Advertisement

அத்தியாயம் 3

 

நித்தமும் உன்

நினைவுகளில்

தத்தளிக்கிறேன்

உன் மீதான

பிடிமானம் தேடி!!!!!

 

“ஏய் சின்ன குட்டி பல்லை காட்டிட்டு வர. தலை வலி சரி ஆயிட்டா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“ஹ்ம்ம் சரி ஆயிட்டு மா. நான் ஸ்கூலுக்கு போறேன்”, என்று கிளம்ப சென்றாள்.

 

மகன் வேலைக்கு செல்வான் என்று எதிர்பார்க்க “எனக்கு தலை வலிக்கு மா. நான் வேலைக்கு இன்னைக்கு போகல. லீவ் சொல்லிட்டேன். கொஞ்ச நேரம் தூங்குறேன். என்னை எழுப்ப வேண்டாம்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் புகுந்தான் இளஞ்செழியன்.

 

“இது என்ன காலைல அவ தலை வலிக்குதுன்னு சொன்னா. இப்ப அவ சரியாகிட்டா. இவன் வலிக்குதுன்னு சொல்றான். சாயங்காலம் எல்லாருக்கும் சுக்கு கசாயம் வச்சி கொடுக்கணும்”, என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் பூங்காவனம்.

 

ஸ்கூலுக்கு கிளம்பிய வளர் தன் அண்ணணின் அறையை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடைய சைக்கிளை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

 

தன்னுடைய கட்டிலில் படுத்திருந்த செழியனோ அருகில் இருந்த தலையணையை இறுக்கி கட்டி கொண்டான். அவன் முகம் முழுவதும் மலர்ச்சியுடன் இருந்தது. உள்ளம் முழுவதும் பரவசத்துடன் காண பட்டது.

 

“எத்தனை நாள் ஏக்கம் இது? இன்று நடந்தது ஒரு அதிசயம் தான். இந்த சின்ன குட்டி எவ்வளவு பெரிய வேலை எல்லாம் பாக்குறா?”, என்று சிரித்து கொண்டவன் “அம்மா கிட்ட தலை வலின்னு சொல்லிட்டோமே”, என்று குற்றவுணர்வுடன் நினைத்தான்.

 

“ஒரு டாக்டர் வரணும்னு தான எழுதி போட்டேன். இவளே வந்து நிக்குறா. கடவுளே இத்தனை வருஷம் கழிச்சு அவளை என் கண்ணுல காட்டுறது நல்லதுக்கா கெட்டதுக்கா? எம்மா எப்படி இருக்கா? முன்னாடி ஒல்லியா ஒட்டடை குச்சி மாதிரி இருப்பா. இப்ப அப்படியே கும்முனு இருக்கா? உன்னை நினைச்சாலே என்னோட தூக்கம் கெடுது டி. இத்தனை நாள் பாக்கலைன்னு ஏக்கம். இன்னைக்கு பாத்ததுனால ஏக்கம். என் ஏக்கம் எப்ப தீருமோ? எங்க தூக்கம் வரும்?”, என்று அவன் நினைத்ததுக்கு மாறாக வெகு நாள் கழித்து நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்செழியன்.

 

மதியம் இரண்டு மணிக்கு தன் சீட்டை விட்டு எழுந்த மதுவுக்கு எப்போது தனிமை கிடைக்கும் என்று ஆவலாக இருந்தது. அவனை பற்றிய எண்ணங்களுக்கு எந்த இடையூறும் வர கூடாது.

 

“இன்று நடந்த ஒவ்வொன்றையும் ஒன்னு ஒண்ணா அசை போடணும். அதுக்கு வீட்டுக்கு போகணும்”, என்று எண்ணி கொண்டவள் “தாயம்மா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. சாவி என்கிட்டயும் ஒன்னு இருக்கு. நீங்க பூட்டிட்டு போயிருங்க ”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

வீட்டுக்கு வந்ததும் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும் மதுவின் கண்களில் இருந்த மலர்ச்சியை ஒரு தாயாக மல்லிகாவுக்கு அடையாளம் கண்டு கொண்டாள்.

