Advertisement

அத்தியாயம் 16

காற்றுக்காக இதய

கதவை திறந்த போது

உள்ளே புகுந்த

உன்னை கண்டால்

பற்றும் காதல் தீ!!!!!

“இவ கூட எப்படி தான் தினமும் சமாளிக்க போறேனோ?”, என்று நினைத்து கொண்டு அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டான் விஷ்ணு.

சிறிது நேரம் கழித்து வரும் போது அவனுடைய கட்டிலில் ஒரு ஓரமாக நல்ல உறக்கத்தில் இருந்தாள் சத்யா. நிம்மதியாக தூங்கும் அவளையே சிறிது நேரம் பார்த்தவன் அவள் அருகே படுத்தான்.

அன்று முழுவதும் ஓய்வில்லாமல் இருந்ததால் உடலும் மனமும் ஓய்வுக்கு கெஞ்சியது. அவள் அருகே படுத்தவன் அப்படியே தூங்கி போனான்.

காலையில் சத்யா கண் விழித்ததும் தூங்கும் அவனை தான் பார்த்தாள். “என் வாழ்க்கைல இப்படி எல்லாம் ஒரு நாள் வரும்னு நான் நினைச்சே பாக்கலை அத்தான். சந்தோசமா இருக்கு”, என்று தனக்குள் சொல்லி  கொண்டு குளிக்க சென்றாள்.

அவள் குளித்து முடித்து கீழே வரும் போது “யாராவது இருப்பாங்களா?”, என்று தயக்கத்துடன் தான் வந்தாள். ஆனால் கீழே  யாரும் இல்லாததால் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.

அடுத்த இரண்டு நாளில்அவன் ஆபிஸ் சென்றான். சத்யா வீட்டையே சுற்றி வந்தாள்.  இப்போதும் பிரதாப் மற்றும் புவனா இருவரும் அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் தான் இருந்தார்கள்.

“எப்ப டா ஊருக்குக்கு போவோம்?”, என்று இருந்தது சத்யாவுக்கு. மூன்றாவது நாள், “சத்யா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கோ. நைட் பிளைட்”, என்றான் விஷ்ணு.

சந்தோசத்துடன் “சரிங்க அத்தான். எத்தனை நாள் ஊருல இருப்போம்?”, என்று கேட்டாள்.

“வீட்டு வேலை முடியுற வரை அங்க தான் மா. அம்மாவை புது வீட்ல விட்டுட்டு தான் இங்க வரணும்”

பிரதாப் மற்றும் புவனாவிடம் சொல்லி விட்டு அவர்கள் முறைப்பையும் பெற்று கொண்டு இருவரும் ஏர்போர்ட் வந்தார்கள். அங்கே ரம்யா, அலெக்ஸ், ஜான்சி மூவரும் இவர்களுடன் ஊருக்கு வர கிளம்பி இருந்தார்கள். அவர்களும் வருவதை அறிந்து சந்தோச பட்டாள் சத்யா.

சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் மணியை அழைத்தான் விஷ்ணு. அவனும் காருடன் வந்து விட்டான். கல்யாண விசயம் அறிந்து அதிர்ச்சியானவன் “சார் இவங்க தான் உங்க லவ்வரா?”, என்று கேட்டான்.

அவனை பார்த்து சிரித்தவன் “ஹ்ம்ம் ஆமா மணி”, என்று சொல்லி விட்டு வேற பேச்சை பேசி திசை திருப்பி விட்டான். மணி, சத்யா மட்டும் பேசிய போதே அந்த கார் பயணம் இனிதாக கழிந்ததென்றால் இப்போது ரம்யா, ஜான்சி, அலெக்ஸ் மூவரும் சேர்ந்ததால் இன்னும் அழகாக கழிந்தது.

காலையில் ஊருக்குள் நுழையும் போதே அங்கே மைக் செட் காதை பிளந்தது. இவர்கள் ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்து செந்தில் ஏற்பாடு செய்திருந்தான்.

செந்தில் வீட்டு வாசலில் ஆரற்றி சுற்றி அவர்களை உள்ளே அழைத்து சென்றாள் தேன்மொழி. பின்னர் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். “ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும் தங்கங்களா”, என்று அன்னம் ஆசிர்வதித்தாள்.

