Advertisement

 

சமாளித்து கொண்டு “யாருக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.

 

“அவர் பொண்ணு மருந்தை குடிச்சிட்டாளாம் மது. நீ சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் போ”, என்றார் வாசுதேவன்.

 

“சரிப்பா”, என்றவள் அங்கு தொங்கி கிடந்த சாவியை எடுத்து கொண்டு தங்கராசுவை பார்த்தவள் “நீங்க பின்னாடி வாங்க. நான் போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள்.

 

அங்கே தாயம்மா இன்னும் வந்திருக்க வில்லை என்பதால் வராண்டாவில் அமர்ந்து வளரை தன் மடியில் ஏந்திக்கொண்டு கொண்டு அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தான் இளஞ்செழியன்.

 

அங்கே வேகமாக ஓடி வந்த மதுவை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவனுக்கு.

 

ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்த பூங்காவனம் , மதுவை பார்த்ததும் எழுந்தாள்.

 

அவன் கலங்கிய கண்களை பார்த்த மது அவனுக்கு ஆறுதல் சொல்ல துடித்த தன் வாயை அடக்கி கொண்டு “வளரை உள்ளே தூக்கிட்டு வாங்க”, என்று சொல்லி கொண்டே கதவை திறந்தாள்.

 

அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றவன் அவளை கட்டிலில் கிடத்தினான். அடுத்த நிமிடம் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தாள் மதுமிதா.

 

பூங்காவனத்தை பார்த்து “அம்மா சீக்கிரம் கொண்டு வந்துட்டிங்க தான? ஈஸியா காப்பாத்திரலாம். நீங்க கொஞ்சம் வெளியே இருங்க”, என்று சொன்ன மது செழியனை பார்த்து “நீங்க இங்கயே இருங்க. கொஞ்சம் ஹெல்ப் தேவை இருக்கு”, என்றாள்.

 

தன்னிடம் அவள் பேசியது இனித்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் தங்கையின் நிலை அவனுக்குள் பதட்டத்தை கொண்டு வந்தது.

 

அதன் பின் அவசரம் அவசரமாக வேலை நடந்தது. அவனிடமும் அதிக வேலைகள் சொன்னாள். அவனும் அவசர அவசரமாக அவள் சொன்னதை செய்தான்.

 

ஒரு வழியாக அவள் குடித்த மருந்தை வாந்தி எடுக்க வைத்தனர். அவள் வயிற்றை சுத்தம் செய்து அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றி தேவையான மருந்தையும் ஏற்றியவள் அதன் பின்னே நிம்மதியாக மூச்சு விட்டாள்.

 

பின் அவனை திரும்பி பார்த்து “வளர் சரியாகிருவா. அவளுக்கு ஒன்னும் ஆகாது”, என்று சொல்லி புன்னகைத்தாள்.

 

“எனக்கு தெரியும். அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு. நீ அவளை பொழைக்க வச்சிருவேன்னு எனக்கு தெரியும். அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்”, என்றவன் வெளியே போக பார்த்தவன் பின் போகாமல் அவள் அருகே நெருங்கி நின்றான்.

 

திடீரென்று அவன் இப்படி கிட்ட வருவான் என்று எதிர்பார்க்காமல் மூச்சடைத்து போனாள் மது. அவனோ அவளை கட்டி கொள்ள தான் அருகில் வந்தான். ஆனால் அவள் முகத்தில் வந்த அதிர்வு அதை செய்ய விட வில்லை.

 

“தேங்க்ஸ்”, என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு வெளியே சென்றான்.

 

“இதை சொல்லதுக்கா கிட்ட வந்தான்?”, என்று நினைத்தவளை “நீ வேற என்ன செய்வான்னு எதிர்பார்த்த?”, என்று பதில் கேள்வி கேட்டு அவளை முகம் சிவக்க வைத்தது மனசாட்சி.

 

வளரை பார்த்த மது “வாய் ஓயாமல் தன்னிடம் பேசிய வாயாடியா இவள்?”, என்று எண்ணி கொண்டே பரிவுடன் அவள் தலையை வருடி விட்டாள்.

 

 அந்த காட்சியை கண்டவாறே மூவரும் உள்ளே வந்தார்கள். தன் உயிருக்கு உயிரான தங்கையை பாசத்துடன் பார்த்து கொண்டிருந்த மதுவை பார்த்தவன் மெய் சிலிர்த்தான்.