 

“அப்படியும் இருக்குமோ?”, என்று நினைத்த மல்லிகாவுக்கு “இது நல்லதுக்கா கெட்டதுக்கா?”, என்று குழப்பம் வந்தது.

 

மனதில் இருந்ததை வெளியே காட்டாமல் “இன்னைக்கு வேலை எப்படி இருந்துச்சு மது?”, என்று கேட்டாள்.

 

“ஹ்ம்ம் நல்லா போச்சு மா. இந்த ஊர் நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

 

“ஹ்ம்ம் பிடிக்காம எப்படி இருக்கும்?”, என்று நினைத்து கொண்டு “சரி சாப்பிட வா”, என்றாள்.

 

“ரொம்ப பசிக்கல மா. கொஞ்சம் தாங்க. நான் குளிச்சிட்டு வரேன். ஆமா அப்பா எங்க?”, என்று கேட்டாள் மது.

 

“வெளிய போறேன்னு சொல்லிட்டு போனார். நீ குளிச்சிட்டு வா. நான் குழம்பு சூடு பண்றேன்”, என்று சொல்லி விட்டு சாமி அறைக்கு சென்றாள்.

 

“எல்லாமே நல்ல படியா நடக்கணும் கடவுளே”, என்று வேண்டுதல் வைத்தவள் சமையல் அறைக்கு சென்றாள்.

 

தன் அறைக்கு சென்ற மதுவோ கண்ணாடி முன்பு போய் நின்றாள். அவள் மனதில் இருந்த சந்தோசம் அவள் முகத்திலும் வந்திருந்தது.

 

“நானா இவ்வளவு அழகா இருக்கேன்?”, என்று வாய் விட்டே சொன்னாள்.

 

“சாப்பிடலைன்னா அம்மா விட மாட்டாங்க”, எண்ணி கொண்டவள் குளியல் அறைக்கு சென்று குளித்து முடித்து ஒரு நைட்டியை மாட்டி கொண்டு சாப்பிட வந்தாள்.

 

“மித்ரன் போன் பண்ணான் மா. அவனுக்கு நீ பேசலையா?”, என்று கேட்டாள் மல்லிகா.

 

“ஓ சாரி மா. ரொம்ப வேலை இருந்துச்சா. அதான் அவனை மறந்துட்டேன்”, குற்றவுணர்வுடன் சொன்னாள் மது.

 

“சரி சாப்பிட்டுட்டு பேசு. வேலை எப்படி இருக்குனு கேக்க தான் பண்ணிருப்பான்”

 

“ஹ்ம்ம் சரி மா”, என்று சாப்பிட ஆரம்பித்தாள். அவள் இங்கு இருந்தாலும்  அவள் நினைவுகள் எங்கெங்கோ செல்வது மல்லிகாவுக்கு புரிந்தது.

 

இங்கேயே இருந்தால் அவளிடம் எதையாவது கேட்டு விடுவோம் என்பதால் “மது நீ சாப்பிடு. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

அதற்காகவே காத்திருந்தவள் போல அவசரமாக உணவை அள்ளி திணித்தவள் தன்னுடைய அறைக்கு சென்றாள்.

 

“மித்ரனுக்கு அழைக்கலாம்”, என்று போனை எடுத்தவள் “வேண்டாம், அவன் கிட்ட பேசுற மன நிலைல நான் இப்ப இல்லை. அப்புறம் பண்ணிக்கலாம்”, என்று வைத்து விட்டாள்.

 

கட்டிலில் படுத்தவளுக்கு செழியனின் நினைப்பு வந்தது. அப்படி சொல்லாமல் அவனை நினைப்பதுக்கு தானே இவ்வளவு அவசரமாக அவள் வந்து படுத்தது என்று சொல்லலாம்.

 

உருண்டு பிரண்டு படுத்த மதுவுக்கு தூக்கம் வருவேனா என்று இருந்தது.

 

வெகு நாளாக மனதில் நிழலாக பவனி வந்தவன் இன்று கண் முன் நிஜமாக வந்ததை அவளால் நம்ப தான் முடியவே இல்லை.

