Advertisement

அத்தியாயம் 12

 

உன் வெட்கத்திற்கு

நீ விடை

கொடுக்கும் வேளையில்

மீண்டும் மீண்டும்

பற்றும் காதல் தீ!!!!!

 

அன்னலட்சுமி போய் செந்திலிடமும் அருளிடமும் அவர்கள் கல்யாண விசயத்தை பற்றி சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது.

 

துணியை மடித்து பீரோவில் வைத்து கொண்டிருந்த தேன்மொழியை பார்த்த செந்தில் அறை கதவை சாத்திய படி உள்ளே வந்தான்.

 

“மாமா, அம்மா விசயம் சொன்னாங்களா? எனக்கு ரொம்ப சந்தோசம் தெரியுமா?”, என்று சிரித்தாள் தேன்மொழி.

 

அவளை பின் பக்கமாக அணைத்து கொண்ட செந்தில் அவள் கழுத்தில் முத்தத்தை பதித்தான். அதில் கூசி சிலிர்த்தவள் “மாமா என்ன பண்றீங்க”, என்று முனங்கினாள்.

 

“என் பொண்டாட்டி சந்தோஷத்துல இன்னும் அழகா மாறி என்னை இம்சை படுத்துறா”, என்று சொல்லி கொண்டே அவன் உதடுகள் அவள் கழுத்து, காது மடல், கன்னம் என்று பயணித்தது.

 

அவன் தொடுகையில் கையில் இருந்த துணியை தவற விட்டவள் அவனுடன் ஒன்றினாள்.அவளை தன் பக்கமாக திரும்பியவன் அவள் உதடுகளை சிறை செய்தான். அவன் முதுகில் கைகளை படர விட்டு அவனை இறுக்கி கொண்டவளை முழுவதுமாக ஆழ துடங்கி விட்டான் செந்தில்.எங்கேயும் தேனிலவு கொண்டாட போகாத அந்த புது ஜோடிகள் தங்கள் அறையிலே தேனிலவை கொண்டாடினார்கள்.

 

“தம்பி இந்தா, ஒரு வாய் சாப்பிடு” என்று சொல்லி கொண்டிருந்தாள் வடிவு.

 

“எனக்கு வேண்டாம் அக்கா, பசி இல்லை”, என்று சொன்னார் ஆறுமுகம்.

 

“என்னை மன்னிச்சிரு பா. உன் நிலைமைக்கு நான் தான காரணம்?”

 

“விடுக்கா நீ என்ன செய்வ? என் மேல தான் எல்லா தப்பும். கூட இருக்கும் போது யாரோட அருமையும் நமக்கு புரியுறது இல்லை”

 

“உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டேனே?”

 

“நீயும் தானே அக்கா பிரிஞ்சு இருக்க? ஒண்ணுக்கு மூணு பிள்ளைகளை பெத்து மூணும் உன்னை விட்டு விலகி தான இருக்கு?”

 

“என்ன பண்றது நான் செஞ்ச பாவம்? அன்னைக்கு இந்த பிரியா பிள்ளை நீயெல்லாம் பொம்பளையானு கேட்டப்ப என் நெஞ்சே நின்னுடுச்சு பா. அது மனசுல எவ்வளவு வெறுப்பு இருந்துச்சுன்னா அப்படி சொல்லிருப்பா. என் கைக்குள்ள வளந்த என் செல்ல பொண்ணு அந்த வார்த்தை சொன்னப்ப  பெத்த வயிறு தாங்கலைப்பா. நானும் தினமும் செந்தில் வீட்டுக்கு போக தான் செய்றேன். வீட்டுக்குள்ளே சேக்க மாட்டுக்காக. எல்லாரும் எங்க வந்தேன்னு தான் கேக்காங்க. அருள் பையன் என் முகத்துல முழிக்க மாட்டிக்கான். தேன் மட்டும் தான் உள்ள வாங்க அத்தைன்னு சொல்றா”

 

“அன்னம்  எப்படிக்கா இருக்கா? அவளை பாத்தியா?”

