Advertisement

அத்தியாயம் 15

 

ரத்தத்தை உறைய

செய்யும் உன்னுடனான  

இதழ் முத்தத்தின் போது

பற்றும் காதல் தீ!!!!!

 

வெட்கத்துடன் விஷ்ணு அருகில் அமர்ந்திருந்த சத்யாவை அழைத்த விஷ்ணு “நீ ரொம்ப அழகா இருக்க சத்யா”, என்றான்.

 

அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. தன்னுடையவன் தன்னுடைய அழகை பாராட்டவில்லை என்றால் அவள் அழகுக்கு தான் என்ன பயன்? ஒரு வார்த்தையில் அவள் மனமும் நிம்மதி கொண்டது;

 

அவளும் ஓர விழி பார்வையில் அவனை கண்டாள். அவன் அழகில் அவளும் மயங்கி தான் போனாள். “கடவுளே, எனக்கு வேண்டியதை எனக்கு கொடுக்க போற. உனக்கு நன்றி”, என்று மனதினுள் சொல்லி கொண்டாள்.

 

ஐயர் மந்திரம் சொல்ல, அழகான தருணத்தில் பெரியவர்களின் ஆசியோடு அவள் சங்கு கழுத்தில் தாலியை கட்டினான் விஷ்ணு. சந்தோஷத்தில் ஒரு துளி கண்ணீரே வந்து விட்டது சத்யாவுக்கு.

 

அவன் கை கோர்த்து அக்னியை வலம் வந்த போது தன்னுடைய பிறப்புக்கே அர்த்தம் கிடைத்தது போல உணர்ந்தாள் சத்யா.

 

விஷ்ணு மனம் முழுவதும் அவள் அழகை தான் ரசித்து கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் அனைவரும் அவள் அழகை பற்றியே பேசி அவனை உசுப்பேத்தி கொண்டிருந்தார்கள்.

 

அதன் பின்னர் மணமக்களுக்கு  நேரம் றெக்கை கட்டி கொண்டு பறந்தது. பிரதாப்பும், புவனாவும் “யார் என்ன கேக்க போறாங்களோ?”, என்று பயத்துடன் இருந்தார்கள்.

 

ஆனால் அனைவருமே “பொருத்தமான ஜோடி. உங்க மருமக தேவதையாட்டம் இருக்கா. இப்படி ஒரு அழகுக்கு முன்னாடி எதுவுமே இல்லை. விஷ்ணு மயங்கினதுல தப்பே இல்லை”, என்று ஒவ்வொருத்தரும் சொன்னதால் அவர்கள் நிம்மதியானார்கள்.

 

சத்யாவின் பேரழகில் அங்கே அவர்களுடைய கல்யாணம் பற்றி எந்த விமர்சனமும் எழவில்லை.

 

அனைத்து சடங்குகளும் முடிந்து இருவருக்கும் ஜூஸ் கொடுக்க சொன்னாள் புவனா. பின்னர் மணமக்கள் கோவிலுக்கு அழைத்து செல்ல பட்டார்கள். அதன் பின்னர் மதிய உணவு கொடுக்க பட்டது. இருவரையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார் போட்டோ கிராபர். அவர் சொல்லிய படி போஸ் கொடுக்கும் போது முதல் முறையாக தடுமாறினான் விஷ்ணு.

 

ஏற்கனவே அவள் பார்வையில் குழம்பி போனவன், அவள் அழகில் மயங்கி கொண்டிருப்பவன் இப்போது மனைவியாக  அருகில் நின்ற சத்யாவின் நெருக்கத்தில் மொத்தமாக தடுமாறினான்.

 

அவன் தோளில் சாய்ந்த படி, நெஞ்சில் சாய்ந்த படி, உணவு ஊட்டுவது போல, லேசாக அணைப்பது போல அவர் போட்டோ எடுக்க போஸ் கொடுக்க சொல்ல அவன் மனமோ எக்குத்தப்பாக பயணித்தது. ஆனால் சத்யாவோ போட்டோ கிராபர் ஏற்படுத்தி கொடுத்த நெருக்கத்தை முயன்ற அளவு பயன்படுத்தி கொண்டாள்.

