Advertisement

அத்தியாயம் 13

 

நதியோர நாணல்களின்

மத்தியில் உன்

விரல் கோர்த்து

நடக்கும் போது

பற்றும் காதல் தீ!!!!!

 

மாலை ஆறு மணிக்கு கண் விழித்த விஷ்ணு, அவளை தேடி வெளியே வந்தான். கிட்சனில் காபி போட்டு கொண்டிருந்தாள். அவனிடம் ஒரு டம்பளரை கொடுத்தாள். சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டான் விஷ்ணு.

 

“இவன் ஒருத்தன் சிரிச்சே மயக்குவான். இப்பவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் இவன் கூட எப்படி இருக்க போறேனோ? கண்டிப்பா சீக்கிரம் உண்மை தெரிஞ்சிரும். அதுவும் நல்லது தான். என்னால எல்லாம் கண்ணு முன்னால அத்தானை வச்சிக்கிட்டு யாரோ மாதிரி எல்லாம் இருக்க முடியாது பா”, என்று மனதுக்குள்ளே பேசி கொண்டிருந்தாள் சத்யா.

 

“உன் பிரண்ட் எப்ப வருவாங்க? நாம ஏழரைக்கு கிளம்பணும்”, என்றான் விஷ்ணு.

 

“அவ வர எட்டு மணிக்கு மேல ஆகும். நான் கால் பண்ணி சொல்லிட்டேன். நாம சாப்பிட்டுட்டு கிளம்பலாம். நைட்டுக்கு தோசை ஊத்தவா?”

 

“நீ சுட்டு தந்தா நான் சாப்பிட்டுட்டே இருப்பேன். பேசாம இட்லி ஊத்திரு”

 

“உங்களுக்கு சுட்டு குடுக்குறதுல ஒரு கஷ்டமும் இல்லை அத்தான். முறைக்காதீங்க. இட்லியே ஊத்துறேன்”

 

“சரி திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா? நாம டெல்லில இருந்து திரும்பி வரும் போது எடுத்துட்டு போகணும்”

 

“ஹ்ம்ம் பண்ணிட்டேன் அத்தான். இப்ப டெல்லிக்கு வரதுக்கு எத்தனை டிரெஸ் எடுத்து வைக்கணும்?”

 

“அதெல்லாம் கஷ்ட படாத. அங்க உனக்கு வேணுங்குறதை வாங்கிக்கலாம்”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொன்னவள் இரண்டு டிரெஸ்ஸை மட்டும் எடுத்து வைத்தாள்.

 

அதன் பின்னர் காவ்யாவிடம் ஒரு போன் செய்து சொல்லி விட்டு வீட்டையும் பூட்டி விட்டு ஏர்போர்ட் சென்றனர்.

 

செக்கிங் முடிந்து பிளைட் ஏறி அமர்ந்ததும் கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் சத்யா.

 

அதை பார்த்தவன், “முதல் முறையா இப்ப தான  வர? அதான் ஒரு மாதிரி இருக்கும். என் கையை வேணும்னா பிடிச்சுக்கோ”, என்றான்.

 

“கரும்பு தின்ன கூலியா?”, என்று நினைத்தவள் அவன் கையை பற்றியது மட்டுமல்லாமல் அவன் தோளில் முகத்தை புதைத்து கொண்டாள்.

 

ஒரு புன்னகையை சிந்தியவன் “எல்லாம் பழகிரும் சத்யா”, என்றான். அதன் பின் அப்படியே இருந்தவள் சிறிது நேரம் கழித்து தான் விலகினாள்.

 

அவனுடனான பயணத்தை ரசித்தாள் சத்யா. அவளுக்கு தெரியாது என்று நினைத்து அவன் பொறுமையாக அனைத்தையும் சொல்லி கொடுத்தது அவளுக்கு பிடித்திருந்தது.

 

“நீ அனைத்தையும் கற்று கொடுப்பாயெனில், கற்ற அனைத்தையும் மறப்பேனே என்னவனே”, என அவள் மனது அவசர கவிதை எழுதியது.

 

டெல்லியில் இறங்கும் போது சத்யா உண்மையிலே தடுமாறினாள். அவளுக்கு அவனுடைய வீட்டில் என்ன வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்ததே. தன்னை எல்லாம் அவர்கள் மருமகளாக அங்கீகரிக்க மாட்டார்கள். இதனால் விஷ்ணுவுக்கும் மனது சங்கடமாகும். “தப்பு பண்ணிட்டேனா?”, என்று முதல் முறையாக யோசித்தாள்.

 

அவள் சிந்தனையை பார்த்த விஷ்ணு “என்ன டா?”, என்று கேட்டான். அந்த குரலும் அதில் இருந்த நேசமும் அவள் கண்களில் கண்ணீரை வர வைத்தது.

 

“எனக்கு உங்க வீட்டுக்கு பயமா இருக்கு”, என்று உண்மையை சொன்னாள் சத்யா.

 

“நான் இருக்கும் போது என்ன பயம்? அப்புறம் அவங்க என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுரு. அவங்க குணம் அப்படி தான். எனக்காக கண்டுக்காத”

 

“என்னை சொன்னா பரவால்ல. ஆனா உங்களையும் அத்தையையும் திட்டுவாங்க”

 

“ம்ம், அவங்க மனசை எப்பவுமே பாக்க மாட்டாங்க சத்யா. அப்படி பாத்துருந்தா என்னை பிள்ளையே இல்லைனு சொல்லுவாங்களா? உண்மையை சொல்லவா? அவங்க இது வரைக்கும் என் மேல பாசம் காட்டுனதே இல்லை. நான் அவங்க சொத்துக்கு வாரிசு. இந்த சொசைட்டில அவங்களுக்கு நான் பிள்ளை அவ்வளவு தான். அதனால அவங்க சொல்றதுக்கு நான் கஷ்ட பட மாட்டேன். அப்புறம் அம்மாவை குறை சொல்றதுக்கு நான் விட மாட்டேன். நீ தைரியமா இரு சரியா?”

