Advertisement

அத்தியாயம் 14

 

மெளனமாக பரிமாறிய

உன் காதல்

பார்வை புரிந்தபோது

பற்றும் காதல் தீ!!!!!

 

புவனாவை பார்த்ததும் சத்யாவுக்கு சிறிது பயம் வந்தது மட்டும் உண்மை. “பார்லர்ல இருந்து ஆளுங்க வந்திருக்காங்க”, என்று சத்யாவிடம் சொன்ன புவனா அந்த அழகு நிலைய பெண்ணிடம் திரும்பி, “இவளை தான் அழகு படுத்தனும்”, என்று ஹிந்தியில் சொன்னாள்.

 

“இயற்கையாவே இந்த பொண்ணு அழகா இருக்காங்க. நான் பாத்துக்குறேன் மேடம்”, என்று அந்த பெண் பதில் சொன்னதும் “என்னோட மருமக அழகா தான் இருப்பா. இந்த அழகுக்கு மேலும் அழகு சேர்க்கணும். ஒரு வாரம் தினமும் இந்த நேரத்துல வந்துருங்க. என்ன செய்யணுமோ செய்ங்க. எதாவது வேணும்னா வேலைகாரங்க கிட்ட கேளுங்க”, என்று ஹிந்தியில் சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

வாயை பிளந்து நின்றாள் சத்யா. “இந்த அம்மாவா என்னை மருமகன்னு சொல்லுச்சு? எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு நினைச்சு பேசிட்டு போகுது”, என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் சத்யா. அதன் பின் அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வேலை ஆரம்பமானது.

 

மதிய உணவை உண்டு விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்தான் விஷ்ணு. ஏனோ சத்யாவின் நினைவு வந்தது. “என்ன செஞ்சிட்டு இருப்பா? அம்மா அவளை எதாவது சொல்லிருப்பாங்களா?”, என்று நினைத்த படி இருந்தவன் அவளை போனில் அழைத்தான். அதை எடுத்தவள் “சொல்லுங்க அத்தான்”, என்றாள்.

 

“சாப்பிட்டியா சத்யா?”

 

“சாப்பிட்டேன் அத்தான். நீங்க சாப்பிட்டீங்களா?”

 

“சாப்பிட்டேன். அம்மா எதாவது சொன்னாங்களா?”

 

“இல்லை அத்தான். ஆனா கொடுமை படுத்துறாங்க”

 

“என்னது?” என்று பதறி போனான் விஷ்ணு.

 

“ஆமா அத்தான். எனக்கு ஒரே ஜூசா கொடுத்து கொல்லுறாங்க. மதியமும் சாப்பாடு தரலை. சாலட் தான் கொடுத்தாங்க. எனக்கு பிடிக்கவே இல்லை”

 

“ஹா ஹா, சாலடா? அம்மாவை உன்னை மாதிரி மாத்து. நீ அவங்களை மாதிரி மாறிராத”

 

“ஹ்ம் சரி அத்தான். இங்க வேலை இன்னும் நடந்துட்டு தான் இருக்கு. நான் வைக்கவா? நீங்களும் வேலையை பாருங்க”

 

“ஓகே டா”, என்று சொல்லி வைத்தவன் தன்னுடைய வேளையில் மூழ்கினான். வீட்டுக்கு வந்து சத்யா முகத்தை பார்த்தவனுக்கு பெரியதாக எந்த வித்தியாசமும் தெரிய வில்லை. கொஞ்சம் பளிச்சென்று இருப்பது போல மட்டும் தான் தோன்றியது.

 

வேறு எதுவும் கண்டு கொள்ளாமல் அவளிடம் பேசி கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து ஊருக்கு போன் செய்தார்கள். பின் “வா சத்யா சாப்பிட போகலாம்”,  என்று அழைத்து சென்றான்.

 

“அத்தான் பிளீஸ், இப்பாவது இட்லி தோசைன்னு எதையாவது சாப்பிட கொடுக்க சொல்லுங்க. வெறும் காய்கறி எல்லாம் என்னால திங்க முடியாது”, என்று அவன் காதில் கிசுகிசுத்து கொண்டிருக்கும் போது புவனா சொல்படி அவள் முன்னே ஜூசும், ஒரு கிண்ணத்தில் சாலடும் கொண்டு வந்து வைத்தாள் வேலைக்காரி.