 

ஒரு வழியாக அவர் விட்டதும் தான் நிம்மதியானான் விஷ்ணு. பின்னர் வீட்டுக்கு வந்ததும் “சாயங்காலம் ரிசப்ஷன் இருக்கு. ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி அவர்களை அறைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.

 

முதல் முறை சத்யாவை இந்த அறைக்கு அழைத்து வரும் போது எந்த வித எண்ணங்களும் அவன் மனதில் இல்லை. இப்போது முதல் முறையாக வந்த தடுமாற்றம் அவனை நிம்மதி இழக்க வைத்தது.

 

ஒரு பெண்ணை இப்படி பார்ப்பது தவறு என்று புரிந்ததால் அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.

 

அவனுடைய கண்களில் வந்து போகும் உணர்வை சத்யா எளிதாக கண்டு கொண்டாள். உள்ளுக்குள் சிரித்தும் கொண்டாள்.

 

அது அவளுக்கு மேலும் கிளு கிளுப்பை தந்தது. ஏற்கனவே மனதில் மையம் கொண்டிருக்கும் காதலுக்கும், இப்போது மனைவியாக கண் முன் இருக்கும் தன் மீது வந்த மயக்கத்துக்கு இடையில் அவன் அல்லல் படுகிறான் என்று புரிந்தது.

 

“இவனை பார்த்துட்டு இருந்தா நானே உண்மையை சொல்லிருவேன். கண்டுக்க கூடாது, என் காதலை இப்படி நாலு சுவத்துக்குள்ளே சொல்ல கூடாது. அந்த இயற்கையை சாட்சியா வச்சு தான் சொல்லணும். அதுக்கு ஒரு பெஸ்ட் நாளை சூஸ் பண்ணனும்”, என்று நினைத்து கொண்டு அவனை கண்டு கொள்ளாமல் கண்ணாடி முன்பு போய் அமர்ந்து தன்னுடைய அலங்காரத்தை கலைக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நகையாக கழட்டியவள் அதற்குரிய அட்டையில் பத்திர படுத்தினாள். கழுத்தில் இருந்த தாலியும் அவன் வாங்கி தந்த தங்கத்தை மட்டும் அணிந்திருந்தாள்.

 

இப்படி ஒரு கோலத்தை பார்க்கும் போது அவளுக்கே அவள் அழகாக இருப்பது போல் தோன்றியது. அதற்கு காரணம் அவளுடைய மனத்துக்கினியவன் அணிவித்த அந்த தாலி தான் என்று புரிந்தது.

 

ஓர கண்ணால் அவனை பார்த்தாள். அவனோ கட்டிலில் அமர்ந்து அவளை பார்ப்பதும் பின்னர் ஏதோ யோசிப்பதுமாக இருந்தான்.

 

வீட்டுக்கு போடும் உடையை எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்று உடையை மாற்றினாள்.

 

பின்னர் முகம் கழுவி விட்டு புடவையை மடித்து கொண்டே வெளியே வந்தவளை பார்க்கும் போதும் கார்ஜியஸ் என்று சொல்ல தோன்றிய வாயை அடக்கி கொண்டான் விஷ்ணு. மெது மெதுவாக அவள் பக்கம் அவன் மனது செல்வதை உணர்ந்தவனுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.

 

“இது என்ன புது சோதனை? நான் ஏன் சத்யாவை இப்படி எல்லாம் பாக்குறேன்?”, என்று கேள்வி கேட்டவனுக்கு விடை சொல்ல தான் ஆளில்லை.