 

“ஹ்ம்ம்”

 

“சிரி சத்யா. நீ சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கு. சோகமா இருந்தா நல்லாவே இல்லை”

 

“நானே வயித்துக்குள்ள பட்டாம் பூச்சு பறக்கிற பயத்துல இருக்கேன். இப்ப போல சிரிக்க சொல்றீங்களே?”

 

“சரி ரிலாக்சா இரு. இப்ப வீட்டுக்கு போகணுமா? இல்லை ஹோட்டல் போகவா? ரெப்ரஷ்  ஆகிட்டு வீட்டுக்கு போகலாம்”

 

“ஹ்ம்ம் ஹோட்டலுக்கே போங்க. இப்படியே போனா நல்லாவே இருக்காது”

 

“ஹ்ம்ம் சரி”, என்றவன் விமானத்தில் இருந்து இறங்கியதும் அவளை வெளியே அழைத்து வந்தான்.

 

அவர்களுக்காக வெளியே காத்திருந்தான் அலெக்ஸ். அவன் முன்பு போய் நின்றார்கள் இருவரும். “சத்யா இது என்னோட பிரண்ட் அலெக்ஸ்”, என்று அறிமுக படுத்தினான் விஷ்ணு.

 

“ஹாய்”, என்றாள் சத்யா.

 

“ஹலோ”, என்ற அலெக்ஸ் “இவங்க தான் நீ போனில் சொன்ன சத்யாவா?”, என்று கேட்டான்.

 

“அது மட்டும் இல்லை டா, என்னோட வருங்கால மனைவி”, என்று விஷ்ணு சொன்னதும்  அதிர்ச்சியான அலெக்ஸ் “அப்ப அந்த பொண்ணு ?”, என்று கேட்டான்.

 

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப ஹோட்டல் போ”

 

“ஹோட்டலுக்கா? வீட்டுக்கு போகலையா விஷ்ணு?”

 

“சத்யாவுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவை டா”

 

“சரி”, என்று சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான் அலெக்ஸ். விஷ்ணுவும் சத்யாவும் பின் சீட்டில் ஏறி அமர்ந்தார்கள்.

 

ஒரு நாள் விஷ்ணு தன்னையே மறந்த நிலைக்கு போன அந்த ஹோட்டல் முன்பு வண்டியை நிறுத்தினான் அலெக்ஸ். அந்த ஹோட்டலை பார்த்ததும் சத்யாவும், விஷ்ணுவும் தங்களுடைய மனதுக்குள் அன்றைய நிகழ்வுகளை படமாக ஓட்டி பார்த்தார்கள்.

 

“விஷ்ணுவுக்கு இந்த ஹோட்டல் பிடிக்கலையோ?”, என்று நினைத்து “வேற ஹோட்டல் போகவா டா?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“இல்லை டா, இங்கயே போகலாம்”, என்றான் விஷ்ணு.

 

உள்ளே மூவரும் போகும் போது அந்த சர்வர் அவர்கள் எதிரே வந்தான். அவனை பார்த்ததும் சத்யாவின் முகம் வியர்த்து போனது. “கடவுளே இவன் எதுவும் இப்ப உளறிர கூடாதே?”, என்று நினைத்தவள் அவனை பார்க்காதவாறு நின்றாள்.

 

ஆனால் இவர்கள் அருகில் வந்தவன் “சார் எப்படி இருக்கீங்க?”, என்று விஷ்ணுவை பார்த்து கேட்டான்.

 

“நல்லா இருக்கேன்”, என்று சிரித்த விஷ்ணு “நீங்க எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டான்.

 

இருவரும் பேசும் போது உதறல் எடுத்து அவளுக்கு. சர்வர் “மேடம்”, என்று ஆரம்பித்ததும் “அத்தான் எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு. ரூமுக்கு போவோமா?”, என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

 

“வா சத்யா போகலாம்”, என்று சொல்லி நகர்ந்து விட்டான் விஷ்ணு. ஒரு குழப்பமான பார்வையை அவர்களை நோக்கி வீசி விட்டு அந்த சர்வர் சென்று விட்டான்.

 

அலெக்ஸ் அவர்கள் பின்னே சென்று, “நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் ரெண்டு மணி நேரத்தில் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

உள்ளே வந்ததும் சத்யாவை அமர வைத்தான் விஷ்ணு. “எதாவது சாப்பிடுறியா சத்யா?”

 

“வேண்டாம் அத்தான். குளிச்சிட்டு சாப்பிட்டுக்குறேன். அப்புறம் ஒரு சந்தேகம்”. உங்க வீட்டுக்கு போகும் போது சேரி கட்டணுமா? இல்லை சுடிதார் போடவா?”

 

“நீ சுடிதாரே போட்டுக்கோ”

 

“ஹ்ம்ம் சரி, நான் குளிக்க போகட்டா?”

 

“ஹ்ம்ம்”, என்று அவன் சொன்னதும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து அவள் வந்ததும் அவன் குளிக்க சென்றான். பின்னர் இருவருக்கும் உணவை அறைக்கே கொண்டு வர சொன்னான். “கடவுளே அந்த சர்வர்  மட்டும் வர கூடாது”, என்று ஆயிரம் வேண்டுதல்களை வைத்தாள் சத்யா.

 

வேறு ஒருவன் தான் உணவை கொடுத்து விட்டு சென்றான். உணவு வந்ததும் அதை உண்டவர்கள் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அலெக்ஸ் வந்ததும், காரில் ஏறி சென்றார்கள். வீட்டின் முன் காரை நிறுத்தியதும் “இது தான் இனி நம்ம வீடு, வா சத்யா”, என்றான் விஷ்ணு.

 

ஒரு வித கலவரமாக முகத்துடன் தலையை திருப்பி பார்த்தாள் சத்யா. ஒரு மாளிகை போன்ற தோற்றத்துடன் இருந்த அவனுடைய வீடு அவளுக்கு அச்சத்தை கொடுத்தது. பயத்துடன் இறங்கி நின்றாள். என்ன நினைத்தானோ அவள் கைகளை பற்றி கொண்டான். அது ஜில்லிட்டு போய் இருந்தது. பற்றிய கைகளை விடாமல் உள்ளே அழைத்து சென்றான் விஷ்ணு.

