Advertisement

அத்தியாயம் 11

 

இரவினில்  கண்

சிமிட்டும் விண்மீன்

கண்டு நீ அழகாய்

புன்னகைக்கும் போது

பற்றும் காதல் தீ!!!!!

 

தென்றல் தீண்டியதால் மலர்ந்த பூக்கள் அழகாய் இதழ் விரித்து புன்னகை பூக்கும்  இளங்காலை பொழுது. கீச் கீச் என்ற பறவைகளின் கலவையான ஒலியினால் கண் விழித்த விஷ்ணு எழுந்து குளியலறைக்குள் சென்றான். காலை கடன்களை முடித்து குளித்தவன் ஒரு டீ ஷர்ட்டையும் முக்கால் பேண்ட்டையும் மாற்றி கொண்டு வெளியே வந்தான்.

 

காதலனை கண்டு முகம் சிவக்கும் காதலியை போல வானம் சிவந்திருந்தது. வீட்டை சுற்றி அழகான மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெயில் வர ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்ற விஷ்ணு அந்த அழகை கைகளை கட்டி கொண்டு ரசித்து கொண்டிருந்தான்.

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நம்பர் ஒன் கோடீஸ்வரன் பிரதாப்பின் ஒரே மகனாக இருக்கும் விஷ்ணு பல கோடி சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. ஆனால் இன்று அந்த பணத்தை எல்லாம் மறந்து சாதாரண மனிதனாக இயற்கையை ரசித்து நின்றான்.

 

ஈர துணிகளை வெளியில்  காய போட்டு கொண்டிருந்த சத்யாவின் கண்ணில் பட்டான் விஷ்ணு. காய போட வேண்டியதை மறந்து அவள் கண்கள் அவனையே அளவிட்டது.

 

ஆறடி உயரத்தில், கட்டுமஸ்தான உடம்புடன் கம்பீரமாக இருந்தான். நீண்ட கண்கள், தீர்க்கமான  பார்வை, நீளமான நாசி, அடர்ந்த கருமையான மீசை அழுத்தமான உதடுகள், சிரிக்கும் போது பளீரென தெரியும் வெண்ணிற பற்கள் என ஆணழகனாக இருந்தான் விஷ்ணு.

 

அவனின் கண்ணோர சுருக்கம் கூட அவனுக்கு தனி அழகை கொடுத்தது. எங்கேயும் அளவுக்கு அதிகமான சதை இல்லாமல் அம்சமாக இருந்தவன், ஒரு சிற்பம் போல அவள் கண்களுக்கு தெரிந்தான். அவனை இமைக்க மறந்து ரசித்தன சத்யாவின் கண்கள்.

 

“அடியே ஒரு பையன் தான் பொண்ணை இப்படி பாக்கணும். ஆனா நீ இங்க இப்படி ரசிச்சிட்டு இருக்க?”, என்று குரல் கொடுத்தது சத்யாவின் மனசாட்சி.

 

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அணு அணுவாக ரசித்து அவன் தோற்றத்தை மனதுக்குள் நிறைத்தாள். இரண்டு கைகளையும் தலைக்கு மேல தூக்கி சோம்பல் முறித்தான் விஷ்ணு. உருண்டு திரண்ட அவனுடைய புஜங்கள் தினமும் அவன் ஜிம்முக்கு போவான் என்று சொல்லாமல் சொன்னது.

 

அவனுடன் தனித்திருந்த சில மணி நேரங்கள் நினைவுக்கு வந்தது சத்யாவுக்கு. அதை நினைத்ததும் அவள் உடல் ஒரு முறை சிலிர்த்தது.

 

தன் உதட்டை பற்களால் கடித்து நாணத்தை கட்டு படுத்த முயன்றாள். “எப்படி டி உனக்கு அவன் கிட்ட அப்படி எல்லாம் நடந்துக்க தோணுச்சு? நீ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்க தெரியுமா? இன்னும் சொல்ல போனா அது பாவம்”, என்று கேட்ட மனசாட்சிக்கு “நான் என்ன செய்ய? இவன் இப்படி என் கண் முன்னாடி வந்து நிப்பான்னு நான் கனவா கண்டேன்? இனி எப்படி பாப்பேன், கூட இருக்குற சந்தோசம் இனி கிடைக்காதுனு நினைச்சு அப்படி எல்லாம் நடந்துச்சு. இப்படி என் வீட்டுக்கே வருவான்னு தெரிஞ்சிருந்தா நான் நிறுத்தி நிதானமா என் காதலை புரிய வச்சிருப்பேன். இப்ப எல்லாமே சொதப்பிட்டு. அன்னைக்கு நைட் நடந்தது இவனுக்கு ஞாபகம் இருக்குமா? ஞாபகம் இல்லாமல் போனாலும் அடுத்த நாள் கண்டு பிடிச்சிருப்பானா? அந்த லெட்டரை படிச்சானா? தூர போட்டானா? ஒரு வேலை படிச்சிருந்தா அவனுக்கு என்னை பிடிச்சிருக்குமா? என்னை தேடுவானா? என்னை லவ் பண்ணுவானா?”, என்று குழம்பி தவித்தாள்.

 

“ஏட்டி துணியை காய போடாம என்ன கனவு கண்டுட்டு இருக்க?”, என்ற அன்னலட்சுமியின் குரலில் கலைந்தாள் சத்யா. விஷ்ணுவும் திரும்பி பார்த்தான்.

 

“இல்லை அத்தம்மா சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்”

 

“சரி சரி, உள்ளார போய் தலையை காய போடு. சளி பிடிக்க போகுது”, என்று சொல்லி விட்டு அவள் சென்றதும் வீட்டுக்குள் வர திரும்பினாள் சத்யா. வாசலில் நின்று அவளையே பார்த்த படி நின்றான் விஷ்ணு.

