Advertisement

அத்தியாயம் 2

 

நீ உருவாக்கிய

நாணங்களை மறைக்க

உன் நெஞ்சிலே

முகம் புதைக்கும்

தருணங்கள் அழகானது!!!!!!

 

“அம்மு குட்டி எந்திரி டா மணி எட்டு ஆக போகுது. நீ முதல் நாள் ஹாஸ்ப்பிட்டல் போகணுமே?”, என்று எழுப்பினார் வாசு தேவன்.

 

“டேடி”, என்று சொல்லி கொண்டே எழுந்த மதுமிதா அவரை பார்த்து சிரித்தாள்.

 

அவளுடைய வீங்கிய கண்களே அவள் இரவு அழுததை அவருக்கு பறைசாற்றியது. அதை கண்டு அவர் மனம் கலங்கினாலும் “குளிச்சிட்டு கிளம்பு மா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

 

சமையல் அறையில் அடுப்பை பற்ற வைத்து பாலை காய்ச்சி கொண்டிருந்தாள் மல்லிகா. கவனம் அடுப்பில் இருந்தாலும் நினைவுகள் மட்டும் எங்கெங்கேயோ சுற்றி அலைந்தது. ஒரு பெருமூச்சுடன் அப்பாவுக்கும் மகளுக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள்.

 

இருவருக்கும் காபி கொடுத்து விட்டு காலை சமையலை ஆரம்பித்தாள். மங்கை தோசை மாவு கொடுத்திருந்ததால் சட்னி மட்டும் வைத்தாள்.

 

குளித்து முடித்து வந்த மது பீரோவை திறந்து எந்த சேலையை கட்டலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கினாள்.

 

ஒரு ரோஜா வண்ண சேலையை கையில் எடுத்தவளின் கண்கள் கரித்து கொண்டு வந்தது. “அழ கூடாது”, என்று தன்னையே சமாதானம் செய்தவள் அந்த சேலையையே கட்டினாள்.

 

கழுத்தில் ஒரு டாலர் வைத்த செயின். காதுகளில் சின்ன ஜிமிக்கி ஒரு கையில் இரண்டு தங்க வளையல்கள் மற்றொரு கையில் கடிகாரம் அணிந்து கிளம்பி வந்தாள்.

 

ஒரு ரோஜாவே இறங்கி வருவது போல இருந்தது பெற்றோருக்கு. “சாயங்காலம் மதுவுக்கு சுத்தி போடணும்”, என்று நினைத்து கொண்ட மல்லிகா அவள் கையில் தோசை இருந்த தட்டை கொடுத்தாள்.

 

“ரெண்டு போதும்மா”, என்று சொன்ன மது சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“மதியம் சாப்பாடு எடுத்துட்டு வரவா குட்டி?”, என்று கேட்டார் வாசுதேவன்.

 

“வேணாம் பா, வீட்டுக்கு வந்துருவேன். உங்களுக்கு தான் போர் அடிக்கும் இல்லை பா”

 

“ஹ்ம்ம் நம்ம காடை விதைக்கலாம்னு இருக்கேன் மது”

 

“அப்பா வெயில்ல நிக்கணும். கஷ்டம்”

 

“வேற என்ன செய்ய? வீட்ல சும்மா இருந்தா எப்படி? உங்க அம்மாவும் கலகலன்னு பேச மாட்டா”, என்று வாசுதேவன் சொன்னதும் அவரை முறைத்த மல்லிகா “உங்க அப்பா மட்டும் பேசி பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைப்பாரா? காட்டு வேலை எல்லாம் இவர் செய்ய வேண்டாம். அதை குத்தகைக்கு விட்டுரலாம். நான் மங்கை கிட்ட நல்ல ஆளா கேட்டு சொல்றேன்”, என்றாள்.

 

“அம்மா சொல்றது சரி தான் பா. இப்ப உங்களுக்கு என்ன? நேரம் போகணும் அப்படி தான? இவ்வளவு நாள் பாத்த ஷேர் மார்க்கெட் வேலையை நீங்க இங்க இருந்தே ஆன்லைன்ல பாருங்க. நான் அங்கிள் கிட்ட சொல்றேன். என்னோட கம்ப்யூட்டர் எடுத்துக்கோங்க”

 

“சரி மா. நானே கோகுல் கிட்ட பேசிக்கிறேன். சரி மித்ரன் போன் பண்ணனா?”

