மாடிக்கு வாங்க?”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி அவன் பின்னே சென்றாள். காதலை சொல்லாமலே காதலர்கள் போல் திருட்டு தனமாக யாரும் பார்க்காத படி மாடிக்கு சென்றார்கள்.

 

மாடியின் ஒரு ஓரத்தில் இருட்டில் போய் நின்று கொண்டான் அருள். நிலா வெளிச்சத்தில் ரோமானிய சிற்பம் போல் நின்றவனின் மேல் காதல் வந்தது ஜான்சிக்கு. அது எதனால் என்று அவளுக்கும் தெரியாது.

 

ஒரு ஆண் மகனுடன் தனியாக இருப்பதை நினைத்து அவள் மனது படபடத்தது. அவள் முகத்தில் வந்து போகும் பாவங்களை பார்த்த அருளும் சங்கட பட்டான்.

 

“இந்த நேரத்தில் பேச வான்னு கூப்பிட்டுருக்க கூடாதோ?”, என்று நினைத்தான். தேன்மொழி கொடுத்த மல்லிகை பூவை சூடி கொண்டிருந்தாள் ஜான்சி.

 

அதில் இருந்து வந்த வாசனை பேச வந்த விசயத்தையே அவனை மறக்கும் படி செய்தது. ஜான்சியும் தன்னுடைய மனதின் எண்ணங்களுக்கு தடை விதிக்க முடியாமல் தன்னையே காத்து கொள்வது போல பேச ஆரம்பித்தாள்.

 

“என்ன பேசணும்னு வர சொன்னீங்க?”

 

அவள் பேசியதும் அவனும் சுயவுணர்வுக்கு வந்து விட்டான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று மட்டும் புரிய வில்லை.

 

“நீங்க என்னை காதலிக்க கூடாது என்று எப்படி சொல்வது? அவள் ஒரு வேலை நான் எங்க உங்களை காதலிச்சேன்?”, என்று கேட்டு விட்டால்.

 

“ஆனா, இதை விட்டா வேற  சந்தர்ப்பம் கிடைக்காது”, என்று நினைத்தவன் “ எனக்கு தெரிஞ்சதை வச்சு சொல்றேன். நீங்க என்னை பார்க்குற பார்வைல வித்தியாசம் தெரியுது ஜான்சி. அது சாதாரண பார்வை தான்னு சொல்லி நீங்க தப்பிக்க முடியாது. என்னால அந்த வித்தியாசத்தை உணர முடியுது”, என்றான்.

 

அவள் மறுப்பாள் என்று எதிர்பார்க்க அவளோ “அப்பாடி நானே என் காதலை எப்படி சொல்லன்னு தவிச்சிட்டு இருந்தேன். நீங்களா கண்டு பிடிச்சதுல ரொம்ப சந்தோசம்”, என்று சொல்லி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

 

அவளை முறைத்தவன் “இதை பத்தி பேச தான் வர சொன்னேன். இன்னொரு தடவை என்கிட்ட காதல்னு வந்து நிக்காதீங்க. தேவை இல்லாம உங்க மனசை சலன படுத்திக்காதீங்க. இன்னும் பத்து நாளில் நீங்க கிளம்பிருவீங்க. அது வரைக்கும் நான் வேணும்னா உங்க கண்ணுல படாம இருக்கேன். தேவை இல்லாம உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க. டெல்லில இல்லாத மாப்பிள்ளையா?”, என்றான்.

 

“அதெல்லாம் விடுங்க. இப்ப உங்களை நான் காதலிக்க கூடாதுன்னு சொல்ல வரீங்க. அது எதுக்குன்னு தெரிஞ்க்கலாமா?”

 

“ஏன் உங்களுக்கு தெரியாதா? வீட்ல யாரும் சொல்லாம இருக்க மாட்டாங்க. நான் காலேஜ்ல ஒரு பொண்ணை….”

 

“கீதா தான?”

 

“அதான் தெரியுதுல்ல? அப்புறம் என்ன?”

 

“ப்ச் இப்பவும் நீங்க அவளை விரும்புறீங்களா?”

 

“நீங்க என்ன லூசா? அவ இன்னொருத்தனோட பொண்டாட்டி. அவளை போய் எப்படி நான் நினைக்க முடியும்?”

 

“அப்புறம் என்ன பிரச்சனை? அவ தான் உங்க மனசுல இல்லையே”

 

“அவ என் மனசுல இல்லை தான். ஆனா அவ வாழ்க்கையை நாசமாகிட்டேனோன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு”

 

“புரியலை. கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா? நீங்க தான் காதலை முதல்ல சொன்னீங்களா?”

 

“இல்லை அவ தான் அவ பிரண்ட் மூலமா சொன்னா. சொந்த ஊர் ஒரே ஜாதி என் அளவுக்கு படிக்கிறா, ஆளும் பாக்க நல்லா இருக்கான்னு சரின்னு சொன்னேன்”

 

“இதுக்கு பேர் காதலா?”, என்று மனதில் நினைத்தவள் “சரி அப்புறம் என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.