 

மனதில் எழுந்த நினைவுகளையும் காதலையும் அப்படியே மனதுக்குள் புதைத்தவள் வீட்டை நோக்கி நடந்து வந்தாள்.

 

அவனருகே வந்ததும் “அவன் முகத்தை பார்க்க கூடாது”, என்று கஷ்ட பட்டு தன்னை அடக்கி கொண்டு வந்தவளை “ரொம்ப தேங்க்ஸ்”, என்ற அவனுடைய குரல் தடுத்து நிறுத்தியது.

 

“எதுக்கு சார் தேங்க்ஸ்? என்னை வம்படியா இழுத்துட்டு வந்து இங்க தள்ளுனத்துக்கு நீங்க சாரி தான கேக்கணும்?’, என்று வம்பிழுத்தாள் சத்யா.

 

“உங்க வீட்ல உன்னை விட்டதுக்கு சாரி கேட்கணுமா?”, என்று சிரித்த படி கேட்டான்,

 

அவன் சிரிப்பில் மயங்கும் மனதை அடக்கியவள்  “ஏன் சொல்ல மாட்டிங்க? உங்களுக்கு என்ன தெரியும்? நானே அத்தை கிட்ட தனியா சிக்காம ஓடி கிட்டு இருக்கேன். மாட்டுனா செத்தேன். சரி விடுங்க. எதுக்கு தேங்க்ஸ்?”, என்று கேட்டாள்.

 

“நேத்து, அம்மாவை என்கிட்ட பேச அனுப்பி வச்சதுக்கு”

 

“அத்தம்மா உளறிட்டாளா? நீங்க ஒரு மாதிரி இருந்த மாதிரி இருந்துச்சு அதான்”

 

“உண்மையிலே அப்ப ரொம்ப தனிமையா பீல் பண்ணேன். அம்மா வந்து பேசுனப்ப தான் சரியாச்சு. அப்படியே அவங்க மடியிலே தூங்கிட்டேன். பாவம் அவங்க தான் உக்காந்துட்டே தூங்கிருக்காங்க”

 

“பெத்த பிள்ளையை மடி தாங்குறதுக்கு எந்த அம்மாவும் கஷ்ட பட மாட்டாங்க சார்”

 

“ம்ம், உங்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்”

 

“என்னது? சாப்பிட எதுவும் வேணுமா?”

 

“அதெல்லாம் வேண்டாம், அம்மா சாப்பாடு ஊட்டி விடுறதுல இங்க இருந்து போகும் போது பத்து கிலோ ஏறி தான் போக போறேன். நான் கேக்க வந்தது வேற?”

 

“என்ன? சொல்லுங்க?”

 

“அம்மாவோட இடம் இங்க ஒன்னு இருக்காமே. அந்த இடத்துல வீடு கட்டணும்னு நீ சொல்லிட்டு இருப்பியாம்? நாம அங்க ஒரு வீடு கட்டுவோமா?”

 

“என்ன நாமளா?”, என்று முகம் மலர கேட்டாள் சத்யா.

 

“ஆமா நாம தான். நீ தான் அம்மாவுக்கு ரொம்ப பெட். அவங்க குணம் உனக்கு நல்லா தெரியும். உனக்கும் அங்க வீடு கட்ட ஆசை இருக்கு. வீடு எப்படி இருக்கணும்னு உனக்கும் ஒரு ஆசை இருக்கும். நீ சொன்னா, அது படியே செய்யலாம்”

 

“ஹ்ம்ம் எனக்கு ஒரு கனவே இருக்கு அதுல. ஆனா, பணம் அந்த அளவுக்கு சேரலை. கவர்ன்மென்ட் வேலைக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அது கிடைச்சதும் லோன் வாங்கி கட்டணும்னு என்னோட ஆசை”

 

“பணமெல்லாம் பிரச்சனை இல்லை. வீட்டை பத்தி மட்டும் நீ சொல்லு போதும்”

 

“ஆனா, நானே…”

 

“ஒன்னும் பிரச்சனை இல்லை. சேத்து வச்சிருக்குற பணத்தை நீயும் கொடு. நான் வாங்கிக்கிறேன்”

 

“நீங்க அதிகமா பணம் போடுவீங்க. உங்க அம்மாவுக்கு பெருசா கட்டி கொடுக்கணும்னு நினைப்பீங்க. என்கிட்ட அம்பதாயிரம் தான் இருக்கு. அது கொடுத்தா மலை மேல ஒரு கடுகை வச்ச மாதிரி இருக்குமே”

 

“எவ்வளவு கொடுக்குறோம்னு முக்கியம் இல்லை. எவ்வளவு அன்போட கொடுக்குறோம்னு தான் முக்கியம். அந்த வீட்டுல உன்னோட பங்கும் இருக்கணும். அப்ப தான் நீயும் சந்தோச படுவ. அம்மாவுக்கும் உன் ஆசையும் நிறைவேறின திருப்தி இருக்கும். ஆனா எந்த மாடல்ல இருக்கணும்னு நீ தான் சொல்லணும். நான் மித்த வேலை எல்லாத்தையும் உங்க அண்ணன் கிட்ட பேசிக்கிறேன். இங்க நல்ல என்ஜினீயர் இருக்காங்களா?

 

“நல்ல என்ஜினீயர் இல்லை. ஆனா இந்த வீட்டை கட்டுன ஒரு ஓட்டை என்ஜினீயர் இருக்கான்’

 

“ஓட்டையா? இந்த வீடு அழகாத்தான் இருக்கு.  நல்லா தான் கட்டிருக்காரு? யாரு அவரு?”

 

“எங்க அண்ணன் தான்”

 

“செந்தில் எஞ்சினீரா?”

