Advertisement

தலைப்பு : காதலின் தாகம்

கதாநாயகன்: இளஞ்செழியன்

கதாநாயகி : மதுமிதா

 

அத்தியாயம் 1

 

உன் முகம் கண்டு

ஒவ்வொரு நொடியும்

மலர்கிறது என்னுள்

ஒரு மாய புன்னகை!!!!!

 

பூஞ்சோலை போன்று பூத்து குலுங்கும் அழகான கிராமம். சுற்றிலும் பசுமையை தத்தெடுத்த ஓங்கி உயர்ந்த மரங்கள் செழித்த அழகான ஊர் பொன்னகரம்.

 

அந்த ஊருக்குள் பிரவேசித்தது அந்த வெள்ளை மாருதி. அதில் அமர்ந்திருந்த மூன்று பேரின் மனங்களும் வெவ்வேறு எண்ண அலைகளை கொண்டிருந்தது.

 

வாசுதேவன், குடும்ப தலைவன் வயது ஐம்பது, டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டி கொட்டிருந்தவர், கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருந்தாலும் அவர் மனம் கலங்கி போய் இருந்தது.

 

பத்து வருடங்களுக்கு பிறகு சொந்த ஊரின் எல்லைக்குள் இப்போது நுழைகிறார். பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவி மல்லிகாவை பார்த்தார்.

 

அவளும் அப்போது அவரை திரும்பி பார்த்தார். அவர் எதுவோ சொல்ல வருவதை புரிந்து கொண்ட மல்லிகா “இப்போது எதையும் பேச வேண்டாம்”, என்று கண்களால் சொன்னதும் வாயை இருக்க மூடி கொண்டு கார் ஓட்டுவதில் கவனம் வைத்தார்.

 

இவர்களின் பார்வை பரிமாற்றம் எதையும் உணராமல் பின் சீட்டில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவர்களின் ஒரே மகள் மதுமிதா.

 

வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளின் கண்களுக்கு அந்த கிராமத்தின் அழகு கண்ணில் பட்டாலும் கருத்தில் பட வில்லை. அவள் பார்வை அந்த தொலை தூர சூரியனை வெறித்தது.

 

பூத்து குலுங்கும் சோலையை எங்கே பார்த்தாள்? ஒரு பூவில் அமர்ந்து தேன் குடிக்கும் பட்டாம் பூச்சியில் அவள் கவனம் சென்றது.

 

ஏனோ அந்த பட்டாம் பூச்சியாய் தானும் இருந்திருக்க கூடாதா? என்று எண்ணமிட்டது அவள் மனது. அப்போது அவள் கண்ணில் பட்டது அங்கே இருந்த கோவில். கருப்பண்ண சாமி கையில் பெரிய அரிவாளுடன் காட்சி அளித்தார்.

 

அதை பார்த்ததும் இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி. “எதையும் நினைக்க கூடாது”, என்று நினைத்து கொண்டவள் வேறு பக்கம் பார்த்தாள்.

 

எதையும் நினைக்க கூடாது நினைக்க கூடாது என்று சொல்லி சொல்லியே அவள் இதயத்தை குத்தி கீறியது அவள் மனது. அவள் முகத்தில் படிந்த தென்றல் அவள் கவலையை சிறிது குறைக்க முயன்றது.

 

இன்னும் ஊருக்குள் செல்ல செல்ல ஒவ்வொரு இடத்தை பார்த்தாலும் தன் இதயம் மேலும் வலிக்கும் என்பதை உணர்ந்தவள் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க தன்னுடைய மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

 

“ஹாய் குட் மார்னிங். என்ன காலைல இருந்து வாட்ஸப் பக்கமே ஆளை காணும்?”, என்று வாட்சப்பில் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் மித்ரன்.