“என் கண்ணே பட்டுரும் போல இருக்கு, சின்ன குட்டி”, என்று சிரித்தாள் வடிவு.

ஆறுமுகம், “நல்லா இருங்க”, என்று சொன்னதோடு வாயை மூடி கொண்டார்.

“அத்தை எல்லாரும் வந்தாச்சா? அங்க எல்லா ஏற்பாடும் தயாரா இருக்கு. இவங்க குளிச்சிட்டு வந்தா ஆரம்பிச்சிரலாம்”, என்று சொல்லி கொண்டே வந்த அருள் அங்கு நின்ற ஜான்சியை சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.

தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்து கொண்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். புது வீடு கட்டி கொண்டிருக்கும் இடத்தில் பெரிய பந்தல் போட்டு ஒரு ரிசப்ஷன் மாதிரி ஏற்பாடு செய்திருந்தார்கள் அருளும் செந்திலும்.

அவர்களுக்கு என்று வாங்கி வந்ததை கொடுத்த விஷ்ணு ஆறுமுகம் மற்றும் வடிவுக்கு கூட அவர்கள் கைகளில் உடையை கொடுத்தான். பின் தன்னுடைய தாய்க்கு என்று வாங்கிய நகையை கொடுத்த போது “இதெல்லாம் எனக்கு எதுக்கு ராசா? நான் போட்டுட்டு எங்க போக போறேன்? எனக்கு வேண்டாம்”, என்றாள் அன்னலட்சுமி.

“என்னோட அம்மாவுக்கு நான் உரிமையா செய்யணும்னு நினைக்கிறேன் மா. ப்ளீஸ்”, என்று விஷ்ணு சொன்னதும் சாதாரண கல் பதித்த தங்க கம்மலை கழட்டி விட்டு அவன் வாங்கி தந்த வைர கம்மலையும் செயின் மற்றும் வளையளையும் அணிந்து கொண்டாள்.

தேன்மொழிக்கு கொடுத்த நகையை கண்டு தான் அனைவரும் வாய் பிளந்தார்கள். அவள் அதிர்ந்து போய் “அண்ணா என்ன இது? அதுவும் இவ்வளவு?”, என்றாள் தேன்மொழி.

“உனக்கு இந்த அண்ணனோட சீர் மா. உன்னோட பிள்ளைகளுக்கும் நான் தாய் மாமன் சீர் இது மாதிரி தான் செய்வேன்”, என்றான் விஷ்ணு.

அப்போதும் வைர நகையை கண்டு தயங்கியவள் செந்திலை பார்த்தாள். அவன் “வாங்கிக்கோ”, என்று கண்களை காட்டியதும் தான் வாங்கி கொண்டாள்.

தங்கள் அறையில் இருக்கும் போது செந்திலிடம் “எனக்கு இவ்வளவு நகையை பாத்து பயம் வந்துருச்சு அத்தான். நீங்களாவது காப்பாத்திருக்க கூடாதா?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“தேனு உங்க அண்ணன் ஆசையா வாங்கிட்டு வந்துருக்கார். அது மட்டுமில்லாம அவர் உனக்கு செய்ற சீர்ன்னு சொன்ன அப்புறம் அதை தடுக்க எனக்கு உரிமை இல்லை. பிரியத்துல வாங்கிட்டு வந்ததை வேண்டாம்னு சொன்னா அவர் சங்கட படுவார் மா”

“இருந்தாலும் இவ்வளவா? எப்படினாலும் எனக்கு நீங்க வாங்கி கொடுத்ததை போட தான் பிடிக்கும் தெரியுமா?”

அவள் பதில் சொக்கியவன் அவளை கட்டி அணைத்து “அது எனக்கும் தெரியும். தினமுமா அதை போட போற? விஷேச நாள்ல தான் போட போற? அவர் ஒன்னும் கடனை வாங்கி வாங்கிட்டு வரலை. அவர் சம்பாதிக்கிறதுல தான் கூட பிறந்தவளுக்கு செய்ய நினைக்கிறார். சந்தோசமா எடுதுக்கோ”, என்று சொன்னதும் தான் தெளிந்தாள்.

