Advertisement

 

தலைப்பு: பற்றும் காதல் தீ

 

கதாநாயகன்: விஷ்ணுவர்தன்

 

கதாநாயகி: சத்யப்ரியா

 

அத்தியாயம் 1

 

தினம் தினம்

உன்னருகே இருந்த

அழகான நொடிகளை

என்னும் போது

பற்றும் காதல் தீ!!!!

 

பிரதாப் அண்ட் கோ என்று பெயர் பொறிக்க பட்டிருந்த அந்த பெயர் பலகையை தாண்டி அந்த பிரமாண்டமான கட்டிடத்தினுள் உள்ளே நுழைந்தது அந்த விலையுயர்ந்த கார். டெல்லியில் பிரபலமான தொழில் அதிபர் பிரதாப்.

 

உள்ளே போய் கார் நின்றதும், கீழே இறங்கினான் விஷ்ணுவர்தன். இருபத்து ஒன்பது வயது  வாலிபன். கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கோர்ட் சூட் அணிந்து ஒரு மாடலுக்குரிய தோற்றத்துடன் ஆறு அடியில் கோதுமை நிறத்தில் இருந்தான் அவன். பார்ப்பவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் கம்பீரம் அவனிடம் இருந்தது.

 

செக்யூரிட்டி வணக்கம் சொல்லிய படியே, கதவை திறந்து விட அவருடைய வணக்கத்தை ஒரு புன்சிரிப்புடன் ஏற்றவன் அவரை கடந்து உள்ளே சென்றான்.

 

அவன் சென்ற பின்னும் அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த செக்யூரிட்டி “இவரை மாதிரி ஒருத்தரை இனி என் வாழ்க்கைல நான் பாக்க போறதே இல்லை”, என்று நினைத்து கொண்டார்.

 

விஷ்ணு உள்ளே சென்றதும் அங்கு பணி புரியும் அனைவரும் எழுந்து வணங்கினார்கள். அதை ஒரு தலை அசைப்புடன் ஏற்றவன் தன்னுடைய அறைக்கு சென்றான்.

 

அவன் அமர்ந்தது தான் தாமதம், அவன் முன்னே தோன்றிய அவனுடைய மேனேஜர் கேசவன் “எல்லா ஏற்பாடும் பக்காவா ரெடி சார். நீங்க வந்த உடனே மீட்டிங் ஸ்டார்ட் பன்னிறலாம்”, என்றான்.

 

“குட், எல்லா போர்டு ஆப் டேரக்டர்ஸும் வந்துட்டாங்களா?”

 

“எஸ் சார், இன்குளுடிங் உங்க டேடி ஆல்சோ”

 

“ஓகே கேசவன், நான் இதோ வரேன்”, என்று சொல்லி கிளம்பினான்.

 

அவனுக்கு முன்னே கேசவன் ஓடினான்.  அந்த விசாலமான அறைக்குள் பிரவேசித்தான் விஷ்ணு.

 

அது வரை கேட்டு கொண்டிருந்த முணுமுணுப்பு இவன் உள்ளே நுழைந்ததும் இல்லாமல் போனது. அனைவரின் கவனமும் இவன் புறம் திரும்பியது.

 

ஒரு இளவரசனுக்குரிய கம்பீரத்துடன் எவரையும் கவனிக்காமல் நடந்து சென்று அவனுக்குரிய இருக்கையில் அமர்ந்தான்.

 

“கேசவன் விஷ்ணு வந்தாச்சு. மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாம்”, என்று விஷ்ணுவின் தந்தை  பிரதாப் சொன்னதும் ஒவ்வொரு கம்பெனியின் நிறை குறைகளை ஒவ்வொருத்தரும் கூற ஆரம்பித்தார்கள்.

 

பிரதாப் இண்டஸ்ட்ரீஸ், பிரதாப் டெக்ஸ்டைல்ஸ், பிரதாப் கான்ஸ்டரக்சன்ஸ், பிரதாப் இன்ஸ்டியூசன்ஸ் என இன்னும் அதிகமான பிரிவுகளில் இந்தியாவிலே நம்பர் ஒன்னாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் பல நிறுவனங்களின் உரிமையாளர் தான் பிரதாப். அவரின் ஒரே மகன் தான் விஷ்ணுவர்தன்.