 

“இல்லை தம்பி. ஊருல இருந்து வந்துருக்கே, அந்த பிள்ளை அவ அம்மாவை வெளியவே விடுறது இல்லையாம். புதுசா வீடு கட்டி கொடுக்கானாம்”

 

“அவளுக்கு அவ பையன் கிடைச்சிட்டான். என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டா. ஏற்கனவே அவ என்னை மன்னிக்க மாட்டா. இனி என்னை திரும்பி கூட பாக்க மாட்டா. என்னனு தெரியலை கா அவளை பாக்கணும் போலேயே இருக்கு. காதலிச்சு கல்யாணம் பண்ணி அவளுக்கு என்ன சுகத்தை கொடுத்தேன்? வார்த்தையால அவளை சுட தான் செஞ்சிருக்கேன்? அன்னைக்கு வீட்டை விட்டு கிளம்பும் போது அப்படியே செத்துட்டேன் கா. போகாத அன்னம்ன்னு சொல்ல மனசு துடிச்சது. ஆனா சொல்ல என்ன உரிமை இருக்குன்னு நின்னுட்டேன். அவ இல்லாதப்ப தான் அவ அருமை புரியுது. எவ்வளவு அடிச்சாலும் என்னை விட்டு போகாதவ இப்ப அவ பிள்ளை வந்தவுடனே போய்ட்டா”

 

“எல்லாம் என்னால தான். என் தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம அசிங்க படுத்தி சித்தரவதை செஞ்சு சாகுற நிலைமைக்கு ஆளாக்கிருக்கேன்”, என்று சொல்லி கொண்டிருக்கும் போது வாசல் கதவு தட்ட பட்டது.

 

“யாருனு தெரியலையே” என்று சொல்லி கொண்டே கதவை திறந்த வடிவு அங்கு நின்ற செந்திலையும், விஷ்ணுவையும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

 

“வாய்யா  செந்தில், நீங்களும் உள்ள வாங்க  தம்பி”, என்றாள் வடிவு.இருவரும் உள்ளே வந்தார்கள். ஆறுமுகமும் எழுந்து நின்றார். வாயை மூடி அமைதியாக நிற்பது தன்னுடைய தாய் தானா என்று செந்திலுக்கே குழப்பம் வந்து விட்டது.

 

“யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது?”, என்று தெரியாமல் அங்கே அமைதி நிலவியது.வடிவு தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். “அன்னம் எப்படி இருக்கா?”

 

“ஏன் கொடுமை படுத்தணுமா மா?”, என்று கேட்டான் செந்தில்.

 

“என்னை மன்னிச்சிரு பா. நான் செஞ்சது தப்பு தான். அன்னம் காலுல விழுந்து வேணும்னாலும் மன்னிப்பு கேக்குறேன்”

 

“அம்மா… நிஜமாவா? நீயா பேசுற?”

 

“என் ஆசை மகளே என்னை பொம்பளையானு கேட்ட அப்புறம் இன்னும் வாழ்க்கைல வேற என்னப்பா இருக்கு. முன்னாடி எல்லாம் அவ அத்தையை திட்டும் போது என்மேல கோப படுவா. என்னை அடிக்க கூட செஞ்சிருக்கா. ஆனா இப்ப…” என்று சொன்னவள் கண்களில் கண்ணீர் வந்தது.

 

“நீ நிஜமாவே திருந்திட்டியா மா? அத்தையை புரிஞ்சிகிட்டியா மா?”