 

பாவமாக அவனை பார்த்தாள் சத்யா. அவள் பார்வையை பார்த்தவன் “அம்மா வேற எதாவது அவளுக்கு கொடுங்க மா”, என்றான்.

 

“அவளை தான் கட்டிப்பேனு சொன்னதோடு உன் வேலை முடிஞ்சது. இனி இதுல நீ தலை இட கூடாது விஷ்ணு. அப்புறம் பேங்க் லாக்கர்ல இருந்து நாளைக்கு நகை எல்லாம் எடுத்துட்டு வந்துரு”

 

“ஹ்ம்ம் சரி மா. அப்பா எங்க?”

 

“கல்யாண வேலைல அப்பா பிஸி”

 

“அம்மா அப்புறம் ஒரு ஹெல்ப்”

 

“ஹெல்பா என்ன?”

 

“சத்யா வீட்ல எல்லாரும் அவ கல்யாணத்தை பாக்கணும்னு ஆசை படுவாங்க. அவங்க வருவதை நீங்க விரும்ப மாட்டீங்கன்னு தெரியும். அங்க இருந்தே பாக்குறதுக்கு வீடியோ பெசிலிட்டி ஏற்பாடு பண்ணட்டுமா?”

 

“என்னமோ எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு தான் சார் ஏற்பாடு பண்றீங்களா? சரி சரி முகத்தை தூக்காத. ஏற்பாடு செய். அப்புறம் நீ இவளுக்கு வாங்கி கொடுத்துருக்குற டிரெஸ்ஸை பாத்தேன். எனக்கு திருப்தியா இல்லை. நான் வேற வாங்கி கொடுக்குறேன்”

 

“சரி மா”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தான். “என்னது அது திருப்தியா இல்லையா?”, என்று அதிர்ச்சியாக முழித்தாள் சத்யா.

 

வேறு வழி இல்லாமல் அந்த உணவை சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவளுக்கு சிரித்து எரிச்சல் வந்தது மட்டும் உண்மை. “இவனை லவ் பண்ணிட்டேன்னு நானே இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சா, இவங்க பணத்தை காட்டியே என்னை விரட்டிருவாங்க போலயே?”, என்று கடுப்புடன் நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் முன்னே ஆவி பறக்க இட்லி இருக்கும் தட்டை வைத்தான் விஷ்ணு. இருந்த கடுப்பு எல்லாம் மறைய அவனை பார்த்து புன்னகைத்தவள் “தேங்க்ஸ் அத்தான்”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“இவனுக்காக இன்னும் எந்த கஷ்டத்தையும் தாங்கலாம்”, என்று சொன்னது அவள் மனது.

 

அவளை சிறு சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தவன், “அம்மாக்கு தெரிய வேண்டாம். சில விஷயங்கள் அவங்க விருப்ப படியே விட்டுறலாம். அப்ப தான் அவங்க  எந்த குழப்பமும் பண்ண மாட்டாங்க. அப்புறம் உன்னோட ரூம்க்கு இப்ப டிவி வரும் சரியா?”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

“அட பாவி இங்கயும் தனியா ஒரு டிவியா? கடவுளே இந்த பணக்காரங்களை பாத்து எனக்கு மூச்சு முட்டும் போல இருக்கே. எப்படி விஷ்ணு கூட வாழ போறேன்னு தெரியலையே?”, என்று மலைத்தாள்.

 

காலை எழுந்ததும் அறைக்கே காபி, காலை டிபன் என வருவதும், அதன் பின் அழகு நிலைய பெண், பின்னர் மதிய உணவு, சிறு தூக்கம், மாலை விஷ்ணு வந்ததும் அவனுடன் சிறிது நேர பேச்சு, பின்னர் வீட்டுக்கு போன், இரவு டைனிங் டேபிள் உணவு, திருட்டு தனமாக அறைக்கு அவன் கொண்டு வரும் உணவு, அதன் பின் டிவி, நிம்மதியான உறக்கம் என்று கழிந்தது சத்யாவுக்கு.

 

அது சில நேரம் எரிச்சலை தந்ததும் உண்மை.விஷ்ணுவோ வேலையில் தன்னுடைய முழு கவனத்தையும் வைத்தான். இப்படியே நாட்கள் சென்றன.

கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் தருவாயில் தான் விஷ்ணு ஆபிஸ் போகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்தான்.