ஊர் மக்களுக்கு விருந்து தயார் ஆகி கொண்டிருந்தது. இங்கே அனைவரும் குளித்து கிளம்பியதும் அங்கே சென்றார்கள். பொண்ணு மாப்பிள்ளையை மேடையில் நிறுத்தி ஊரில் உள்ளவர்கள் வந்து வாழ்த்து சொன்னவுடன்

உணவு பரிமாறப்பட்டது.

வீட்டில் உள்ளவர்களும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள். அதன் பின்னர் அவரவர் கிடைத்த இடத்தில ஓய்வெடுக்க சென்று விட்டார்கள். ரம்யாவும் அலெக்ஸும் அடுத்த நாள் கிளம்புவதாகவும், ஜான்சிக்கு லீவ் என்பதால் அவள் மட்டும் இங்கே இருப்பாள் என்றும் விசயம் தெரிந்தவுடன் அன்றே “நானும் ஊருக்கு போறேன் அத்தை”, என்ற படி வந்தான் அருள்.

“ஏலே என்ன அதுக்குள்ள போற? இந்த வாரம் லீவ் எடுத்துருக்கேன்னு சொன்ன?”, என்று கேட்டாள் அன்னலட்சுமி.

“வீட்டு வேலை முடிய எப்படியும் இன்னும் ஒரு மாசம் ஆகும். அதனால அப்ப அப்ப வந்து வீட்டை பாக்க லீவ் எடுக்கணும். இப்பவே மொத்தமா எடுத்துட்டா அப்புறம் கஷ்டம்”

“சரிப்பா, நீயும் போய் தான ஆகணும்? வெள்ளி கிழமை நைட் கிளம்பி சனிக்கிழமை காலைல வந்துரணும் சரியா?”

“சரி அத்தை. அப்புறம் மச்சான், செந்தில் அண்ணா கிட்ட வீட்டை பாத்துக்க சொல்லிருக்கேன். மேஸ்திரிட்டயும் எல்லாம் சொல்லிட்டேன். நான் போய்ட்டு சனி கிழமை வரேன்”, என்று விஷ்ணுவிடம் சொன்னவன், “வரேன் குட்டி”, என்று சத்யாவிடம் சொன்னான்.

“மணி கூட கார்லே போயிருங்க”, என்று அனுப்பி வைத்தான் விஷ்ணு.

அடுத்த நாளே ரம்யா மற்றும் அலெக்ஸ் கிளம்பி விட்டார்கள். விஷ்ணுவோ செந்திலுடன் அவனுடைய மில்லுக்கு போவதும் அதன் பின்னர் இருவரும் கட்டி கொண்டிருக்கும் வீட்டுக்கு போவதுமாக இருந்தார்கள்.

ஜான்சி, தேன்மொழி, சத்யா மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விட்டார்கள். ஆறுமுகம் ஒரு துறவியை போல் அதிகம் பேசாமல் அமைதியாகி விட்டார்.

அன்னம் எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக இருந்தாள். வடிவு காலையில் மகன் வீட்டுக்கு வருபவள் விளக்கு வைக்கும் நேரத்துக்கு தான் தன் வீட்டுக்கு செல்வாள்.

“தேனக்கா, எனக்கு ஒரு சந்தேகம். உங்க அத்தை, அதான் வடிவு ஆன்ட்டி இப்ப எல்லாம் நல்லா சிரிக்க சிரிக்க பேசுறாங்க. நாங்க வந்த அன்னைக்கு அமைதியா இருந்தாங்க. ஏன்?”, என்று கேட்டாள் ஜான்சி.

“அருள் இருந்தா அத்தை வாயவே தொறக்க மாட்டாங்க”

“அப்படியா? ஏன்?  உங்க அண்ணன் தான சத்யா அண்ணி. அப்புறம் ஏன்?”

“அருள் அண்ணன் இன்ஜினியரிங் படிக்கும் போது கீதான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணுச்சு. அவளுக்கும் இந்த ஊரு தான். நாலு தெரு தள்ளி இருக்கு அவ வீடு. அந்த பொண்ணும் விரும்பிருக்கு. அப்படி ஒரு லவ்வாம். அவனோட பிரண்ட் தான் சொன்னான். அப்புறம் ஒரு நாள் அவங்க ரெண்டு பேரும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு போயிருக்காங்க. அதை எங்க அம்மா பாத்துடுச்சு”, என்றாள் சத்யா .

“ஐயையோ அப்புறம் என்ன ஆச்சு?”