 

கண் முன் நின்றவனின் தோற்றத்தை எண்ணி பார்த்தாள். முன்பு அரும்பிய மீசையுடன் இருந்தவன் இன்றோ அடர்ந்த மீசையுடன் அழுத்தமான உதடுகளுடன் இருந்தான். உயரம் சற்று கூடி இருந்ததோ என்னவோ? ஆனால் ஆள் வாட்ட சாட்டமாக மாறி விட்டான்.

 

அவனுடைய அகன்ற தோள்கள் சாய்ந்து கொள்ள அவளை அழைப்பது போல பட்டது மதுவுக்கு.

 

ஆனால் உடையில் இருந்த மிடுக்கு மட்டும் இப்போதும் குறையவேஇல்லை. அடர்ந்த மெரூன் கலர் சட்டையும் கிரீம் கலர் பேண்டும் அவனுக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.

 

இன்ச் பை இன்ச்சாக அவனுடைய தோற்றம் அந்த சில நிமிடங்களில் பதிந்து போனதை ஆச்சர்யத்துடன் எண்ணி கொண்டாள்.

 

“இந்த காட்டு மிராண்டி எப்ப இப்படி டீசெண்டா மாறினான்? எம்மா நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆளையே அசத்துறான். எந்த பொண்ணுங்க பாத்தாலும் கல்யாணம் பண்ண…”, என்று நினைத்து கொண்டே வந்தவள் “கல்யாணம்”, என்ற வார்த்தையில் திகைத்து நின்றாள்.

 

“இதை எப்படி யோசிக்காம போனேன்? கல்யாணம் அவனுக்கு முடிஞ்சிருக்கும் தான? ஒரு வேளை முடிஞ்சிருந்தா? ஒரு வேளை முடியாம இருந்தா?”, இப்படியே யோசித்தவளுக்கு கலக்கமாக இருந்தது.

 

“அப்படியே கல்யாணம் ஆகலைனா என்ன செய்ய போற?”, என்று கேவலமாக அவளை இடித்துரைத்து மனசாட்சி.

 

கூடவே “ஆள் மட்டும் கம்பீரமா இல்லை. ஊரே மதிக்கிற மாதிரி நல்ல பதவில இருக்கான். அவன் இவ்வளவு தூரம் வந்துருக்கான்னா அது நீ அவனை விட்டு போனதுனால தான்? மறுபடியும் அவனை நினைச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சிறாத” , என்றும் கடிந்தது.

 

அழகான கனவு கலைந்தது போல கண்களில் நீர்  வடிந்தது. அப்படியே மணியை பார்த்தாள் மணி ஐந்து என்று காட்டியது.

 

இப்போதும் அவளுடைய போனில் மித்ரனின் அழைப்பு பதிவாகி இருந்தது. இப்போது அவனிடம் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதும் அவனை அழைத்தாள்.

 

“இப்பவும் உன்னோட சுயநலம் தான் ஜெயிக்குதுல்ல? காலைல இருந்து மித்ரனை நீ கூப்பிடவே இல்லை. இப்ப உனக்கு தேவை படும் ஆறுதலுக்காக அவனுக்கு போன் போடுற” என்று கேட்டது மனசாட்சி.

 

அடி வாங்கிய மனதுடன் அவன் போனை எடுப்பதற்காக காத்திருந்தாள். மூன்றாவது ரிங்கிலே எடுத்த மித்ரன் “ஏய் மது என்ன பண்ற? எப்படி இருக்க?”, என்று உற்சாகமாக கேட்டான்.

 

அவனுடைய உற்சாகம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை விதைத்தது. “நல்லா இருக்கேன் மிட்டு”, என்றாள்.

 

“நான் நல்லாவே இல்லை”, என்றான் மித்ரன்.

 

“ஏனாம்? ஐயாவுக்கு என்ன கவலை?”