 

“நேத்து பேசினேன் பா. காலைல பண்ணிருக்கான் பா. நான் தான் பாக்கலை. மிஸ்ட் கால் இருந்தது. இனி தான் பேசணும். சரி பா நான் கிளம்புறேன். அம்மா வரேன்”

 

“நல்ல படியா போய்ட்டு வா மது”, என்று இருவரும் சொல்லி அனுப்பினார்கள்.

 

ஆனாலும் அவளுடனே துணைக்கு வந்தார் வாசு தேவன். இரண்டு தெரு தள்ளி தான் ஹாஸ்ப்பிட்டல் என்பதால் நடந்தே சென்றார்கள். அவளை  விட்டு விட்டு திரும்பி விட்டார் வாசுதேவன்.

 

“வாங்க டாக்டரம்மா நீங்க பத்து மணிக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்”, என்றாள் அங்கே கிளீன் பண்ணி கொண்டிருந்த தாயாம்மா.

 

அவளை பார்த்து சிரித்த மது “உங்க பேர் என்ன?”, என்று கேட்டாள்.

 

“என் பேர் தாயம்மா”

 

“நர்ஸ் வந்துட்டாங்களா?”,

 

“ரெண்டு நர்ஸ் ஒண்ணாம் தேதி தான் வருவாங்களாம் மா. நம்ம பிரெசிடெண்ட் ஐயா தான் என்னை கிளீன் பண்ணி வைக்க சொன்னாங்க. நான் சுத்த படுத்திட்டேன்”

 

“ஹ்ம்ம் சரி வேற ஊருல இருந்து ஆள் வருவாங்களா? எவ்வளவு நேரம் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கணும். சாயங்காலம் அஞ்சு மணி வரைன்னா சரியா இருக்குமா? இல்லைன்னா காலைலயும் சாயங்காலமும் வரணுமா?”

 

“அவ்வளவு நேரம் எல்லாம் வேண்டாம் மா. இது கிராமம் தான? மதியம் ஒரு மணிக்கு மேல ஒருத்தரும் வர மாட்டாங்க”

 

“அப்ப அட்மிட் எல்லாம் பண்ண வேண்டாமா? அந்த அளவுக்கு வந்தா என்ன பண்ண?”

 

“அதை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிருவாங்க மா. நீங்களும் அதையே செஞ்சிருங்க. ஆம்புலன்ஸ் உடனே வந்துரும்”

 

“பக்கத்து ஊருல இருந்து ஆளும் வருவாங்களே

 

“பழைய டாக்டர் பத்து மணில இருந்து ஒரு மணி வரை தான் இருப்பார். அதனால எல்லாருக்கும் அது தான் ஹாஸ்ப்பிட்டல் நேரம்னு தெரியும்”

 

“ஹ்ம்ம்  சரி. அப்புறம் இங்க தண்ணி வச்சிருங்க. வரவங்களுக்கு தேவை படும்”

 

“சரி மா”

 

“அப்புறம் நர்ஸ் வர வரைக்கு நீங்க இங்க துணையா இருக்கீங்களா? நான் தனியா வேணா பணம் கொடுத்துறேன்”

 

“சரி மா இருக்கேன்”, என்று சொன்ன தாயம்மாவுக்கு அன்பாக அனுசரணையாக பேசும் மதுவை ரொம்ப பிடித்து விட்டது.

 

“அருமையான பொண்ணு”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள்.

 

அதே நேரம் “ஏய் ஏண்டி இன்னைக்கு இப்படி பண்ற?”, என்று வளரை பார்த்து கத்தி கொண்டிருந்தாள் பூங்காவனம்.

 

“அவ தான் தலை வலிக்குதுன்னு சொல்றாள்ள? இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்கட்டும்”, என்றார் தங்கராசு.

 

“அட நீங்க வேற? நான் என்ன அவளை பள்ளி கூடத்துக்கா போக சொல்றேன்? டவுன் ஆஸ்பத்திரிக்கு தான் கூப்பிடுறேன். வர மாட்டிக்கா”

 

“சின்ன குட்டி அப்பா கூட வரியா கண்ணு”

 

“ஹ்ம்ம் ஊசி போடுவாங்க. வேண்டாம். போக மாட்டேன்”, என்று அழுதாள் வளர்மதி.