 

“இல்லை இல்லை. செந்தில் அண்ணன் டிகிரி தான் முடிச்சிருக்கு. நான் சொல்றது அருள் அண்ணனை. இந்த ஊருலே அவரு மட்டும் தான் என்ஜினீயர். எனக்கு நேரா மூத்தவன். சென்னைல வேலை பாக்கான்”

 

“குட், இங்க எப்ப வருவாங்க. நம்பர் இருக்கா? நான் பேசுறேன்”

 

“ஹ்ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவான். நேத்து நீங்க வந்துருக்கீங்கன்னு தெரிஞ்ச அப்புறம் எப்படி வராம இருப்பான். நேத்து நைட் கிளம்பிட்டான்”

 

“சூப்பர், அப்ப அவங்க வந்த அப்புறம் பேசிக்கலாம். எனக்கு இன்னொரு சந்தேகம் “

 

“என்ன ?”

 

“நேத்து நீ உங்க அம்மா கிட்ட இன்னொரு அண்ணன் வாழ்க்கையும் கெடுத்துட்டேன்னு பேசுனல்ல? அது இந்த அருள் தானா? என்ன ஆச்சு அவருக்கு?”

 

“அதுவா? அது ஒரு பெரிய கதை. அருள் அண்ணன் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணாரு. அந்த பொண்ணும் பண்ணுச்சு. எங்க அம்மா சொல்ல சொல்ல கேக்காம அந்த பொண்ணு வீட்ல போய் கேவலமா பேசி அந்த பொண்ணுக்கு உடனே வேற மாப்பிள்ளையை கட்டி வச்சிட்டாங்க. எங்க அண்ணன் சாமியார் மாதிரி கல்யாணம் வேண்டாம்னு வாழ்ந்துட்டு இருக்கான்”

 

“ஓ, சாரி”

 

“ம்ம், நான் காபி எடுத்துட்டு வரேன்”

 

“சத்யா ஒரு நிமிஷம்”

 

“என்ன?”

 

“எல்லாரும் படிச்சிருக்கீங்க? தேன்மொழி படிக்கலையா?”

 

“தங்கச்சி படிக்கலைன்னு வருத்தமோ? கவலை படாதீங்க.அவ டிகிரி முடிச்சிருக்கா. செந்தில் அண்ணன் வெளிய வேலைக்கு போகாம இங்கயே வேலை பாக்குறதுனால அவளும் பட்டிக்காடு மாதிரி இருக்கா”

 

“ஓ”, என்று அவன் உதடு குவிப்பதை பார்த்தவள் “அந்த உதட்டை தொட்டு பார்”, என்று மனது சொன்ன கட்டளையை நிறைவேற்ற முடியாமல் உள்ளே நகர்ந்தாள்.

 

சிறிது நேரத்தில் அருள் வந்து விட்டான். பார்த்தவுடனே செந்திலின் தம்பி என்று சொல்லுமாறு இருந்தான். ஆனால் அவன் கண்ணில் இருந்த சோகத்தை மட்டும் எளிதாக கண்டு கொண்டான் விஷ்ணு.

 

தன்னுடைய மணம் கவர்ந்தவளின் நினைவு வந்தது விஷ்ணுவுக்கு. “எங்க டி இருக்க?”, என்று மனதிலே மானசீகமாக கேட்டவன் அருளிடம் பேசி கொண்டிருந்தான்.

 

அப்போது “அத்தான், உங்களை அம்மா கூப்பிடுறாங்க. உள்ள வாங்க”, என்று அழைத்தாள் சத்யா.

 

“இவ என்ன எல்லாரும் இருக்கும் போது அத்தான்னு சொல்றா? தனியா இருக்கும் போது சார் சொல்றா?”, என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றான்.

 

அவன் இந்த ஊருக்கு வந்து நான்காவது நாள் வீட்டு வேலை ஆரம்பித்தது. சத்யா பிளான் படி, அருள் ஆலோசனை படி, செந்தில் அனைத்து வேலையையும் செய்தான்.

 

பணம் கொடுத்தது மட்டும் தான் விஷ்ணு. மற்ற படி அவன் அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டான்.

 

ஆனால்  யாருக்கும் தெரியாமல் செந்திலிடம் சென்ற விஷ்ணு இந்த வீட்டை சத்யபிரியா மற்றும் விஷ்ணுவர்தன் பெயரில் சேர்த்து பத்திரத்தில் மாற்ற சொன்னான்.

 

எதற்கென்று காரணம் கேட்டதுக்கு “அம்மாவுக்கு என் பேர்ல வீடு  இருக்கணும்னு ஆசை. ஆனா உங்க தங்கச்சிக்கு ரொம்ப நாளா அவ அத்தைக்கு இந்த இடத்துல வீடு கட்டி கொடுக்கணும்னு ஆசை. இப்ப அவளும் தான பணம் போட்டுருக்கா”, என்று சொன்னான் விஷ்ணு.

 

வீட்டின் வேலையும் தொடர்ந்து நடந்தது. இடையில் ரம்யாவும் அலேக்ஸ்சும் விஷ்ணுவிடம் போனில் பேசினார்கள்.

 

சத்யா ஹாஸ்பிட்டலில் லீவ் எடுத்து இன்றோடு ஆறு நாட்கள் ஆகி விட்டதால் “நாளை செல்லலாம்”, என்று முடிவெடுத்தாள். போவதற்கும் பிடிக்க வில்லை. ஒரு காலத்தில் அவனை அவள் தேடி சென்றிருக்க, இன்று கண் முன் அவன் இருந்தும் அவளால் எப்படி போக முடியும்? குழம்பி தவித்தவள் தன்னை அன்னலட்சுமி அழைக்கும் குரல் கேட்டு அங்கு சென்றாள்.

 

ஆனால் அங்கு என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ, முகமெல்லாம் கோபத்துடன் விஷ்ணுவை முறைத்த படி அவன் எதிரே நின்றாள் சத்யா.

 

வீடு விஷயத்தில் அவளுடைய ரசனை அனைத்தையும் பார்த்தவனுக்கு, அவளை ஒரு தோழியாக பிடித்திருந்தது. அவளுடன் இத்தனை நாள் பழகியதில் இருவருக்குமிடையே ஒரு நட்பின் இழை ஓடி கொண்டிருந்தது.