 

மித்ரன் என்றால் நண்பன் என்று அர்த்தம். பெயரில் மட்டும் அவன் மித்ரன் இல்லை. உண்மையிலே அவன் அவளுக்கு மித்ரன் தான். எப்படி தன்னுடைய அம்மா அப்பா வாழ்க்கையில் முதலிடம் பிடிப்பார்களோ அதே போல் அவள் வாழ்க்கையில் மித்ரனுக்கும் இடம் உண்டு. எம்.பி.பி. எஸ் முதல் வருடத்தில் அவள் அந்த மெடிக்கல் காலேஜில் சேர்ந்த போது அவனும் அங்கே சேர்ந்தான்.

 

அன்றில்  இருந்து இன்று வரை அவள் சுக துக்கங்களில் பங்கு பெறுபவன். அவனை நினைத்ததும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. “ஓய்”, என்று பதில் அனுப்பினாள் மதுமிதா. அடுத்த நொடி அவனிடம் இருந்து மெஸேஜ் வந்தது.

 

அவர்களின் உரையாடல் “மது மா வீடு வந்திருச்சு டா”, என்ற மல்லிகாவின் குரலில் தான் தலையை நிமிர்ந்து பார்த்தாள். அந்த வீட்டை பார்த்ததும் பல விதமான எண்ண அலைகள் அவள் மனதை ஆக்ரமித்தது. “எல்லாம் சரியாகிடும்”, என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் கதவை திறந்து கீழே இறங்கினாள்.

 

வாசுதேவன் ஒரு பேக்குடன் முன்னே போக அவருடன் சென்றாள் மல்லிகா.  அவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்தவள் ஒரு பெருமூச்சோடு உள்ளே அடி எடுத்து வைத்தாள்.

 

வீடு முழுவதும் தூசி ஒற்றடையாக இருந்தது. “மதுமா கொஞ்ச நேரம் கார்ல உக்காந்துரு மா. அப்பா ஒரு ரூமை கிளீன் பண்ணிட்டு கூப்பிடுறேன்”, என்றார் வாசு தேவன்.

 

அவரை முறைத்த படி அங்கிருந்து நகர்ந்து விட்டாள் மல்லிகா. “பரவால்ல பா நானும் கிளீன் பண்றேன்”, என்று சொல்லி அவளும் வேலை செய்ய துடங்கினாள்.

 

சிறிது நேரத்தில் அவர்கள் வந்த செய்தி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் பரவி “எப்பா வாசுதேவா நீயா வந்துருக்குறது? இன்னும் நம்ப முடியலையே? ஏம்மா மல்லிகா எம்புட்டு வருஷம் ஆச்சு? இப்ப தான் உங்களுக்கு இங்க வர கண்ணு தெரிஞ்சதா? இது நம்ம மதுவா? எம்புட்டு லச்சணமா இருக்கா? சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு போய்ட்டிகளே?”, என்று ஒவ்வொருவராய் வந்து விசாரித்தார்கள்.

 

எல்லாருக்கும் தக்க பதிலை சொல்லி கொண்டிருந்தார்கள் மூவரும். “மதினி இருங்க, நான் காப்பி தண்ணி கொண்டாறேன். அப்புறம் எல்லாரும் சேர்ந்து சுத்தம் செய்வோம்”, என்று ஓடி போனாள்  பக்கத்து வீட்டு மங்கை.

 

காப்பி கொண்டு வந்து மூவருக்கும் கொடுத்ததும் அதை குடித்தார்கள். “நம்ம மது குட்டிக்கு கல்யாணம் பேசுறீங்களா? அதான் இங்க வந்துருக்கீங்களா?”, என்று கேட்டாள் மங்கை.   

 

“இல்லை மங்கை, நம்ம மதுவுக்கு நம்ம ஊருல தான் டாக்டரா போஸ்டிங் போட்டுருக்காங்க. பக்கத்துல இருக்குற ஊருக்கும் மது தான் இனி டாக்டர்”, என்று சொன்ன மல்லிகாவின் குரலில் மகளை பற்றிய பெருமிதம் வழிந்தது.