 

“அம்மா, அப்பா, நீங்க உங்க வேலையை பாருங்க. நான் அவளை பாத்துக்குறேன். பாப்பா நீ வா. உன்னை நான் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போறேன்”, என்றான் இளஞ்செழியன் .

 

“நீ வேலைக்கு போகணுமே டா,” என்றாள் பூங்காவனம்.

 

“நான் பாத்துக்குறேன் மா, வளர் நீ வா கிளம்பு”, என்று செழியன் சொன்னதும் “சரி”, என்று கிளம்பினாள் வளர்மதி.

 

“இவளுக்கு இருக்குற ஏத்தத்தை பாத்தீங்களா? அண்ணன் காரன் மேல அப்படி என்ன தான் பக்தியோ? இவ்வளவு நேரம் கெஞ்சினோம். எதாவது கேட்டாளா?”, என்று முறைத்தாள் பூங்காவனம்.

 

“விடு பூவு அவளை பத்தி தான் தெரியுமே. அண்ணன் தங்கச்சி பாடு. சரி நான் காட்டுக்கு போறேன். கதிர் அறுக்க இன்னைக்கு ஆள்கள் வருவாங்க”

 

“சரி நான் அப்புறமா காபி தண்ணி கொண்டாறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் பூங்காவனம்.

 

தன்னுடைய பைக்கை உயிர்ப்பித்த இளஞ்செழியன் “உக்காந்துக்கோ பாப்பா. அண்ணணை பிடிச்சுக்கோ” என்றான்.

 

“சரிண்ணே”

 

“அப்புறம் ஊசிக்கு எல்லாம் நீ எப்ப பயந்த? இன்னைக்கு எதாவது முக்கியமான பரிச்சையா? நீ ஒழுங்கா படிக்கலையா? அதனால தான் லீவ் போடுறியா? எதுக்கு இந்த தலைவலி டிராமா?”

 

“இந்த அண்ணன் இவ்வளவு அறிவாளியா இருக்க கூடாது?”, என்று நினைத்து கொண்டு “நான் என்னைக்கு படிக்காம போனேன்? அதுவும் பரிச்சை எல்லாம் ஊதி தள்ளிற மாட்டேன். உண்மையாவே தலை வலிக்குது. அப்புறம் டவுன் ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். நம்ம ஊரு ஆஸ்பத்திரிக்கே போ”, என்றாள்.

 

“ஏய் கழுதை என்ன சொல்ற? அங்க தான் டாக்டர் வரலையே”

 

“அதுல்லாம் வந்தாச்சு. நீ தான கம்பளைண்ட் கொடுத்த? உனக்கு தெரியாதா?”

 

“கம்பளைண்ட் கொடுத்தேன். ஆனா இந்த விவரம் கவனிக்கலையே.  சரி அங்கேயே போகலாம்”

 

மதுவுக்கு வேலை சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் எப்படியோ ஊரில் இருப்பவர்களுக்கு தகவல் போய் நோயாளிகள் வரிசையில் நின்றார்கள்.

 

ஹாஸ்ப்பிட்டல் எதிரே வண்டியை நிறுத்திய செழியன் கூட்டத்தை பார்த்து “அதுக்குள்ளே இத்தனை பேரா? பாப்பா ரொம்ப வலிச்சதுன்னா நான் வேணா உன்னை டவுனுக்கு கூட்டிட்டு போறேன்”, என்றான்.

 

“காரியத்தை கெடுத்த போ”, என்று நினைத்து கொண்டு “கொஞ்ச பேர் தான் அண்ணே நிக்காங்க. பரவால்ல. புது டாக்டர் எப்படின்னு பாப்போம்”, என்று சொன்னவள் வண்டியில் இருந்து குதித்து இறங்கினாள்.

 

தங்கையை புரியாத பார்வை பார்த்து கொண்டு அவள் பின்னே சென்றவன் டோக்கனை வாங்கினான்.  அவனிடம் அனைவரும் மரியாதையாக பேசினார்கள். இவர்களை முன்னே போக சொன்னார்கள்.