 

சாதாரணமாக அவன் அருகே அமர்ந்தவள் “என்ன ஆச்சு அத்தான்? உடம்பு சரி இல்லையா?”, என்று கேட்டு கொண்டே அவன் நெற்றியில் கை வைத்தவள் அவன் கழுத்திலும் கை வைத்து பார்த்தாள். இப்போது அவள் தொடுகை அவனை மேலும்  தகிக்க வைத்தது.

 

“சூடா எல்லாம் இல்லையே? தலை வலிக்குதா அத்தான்?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“ஐயையோ, காலைல இருந்து ரெஸ்ட் இல்லைல அதான். கொஞ்ச நேரம் தூங்குங்க. சரியா போகும். டிரெஸ் மாத்துறீங்களா?”

 

“ஹ்ம்ம்”, என்று சொல்லி விட்டு உடை மாற்றி வந்தான் விஷ்ணு. பின்னர் அமைதியாக கட்டிலில் ஏறி படுத்தவன் அப்படியே தூங்கி போனான். சிறிது நேரம் அவனையே பார்த்தவள் அவன் அருகே படுத்தாள். அவளும் இனிய கனவுகளுடனே கண்ணயர்ந்தாள்.

 

அவன் கண் விழிக்கும் போது அவன் வயிற்றில் கை போட்டு படுத்திருந்தாள் சத்யா. தூங்கும் போது சாதாரணமாய் இருந்த மனம் இப்போது அவளுடைய நெருக்கத்தில் வேறு மாதிரி சென்றது. “இப்ப நான் என்ன செய்யணும்? கையை தள்ளி விடணுமா? இல்லை இப்படியே இருக்கட்டும்னு விடணுமா?”, என்று மனசாட்சியிடம் கேட்டான்.

 

“இன்னைக்காவது கையை தான் போட்டுருக்கா. அன்னைக்கு உன் நெஞ்சுல சாஞ்சு தூங்கிட்டு வந்தா. அப்ப நீ ஒண்ணுமே யோசிக்கலை. இப்ப இப்படி யோசிக்கிற? தப்பு அவ மேல இல்லை. உன் மேல தான். உன் மனசுல தான் எதுவோ கள்ளம் புகுந்துருக்கு”, என்று இடித்துரைத்து மனசாட்சி.

 

அவள் எழுந்து விடாதவாறு அவள் கைகளை விலக்கியவன் அறையை விட்டு வெளியே வந்தான். வீட்டுக்கு வந்தவர்களிடம் பேசி கொண்டிருந்தாள் புவனா. இவனை கண்டதும் “எதாவது சாப்பிடுறியா விஷ்ணு?”, என்று கேட்டாள்.

 

“ஒரு காபி கொண்டு வர சொல்லுங்க மாம். கொஞ்சம் டயர்டா இருக்கு”

 

காபி குடித்ததும் தெம்பாக உணர்ந்தான் விஷ்ணு. “சரி டா ஆறு மணிக்கு கிளம்பனும். சத்யா எழுந்துட்டாளா? பார்லர்ல இருந்து வந்துட்டாங்க. அவளை ரெடி பண்ணனும்”, என்று புவனா சொன்னதும் “இல்லை மா தூங்குறா. நான் எழுப்புறேன்”, என்று சொல்லி அறைக்கு சென்றான்.

 

“உன்னை நிம்மதியா இருக்க விடுவேனா?”, என்று அவனை பார்த்து சிரித்தது விதி. நல்ல உறக்கத்தில் இருந்த சத்யாவின் மேல் சட்டை சற்று உயர்ந்து அவள் வயிற்றை வெட்ட வெளிச்சமாக அவனுக்கு காட்டியது. ஒரு நிமிசத்தில் மூச்சு முட்டி போனான் விஷ்ணு.

 

கள்ள மனசு அங்கே பார்வையை பதிக்க சொன்னது. நல்ல மனசு பார்வையை திருப்ப சொன்னது. இப்போது இந்த நிமிடம் மனதில் இருந்த காதலி எல்லாருமே தூர போனார்கள்.

