Advertisement

அத்தியாயம் 10

 

என்னை தீண்டும்

உன் கள்ள

பார்வையை நினைத்தால்

பற்றும் காதல் தீ!!!!!

 

வீட்டின் முன்னே மணி காரை நிறுத்தியதும் சந்தோசத்துடன் இறங்கிய தேன்மொழி, “அப்பா இன்னும் வரலை மா. வீடு பூட்டியே இருக்கு பாரு. இரு நான் பாட்டி கிட்ட சாவியை வாங்கியாறேன்”, என்று சொல்லி ஓடியே போனாள்.

 

“பாத்து இறங்குங்க அம்மா”, என்று அவளுக்கு கதவை திறந்து விட்ட படி நின்றான் விஷ்ணு.

 

சந்தோசத்துடன் இறங்கிய அன்னலட்சுமி, “நீ வெளியவே நில்லு ராசா”, என்று சொல்லி விட்டு கதவை திறந்த தேன்மொழியின் பின்னே சென்றாள்.

 

“சார், எனக்கு ஏதோ படம் பாக்குற மாதிரியே இருக்கு”, என்றான் மணி.

 

“என் வாழ்க்கை, உங்களுக்கு படம் மாதிரி இருக்கா?”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“என்ன ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? அத்தை ஆரத்தி  கரைச்சு எடுத்துட்டு வாரங்க பாருங்க. வாங்க”, என்றான் செந்தில்.

 

“இங்க நின்னு பா”, என்று சொல்லி அவனுக்கு ஆரற்றி சுற்றி விட்டு “உள்ளே வா பா”, என்றாள் அன்னலட்சுமி.

 

அனைவரும் உள்ளே சென்றார்கள். அப்போது தான் இவர்கள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள் வடிவும் ஆறுமுகமும்.

 

“ஏப்பா, என்ன பொண்டாட்டியை ஆஸ்பத்திரில சேத்துருக்கு. நீ அக்கா வீட்ல விருந்து சாப்பிட்டுட்டு சாவகாசமா வார?”, என்று கேட்டார் கடையில் இருந்த மாரியப்பன்.

 

“அவ தினமும் ஆஸ்பத்திரில கிடப்பா. அதுக்கு நான் என்ன செய்ய?”, என்று திமிராய் கேட்டார் ஆறுமுகம்.

 

“அதுவும் சரி தான். நீ என்ன செய்ய முடியும்? ஆனா இனியும் நீ ஒன்னும் செய்ய வேண்டாம். அதுக்கு தான் ஆள் வந்துட்டே”

 

“ஆளா? செந்திலை சொல்றியா?”, என்று ஆறுமுகம் கேட்டதும் “என் மகனை தான் சொல்லுவான். வேற யாரை சொல்லுவான். என்ன மாரியப்பா அப்படி தான?”, என்று கேட்டாள் வடிவு.

 

“மருமகனை நான் எப்படி பா சொல்ல முடியும்? அதான் உன் பிள்ளையே வந்துட்டானே”, என்று அவர்கள் தலையில் இடியை தூக்கி போட்டான் மாரியப்பன்.

 

“என்னது மகனா? என்ன மாரியப்பா சொல்ற?”

 

“போச்சு போ, உனக்கு விஷயமே தெரியாதா? நேத்தே உன் பிள்ளை வந்தாச்சு. அதான் பா. பிறந்ததும் தத்து கொடுத்துட்டு வந்தியே? ஆம்பளை புள்ளை. சும்மா சிங்கம் மாதிரி வந்துருக்கான். இப்ப தான் எல்லாரும் ஆஸ்பத்திரில இருந்து வீட்டை பாத்து போனாக. போய் பாரு”

 

அவசரமாக இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். “என்ன ஆறுமுகம்? இவன் இப்படி சொல்றான்?”, என்றாள் வடிவு.

 

“அதான் அக்கா எனக்கும் புரியலை. அவன் எப்படி வந்துருக்க முடியும்? அது பெரிய இடமாச்சே”

 

“நான் சொல்றேன் கேட்டுக்கோ. இது தான் சாக்குன்னு உன் பொண்டாட்டி ரொம்ப ஆடுவா. எப்பவும் போல அவளை தட்டியே வைக்கணும்”

 

“ஆமா அக்கா. அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ வா”, என்று சொல்லி விரைந்து சென்றார் ஆறுமுகம்.