 

அவன் தங்கை தியாக செம்மல் மாதிரி “அப்படி எல்லாம் செய்ய வேண்டாம். நாங்க எங்க வரிசையிலே வரோம்”, என்று சொல்லி விட்டாள்.

 

“ஏன் குட்டி அவுங்களே விடுறாங்க. சீக்கிரம் பாத்தா நான் வேலைக்கு போவேன்ல?”, என்று அவள் காதை கடித்தான் செழியன்.

 

“சும்மா இருண்ணே, உனக்கு ஒன்னும் தெரியாது. இப்படி தான் வழி விடுவாங்க. அப்புறம் பதவியை பயன் படுத்தி  உள்ளே போய்ட்டாங்கன்னு சொல்லுவாங்க”, என்று சொல்லி அவன் வாயை அடைத்தாள்.

 

ஒவ்வொருவருக்காய் பொறுமையாக  வைத்தியம் பார்த்தாள் மதுமிதா. சும்மா வேண்டா வெறுப்பாக அல்லாமல் உண்மையிலே அவர்கள் வியாதி என்ன என்று அலசி ஆராய்ந்தாள்.

 

ஒவ்வொருவருக்கும் கால் மணி நேரம் மேல ஆனது. “இது என்ன புதுசா வந்துருக்க டாக்டர் இவ்வளவு பொறுமையா வைத்தியம் பாக்காங்க ?அதிசயம் தான்”, எண்ணி கொண்டான் செழியன்.

 

அவர்கள் முறை வந்ததும் “உள்ளே வாண்னே”, என்று அழைத்தாள் வளர்மதி. அவளுடன் சாதாரண மனதுடன் சென்றான் செழியன். ஆனால் வளர்மதிக்கு தான் இதயம் படபடவென்று அடித்து கொண்டது. கூடவே ஒரு பரவசமும் ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.

 

“இப்ப வரது நம்ம வி. எ. ஓ தம்பி டாக்டரம்மா. அவரோட தங்கச்சியை கூட்டியாந்துருக்கு. ரொம்ப தங்கமான தம்பி. எல்லா உதவியும் செய்யும்”, என்றாள் தாயம்மா.

 

“ஓ அப்படியா? சரிக்கா நீங்க அதெல்லாம் கிளீன் பண்ணிருங்க. நான் அவங்களை பாக்குறேன். உள்ளே வர சொல்லுங்க”, என்றாள் மது.

 

நடுங்கும் மனதுடன் செழியனின் கைகளை பற்றி கொண்டு உள்ளே நுழைந்தாள் வளர்.

 

“பயப்படாத பாப்பா. அண்ணன் இருக்கேன்ல?”, என்று ஆறுதல் சொன்னான் செழியன்.

 

அந்த அறைக்குள் இருவரும் நுழைந்தவுடன் இருவருக்குமே பேரதிர்ச்சி தான். கண்கள் அகல விரிய அவளை கண்டு அசைவற்று நின்று விட்டான்.

 

அவன் உள்ளம் கேட்டது “இவளா?”, என்று.

 

வளரோ“எம்மாடி என்ன ஒரு அழகு?”, என்று வாயை பிளந்தாள். இப்படி ஒரு அழகை அவள் எந்த படத்திலும் கூட கண்டதில்லை. சிலை போல் நின்ற அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் உள்ளம் அவளுக்கு சபாஷ் போட்டது.

 

“சூப்பர் வேலை செஞ்சிருக்க டி வளர்?”, என்று தன்னையே மெச்சி கொண்டாள்.

 

“வாங்க உக்காருங்க. என்ன பண்ணுது?”, என்று கேட்டு கொண்டே கைகளை கழுவி கொண்டிருந்த மது திருப்பி எந்த சத்தமும் வராததால் திரும்பி பார்த்தவள் அடுத்த நொடி அவளும் அதிர்ந்து போனாள். இருவருமே அசைவற்று நின்றார்கள்.  கண்கள் மட்டும் முழுமையாக வேலை செய்தது.

 

“பத்து வருசத்துக்கு முன்பு பார்த்த மதுவா இது?”

 

குழந்தை தனத்துடன் இருந்தவள் இன்று குமரியாக அதுவும் மெழுகு சிலை என நின்றாள்.