“அப்புறம் என்ன ஆகும்? எங்க அம்மா இப்ப தான் கொஞ்சம் நல்ல மாதிரியா இருக்கு. முன்னாடி எல்லாம் ராங்கி தனமா திரியும். அவன் வந்த உடனே அவன் கிட்ட கேட்டுச்சா. அவன் ஆமா லவ் பண்றோம்னு சொன்ன உடனே அந்த பொண்ணு வீட்ல போய் பிரச்சனை பண்ணி ஊரே சிரிக்கும் படி செஞ்சிட்டு. அந்த பொண்ணு வீட்ல எல்லாரும் அடிச்சு மிரட்டி அந்த பொண்ணு படிப்பை நிறுத்தி அவளை அவளோட மாமனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க”

“ஐயையோ”

“ஆமா ஜான்சி,  இனி நான் உனக்கு மகனே இல்லைனு சொல்லிட்டு அப்ப சென்னைக்கு போனவன் தான் இப்ப அத்தான் வந்தப்பறம் தான் வந்துருக்கான். அவனுக்கும் லவ் பண்ண பொண்ணு ஒரே ஊர்ல வேற ஒருத்தன் கூட வாழுறதை எப்படி பாக்க முடியும்?”

அருள் கதையை கேட்டதில் இருந்து அவன் மேல் கூடுதல் கவனம் வைத்தாள் ஜான்சி.

அதே நேரம் சத்யாவிடம் எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுந்தான் விஷ்ணு. மனைவியாக அருகில் இருப்பவள் மீது சலனம் வந்து அவனை பாடாய் படுத்தியது. அதில் தன் மீதே கோபம் கொண்டவன் அதை அவள் மீது காட்டினான். அவனை குழப்பமாக பார்த்தாள் சத்யா. ஆனாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

“அத்தான் நாளைக்கு சாயங்காலம் கோவிலுக்கு போவோமா?”, என்று மலர்ந்த புன்னகையுடன் கேட்டாள் சத்யா.

“இங்க பாரு உனக்கு வேணும்னா நீ போ. தேவை இல்லாம என்னை கூப்பிடாத சொல்லிட்டேன்”, என்று எரிச்சலுடன் பதில் சொன்னான்.

புன்னகையை தொலைத்தவள் “இப்ப நான் கோவிலுக்கு தான கூப்பிட்டேன்? எதுக்கு இப்படி கோப படுறீங்க?”, என்று கேட்டாள்.

“இங்க பாரு சத்யா,  நான் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் உன்னை

கல்யாணம் பண்ணுனேன். அதையே அட்வாண்ட்டேஜா எடுத்துக்காத. தேவை இல்லாம அதை செய் இதை செய்னு சொல்லி என்னை வெறுப்பேத்தாத. என்னோட பொண்டாட்டி அப்படிங்குற பதவி மட்டும் தான் உனக்கு. அதுக்காக என்னோட பெர்சனல் விஷயத்தில் நீ தலை யிடாதே. ஒரு பிரண்டா தான் நான் உன்னை நினைக்கிறேன். உன்னோட லிமிட் குள்ள இருந்தா ரெண்டு பேருக்கும் பிரச்னை இல்லை”, என்று முகத்தில் அடித்தது போல அவன் பேசியதும் சத்யா அழுது விட்டாள்.

அவள் அழுகையை பார்த்ததும் அவன் இதயம் வலித்தது.  “அதிகமா பேசிட்டேனோ?”, என்று வருந்தினான். மனதில் குற்றவுணர்வுடன் பேச்சை நிறுத்தி கொண்டான். அவள் கண்ணீரோடு பேச ஆரம்பித்தாள்.

“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண தான் என்னை கல்யாணம் பண்ணுனீங்க அப்படிங்குறதை நான் மறக்கலை. எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. அது மாதிரி என் மனசுல இருக்குறவரை தவிர வேற யாரையும் என்னால புருஷனா ஏத்துக்க முடியாது. உங்க கிட்ட நான் அதிக உரிமையை எல்லாம் எடுத்துக்கலை. நீங்க எல்லாம் பெரிய இடம்னு எனக்கு தெரியும். நான் விலகி இருக்கணும்னு தான் நினைக்கிறேன். ஆனா அத்தம்மா தான் நம்மளை கோயிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க. அதை சொல்ல தான் வந்தேன். உங்க அம்மா கிட்ட கோயிலுக்கு போகலைன்னு நீங்களே சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