 

அவன் உள்ளே சென்றதும் அவனை பார்த்த பிரதாப், “ஏய் விஷ்ணு வா வா. வரேன்னு சொல்லவே இல்லை. புவி இங்க வா. யார் வந்திருக்கானு பாரு”, என்று சொன்னவர் அப்போது தான் அவன் கை பிடியில் இருந்த சத்யாவை பார்த்தார். அவர் புருவம் குழப்பத்துடன் மேலேறியது.

 

“என்ன பிரதாப்?”, என்ற படியே வந்த புவனா “விஷ்ணு வந்துட்டியா”, என்று சந்தோசத்துடன் அங்கு வந்தாள். அவளும் சத்யாவை பார்த்து புருவம் உயர்த்தியவள்  “யாரு விஷ்ணு இது?”, என்று நேரடியாக கேட்டாள். சத்யாவோ ஏற்கனவே வீட்டை பார்த்து நடுங்கி கொண்டிருந்தவள் இப்போது அவர்களை பார்த்து பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.

 

“அம்மா இது சத்யா”, என்றான் விஷ்ணு.

 

“சத்யான்னா பிரைம் மினிஸ்டரா?”, என்று நக்கலாக கேட்டாள் புவனா. மற்றொரு ரம்யா போல் இருந்த சத்யாவை அவளுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.

 

“மாம்”, என்று அழைத்து தன்னுடைய கோபத்தை காட்டியவன் “இது என்னோட அம்மாவுடைய அண்ணன் பொண்ணு. அது மட்டுமில்லாம இவளை தான் நான் கல்யாணம் செஞ்சிக்க போறேன்’, என்று சொல்லி அவர்கள் தலையில் இடியை தூக்கி போட்டான்.

 

“விஷ்ணு”, என்று அலறினாள் புவனா. “புவி அமைதியா இரு. விஷ்ணு நீ என்ன பேசுறேன்னு புரியுதா? இங்க உனக்கு பொண்ணு கொடுக்க வரிசையில் நிக்குறாங்க”, என்றார் பிரதாப்.

 

“டேட், நீங்க காட்டுற பொண்ணு எனக்கு பிடிக்கலை. அவங்க குணம் எதுவும் எனக்கு பிடிக்கலை. எனக்கு சத்யாவை பிடிச்சிருக்கு. பழகுன கொஞ்ச நாள்ல, எனக்கு அவ குணம் பிடிச்சிருக்கு. நான் அவளை லவ் பண்றேன். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க”, என்ற வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சத்யா.

 

“கண்டிப்பா நீ இவளை கல்யாணம் பண்றதை என்னால ஏத்துக்க முடியாது விஷ்ணு. அந்த ரம்யாவை இழுத்துட்டு வருவேன்னு பாத்தா, இப்ப இவளை. சே, எல்லாம் என் வாயால தான். உனக்கு அம்மா இருக்குன்னு சொல்லி.. பணத்துக்காக இப்ப இவளை உன் தலையில கட்டுறாளா உன்னை பெத்தவ? அவங்க சொல்றதுக்கு நீயும் மண்டையை ஆட்டிட்டு வந்துருக்க. நீ பணத்துக்காக தான் அவ வயித்துல பிறந்துருக்க விஷ்ணு மறந்துறாதே”

 

“மாம், ஸ்டாப் இட். வார்த்தையை யோசிச்சு பேசுங்க. எனக்கு சத்யாவை பிடிச்சிருக்குனு சொன்னப்ப அம்மா தான் உங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வர சொல்லி அனுப்புனாங்க. அவங்களை போய் தப்பு சொல்றீங்க? நான் ஏற்கனவே நீங்க சொல்ற பொண்ணை கட்டிக்க கூடாதுனு தான் இருந்தேன். சத்யாவை பாத்ததும் முடிவு பண்ணிட்டேன். இப்ப நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க போறீங்களா? இல்லையா?”

 

“இங்க பாரு விஷ்ணு. குடும்ப கவுரவம்னு ஒன்னு இருக்கு. கண்டிப்பா நானும் ஒத்துக்க மாட்டேன். புவனாவும் ஒத்துக்க மாட்டாள்”, என்றார் பிரதாப்.

 

“அப்ப நான் வீட்டை விட்டு வெளிய போய் தான் கல்யாணம் செஞ்சிக்க வேண்டியதா இருக்கும். அப்பவும் உங்க கவுரவம் தான் போகும். யோசிச்சு முடிவு பண்ணுங்க. இப்ப நீங்களா ஏற்பாடு பண்ணா உங்க மரியாதை மிச்சமிருக்கும். சத்யா அழகா இருக்கா. லவ் மேரேஜ்னு எல்லார் கிட்டயும் நீங்க ஈஸியா சொல்லிக்கலாம். அப்புறம் சத்யாவுடைய ஸ்டேட்டஸ் இங்க யாருக்கும் தெரியாது. அப்புறம் என்ன?”

 

“வீட்டை விட்டு போய் விடுவேன்”, என்று அவன் சொன்ன பிறகும் அவர்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பார்களா என்ன?

 

“இன்னும் பத்து நாளில் கல்யாணம். புவனா வேற எதுவும் பேசாத. உள்ள வா”, என்று சொல்லி அவளை அழைத்து சென்று விட்டார் பிரதாப்.

 

அவர்கள் உள்ளே சென்ற பிறகு தான் மூவரும் மூச்சு விட்டார்கள் இருவரும். “டேய் பத்து நாளில் கல்யாணம்னு சொல்றாங்க. நீ அமைதியா கேட்டுட்டு இருக்க”, என்றான் அலெக்ஸ்.