 

விஷ்ணு பாரினில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அங்கேயே எம்.பி ஏ முடித்து விட்டு கடந்த ஐந்து வருடமாக தன்னுடைய அப்பாவின் தொழிலை மேலும் மெருகேற்றி உலக நாடுகளில் பிரபலமடைய செய்து கொண்டிருக்கிறான்.

 

மாதம் ஒரு முறை இப்படி மீட்டிங் நடப்பது வாடிக்கை தான் . நிறை குறைகளை அலசி, எழும் பிரச்சனைகள், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் என அனைத்தும் ஆராய்ந்து முடிவெடுக்க படும்.

 

இப்போதும் அதே நடந்து கொண்டிருந்தது. அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த விஷ்ணு தன்னிடம் உள்ள சாப்ட்வெர் கம்பேனி பற்றிய செய்திகளை கோர்வையாக கூறினான். அனைவரும் அதை கேட்டு, அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முடிவானதும் வேறு துறையை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 

விஷ்ணு தன்னுடைய கம்பேனி பற்றி மட்டும் தான் தெளிவாக பேசுவான். அதன் பின் எதிலும் ஈடுபாடு இல்லாமல் தான் இருப்பான்.இப்போதும் அப்படி தான் அமர்ந்திருந்தான். எப்போது வெளியே செல்லலாம் என்று இருந்தது அவனுக்கு.

 

பாதியில் எழுந்து போவது மரியாதையும் இல்லை. அப்படியே போனாலும் தன்னுடைய தந்தை ஒரு வழி ஆக்கிவிடுவார் என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

அதுவும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஏதோ தன்னை சுற்றி விலங்கிட்டுருப்பதை  போல உணர்ந்தான்.

 

“எப்ப தான் முழுசா சந்தோசமா வாழ போறேனோ? எப்ப தான் எனக்கு புடிச்ச விஷயங்களை எல்லாம் செய்ய போறேனோ?”, என்று யோசித்த விஷ்ணு தன்னுடைய அப்பாவை ஒரு முறை முறைத்தான்.

 

அவன் பார்வையை கண்டும் காணாமல் தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தார் அவர்.

 

அதன் பின் அவனை அவர் கண்டுகொள்ளமாட்டார் என்று தெரியுமாதலால்  மேலும் எரிச்சல் வந்தது விஷ்ணுக்கு. “எப்படி கண்டுக்காம இருக்கார் பாரு? அன்னைக்கு வீட்டை விட்டு போனேன். அப்படியே விட்டுருந்தா சந்தோசமா எங்கயாச்சும் இருந்துருப்பேன். மறுபடியும் இதை எல்லாம் பாக்க வேண்டி இருக்கு”, என்று பல்லை கடித்தவனுக்கு மூன்று மாதத்துக்கு முன்னால் அந்த நாள் நினைவில் வந்தது.

 

வீட்டில் நடந்த நிகழ்வுகள், தான் கோப பட்டது, அதன் பின் தான் வீட்டை விட்டு சென்றது என்று அனைத்தையும் நினைத்து பார்த்த விஷ்ணுக்கு அதன் பின் நடந்த நிகழ்வுகள் மனதில் எழுந்தது. விடை தெரியாத கேள்விகள் அவன் மனதில் உருவானது. ஆனால் மனம் மட்டும் மென்மையானது. அன்று ஒரு நாள் தான் உணர்ந்த அந்த பரிசத்தை, அந்த தொடுகையை நினைத்து இப்போதும்  அவன் உடலும், மனமும் சிலிர்த்தது.

 

அதற்கு மேல் அதை பற்றி சிந்திக்க முடியாமல் அவனுடைய கவனத்தை கலைத்தார் பிரதாப்.

 

“இவருக்கு வேற வேலை வெட்டியே இல்லை”, என்று நினைத்து கொண்டு மீட்டிங்கை கவனித்தான் விஷ்ணு.

 

மீட்டிங் முடிந்து அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்ற பின்னர் அவன் அருகே வந்து அமர்ந்தார் பிரதாப்.

 

“ஐயோ ஒரு மணி நேரத்துக்கும் மேல இவர் பேச்சை கேக்கணுமே. காதுல இருந்து ரத்தம் தான் வரும்”, என்று நினைத்து கொண்டு அவர் பேச்சை செவி மடுத்தவன் எதிரில் இருந்த கேசவனை பார்த்து கண்ணை காட்டினான்.