 

இன்று அவள் முறைத்த படி நின்றதும் குழம்பியவன் “என்ன ஆச்சு சத்யா?”, என்று கேட்டான்.

 

“என்ன ஆகணும்? இப்ப உங்களுக்கு சந்தோசம் தான? படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா? இப்ப நான் தான் மாட்டிகிட்டேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள்.

 

அவள் அழுகையை கண்டு துடித்து போனவன் “என்ன ஆச்சு? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்டான்

 

“அத்தை, என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. இதுக்கு தான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன். நான் வந்தா அவ இப்படி தான் பண்ணுவா. போங்க, எல்லாம் உங்களால தான் சார்”

 

ஏற்கனவே தேன்மொழி இது பற்றி பேசி இருந்ததால் விஷயம் புரிந்தது விஷ்ணுவுக்கு. “முதல்ல இந்த சார்னு கூப்பிடுறதை நிறுத்து. அப்புறம் அழாத. வா நான் அம்மா கிட்ட பேசுறேன்”

 

“அத்தை கேக்க மாட்டாங்க”

 

“நான் சொல்றேன்னு சொல்றேன்ல? வா”, என்று சொல்லி அவள் கரம் பற்றி இழுத்து கொண்டு போனான். அந்த தொடுகையில் அதிர்ச்சியானவள் கண்களில் நீரோடு உதட்டில் புன்னகையோடு அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

 

கண் முன் ஜோடியாக கை பிடித்து நின்ற இருவரையும் கண்ட அன்னலட்சுமிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இருவருக்கும் பொருத்தமாக இருந்தது.

 

ஆனால் அதை வெளியே சொல்ல முடியாது என்பதால் மனதை மறைத்தவள் “என்ன பா ரெண்டு பேரும் ஏதோ சொல்ல வந்துருக்குற மாதிரி இருக்கு”, என்று கேட்டாள்.

 

“ஹ்ம்ம் ஆமா மா, ஒரு விஷயம் பேசணும்”

 

“என்ன ராசா?”

 

“நீங்க சத்யா கிட்ட கல்யாணம் பத்தி பேசுனீங்களா?”

 

“ஆமா பா”

 

“எதுக்கு மா அவசரம்?”

 

“என்ன உன்னை இந்த கழுதை சிபாரிசுக்கு கூட்டிட்டு வந்துருக்காளா?”, என்று சிரித்தாள் அன்னலட்சுமி.

 

“அவளுக்கு பிடிக்கலைன்னா விட்டுறலாம்ல மா”

 

“உனக்கு பிடிக்கலைன்னா விட்டுருவேன் பா. ஏன்னா உன் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ உன் அம்மா அப்பா சொல்றதை தான் கேக்க முடியும். ஆனா அவளை அப்படி விட முடியாதே. எனக்கு சத்யா வேற தேன்மொழி வேற இல்லை. நான் நிம்மதியா கண்ணை மூடுணும்னா இவளையும் யார் கைலயாவது ஒப்படைக்கணும். இவ அம்மாவை நம்பி விட்டுட்டு போக முடியாது. அருளை பாத்தியா ராசா? அவன் வாழ்க்கையே போச்சு. வாழ்க்கைல தனக்கு கல்யாணமே கிடையாதுன்னு இருக்கான். அப்படி என் பிரியா தங்கத்தை விட முடியுமாப்பா?”

 

“இல்லை மா அது வந்து”

 

“நான் கட்டாய படுத்தலை பா. என்னோட ஆசையை சொன்னேன். ஆனா என் மேல உண்மையான அன்பிருந்தா அவ கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பா”

 

“இப்படி சொல்றதும் கட்டாயம் தான மா?”

 

“நீயும் புரியாம பேசுற விஷ்ணு. ஒரு பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் தான் இருக்க முடியும்? ஒன்னு மனசுல யாரவது இருக்கணும். இல்லைன்னா வாழ்க்கை லட்சியம் இருக்கணும். பிரியாக்கு  லட்சியம் எல்லாம் பெருசா ஒன்னும் இல்லை. அப்ப மனசுல இருக்குறவனை கூட்டிட்டு வரலாம்ல”

 

“என் மனசுல அப்படி யாரும் இல்லை அத்தம்மா”, என்றாள் சத்யா.

 

“பாத்தியா ராசா அவளே சொல்லிட்டா. அப்ப கல்யாணத்துக்கு சரி சொல்லலாம்ல. நீ அவளுக்கு புத்திமதி சொல்லு விஷ்ணு”

 

இப்போது அம்மா சொல்வது அவனுக்கு சரியாக பட்டது. “ஆமா அம்மா நீங்க சொல்றதும் சரி தான். நான் இவ கிட்ட பக்குவமா சொல்றேன்”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

இருவரையும் கொலை வெறியோடு முறைத்தாள் சத்யா. பற்றிய கையை விடாமல் அவளை மீண்டும் வெளியே இழுத்து சென்றான்.

 

மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவன் அவள் கைகளை விட்டான். “சார் இது உங்களுக்கே நியாயமா இருக்கா?”, என்று கேட்டாள் சத்யா.

 

“இல்லை சத்யா அம்மாவை பாரேன்.. அவங்க எவ்வளவு சந்தோசமா இருக்காங்க? அவங்களோட இப்போதைய கவலை நீ தான்”

 

“அதுக்கு? நான் இதனால தான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன். அத்தை என்னை தர்ம சங்கட படுத்துவாங்கன்னு தெரியும்”

 

“அம்மா  சொல்றதுல என்ன தப்பிருக்கு?” என்று விஷ்ணு கேட்டதும் அவனை முறைத்தவள் “என்ன விளையாடுறீங்களா? அத்தை கல்யாணம் செய்ய சொல்றாங்க. இப்ப அவங்க மேல உள்ள பாசத்தை நிரூபிக்கணும்னா நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். என்னால எப்படி முடியும்?”, என்று கேட்டாள்.