 

இதற்கிடையில் பிரதாப் தான் முற்றிலும் ஓய்ந்து போனார். அதிக வேலையில் ரொம்ப களைப்பாக தெரிந்தார். அவரை பார்த்து குற்றவுணர்வு வந்தாலும் அதை கட்டி கொள்ளாமல் இருந்தான் விஷ்ணு.

 

கல்யாண நாளும் வந்தது. காலை ஆறு மணிக்கு எழுந்து அமர்ந்தாள் சத்யா. அப்போது அவளுடைய போன் அடித்தது.  விஷ்ணு தான் அழைத்தான். “என்ன பக்கத்துக்கு ரூம்ல இருந்து கூப்பிடுறான்?”, என்று நினைத்து கொண்டு அழைப்பை ஏற்றாள்.

 

“குட் மார்னிங் சத்யா”

 

“குட் மார்னிங் அத்தான். என்ன போன் பண்ணிருக்கீங்க?”

 

“எந்திச்சிட்டியானு பாக்க தான் கூப்பிட்டேன்”

 

“எழுந்துட்டேன் அத்தான் குளிக்க போகணும். இப்ப மேக்கப் பண்ண ஆள் வந்துருவாங்க”

 

“சரி நீ குளிக்க போ. அப்புறம் சாப்பாடு கொடுக்க சொல்றேன். சாப்பிட்டுட்டு மேக்கப் போடு. மதியம் எவ்வளவு நேரம் ஆகுதோ?”

 

“சரி அத்தான். நீங்களும் சாப்பிடுங்க”

 

“சரிங்க மேடம். கல்யாண மேடைல பாப்போம்”

 

“அத்தான்”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தாள் சத்யா.

 

”ம்ம்”

 

“உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண எதாவது வருத்தம் இருக்கா? பிடிக்காத மாதிரி எதாவது பீல் பண்றீங்களா?”

 

“ஏய் சத்யா நான் அப்படி எதுவும் பீல் பண்ணலை. சந்தோசமா தான் பீல் பண்றேன். நீ எனக்கு நல்ல பிரண்ட். உனக்காக தான இந்த ஹெல்ப். எனக்கும் கொஞ்சம் நன்மை. சந்தோசமா இந்த நாளை அனுபவி. நாம தான் ஹீரோ ஹீரோயின்”

 

“உண்மையாவே வருத்தம் இல்லையா?”

 

“சரி உண்மை சொல்றேன் சத்யா. நிஜமாவே வருத்தமா தான் இருக்கு. என்னை விரும்புற பொண்ணு ஞாபகம் வருது. அவ கூட நடக்க வேண்டிய கல்யாணம்ன்னு நினைவு வருது. அவ கூட இவ்வளவு ஆடம்பரமா என்னோட கல்யாணம் இன்னொரு தடவை நடக்காதுன்னு கஷ்டமா இருக்கு. இன்னும் சொல்ல போனா அவ டெல்லி பொண்ணா தான் இருக்கணும். எங்க அப்பா வேற கல்யாணத்தை பெருசா செய்றார். என்னோட கல்யாண விஷயம் அவளுக்கும் தெரிஞ்சு, எங்க என்னை தேடி வர மாட்டாளோனு பயமா இருக்கு. இன்னொரு பக்கம் அவளை நினைச்சு கோபமாவும் வருது. வித விதமான எண்ணங்கள் மனசை போட்டு குழப்புது. உன்னையும் சங்கட படுத்த வேண்டாம்னு தான் எதுவும் சொல்லலை”, என்று வருத்தமான குரலில் சொன்னான் விஷ்ணு.

 

அவன் சொன்னது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும், “அத்தான் எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலை படாதீங்க.  நீங்க சிரிச்சிட்டே இருக்கணும். சரியா?”, என்றாள்.

 

“சரி டா, நீயும் ஹேப்பியா இரு. அம்மா உன்னை எப்படி ரெடி பண்ணிருக்காங்கன்னு பாக்க ஆவலா காத்துட்டு இருக்கேன். ரம்யா, ஜான்சி இப்ப வந்துருவாங்க. ஓகே வா?”

 

“நான் அழகா மேக்கப் போட்டு உங்க மனசை சலன படுத்துவேனா அத்தான்?”, என்று மனதில் நினைத்தவள், “ஹ்ம்ம் சரி அத்தான்”, என்றாள்.