 

“டேய் அவங்க கல்யாணத்துக்கு ஒத்து கிட்டதே பெருசு. இதுல அதையும் எதுத்து பேச சொல்றியா? ஆனா அம்மா ஊருல வச்சு கல்யாணம் செய்யணும்னு நினைச்சாங்க. அதான் யோசிக்கிறேன்”

 

“அவங்க எல்லாரையும் இங்க வர வச்சிரலாம் விஷ்ணு”

 

“குட் ஐடியா டா”, என்ற விஷ்ணு “ரெண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க. அங்க போய் அம்மா கிட்ட பேசுவோம்”, என்று அழைத்தான்.

 

“எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்கு டா. நீ பிளான் பண்ணி வை, நான் சாயங்காலம் வரேன்”, என்று சொல்லி விட்டு அலெக்ஸ் சென்று விட்டான்.

 

“நீ உள்ள வா சத்யா”, என்று அழைத்து போனான். அவன் பின்னே சென்றாள் சத்யா.

 

அறைக்குள் சென்றதும் செந்தில் நம்பருக்கு அழைத்தான்  விஷ்ணு. அதை எடுத்து “சொல்லுங்க மச்சான்” என்றான் செந்தில்.

 

அவனிடம் கல்யாண விஷத்தை சொன்னதும் அனைத்தையும் கேட்டு விட்டு “நான் அத்தை கிட்ட சொல்லிட்டு அவங்களை உங்க கிட்ட பேச சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்தான்.

 

சத்யாவோ அந்த அறையையே நோட்டம் விட்டு கொண்டிருந்தாள். அவளுடைய மொத்த வீட்டின் அளவை ஒரு அறையே ஆக்கிரமித்திருந்தது. அங்கேயே கட்டில், மெத்தை, சோபா என்று அனைத்து வசதியையும் கொண்டிருந்தது அந்த அறை. அவளை பார்த்த விஷ்ணு “என்ன அப்படி பாக்குற? ரூம் பிடிச்சிருக்கா?”, என்று கேட்டான். அவனை பார்த்தவள் “பிடிக்கலை” என்னும் விதமாய் தலையை ஆட்டினாள்.

 

புருவம் உயர்த்தியவன் “ஏன்?”, என்று கேட்டான். “இது பாக்க வீடு மாதிரியே இல்லை. ஹோட்டல் மாதிரி இருக்கு. எனக்கு பிடிக்கவே இல்லை”

 

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் நின்றான் விஷ்ணு. அப்போது  அவன் போன் ஒலித்தது. செந்தில் தான் அழைத்தான். “சொல்லுங்க செந்தில்”, என்றான் விஷ்ணு.

 

“அத்தை உங்க கிட்ட பேசணுமாம். அவங்க கிட்ட கொடுக்குறேன்”, என்றவன் அன்னத்திடம் போனை கொடுத்தான்.

 

“பத்திரமா போய்ட்டியா ராசா?”, என்று கேட்டாள் அன்னலட்சுமி. “நல்ல படியா வந்துட்டோமா”

 

“பிரியாவை பாத்துக்கோ பா. அப்புறம் செந்தில் விசயத்தை சொன்னான். அவுகளுக்கும் உன் கல்யாணத்தை விமர்சையா செஞ்சு பாக்கணும்னு ஏக்கம் இருக்கும். அவுக கல்யாணத்துக்கு ஒத்து கிட்டதே பெருசு. சந்தோசமா பண்ணிக்கோ ஐயா”

 

“சரி மா நான் என்ன கேக்க வந்தேன்னா? நீங்க எப்ப கிளம்புறீங்க? நான் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யணும். நீங்க பிளைட்ல வருவீங்களானு தெரியாது. இல்லைன்னா ட்ரைன்ல டிக்கட் போடணும். அதனால தான் கேட்டேன்? ரெண்டு நாளுல நீங்க கிளம்புனா தான் இங்க வந்து சேந்து அப்புறம் கல்யாணத்துக்கு துணி எடுக்க எல்லாம் வசதியா இருக்கும்”

 

ஒரு நொடி அமைதியாக இருந்த அன்னம் “நாங்க யாரும் வரலைப்பா” என்றாள்.

 

“அம்மா”

 

“ஆமா விஷ்ணு நாங்க வரலை”

 

“எதுக்கு மா? என் மேல எதுவும் கோபமா? நீங்க இல்லாம எப்படி மா கல்யாணம் பண்ண?”

 

“ஐயா ராசா வெசன படாத கண்ணு. உன் கல்யாணத்தை பாக்கணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனா பாரு இது உன்னோட அம்மா அப்பா ஏற்பாடு செஞ்சிருக்குற கல்யாணம். இப்ப நாங்க அங்க வந்தோம்னு வை அவங்க மனசுல கொஞ்சம் சங்கடம் வரும். நீயும் எங்க ரெண்டு பேருக்காகவும் பாக்கணும். நீ கல்யாணத்தை முடிச்சிட்டு பிரியாவை கூட்டிட்டு இங்க வா. இங்க நம்ம சொந்தகாரங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து கொடுத்துறலாம்”

 

“ஆனாலும்”

 

“பரவால்ல பா பிரியா  தான் கவலை படுவா. இங்க வந்து உங்களை ஜோடியா நிக்க வச்சு பாத்தா எங்களுக்கு சந்தோசமா ஆகிரும். நீ கவலை படாம இரு”

 

“சரி மா நான் சத்யா கிட்ட போனை கொடுக்குறேன்”, என்று சொல்லி அவளிடம் கொடுத்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

அன்னத்திடம் பேசி விட்டு அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள் சத்யா. அப்போது குளித்து முடித்து தலையை துவட்டி படியே வெளியே வந்தான் விஷ்ணு.

 

குளித்ததால் அவனிடம் இருந்து வந்த நறுமணம் அவளை பழைய விஷயங்களை என்ன வைத்தது. “எப்ப என்ன நினைச்சிட்டு இருக்கேன் பாரு?”, என்று தன்னையே திட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் சத்யா.

 

“அம்மா கிட்ட பேசிட்டியா சத்யா?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“சரி வா உன்னோட ரூம் காட்டுறேன்”, என்று சொல்லி அவளுக்கு பக்கத்து அறையை காண்பித்தான். தன்னுடைய பேகை எடுத்து கொண்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.