 

“ஏன் கல்யாணம் பண்றதுக்கு என்ன? எல்லாருக்கும் கல்யாணத்தை பத்தி ஒரு கனவிருக்கும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அம்மா இவனை தான் கட்டிக்கணும்னு சொல்லலையே”

 

“என்ன இருந்தாலும் என்னால முடியாது”

 

“நீ லவ்வும் பண்ணலை. அப்புறம் என்ன? பண்ணிக்க வேண்டியது தான?”

 

“நான் லவ் பண்ணலைன்னு தெரியுமா உங்களுக்கு?”

 

“ஏய் அப்ப லவ் பண்றியா அம்மா கேட்டதுக்கு இல்லைனு சொன்ன?”

 

“அது….”

 

“சரி விடு. ஆள் யாருனு சொல்லு அவங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிரலாம்”

 

“அது முடியாது”

 

“ஏன்? உண்மையான லவ்னா கல்யாணத்துல தான முடியனும்?”

 

“அவர்…. அவர் இங்க இல்லை”

 

“இங்க இல்லையா? சரி எந்த ஊருன்னு சொல்லு. போய் பேசுவோம்”

 

“அது முடியாது. என்னை விட்டுருங்க. எப்படியாவது அத்தை கிட்ட பேசுங்க”

 

“என்ன ஆச்சு சத்யா? யாருன்னு சொல்லு. அவர் என்ன பன்றாரு? ஒரு வேலை ஒன் சைட் லவ்வா? இல்லைனா அருள் மாதிரி அந்த பையனுக்கு கல்யாணம் ஆகிட்டா?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“என்ன ஆமா? நீ ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?”

 

“அப்படி எல்லாம் இல்லை. அவருக்கு கல்யாணம் ஆகிட்டு. அவரோட நினைவுல வாழ்ந்துட்டு இருக்கேன். இப்ப போய் இன்னொருத்தரைன்னா என்னால எப்படி முடியும்?”

 

“ஏய், நிஜமாவா? நீ லவ் பண்ணியா? உன்னை வேண்டாம்னு ஒருத்தன் சொல்லிட்டானா?”

 

“ம்ம்”

 

“சரி அவன் தான் போய்ட்டானே. இனி அவனை நினைச்சு என்ன செய்ய? அவனை மறந்துரு”

 

“முடியாது”

 

“உன் வாழ்க்கையை தியாகம் பண்ண போறியா?”

 

“நான் தியாகம் எல்லாம் பண்ணலை. அவரோட நினைவா வாழ போறேன். இதை சொன்னா யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க. ஏற்கனவே அருள் அண்ணா பத்தின கவலை எல்லாரையும் அரிச்சிகிட்டு இருக்கு. இந்த நேரத்தில் நானும் அப்படினு தெரிஞ்சா அத்தை துடிச்சு போயிருவாங்க”

 

“எத்தனை நாள் கல்யாணம் பண்ணாம இருக்க முடியும்? நானாவது பையன். ஆனா உனக்கு ஒரு துணை அவசியம் மா”

 

“நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியாம இல்லை. என்னால அவரை மறக்க முடியாது. நீங்க லவ் பண்ணிருந்தா அதோட அருமை தெரியும். லவ்னா என்னன்னு தெரியாதவங்களுக்கு எப்படி தெரியும்?”

 

“எனக்கும் லவ் பத்தி தெரியும் சத்யா. நானும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்”

 

நடுக்கத்துடன் “யாரை?” என்று கேட்டாள் சத்யா.

 

“என்னை விரும்புற ஒரு பொண்ணை”

 

அப்படியே குத்தாட்டம் போட வேண்டும் என்று சொன்ன மனதை அடக்கியவள் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு “ரொம்ப நல்லதா போச்சு. அப்ப உங்களுக்கு புரியுது தான? உங்களால அந்த பொண்ணை விட்டுட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ண முடியுமா?”, என்று கேட்டாள்

 

“முடியாது…. சத்தியமா முடியாது”

 

“அப்ப உங்களுக்கு ஒரு நியாயம். எனக்கு  ஒரு நியாயமா? ப்ளீஸ் அத்தை கிட்ட இருந்து காப்பாத்துங்க “

 

“ஆனா அம்மா கிட்ட என்ன சொல்லனு தெரியலையே. எதுக்கும் இன்னொரு தடவை பேசி பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு அகன்றான்.

 

மறுபடியும் அவன் அன்னலட்சுமியிடம் பேசிய போது “அவளை நினைச்சு கவலை படாத ராசா. இப்படி தான் சின்ன வயசுல இருந்து பிடிவாதம் பிடிப்பா. அதுக்கப்புறம் ஒத்துக்குவா”, என்றாள்.

 

“பிடிக்காம எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க கூடாதும்மா”

 

“நேத்து நீங்க ரெண்டு பேரும் நடந்து வரும் போது எனக்கு உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு தோணுச்சு”, என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கினாள் அன்னலட்சுமி.

 

அதிர்ச்சியாக அவன் முழிப்பதை பார்த்தவள் “ஆனா உன்னோட கல்யாணம் பத்தி முடிவெடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனா நீ சத்யா விஷயம் பத்தி பேசினா, நீ என் மேல உண்மையான அன்பிருந்தா அவளை தான் கட்டிக்கணும்னு உன்னையும் சொல்ல வேண்டி இருக்கும் பரவால்லையா? நீ அவளை கூப்பிட போய் தான் அவ வந்தா. அதனால நீ சொன்னா கண்டிப்பா அவ கேப்பா. அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

“அப்பாடி பொழைச்சோம்”, என்று நினைத்தவனுக்கு சத்யாவிடம் என்ன சொல்வதென்று புரியவே இல்லை. இரண்டு பெண்களிடமும் நியாயம் இருக்கும் போது அவனும் என்ன செய்ய முடியும்? தன் மகளுக்கு மட்டும் திருமணத்தை முடித்து விட்டு உயிருக்கு உயிரான மற்றொரு மகள் போன்றவளை தனியே விட அந்த தாய்க்கு மனதில்லை.