 

அவன் கண்கள் அவளையே  மொய்த்தது. “உண்மையான ரோஜா கண் முன் இருந்தால் கூட இவ்வளவு அழகா இருக்காது”, என்று எண்ணி கொண்டவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

 

அவளும் அதே வேலையை தான் செய்தாள். எப்படி இருந்தவன் மீசை கூட சரியாக முளைக்காமல் இருந்த போது அவனை பார்த்தது. ஆனால் இன்று அடர்ந்த மீசையுடன் கிராமத்துக்கு உரிய மிடுக்குடன் அதே நேரம் பட்டிக்காட்டான் மாதிரி இல்லாத அந்த அசரடிக்கும் ஆணழகனாக இருந்தான்.

 

“அவனே தானா?” என்று கேட்டு கொண்டாள். கூட வளர் என்று ஒரு ஜீவன் இருப்பதை இருவருமே உணர வில்லை. இந்த உலகில் அவர்கள் இருவரும் மட்டுமே இருப்பது போல ஒருவர் பார்வை மற்றவரை தழுவியது.

 

இருவர் முகத்தையும் தான் ஊன்றி பார்த்தாள் வளர்மதி. அவளை அறியாமலே அவள் கண்கள் கலங்கியது. “கடவுளே என் அண்ணன் வாழனும்”, என்று வேண்டுதல் வைத்தது அந்த சின்னஞ்சிறிய சிட்டு.

 

அவர்களை கலைக்காமல் கலைக்க கூடாது என்ற வைராக்கியத்தோடு அவளும் அசையாமல் நின்றாள். எங்கே தன் அசைந்தால் அவர்கள் மோன நிலை கலைந்து விடுமோ என்று அஞ்சி.

 

வெளியே வேற ஆள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு ஓடியே போயிருப்பாள். ஆனால் இப்போது நோயாளியாக வந்திருக்கும் போது அவளால் அப்படி விலகி செல்ல முடிய வில்லை. அதே நேரம் அவர்களின் நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்தவளுக்கு அதை கலைக்கவும் மனதில்லை.

 

அவள் கண்களுக்கு அது அவளுடைய அண்ணனின் தவம் போல் இருந்தது. “தவம் தான் ஒரு வருடம் இரண்டு வருடமல்ல. பத்தாண்டு தவம்”, என்று எண்ணி கொண்டாள்.

 

தன்னுடைய உயிருக்கு உயிரான அண்ணனின் தவத்தை கலைக்க அவள் விரும்புவாளா? மதுவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை ஊன்றி கவனித்தாள்.

 

அண்ணனின் மனதை அறிந்தவளுக்கு இப்போது மதுவின் மனதும் புரிந்து போனது. அவள் மனது குதூகலித்தது. “இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன்”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டு ஊமையாக நின்றாள்.

 

ஆனால் தங்களை மறந்து அவர்கள் நிற்கலாம். தன்னுடைய அண்ணனுக்கக அவள் அசையாமல் நிற்கலாம். ஆனால் அடுத்தவர்கள் நிற்பார்களா?

 

“காபி எடுத்துட்டு வரட்டுமா டாக்டரம்மா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தாள் தாயம்மா. அவள் குரலில் தான் மூவரும் கலைந்தார்கள்.

 

தலையை ஒரு நொடி சிலுப்பி கொண்ட செழியன் “சின்ன குட்டி நான் வெளில நிக்குறேன். நீ பாத்துட்டு வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். முகத்தில் அடி வாங்கிய உணர்வுடன் நின்ற மது தன்னை சமாளித்து கொண்டாள்.

 

“வளர் பாப்பா. அந்த பெஞ்சுல போய் உக்காரு. டாக்டரம்மா காப்பி தண்ணி கொண்டு வரவான்னு கேட்டேன். நீங்க மலைச்சு போய் நிக்கீங்களே?”, என்று கேட்டாள் தாயம்மா.

 

“ஆன் காப்பியா? சரி கொண்டு வாங்க கா”, என்ற மது தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வளரை பார்த்தாள். வளர் மதுவை பார்த்து சந்தோசத்துடன் புன்னகைத்தாள்.

 

“இங்க வா உக்கார்”, என்று மது சொன்னதும் அந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள் வளர். தாயம்மா வெளியே சென்று விட்டாள்.