 

“கல்யாணம் வரைக்கும் இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ சத்யா. குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. லஞ்ச் க்கு பாக்கலாம். அப்புறம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அம்மா கண்ணுல இருந்து கொஞ்சம் விலகியே இரு. என் கூட இருக்கும் போது எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்புறம் எதாவது பேசிட்டா நீ கஷ்ட படுவ”

 

“ரூமை விட்டு வெளிய போக மாட்டேன் போதுமா?”

 

“ஹ்ம்ம் சரி நீ ரெஸ்ட் எடு. வேலைகாரங்க கிட்ட சொல்லி எதாவது சாப்பிட கொடுக்க சொல்றேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

கதவை பூட்டி விட்டு படுத்தாள். தூக்கம் தான் வருவேனா என்று அடம் பிடித்தது. சிறிது நேரத்தில் கதவு  தட்ட பட்டது. எழுந்து கதவை திறந்தாள். வேலைக்காரி ஜூஸ் டம்பளருடன் நின்றாள். அதை குடித்து முடித்து படுத்தவள் சிறிது நேரத்தில் நன்கு உறங்கி விட்டாள்.

 

மறுபடியும் கதவை தட்டும் சத்தத்தில் கண் திறந்தவள் மணியை பார்த்தாள். அது இரண்டு என காட்டியது. அவசரமாக கதவை திறந்தாள். அங்கே விஷ்ணு நின்றிருந்தான்.

 

“மேடம் நல்ல தூக்கமா? சாப்பிட போகலாமா?”

 

“முகம் கழுவிட்டு வரேன் அத்தான். ஒரு நிமிஷம்”, என்று சொல்லி விட்டு முகம் கழுவி வந்தாள். ஜோடியாக நடந்து வரும் இருவரையும் பார்த்து கடுப்புடன் அமர்ந்திருந்தாள் புவனா.

 

“ஹாய் மாம்”, என்று சொல்லிய படியே அவள் அருகே போய் அமர்ந்த விஷ்ணு தனக்கு மற்றொரு புறம் சத்யாவை அமர சொன்னான்.

 

அங்கு வந்த வேலைக்காரியிடம் “விஷ்ணுக்கு சாப்பாடு போடுங்க. நான் ரூமுக்கு போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் புவனா.

 

“அப்பாடி, நிம்மதியா சாப்பிடலாம்”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“சிறு வயதில் இருந்து இவன் இப்படி பாசமே இல்லாத வாழ்க்கையை தான் வாழந்தானா?”, என்று நினைத்து பார்த்த சத்யாவுக்கு கஷ்டமாக இருந்தது.

 

“நாங்களே பரிமாறிகிறோம்”, என்று சொல்லி வேலைக்காரியை அனுப்பி விட்டான் விஷ்ணு. அவளுக்கும் அவனே பரிமாறினான். அவன் பரிமாறியதால் உணவின் சுவை மேலும் அதிகமானது போல இருந்தது சத்யாவுக்கு.

 

சாப்பிட்டு முடித்ததும் “ரெஸ்ட் எடு சத்யா. டிவி பாக்கணும்னா என்னோட ரூம்க்கு வா. சாயங்காலம் ஷாப்பிங் போகலாம்”

 

“அவனோட ரூம்கா?”, என்று நினைத்தவள்  “ஹ்ம்ம் நான் தூங்கவே செய்றேன்”, என்று சொல்லி தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

சொன்ன படியே மாலை அவளை வெளியே அழைத்து சென்றான். ஒரு பெரிய கடைக்கு அவளை அழைத்து சென்றவன் எதையும் வாங்க சொல்லாமல் ஒரு ரெஸ்டாரண்டில் போய் அமர்ந்தான்.

 

அவனருகே அவள் அமர்ந்ததும் இரண்டு காபி ஆர்டர் செய்தவனிடம் “நாம எதுவும் வாங்கலையா அத்தான்?”, என்று கேட்டாள் சத்யா.

 

“ஹ்ம்ம் வாங்கலாம். உனக்கு தனியா ஷாப்பிங் செய்ய கஷ்டமா இருக்கும்ல? அதனால என்னோட பிரண்ட் ரம்யாவை வர சொல்லிருக்கேன். அலெக்ஸ் அவளை கூட்டிட்டு வருவான்”

 

“நீங்க மூணு பேரும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸா?”

 

“அப்படி எல்லாம் இல்லை சத்யா. எனக்கு பிரண்ட்ஸ் கிடையாது. என்னோட பர்ஸ்ட் பிரண்ட் ரம்யா தான். அவ நம்ம ஆபிஸ்ல தான் ஒர்க் பண்றா. அப்ப தான் அவளை தெரியும். அவளோட மாமா பையன் தான் அலெக்ஸ். ரெண்டு பேரும் லவ் பண்றாங்க”

 

“என்னது லவ்வா? கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா?”

 

“ஹா ஹா நீ வேற?  அவங்க கிட்ட கேட்டுறாதே ? அவ லவ் பண்றதை என்கிட்ட ஒத்துக்கிட்டா. ஆனா அவன் பண்ணலைன்னு சொல்லுவான். ஆனா அவனுக்கும் பிடிக்கும். பட் அவன் அதை லவ்னு உணரலை போல? சோ ரம்யா வெயிட் பண்றா. நீ எதுவும் கேட்டுக்காத”

 

“ஹ்ம்ம் சரி”

 

இருவரும் பேசி கொண்டிருக்கும் போது “ஹாய்”, என்று சொல்லிய படியே ரம்யாவும் அலெக்ஸும் வந்து விட்டார்கள். கூடவே மற்றொரு பெண்ணும் இருந்தாள்.

 

“ஏய் ஜான்சி? எப்படி இருக்க? நீ வரதா இவன் சொல்லவே இல்லையே”, என்றான் விஷ்ணு.

 

“போங்க விஷ்ணு அண்ணா. உங்க கூட சண்டை. என்னை மட்டும் நீங்க கூப்பிடலைல?, என்று கோபித்து கொண்டாள் ஜான்சி.