 

“அப்புறம் ஊருல இருந்து அம்மா, உங்க அம்மா, அண்ணன் எல்லாரும் நேரடியா நம்ம கல்யாணத்தை பாப்பாங்க. சந்தோசமா குளிச்சிட்டு ரெடியாகு”.

 

“சரி அத்தான். நான் வைக்கிறேன்”, என்று போனை வைத்தவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

 

“லூசு சத்யா உண்மையை சொல்லலாம்னு எல்லாம் யோசிக்காத. நடக்குறது நடக்கட்டும். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவன் எங்க போயிற போறான். அப்புறம் உண்மையை சொல்லிக்கலாம்.இப்ப சொல்லி சொதப்பிற கூடாது”,  என்று நினைத்து குளிக்க சென்றாள்.

 

குளித்து முடித்து வரும் போது அவளுக்கு உணவு தயாராக இருந்தது. அதை உண்டு முடிக்கும் போது ரம்யாவும், ஜான்சியும் வந்து விட்டார்கள்.  அதன் பின்னர் அழகு நிலைய பெண்கள் வந்து அவளுக்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தார்கள்.

 

கல்யாண மேடையில் அமர்ந்திருந்த விஷ்ணு  பட்டு வேட்டி சட்டையில், மாப்பிள்ளை தோரணத்துடன் ஒரு இளவரசனுக்குரிய கம்பீரத்துடன் இருந்தான். அவன் நெற்றியில் இருந்த சந்தன கீற்று அவனுக்கு தனி அழகை கொடுத்தது.

 

“அலெக்ஸ்”, என்று அழைத்தான் விஷ்ணு.

 

“என்ன விஷ்ணு? எதாவது வேணுமா?”, என்று கேட்ட அலெக்சிடம் “செந்திலுக்கு கால் பண்ணு டா. அங்க லேப்டாப் எல்லாம் சரியா கனெக்ட் ஆகியிருக்கா. இங்க நடக்குறது தெளிவா தெரியுதான்னு கேளு”, என்றான்.

 

“சரி விஷ்ணு”, என்று சொல்லி விட்டு செந்திலை அழைத்தான். “சொல்லுங்க சார்”, என்றான் செந்தில்.

 

“சார்னு சொல்லாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டிங்களே? சரி அங்க எல்லாம் தெளிவா தெரியுதா?”

 

“அருள் தான் எல்லா வயரையும் மாட்டுனான். நீங்க இப்ப என்கிட்ட பேசிட்டு இருக்குறது கூட தெளிவா தெரியுது. விஷ்ணு உங்க கிட்ட செக் பண்ண சொன்னது கூட எங்களுக்கு தெரியுது. நாங்க எல்லாரும் பாத்துட்டு தான் இருக்கோம். ஆனா ஒரு உதவி பண்ண முடியுமா?”

 

“என்ன செந்தில்?”

 

“அத்தை, விஷ்ணு கிட்ட பேசணும்னு பிரிய படுறாங்க. மச்சான் கிட்ட இப்ப பேச முடியுமா?”

 

“அம்மா கிட்ட பேசுறதை விட அவனுக்கு என்ன பெரிய வேலை? இதோ கொடுக்குறேன்”, என்று சொல்லி நகர்ந்தவன் “விஷ்ணு அம்மா உங்கிட்ட பேசணுமாம்” ,என்று கொடுத்தான்.

 

“அம்மா”, என்று விஷ்ணு அழைத்ததும் “ராசா” என்று அழைத்த அன்னலட்சுமி கண்கள் கலங்கியது. அந்த குரலில் இருந்த நெகிழ்ச்சியை உணர்ந்தவன் “நீங்க பெத்த பிள்ளையோட கல்யாணத்தை, கூட இருந்து பாக்க முடியலைன்னு கஷ்டமா இருக்கா மா?”, என்று கேட்டான்.

 

“இல்லை ராசா. அப்படியே ராஜா கணக்கா உன்னை பாக்குறதை நினைச்சு பூரிப்பா இருக்கு தங்கம். உன் கல்யாணத்தை தான் நாங்க இங்க இருந்து பாக்குறோமே. நீ இப்ப மாதிரி எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கணும் ஐயா”

 

“சரி மா, நீங்களும் சிரிச்சிட்டே இருங்க. நான் நாலு நாள்ல ஊருக்கு வந்துருவேன் சரியா?”