 

“ஆமா பா. அன்னத்தை நான் ரொம்ப அசிங்கப்படுத்திட்டேன். என் மனசாட்சியே என்னை கொல்லுது ராசா. அப்புறம் உன் மாமன் ரொம்ப வருத்த படுறான் செந்தில். ஒரு வாய் சாப்பிட மாட்டிக்கான். அன்னம் எப்படி இருக்கானு கேட்டுட்டே இருக்கான். என்னை கூட அன்னத்தை பாக்க விடலைன்னா பரவால்ல பா. அவனை உன் அத்தையை பாக்க கூட்டிட்டு போயேன்”

 

“இதற்கு என்ன சொல்வது”, என்று தெரியாமல் அமைதியானான் செந்தில்.  அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த விஷ்ணுக்கு நிம்மதியாக இருந்தது. அவர்களை உறவு சொல்லி அழைக்க வாய் வர வில்லை. ஆனால் வாயை திறந்தான்.

 

“இவங்க ரெண்டு பேரும் வந்து அம்மாவை தாராளமா பாக்கலாம். அவங்களை கஷ்ட படுத்தாம இருந்தா போதும். அப்புறம்..” என்று ஆரம்பித்து அடுத்து எப்படி சொல்ல என்று தெரியாமல் செந்திலை பார்த்தான்.

 

“நான் சொல்றேன் மச்சான்”, என்று சொன்ன செந்தில் “அம்மா, மச்சானுக்கு நம்ம பிரியாவை ரொம்ப பிடிச்சிருக்காம்.பிரியாவுக்கும் மச்சானை பிடிச்சிருக்கு. நாங்க எல்லாரும் அவங்க கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறோம். ஆனா அத்தை தான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேச சொன்னாங்க. நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டான்.

 

“ஆத்தா மகமாயி, நான் கேட்டது நிஜமா? என்ன பா சொல்ற? தம்பி நிஜமாவே உங்களுக்கு பிரியாவை பிடிச்சிருக்கா?”, என்று சந்தோசமாக கேட்டாள்.

 

“ஆமா”, என்றான் விஷ்ணு.

 

“எனக்கு சந்தோசமா இருக்கு. மகராசன் கணக்கா மாப்பிள்ளை கிடைச்சா நானா மறுப்பு சொல்ல போறேன்? தம்பி நீ என்னப்பா சொல்ற?”

 

“அன்னம் செய்றது என்னைக்குமே நல்லதா தான் இருக்கும் அக்கா”, என்று ஆறுமுகம் சொன்னதும் “இது தன்னுடைய மாமா தானா?”, என்று நினைத்தான் செந்தில்.

 

அதன் பின் அனைவரும் செந்தில் வீட்டுக்கு சென்றார்கள். ஒரு வித பதைப்புடன் அறையில்  இருந்து வெளியே வந்த அன்னலட்சுமி இருவரை பார்த்து பயத்துடன் நின்றாள். “என்னை மன்னிச்சிரு அன்னம். நாக்குல நரம்பில்லாம பேசிட்டேன். தம்பி பொண்டாட்டியை தங்கச்சி மாதிரி நினைக்காம எதிரியா நினைச்சிட்டேன்”, என்று வடிவு சொன்னதும் “விடுங்க மதினி”, என்று சொன்ன அன்னலட்சுமிக்கு வியப்பாக இருந்தது.

 

ஆறுமுகம் அடுத்து செய்த செயலில் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டாள். அவள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவர் “என்னை மன்னிச்சுடு அன்னம்”, என்றார்.

 

“ஆத்தி”, என்று பதறி போனவள் “என்ன காரியம் செய்றீங்க?”, என்று துடித்து போனாள். அவர் அப்படி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்க வில்லை.

 

“மாமா, என்ன இது? எந்திரிங்க”, என்று எழுப்பி விட்டான் அருள். சந்தோஷத்தில் அன்னலட்சுமியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை ஒரு நிறைவுடன் பார்த்து கொண்டிருந்த விஷ்ணுவின் கண்களிலும் கண்ணீர் தடம்.

 

“எம்மா நீயா இப்படி எல்லாம் பேசுற? எனக்கு ஆச்சர்யமா இருக்கு”, என்று அனைவரின்  கவனத்தையும் கலைத்தாள் சத்யா.

 

“ஏய் சின்ன குட்டி அம்மாவை மன்னிச்சிருத்தா. நீ எல்லாம் பொம்பளையானு கேட்டுட்டியே?”