 

“இது அவனோட தங்கச்சியா?”, என்று மது மனது சிந்தித்து கொண்டிருந்தது.

 

ஆனால் வளரோ எதையுமே சிந்திக்காமல் “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டாக்டர்”, என்றாள்.

 

குழந்தை போல் இருந்தவளை உடனே பிடித்து விட்டது மதுவுக்கு. “நீயும் அழகா தான் இருக்க. ஆமா உன் பேர் என்ன?”, என்று கேட்டாள் மது.

 

“என் பேர் வளர்மதி”

 

“உனக்கு என்ன செய்யுது?”

 

“எனக்கு ஒண்ணுமே செய்யலை. நான் உங்களை பாக்க தான் வந்தேன்”

 

“இவ என்ன சொல்றா? என்னை பத்தி எல்லாமே இவளுக்கு தெரியுமா?”, என்று குழப்பத்துடன் அவளை பார்த்தாள் மது.

 

“இல்லை இன்னைக்கு ஒரு பரிட்சை இருந்தது. நான் படிக்கவே இல்லையா? அதான் தலை வலிக்குதுன்னு சொன்னேன். புது டாக்டர் வந்துருக்காங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களை பாக்க இங்க வந்தேன்”, என்று சொன்ன வளரை பார்த்து சிரித்த மது “ஏய் வாலு இப்படியா பொய் சொல்றது? படிக்க வேண்டாமா?”, என்று கேட்டாள்.

 

“அதெல்லாம் நான் சூப்பரா படிப்பேன். இன்னைக்கு தான் இப்படி”

 

“ஓ அப்படியா? உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?”

 

“எனக்கு அப்படி எல்லாம் இல்லை. எனக்கு எங்க அண்ணன் மாதிரி நிறைய படிச்சு ஒரு கவர்ன்மென்ட் வேலைக்கு போய் சொந்த காலுல நிக்கணும்”

 

“சூப்பர் வளர். ஆமா உங்க அண்ணன்னா இப்ப வந்தவங்களா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள் மது.

 

உள்ளுக்குள் சிரித்து கொண்டு “ஹ்ம்ம் ஆமா. இது தான் என் அண்ணன். பேர் இளஞ்செழியன்”, என்றாள்.

 

“ஓ, என்ன படிச்சிருக்காங்க”

 

“எம். எஸ்.சி முடிச்சிட்டு கவர்ன்மென்ட் வேலைக்கு ஒரு வருஷம் படிச்சது. இப்ப வில்லேஜ் ஆபிஸரா இருக்கு”

 

“ஹ்ம்ம்”, என்று சொன்ன மதுவுக்கு உள்ளுக்குள் மனது நிம்மதியானது போல இருந்தது.

 

ஆனால் வளரோ வாய் ஓயாமல் பேசி கொண்டே இருந்தாள். “எங்க அண்ணனை இந்த ஊருல எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும். எல்லாருக்கும் ரொம்ப நல்லது செய்யும். பிரச்சனைன்னா முன்னாடி நிக்கும். இந்த ஊருக்கு நிறைய நன்மை அரசாங்கம் செய்யுதுன்னா அது எங்க அண்ணனால தான்”

 

“உனக்கு உங்க அண்ணனை ரொம்ப பிடிக்குமா?”

 

“பிடிக்குமாவா? எங்க அண்ணன் தான் எனக்கு உயிர். எங்க அண்ணன் தான் எனக்கு ரோல் மாடல். எனக்கு புடிச்ச ஹீரோ யாருனு கேட்டா எங்க அண்ணனை தான் சொல்லுவேன்”

 

“நானும் அப்படி தான் சொல்லுவேன்”, என்று எண்ணி கொண்டாள் மதுமிதா.

 

“டாக்டர் எதாவது மாத்திரை தாங்க. இல்லைன்னா பொய் சொன்னது தெரிஞ்சிரும்”, என்று சிரித்தாள் வளர்மதி.

 

“சரி சத்துமாத்திரை தாரேன். இனி இப்படி பொய் சொல்ல கூடாது சரியா?”

 

“இனி சொல்ல மாட்டேன். நீங்க என்னை நம்பலாம்”

 

மாத்திரை எடுத்து கொண்டே “என்ன படிக்கிற?”, என்று கேட்டாள் மதுமிதா.