 

அவனும் தனக்கு புரிந்தது என்னும் விதமாய் கண்களை காண்பித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

“விஷ்ணு நீ பண்றது எதுமே சரி இல்லை”, என்று ஆரம்பித்தார் பிரதாப்.

 

“வாட் டேடி? ஐ திங்க் நான் என்னோட வேலையை சரியா செய்றேன்னு நினைக்கிறேன்”

 

“சரியா செய்றயா? உன்னை எதுக்காக எம். பி. ஏ படிக்க வச்சேன்? இருக்குற எல்லா பிஸினஸையும் பாத்துக்கணும்னு தான? நீ என்ன மீட்டிங்ல ஆர்வமே இல்லாம உக்காந்துருக்க? நாளைக்கு எனக்கு  ஏதும் ஆச்சுன்னா நீ தானே எல்லாம் பாத்துக்கணும்?”

 

“டேடி, ப்ளீஸ் இதையே சொல்லி போர் அடிக்காதீங்க. என்னோட பீல்ட் கம்ப்யூட்டர் தான். நானே ஒரு சொந்தமா கம்பேனி ஆரம்பிக்கணும். அதுல பெரிய ஆளா ஆகணும் அப்படிங்குறது தான். ஆனா அதை என்னை செய்ய விடாம உங்க ஆபிஸையே என்னை பாத்துக்க சொல்லிடீங்க? நீங்க சொன்னதுனால நான் அதை பாக்குறேன் தான? வேற பிஸினஸை எல்லாம் என்னால பாத்துக்க முடியாது”

 

“என் கம்பெனின்னு ஏன் சொல்ற விஷ்ணு? அது நம்ம கம்பேனி”

 

“நோ டெட். அது உங்க கம்பேனி. அது உங்க அடையாளம். எனக்கு அது விருப்பமே இல்லை. ஆனாலும் உங்களுக்காக செய்றேன். இதுக்கு மேல என்கிட்ட எதையும் எதிர்பாக்காதீங்க?”, என்று அவன் சொல்லி முடிக்கும் போது அங்கே வந்து நின்றாள் ரம்யா. விஷ்ணுவின் உயிர் சிநேகிதி.

 

அவளை பார்த்து விஷ்ணு அழகாக சிரித்தான் என்றால் அவளை பார்த்து கடுகடுவென்று முறைத்தார் பிரதாப்.

 

பிரதாப் பார்வையை கண்டு கொள்ளாமல் விஷ்ணு புறம் திரும்பிய ரம்யா “சார், நமக்கு இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு மீட்டிங் இருக்கு. இப்ப  கிளம்புனா தான் சரியா இருக்கும்”, என்றாள்.

 

“ஓகே ரம்யா, இதோ வரேன். நான் கிளம்புறேன் டேட்”, என்று சொல்லி விட்டு ரம்யாவுடன் சென்று விட்டான் விஷ்ணு.

 

போகும் இருவரின் முதுகை வெறுத்தவர் “என்ன எல்லாமோ செஞ்சிருக்கேன். ஆனா இவளை ஒன்னும் என்னால செய்ய முடியலையே”, என்ற எண்ணம் வந்து அவருக்குள் ஒரு பெருமூச்சை உருவாக்கியது.

 

லிப்ட்டில் நின்றிருந்த விஷ்ணுவோ ரம்யாவை முறைத்தான்.

 

“என்ன டா முறைக்கிற? அதுவும் உங்க அப்பா மாதிரியே?”, என்று புன்னகையுடன் கேட்டாள் ரம்யா.

 

“இப்ப மட்டும் டா சொல்ற? உள்ள மட்டும் சாரா? இப்படி செய்யாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்? நீ என்னோட பிரண்ட் டி. அதும் அப்பா கம்பெனில பெரிய போஸ்டிங்ல  இருக்க?”, என்றான் விஷ்ணு.

 

“நான் சார்னு ஒரு வார்த்தை சொன்னதுனால தான் உன் அப்பா வெறும் முறைப்போட நிப்பாட்டினார்.  இல்லைனா எனக்கும் சேத்து அரை மணி நேரம் கிளாஸ் எடுத்துருப்பாரு”, என்று சிரித்தாள் ரம்யா.