 

“அவளோட பிறந்த நாள் அன்னைக்கு தான் வெளிய முதல் முதலா போனோம். அப்ப தான் அம்மா கண்ணுல சிக்கிட்டோம். இவங்க தேவை இல்லாம அவ வீட்ல போய் அவளை அசிங்கமா, தன் பையனுக்கு வலை போடுறான்னு எல்லாம் பேசி அசிங்க படுத்திட்டாங்க. ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சுன்னு அவ படிப்பை நிப்பாட்டி அவளோட மாமாவுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. அம்மா மட்டும் அப்படி செய்யாம இருந்திருந்தா இந்நேரம் அவ நல்லா படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போயிருப்பா. என்னை கல்யாணம் பண்ணலைன்னா கூட வேற ஒரு படிச்ச பையனை கல்யாணம் பண்ணிருப்பா”

 

“அப்ப இவனுக்கு அவளுக்கு கல்யாணம் முடிஞ்சது கவலை இல்லை. அவ படிப்பு கெட்டு போச்சுன்னு தான் கவலையா? இது தெரியாம லவ் பெய்லியர்ன்னு எல்லாரும் கதை கட்டுறாங்களே”, என்று எண்ணி கொண்டவள் அவன் அருகே சென்றாள்.

 

“என்ன இவ இப்படி என் கிட்ட வாரா?”, என்று நினைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

 

அவன் மனதை பற்றி யோசிக்காமல் அவன் அருகே சென்று நின்றவள் தன்னுடைய போனை எடுத்தது அன்று எடுத்த போட்டோவை காண்பித்தாள்.

 

“இது தான கீதா?”

 

“ஹ்ம்ம் ஆமா, இந்த போட்டோ எப்படி?”

 

“அன்னைக்கு கோயில்ல எடுத்தேன்”

 

“இது தப்பு இல்லையா?”

 

“உங்களுக்காக தான் எடுத்தேன். அவளோட முகத்தை பாருங்க. ஐயோ ஏன் வாழ்க்கை போச்சே அப்படின்னு கப்பல் கவுந்து மாதிரியா இருக்கு. நீங்க அடிக்கடி சோகமா உக்காந்துருக்கீங்களே? அது மாதிரி அவ இருக்காளா என்ன? இந்த வீடியோவையும் பாருங்க. அவ ஹஸ்பண்ட் கூட எவ்வளவு சந்தோசமா வாழறான்னு”

 

அதை கண்டு குழம்பியவன் “அவ எதார்த்தத்தை ஏத்துக்கிட்டு வாழுறா போல? மனசுல வலி இருக்கும் தான?”, என்று கேட்டான்.

 

“நான் கேள்வி பட்ட வரைக்கும் இந்த ஊர்ல காதலுக்கு மதிப்பு கொடுக்குற மாதிரி தெரியலை. ஆண்ட்டி போய் அவங்க வீட்ல பிரச்சனை பண்ணாம இருந்தா கூட உங்க கல்யாணம்ன்னு வரப்ப பிரச்சனை தான் வரும். அது மட்டுமில்ல அவ கல்யாணம் அப்புறம் வேலைக்கு போயிருப்பா அப்படிங்குறதும் சந்தேகம் தான். அடுத்தவங்களுக்காக சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கலாம். உதட்டுல புன்னகையை ஈஸியா கொண்டு வந்துறலாம். ஆனா கண்ணுல சந்தோசத்தை கொண்டு வரணும்னா அது மனசு நினைச்சா தான் முடியும்?”

 

“அவ சந்தோசமா இருக்காளானு தான் எனக்கு குழப்பமே. நீங்க சொன்னப்பறம் மனசு கொஞ்சம் லேசா ஆன மாதிரி இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் ”, என்று செல்ல பார்த்தவனை “அட பாவி” என்ற அவளின் குரல் நிறுத்தியது.

 

“என்ன?”

 

“உங்க வேலை முடிஞ்ச உடனே கிளம்புறீங்க? அப்ப நான்?”, என்று இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டே கேட்டாள்.

 

அவள் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன் “என்னால இப்ப காதலை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. உங்களுக்குன்னு ஒரு டாக்டர் மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்றான்.

 

“உங்களை உடனே என் காதலை ஏத்துக்க சொல்லலை. இன்னும் டைம் இருக்கு. எப்பவாது என் ஞாபகம் உங்களுக்கு வருதான்னு பாப்போம். ஆனா ஒரு ஹெல்ப்”

 

“என்ன?”

 

“அத்தை ரொம்ப பாவம். அவங்க கிட்ட நீங்க பேசாம இருக்குறது எல்லாத்துக்குமே கஷ்டமா இருக்கு. கீதா உங்களுக்கு கிடைக்கலைன்னு எல்லாம் உங்களுக்கு வருத்தம் இல்லையே. அப்புறம் அதுக்கு காரணம் அவங்க தான்னு நினைச்சு ஏன் பேசாம இருக்கணும். என் காதலை ஏத்துக்குறதை விட என் வார்த்தையை மதிச்சு அவங்க கிட்ட நீங்க பேசுனா நான் ரொம்ப சந்தோச படுவேன்”, என்று சொன்னவள் அவனை கடந்து கீழே சென்று விட்டாள்.