தன் தலையிலே அடித்து கொண்டான் விஷ்ணு. அவனுடைய தவறை மறைக்க

அவள் மேல் கோப பட்டது அவனுக்கு அதிகமாக தோன்றியது. இரவு அவன் அருகே படுக்காமல் தரையில் பாயை விரித்து படுத்தவள் முகத்தில் இருந்தே அவள் கோபமாய் இருப்பதை தெரிந்து கொண்டான். தன்னுடைய தவறை அவன் நியாய மனம் எடுத்து சொன்னதால் “சாரி சத்யா”, என்றான்.

“என்கிட்ட சாரி கேக்குற அளவுக்கு நான் எல்லாம் ஒர்த் இல்லை சார். இனி எல்லார் முன்னாடியும் மட்டும் தான் உங்களை அத்தான்னு கூப்பிடுவேன். நீங்களே எதுக்கு என்னை அப்படி கூப்பிடுறன்னு கேக்குறதுக்கு முன்னாடி நானே என் தப்பை திருத்திக்கணும்ல? இனி உங்களை எதுக்காகவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”, என்று சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

அவனும் வலி நிறைந்த மனதுடன் படுத்தான். தூக்கத்தில் விஷ்ணுவுக்கு கனவு வந்தது. அதில் சத்யா மேக கூட்டங்களுக்கிடையே  மிதந்து வரும் தேவதை போல வந்தாள். அவன் மேல் பூமாலையாக விழுந்தவளை அவன் கரம் இறுக்கி கொண்டது. திடுக்கிட்டு கண் விழித்தான் விஷ்ணு.

வியர்த்து போய் இருந்தது அவனுக்கு.நெஞ்சம் எல்லாம் பட பட வென்று அடித்து கொண்டது. தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவன் எதிரே குளித்து முடித்து ஈர தலையை துண்டில் சுற்றி கொண்டு கையில் காபியுடன் நின்றாள் சத்யா.

“இவ எப்ப எந்திச்சா?”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தவன் அவள் கொடுத்த காபியை வாங்கி கொண்டான். படுத்திருந்த போர்வையை எல்லாம் மடித்து கொண்டு இருந்தவள் மயில் கழுத்து வண்ணத்தில் சேலை கட்டி இருந்தாள். நெற்றி வட்டில் இருந்த குங்குமம், கழுத்தில் கிடந்த புது தாலி கயிறு அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.

“என்னமா அழகா இருந்து தொலைக்கிறா?”, என்று நினைத்து கொண்டு குளிக்க சென்று விட்டான். அவன் வெளியே வரும் போது தலையை பின்னி கொண்டு இருந்தவளின் தலை முடியை ரசித்த படி சில நொடிகள் நின்றவன் தன்னை மீட்டு கொண்டான்.

அவளோ அவனை கண்டு கொள்ளாமல் காபி குடித்த டம்ளரை எடுத்து கொண்டு சென்று விட்டாள். அவன் வேற உடை அணிந்து வெளியே வரும் போது அவளும் , தேன்மொழியும் எதையோ சிரித்து பேசி கொண்டிருந்தனர்.

இனி தன்னிடம் இப்படி சிரித்து பேச மாட்டாள் என்பதால் ஒரு ஏக்கம் வந்தது விஷ்ணுவுக்கு. அப்போது அங்கு வந்த அன்னலட்சுமி “விஷ்ணு, சத்யாவை கூட்டிட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்துருப்பா. அப்படியே சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிருங்க”, என்றாள்.

“சரிம்மா”, என்றவன் சத்யாவை பார்த்தான். அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து நின்றாள். அதன் பின்னர் கோயிலுக்கு செல்லும் போதும் அவள் ஒரு வார்த்தை பேச வில்லை. அவன் எதாவது கேட்டாள் அதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

அதற்கு பின் வந்த இரண்டு நாளிலும் அதே தொடர்ந்தது. காலையில் அவன் கண் விழிக்கும் போது காபியுடன் வருபவள் அவன் முகம் பார்க்காமல் கொடுத்து விட்டு சென்று விடுவாள். பின் பகல் முழுவதும் தேன்மொழி மற்றும் அன்னத்துடன் இருப்பாள்.