 

“சண்டை போட ஆள் இல்லையே? அதனால தான். நீ ஏன் போன? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டி”

 

“ஹ்ம்ம்”

 

“என்ன ம்ம்? காலைல இருந்து போன் பண்றேன். ஏன் எடுக்கல லூசு?”

 

“வேலை இருந்துச்சு டா. இப்பவும் எனக்கு மூட் அவுட். அதான் உனக்கு போன் பண்ணேன்”

 

“மூட் அவுட்னா எனக்கு பண்ணாம நீ வேற யாருக்கு பண்ண போற? ஆமா பேசுன அப்புறமும் ஏன் டல்லா பேசுற?”

 

“ப்ச் உனக்கு போன் பண்ண அப்புறம் இன்னும் அதிகமா மூட் அவுட்”

 

“அட பாவி நான் அப்படி ஒன்னும் மொக்கை போடலையே. நார்மலா தான பேசுறேன்”

 

“அது இல்லை டா. மதியமெல்லாம் போன் பண்ணல. மனசு சரி இல்லைன்னு ஆன அப்புறம் உனக்கு பண்ணேன். உன்னை என்னோட தேவைக்காக யூஸ் பண்ணிகிறனோன்னு கஷ்டமா போச்சு”

 

“அட லூசு உங்களுக்கு சேவை செய்ய இந்த அடியேன் காத்திருக்கிறேன். தாங்கள் என்னவென்றால் இப்படி சொல்கிறீர்களே”

 

“ஓய்ய்ய் என்ன நக்கலா?”, என்று திமிராக கேட்டாள் மது.

 

“இந்த ரவுடி டோன் தான் நல்லா இருக்கு. மை மது இஸ் பேக். சரி இப்ப மைண்ட் ஓகே வா?”

 

“ஹ்ம்ம்”

 

“குட் செல்லம். சரி அத்தை மாமா என்ன பண்றாங்க?”

 

“அப்பா காணும். அம்மா கீழ இருக்காங்க”

 

“ஹ்ம்ம் சரி நீ ரெஸ்ட் எடு. நான் அப்புறம் பேசுறேன்”

 

“மிட்டு”

 

“சொல்லு மது”

 

“எதுக்கு மூடவுட்னு நீ கேக்கவே இல்லை”

 

“சொல்லனும்னா நீயே சொல்லுவியே? நீ மனசு சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும் டா”

 

“ஹ்ம்ம் தேங்க்ஸ்”

 

“ஆகான் இது எதுக்கு?”

 

“என் பிரண்டுக்கு நான் தேங்க்ஸ் சொல்லுவேன். உனக்கென்ன?”

 

“சரி சரி சொல்லிக்கோ. அம்மா உங்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. அப்புறம் பண்ண சொல்றேன்”

 

“ஓகே மிட்டு நான் ஆண்ட்டிகிட்ட அப்புறம் பேசுறேன். பை”, என்று சொல்லி வைத்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அவன் ஆழமான நட்பை எண்ணி.

 

முகத்தை கழுவி கொண்டு கீழே வந்தவள் மல்லிகா அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

நன்கு தூங்கி எழுந்த இளஞ்செழியன் புத்துணர்வாக உணர்ந்தான். வாழ்க்கையில் வெகு நாள் கழித்து இன்று தான் நிம்மதியாக உணர்ந்தான். அதற்கான காரணமும் அவனுக்கு புரிந்தது. இன்று தன் கண்களுக்கு காட்சி தந்த மது தான் காரணம் என்பது.

 

அவள் முகம் மனதில் மின்னியது. ரோஜா வண்ண சேலையில் மஞ்சள் கிழங்கு போன்று பளபளவென்று அழகியாக இருந்தவளை நினைத்து பார்த்தவனின் தாகம் அதிகமானது.

 

பள்ளி சீருடையில் ரெட்டை ஜடை அணிந்து கொஞ்சம் மெலிந்த தேகத்துடன் இருந்தவளா, இப்படி அழகின் மொத்த உருவமாக இருப்பது? தன்னை கண்டதும் அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை நினைவில் கொண்டு வந்தவனுக்கு உடம்பெல்லாம் ஒரு முறை சிலிர்த்தது.