 

வீட்டுக்கு வெளியே செருப்பை கழட்டும் போது உள்ளே கேட்ட அன்னலட்சுமியின் சிரிப்பை கேட்டு இருவருக்கும் தீயாக எரிந்தது. அதே கொலை வெறியுடன் உள்ளே நுழைந்தார்கள். இருவரை பார்த்ததும் அனைவரின் சிரிப்பும் அப்படியே உறைந்தது. அன்னலட்சுமி அதிர்ச்சியாக விழித்தாள்.

 

அங்கே மேல் நாட்டினர் போல், இந்த கிராமத்துக்கு ஒட்டாத அதே நேரம் தேன்மொழி ஜாடையில், ராஜ கம்பீரத்துடன் அமர்ந்திருந்த அவனை பார்த்து இருவரும் வாயை பிளந்தார்கள்.

 

அவர்களை திரும்பி பார்த்து முறைத்தான் விஷ்ணு. பின் தலையை திருப்பி கொண்டு “அம்மா நீங்க சொல்லுங்க மா, வேற என்ன ஆசை எல்லாம் உங்களுக்கு இருக்கு?”, என்று கேட்டான்.

 

ஆனால் அன்னலட்சுமியோ மகனையும் கணவனையும் மாறி மாறி பார்த்த படி இருந்தாள். அவள் வயிற்றுக்குள் கலவரம் மூண்டது. அதை பார்த்த விஷ்ணு “அம்மா”, என்று அதட்டி அழைத்து முழு கவனத்தையும் தன் மீது திருப்பினான்.

 

“ஏய் என்ன டி? எல்லாரும் சேந்து நாடகம் நடத்துறீங்களா? மகனாம் புதுசா எங்க இருந்து வந்துருக்கானாம்? மகளே என் தம்பி பிள்ளை இல்லை. இதுல மகன் எங்க இருந்து வந்தான்? என்ன மா அம்மா அம்மான்னு உருகுறான்? என்னால பாக்க முடியலை தம்பி இந்த நாடகத்தை”, என்றாள் வடிவு.

 

“என்னை தான் அசிங்க படுத்தணும்னே பிறவி எடுத்துருக்காளேக்கா. பாவி நாசமா போறவ. பிறந்தப்ப தத்து கொடுத்தேன்னு சொன்னா. இன்னும் எத்தனை பேர் னால எத்தனை பிள்ளைங்க இவளுக்கு பிறந்திருக்கோ….”, என்ற வார்த்தையை ஆறுமுகம் முடிக்க கூட இல்லை “ஏய், வாயை மூடு”, என்று கத்தி இருந்தான் விஷ்ணு.

 

அவனுடைய ஆளுமையான அரட்டலில் அந்த இடமே அமைதியானது. குண்டூசி விழுந்தால் கூட கேட்காத அளவுக்கு எல்லாரும் அமைதியானார்கள். அன்னலட்சுமி சேலை முந்தானையை வாயில் வைத்த படி அழுது கொண்டிருந்தாள்.

 

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? இப்படி அசிங்கமா பேச உங்களுக்கு வெக்கமா இல்லை? எம்மா நீயும் பொம்பளை தான? எங்க அம்மா சுத்தமானவங்க. அவங்களுக்கு பிரசவம் பாத்த டாக்டரை வர வைக்கவா? அவங்க சொல்லுவாங்க. நானும் தேன்மொழியும் எப்படி பிறந்தோம்னு”, என்றவன் ஆறுமுகத்தை பார்த்து “நீ எல்லாம், உயிரோட இருக்கணும்னு தியாகம் பண்ண அவங்களையா நரம்பில்லாம பேசுற? நீ எல்லாம் செத்தே போயிருக்கணும். ச்சி, தினமும் இப்படி பேசி பேசி தான அவங்களை இந்த நிலைமைல வச்சிருக்கீங்க? இனி விட மாட்டேன். இனி ஒரு வார்த்தை பேசுனா இங்க கொலையே விழும். வெளியே போங்க”, என்று கர்ஜித்தான்.

 

ஆறுமுகம் கப் சிப் என்று அமைதியாகி விட்டார். ” ஏய், இது என் தம்பி வீடு. இன்னைக்கு வந்தவன் எங்களை வெளிய போக சொல்றியா?”, என்று திட்டினாள் வடிவு.