 

கண்டிப்பா அவன் மனசுல ஒரு நாள் தன் மீது காதல் வரும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவனோ வெகு நாள்களுக்கு பிறகு அனைத்தையும் நிதானமாக யோசித்தான்.

 

வானில் பவனி வந்து கொண்டிருந்த நிலவை கூட ரசித்தான். அவன் அதிகம் யோசித்தது ஜான்சியை பற்றி மட்டுமே.

 

அடுத்த நாள் விடியும் முன்னரே கிளம்பி விட்டார்கள். நான்கு மணிக்கு டக்கர் கிளம்பியது. ஒரு ஓரமாக வடிவு அமர்ந்திருக்க அவள் அருகில் அன்னலட்சுமி அமர்ந்திருந்தாள்.வடிவு எதிரே ஆறுமுகமும் அவர் அருகே தேன்மொழியும் அருளும் அமர்ந்திருந்தார்கள்.

 

அன்னலட்சுமி அருகில் ஜான்சி அருளுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தாள். கடைசியாக ஜான்சி அருகே சத்யாவும் அவள் அருகே விஷ்ணுவும் அமர்ந்திருந்தார்கள்.

 

ஒரு அரை மணி நேரம் வண்டி செல்லும் போதே அனைவருக்குமே உறக்கம் கண்களை சுழற்றியது. ஜான்சியோ அருளை பார்த்த படியே வந்தாள்.

 

“இவளுக்கு நேராவா வந்து உக்காரனும் நான்?”, என்று நினைத்து கொண்டு அவள் பார்வையை தவிர்த்தாலும் “அவள் பார்க்கிறாளா?”, என்று அடிக்கடி பார்த்து கொண்டு தான் இருந்தான் அருள்.

 

அந்த அதிகாலை காற்று, சுற்றிலும் இருந்த இருட்டு காதலர்களுக்கு ஒரு வித மயக்கத்தை கொடுத்தது.

 

சத்யாவோ “நல்லா உக்காந்துக்கோ ஜான்சி”, என்று சொல்லி விஷ்ணுவை நெருங்கி அமர்ந்தாள். அவள் அருகாமையில் விஷ்ணு தான் கிறங்கி போனான்.

 

தீண்டி செல்லும் தென்றல், லேசான குளிர், மனைவியின் அருகாமை, அவள் தலையில் இருந்து வந்த மல்லிகை பூவின் மணம், தன் தோள் சாய்ந்த நெருக்கம், தன்னை தீண்டி சென்ற அவள் சேலையின் முந்தானை அனைத்தும் அவனுக்கு பிடித்திருந்தது.

 

இது தான் சாக்கென்று சிறிது நேரத்தில் அவன் ஒரு கையை கட்டி கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“அட பாவி இவ என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டாளா?”, என்று எண்ணி கொண்டாலும் தன்னுடைய தலையை அவள் தலை மீது வைத்து கொண்டான் விஷ்ணு.

 

அருளோ அவன் நீளமான கால்களை நீட்ட முடியாமல் குறுக்கி கொண்டு அமர்ந்திருந்தான். நேராக நீட்டினால் எதிரே ஜான்சி இருந்தாள்.

 

இந்த பக்கம் நீட்டலாம் என்று பார்தால் விஷ்ணு கால்களை நீட்டி இருந்தான். அவனை புரிந்து கொண்ட ஜான்சி தன்னை பார்த்து நீட்டும் படி சைகை செய்தாள். வேறு வழி இல்லாமல் அவளை பார்த்து கால்களை நீட்டினான்.

 

ஆனால் நீட்டியவனோ ஏன் தான் நீட்டினோம் என்று நொந்து போனான். அவன் காலை பிடிப்பதும் அவன் விரல்களை வருடுவதும் பாதத்தில் கோடிழுப்பதுமாக ஏதாவது செய்து அவனுக்கு கூச்சத்தை கொடுத்தாள்.

 

“ஆணியே புடுங்க வேண்டாம். காலை மடக்கியே வச்சுக்குவோம்”, என்று எண்ணி கொண்டு மடக்கி கொண்டான். அதில் அவள் முகம் தான் விழுந்து போனது.

 

அதை பார்த்தவன் “என்ன வேணா செஞ்சிக்கோ”, என்று நினைத்து அவன் காலை அவளை நோக்கி நீட்டி கொண்டான். அவள் முகம் ஒளிர்ந்தது.

 

“இது காதல் இல்லாமல் வேறேது?”, என்று எண்ணி கொண்டு தன் சேட்டையை தொடர்ந்தாள். சிறிது நேரத்தில் விடிந்து விட்டது.

 

எட்டு மணிக்கு கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் வேலையில் ஈடு பட்டர்கள். என்ன முயன்றாலும் விஷ்ணுவின் கண்கள் சத்யாவையே சுற்றி வந்தது.

 

அவள் சேலை, அவள் தலைமுடி, அவள் நகை என்று ஒவ்வொன்றையும் ரசித்தான். அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் அதே நேரம் அதை உள்ளுக்குள் ரசிக்கவும் செய்தாள் சத்யா.

 

பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு அனைவரும் சாப்பிட்டார்கள். அதன் பின் அருவியில் குளிக்க சென்றார்கள். பெரியவர்கள் வரலை என்று மறுக்க மூன்று ஜோடிகள் மட்டும் குளித்தார்கள்.