 

அருகில் இருந்த தலையணையை இறுக்கி பிடித்து கொண்டான். அவளுக்கு கல்யாணம் ஆன எதாவது அறிகுறி தெரிந்ததா என்று சிந்தித்து பார்த்தான்.

 

அப்படி கல்யாணம் ஆகி இருந்தாலும் அவ சந்தோசமா இருக்கணும்”, என்று நினைத்து கொண்டான் இளஞ்செழியன்.

 

வெளியே வளரின் குரல் கேட்டது. “ஸ்கூல் விட்டு வந்துட்டா போல?”, என்று நினைத்து கொண்டே வெளியே சென்றான்.

 

“ப்ச் இப்ப ஏன் டி வந்ததும் வராததுமா என்கிட்டே மல்லு கட்டிக்கிட்டு இருக்குற? உங்க அண்ணனுக்கு காபி தான கொடுக்க போறேன்’. அதுக்கு ஏன் வேண்டாம்னு சொல்ற?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“தூங்குற அண்ணனை எழுப்பி நீ ஒன்னும் காபி கொடுக்க வேண்டாம். அண்ணன் தூங்கட்டும்”

 

“நீ எனக்கு மக இல்லை டி. மாமியார். என்னா  வருத்து வர? ஊருல இல்லாத அண்ணன் தங்கச்சி. நீயே அப்புறமா அவனுக்கு எடுத்துட்டு போ. இப்ப இதை நீயே குடி”

 

“வளர் உனக்கு மாமியார் இல்லை மா. எனக்கு இன்னொரு அம்மா”, என்று சொல்லி கொண்டே அவர்கள் அருகில் வந்தவன் வளர்மதியின் தலையை வருடினான்.

 

“தன்னையா அம்மா என்று சொன்னான்?”, என்று நினைத்து சிலிர்த்த வளர்  “அண்ணே, எந்திச்சிட்டியா?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

 

இருவரின் பாசத்தையும் கண்ட பூங்காவனம் கண்களில் துளிர்த்த நீரை துடைத்து கொண்டாள்.

 

அப்போது செழியனின் மற்றொரு தங்கை சுடரும் அவள் கணவன் செந்திலும் உள்ளே வந்தார்கள்.

 

“வாங்க மச்சான், வா சுடர்”, என்று செழியன் சொன்னதும் “வாங்க மாப்பிள்ளை”, என்று பூங்காவனமும் சொன்னாள்.

 

பொதுவான நலம் விசாரிப்புக்கு பின் அவர்கள் கையில் இருந்த குழந்தை கிஷோரை வாங்கி கொண்டாள் வளர்மதி.

 

“வளரு எப்படி டி இருக்க?”, என்று அவள் தலையை வருடி விட்ட சுடர் “அண்ணே உடம்பு சரி இல்லையாண்ணே?”, என்று விசாரித்தாள்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. தூங்குனேனா அதனால தான். மச்சான் இருங்க. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு செ ன்று விட்டான் இளஞ்செழியன்.

 

பூங்காவனம் அனைவருக்கும் காபி கொடுத்தாள். சிறிது நேரத்தில் தங்கராசுவும் வந்ததும் அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

செந்தில் செழியனிடம் பத்திரிக்கையை நீட்டினான். என்ன மொட்டை போடுறதுக்கு பத்திரிகையா?”, என்று நினைத்து கொண்டு அதை புன்னகையோடு பெற்று கொண்டவன் அதை வாங்கி பார்த்தான். அது அவர்கள் கட்டி இருக்கும் புது வீட்டுக்கான விழா, என்று இருந்ததும் “இதை எப்படி மறந்தேன்?”, என்று நினைத்து கொண்டான்.

 

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் புதுமனை புகு விழா பற்றியும் அன்று கிஷோருக்கு மொட்டை போடுவதை பற்றியும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

அடுத்த நாள் காலை மதுமிதா கிளம்பி ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்லும் போது எதிரே வந்தாள் வளர்மதி.