 

“ஓஹோ, அதுவும் சரி தான். அம்மா கிளம்புங்க, நாம போவோம். உங்களுக்கு நான் இருக்கேன்”

 

“இல்லப்பா, அது”, என்று இழுத்தாள் அன்னலட்சுமி. “என்னை நம்புறீங்கன்னா, என் மேலே உண்மையே அன்பிருந்தா என் கூட வாங்க மா. வருவீங்களா மா?”

 

“வருவேன் பா. என் பிள்ளை இருக்கும் போது எனக்கு என்ன கவலை? வா போகலாம்”, என்று அன்னலட்சுமி கிளம்பியதும் ஆறுமுகம் திகைத்தார்.

 

அடுத்த நொடி அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். “போகட்டும் டா. புதுசா வந்துருக்க மகன்ல? அதான். எத்தனை நாளைக்குன்னு பாப்போம்’, என்றாள் வடிவு.

 

“அடுத்து என்ன செய்ய?”, என்று யோசித்தான் விஷ்ணு. “எங்க அம்மாவுக்கு எல்லாம் நல்ல சாவே வராது. நீங்க அடுத்து என்ன செய்யன்னு மெதுவா யோசிங்க? இப்போதைக்கு என்னோட வீட்டுக்கு போவோம் வாங்க. தேனு கூப்பிடு. அத்தை வாங்க”, என்றான் செந்தில்.

 

அது சரி என்று படவே எல்லாரும் அவன் பின்னே சென்றார்கள். “ஏய் சின்ன கழுதை? நீ எங்க டி போற? அவனுக்கு தான் அவன் புது பொண்டாட்டி மேல மயக்கம். அத்தை காரியை கூட்டிட்டு போறான். அவன் பின்னாடி நீ ஏன் போற?”, என்று சத்யாவை பார்த்து கத்தினாள் வடிவு.

 

“பின்ன அண்ணண் பின்னாடி போகாம உன் வீட்டுக்கு வந்து என்னை நாசமா போக சொல்றியா? அக்கா அக்கான்னு உன் மேல பாசம் வச்சு உருகுற உன் தம்பி வாழ்க்கையை பேசி பேசியே நரகமா மாத்திட்ட. என் வாழ்க்கையை கெடுக்க நான் விட மாட்டேன். முதல்ல எங்க அப்பாவை கொன்ன. எங்க அத்தையை நல்ல வாழ விடாம பண்ண. அருள் அண்ணா வாழ்க்கையை சீரழிச்ச. மாமாவையும் கொன்னுரு. நீயெல்லாம் பொம்பளையா? வா அண்ணே போகலாம்”, என்று சொல்லி தேன்மொழியின் கை பிடித்து நடந்தாள் சத்யா.

 

முதல் முறையாக அவளை பெருமையாக பார்த்தான் விஷ்ணு. ஏற்கனவே தேன்மொழியும் சத்யா பற்றி சொல்லி இருந்ததால் அவளை பற்றி எழுந்த தவறான எண்ணம் மறைந்து போனது.

 

பெற்ற பையன் “எங்க அம்மாவுக்கு நல்ல சாவே வராது”, என்று சொன்னதும் துணுக்குற்ற வடிவு ஒரே ஒரு செல்ல மகள் “நீ எல்லாம் பொம்பளையா?”, என்று கேட்டதும் மனதில் முதல் முறையாக அடி வாங்கினாள். போகும் அவர்களையே ஆறுமுகமும் வடிவும் பார்வையால் வெறித்தார்கள்.

 

மணியும் அவர்களுடன் நடந்தான். அடுத்த தெருவில் தான் செந்தில் வீடு இருந்தது. அதுவும் புது வீடு. அவர்கள் கல்யாணம் அன்று தான் பால் காச்சினார்கள். எல்லாரையும் இன்முகத்துடன் உள்ளே அழைத்தார்கள் செந்திலும் தேன்மொழியும்.

 

புதிதாக கட்டிய வீடு என்பதால் பெரியதாகவே இருந்தது. அன்னலட்சுமிக்கு ஒரு அறையை காட்டிய தேன்மொழி “நீ மாத்திரை சாப்பிட்டு ஓய்வு எடுக்கணும் மா”, என்றாள்.