 

“சரி விஷ்ணு. அப்புறம் என் மருமகளை எப்ப கூட்டிட்டு வருவாங்க. பாவம் பிள்ளை இவ்வளவு பெரிய ஆளுகளா இருக்குற கூட்டத்தை கண்டு மிரளுதோ என்னவோ?”

 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மா”

 

“சரி விஷ்ணு. ஆமா அங்க இருக்குறதுல உங்க அம்மா, அப்பா யாரு?”

 

“அம்மா இங்க இல்லைம்மா. சத்யா பக்கத்துல இருக்காங்க. அப்பா என் பக்கத்துல நிக்காங்கல்ல? அவர் தான்”

 

“அப்படியே பணக்கார களை அவர் முகத்துல தாண்டவம் ஆடுது. சரி ராசா. நான் இந்த பொட்டில உன் கல்யாணத்தை பாக்குறேன்”

 

“சரி மா. அப்புறம் சத்யா போன்க்கு கூப்பிட்டு பேசுங்க. அவ தெம்பா இருப்பா”, என்று சொல்லி போனை வைத்து விட்டு அதை அலெக்சிடம் கொடுத்த விஷ்ணு பிரதாப்பை பார்த்தான்.

 

அவரோ அவனை முறைத்து கொண்டிருந்தார். “என்ன ஆச்சு டேட்?”,  என்று கேட்டான் விஷ்ணு.

 

“இந்த நேரத்துலயும் அந்த குடும்பம் கூட தான் கொஞ்சி குலாவனுமா? அதான் உன்னை விட்டு கொடுக்க கூடாதுன்னு அவங்க பொண்ணையே உனக்கு கட்டி வைக்குறாங்களே. இன்னும் என்னவாம்?”

 

அவனோ பதில் சொல்லாமல் சிரித்தான். “நான் கடுப்புல இருக்கேன் நீ சிரிக்கிற?”

 

“டேட் ஊருல இருந்து உங்களை பாத்துட்டு இருக்காங்க? அவங்க உங்களை ராஜா மாதிரி இருக்கார் னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்க இப்படி முகத்தை வச்சா அவங்க என்ன நினைப்பாங்க?”, என்று சொல்லி சிரித்தான்.

 

அவனை ஒரு கோப பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றார் பிரதாப்.

 

அங்கே தன்னுடைய முழு அலங்காரத்தை கண்ணாடியில் பார்த்த படி இருந்தாள் சத்யா,

 

“அதுக்குள்ளே நகையை மாட்டிட்டீங்களா? அதுக்குள்ள என்ன அவசரம்?”, என்று சொல்லி கொண்டே வந்த புவனா “எல்லாத்தையும் கழட்டிட்டு இதை மாட்டி விடுங்க”, என்றாள்.

 

அவள் கொண்டு வந்தது அத்தனையும் வைரம். அப்படியே ஜொலித்தது. விஷ்ணு சொன்னது நினைவில் வந்தது.

 

“இன்னும் எல்லாத்தையும் மாத்தணுமா?”, என்று எரிச்சல் வந்தது சத்யாவுக்கு. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாமல், ஏற்கனவே போட்டிருந்த தங்க நகையை கழட்டினாள். அவன் வாங்கி தந்த சில செயின்களை மட்டும் போட்டிருந்தாள்.

 

“சத்யா அதையும் கழட்டு”, என்றாள் ரம்யா.

 

“ப்ளீஸ் ரம்யா, இதெல்லாம் அத்தான் எனக்கு முதல் முதல்ல வாங்கி கொடுத்த கிப்ட். எல்லாத்தையும் வேண்டாம், அட்லீஸ்ட் இந்த ரெண்டு  செயின் மட்டும் போட்டுக்குறேன்”, என்று சத்யா சொன்னதும் அவளை புரியாத பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள் புவனா.

 

“வைரம் வேண்டாம், தங்கம் வேணும்னு சொல்றது நீயா தான் இருக்கும். சரி சரி கிளம்பலாம். காதுல இதை போடு”, என்று சிரித்தாள் ரம்யா. மீண்டும் ஒப்பனை தொடர்ந்தது.

 

வீட்டில் இருந்து போன் வந்ததும் அதை எடுத்தவள் சதோசமாக அனைவரிடமும் பேசினாள்.