 

”ஏய் உனக்கு காலேஜ் இருக்கும்னு தான் கூப்பிடலை. அதான் இப்ப வந்துட்டியே. கோபமெல்லாம் படாதீங்க மேடம்”, என்று சிரித்த விஷ்ணு “சத்யா, ரம்யா வை பத்தி சொல்லிருக்கேன். இது ஜான்சி. எனக்கும் அலெக்ஸுக்கும் செல்ல தங்கச்சி. அப்புறம் ரம்யா, ஜான்சி இது சத்யா. இன்னும்  பத்து நாளில் என்னை கல்யாணம் செஞ்சு கஷ்ட பட போறவள்”, என்று அறிமுக படுத்தினான்.

 

“ஹாய் சத்யா”, என்று ரம்யாவும் “ஹாய் அண்ணி”, என்று ஜான்சியும் அவளிடம் பேசினார்கள். சிறிது நேரத்தில் அங்கே அனைவரும்  சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் அமைதியாக இருந்த சத்யா கூட இப்போது இவர்களுக்கு சரிசமமாக பேச ஆரம்பித்து விட்டாள்.

 

“இந்த வாயாடி நம்ம வீட்ல மட்டும் தான் ஊமையா இருக்கு போல?”, என்று நினைத்து கொண்டான் விஷ்ணு. “ஷாப்பிங் செய்யலாமா விஷ்ணு?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“ஹ்ம்ம் சரி டா. ஏய் எல்லாரும் வாங்க. உங்களுக்கு என்ன வேணுமோ எல்லாம் எடுத்துக்கோங்க. அப்புறம் சத்யா, நீ டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலை. சோ அதிகமாவே எடுத்துக்கோ. அப்புறம் கல்யாண புடவை தாலி எல்லாம் அம்மா அப்பா எடுத்துருவாங்க. மித்தது எல்லாம் நீ எடுத்துக்கோ”, என்றான்.

 

“ஹ்ம்ம் சரி”, என்று அவள் சொன்னதும் பெண்கள் மூவரும் அந்த கடையை தலைகீழாக திருப்ப ஆரம்பித்தார்கள்.

 

அதே நேரம் விஷ்ணுவை தனியே தள்ளி கொண்டு சென்ற அலெக்ஸ் “என்ன தான் டா நடக்குது?”, என்று கேட்டான். சத்யாவை கல்யாணம் செய்யும் உண்மை காரணத்தை விஷ்ணு சொன்னதும் “உன்னோட தேவைக்கு அவளை யூஸ் பண்றது தப்பு டா. நீ அவசர பட்டுடியோன்னு தோணுது. நாளைக்கு உன்னோட லவ்வர் கிடைச்ச உடனே சத்யாவை எப்படி வீட்டை விட்டு வெளிய போ ன்னு சொல்லுவ?”, என்று கேட்டான்.

 

“எல்லாத்துக்கும் முடிவா எனக்கு இந்த வழி தான் டா கிடைச்சது. சத்யாக்கு நாம நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கலாம் டா. அவளை அனாதையா எல்லாம் விட மாட்டேன். வா எனக்கு டிரெஸ் எல்லாம் வாங்கணும்”, என்று அழைத்து சென்றான். குழப்பத்துடன் அவன் பின்னே சென்றான் அலெக்ஸ்.

 

ஆனால் கவலை பட வேண்டிய நாயகியே உல்லாசமாக தன்னுடைய உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தாள். விஷ்ணுவின் காதல் விவகாரம் எதுவும் ரம்யா மற்றும் ஜான்சிக்கு தெரியாததால் அவர்கள் விஷ்ணு மற்றும் சத்யாவை காதலர்கள் என்று நினைத்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

 

ஒரு ஐந்து செட் சேலை மற்றும் ஐந்து செட் சுடிதார் என்று நிறுத்தி கொண்ட சத்யா, ரம்யா மற்றும் ஜான்சிக்கு உடை எடுத்தாள். அப்போது அவர்கள் அருகே வந்தனர் விஷ்ணுவும் அலெக்ஸும்.

 

“அத்தான் எங்க எல்லாருக்கும் எடுத்துட்டோம்”, என்று சிரித்தாள் சத்யா.

 

“ஹ்ம்ம் சரி சத்யா. அப்புறம் ஊருல இருக்குற எல்லாருக்கும் ஒரு செட் டிரஸ் எடு. அம்மாக்குக்கு மட்டும் கொஞ்சம் அதிகமா. அவங்களுக்கு நான் எதுவுமே வாங்கி கொடுக்கலை”

 

“சென்னைல போய் அவங்களுக்கு எடுத்துக்கலாமா? இங்க இருந்து தூக்கிட்டு போகணுமா அத்தான்?”

 

“அங்க போய் வாங்க நேரம் கிடைக்குமோ என்னவோ? இங்கயே வாங்கிரு. அப்புறம் உனக்கு ரிசப்ஷன் சேலை எடுக்கலையா?”

 

“இல்லை. அது உங்க டிரஸ்க்கு மேட்சா தான எடுக்க முடியும்?”

 

“ஓ ஆமால்ல? ரிசப்ஷனுக்கு சேலை வேண்டாம் என்னோட ஷெர்வானிக்கு பொருத்தமா உனக்கு எடுக்கலாம். நீ மித்த டிரெஸ் எடுத்து முடி. கடைசியா அதை எடுப்போம். ரம்யா ஹெல்ப் பண்ணு”

 

“சரிங்க பாஸ். நாங்க பாத்துக்குறோம்”, என்று சிரித்தாள் ரம்யா. அதன் பின் அனைவருக்கும் எடுத்து முடித்ததும் சத்யாவுக்கு விலை உயர்ந்ததாக மூன்று உடைகளை எடுத்து கொடுத்தான் விஷ்ணு. மேலும் அவளை வீட்டுக்கு போட தேவையான உடைகளையும் மறக்காமல் வாங்க வைத்தான்.