 

“நான் என் பையன் கூட பேசணுமே”, என்று எந்த கவலையும் இல்லாமல் உரைத்தாள் அன்னலட்சுமி.

 

“அம்மா, நீங்க ஓய்வு எடுங்க. நான் இங்க தான இருக்க போறேன்? அப்புறம் பேசலாம்”, என்றான் விஷ்ணு.

 

“நீயும் சரியா தூங்கலைண்ணே. நீயும் கொஞ்ச நேரம் தூங்கு. அதுக்கு முன்னாடி சாப்பிடணும். என்னங்க எதாவது செய்யவா?”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“இன்னும் செஞ்சா நேரம் ஆகும் தேனு. நான் போய் ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி செந்தில் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.

 

அதன் பின் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குளித்தார்கள். தேன்மொழியும், சத்யாவும் குளத்துக்கு குளிக்க சென்று விட்டார்கள்.

 

செந்தில் உணவு வாங்கி வரும் போது அனைவரும் குளித்து முடித்து பேசி கொண்டிருந்தார்கள். அவன் வாங்கி வந்த உணவை உண்ட பிறகு மணி “நான் ஊருக்கு கிளம்புறேன் சார்”, என்றான்.

 

ஒரு நண்பனாக தன்னுடன் இருந்த மணியை பிரிய வருந்தினான் விஷ்ணு. ஆனாலும் அவன் திரும்பி போய் தான் ஆக வேண்டும் என்பதால் “ஒரு நாள் இருந்துட்டு போகலாமே மணி?”, என்றான்.

 

“இல்லை சார். சும்மா இருந்து என்ன செய்ய? அதான்”

 

“சும்மாவா? சரி ஒன்னு பண்ணலாம். மணி இப்ப பதினொன்னு. ரெண்டு மணி வரைக்கு எல்லாரும் தூங்குறோம். அப்புறம் எங்க எல்லாரையும் கடைக்கு கூட்டிட்டு போறீங்க. நைட் நீங்க கிளம்புங்க. காலைல உங்க குழந்தைகளை பாக்கலாம் ஓகே வா?”

 

“சரி சார்”

 

அதே மாதிரி இரண்டு மணிக்கு அனைவரையும் கடைக்கு கிளம்ப சொன்னான் விஷ்ணு. “நான் வரலை”,என்று சொல்லி அவனுக்கு பி.பி ஏற்றினாள் சத்யா. “ஆமா பா, நானும் வரலை. நான் எல்லாம் எதுக்கு அங்க?”, என்றாள் அன்னலட்சுமி.

 

“அம்மா அவ வருவா. நீங்க கிளம்புங்க”, என்றவன் அவளருகே வந்து “தேவை இல்லாம சீன் கிரியேட் பண்ணாத. இப்ப நீ கிளம்பியாகணும். இல்லைன்னா, தூக்கி காருல போடுவேன். அப்புறம் உன் இஷ்டம்”, என்றான்.

 

அவனை முறைத்த படியே கிளம்ப போனாள் சத்யா. செந்தில் தனக்கு வெளியே வேலை இருக்கிறது என்று சொல்லியதால் மற்ற அனைவரும் சென்றார்கள். அவர்களை மதுரைக்கு அழைத்து சென்றவன் உயர் ரக ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.

 

அவர்கள் மறுக்க மறுக்க வித விதமாக வாங்கி கொடுத்தவன் “அம்மா அம்மா”, என்று அன்னலட்சுமியை தங்கினான்.  அவளோ மகனின் அன்பில் உருகி தான் போனாள். பின் அவர்களை துணி கடைக்கு அழைத்து சென்றவன் அங்கேயும் தன் அன்பை காட்டினான்.

 

எல்லாவற்றையும் வாங்கி விட்டு வீட்டுக்கு வர மாலை ஆறு மணி ஆனது. அதன் பின் அன்னலட்சுமி ஓய்வெடுக்க செல்ல, சத்யாவும் தேன்மொழியும் இரவு உணவை கவனிக்க சென்றார்கள்.