 

மனதில் ஒருவனை சுமந்து கொண்டு தாய்க்கும் மேலான அன்பு வைத்த அத்தை மேல் உள்ள பாசத்தை நிரூபிக்க அவளுக்கும் வழி  இல்லை.

 

ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டி கொண்டு விழித்தான் விஷ்ணு. அவளோட காதலை அம்மாவிடம் சொல்லி விடலாம் என்றாள் அவளுடைய காதலை பற்றி அவள் தான் சொல்ல வேண்டும். அவன் சொல்ல கூடாது என்று அவன் நியாயம் மனம் சொன்னது.

 

யோசனையில் நேரத்தை கழித்த விஷ்ணுவை “வாங்க அத்தான் வீட்டை போய் பாப்போம்”, என்று சொல்லி அழைத்து சென்றான் அருள். அருளுடன் விஷ்ணு, வீட்டுக்கு சென்ற போது அங்கே வீட்டை சுற்றி மர கன்றுகளை நட்டு வைத்து கொண்டிருந்தாள் சத்யா.

 

“ஏய் வாலு என்ன டி பண்ற?” என்று கேட்டான் அருள்.

 

“இப்ப வச்சா வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ள கொஞ்சம் வளந்துரும் அண்ணா அதான்” என்று சிரித்தாள் சத்யா.

 

“சூப்பர் ஐடியா” என்று சிரித்தான் விஷ்ணு.

 

அடுத்த நாள் மாலை அன்னலட்சுமி அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்தான் விஷ்ணு.

 

இருவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்த சத்யா இருவருக்கும் கொடுத்தாள் ஆனால் அன்னலட்சுமி அவள் முகம் பார்க்காமல் “எனக்கு வேண்டாம்”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டாள்.

 

ஏற்கனவே அத்தை தன்னிடம் பேசவில்லை என்று கவலையில் இருந்த சத்யாவுக்கு இந்த நிராகரிப்பு கண்களை கலங்க வைத்தது. அங்கிருந்து விருட்டென்று சென்று விட்டாள்.

 

“அம்மா நீங்க செஞ்சது தப்பு மா. பாவம் அவ” என்று சொல்லி விட்டு அவள் பின்னே சென்ற விஷ்ணு அங்கு கண்ட காட்சியை கண்டு திகைத்தான்.

 

அங்கே அவள் அறையில் தூக்கு போடுவதற்காக கயிறை மேலே கட்டி கொண்டு  நின்றாள். ஜன்னல் வழியே இந்த காட்சியை கண்டவன் அதிர்ந்தான். அடுத்த நிமிடம் கதவை அவன் திறக்க முயற்சிக்கும் போது அது ஒரே தள்ளலில் திறந்து.

 

“அவசரத்தில் பூட்டாம போயிருக்கா. நல்லதா போச்சு”, என்று நினைத்து கொண்டு அவள் அருகில் சென்றவன் அவள் கரம் பற்றி சேரில் இருந்து கீழே இழுத்தான். அடுத்த நிமிடம் அவன் கரம் இடியென அவள் கன்னத்தில் இறங்கியது.

 

கண்களில் நீரோடு கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்து கொண்டிருந்தாள் சத்யா.

 

“அறிவிருக்கா டி உனக்கு? என்ன காரியம் செய்ய இருந்த? ஒரு நிமிஷம் நான் வராம போயிருந்தா என்ன ஆகியிருக்கும் ? வீட்ல யாரும் இல்லாத நேரத்துல யாராலயும் உன்னை காப்பாத்திருக்க முடியாது”

 

அவன் சொன்ன டி அவளுக்கு தித்தித்தது. ஆனாலும் அதை மறைத்து  “நீங்க எதுக்கு சார் என்னை காப்பாத்துனீங்க? எனக்கு வாழவே விருப்பம் இல்லை. பாத்தீங்க தான? அத்தம்மா என்கிட்ட பேச மாட்டிக்கா. அவளுக்கு நிறைய புது சொந்தம் எல்லாம் வந்ததுனால என்னை பிடிக்கலை போல? எனக்குன்னு வாழ்க்கைல எதுவுமே இல்லை. இப்ப அத்தம்மா அன்பும் இல்லை. நான் எல்லாம் வாழ்ந்து என்ன சாதிக்க போறேன்?”, என்று கண்ணீருடன் சொன்னாள்.

 

“புது சொந்தம்”, என்று தன்னைத்தான் சொல்கிறாள் என்று புரிந்தாலும் “அம்மா நடந்துக்கிட்டது தப்பு தான். இப்படி முரண்டு பிடிச்சா கல்யாணத்துக்கு நீ சம்மதிப்பனு அவங்க அப்படி நடந்துக்குறாங்க. அவங்க படிக்காதவங்க. நீ படிச்சவ தான டி?” என்றான்.

 

“மனசு விசயத்துல படிச்சவங்க என்ன படிக்காதவங்க என்ன சார்?”

 

” முதல்ல இந்த சாருன்னு கூப்பிடுறதை நிறுத்து. எரிச்சலா வருது. இப்ப என்ன உன் பிரச்சனைக்கு ஒரு முடிவு வேணும் அப்படி தான? நீ பேசாம என்னையே கல்யாணம் பண்ணிக்கோ”

 

“சார்….. அத்தான்….”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள் சத்யா.