 

அவளை கண்டதும் மது முகம் மலர்ந்தது. அதை விட வளர் முகமும் ஒளிர்ந்தது.

 

“குட் மார்னிங் டாக்டர்”, என்றாள் வளர்.

 

“குட் மார்னிங் வளர். ஸ்கூல் கிளம்பிட்டியா?”

 

“ஆமா”

 

“தலை வலி குறைஞ்சிட்டா?”

 

“கேலி பண்ணாதீங்க”

 

“நான் கூட இன்னைக்கும் தலை வலின்னு உங்க அண்ணனை கூட்டிட்டு வருவியோன்னு நினைச்சேன்”, என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டாள் மது.

 

“ஐ இவங்களும் அண்ணனை தேடுறாங்க “, என்று நினைத்த வளர் உள்ளத்தில் எழுந்த சந்தோசத்தை மறைத்து கொண்டு “அண்ணா வேலைக்கு கிளம்பிட்டு இருக்காங்க”, என்றாள்.

 

“ஓ”

 

“ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா டாக்டர்?

 

“இல்லை  உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகிட்டா?”, என்று கேட்டவளின் குரல் நடுங்கியது.

 

“இவங்க எவ்வளவு ஆசை வச்சிருக்காங்க. இந்த அண்ணன் நேத்து உடனே வெளியே போயிட்டு”, என்று நினைத்து கொண்டு “கல்யாணம் ஆகலை. ஆனா பொண்ணு ரெடியா இருக்கு. அண்ணன் சரின்னு சொன்னதும் கல்யாணம் தான். ஸ்கூலுக்கு நேரம் ஆகிட்டு டாக்டர். நான் வரேன்”, என்று சொல்லி அவள் தலையில் இடியை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

 

அன்று முழுவதும் ஒரு வித அதிர்வுடன் மதுமதி நாளை கடத்தினாள் என்றால் வளர்மதியோ ஒரு வித உற்சாகத்துடன் நாளை கடத்தினாள். மற்றொரு ஆளும் நிம்மதி இல்லாமல் தவித்தது. அது இளஞ்செழியன் தான்.

 

ஏதோ ஒரு அலைபுறதலுடனே இருந்தான். ஏனோ அவளை பாக்க செல்ல அவன் மனம் தூண்டியது. அது முடியாமல் தவித்து போனான். வேலை இருந்ததால் அவனால் அந்த நாளை எளிதாக கடக்க முடிந்தது.

 

அன்று மாலை வீட்டுக்கு வந்த வளரை “ஏட்டி வளரு, தலை வலிக்குதுன்னு மாத்திரை வாங்கிட்டு வந்தியே? அதை போடாம வச்சிருக்க?”, என்று கத்தி கொண்டிருந்தாள் பூங்காவனம்.

 

வளர் என்ன பதில் சொல்வாள் என்று காத்திருந்தான் செழியன்.

 

“அதுவா மா அதான் தலை வலி சரியாகிட்டேனு தான் போடலை. அக்கா மாமா போய்ட்டாங்களா?”

 

“அவங்க மதியமே போய்ட்டாங்க. அதை எடுத்து போடு டி. திருப்பியும் தலை வலி வர போகுது”

 

“அதெல்லாம் வராது மா. அப்படியே வந்தாலும் பக்கத்துலே டாக்டர் இருக்காங்களே”

 

“அட ஆமா டி நானும் கேள்வி பட்டேன். வாசு அண்ணன் மக தான் டாக்டராம்ல? சின்ன வயசுல பாத்தது. ஆள் அப்பவே அம்சமா இருப்பா. இப்ப எப்படி இருக்கா?”

 

“நான் இது வரைக்கும் அவங்களை மாதிரி அழகா யாரையுமே பாத்தது இல்லை மா”

 

“எந்த சீமை துறைக்கு குடுத்து வச்சிருக்கோ “, என்று சொல்லி விட்டு பூங்காவனம் உள்ளே சென்றதும் தன் அண்ணன் அறைக்குள் போக பார்த்தாள் வளர்.