 

செந்தில், மணி, விஷ்ணு மூவரும் காற்று வாங்கிய படியே பேசி கொண்டிருந்தார்கள். உணவு முடிந்ததும் “நான் கிளம்புறேன் சார். சென்னை வந்தா என்னை தான் கூப்பிடனும் சரியா?”, என்று அன்பு கட்டளை விடுத்தான் மணி.

 

“கண்டிப்பா மணி, நீங்க என்னோட அண்ணண் மாதிரி. அடுத்த தடவை வரும் போது குழந்தைகளை பாக்க வரேன். பத்திரமா போய்ட்டு வாங்க”, என்று சொன்ன விஷ்ணு தேவைக்கு அதிகமாகவே பணத்தை கொடுத்தான். “காருக்கு மட்டும் கொடுங்க சார்”, என்றான் மணி.

 

“அன்பா கொடுக்குறதை மறுக்க கூடாது மணி”, என்று சொல்லி அவன் கைகளில் திணித்தான். அவன் சென்ற பிறகு தன் கையில் பணம் அதிகம்  இல்லை என்ற நினைவு வந்தது. “ஏ டீ எம் ல நாளைக்கு பணம் எடுக்கணும்”, என்று நினைத்து கொண்டான்.

 

பணத்தின் நினைவு வந்த பிறகு தான் பிரதாப் மற்றும் புவனாவின் நினைவு வந்தது. மனதினுள் குற்றவுணர்ச்சி எழுந்தது.

 

தன்னுடைய பையில் இருந்து மொபைலை எடுத்தான். அதுவோ சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. சார்ஜரை எடுத்து சார்ஜ் போட்டு வைத்தான். சிறிது நேரம் கழித்து அதை அவன் ஆன் செய்யும் போது அதில் பலருடைய அழைப்பு பதிவாகி இருந்தது.

 

முதலில் பிரதாப்பை அழைத்தான். புவனா தான் எடுத்தாள். எடுத்ததுமே அழுதவள் “அதுக்குள்ளே எங்களை எல்லாம் மறந்துட்டல?”, என்று கேட்டாள்.

 

“அம்மா என்ன இது, சின்ன பிள்ளை மாதிரி? இங்க கொஞ்சம் பிரச்சனை மா. அதான் போன் எடுக்க முடியலை. சாரி”

 

“பிரச்சனைன்னா எதுக்கு அங்க இருக்கணும்? கிளம்பி வர வேண்டியது தான?”

 

“கொஞ்ச நாள் இருந்துட்டு வந்துருவேன் மா ப்ளீஸ்”

 

“ஹ்ம்ம் சரி, அங்க உனக்கு நல்ல வசதியா இருக்கா?”

 

“ஹ்ம்ம் இருக்கு மா”

 

“பாத்து பா. பணம் புடுங்குறவங்களா இருக்க போறாங்க”, என்று புவனா சொன்னதும் “அம்மா”, என்று அதட்டியவன் “இப்படி எல்லாம் பேசாதீங்க. சொல்லிட்டேன்”, என்றான்.

 

“ம்ம், சரி விஷ்ணு. சீக்கிரம் வந்து சேருற வழியை பாரு. பையன் பாசம்னு உருகுனா அவங்க கிட்ட இருந்து விலகியே இரு. வந்த உடனே உனக்கு கல்யாணம் தான்”

 

“அம்மா வெறுப்பேத்தாம போனை அப்பா கிட்ட குடுங்க”

 

“நான் முக்கியமான விஷயம் பேசுறேன் விஷ்ணு. விளையாட்டுக்கு சொல்லலை. எனக்கு சீக்கிரம் என் பேர பிள்ளையை கொஞ்சணும்”, என்று புவனா சொன்னதும் “என்னது பேர பிள்ளையை பத்தி மாம் பேசுறாங்களா?”, என்று  அதிசயித்தான் விஷ்ணு.

 

ஏனென்றால் இந்த வயதிலும் வயது தெரியாமலிருக்க பார்லர் போறவளாயிற்றே. இதை தெரிந்து கொள்ள வில்லை என்றால் மண்டையே விடுத்து விடும் என்பதால் “திடிர்னு என்ன மாம் பேர பிள்ளை பத்தி பேசுறீங்க?”, என்று கேட்டான்.

 

“அதுவா, என் பிரண்ட் ஷில்பா தெரியும்ல?”

 

“ஆமா, ஷில்பா ஆண்ட்டிக்கு என்ன?”