 

“பயப்படாத நான் ஆசைல எல்லாம் சொல்லலை. வேற அர்த்தத்துல சொன்னேன். என்னை கல்யாணம் பண்ணா அம்மாவும் சமாதானம் ஆகிருவாங்க.  உனக்கு பாதுகாப்பும் என்னால கொடுக்க முடியும். அவங்களுக்காக நாம கணவன் மனைவியா நடிக்கலாம்”

 

“அப்ப உங்க காதல்? அவளை தான நீங்க கல்யாணம் பண்ணனும்? வேண்டாம் சார்… அத்தான்….. போன  ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ? மனசுக்கு பிடிச்சவன் கூட இருக்க முடியாம அல்லாடுறேன். இப்ப உங்க காதலை பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம்”

 

ஒரு பெரு மூச்சை வெளியேற்றிய விஷ்ணு “ஒரு வகையில இந்த கல்யாணம் எனக்கும் ஒரு விடுதலையை கொடுக்கும்”, என்றான்.

 

“என்ன அத்தான் சொல்றீங்க?”

 

“நான் விரும்புற பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது. அவ முகத்தை கூட நான் பாத்தது இல்லை. அங்க டெல்லில உள்ள அம்மா அப்பா எனக்கு கல்யாணம் பண்ணியே வைக்கணும்னு உயிரை வாங்குறாங்க. இப்ப உன்னை கல்யாணம் பண்ணுனா அவங்களை சமாளிக்கலாம். நான் விரும்புன பொண்ணு எனக்கு கிடைக்கிற வரை நீ என் கூட இரு”, என்று அவன் சொல்லும் போது அவனை இடை மறுத்தவள் “அவங்க வந்த அப்புறம் விலகிருன்னு சொல்றீங்களா அத்தான்? இது தான் சாக்குன்னு நீங்களும் என்னை யூஸ் பண்றீங்களா?”, என்று கேட்டாள்.

 

“அப்படி சொல்லலை சத்யா. கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நீயும் நானும் நண்பர்களா தான் இருக்க போறோம். உன் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் நான் உனக்கு செய்வேன். உன்னோட லைப் என்னோட பொறுப்பு. இந்த முடிவு கூட உன்னை காப்பாத்த தான். எனக்காக இல்லை. பிடிக்கலைன்னா விட்டுரு. வேற யோசிப்போம்”

 

“சரிங்க அத்தான் எனக்கு புரியுது. உங்க காதலி வந்த பிறகு நான் என் வழியை பாத்துட்டு போய் கிட்டே இருப்பேன். ஆனா அத்தைக்கு இந்த விசயம் தெரிஞ்சா தாங்க மாட்டாங்க”

 

“அம்மாவுக்கு தெரியாது. நாம இருக்க போறது டெல்லில. அவங்க இங்க இருப்பாங்க. டெல்லில உள்ள என்னோட அம்மா அப்பா இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. அதனால பாத்துக்கலாம் “

 

“இப்ப என்னை கல்யாணம் செய்ய உங்க அம்மா அப்பா ஒத்துக்குவாங்களா?”

 

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க”

 

“அப்ப என்ன செய்ய போறீங்க? அதுவும் இப்ப என்னை கல்யாணம் பண்ணா அத்தை தான் உங்களுக்கு சொல்லி கொடுத்து இப்படி செஞ்சீங்கன்னு உங்க அம்மா அப்பா அத்தையை திட்டுவாங்க”

 

அது விஷ்ணுவுக்கும் தெரியுமாதலால் “அதெல்லாம் நான் பாத்துக்குறேன். இப்ப உனக்கு சந்தோசம் தான? இனி இப்படி தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு”, என்று கையை நீட்டினான்.

 

அவன் உள்ளங்கை மீது கை வைத்தவள் “உன்னை கல்யாணம்  பண்ணனும்னு தவம் இருக்கேன் டா. அது நடக்கும் போது நான் ஏன் சாக போறேன்?”, என்று நினைத்தவள் “இனி இப்படி பண்ண மாட்டேன் அத்தான்”, என்றாள்.

 

“குட் சரி நான் அம்மா கிட்ட போய் உன்னை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம்னு சொல்றேன். அவங்க உங்கிட்ட சம்மதம் கேட்டா கொஞ்சம் பிகு பண்ணிட்டு சம்மதம் சொல்லு சரியா?”

 

“ஹ்ம்ம் சரிங்க அத்தான்”, என்று சிரித்தாள் சத்யா. அவள் சிரிப்பில் அவன் முகமும் மலர்ந்தது.

 

அன்னலட்சுமி அருகில் பாலை ஆத்தி கொடுத்து கொண்டிருந்த தேன்மொழி “இருந்தாலும் நீ பிரியாவை இப்படி எல்லாம் கஷ்ட படுத்த கூடாதும்மா. பாவம் அவ. அவளோட இஷ்டத்துக்கே விடேன். நீ பேசாம இருந்தா அவ தாங்க மாட்டா. நீ சின்னதா திட்டிட்டாளே அவ நாலு நாள் நிம்மதியா இருக்க மாட்டா.  இப்ப பேசாம இருந்தா எப்படி மா?”, என்று கேட்டாள்.

 

“ஏட்டி, அவளும் நல்லபடியா வாழ வேண்டாமா? உங்க அத்தை எப்ப என்ன செய்வான்னு தெரியாது. திடிர்னு அவ வாழ்க்கையும் புதை குழில போய் விழணுமா? ஒரு நல்லவன் கையில் அவளை பிடிச்சு கொடுக்க வேண்டாமா? நான் இருக்கும் போதே என்னோட பேர பிள்ளைகளை கொஞ்சனும்னு எனக்கு ஆசை இருக்காதா? மூணு நாள் அழுவா. அப்புறம் சரியாகிருவா”

 

“இவ்வளவு சொல்றவ உன் பையனுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சு அவனோட பேர பிள்ளைகளை கொஞ்ச வேண்டியது தான?”, என்று தேன்மொழி கேட்டதும் அன்னலட்சுமி கண்ணீர் வடித்தாள்.அப்போது உள்ளே வந்த விஷ்ணு காதில் “எனக்கு மட்டும் ஆசை இல்லாமலா டி? ஆனா அவனை நான் கண்ணால பாத்ததே பெருசு. அப்படி இருக்கும் போது அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க எல்லாம் எனக்கேது குடுப்பனை?”, என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.