 

அவளுடன் சேர்ந்து சிரித்த விஷ்ணு, “கேசவன் கிட்ட அஞ்சு நிமிசத்துல உன்னை வர சொல்லி சைகை காட்டுனேனே? நீ ஏன் கால்மணி நேரம் கழிச்சு வந்த?”,என்று கேட்டான்.

 

“அவன் சரியா தான் செஞ்சான். நானும் சரியா வந்துட்டேன். ஆனா அப்புறம் அப்பாவும் பிள்ளையும் பேசும் போது எதுக்கு இடைஞ்சல்னு வெளியே நின்னுட்டேன். கூட கொஞ்ச நேரம் நீ பாட்டு வாங்கணும்னு ஒரு ஆசை தான். அதுக்கு மேல எனக்கே பாவமா போச்சு. அதான் காப்பாத்துனேன்”

 

“நல்லா காப்பாத்துன போ? எப்பவும் பாடுற பல்லவி தான். அதை விடு. மீட்டிங் ஒன்னும் இல்லைல? வெளிய எங்கயாவது போகலாமா?”

 

“ஹ்ம்ம் போகலாம் டா. என்ன மைண்ட் டிஸ்டபா?”

 

“ஹ்ம்ம்”

 

“அன்னைக்கு என்ன தான் டா நடந்தது? ஆனா அன்னைல இருந்து தான் நீ சரியே இல்லை. எதுவும் சொல்லவும் மாட்டிக்க? ஆனா அடிக்கடி மூடவுட் ஆகுற? எனக்கு கஷ்டமா இருக்கு டா”

 

“ஏய், லூசு. நான் மூடவுட் எல்லாம் ஆகல. அப்புறம் என்ன தான் பிரண்டா இருந்தாலும் எல்லா விஷயத்தையும் எல்லார் கிட்டயும் சொல்ல முடியாது ரம்ஸ். அதை விடு”

 

“உடனே இப்படி சொல்லு போடா”, என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள்.

 

அன்றைய நாள் முழுவதும் இருவரும் டெல்லியை சுற்றி பார்த்தார்கள். அதான் பின் மாலை அவளை அவளுடைய வீட்டில் இறக்கி விட்டான் விஷ்ணு. அவனை உள்ளே அழைத்து சென்று அவனுக்கு காபி கொடுத்தவள்  அவளுடைய வேலையை பார்க்க உள்ளே போய் விட்டாள்.

 

விஷ்ணு அவளுடைய அம்மாவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.

 

அங்கே அவனுடைய வரவுக்காக காத்திருந்தாள் புவனேஸ்வரி. அவனுடைய அன்னை. ஐம்பது வயதை முப்பது என காட்ட அவள் போட்டிருந்த மேக்கப் அவளுடைய இயற்கையான அழகையே கெடுத்து வைத்திருந்தது.

 

அவளை பார்த்ததும் அது வரை இருந்த உற்சாகம் வடிந்தது போல உணர்ந்த விஷ்ணு, “ஹாய் அம்மா. நான் வெளிய சாப்டுட்டேன். தூங்க போறேன். குட் நைட்”, என்று சொல்லி விட்டு மாடி ஏறினான்.

 

அவளோ எதுவும் சொல்லாமல் அவனை முறைத்து பார்த்து கொண்டே இருந்தாள். ஊசியாக தன் முதுகை குத்தும் அன்னையின் பார்வையை கண்டும் காணாமல் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தான் விஷ்ணு.

 

உள்ளே வந்தவன் கட்டிலில் அமர்ந்து மூன்று முறை ஆழ்ந்து சுவாசித்தான். பின் எழுந்து குளிக்க சென்றான்.

 

குளித்து முடித்து தலையை துவட்டி படியே வந்தவன் தன்னுடைய பீரோவில் இருந்து ஒரு வெண்ணிற சட்டையை எடுத்தான். அதில் ஆங்காங்கே குங்குமம் தீட்டி இருந்தது. வியர்வையுடன் கூட ஒரு வித வாசனை அந்த சட்டையில் இருந்து வந்தது.

 

அப்படியே கட்டிலில் படுத்தவன் அந்த சட்டையை இறுக பிடித்து கொண்டான்.

 

“நீ யாரு டி? எங்க இருக்க? எனக்கு பைத்தியமே பிடிக்குது. வர வர கடவுள் இருக்காரா இல்லையானு எனக்கு டவுட் வருது”, என்று முனங்கியவன் எதையெதையோ நினைத்த படி தூங்கி போனான்.