 

“அவளுக்கு பேரன் பிறந்துருக்கானாம். ரொம்ப பீத்திக்கிட்டா. அதான்”

 

“ஹா ஹா, சரி தான். ஒரு நிமிசத்துல நான் கூட உங்களை வேற மாதிரி நினைச்சிட்டேன் மாம். நீங்க நீங்கதான்னு நிருபீச்சிடீங்க”

 

“நான் சொல்றது உனக்கு கிண்டலா இருக்கா? எனக்கு முடிவு சொல்லு. கல்யாணத்துக்கு சம்மதம் தான? நான் வேற பொண்ணு பாக்குறேன் டா”

 

“நாம இதை பத்தி அப்புறம் பேசலாம் மாம்”

 

“சரி சரி வச்சிராத. டேடி பேசணுமாம்”

 

போன் கை மாறியதும் “எப்படி இருக்கீங்க டேட்?”, என்றான்.

 

“பைன் விஷ்ணு. போன வேலை முடிஞ்சிட்டா? அவங்களை கண்டு பிடிக்கிறதுல சிரமம் இருந்துச்சா?”, என்று கேட்டார் பிரதாப்.

 

“நோ டேட். அவங்களை ஈஸியா கண்டு புடிச்சிட்டேன். கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன். அங்க ஆபிஸ் எப்படி போகுது”

 

“என் ஆபிஸ் நல்லா தான் போகுது. உன் ஆபிஸ் பாக்க தான் அவளை வச்சிட்டு போயிருக்கியே. அப்புறம் நான் என்ன பாக்குறது? அவளை பாத்தா இரிடேட் ஆகும்”

 

“டேட், ப்ளீஸ் அவ என் பிரண்ட். சரி நான் அப்பறம் பேசுறேன்”, என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.

 

பேசுவதற்கு முன் அவர்கள் தன்னை மிஸ் செய்வார்கள் என்று ஆசையில் பேசியவன் அவர்களிடம் இருந்து தலை வலியை தான் வாங்கி கொண்டான்.

 

தலையை தாங்கிய படி சேரில் அமர்ந்திருக்கும் பொது ஒரு கரம் அவன் தலையை கோதி விட்டது.

 

அங்கே அன்னலட்சுமி நின்றிருந்தாள். “அம்மா, நீங்களா? தூங்கலையா?”

 

“பகலில் தூங்கினேன்ல? தூக்கம் வரல? எதுக்கு பா கவலையா இருக்க? உன்னோட அம்மா ஞாபகம்  வந்துருச்சா?”

 

“அப்படி எல்லாம் இல்லை மா, இங்க தான் எனக்கு இன்னொரு அம்மா இருக்காங்களே. அப்புறம் எப்படி அவங்க ஞாபகம் வரும்? நான் உங்க மடில படுத்துகிட்டுமா?”

 

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்த அன்னலட்சுமி அவன் தலையை மடியில் எடுத்து வைத்து கோதி கொடுத்தாள்.

 

புது விதமான ஒரு மன நிலையை உணர்ந்தான் விஷ்ணு. இப்படி ஒரு தொடுகையை தான் அவன் அனுபவித்ததே இல்லையே. அதில் அவன் கண்கள் கலங்கியது. அதை பார்த்த அன்னலட்சுமி துடித்து போனாள். “என்ன ராசா ஆச்சு? என் பிள்ளைக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சே”, என்று தனக்காக பரிதவித்த அன்னையை புன்னகையுடன் பார்த்தான்.

 

கண்களில் நீருடன் புன்னகைக்கும் அவனை புரியாமல் பார்த்தாள். “எங்க அம்மா எனக்கு கிடைச்சது அதிசயம்னு நினைக்கும் போது, இப்படி உங்க மடில படுக்கிற சுகம் எல்லாம் கிடைச்சது ரொம்ப பிரமிப்பா இருக்கு மா. சந்தோஷத்துல அழுகை வந்துட்டு மா”, என்றான்.

 

“இவ்வளவு தானா? நான் பயந்துட்டேன். ஏன் பா விஷ்ணு, உங்க அம்மா உன்னை இப்படி எல்லாம் பாத்து கிட்டதே இல்லையா?”