எல்லாரும் அமர்ந்து சாப்பிடும் போதும் அவனிடம் எதுவும் பேச மாட்டாள். ஆனால் மற்ற எல்லாரிடமும் கலகலப்பாய் பேசுவதால் இவர்களுக்கிடையே இருந்த பனிப்போர் யாருக்கும் தெரியாமல் போனது.

இரவு செந்தில் உடன் எதாவது பேசி விட்டு அறைக்கு வரும் போது அவள் படுத்து விடுவாள்.

“என்ன டா வாழ்க்கை?”, என்று சலித்து போனது விஷ்ணுவுக்கு.

“பேசாம நான் உண்டு, என் வேலை உண்டு, என் மனதுல இருக்குற காதல் உண்டுன்னு இருந்தேன். இவ கழுத்துல தாலியை எப்ப காட்டுனேனோ அப்ப இருந்து நிம்மதி இல்லாம தவிக்கிறேன்”, என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவன் கண்ணில் வெளியே கொடியில் காய போட பட்டிருந்த அந்த வெள்ளை சட்டை கண்ணில் பட்டது.

குறைந்திருந்த கோபம் மீண்டும் பொங்கியது. படுத்திருந்த அவள் அருகே சென்று நின்றவன் “ஏய் சத்யா எந்திரி டி”, என்றான்.

எழுந்து அமர்ந்தவள் “என்ன?”, என்று கேக்காமல் அந்த கேள்வியை கண்ணில் தாங்கி அவனை பார்த்தாள்.

 

“உனக்கு அறிவு இருக்கா? எதுக்கு என்னோட சட்டையை துவைச்சு போட்ட? அது என்ன சட்டைனு தெரியுமா? உன்னை பாத்தாலே எரிச்சலா வருது. அது அந்த பொண்ணோட ஞாபகமா வச்சிருந்தேன். அதை போய் துவைச்சு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?”, என்று கடுப்புடன் சொன்னவன் அவள் கண்ணீரை பார்த்து, “எதுக்கு எடுத்தாலும் அழ வேண்டியது”, என்று சொல்லி விட்டு கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.

“அது ஒரு மாதிரி வியர்வை வாடையாக இருந்தது. அதனால தான் துவைச்சேன்”, என்று உள்ளே போன குரலில் சொன்னாள் சத்யா.

“நீ வேணும்னே என்னை நிம்மதி இழக்க வைக்கிற சத்யா. அது அவளோட ஞாபகம். அந்த சட்டைல இருக்கும் போது தான் அவ என்னை தொட்டது. அதுல அவளை நான் பீல் பண்றேன் . ஆனா இப்ப அதை போய் துவைச்சு போட்டுருக்க. எனக்கு எதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டோமோன்னு இருக்கு”, என்று விரக்தியாக சொன்னான் விஷ்ணு.

“எனக்கு உங்க கிட்ட இருந்து டைவர்ஸ் வேணும்”, என்று கேட்டாள் சத்யா.

அதிர்ச்சியில் அவளை நிமிர்ந்து பார்த்த விஷ்ணு “நீ இப்ப என்ன சொன்ன?”, என்று கேட்டான் .

 

“எனக்கு உங்க கிட்ட இருந்து டைவர்ஸ் வேணும்னு கேட்டேன். எப்ப நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு தோணுச்சோ அப்பவே இது சரி பட்டு வராதுன்னு தோணுது. டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணுங்க. இப்ப பண்ணா தான் கொஞ்ச நாள் கழிச்சு கிடைக்கும்”

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நான் அம்மா கேட்டா என்ன சொல்லுவேன்?”

“எதுக்கு கோப படுறீங்க? நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லை. நாம இன்னும் ஒரு மாசத்துல வீட்டு வேலை முடிஞ்சதும் டெல்லி போயிருவோம். அங்க போன அப்புறம் என்ன நடந்தாலும் இங்க அத்தைக்கு தெரியாது. இப்பவே நீங்க அலெக்ஸ் அண்ணா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுங்க. சாரி உங்க காதல் சின்னத்தை அழிச்சதுக்கு”, என்றவள் மீண்டும் படுத்து விட்டாள்.