 

“அட நம்ம மது டாக்டரா? பழைய டாக்டர் ரிட்டையர் ஆகிட்டாருனு வி. எ. ஓ தம்பி லெட்டர் எழுதி போட்டுச்சு. அந்த வேலைக்கு தான் மது வந்துருக்காளா? சரி இப்ப இருபத்தி நாலு வயசு ஆகிஇருக்குமே? கல்யாணத்துக்கு பாக்கலையா?”

 

அடுத்த நிமிடம் ஆவர்கள் பேச்சு காதுக்கு கேட்காத தூரத்தில் சென்று நின்று கொண்டாள் மதுமிதா.

 

 “பாத்துட்டு தான் இருக்கோம் மங்கை. இருபத்தி AARU வயசு ஆகிட்டு. மதுமிதா தான் பிடி கொடுக்க மாட்டிக்கா?”

 

“நம்ம ஊருக்கு வந்துட்டிங்களே? எல்லாம் நல்ல படியா நடக்கும்”

 

“இந்த ஊருக்குள்ள வந்ததுனால தான எனக்கு பக்கு பக்குனு இருக்கு”, என்று மனதில் நினைத்து கொண்டாள் மல்லிகா.

 

அதன் பின் அனைவரும் சேர்ந்து வீட்டை ஒழுங்கு பண்ணி கழுவி விட்டு என்று வேலை முடியவே மாலை ஆனது. மதியம் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்த மங்கை “நைட்டுக்கும் கொண்டு வருவேன்”, என்று சொன்னதால் கிடந்த சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தாள் மல்லிகா.

 

அவள் அருகில் வந்த வாசுதேவன் “காலைல எதுக்கு மல்லி என்னை முறைச்ச?”, என்று அப்பாவியாக கேட்டார். அவர் தோற்றத்துக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு குழந்தை போல் கேட்டவரை மேலும் முறைத்தவள் “அவ என்ன சின்ன பொண்ணா? கார்ல ரெஸ்ட் எடுன்னு சொல்லறீங்க? அவளுக்கும் நாலு வேலை பழக்கி கொடுக்கணும். நினைவிருக்குள்ள?”, என்று கேட்டாள்.

 

“நான் அதை யோசிக்கவே இல்லை டி. இனி அப்படி சொல்ல மாட்டேன்”, என்று சொல்லி விட்டு அகன்றார்.

 

“எப்படி இருந்த மனுஷன்? காலம் எல்லாரோட குணங்களையும் மாற்றும் போல?”, என்று நினைத்து கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்.

 

மொட்டை மாடி சுவரில் அமர்ந்து அந்த வானத்தை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் மது. எதை எதையோ யோசித்து தலையை பிடித்து கொண்டவளை அவளுடைய போனில் வந்த மெஸ்ஸேஜ் டோன் நடப்புக்கு கொண்டு வந்தது.

 

எடுத்து பார்த்தாள் மித்ரன் தான் அழைத்தான். புன்னகையுடன் அவன் அழைப்பை ஏற்றவளுக்கு அடுத்த நிமிடம் தலைவலி ஓடியே விட்டது.

 

அதே நேரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி கொண்டிருந்தான் இளஞ்செழியன். காலையில் பதினோரு மணிக்கு கலெக்டரை காண வந்தவனை மாலை நான்கு மணி வரை காக்க வைத்து விட்டு இப்போது தான் பாக்க அனுமதித்தார்கள்.

 

“எதுக்கு என்கொயரின்னு கூப்பிடனும்? இப்படி கடுப்பேத்தனும்?”, என்று கோபத்துடன் உள்ளே சென்றவனை பொறுமையான அந்த கலெக்டரின் பேச்சு கொஞ்சம் நிதான படுத்தியது.

 

தன் மீது வந்த புகாருக்கு ஆரம்பத்தில் இருந்து விளக்கம் தெரிவித்தான். “சார் இது அந்த நரசிம்மன் வேணும்ன்னு என் மேல கொடுத்த புகார். என் கிராமத்துல வந்து கேட்டு பாருங்க. நான் லஞ்சம் வாங்குவேனா இல்லையான்னு. அப்ப தெரியும் என்னை பத்தி. சும்மா சும்மா அவன் கம்பளைண்ட் பண்ணி நான் வந்து விளக்கம் சொல்லிட்டு இருந்தா என் வேலையை யாரு பாக்குறது. அவன் நிறைய இடத்தை ஆக்குபை பண்ணி வச்சிருக்கான்”

 

…..