 

மூன்று ஆண்களுமே தங்களின் இணையை வெகுவாக ரசித்தார்கள். தேன்மொழி காதில் ரகசியம் சொல்லி அவளை சிவக்க செய்தான் செந்தில்.

 

விஷ்ணுவோ உடலை ஒட்டிய சேலையில் கந்தர்வ கன்னி போல் இருந்த சத்யா அழகில் சொக்கி தான் போனான். விலகி விலகி தெரியும் அவள் வெண்ணிற இடை அன்று அவன் பார்த்த காட்சியை நினைவு படுத்தி அவனை இம்சித்தது.

 

அருளோ மனம் முழுவதும் ஜான்சி மேல் மயக்கம் இருந்தாலும் அதை அவளுக்கு வெளிப்படுத்தாதவாறு நடந்து கொண்டான்.

 

“நாங்க மதியம் எதாவது செய்றோம். நீங்க மெதுவா குளிச்சிட்டு வாங்க பிள்ளைகளா”, என்று பெரியவர்கள் சென்று விட்டார்கள்.

 

இங்கே சிரித்த படி கும்மாளமிட்ட படி அவர்களின் குளியல் தொடர்ந்தது. விஷ்ணுவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டு சத்யாவுக்கு சிலிர்த்தது.

 

அதை மறைத்து கொண்டவள் அவனை கண்டு “என்ன அத்தான்? உங்களுக்கு இங்க பிடிக்கலையா? மேல போயிறலாமா?”, என்று கேட்டாள்.

 

அவளை பார்த்து சிரித்தவன் “ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நாம மட்டும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது”, என்று சொல்லி அவளை திகைக்க வைத்தான். “இவன் உணர்ந்து தான் இந்த வார்த்தையை சொல்றானா?”, என்று குழம்பி போனாள் சத்யா.

 

அதன் பின்னர் அதிக நேரம் குளித்ததால் பசித்தது. சிறிது நேரம் கதை பேசிய படியே உலாத்தினார்கள்.

 

ஜான்சி தன்னுடைய மருத்துவ அனுபவங்களை நகைச்சுவையோடு சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாள். அவளை வெகுவாக ரசித்தன அருளின் கண்கள். அவர்கள் உடையும் சிறிது நேரத்தில் காய்ந்து விட்டது.

 

இவர்கள் அங்கே போன போது சூடாககூட்டாஞ்சோறு தயாராக இருந்தது. அதை சாப்பிட்டு முடிக்கும் போது மூன்று மணி ஆகி விட்டது. “வெயில் தார போகலாம்”, என்று சொல்லி அனைவரும் மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

 

தூக்கம் வந்தவர்கள் அப்படியே கீழே சாய்ந்து விட்டார்கள். விஷ்ணுவுக்கும் கண்கள் சொக்கியது. ஆனால் தரையில் படுக்க அவன் தயங்குவதை பார்த்த சத்யா “என்னோட மடில படுத்துகோங்க அத்தான்”, என்றாள். அடுத்த நொடி அவள் மடியில் படுத்தவன் தூங்கி போனான்.

 

அவளும் மரத்தில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள். அருள் மட்டும் ஜான்சியை பார்தான். அவளோ வடிவின் சேலை முந்தானையில் தலையை வைத்து உறங்கி விட்டாள்.

 

ஐந்து மணிக்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு கிளம்பினார்கள். இடையில் ஒரு மணி நேரம் செல்லும் போதே லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் அதிகம் பெய்வது போல இருக்கவும் மேலே தார்பாயை எடுத்து கட்டினான் அருள்.

 

இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்து சேரும் போதும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது.

 

நனைந்த படியே உள்ளே வந்த சத்யா துண்டை அவனுக்கு எடுத்து கொண்டு திரும்பும் போது விஷ்ணு மீது மோதி நின்றாள்.

 

படரும் மலர் கொடி போல தன் மீது சாய்ந்து நின்றவளை அவன் கரங்கள் அவனை அறியாமலே இறுக்கி கொண்டன. அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது.

 

முதன் முதலாக தான் உணர்ந்த பெண்ணின் பரிசம் அவனை நிலைகுலைய வைத்தது.

 

அவளின் மென்மையான தேகம் அவனுக்குள் பல ரசாயன மாற்றங்களைநிகழ்த்தி கொண்டிருந்தது.    

             கோயிலில் வைத்த குங்குமம் மழை நீரில் நனைந்து அவள் முகத்தில் இருந்து வடிந்தது. அதை தன் விரலால் துடைத்தான் விஷ்ணு.

 

அவன் விரல் பட்டதும் குளிர்ந்த அவள் தேகத்தில் சூடேறியது. முகத்தில் படிந்த மலர் துளிகளுடன் புது பூவாக மலர்ந்து நின்றாள் சத்யா. அவள் முகத்தில் தன் விரலால் கோலம் போட்டவன் “சத்யா”, என்று முணுமுணுத்தான்.