 

“இனி என்று நீ தூங்க போகிறாயோ? இன்றே தூங்கிகொள்”, என்று சிரித்தது விதி.

 

காலையில் எழுந்து குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி கீழே வந்தான் விஷ்ணு.

 

மாளிகை போல இருந்த அந்த வீட்டில் அங்கங்கே அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் சிறிது நெருடலாக இருந்தாலும் “வாரம் ஒரு தடவை இவங்களுக்கு பங்க்சன் கொண்டாடலைன்னா கூட தூக்கம் வராது”, என்று நினைத்து கொண்டு அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.

 

வேலை பார்க்கும் பரிமளம் அவனுக்கு தட்டில் உணவு பரிமாறினாள். அப்போது அவன் அருகே வந்து அமர்ந்தாள் புவனா. அவளை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான் விஷ்ணு.

 

தன்னை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்கும் அவனை முறைத்த புவனா “விஷ்ணு”, என்று அழைத்தாள்.

 

வாயில் உணவை திணித்த படி “சொல்லுங்கம்மா”, என்றான் விஷ்ணு.

 

“சுத்தி டெக்கரேஷன் நடந்துட்டு இருக்கு. நீ ஒரு வார்த்தை கேக்கல?”

 

“அம்மா நீங்க வாரம் ஒரு தடவை எதாவது செலிப்ரேட் பண்றீங்க? நீங்க, அப்பா அப்புறம் உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் சேந்து கொண்டாடாத ஒரே பங்க்சன் உங்க டெத் டே தான். எனக்கு முக்கியமான வேலை இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

 

“விஷ்ணு”, என்று கத்தினாள் புவனா.

 

“ஸ், ஏன் கத்துறீங்க? எனக்கு சாப்பாடு வேண்டாம்”, என்று சொல்லி விட்டு கை கழிவு விட்டான்.

 

“இன்னைக்கு எனக்கும் உன் அப்பாவுக்கும் வெட்டிங் டே. இன்னைக்கே உன்னோட மேரேஜ் டேட் எல்லாருக்கும் சொல்ல போறேன்”, என்று புவனா சொன்னதும் அவளை முறைத்த விஷ்ணுவுக்கு எரிச்சலாக வந்தது.

 

“அம்மா, தேவை இல்லாம பேசாதீங்க. அடுத்து நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு புரியுது. தேவை இல்லாம பேசுனீங்க நான் இந்த ஜென்மத்துல உங்க கூட பேச மாட்டேன் பாத்துக்கோங்க”

 

“என்ன பிளாக்மெயில் பன்றியா விஷ்ணு?”

 

அப்படியே வச்சிக்கோங்க. உங்க கிட்ட பேசுனா எனக்கு தான் பைத்தியம் பிடிக்கும். நான் ஆபிஸ் போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

முழு எரிச்சலோடு தன்னுடைய ஆபிஸ்க்கு வந்தவன் தன்னுடைய அறைக்கு வந்து டேபிளில் தலை கவிழ்ந்து படுத்து விட்டான்.

 

சிறிது நேரத்தில் அவன் முன் இருந்த தொலைபேசி உறுமியது. எடுத்து காதில் வாய்த்த விஷ்ணுவும் “எதுக்கு போன் பண்ணீங்க?”, என்று சுள்ளென்று விழுந்தான்.

 

அவன் குரலிலே அவன் மனதை உணர்ந்த ரிஷப்சனிஸ்ட் “சாரி சார். உங்களை பாக்க அலெக்ஸ் சார் வந்துருக்காங்க. உள்ளே அனுப்பவான்னு கேக்க தான் பண்ணேன்”, என்றாள்.

 

“அலெக்ஸ்சா”, என்று புருவம் உயர்த்தியவன் “சரி அவனை வர சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.

 

“என்ன மச்சி காலைலே ரொம்ப சூடா இருக்க? ரிஷப்சனிஸ்ட் முகமே சரி இல்லை. அவளையும் காச்சிட்டியா?”, என்று சிரித்த படியே உள்ளே வந்தான் அலெக்ஸ்.

 

“வாங்க சி. ஐ. டி சார். என்ன  இந்த பக்கம் ?”