 

தன்னை சமாளித்து கொண்டவன் அவள் அருகில் வந்து “சத்யா எந்திரி. நேரம் ஆகிட்டு”, என்று எழுப்பினான்.

 

அடித்து பிடித்து எழுந்தவள் அவனை பார்த்து மலங்க மலங்க விழித்தாள். “சாரி மா பயந்துட்டியா? நேரம் ஆகிட்டு. அம்மா கிளம்ப சொன்னாங்க. அதான் எழுப்பினேன்”, என்றான்.

 

“பரவால்ல அத்தான். நான் அந்த ரூம்ல ரெடி ஆகிக்கிறேன்”, என்று சொல்லி தேவையானதை எடுத்து கொண்டு பக்கத்துக்கு அறைக்கு சென்றாள்.

 

சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவன், பின்னர் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். இப்போதும் கிளம்பி கீழே சென்றவன் சோபாவில் அமர்ந்தான். அதன் பின்னர் பிரதாப் மற்றும் புவனா இருவரும் கிளம்பி வந்தார்கள். சத்யாவின் வரவுக்காக மூவரும் காத்திருந்தார்கள்.

 

இப்போதும் கிளம்பி வந்தவளை கண்டு மூச்சடைத்து போனான் விஷ்ணு. அவன் எடுத்து கொடுத்த உடை தான். ஆனால் அது அவளுக்கு அப்படி பொருந்தி இருந்தது.

 

“இப்படி அழகா இருந்து தொலைச்சா, நான் என்ன செய்றது?”, என்று கடுப்பாக வந்தது அவனுக்கு.

 

“சத்யா வந்தாச்சு. நீங்க ரெண்டு பேரும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க விஷ்ணு. நானும் அப்பாவும் முன்னாடி போறோம்”, என்று சொன்ன புவனாவின் குரலில் தான் சுயநினைவுக்கு வந்தான்.

 

“சரி மா”, என்று புவணாவிடம் சொன்னவன் “அவளை பாக்காதே”, என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

 

ஆனால் கீழே இறங்கி வந்த சத்யாவோ அவன் அருகில் அமர்ந்து “அத்தான், இந்த டிரெஸ் அழகா இருக்கா?”, என்று கேட்டாள்.

 

“பாவி, நானே பைத்தியமா ஆகிருவேனோன்னு இருக்கேன். என்கிட்ட வந்தே கேக்கா பாரு”, என்று நினைத்து கொண்டு “ஹ்ம்ம் அழகா இருக்கு”, என்றான்.

 

“நான் அழகா தான் இருக்கேனா? ஆனா நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க? உங்க கூட நிக்கும் போது நான் பொருத்தமா தெரியுவேனா?”, என்று கொஞ்சும் குரலில் அவள் கேட்டதும் அவன் இதயத்தில் மெல்லிய பனி சாரல்.

 

தன்னுடைய அழகுக்கு கிடைத்த முதல் பாராட்டு. உள்ளம் ஜில்லென்று இருந்தது. அவளை பார்த்து புன்னகைத்தவன் “நீயும் ரொம்ப ரொம்ப அழகா தான் இருக்க சத்யா. எல்லாரும் மாப்பிள்ளையை விட பொண்ணு தான் அழகுன்னு சொல்லுவாங்க”, என்றான்.

 

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது. உங்களை விட அதிகமா எல்லாம் என்னை பாராட்ட கூடாது. உங்களை தான் அழகுன்னு சொல்லணும். அப்புறம் நான் மேக்கப் போட்டு தான் இப்படி அழகா இருக்கேன். ஆனா நீங்க அப்படியே கம்பீரமா இருக்கீங்க? நாம கதைல எல்லாம் வர ராஜா மாதிரி”

 

“ஏய், எதுக்கு இப்படி ஐஸ் வைக்கிற? நாம ரெண்டு பேரும் அழகா தான் இருக்கோம். கிளம்பலாமா?”