 

கண் திறந்து அவனை பார்த்தாள் சத்யா. அவளை பருகுவதை போல பார்த்த அவன் கண்களில் இருந்த ரகசிய பார்வைக்கு அவள் கண்களால் பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

 

அவள் மேனியிலும் அவள் கூந்தலில் இருந்தும் வந்த வாசனை அவன் நாசியில் நுழைந்து அவனை இம்சித்து. அப்போது வெளியே “சத்யா அண்ணனை கூட்டிட்டு சாப்பிட வா”, என்ற தேன்மொழியின் குரல் கேட்டது. இருவரும் அவசரமாக அங்கிருந்து விலகினார்கள்.

 

சாப்பிட்டு முடித்ததும் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பிய அருள் எல்லாரிடமும் “நான் கிளம்புறேன்”, என்று சொன்னான். ஜான்சியிடமும் கண்களால் விடை பெற்றான்.

 

வாசல் வரை சென்றவன் திரும்பி வந்து “அம்மா போயிட்டு வரேன்”, என்று சொல்லி வடிவுக்கு ஆனந்த அதிர்ச்சியையும் ஜான்சிக்கு நிம்மதியையும் கொடுத்து விட்டு செந்திலுடன் கிளம்பி விட்டான்.

 

புது வீடு அழகாக இருந்தது. பினிஷனிங் வேலை எல்லாம் அருள் தான் லீவ் எடுத்து கொண்டு வந்து செய்து கொடுத்தான். ஜான்சியை பாக்க கூடாது என்று வேலைக்கு ஓடியவன் இப்போது லீவ் எடுத்து கொண்டு வந்ததே அவளை அருகில் இருந்து பார்ப்பதற்கு தான்.

 

ஊரில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு பால் காச்சினார்கள். அன்று இரவு அனைவருக்கும் சுற்றி போட்டாள் அன்னலட்சுமி.

 

இன்னும் மூன்று நாளில் ஜான்சிக்கு கல்லூரி ஆரம்பிப்பதால் “விஷ்ணு அண்ணா”, என்று அழைத்து அவனிடம் விசயத்தை சொன்னாள்.

 

சிறிது யோசித்த விஷ்ணுவும் “நானே இதை பத்தி பேசணும்னு நினைச்சேன் மா. சத்யா, நாமளும் கிளம்புவோமா?”, என்று கேட்டான்.

 

“சரிங்க அத்தான்”, என்று அவள் சொன்னதும் அங்கே அன்னலட்சுமி முகம் மட்டும் சின்னதாகி விட்டது. அதை பார்த்த விஷ்ணு அன்னையின் உணர்வுகளை எளிதில் கண்டு கொண்டான்.

 

அவள் அருகே சென்றவன் அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான். அவள் தலையை அவள் கைகள் கோதி கொடுத்தன. ஆனால் அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் துளி அவன் முகத்தில் பட்டது.

 

“அத்தம்மா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி? நீ தான என் பிள்ளை மேல மேல வளரணும்னு எல்லாம் பேசுனா. இப்ப அழுற?”, என்று அரற்றினாள் சத்யா.

 

“என் கைக்குள்ளே என் பிள்ளை இருந்தானா. இப்ப போய்ட்டான்னா, இன்னும் எப்ப பாப்போம்னு இருக்கு”, என்றாள் அன்னலட்சுமி.

 

“எனக்கும் உங்களை விட்டு போக மனசே இல்லை மா. ஆனா அங்க ரொம்ப வேலை இருக்கு. பேசாம நீங்களும் அங்கேயே வந்துருங்க மா. என் கூடவே இருங்க”, என்று விஷ்ணு சொன்னதும் அவள் கண்கள் பிரகாசித்தது. அடுத்த நொடியே ஆறுமுகத்தை பார்த்தாள் அன்னலட்சுமி.

 

அதை பார்த்த விஷ்ணு எழுந்து ஆறுமுகத்தின் அருகில் சென்றான். இது வரை அவன் அவரிடம் பேசியதில்லை. அவரும் அவனிடம் பேச மாட்டார். முதல் முறையாக அவர் அருகில் போய் நின்றவனை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்

 

“அவங்க என்னோட அம்மான்னா நீங்களும் என்னோட அப்பா தான். உங்க ரத்தமா நான் இல்லாம போனாலும் நானும் உங்க பிள்ளை தான். நீங்களும் அம்மாவும் என்க்கூட வந்துறீங்களா?”, என்று விஷ்ணு கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர் துளி.

 

“இது போதும் பா. இந்த பாவிக்கு இவ்வளவு பெரிய பதவி கொடுத்து என்னை அந்த வானத்து அளவுக்கு உயர்த்திட்ட. நீ என் பிள்ளை தான் பா. என் பிள்ளை தான். கண்டிப்பா அன்னதோட ஆசைக்கு நான் மறுப்பு சொல்ல மாட்டேன். அவள் ஆசை தான் என்னோட முடிவும். அவ இருக்குற இடத்துல தான் நான் இருப்பேன். அது எந்த இடமா இருந்தாலும் சரி”, என்று இந்த வயதில் தன்னுடைய காதலை உணர்த்தினார் ஆறுமுகம்.