 

“அவங்களுக்கு பணத்தை கொடுத்து தான் பாசத்தை காட்ட தெரியும். அரவணைப்பை கொடுத்து பாசம் காட்ட மாட்டாங்க. என்னை நீங்க உங்க கூடயே வச்சிருக்கலாம்ல மா?”

 

“என்ன பா பண்ணுறது? விதி இப்படி ஆகிருச்சே? என் வயித்துல நீ பிறந்தாலும் நீ எனக்கு சொந்தமில்லையே. உன்னை தூக்கி கொடுக்கும் போது என் ஈரக்கொலையே அந்து போச்சு. ஆனா வேற வழி இல்லை. அந்த டாக்டர் தேனை மட்டும் கொடுக்காம போயிருந்தா, எப்பவோ நான் செத்துருப்பேன்”

 

“அப்படி சொல்லாதீங்க மா. எனக்கு நீங்க ரொம்ப நாள் என் கூட இருக்கணும்”

 

“கண்டிப்பா இருப்பேன் ராசா. உன் பிள்ளைகளை எல்லாம் வளக்கணும்ல?”

 

“சந்தோசமா இருக்கு மா எனக்கு”

 

“இந்த பிரியா பிள்ளை ரூமுக்கு வந்து உன் பிள்ளையை போய் பாரு அத்தம்மா. தலையை பிடிச்சிட்டு உக்காந்துருக்காருனு சொன்னா. இங்க வந்து பாத்தா என் பிள்ளை பாசத்துக்கு மருகிட்டு இருக்கு”, என்று சொல்லிய படியே அவன் கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

“அவ எப்படி என்னை பாத்தா?”, என்று நினைத்து கொண்டு பிரியாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா மா?”, என்று கேட்டான்.

 

“ஆமா ராசா, சின்ன வயசுல இருந்து எனக்கு தூணா நின்னுருக்கா”

 

“என்ன மா சொல்றீங்க?”

 

“உங்க அப்பாவும், அத்தையும் சேந்து என்னை வையும் போதெல்லாம் அவங்களை எதித்து நின்னு சண்டை போட்டு எனக்கு ஒரு கேடயம் மாதிரி இருந்து காப்பாத்துவா. தேன்மொழி உங்க அப்பாவை பாத்து பயந்துருவா. ஆனா பிரியா ஒரு தடவை உங்க அத்தையை கல்லை எரிஞ்சு மண்டையை உடைச்சான்னா பாத்துக்கோயேன்”

 

“ஹா ஹா, செம சேட்டை பிடிச்சவ போல?”

 

“ஆனா மனசு தங்கம் ராசா”

 

“நீங்க இப்ப சந்தோசமா இருக்கீங்களா மா?”

 

“தொலைச்ச வைரமே எனக்கு கிடைச்சிட்டு. எனக்கு வேற என்ன வேணும்? ரொம்ப சந்தோசமா நிம்மதியா இருக்கேன். ஆனா ஒரு குறை தான். ஆனா எப்படி கேக்கன்னு தெரியலை”

 

“நீங்க என்கிட்ட தயங்காம உரிமையா கேட்டு என்னை அதட்டினீங்கன்னா நான் ரொம்ப சந்தோச படுவேன் மா கேளுங்க”

 

“எனக்கு ஒரு வீடு கட்டி தரியா? பெருசா வேண்டாம். சின்னதா போதும்.. பணம் கூட என்கிட்டே இருக்கு. மக வீட்ல என்னால ரொம்ப நாள்  இருக்க முடியாது ராசா. அதுக்கு மனசு ஒப்பாது. நீ வரலைன்னா, கடைசி வரைக்கும் அந்த மனுஷன் நிழலிலே இருந்துருப்பேன். இப்ப நீ தான பா எனக்கு எல்லாமும்”

 

“நானும் அதை தான் மா செந்தில் கிட்ட அப்ப பேசுனேன். இடம் எதாவது வாங்க முடியுமான்னு கேட்டேன். உங்க பேர்ல வாங்கணும். அதுக்கு இங்க நிறைய பார்மாலிட்டீஸ் இருக்குன்னு மச்சான் சொன்னாங்க. அதான் என்ன பண்ணன்னு யோசிக்கிறேன்”

 