 

இது வரை இவ்வளவு அதிகமான விலையில் எல்லாம் சத்யா உடை எடுத்ததில்லை என்பதால் மனதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் அவனுக்கு இருக்கும் பணத்தில் கஞ்ச தனமாக தான் உடை எடுத்தாலும் அது தவறாக தெரியும் என்பதால் வாயை மூடி கொண்டாள். மேலும் அவன் உடை எடுத்து கொடுக்கும் போது அதை மறுக்க தான் அவளுக்கு தோன்றுமா?

 

ரம்யா, ஜான்சி இருவரையும் “இந்த புடவையை பாருங்க, இதோ வரேன்”, என்று சொல்லி கழட்டி விட்டு விட்டு உள்ளாடைகளையும் வாங்கி கொண்டாள்

 

அதன் பின்னர் நகை கடைக்கு அழைத்து சென்ற விஷ்ணு, அவளை தங்கத்தில் குளிப்பாட்டும் வேளையில் இறங்கினான். மூன்று பவுனில் கழுத்தில் செயின் ஒரு பவுனில் கம்மல், ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் கவரிங் வளையல், காலில் வெள்ளி கொலுசு. இது தான் சத்யா அணிந்திருக்கும் நகைகள்.

 

வீட்டில் அவள் அம்மா திருமணத்துக்கு முப்பது பவுன் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அவ்வளவே. ஆனால் இங்கு விஷ்ணு எடுத்து காட்டிய நகைகளோ அத்தனையும் அளவில் பெரியவை. உடை எடுத்தது ஒன்றும் தெரியாவிட்டாலும் நகைகளை பார்க்கும் போது அவன் உயரம் புரிந்தது.

 

அவனுக்கு தான் இணை இல்லை என்ற உண்மை அப்பட்டமாக விளங்கியது அவளுக்கு. “என்னோட சுயநலத்துனால அவன் வாழ்க்கையை அழிக்கிறேனா?”, என்ற கவலை பிறந்தது.

 

அவள் “வேண்டாம் வேண்டாம்”, என்று சொல்ல சொல்ல பல விதமான நகைகளை அவளுக்கென்று எடுத்து வைத்தான் விஷ்ணு. “இதெல்லாம் கல்யாணத்துக்கு போட்டுக்கோ. அது வரைக்கும் சிம்பிளா போட”, என்று அவன் எடுத்து கொடுத்தது மட்டும் பத்து பவுன்.

 

“வேண்டாம் வேண்டாம்”, என்று எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை. “ஒரு நாளில் இவ்வளவு செலவு செய்பவன் எவ்வளவு பணக்காரனாக இருப்பான்”, என்று எண்ணம் வந்து கொஞ்சம் மனதில் நெருடலை உண்டாக்கியது.

 

அது போக ரம்யா மற்றும் ஜான்சியை நகைகள் எடுக்க சொன்னான். அவர்கள் மறுத்து விட்டார்கள். கடைசியாக அன்னலட்சுமி மற்றும் தேன்மொழிக்கு வாங்கினான். அதை சத்யாவையே வாங்க சொன்னான்.அன்னலட்சுமியின் கழுத்துக்கு செயின், கைக்கு வளையல் என்று வாங்கியவள் காதுக்கு வைர கல் பதித்த கம்மலை வாங்கினாள் அவன் சொல் படி.  பின்னர் இவளுக்கு எடுத்த நகையின் அளவு தேன்மொழிக்கும் வாங்க சொன்னான்.

 

தேன்மொழிக்கும் அவ்வளவு வாங்கியதும் கொஞ்சம் மனது சமன் பட்டது சத்யாவுக்கு.வெளியே வரும் போது ஏதோ மொத்த கடையையும் அள்ளி கொண்டு வந்ததை போல உணர்ந்தாள் சத்யா. அதன் பின்னர் அனைவரும் ஹோட்டல் சென்று அரட்டை அடித்த படியே உணவை உண்டார்கள். “ஜான்சி நாளைக்கு உனக்கு லீவா ?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“ஆமா அண்ணா, எக்ஸாம் முடிஞ்சிருச்சு. ஒன் மந்த லீவ் தான். இந்த அண்ணா தான் ரெஸ்ட் எடுக்க விடாம எதாவது கிளாஸ் போன்னு டார்ச்சல் பண்றான்”, என்று அலெக்ஸை பார்த்து முறைத்த படியே சொன்னாள்.

 

“படிக்கணும்னா உனக்கு கறி வலிக்குமே”, என்று சிரித்தான் அலெக்ஸ்.

 

“அவன் கிடக்கிறான். ஒரு வருஷத்தில் டாக்டரா ஆக போற மேடம் வேற எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிச்சு என்ன செய்ய போறீங்க? அப்புறம், நீ என்ன பண்ற? என் கார்டை வச்சிக்கோ. அப்புறம் டிரைவரை அனுப்புறேன். சத்யாவை பியூட்டி பார்லர் கூட்டிட்டு போற? அப்புறம் வேற எதாவது வாங்கணும்னாலும் வாங்குங்க. ஓகே வா?”

 

“கண்டிப்பா அண்ணா? ஊரு சுத்த கசக்குமா என்ன? அண்ணி நாளைக்கு நம்ம டே. ரம்யா நீ வரியா?”

 

“வரலாம்னு ஆசை எல்லாம் இருக்கு. ஆனா எங்க எம்டி சரியான லூசு. லீவு தர மாட்டான்”, என்று விஷ்ணுவை பார்த்த படியே சொன்னாள் ரம்யா.

 

“நீ என்னை என்ன சொன்னாலும் நான் கண்டிப்பா லீவ் தர மாட்டேன். ஆபிஸ் போயே ரொம்ப நாள் ஆச்சு. நீ வந்தா தான் என்ன நடந்துகிட்டு இருக்குன்னே எனக்கு புரியும்?”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

அதன் பின்னர் ரம்யா, ஜான்சி, அலெக்ஸ் மூவரும் கிளம்பியதும் விஷ்ணுவும், சத்யாவும் வீட்டுக்கு வந்தார்கள். அமைதியாக காருக்குள் அமர்ந்திருந்த சத்யாவை பார்த்தவன் “என்ன ஆச்சு சத்யா? என்ன யோசனை?”, என்று கேட்டான்.