 

“எம்மா டி என் பொண்ணுக்கு ஒன்னும் இல்லை தான மா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“ஒன்னும் இல்லை. அவளுக்கு சரியாகிரும். ஆமா எதனால இப்படி நடந்தது. ஏன் கேக்குறன்னா வளர் கிட்ட நான் பேசியிருக்கேன். அவளுக்கு பெரிய பெரிய கனவெல்லாம் இருக்கு. அவ இப்படி செஞ்சதை என்னால நம்ப முடியலை”, என்றாள் மதுமிதா.

 

“அவ யாருக்காகவும் கனவை விட்டு கொடுக்க மாட்டா மா. ஆனா அவளோட அண்ணனுக்காக அவ உயிரையே கொடுப்பான்னு இப்ப தான் தெரியும்”, என்றார் தங்கராசு.

 

“புரியலை, அண்ணனுக்காகவா?”

 

“என் பையனை அவனோட அத்தை மகளுக்கு கட்டி வைக்க நாங்க பேசுனோம். எங்க அண்ணனுக்கு விருப்பம் இல்லாம இதை செய்ய கூடாதுன்னு சொன்னா. நாங்க கேக்கல. திடீர்னு எதிர்பார்காதப்ப இப்படி செஞ்சிட்டா. பாவி அப்படி என்ன தான் அவ அண்ணன் மேல பாசமா இருந்தாலும் இப்படியா செய்யணும்?”

 

அப்போது அங்கே வந்தார்கள் சரசு, சேகர், வள்ளி மூவரும். இவர்கள் யாரென்று பார்த்தாள் மதுமிதா.

 

அவர்களை பார்த்து “என்னை மன்னிச்சிருக்கா. வளர் இப்படி செய்வான்னு தெரியாது. செழியனுக்கும் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டான். நீங்க வேற மாப்பிளை பாத்துக்கோங்க”, என்று தங்கராசு சொன்னதும் தான்  வந்திருப்பது வள்ளி என்று புரிந்தது மதுவுக்கு.

 

உடனே திரும்பி செழியனை பார்த்தாள். அவனோ அந்த வள்ளி பக்கம் பார்வையை கூட திருப்ப வில்லை. தனக்காக, தன்னுடைய காதலுக்காக உயிரையே விட துணிந்த தன் தங்கையின் முகத்தில் தான் அவன் பார்வை பதிந்திருந்தது.

 

அன்று ஒரு நாள் இன்னொரு அம்மா என்று சொன்னான். ஆனால் இன்று தாயினும் மேலானவள் என்று நிரூபித்து விட்டாள் வளர்.

 

“மாமா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு அத்தானை தான் பிடிக்கும். அவர் இல்லாம வேற யாரையும் கட்டி வச்சா செத்து போயிருவேன்”, என்று கொஞ்சமும் நிலைமை புரியாமல் பேசினாள் வள்ளி.

 

“தம்பி என் பிள்ளைக்காக பாருப்பா”, என்றாள் சரசு.

 

“அக்கா உன் பிள்ளைக்காக பாத்தா என் பிள்ளை இருக்க மாட்டா. தயவு செஞ்சு புரிஞ்சிக்கோ”

 

“மாமா இப்ப என்ன, அவ தான் பொழைச்சிட்டாளே? செத்தா போய்ட்டா? எனக்கு அத்தான் தான் வேணும்”, என்று சொன்ன வள்ளியின் கன்னத்தில் அடுத்த நொடி இடி என இறங்கியது செழியனின் கரம்.

 

“அடிச்சு கொன்னுருவேன். போங்க மூணு பேரும் வெளிய. போங்க எனக்கு என் தங்கச்சி தான் முக்கியம். அவளையே நீ இப்படி பேசுற? உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என்னைக்காவது சொல்லிருக்கேனா? அது நான் செத்தாலும் நடக்காது. வளர் அவசர பட்டுட்டா. என்னோட கல்யாண விஷயத்தை என்கிட்டே கேட்டுருந்தா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிருப்பேன்”, என்றான் செழியன்.