 

“அவன் கிட்ட இருந்து அதை பிடுங்குற வேலையை நான் பாத்துட்டு இருக்கேன். அதுக்காக தான் அவன் என் மேல புகார் கொடுக்கிறான். கஷ்ட பட்டு படிச்சு இந்த வேலைக்கு வந்துருக்கேன். அப்படி இருக்கும் போது நான் லஞ்சம் வாங்கி என் வேலைக்கு உலை வைக்க பாப்பேனா? அம்மா அப்பா விவசாயம் பாக்குறாங்க. அந்த வருமானம் அப்புறம் என்னோட சம்பளம் இதுவே என் குடும்பத்துக்கு போதுமானது. இதை தவிர வேற சொத்து கேவலமான முறைல சேக்கணும்னு என்ன இருக்கு?”, என்று கேட்டான் இளஞ்செழியன்.

 

அவனை பார்த்த கலெக்டர் “இங்க பாருங்க மிஸ்டர் செழியன் நானும் கஷ்ட பட்டு தான் இந்த வேலைக்கு வந்துருக்கேன்.  உங்க உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது. என்கிட்ட வந்த கம்பளைண்ட்டை விசாரிக்க வேண்டியது என்னோட கடமை. அதை தான் நான் செஞ்சேன். ஆனா இப்ப புரிஞ்சிட்டு, அந்த ஆள் வேணும்னு தான் பண்றான்னு. நீங்க தைரியமா போங்க. நான் பாத்துக்குறேன். உங்க பதவிக்கு எந்த ஆபத்தும் வராது. உங்க வேலையை நீங்க பாருங்க. யு கேன் கோ”, என்றார்.

 

“தேங்க யு சார்”, என்று சொல்லி விட்டு நிம்மதியான மனதுடன் வீட்டுக்கு கிளம்பினான்.

 

“அண்ணா எங்க மா இன்னும் காணும்”, என்று கேட்டாள் இளஞ்செழியனின் தங்கை வளர்மதி.

 

“கலெக்டர் ஆபிஸ்க்கு போகணும்னு சொன்னான் வளர். எல்லாம் அந்த நரசிம்மனால வந்த வினை”, என்று கடுப்புடன் சொன்னாள் செழியனின் அம்மா பூங்காவனம்.

 

“பாவம் மா அண்ணன். அதுக்கே பல சோலி இருக்கு. இவன் வேற வாரம் ஒரு தடவை புகார் கொடுத்து சோதிக்கிறான்”

 

“என்ன பண்ண? கவர்ன்மென்ட் வேலை பாத்தா அப்படி தான். சரி சரி வம்பை வளக்காம இந்த வெங்காயத்தை வெட்டி கொடு”

 

“அது கண்ணு எரியும்மா. நீயே வெட்டிக்கொ. நான் கவிதா வீட்டுக்கு போய்ட்டு வாரேன்”

 

“பள்ளி கூட்டத்துல முழு நேரமும் ஒண்ணா தான இருக்கீங்க? இப்பவும் என்னத்த பேச பொறவ?”

 

“கொஞ்சம் நோட்ஸ் வாங்கனும் மா”

 

“அவ தான் படிக்க புத்தகம் கேக்க தான போறேன்னு சொல்றா. அவளோட அண்ணன் மாதிரியே அவளும் பன்னிரெண்டாம் வகுப்புல நிறைய மார்க் வாங்க வேண்டாமா? வெங்காயத்தை நான் நறுக்கி தரேன்”, என்று சொல்லி கொண்டு அங்க வந்தார் தங்கராசு இளஞ்செழியனின் தந்தை.

 

Advertisement