 

“அம்மா”, என்ற  படியே அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான். “நான் உங்க பிள்ளை மா. நீங்க ஏன் நம்ப மறுக்கீங்க?”

 

“இல்லை பா. உன் மேல எனக்கு அவ்வளவு உரிமை எல்லாம் இல்லை”

 

“யார் சொன்னது? எல்லா உரிமையும் இருக்கு. நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான்”

 

“அண்ணே அப்படி எல்லாம் சொல்லாத. அம்மா உன் கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கு”

 

“அதை தான் நானும் சொல்றேன். எனக்கும் அம்மா நல்ல பொண்ணை பாத்து கட்டி வச்சா கூட எனக்கு சம்மதம் தான்”

 

“ராசா நான் உனக்கு பொண்ணு பாக்கலாமா? அந்த உரிமை எனக்கு இருக்கா?”

 

“கண்டிப்பா இருக்கு மா”

 

“உன்னை வளத்தவுக என்ன சொல்லுவாக

 

“என் கல்யாணம் கண்டிப்பா அவங்க சொல்ற படி நடக்காது மா. அவங்க பாக்குற பொண்ணை கண்டிப்பா நான் கட்டிக்க மாட்டேன். அவங்க பணத்துக்கு தான் மதிப்பு கொடுப்பாங்க. குணத்துக்கு இல்லை. அதனால அவங்க பாத்த பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு தான் இங்க வந்தேன்”

 

“அப்படியா? ஆனா ராசா மாதிரி இருக்குற உனக்கு இங்க எந்த பொண்ணு பா கிடைக்கும்? உனக்கு பொண்ணு பாக்க எல்லாம் இந்த கிழவியால முடியாதுப்பா”

 

“அம்மா நான் ஒன்னு சொல்லவா? எனக்கு புடிச்ச பொண்ணு ஒருத்தி இருக்கா. என்ன ரெண்டு பேரும் முழிக்கிறீங்க? நான் சத்யாவை தான் சொல்றேன். எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லா படிக்கவும் செஞ்சிருக்கா. ஆளும் அழகா இருக்கா. அவ குணமும் அப்படியே உங்களை மாதிரி இருக்கு” என்று விஷ்ணு சொன்னதும் “அண்ணா….” “ராசா..”, என்று இருவரும் சந்தோசத்துடன் கூவினார்கள்.

 

“எப்பா நீ நிஜமாவா சொல்ற? பிரியாவை உனக்கு பிடிச்சிருக்கா?”

 

“ரொம்ப பிடிச்சிருக்கு மா”

 

“ரொம்ப சந்தோசம் ஐயா. ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கும்” என்று சந்தோசத்துடன் சொன்ன அன்னலட்சுமி சோகத்துடன் “ஆனா அந்த கழுதை கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு சொல்லுதே” என்றாள்.

 

“அம்மா எனக்கு என்னமோ அவள் வேற யாரையும் கட்டி கிட்டா உங்களை விட்டு பிரியவேண்டியது வரும்னு நினைச்சு தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறா போல? நீங்களே நான் தான் மாப்பிள்ளைன்னு சொல்லி பாருங்க. அவ என்ன சொல்றான்னு”, என்ற விஷ்ணு சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

 

“தேனு எனக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. நம்ம பிரியாவை  கட்டிக்கிட்டா விஷ்ணுவை அடிக்கடி நாம போய் பாக்கலாம்ல?”

 

“உனக்கு உன் கவலை. போமா முதல்ல உன் மருமக கிட்ட போய் விஷயத்தை சொல்லு. கடவுளே அவ மட்டும் கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டா சந்தோசமா இருக்கும்”, என்று சொல்லி விட்டு சென்றாள் தேன்மொழி.

 

ஒரு வித குதூகலத்துடன் சத்யாவின் அறைக்கு சென்றாள் அன்னலட்சுமி. அவளை பார்த்ததும் “அத்தம்மா என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் சத்யா.

 

அந்த அறையின் கதவை அடைத்து தாள் போட்ட அன்னலட்சுமி “நீ சொல்லி கொடுத்த மாதிரியே நடிச்சேனா? ஆத்தா அவன் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான். அம்மாடி, எனக்கு சந்தோசமா இருக்கு”, என்று சிரித்தாள்.

 

“எனக்கு தான் தெரியுமே”, என்று நினைத்து கொண்டு “அப்படியா அத்தம்மா? இப்ப உனக்கு சந்தோசமா? உன் பிள்ளையை நீ அடிக்கடி பாக்கலாம்ல?”, என்று சிரித்தாள்.

 

“கடைசி வரைக்கும் அவன் என் கூடவே இருப்பான். எனக்கு என் பிள்ளை கொள்ளியும் போடும். தங்கம், எல்லாமே உன்னால தான்”, என்று சொன்னவள் முகத்தில் மகிழ்ச்சியின் ஆரவாரம் தெரிந்தது.

 

“ரொம்ப புகழாத அத்தம்மா. எல்லாம் உனக்காக தான்”

 

“உங்க அம்மாவும், மாமாவும் என்ன சொல்லுவாங்களோனு கவலையா இருக்கு டி”

 

“எனக்கும் அந்த பயம் இருக்கு அத்தம்மா”

 

“நீ கவலை படாத. நான் செந்தில் கிட்டயும் அருள் கிட்டயும் சொல்லிட்டு வாறேன்”,  என்று சொல்லி விட்டு அன்னலட்சுமி சென்றதும் “ஹா ஹா”, என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் சத்யா.

 

பின்னே இந்த நாடகத்தின் இயக்குனரே அவளல்லவா?

 

தீ பற்றும் …….

 

Advertisement