 

“ஹ்ம்ம் சரி”, என்று அவள் சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள். ரிசப்ஷனுக்கு வந்தவர்களும் அவர்கள் அழகை பாராட்டினார்கள். இப்போதும் இங்கே நடப்பவற்றை ஊருக்கு காண்பிக்கும் வேலையை செய்தான் அலெக்ஸ். இப்போது ஜான்சியை அருளின் கண்கள் அவனை அறியாமலே தேடியது.

 

ரிசப்ஷன் நல்ல படியாக நடந்தது. அவன் கை கோர்த்து நிற்கும் இந்த நிமிடங்களை ரசித்தாள் சத்யா. அவனோ ஒரு அவஸ்தையான உணர்வில் நின்றான். அவள் அழகு, அவனை இம்சித்தது.

 

அவள் அருகாமை ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணியது. அதுவும் அவன் கண்ணுக்கு விருந்தாக அமைந்த அவள் இடுப்பு மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் வந்து போனது.

 

“நான் இப்ப சத்யாவை பத்தி இப்படி எல்லாம் எதுக்கு நினைக்கேன்?”, என்று குழம்பினான்.

 

விருந்து முடிந்து வீட்டுக்கு வரும் போது மணி பத்து ஆகி இருந்தது. அறைக்குள் வந்ததும் இருவரும் திகைத்தார்கள். அங்கே அலங்காரம் செய்ய பட்டிருந்தது.

 

“மித்த நேரம் எல்லாம், இந்த மாம் ரொம்ப டீசண்டா நடந்துக்குவாங்க. சில விசயத்துல என்னை வெறுப்பேத்தணும்னே செய்றாங்க பாரு”, என்று மனதுக்குள் புவனாவை திட்டினான் விஷ்ணு.

 

ஆனால் எதையுமே கண்டு கொள்ளாமல் மதியம் போல் இப்போதும் நகையை கழட்டும் வேலையை செய்தாள்.

 

“இவ என்ன இப்படி இருக்கா? எந்த பீலிங்சுமே இவளுக்கு இல்லையா?”

 

“அவ ஒழுங்கா தான் இருக்கா. நீ தான் குழம்பி தவிக்கிற?”, என்று சொன்னது மனசாட்சி.

 

“ஆமா அவ ஒழுங்கா தான் இருக்கா. நான் தான் தேவை இல்லாம யோசிக்கிறேன். இனி அப்படி எல்லாம் யோசிக்க கூடாது”, என்று நினைத்து கொண்டான் விஷ்ணு.

 

“உன்னை அப்படி விடுவேனா?”, என்பது போல் “அத்தான் இங்க வாங்களேன், என்னால இந்த நகையை கழட்டவே முடியலை. ப்ளீஸ் கழட்டி விடுங்க”, என்று அழைத்தாள்.

 

“இது வேறையா?”, என்று நினைத்து கொண்டு அவள் அருகில் சென்றான் விஷ்ணு. அவனுக்கு முதுகு காட்டி நின்றவள் நகையை தூக்கி கொடுத்தாள்.

 

அதை அவன் கழட்ட முயற்சிக்கும் போது அவன் கை விரல்கள் அவள் கழுத்தில் பதிந்தது. அதில் கூசி சிலிர்த்தவள் “அத்தான் கூச்சமா இருக்கு”, என்று ஒரு மாதிரி குரலில் சொன்னாள்.

 

அவனே அவள் பின்னங்கழுத்தில் படரும் பார்வையை கட்டு படுத்திய படி நகையை அவிழ்த்து கொண்டிருக்கும் போது அவள் குரல் அவனுக்கு மேலும் இம்சையை கொடுத்தது. அந்த நகையை கழட்டி கொடுப்பதற்குள் செத்து பிழைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தீ பற்றும் ……

Advertisement