 

“நீ அத்தையை தப்பா பேசுனதால அப்படி சொல்லிட்டேன் மா. இப்ப தான் நீ மாறிட்டியே”

 

“பிரியா உனக்கு நிஜமாவே இந்த தம்பியை பிடிச்சிருக்கா மா?”

 

“ம்ம்”, என்று சிரித்து கொண்டே அவனை பார்த்து புன்னகைத்தாள் சத்யா. அந்த சிரிப்பை முதல் முறையாக ஒரு வித ஆர்வத்துடன் பார்த்தான் விஷ்ணு.

 

அதன் பின் அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். “விஷ்ணு கல்யாணத்தை எங்க வச்சிக்கலாம்?”, என்று கேட்டான் செந்தில்.

 

“இங்கயே வச்சிக்கலாம்”, என்றான் விஷ்ணு. “உன்னோட அம்மா அப்பா என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு பா”, என்றாள் அன்னலட்சுமி.

 

“அவங்களுக்கு இப்ப உண்மை தெரிய வேண்டாம் மா. கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் சொல்லிக்கிறேன்”

 

“அது தப்புப்பா. ரொம்ப தப்பு. அவங்க சம்மதம் இல்லாம நடக்க கூடாது”

 

“சரி சரி நீங்க உடனே கவலை படாதீங்க. நான் நாளைக்கே ஊருக்கு போய் அவங்க சம்மதம் வாங்கிட்டு வரேன்”, என்று விஷ்ணு சொன்னதும் இரண்டு பேர் நெஞ்சுக்குள் திக்கென்று உணர்ந்தார்கள்.

 

அது சத்யாவும் அன்னலட்சுமியும் தான். “போனால் திரும்பி வருவானா?”, என்று கவலையாக இருந்தது. அன்னலட்சுமி முகத்தை பார்த்தவன் “கண்டிப்பா வருவேன் மா”, என்று புன்னகைத்தான்.

 

“நாளைக்கு போகும் போது பிரியாவையும் கூட்டிட்டு போ ராசா. சென்னைல இருக்குற பொருளை எல்லாம் எடுத்துட்டு வரணும்”

 

ஒரு நொடி யோசித்தவன் “இல்லை மா. டெல்லிக்கே கூட்டிட்டு போய் சத்யாவை அம்மா அப்பா கிட்ட காட்டலாம்னு தோணுது”, என்றான்.

 

“சரியா சொன்னப்பா. கூட்டிட்டு போ”

 

“செந்தில் நாளைக்கு நைட் கிளம்புறோம். மதுரை வரைக்கு கார் ஏற்பாடு செய்ய முடியுமா?”

 

“ஹ்ம்ம் சரி விஷ்ணு. நான் பாத்துக்குறேன்”

 

“அருள் வீட்டுக்கு எதாவது பொருள் வாங்கணுமா? பணம் இருக்கா?”

 

“செங்கல், சிமிண்ட்ன்னு எல்லா லோடும் வந்து இறங்கிட்டு. தேவையானப்ப மீதி வாங்கிக்கலாம். பணம் எல்லாம் இருக்கு. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்று சிரித்தான் அருள்.

 

அவனையே பாசமாக பார்த்தாள் வடிவு. அதை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்றான் அருள். அடுத்த நாள் இருவரும் அனைவரிடமும் சொல்லி விட்டு மதுரைக்கு கிளம்பினார்கள். சத்யா உள்ளுக்குள்ளே சந்தோசமாக இருந்தாலும் அதை வெளியே காண்பிக்காமல் இருந்தாள்.

 

மதுரைக்கு இரவும் பதினோரு மணிக்கு சென்றார்கள். ஒரு பிரைவேட் பஸ்ஸில் அவளுடன் ஏறினான் விஷ்ணு. அவளை ஜன்னல் ஓரத்தில் அமர சொன்னவன் அவள் அருகில் அமர்ந்தான். அவன் அருகே அமர்ந்து பஸ் பயணம். மனம் முழுவதும் சந்தோசமாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில் கூட அவள் நினைத்ததில்லை.