 

“பன்னிரெண்டாவது படிக்கிறேன்”

 

“நல்லா படிப்பியா? ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குவியா?”

 

“ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குவேனான்னு தெரியலை. ஆனா ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குவேன் டாக்டர். நான் கிளம்புறேன்”, என்று எழுந்தாள் வளர்.

 

”ம்ம் ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குற அளவுக்கு நம்பிக்கை இருக்கும் போது ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குற நம்பிக்கை இல்லையா உனக்கு?”

 

“எங்க அண்ணன் மாதிரியே நீங்களும் பேசுறீங்க? உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கண்டிப்பா ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குவேன்”, என்று சிரித்தவள் வெளியே சென்று விட்டாள்.

 

வெளியே குட்டி போட்ட பூனை மாதிரி மரத்தடியில் நடந்து கொண்டிருந்தான் செழியன். அவனை பார்த்து சிரித்து கொண்டே அவன் அருகே சென்றாள் வளர்மதி.

 

“தாயமாக்கா, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அடுத்தவங்களை அனுப்புங்க”, என்று சொன்ன மது ஜன்னல் வழியாக அண்ணன் தங்கையை பார்வை இட்டாள்.

 

தன்னருகே வந்த வளரை பார்த்து ஒரு தடுமாற்றத்துடன் சிரித்தவன் “பாப்பா”, என்று கூவினான்.

 

இத்தனை வருடத்தில் முதல் முறையாக அவனுடைய உண்மையான சிரிப்பை கண்டவள் “அண்ணன்”, என்று கூவி கொண்டே அவனை கட்டி கொண்டாள்.

 

கண்ணில் துளிர்த்த கண்ணீருக்கு அணை போட்டவன் சிரிப்புடன் தன் தங்கையின் தில்லு முல்லு வேலையை நினைத்து “தலை வலி சரியா போச்சா குட்டி?”, என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம் சரியா போச்சே”

 

“எதுக்கு என் செல்லத்துக்கு தலை வலி வந்துச்சாம்?”

 

“அது ரொம்ப படிச்சதுனால?”

 

“அப்படியா ?”

 

“என்ன நீ நம்பாத மாதிரியே கேக்க? இங்க பாரு டாக்டர் மாத்திரை தந்தாங்க”, என்று சொல்லி அதை காண்பித்தாள்.

 

அதை வாங்கி பார்த்தவன் “ஏய் கள்ளி, இது இரும்பு சத்து மாத்திரை. உன் தலை வலி பொய் தான? ஏன் பாப்பா இப்படி பண்ண?”, என்று கேட்டான்.

 

“ஏன்னா என்னோட அண்ணன் கொஞ்ச நேரமாவது சந்தோசமா இருக்கணும்னு தான். சந்தோசமா இருக்கியாண்ணே?”, என்று கேட்டவளின் கண்கள் கலங்கியது.

 

“ஹ்ம்ம் ரொம்ப. தேங்க்ஸ் பாப்பா”, என்று சொன்னவனின் கண்களும் கலங்கியது.

 

“அண்ணி ரொம்ப அழகு அண்ணா”

 

“வளர் மா அப்படி சொல்லாத மா. இடையில என்ன வேணா நடந்துருக்கலாம். இனி இப்படி செய்யாத. என்னோட விதி படி நடக்கட்டும். ஒழுங்கா படிக்கிற வழியை பாரு. வீட்டுக்கு போவோமா?”

 

“நான் கடவுளை நம்புறேண்ணே. எல்லாம் நல்ல படியா நடக்கும். என்னை வீட்டுல விடு. நான் மதியம் ஸ்கூலுக்கு போறேன்”

 

“ஹ்ம்ம் வா”, என்று சொல்லி வண்டியை கிளப்பியவன் வளர் அமர்ந்ததும் அந்த ஹாஸ்ப்பிட்டலை ஒரு பார்வை பார்த்து கொண்டே வண்டியை செலுத்தினான்.

 

தடதடத மனதை சமன் செய்ய போராடிய மது ஒரு வழியாக பத்து நிமிடங்களுக்கு பிறகே அடுத்த நோயாளியை பார்வை இட்டாள்.

 

தாகம் தணியும்……

 

Advertisement