 

“அத்தான்”

 

 “அத்தான் பொத்தான்னு வீட்டு பக்கம் வந்த செருப்பு பிஞ்சிரும். எப்ப என் தங்கச்சி உசுருக்கே உலை வச்சீங்களோ உங்க மூஞ்சுல முழிக்க கூட நான் விருப்ப படலை”

 

“செழியா அவசர பட்டு வார்த்தையை விடாத பா”, என்று கெஞ்சினாள் சரசு.

 

“அவன் கிட்ட என்ன கெஞ்சிட்டு இருக்க? செருப்பால அடிப்பேன்னு சொன்ன அப்புறம் இனி என்ன உறவு வேண்டி இருக்கு. இன்னையோட உனக்கு பிறந்த வீடு இல்லை. வா போகலாம். என் பொண்ணுக்கு ஜாம் ஜாம்னு நான் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீ வா வள்ளி” என்று சொல்லி விட்டு திரும்பினார் சேகர்.

 

அவரை சமாதான படுத்த போன தங்கராசுவை “அப்பா உங்களுக்கு கிழிந்த நாராய் படுத்து கிடக்குற வளர் முக்கியமா? இல்லை நம்ம வீட்ல யாரு செத்தாலும் அவங்க காரியம் பெருசுன்னு நினைக்கிற உங்க அக்கா குடும்பம் முக்கியமான்னு முடிவு பண்ணிட்டு சமாதான படுத்துங்க”, என்றான்.

 

மகன் அப்படி சொன்ன பிறகும் அவர்கள் பின்னே செல்வாரா என்ன? தன் குடும்பம் தான் முக்கியம் என்று அசையாமல் நின்று விட்டார் தங்கராசு.

 

அனைத்தையும் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் மது. ஒரு விதத்தில் அவள் மனது எல்லை இல்லாத நிம்மதியை சுமந்திருந்தது.

 

அவர்கள் மூணு பேரும் போன பிறகு அங்கே அமைதி நிலவியது. “எப்பா செழியா அவதான் சின்ன பொண்ணு புரியாம இப்படி பண்ணிட்டா. நீ சொன்னா வளர் என்ன வேணா கேப்பா. நீ வள்ளியை கல்யாணம் பண்ணுறேன்னு சொன்னா வளர் சரின்னு சொல்லுவா. அப்ப பிரச்சனை முடிஞ்சிருமே. உனக்கும் கல்யாண வயசு வந்துட்டே. வள்ளியை பண்ணுனா என்ன?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“அம்மா ப்ளீஸ் இனி கல்யாணம் பத்தி பேச வேண்டாம்”, என்று செழியன் சொன்னதும் பெற்றவர்களுக்கு திக்கென்று இருந்தது.

 

“இவன் என்ன இப்படி சொல்றான். வள்ளியை பிடிக்கலைன்னா வேற பொண்ணு தான பாக்க சொல்லணும்”, என்று இருவருமே நினைத்தார்கள்.

 

“அப்பா, அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. நான் வளர் கூட இருக்கேன்”, என்றான் இளஞ்செழியன்.

 

“நீ  வேணும்னா வேலைக்கு போ டா. நான் இருக்கேன்”, என்றாள் பூங்காவனம்.

 

“என் பாப்பாவை விட வேலை பெருசு இல்லை மா. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னதும் அவர்கள் “சரி உனக்கு சாப்பாடு எடுத்துட்டு அப்புறமா வரோம்”, என்று சொல்லி விட்டு கிளம்பி சென்றார்கள்.

 

இப்போது இருவரும் தனியாக இருந்தார்கள். என்ன பேச என்று தெரியாமல் இருவருக்குள்ளும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

 

அவன் நின்று கொண்டு இருப்பதை பார்த்த மது வளர் அருகில் ஒரு சேரை இழுத்து போட்டு விட்டு அவனை பார்த்தாள்.

 

அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். தனக்காக தான் அந்த சேர் என்று புரிந்ததது. அப்போது தான் அவள் கோலத்தை கண்ட செழியன் “சாரி உங்களை அவசரமா வர வச்சாச்சு. வீட்டுக்கு போய்ட்டு வாங்க”, என்றான்.

 

அவன் மரியாதை கொடுத்து பேசியது அவளுக்கு எரிச்சலாக வந்தது. அவனை முறைத்தவள் “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும். நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்”, என்றாள்.