 

மணவறையில் மந்திரம் சொல்லி பொறுமை இழந்து கொண்டிருந்தான் விஷ்ணு. “பொண்ணை அழைத்து வர சொல்லுங்க”, என்று ஐயர் சொன்னதும் சத்யாவை அழைத்து கொண்டு வந்தார்கள் ரம்யாவும், ஜான்சியும்.

 

சத்யா நடந்து வரும் போது கேமரா எல்லாம் அவள் புறம் திரும்பியது. விஷ்ணுவே ஒரு நொடி அதிர்ந்து விட்டான் அவள் அழகில். “இவள் இவ்வளவு அழகா?”

 

இத்தனை நாள் பார்லரில் இருந்து வந்து அவளை மேலும் அழகு படுத்தி இருந்தார்கள். அதுவும் இன்று மணப்பெண்ணுக்குரிய அலங்காரம், விலை உயர்ந்த பட்டு சேலை, ஜொலிக்கும் வைரம் என்று ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தாள் சத்யா.

 

மனதுக்கு பிடித்தவனை மணக்க போகும் சந்தோஷமும், இத்தனை பேர் மத்தியில் நடந்து செல்லும் தடுமாற்றமும் சேர்ந்து அவள் முகத்தை சிவக்க செய்தது.

 

தூரத்தில் வரும் போதே அவள் கண்கள் விஷ்ணுவை தேடின. மணவறையில் அவனை கண்டதும் பல நாட்கள் கனவில் கண்டது இன்று நிஜமாவதை அவளால் நம்பவே முடிய வில்லை. ஒரு வித சந்தோசத்துடன் அவனை பார்த்தவள் தலை குனிந்து கொண்டாள்.

 

அவளையே பார்த்து கொண்டிருந்த விஷ்ணு, அவள் அழகில் கவர பட்டான். அவள் நளினத்தை கண்டு வியந்தான். ஒரு புது விதமான மனநிலையில் அவன் அவளை பார்க்கும் போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சத்யா.

 

அவள் பார்வையை கண்டு குழம்பி போனான் விஷ்ணு. தன்னுடைய மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவனை பார்த்தாள் சத்யா.

 

“இவ பார்வைக்கு என்ன அர்த்தம்?”, என்று அவன் யோசிக்கும் போதே அவள் அவன் அருகில் அமர வைக்க பட்டாள். மேலும் ஐயர் அவனை சடங்குகள் செய்ய சொல்லியதால் தன்னுடைய சிந்தனையை தள்ளி வைத்தான் விஷ்ணு.

 

ஊரில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த எல்லாரும் “இது சத்யா தானா?”, என்று கேட்டு வியந்து போனார்கள். மொத்த ஊருமே அங்கு கூடி விட்டது.

 

“அன்னம் உன் பையன் இவ்வளவு பணக்காரனா? ஆனா தம்பி நம்ம கிட்ட அப்படி பழகவே இல்லையே? சத்யா ரொம்ப கொடுத்து வச்சவ. எப்படி அப்சரஸ் மாதிரி அலங்கரிச்சிருக்காங்க?”, என்று ஊர் காரர்கள் பேசி கொண்டார்கள். இவருடைய ஜோடி பொருத்தத்தை கண்டு “கடவுளே என் பிள்ளைகளுக்கு எந்த கண்ணும் விழுந்துற கூடாது”, என்று வேண்டி கொண்டாள் அன்னலட்சுமி.

 

வடிவோ கண்களில் நீர் வழிய அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள். தன் பெண்ணுக்கு இப்படி ஒரு ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று அவள் கனவா கண்டாள்.

 

“எப்பா அருள், கொஞ்சம் சத்தம் வையேன்”, என்ற ஆறுமுகத்தின் குரலை கண்டு கொள்ளாமல் ஜான்சியின் முகத்தையே அசையாமல் பார்த்து கொண்டிருந்தான் அருள்.

 

அப்போது அவன் முதுகில் ஒரு அடி வைத்த செந்தில் “மாமா சத்தம் வைக்க சொல்றாங்க டா. நீ என்ன யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம் ஒன்னும் இல்ல அண்ணா. இதோ வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்தவனின் கண்கள் அதன் பின்னரும் மீண்டும் மீண்டும் ஜான்சியிடமே சென்றது.

 

தீ பற்றும் …….

 

Advertisement