 

“அப்பா சரின்னு சொல்லிட்டாங்க மா. நாம போகலாமா மா?”, என்று ஆர்வத்தோடு கேட்டான் விஷ்ணு. “சரி”, என்று சொல்ல வாயை திறந்தவள் கண்களில் தேன்மொழி தெரிந்தாள்

 

பின் ஒரு முடிவுடன் விஷ்ணுவை பார்த்தவள், அவன் கன்னத்தை வருடி “எப்படினாலும் அம்மா அப்பா தங்க மகன் வீட்ல தான் இருக்கணும். ஆனா பொண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கு ராசா. எங்களோட ரெண்டு பொண்ணுங்களுக்கு நானும் வடிவு அண்ணியும் பிரசவம் பாக்கணும். தேன்மொழி குழந்தை உண்டானா அவளுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு. சத்யாவும் சீக்கிரம் நல்ல விசயம் சொன்னா அவளையும் நீ இங்க கூட்டிட்டு வந்துரணும். அருளுக்கு கல்யாணத்தை முடிக்கணும். மூணு பேரோட பிள்ளைங்களை கண்ணால பாத்துட்டு அப்புறம் நானும் உன் அப்பாவும் உன் கூடவே வந்துருவோம். அது மட்டுமில்லாம என் பிள்ளை எனக்காக கட்டி கொடுத்துருக்க வீட்ல கொஞ்ச வருஷம் இருக்கணும்னு நினைக்கிறேன் பா”, என்று சொல்லி அந்த தாய் தான் தாய்மையை நிரூபித்தாள்.

 

அவள் சொல்லிய பதில் அனைவருக்கும் எற்று கொள்ளும் படியாக இருந்ததால் “சரிம்மா உங்க இஷ்டம். வாரம் ஒரு தடவை உங்களை வந்து பாக்க வரேன்னு என்னால சொல்ல முடியாது. ஆனா மாசம் ஒரு தடவை பாக்க வரேன்”, என்றான் விஷ்ணு.

 

“உன்னோட வேலையை பத்தி சத்யா சொல்லிருக்கா ராசா. நீ ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை வந்து பாத்தா கூட எனக்கு சந்தோசம் தான். ஆனா தினமும் நைட் எனக்கு போன் போடுவியா?”

 

“அதை விட உங்க பிள்ளைக்கு என்ன வேலை? தினமும் உங்க மகனை உங்க கூட பேச வைக்கிறது என் வேலை. அப்படி பேசலைன்னா காதை பிடிச்சு இழுத்து பேச வைக்கிறேன் சரியா?”, என்று அனைவரையும் சகஜமாக்கினாள் சத்யா.

 

அடுத்த நாள் மூவரும் கிளம்பினார்கள். மதுரை பஸ் ஸ்டாண்ட்க்கு மொத்த குடும்பமே வந்திருந்தது. அருள் முகத்தை தவிப்புடன் பார்த்தாள் ஜான்சி.

 

விஷ்ணுவோ அன்னலட்சுமியை கட்டி கொண்டான். சத்யா விடம் வந்த வடிவு “ஊருக்கு போய் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லணும் சின்ன குட்டி”, என்று சொல்லி கொண்டிருந்தாள்.

 

யாரும் அறியாமல் அருள் அருகே வந்த ஜான்சி அவன் கைகளில் ஒரு பேப்பரை சுருட்டி திணித்து விட்டு சாதாரணமாக நின்றாள். அவள் முகத்தை பார்த்தவன் ஒரு சிரிப்போடு அதை தன் சட்டை பையில் வைத்து கொண்டான். அவன் சிரிப்பை கண்ட பின்னர் தான் அவள் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்தது.

 

தேன்மொழி, செந்திலிடமும் விடை பெற்ற பின்னர் மூவரும் கிளம்பினார்கள். மற்றவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தான் செந்தில்.

 

வீட்டுக்கு வந்ததும் அந்த பேப்பரை எடுத்து விரித்தான் அருள். அதில் அவளுடைய போன் நம்பரும் “உங்க போனுக்காக நான் கண்டிப்பா காத்திருக்க மாட்டேன்”, என்ற வரிகளும் இருந்தது.

 

“இவ என் போனுக்காக காத்திருக்க மாட்டாளாமா?”, என்று எண்ணியவன் வாய் விட்டே சிரித்தான். அவனது செய்கையை தூரத்தில் இருந்தே பார்த்த வடிவின் முகமும் புன்னகை சிந்தியது.

 

அடுத்த நாள் காலையில் சென்னையில் மூவரும் இறங்கிய போதே அங்கு காருடன் தயாராக இருந்தான் மணி. அதன் பின்னர் சத்யா தங்கி இருந்த காவ்யாவின் வீட்டுக்கு சென்றார்கள்.

 

காவ்யா இன்று வீட்டில் இருந்தால் அவர்களை வரவேற்றாள். “கிளம்புறேன்”, என்று சொன்ன மணியிடம் சாதாரணமாக பேசுவது போல பேசி அவன் அட்ரஸை வாங்கி இருந்தான் விஷ்ணு. அதன் பின்னர் அவன் கிளம்பி சென்று விட்டான்.

 

மூவரும் குளித்து முடித்ததும் அவர்களுக்கு சாப்பிட கொடுத்தாள் காவ்யா.

 

“இப்ப தனியாவா இருக்க கவி?”, என்று கேட்டாள் சத்யா.