அடுத்த நாள் மலை கோயிலுக்கு ஜான்சி, தேன்மொழி, சத்யா, விஷ்ணு நால்வரும் வந்திருந்தார்கள். சத்யா, ஜான்சி மற்றும் தேன்மொழியிடம் மட்டும் தான் பேசினாள். விஷ்ணுவிடம் ஒரு வார்த்தை பேச வில்லை.

அதுவே அவளுடைய கோபத்தை அவனுக்கு நன்கு உணர்த்தியது. அது அவனை வெகுவாக பாதிக்கவும் செய்தது. தேன்மொழியை ஊடே வைத்து அவளை  வம்புக்கு இழுத்து பார்த்து விட்டான்.

ஆனால் அவள் அவனிடம் மட்டும் பேசவே இல்லை. ஜாடையாக இதை கவனித்த தேன்மொழி “நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்க. அங்க நம்ம சொந்த காரங்க ஒருத்தங்க இருக்காங்க. பேசிட்டு வரேன். ஜான்சி நீ என் கூட வா”, என்று இழுத்து சென்றாள்.

 

அங்கிருந்த சரிவில் அமர்ந்தாள் சத்யா. அவள் அருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த விஷ்ணு அவள் முகத்தையே பார்த்தான். அவள் அந்த ஊரின் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.  தான் பேசாமல் அவள் பேச போவதில்லை என்று உணர்ந்த விஷ்ணு “சத்யா சாரி”, என்று ஆரம்பித்தான்.

அப்போதும் அமைதியாக இருந்தவளை “ப்ளீஸ் சத்யா பேசு. நான் தான் பேசுனதுக்கு சாரி சொல்றேன்ல? என் கூட யாருமே இப்படி பேசாம இருந்தது இல்லை தெரியுமா? சண்டையும் போட்டதில்லை. முதல் முதலா உங்கிட்ட தான் சண்டை போடுறேன். ஆனா பேசாம இருந்தா கஷ்டமா இருக்கு”, என்றான்.

 

அவன் பேச்சில் நெகிழ துடங்கிய மனதை கல்லாக்கி கொண்டு அமைதி காத்தாள்.

 

“ப்ளீஸ் சத்யா, இப்ப நான் என்ன செய்யணும்? உன் காலுல வேணும்னா விழணுமா? அதையும் செய்றேன் ப்ளீஸ் பேசு”

“எதுக்கு சார் நீங்க எல்லாம் என் காலுல விழணும்? எப்படியும் நான் உங்களை விட்டு விவாகரத்து வாங்கிட்டு போக போறவ தான? என்கிட்ட எல்லாம் நீங்க கெஞ்சணும்னு இல்லை”, என்று வாயை திறந்தாள்.

 

அவள் பேசியதற்கு ஆனந்த பட்டவன் அவள் வார்த்தைகளை கண்டு வேதனை அடைந்தான்.

 

“சார்னு எல்லாம் கூப்பிடாத. கடுப்பா இருக்கு. இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோ. என் மேல எனக்கு இருக்குற கோபத்தை உன் மேல காட்டிட்டேன். முழுக்க முழுக்க அது என்னோட தப்பு தான். ப்ளீஸ் சத்யா. இனி இப்படி நடக்காது”

“சும்மா ஈஸியா சாரி சொல்லிட்டீங்க? நீங்க பேசுனது எனக்கு எப்படி கஷ்டமா இருந்துருக்கும்? யோசிச்சு பாருங்க”

”இனி கண்டிப்பா உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன் சத்யா”

இவ்வளவு மன்னிப்பு கேட்ட பிறகும் அவள் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருப்பாளா என்ன?

“இன்னொரு தடவை நீங்க இப்படி நடந்துக்கிட்டா என்ன தண்டனை கொடுக்கலாம்?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

அவள் சிரிப்பு அவனுக்கு யானை பலத்தை தந்தது. அவளை பார்த்து பதிலுக்கு புன்னகைத்தவன் “இனி அப்படி நடக்காது. அப்படி நடந்தா நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு”, என்றான்.

“பேச்சு மாற கூடாது  அத்தான். பாத்து வாக்கு கொடுங்க”

“இல்லை மாற மாட்டேன். நீ பேசாம இருக்கிறதை தவிர என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குவேன். ஆமா நீ என்ன ஒரு மாதிரி சிரிக்குற? தண்டனை எல்லாம் யோசிச்சு வச்சிட்ட போல?”