“இடத்துக்கு என்ன பா குறை? செந்தில் மறந்துட்டான் போல? எங்க அப்பா வீடு இங்க தான் இருக்கு. நான் எங்க அப்பாவுக்கு ஒரே மக. அதனால அந்த இடம் எனக்கு தான். ஆனா வீடு தான் இடிஞ்சு கட்ட மண்ணா கிடக்கு. பிரியா தான் அந்த இடத்துல உனக்கு வீடு கட்டி தருவேன் அத்தம்மான்னு சொல்லிக்கிட்டு திரியுவா. அங்க கட்டி தரியா? ஆனா எனக்கு அந்த இடமும், வீடும் உன் பேருல இருக்கணும். அப்ப தான் என் பிள்ளை வீட்ல இருக்கேன்னு சந்தோசமா இருக்கும். நீ என் கூட இல்லாதப்ப அந்த ஆறுதல் தான் எனக்கு வேணும்”

 

“சரி மா, கண்டிப்பா கட்டலாம். நிலம் இருக்கும் போது வேலை இன்னும் சுலபமா முடிஞ்சிரும். நான் செந்தில் கிட்ட சொல்றேன்”

 

“சரிப்பா, நீ எப்ப ஊருக்கு போற? உடனே போயிருவியா? ஒரு வாரமாவது அம்மா கூட இருப்பியா ராசா?”, என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

 

“அம்மா”, என்று அதிர்ச்சியாக அழைத்தவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

 

“உன்னால இந்த ஊர்ல இருக்க முடியாதுன்னு தெரியும் விஷ்ணு. உன் அம்மா அப்பாவும் விட மாட்டாங்க. உன் படிப்பு, தொழில் எதுவுமே இங்க சரியா இருக்காது. நீ அங்க தான் இருப்ப”

 

“அப்படி எல்லாம் இல்லை மா”

 

“எனக்கு தெரியும் பா, நானும் உன்னை இங்க இருக்கணும்னு கட்டாய படுத்த மாட்டேன். அது தப்பும் கூட. நீ ஆல மரம் மாதிரி மேலும் மேலும் வளரணும். அதுக்கு நான் தடையா இருக்க கூடாது. இப்ப என்ன? நீ கட்டி கொடுக்குற வீட்ல நான் இருக்க போறேன். பாக்கணும்னு நினைச்சா நீ என்னை பாக்க வர மாட்டியா என்ன?”

 

“வருவேன் மா. எப்படியும் நான் போய் தான் ஆகணும். எனக்கும் பெரிய ஆளா ஆகணும்னு நிறைய லட்சியம் இருக்கு. அடிக்கடி இப்படி ஓடி வந்து உங்க மடில படுத்துப்பேன். ஆனா உங்களை விட்டு போனா நீங்க கஷ்ட படுவீங்களே மா”

 

“அதுக்காக கண்ணீர் விட்டு அழுது என் பிள்ளையை நிறுத்துனா என் பிள்ளை வாழ்க்கை என்ன ஆகும் ராசா? அது மட்டுமில்லாம நான் தான் பிறந்தவுடனே உன்னை தூக்கி கொடுத்த ராசி இல்லாதவளாச்சே. கடைசி வரைக்கும் உன்னை பிரிஞ்சி இருக்கணும்னு தான் என் தலைல எழுதிருக்கு”, என்று கண்களில் நீருடன் சொன்னாள்.

 

அந்த கண்ணீரை துடைத்தவன் “பின்னாடி  இதுக்கு ஒரு வழி பண்ணனும்”, என்று நினைத்து கொண்டு அவளிடம் செல்லம் கொஞ்சி அவளை சிரிக்க வைத்தான்.

 

சிறு வயதில் இருந்து தன்னுடைய வெற்றிகள், ஏமாற்றங்கள் அனைத்தையும் சிறு குழந்தையின் குதூகலத்தோடு அவளிடம் பகிர்ந்து கொண்டான். கிடைத்தது அவன் அன்னை மட்டும் அல்ல. சிறு வயதில் இருந்த விஷ்ணுவும் மீண்டும் உயிர்த்தான்.

 

ஜன்னல் வழியே அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையை கண்ட சத்யாவின் கண்களும் ஆனந்த கண்ணீரை வடித்தது. வந்த சுவடில்லாமல் அங்கிருந்து அகன்றாள்.

 

தீ பற்றும் …….

 

Advertisement