 

“இல்லை செலவு ரொம்ப அதிகமா இருந்தது அதான். நகை எல்லாம் ஊருல அம்மா கிட்ட இருக்கு. அதை எடுத்து வந்திருந்தா இவ்வளவு வாங்கிருக்க வேண்டாம்ல?”

 

“ஏய் லூசு, இது நான் உனக்காக வாங்கி கொடுத்தது. அப்புறம் இதெல்லாம் ஒரு செலவே இல்லை. நாம ஒன்னும் தினமும் நகை கடைக்கு போய் கிட்டு இருக்க போறது இல்லையே. அப்புறம் நாளைக்கு கடைக்கு என்னால வர முடியாது. நாளான்னைக்கு வேற ஒரு கடைக்கு போகணும். தேன்மொழிக்கு வைர நகை வாங்கணும். உனக்கும்….”, என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே ”ஐயோ அம்மா வைரம் எனக்கா? வேண்டாம் அத்தான். நீங்க உங்க தங்கச்சிக்கு மட்டும் வாங்குங்க”, என்று அலறினாள் சத்யா.

 

“உனக்கு வாங்கலைன்னு சொல்ல வந்தேன்”, என்று சொல்லி அவளுக்கு பல்ப் கொடுத்தான் விஷ்ணு. அவனை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் சத்யா.

 

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “உனக்கு வைர நகையை அம்மா கொடுப்பாங்க சத்யா. அதனால தான் உனக்கு வாங்கலை. அவங்க மருமகளுக்காக நிறைய வாங்கி வச்சிருக்காங்க”, என்றான்.

 

“உங்க அம்மா முறைக்கிறதுல என்னை எரிக்காம இருக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க நகை தருவாங்கன்னு சொல்றீங்க? எனக்கு வேண்டாம் பா”

 

“அவங்க கோபம் மெதுவா தான் குறையும். பட் அவங்க ஸ்டேட்டஸ் காப்பாத்தவாது கல்யாணம் அன்னைக்கு உன்னை அழகா அலங்கரிக்கணும்னு நினைப்பாங்க. நீ வேணும்னா பாரு. என்னோட கெஸ் சரியா தான் இருக்கும்”

 

விஷ்ணு சொன்ன படி தான் நடந்தது. அடுத்த நாள் விடிந்ததும் எழுந்து குளித்து முடித்து விட்டு “என்ன செய்யலாம்”, என்று யோசித்த படியே அமர்ந்திருந்தாள் சத்யா. அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டதும் விஷ்ணு தான் என்று நினைத்து கதவை திறந்தாள். விஷ்ணு தான் நின்றிருந்தான்.

 

அவனை பார்த்து புன்னகைத்தவள் “ஆபிஸ் கிளம்பீட்டிங்களா அத்தான்?”, என்று கேட்டாள்.

 

“ஆமா சத்யா. அப்புறம் ஒரு விஷயம்”

 

“என்ன?”

 

“பார்லர் போக சொன்னேன்ல?”

 

“ஆமா போனும். ஜான்சி எப்ப வருவா?”

 

“அதுல தான் ஒரு சிக்கல்”

 

“என்ன அவ வரலைன்னு சொல்லிட்டாளா?”

 

“இல்லை நான் தான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன்”

 

“சரி அத்தான் பார்லர் எல்லாம் எனக்கே போக பிடிக்கலை”

 

“அது இல்லை மா. பார்லர் ஆளுங்களை அம்மா வீட்டுக்கே வர சொல்லிருக்காங்க”

 

“என்னது உங்க அம்மாவா?”

 

“ஹ்ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்களாம். நீ சாப்பிட்டு ரெடியா இருப்பியாம்”

 

“உங்க அம்மா கூட எல்லாம் என்னால மல்லு கட்ட முடியாது அத்தான். ப்ளீஸ் என்னை விட்டுருங்க”

 

“ஹா ஹா இதுக்கெல்லாம் விஷ்ணு பொண்டாட்டி பயப்படலாமா?”

 

அந்த வார்த்தை அப்படியே சக்கரை தண்ணீராக இனித்தது சத்யாவுக்கு.

 

“பயப்படாத, அவங்க உன்னை எதுவும் சொல்ல கூடாதுன்னு நான் மிரட்டிட்டு போயிறேன் என்ன?”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“ம்ம். அப்புறம் அத்தான், நேத்து வாங்குன நகை என்கிட்டயே இருக்கு. எங்க வைக்க? நேத்து கேக்குறதுக்குள்ள நீங்க போய்ட்டிங்க?”

 

“லூசு சத்யா.  அம்மா, தேன்மொழிக்கு வாங்கினதை நான் பேக் பண்ணிட்டேன். அப்புறம் உன்கிட்ட இருக்குறது உன்னோட நகை. அதை நீயே வச்சிக்கோ. நீ இந்த வீட்டை விட்டு போகும் போது கூட அதை நீயே கொண்டு போயிரு”

 

“ஆக மொத்தம் எப்ப என்னை விரட்டலாம்ன்னு தான காத்துட்டு இருக்கீங்க?”

 

“ஏய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் மா. உடனே கோப படாத. சரி நான் ஆபிஸ் போகணும். நீ கேர்புல்லா இரு. அம்மா நினைச்சு பயப்படாத. அவசரம்னா என் நம்பருக்கு கூப்பிடு சரியா?”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சிரித்தாள் சத்யா. அவள் மலர்ந்த முகத்தை பார்த்தவன் நிம்மதியாக சென்றான். பின்னர் அறைக்கு வேலைக்காரி எடுத்து வந்த உணவை உண்டு விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சத்யா. அப்போது தான் அவளுக்கு யோசனையே வந்தது.

 

“கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி பார்லர் போனா போதாதா? இன்னைக்கே போனா கல்யாணம் அப்ப எப்படி எபெக்ட் இருக்கும்?”, என்று அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்தவள் திகைத்தாள். அங்கே நின்றது புவனா.

 

தீ பற்றும் …….

 

Advertisement