“ஆமா பெரிய தண்டனை”

“அட பாவி என்னது?”

அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் “நீங்க இன்னொரு தடவை என்னை கஷ்ட படுத்துனீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா விவாகரத்து தர மாட்டேன். உங்க காதலியே வந்தா கூட. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு அவ கிட்டயே சொல்லுவேன். இது தான் என்னோட தண்டனை எப்படி?” என்றாள்.

அவள் கண்களுக்குள் தொலைந்து போக பார்த்தவன் அவள் மனதை படிக்க முயன்றான். அது புரியாததால் அவளை சீண்ட “ஓஹோ அப்படியா? அப்படி உன் புருஷன் தான் உனக்கு மட்டும் தான்னு நீ சொன்னா, நானும் புருஷனாவே நடந்துக்க வேண்டியதா இருக்கும். எப்படி?”, என்று அவளை போலவே கண்ணடித்து கேட்டான்.

குப்பென்று அவள் முகம் சிவந்து போனது.

“நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்?”, என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

 

தன் காதில் விழுந்த வார்த்தைகளை கேட்டு திகைத்தவன் அதை உறுதி படுத்த “ஏய் நீ இப்ப என்ன சொன்ன?”, என்று ஆவலுடன் கேட்டான்.

“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன். எழுந்து வாங்க மேல போகலாம்”, என்று சொல்லி விட்டு எழுந்தாள். மனதில் தோன்றிய கலவையான நினைவுகளுடன் அவள் பின்னே சென்றான்.

மேலே வானத்தை பார்த்து கொண்டு நின்ற தேன்மொழியை பார்த்த ஜான்சி “தேனக்கா என்னமோ சொந்தகாரங்க இருக்காங்கன்னு சொன்னீங்க. இங்க யாருமே இல்லை”, என்று கேட்டாள்.

“இல்லை ஜான்சி, அண்ணனுக்கும் சத்யாவுக்கு ஏதோ செல்ல சண்டை போல? அண்ணன் அவ கிட்ட பேச ஆசை படுற மாதிரி இருந்தது. அதான் அவங்க பேசிக்கட்டும்னு நினைச்சேன்”

“ஓஹோ சூப்பர்க்கா ஆமா உங்க ஆத்துக்காரர் எப்படி? இப்படி தான் சண்டை போடுவாங்களா?”

“ஏய் வாலு, நீ என்னையே கிண்டல் பண்றியா? அத்தான் என்கிட்ட சண்டை எல்லாம் போட மாட்டாங்க. நான் தான் போடுவேன். அவங்க சமாதான படுத்துவாங்க”

“பார் டா இங்கயும் ஒரு லவ் ஸ்டோரி ஓடுதா? அக்கா எனக்கு ஒரு சந்தேகம்”

“என்ன ஜான்சி?”

“அருள் லவ் பண்ண பொண்ணு ரொம்ப அழகா இருக்குமா?”

“அவளுக்கு ஆயுசு நூறு போ. நேரா அங்க பாரு. அவ தான் கீதா”

அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் ஜான்சி. தூரத்தில் மங்களகரமான முகத்துடன், முகம் முழுவதும் புன்னகையுடன் நடந்து வந்தாள் கீதா.

அவள் அருகில் அவள் கணவன் கையில் குழந்தையுடன் வந்தான். இருவர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம் குடி கொண்டிருந்தது.

“இவ இங்க சந்தோசமா இருக்கா. இவளை நினைச்சிட்டு தான் அருள் அப்படி கஷ்ட படுறாங்களா?”

“ஹ்ம்ம் அவனுக்கு இதை யாரு சொல்றது? இதை பத்தி பேசினாலே எரிஞ்சு விழுவான்”

“அப்படியா சங்கதி?”, என்று நினைத்த ஜான்சி யாரும் கவனிக்காதவாறு அவர்கள் முகத்தை ஜூம் செய்து போட்டோ எடுத்தாள். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சந்தோசத்தை விடியோவும் எடுத்தாள்.

அப்போது விஷ்ணுவும் சத்யாவும் வந்ததும் சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள். பின் மனநிறைவுடன் வீட்டுக்கு வந்தார்கள்.

 

தீ பற்றும் …….

 

Advertisement