 

அவனோ வாசலில் சாய்ந்து நின்று அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

 

“அண்ணே நீ இங்க நின்னு கேட்டுட்டு தான் இருக்கியா?”

 

“ஹ்ம்ம், ஆமா. தேவை இல்லாத பேச்சு பேசாம படிக்கிற வேலையை பாரு டா குட்டி”

 

“போ அண்ணே, உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் டாக்டர் பத்தி சொல்லணும்னு வந்தா நீ வேண்டாம்னு சொல்றியே? சரி போ. நான் முகம் கழுவிட்டு படிக்கிறேன்”

 

“ஏய் வளர் குட்டி, என்ன விஷயம்?”, என்று கேட்டவன் வளர் முறைத்ததும் அசடு வழிந்தான்.

 

மேலும் அவனை கிண்டல் செய்யாமல் “அதுவாண்ணே, இன்னைக்கு ஸ்கூல் போகும் போது எதுத்தாப்புல அவங்கள பாத்தேன். என்கிட்ட நின்னு பேசுனாங்க”, என்றாள்.

 

“ஹ்ம்ம் அப்பறம்”, என்று சாதாரணமாக கேட்டாலும் அவனுக்குள் ஆவல் அதிகரித்தது.

 

“உன்னை பத்தி கேட்டாங்க”

 

“என்னை பத்தி கேட்டாளா?”

 

“ஹ்ம்ம் ஆமா, உனக்கு கல்யாணம் ஆகிட்டான்னு கேட்டாங்க”

 

“ஏய் நிஜமாவா? நீ என்ன சொன்ன?”

 

”ஆகலைன்னு சொன்னேன். வேற என்ன சொல்லுவேன்”

 

“ஹி ஹி சும்மா வம்பிழுக்க ஆகிட்டுனு சொல்லிருப்பியோன்னு நினைச்சேன்”

 

“சிரிப்பது தன் அண்ணன் தானா?”, என்று நினைத்தவள் “ஆனா பொண்ணு தயாரா இருக்குன்னு சொல்லிட்டேன் அண்ணன்”, என்று சிரித்தாள்.

 

“எதுக்கு வளர் அப்படி சொன்ன?”

 

“ஆமா பொண்ணு ரெடியா தான இருக்கு? அவங்க தான் என்னோட அண்ணின்னு தெரியும்”

 

“வளர்”, என்று நெகிழ்ந்தவன் “வீணா கனவு காண கூடாது பாப்பா. அவ வாழ்க்கைல என்ன வேணா நடந்துருக்கலாம்”, என்றான்.

 

“என்ன வேணான்னா?”

 

“கல்யாணம் முடிஞ்சிருக்கலாம்”

 

“ஹா ஹா அது தான் இல்லை. அதையும் கேட்டுட்டோம்ல? கல்யாணம் ஆகலை. நான் முடிவு பண்ணிட்டேன். அவங்க தான் உன்னோட மனைவி”, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள்.

 

அவள் சொல்லி சென்ற வார்த்தைகள் மனதுக்கு இதமளிப்பது போல இருந்தது.

 

“என்னை பத்தி விசாரிச்சிருக்காளா? அவ மனசுல நான் இருக்கேனா?”, என்று நினைத்தவனுக்கு உள்ளுக்குள்ளே தித்தித்தது.

 

அதே நேரம் “அந்த பொண்ணு யாரா இருக்கும்? வேற பொண்ணை அவன் கட்டிப்பானா? கட்டிக்கணும்னா இந்நேரம் அவன் கல்யாணம் பண்ணிருக்கணுமே? கண்டிப்பா அவன் மனசுல நான் இருப்பேன். நான் இருக்கணும். என்னை தவிர அவன் மனசுல யாரும் வர கூடாது. என்னை மட்டும் தான் அவன் நினைப்பான்”, என்று யோசித்த படியே அதே நேரம் கிறுக்கு பிடித்த மாதிரி தனக்குள்ளே புலம்பி கொண்டிருந்தாள் மதுமதி.

 

 

தாகம் தணியும்……

 

Advertisement