 

“இல்லை டி கூட வேலை செய்ற பொண்ணும் இருக்கா. அவ வேலைக்கு போய்ட்டா. தனியா எப்படி இருக்க? அப்புறம் ஒரு குட் நியூஸ். அடுத்த மாசம் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க”

 

“ஏய் சூப்பர். மாப்பிள்ளை என்ன செய்றார்?”

 

“இங்க சென்னைல தான் வேலை பாக்காங்க கல்யாணத்துக்கு பத்திரிகை இன்னும் அடிச்சு வரலை டி”

 

“நீ பத்திரிகை கொடுக்காம போனாலும் தேதி மட்டும் சொல்லு நான் வந்துருவேன். அப்ப கல்யாணம் அப்புறம் உன் வீட்ல இருந்தே நீ வேலைக்கு போகலாம்”

 

இருவரும் பேசி கொண்டிருக்கும் போது ஜான்சியும் அவர்களுடன் கலந்து கொண்டாள்.

 

“சத்யா மணி வீட்டுக்கு போகணும். அவங்க குழந்தைகளுக்கு எதாவது வாங்கி கொடுக்கணும். போகலாமா?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“ஹ்ம்ம் சரி, நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க போகலாம்”, என்று சத்யா சொன்னதும் “நான் இங்கயே இருக்கேன் அண்ணி”, என்று ஜான்சியும் “ஆமா நானும் வரலை”, என்று காவ்யாவும் சொல்லி விட்டார்கள்.

 

கடைசியில் சத்யாவும் விஷ்ணுவும் மட்டும் கிளம்பினார்கள். அந்த குழந்தைகளுக்கு, மணிக்கு, அவனுடைய மனைவிக்கு என்று நிறைய வாங்கினாள் சத்யா. பின் மணிக்கு போன் செய்தான் விஷ்ணு.

 

“சொல்லுங்க சார்”

 

“தெரியாம கால் பண்ணிட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?”, என்று அவன் எங்கே இருக்கிறான் என்று உறுதி படுத்தி கொண்டான் விஷ்ணு.  

 

“வீட்ல தான் இருக்கேன் சார். இன்னைக்கு ஆப். நான் வரணுமா?”

 

“இல்லை வேண்டாம். அப்புறம் பேசுறேன். நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்தவன் ஒரு ஆட்டோ பிடித்தான். இருவரும் மணி வீட்டுக்கு சென்றதும் மணிக்கு கை கால் ஓடவில்லை.

 

அவனும் அவனுடைய மனைவியும் இருவரையும் வரவேற்றார்கள். “பாக்க அவ்வளவு அழகா இருக்காங்க. இவங்களையா ராங்கி ரங்கம்மான்னு சொன்னீங்க?”, என்று மணியை சத்யாவிடம்   போட்டு கொடுத்தாள் அவன் மனைவி.

 

அசடு வழிந்த மணியை முறைத்த சத்யா, அவன் மண்டையில் நங்கென்று கொட்டினாள். அவனுடைய பிள்ளைகள் அதை கண்டு சிரித்தார்கள்.

 

“என்ன சார் இவ்வளவு வாங்கிட்டு வந்துருக்கீங்க? இதெல்லாம் எதுக்கு சார்?”, என்று கேட்டான் மணி.

 

“உங்களை என் அண்ணனா தான் பாக்குறேன் மணி. வாங்கிக்கோங்க. அப்புறம் உங்க அக்கவுன்ட் நம்பர் சொல்லுங்க. ரெண்டு நாளில் பணம் போட்டு விடுறேன். நீங்களே கால் டேக்சி வாங்கிக்கோங்க”, என்று என்னமோ டிரெஸ் எடுத்துக்கோங்க என்பது போல சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தான் விஷ்ணு.

 

“ஐயோ என்னா சார் இது?”, என்று அதிர்ச்சியானான் மணி. “வட்டி இல்லாத கடனா நினைச்சுக்கோங்க மணி. என்னை உங்க தம்பின்னு நினைச்சா வாங்கிக்கோங்க”, என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்தான் விஷ்ணு.

 

மதிய உணவை சாப்பிட சொன்னான் மணி. விஷ்ணு மறுப்பான் என்று எதிர்பார்க்க “சரி”, என்று விஷ்ணு ஒத்து கொண்டதும் “இவன் தான் எவ்வளவு அருமையானவன்” என்று எண்ணி கொண்டாள் சத்யா.

 

எவ்வளவு பணம் இருந்தும் அந்த திமிர் சிறிதும் இல்லாதவனின் மீது அவள் காதல் மேலும் பெருகியது. அங்கே சாப்பிட்டு விட்டு அவர்களிடம் விடை பெற்று வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்தார்கள்.

 

அதன் பின்னர் இரவு காவ்யாவிடம் விடை பெற்று ஏர்போர்ட் சென்றார்கள். டெல்லிக்கு வந்து சேர்ந்ததும் அங்கே அலெக்ஸ் காத்திருந்தான். விஷ்ணுவையும் சத்யாவையும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு ஜான்சியை அழைத்து கொண்டு சென்று விட்டான் அலெக்ஸ்.