 

அவனையே ரசித்து கொண்டிருந்தாள் சத்யா. அவனோ போனை எடுத்து மணியை அழைத்தான். “மணி நான் விஷ்ணு பேசுறேன். சென்னைக்கு வந்துட்டு இருக்கேன். காலைல பஸ்  ஸ்டேண்ட் வர முடியுமா?”

 

“ஐயோ சாரி சார். நான் இப்ப பழனி போய் கிட்டு இருக்கேன். ஒரு கல்யாண ஆஃபர்”

 

“ஓ அப்படியா? சரி நல்ல படியா போய்ட்டு வாங்க. குழந்தைங்க எப்படி இருக்காங்க?”

 

“நல்லா இருக்காங்க சார். நான் வேற கார் ஏற்பாடு பண்ணவா?”

 

“வேண்டாம் மணி. நான் கார் புடிச்சு போய்க்கிறேன். நாம அப்புறம் பாக்கலாம்”

 

“சரி சார் நானும் டிரைவிங்க்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். பேசி விட்டு போனை சட்டை பையில் வைத்தவன் அவளை திரும்பி பார்த்தான்.

 

அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தாள் பஸ் கிளம்பியது.

 

“சத்யா”, என்று அழைத்தான் விஷ்ணு.

 

“என்ன அத்தான்?”

 

“நீ ஹேப்பியா இருக்கியா?”

 

அவனை பார்த்து புன்னகைத்தவள் “ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். எனக்கு இருந்த ஒரே கவலை, கல்யாண விஷயம் தான். அதுவே  சரியா போச்சு. அப்புறம் என்ன கவலை?”

 

“கல்யாணம் அப்பறம் உன்னை வீட்டை விட்டு, என் வாழ்க்கையை விட்டு துரத்திருவேன்னு பயமா இல்லையா?”

 

“ஹா ஹா நீங்க தான் ஆல்ரெடி துரத்திருவேன்னு தான் சொல்லிட்டீங்களே? என்கிட்ட பொய் சொல்லி கல்யாணம் பண்ணலையே. அது மட்டுமில்லாம நான் போய் தான ஆகணும்? அது தான முறை? ஆனா ஒரு ஹெல்ப் பண்ணனும்”

 

“ஹெல்பா? என்ன?”

 

“உங்க காதலி வந்த பிறகு எனக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தருவீங்களா?”

 

“டெல்லில இருக்குற பிரதாப் ஹாஸ்ப்பிட்டலோட சொந்தக்காரன் மா நான். அங்க வேலை இல்லை, அந்த ஹாஸ்ப்பிட்டலே உனக்கு எழுதி கொடுக்குறேன் போதுமா?”

 

“ஜீவனாம்சமா அத்தான்?”, என்று அவள் கேட்டதும் அவளை முறைத்தான் விஷ்ணு.

 

“கோப படாதீங்க. நான் சும்மா சொன்னேன்”

 

“இனி அப்படி பேசாத. எதோ கஷ்டமா இருக்கு. சரி கடைசி காலம் வரைக்கும் தனியா இருந்துருவியா மா?”, என்று உண்மையான அக்கறையுடன் கேட்டான் விஷ்ணு.

 

“சொந்தமா ஹாஸ்பிட்டல் எழுதி வைக்கிற நீங்க இருக்கீங்க. எனக்கு சொந்த காரரா இல்லாம இருந்தாலும் அட்லீஸ்ட் கார்டியனா இருக்க மாட்டிங்களா? உங்க கூட இல்லாம போனாலும் உங்க நிழல்ல ஒரு இடம் தர மாட்டிங்களா?”