 

“சும்மா தான் வந்தேன். உன்னை பாக்க வர கூடாதா?”

 

“டயலாக் பெருசா இருக்குது ஆனா நம்புற மாதிரி இல்லை”, என்று விஷ்ணு பேசும் போது அவனுடைய மொபைலில் பிரதாப் அழைத்தார்.

 

அதை எடுத்து “சொல்லுங்க டேட்”, என்றான் விஷ்ணு. அடுத்து அவர் என்ன சொன்னாரோ கையில் இருந்த போனை சுவரை வீசி எறிந்தான் விஷ்ணு. அது சிதறி உடைந்தது.

 

“விஷ்ணு என்ன ஆச்சு டா?”, என்று கேட்டான் அலெக்ஸ்.

 

“டேய் அலெக்ஸ், என்னை இன்னைக்கு எங்கயாவது கூட்டிட்டு போடா. வீட்டுக்கு போக பிடிக்கலை”, என்று சொல்லி விட்டு தலையை பிடித்து கொண்டான் விஷ்ணு.

 

“என்ன டா ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபம்?”

 

“என்னை என்ன பண்ண சொல்ற? அந்த கேடுகெட்டவளை கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சல் பண்றாங்க”

 

“ஓ, மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா? டேய் விஷ்ணு இதுக்கு ஒரு வழி தான் இருக்கு. பேசாம நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ”

 

“ப்ச் போடா”

 

“என்ன விஷ்ணு இது? நீயும் யாரையும் கை காட்ட மாட்டிக்க? அப்ப வீட்ல சொல்ல தான செய்வாங்க? கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன டா பிரச்சனை?”

 

“என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது டா அலெக்ஸ்”

 

“அதான் ஏன்? நான் இன்னைக்கு வந்ததே உன்னை விசாரிக்க தான். திடீர் திடிர்னு ஒரு மாதிரி இருக்கியாம். என்ன ஆச்சு உனக்கு? ஒழுங்கா வேற நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணு. உன்னை உன் வீட்லயும் டார்ச்சல் பண்ண மாட்டாங்க”

 

“என்னால சத்தியமா கல்யாணம் பண்ண முடியாது டா”

 

“அதான் ஏன்?”

 

“ஏன்னா, நான்… நான்..எனக்கு கல்யாணம் முடியலை தான். ஆனா நான் பிரம்மச்சாரி இல்லை”, என்று தலை குனிந்த படியே சொன்னான் விஷ்ணு.

 

அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் அலெக்ஸ். இப்படி ஒரு பதிலை அலெக்ஸ் எதிர்பார்க்கவே இல்லை.

 

குழப்பமாக விஷ்ணுவை பார்த்தவன் “நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? நீ சொல்ற வார்த்தை உன்னோட ஒழுக்கத்தையே கேவல படுத்துற மாதிரி இருக்கு டா. என் நண்பன் அப்படி இல்லைனு எனக்கு தெரியும்”

 

“ஆமா டா, தப்பா நினைக்குற மாதிரி எதுவும் இல்லை. கண்டவளை தேடி போற கேவலமான குணம் எல்லாம் என்கிட்ட கிடையாது. ஆனா எனக்கே தெரியாம என்னை மொத்தமா திருடிட்டு போய்ட்டா டா. என்னோட கற்பை மட்டும் இல்லை. என்னோட மனசையும்”

 

“விஷ்ணு….”,என்று அதிர்ச்சியாக அழைத்த அலெக்ஸ் “பொண்ணுங்க சொல்ற டயலாக் நீ சொல்ற விஷ்ணு”, என்றான்.

 

“எஸ் ஐ லவ் ஹெர்”

 

“வாட் லவ்வா? யாரு டா அது? ஒரு ஐடியா, அவளையே நீ கல்யாணம் பண்ணிக்கோ. எல்லாம் சரியாகிரும்”

 

“அது முடியாது”

 

“ஏண்டா?”

 

“ஏன்னா அது யாருன்னு எனக்கே தெரியாது. நான் அவளை பாக்கல. ஆனா அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்”, என்று விஷ்ணு சொன்னதும் தன்னுடைய நண்பனின் மனதில் எதுவோ பிரச்சனையோ என்று குழப்பத்தில்   ஆழ்ந்தான் அலெக்ஸ்.

 

தீ பற்றும் …….

 

Advertisement