 

விஷ்ணுவை பார்த்து முறைத்த புவனாவை “இனி எங்கயும் போகலை மா”, என்று சொல்லி சமாளித்தான் விஷ்ணு. இன்றோடு டெல்லி வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. சத்யா மற்றும் விஷ்ணுவின் வாழ்க்கை தாமரை இலை மீதான தண்ணீர் போல ஒட்டாத தன்மையுடன் இருந்தது.

 

எந்த நெருக்கமான தருணமும் வராததால் அனைத்தும் சாதாரணமாக சென்றது. சத்யாவும் அந்த வீட்டில் ஒட்டாத தன்மையுடன் தான் இருந்தாள்.

 

அவன் வேலைக்கு சென்றதும் அவளிடம் புவனா மற்றும் பிரதாப் பேசாததால் நேரத்தை அவள் தள்ள வேண்டி இருந்தது. இவளே பேச முயற்சி செய்தாலும் ஒரு முறைப்போடு அவர்கள் விலகி சென்றார்கள்.

 

இரவு விஷ்ணு வந்த பிறகு தான் அவள் மனமும் முகமும் மலரும். அவனை கண்டதும் அவள் முகம் மலர்வதற்கான காரணம் மட்டும் புரியாமல் இருந்தான் விஷ்ணு.

 

அன்று அவன் வேலைக்கு கிளம்பியதும் நேரம் போகாமல் வீட்டுக்கு போன் செய்து பேசினாள் சத்யா. அதன் பின்னரும் என்ன செய்ய என்று தெரியாமல் அவனுடைய குட்டி ஜிம்முக்கு சென்றாள்.

 

“ஒரு வேலையும் செய்யாம சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குனா குண்டா ஆகிருவேன். இன்னும் தினமும் எக்சர்சைஸ் செய்யணும்”, என்று நினைத்து கொண்டு அந்த ஓடும் எந்திரத்தில் ஏறியவள் வேகத்தை சற்று அதிகம் வைத்து விட்டாள்.

 

செய்யும் போது ஒன்றும் தெரிய வில்லை. ஆனால் அவள் செய்து முடித்து சிறிது நேரத்தில் அவள் கணுக்கால் வலிக்க ஆரம்பித்தது.

 

அன்று மாலை வீட்டுக்கு வந்த விஷ்ணு தன்னை முகம் கொள்ளா புன்னகையுடன் வரவேற்கும் மனைவியை காணாது அவசரமாக அறைக்கு வந்தான்.

 

அங்கே கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள் சத்யா. ”சத்யா என்ன ஆச்சு மா? உடம்பு சரி இல்லையா?”, என்று அவசரமாக கேட்டான்.

 

அவன் பதட்டம் அவளுக்கு ஆதரவாக இருந்தாலும் “அப்படி எல்லாம் இல்லை அத்தான். நான் நல்லா தான் இருக்கேன்”, என்று சொல்லி சிரித்தாள்.

 

அவள் புன்னகையை கண்டு நிம்மதியானவன் குளிக்க சென்றான். பின் உடை மாற்றி வந்த போதும் அதே போல் தான் அமர்ந்திருந்தாள். “சாப்பிட போகலாமா சத்யா?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“காலையே அசைக்க முடியாதப்ப எங்க கீழ போறது?”, என்று நினைத்து கொண்டு “எனக்கு வேண்டாம் பசுக்கலை” என்றாள்.

 

“அதெப்படி பசிக்காம இருக்கும். நீ இல்லைன்னா எனக்கு சாப்பிடவே ஓடாது. ப்ளீஸ் வா”

 

“எனக்கு வேண்டாம் அத்தான் ப்ளீஸ்”

 

“நீ இப்படி சொன்னா கேக்க மாட்ட”, என்று சொல்லி விட்டு அவள் அருகே வந்தவன் அவள் கையை பற்றி இழுத்தான். கால்களை கீழே எடுத்து வைத்தவள் அடுத்த நொடி “ஆ”, என்று அலறலுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

“ஏய் என்ன ஆச்சு? கால்ல என்ன?”, என்று பதறினான் விஷ்ணு.

“அதுவா? சொன்னா சிரிக்க கூடாது”

 

“சிரிக்க கூடாதா? என்ன ஆச்சு சத்யா?”

 

“அது வந்து அந்த மெஷின்ல ஓடுனேனா? அது கால் ரொம்ப வலிக்கு. எடுத்து வைக்க முடியலை”

 

“ஹா ஹா முதல் நாளே வேகம் வச்சு ஓடுனியா. தசை பிடிச்சிருக்கு. இரு நான் மருந்து எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி அதை எடுக்க சென்றான்.

 

எடுத்து வந்தவன் அவள் அருகில் அமர்ந்ததும் கையை மருந்துக்காக நீட்டினாள். “ப்ச் நீ தேய்ச்சா லைட்டா தேய்ப்ப? கொஞ்சம் வேகமா அழுத்தி விடணும். அப்ப தான் சரியாகும். ட்ரெஸ்ஸை மேல தூக்கு”, என்றான்.

 

அவளோ “ஆன்”, என்று வாயை பிளந்து அவனை பார்த்தாள்.

 

தீ பற்றும் …….

 

Advertisement