 

“எம்மா தாயே, இன்னும் பிரிஞ்சு போறதை பத்தியே பேச வேண்டாம். நீ சாதாரணமா பேசுற விசயம் கூட எனக்கு கஷ்டமா இருக்கு”

 

“சரி சந்தோஷமான விசயம் பேசலாம். உங்க காதலை பத்தி சொல்லுங்க”

 

“அது எதுக்கு? வேண்டாமே?”

 

“ஏன்? என்கிட்ட சொல்ல மாட்டிங்களா?”

 

“உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன்? அவ பேர். ஊர் எதுவுமே தெரியாது. அவ கை எழுத்தை தவிற?”, என்று ஆரம்பித்து சுருக்கமாக சொன்னான் விஷ்ணு.

 

அனைத்தையும் கேட்ட அவள் “அவங்களை எப்படி கண்டு பிடிப்பீங்க?”, என்று கேட்டாள்.

 

“அதை எப்படி சொல்றது? எப்படியோ கண்டு பிடிப்பேன். அப்புறம் அவளே என்னை தேடி வருவா”

 

“ஒரு வேலை வரவே இல்லைன்னா என்ன பண்ணுவீங்க?”, என்று அவள் கேட்டதும் அவன் முகம் அப்படியே சுருங்கி போனது.

 

“கடைசி வரைக்கும் அவ வரலைன்னா அந்த காதலே பொய்ன்னு நினைச்சு எனக்கு நீ, உனக்கு நான் துணையா வாழ்ந்துறலாம்”, என்று சொல்லி விட்டு கண்களை மூடி சீட்டில் தலையை சாய்த்து கொண்டான்.

 

“இப்படி கவலை பட எல்லாம் உங்களை விட்டுருவேனா?”, என்று நினைத்தவள் இருவருக்கும் நடுவில் இருந்த சீட்டின் கை பிடியில் அவனை இடிப்பது போல கையை வைத்தாள்.

 

அந்த தொடுகையில் கண்ணை திறந்தவன் “கை வைக்கணுமா? நான் எடுத்துக்குறேன். நீ வச்சிக்கோ”, என்றான்.

 

“இல்லை இது கொஞ்சம் இடைஞ்சலா இருக்கு. மேல எடுத்துருவோமா? கொஞ்சம் பிரியா இருக்கும்”

 

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி அதை மேலே நகர்த்தினான் . அவனை இன்னும் ஒட்டி அமர்ந்து கொண்டு அதே நேரம் அவன் அதை கவனிக்காமல் பார்த்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் அவன் கண்கள் உறக்கத்தை தழுவின. பஸ்ஸில் இருந்த சிறிது மங்கலான வெளிச்சத்தில் அவனையே பார்த்து கொண்டு வந்தவள் அவன் எழும்பி விடாதவாறு அவன் தோளில் சாய்ந்தாள்.

 

ஜன்னல் வழியே வந்த தென்றல், பஸ்ஸில் இருந்த இருள், அவன் அருகாமை என அனைத்தும் சேர்ந்து அவளை அழகான உறக்கத்திற்கு அழைத்து சென்றன.

 

எதோ ஒரு டோல் கேட் வெளிச்சத்தில் கண் விழித்த விஷ்ணு தன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த சத்யாவை பார்த்து புன்னகைத்தான். “தூங்கிட்டே சாஞ்சிட்டா போல?”, என்று நினைத்து கொண்டு இவ்வளவு நேரம் அசைக்காமல் வைத்திருந்த கையை அவள் எழுந்து விடாதவாறு  எடுத்து அவள் தோளை சுற்றி போட்டு கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

 

இடையில் கண் விழித்த சத்யாவுக்கு தன் தோளை சுற்றி கிடந்த அவன் கையை கண்டு முதலில் வந்தது திகைப்பு தான். பின் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. அவள் கண்களும் உறக்கத்திற்கு கெஞ்சியது. இருவரும் தங்களை மறந்து தூங்கி போனார்கள். முகத்தில் வெயில் படவும் தான் கண் விழித்தான் விஷ்ணு.

 

அதற்கு முன்னே விழித்திருந்த சத்யா  “குட்மார்னிங் அத்தான்”, என்று சிரித்தாள் சத்யா.