 

“இந்த திமிர் மட்டும் குறையவே இல்லை இவளுக்கு”, என்று நினைத்து கொண்டு “சேலை ஒழுங்கா கட்டலை. தலை சீவலை. இன்னும் கொஞ்ச நேரத்துல வேற நோயாளிகள் வருவாங்க. அதனால சொன்னேன்”, என்று சொன்னவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.

 

“இவன் என் சேலையை எல்லாம் கவனிக்கிறானா?”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்தாள். அவனோ திரும்பி கொண்டான். பின் “ரொம்ப நேரம் தலை துவட்டாமல் இருந்தால் டாக்டருக்கே வைத்தியம் பாக்கணும்”, என்றான்.

 

முகத்தில் வந்த புன் சிரிப்புடன் “சரி வீட்டுக்கு போய்ட்டு வரேன். தாயம்மா அக்கா இப்ப வந்துருவாங்க. நான் ட்ரிப்ஸ் முடியுறதுக்குள்ள வந்துருவேன்”, என்றாள்.

 

“ஹ்ம்ம் சரி”, சொன்னவன் அவள் எடுத்து போட்ட சேரில் சென்று அமர்ந்தான். அவனை திரும்பி பார்த்த படியே சென்றவள் வீட்டுக்கு போகும் வழியில் சிரிக்காமல் இருக்க பெரும் பாடு பட்டாள்.

 

அவள் உள்ளத்தில் இருந்த சந்தோசம் அவள் முகத்தில் தெரிந்தது. வீடு இருக்கும் தெருவுக்கு வந்த போது தான் அம்மா அப்பா பற்றி நினைவு வந்தது.

 

“இப்படியே போனா வீட்ல என்ன நினைப்பாங்க?”, என்று நினைத்தவள் அளவுக்கு அதிகமாக இருந்த சந்தோசத்தை மறைத்த படி சென்றாள். அவளின் வரவுக்காக தான் வாசுதேவனும் மல்லிகாவும் காத்திருந்தார்கள். இவளை பார்த்ததும் “என்ன மது ஆச்சு? அந்த பிள்ளைக்கு ஒன்னும் இல்லையே”, என்று கேட்டாள் மல்லிகா.

 

“இல்லை மா காப்பாத்தியாச்சு. மயக்கமா இருக்கா. நான் கிளம்பி போகணும்”, என்றாள் மதுமிதா.

 

“ஏன் இப்படி பண்ணுனாளாம்?”, என்று கேட்டாள் மல்லிகா.

 

 “வேற எதுக்கா இருக்கும்? காதல்னு எவன் பின்னடியாவது போயிருப்பா”, என்று வாசுதேவன் சொன்னதும் “அப்பா”, என்று கத்தி இருந்தாள் மதுமிதா.

 

அவசரப்பட்டு பேசியதை அப்போது தான் உணர்ந்தவர் குற்றவுணர்வுடன் மதுவை பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்ட மது “அவங்க அண்ணனுக்கு அவங்க அத்தை பொண்ணை கட்டி வைக்க கூடாதுன்னு அந்த பொண்ணு இப்படி பண்ணிருக்கு”, என்று சொல்லி விட்டு தளர்ந்து போய் தன் அறைக்கு சென்றாள்.

 

வாசு தேவனை முறைத்து பார்த்து விட்டு தன் மகளின் அறைக்குள் சென்றாள் மல்லிகா. அங்கே தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் மதுமிதா. அவள்  அருகில் சென்று  தலையை வருடினாள் மல்லிகா. அன்னையின் பரிசம் உணர்ந்தவள் “அம்மா”, என்று கதறிய படி மல்லிகாவின் இடுப்பை கட்டி கொண்டாள்.

 

மல்லிகாவின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்  மதுவின் தலையில் விழுந்தது. “அழாத மது மா. அப்பா அவசர பட்டு வார்த்தையை விட்டுட்டார் குட்டி”, என்று சமாதானம் செய்தாள்.

 

அன்னையை விட்டு விலகியவள் “எனக்கு தெரியும் மா. ஆனாலும் தாங்கிக்க முடியலை. அப்பா எதையுமே மறக்கலையே மா”, என்று கதறினாள் மதுமிதா.

 

“நீ மறந்துட்டியா?”, என்று மல்லிகா கேட்டதும் அதிர்ச்சியாக அவளை பார்த்தாள் மது.

 

தாகம் தணியும்……

 

Advertisement