 

“குட்மார்னிங் சத்யா. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

 

“இன்னும் அரை மணி நேரத்துல போயிரலாம் அத்தான்”

 

“சரி உன் ரூம் பக்கத்துல நல்ல ஹோட்டல் இருக்கா? இல்ல போன தடவை தங்கி இருந்த ஹோட்டலுக்கு போகட்டுமா?”

 

“அங்க எங்க வீடு இருக்குல்ல? அங்கேயே தங்கிக்கலாம். நாம என்ன ரொம்ப நாளா தங்க போறோம்? நைட் டெல்லிக்கு பிளைட். பகல்ல மட்டும் தான?”

 

“இல்லை உன் பிரண்ட் அங்க இருப்பாங்க அதான்?”

 

“அவ ஆறு மணிக்கு கிளம்பிருப்பா. நைட் அவ வரும் போது நாம கிளம்பிருவோம். அப்புறம் நான் ஹாஸ்பிட்டல் போய் வேலை வேண்டாம்னு எழுதி கொடுக்கணும். அதனால நீங்க மட்டும் தான் அங்க இருக்க போறீங்க? அப்புறம் என்ன?”

 

“ஹ்ம்ம் சரி. அப்புறம் உன் கூட ஹாஸ்ப்பிட்டலுக்கு நானும் வரேன்”

 

“எதுக்கு?”, என்று கேக்க துடித்த நாவை அடக்கியவள் “சரி வாங்க”, என்று சொன்னாள்.

 

பஸ் ஸ்டேண்டில் இறங்கி ஒரு ஆட்டோவை பிடித்தவள் அவனை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றாள். வீட்டுக்கு வரும் போது மணி எட்டு ஆகி இருந்தது.

 

உள்ளே சென்றதும் “நீங்க முதல்ல குளிங்க அத்தான்”, என்றாள் சத்யா. “இல்லை நீ குளி. நான் கொஞ்சம் படுக்குறேன்”, என்று சொல்லி படுத்து விட்டான்.

 

குழந்தை போல் தூங்கும் அவனையே பார்த்தவள் சிரித்து விட்டு குளிக்க சென்றாள்.அவன் கண் விழித்த போது கண்ணாடி முன்னாடி நின்று தலையை துவட்டி கொண்டிருந்தாள் சத்யா.

 

அவள் இடுப்பை தாண்டி தொங்கி கொண்டிருந்த முடியை பார்த்தவன் “இவ்வளவு அடர்த்தியா? அழகா இருக்கு”, என்று முதல் முறையாக அவளை கவனித்தான்.

 

“சத்தம் கொடுத்து எழுப்பிட்டேனா அத்தான்? போய் குளிக்கிறீங்களா? சாப்பாடு தரவா?”

 

“நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி டவல், சோப்பு என்று அனைத்தையும் எடுத்து கொண்டு சென்றான்.

 

அவன் வருவதுக்குள் பிரிட்ஜில் இருந்து மாவை வெளியே எடுத்து வைத்தாள். பின் தக்காளி எடுத்து சட்னி செய்ய ஆரம்பித்தவள் மற்றொரு அடுப்பில் இட்லியை ஊற்றி வேக வைத்தாள்.

 

குளித்து முடித்து தலையை துவட்டிய படியே வந்தவனுக்கு கண் முன் இருந்த சூடான இட்லி மற்றும் தக்காளி சட்னியை பார்த்து வாயில் எச்சில் ஊறியது.

 

“தேங்க்ஸ் சத்யா. நீயும் சாப்பிட வா”, என்று அழைத்து இருவரும் எதையோ பேசிய படியே சாப்பிட்டார்கள்.

 

பின்னர் ஒரு பத்து மணி போல் இருவரும் ஹாஸ்பிட்டல் கிளம்பினார்கள். அடுத்த தெரு தான் என்பதால் அவனுடன் பேசிய படியே நடந்தாள்.

 

அனுமதி கேட்டு உள்ளே வந்த சத்யாவை பார்த்த டாக்டர் விஜயானந்த் “என்ன சத்யா? திடிர்னு இவ்வளவு நாள் லீவ்?  உடம்பு சரி இல்லையா?”, என்று கேட்கும் போதே விஷ்ணுவும் உள்ளே வந்தான்.

 

ஆணழகனாக கண் முன் வந்து நின்றவனை பார்த்து ஆணான விஜயானந்துக்கே பொறாமை வந்தது. குழப்பமாக இருவரையும் பார்த்தான்.

 

“உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லை டாக்டர். வேலையை ரிசைன் பண்ண போறேன். இது என்னோட அத்தான். அத்தான், இவர் பேர் விஜயானந்த். இங்க கண் டாக்டரா இருக்காங்க”, என்று அவள் சொன்னதும் இருவரும் புன்னகைத்தவாறே கை கொடுத்து கொண்டார்கள்.

 

“ஏன் சத்யா திடிர்னு வேலையை விட போறீங்க?”, என்று கேட்டான் விஜயானந்த்.

 

“அதுவா? எனக்கு கல்யாணம். அதனால தான். மாப்பிள்ளை எங்க அத்தான் தான். கல்யாண டேட் பிக்ஸ் பண்ண அப்புறம் சொல்றேன். வந்துருங்க”

 

“ஓ”, என்று சொன்ன டாக்டரின் முகம் சுருங்கி விட்டது. பின் விஷ்ணுவை பற்றி விசாரித்தான். தன்னை பற்றி எந்த பந்தாவும் இல்லாமல் விஷ்ணு சொல்லிய போது அவனுடைய மதிப்பையும் திறமையும் கேட்டு இருவருமே பிரம்மித்தார்கள்.

 

பின் அவனிடம் விடை பெற்று தெரிஞ்சவர்களிடம் சொல்லி கொண்டு வெளியே வரும் போது மணி பதினொன்று ஆகி இருந்தது. “நமக்கு கல்யாணம் அப்படின்ன உடனே உங்க டாக்டர் முகம் ஏன் சத்யா அப்படி போச்சு?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

“அவர் என்னை கல்யாணம் பண்ண கேட்டிருந்தார். நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு சொன்னவுடன் அதை விட்டுட்டார். ஒரு வேளை அதனால இருக்கலாம்”, என்று உதட்டை பிதுக்கினாள்.

 

“அழகா இருக்கார். நல்ல வேலைல இருக்கார். அவரையும் நீ வேண்டாம்னு சொன்னியா? உன் காதலை நினைச்சு எனக்கு பூரிப்பா இருக்கு சத்யா. உன்னோட காதலை மிஸ் பண்ண, நீ லவ் பண்ண ஆளை எனக்கு ஒரு நாள் காட்டுவியா?”

 

அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ஹ்ம்ம் சரி காட்டுறேன். ரூம்க்கு போகலாமா?”, என்று கேட்டாள்.

 

“ரூம்க்கு போய் என்ன பண்ண?”, என்று கேட்டவனின் கண்களில் சினிமா  தியேட்டர் பட்டது. “ஏய் அங்க பாரு? படத்துக்கு போகலாமா?”

 

“படத்துக்கா?” என்று யோசித்தவள் “சரி போகலாம்”, என்று சொன்னதும் இருவரும் உள்ளே சென்றார்கள். அவனுடன் சேர்ந்து பார்க்கும் முதல் படம் ஆனால் அவள் படத்தை எங்கு பார்த்தாள்? அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

அவனோ படத்தை பார்த்து கொண்டிருந்தான். மதியம்  படம் முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை முடித்தார்கள்.

 

மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்ததும் படுத்து தூங்கி விட்டான் விஷ்ணு. தன்னுடைய பொருள் அனைத்தையும் மூட்டை கட்ட ஆரம்பித்தாள் சத்யா.

 

தீ பற்றும் …….

 

Advertisement