அத்தியாயம் 6
“என்ன டா முறைக்கிற? அங்க போய் வேற என்ன செய்வ சொல்லு?”, என்று சிரித்தான் ராகுல்.
“வேற என்ன டா செய்ய? படுத்து தூங்க வேண்டியது தான்”
“ஏண்டா நரேன் எனக்கு ஒரு சந்தேகம்”
“என்ன?”
“இல்லை உனக்கு எதாவது ஹார்மோன் பிரச்சனை இருக்குமோன்னு”
“லூசு ராகுல், நான் நல்லா தானே இருக்கேன்? எதுக்கு அப்படி கேக்குற?”
“பின்ன பர்ஸ்ட் நைட்ல போய் தூங்கணும்னு சொன்னா என்ன நினைக்கிறது? இல்ல ஒண்ணுமே தெரியாதோ”
“அட ச்சி அடங்கு. அதெல்லாம் தெரியும்”
“அப்புறம் என்ன டா?”
“என்னன்னா என்ன சொல்றது? எனக்கு தோணலையே”
“இதுக்கு நீ அப்புவை கல்யாணம் செஞ்சிருக்காமலே இருந்திருக்கலாம். சரி டா நேரம் ஆகிட்டு. நான் கிளம்புறேன்”
“நான் பஸ் ஏத்தி விட வரேன் டா. வா போகலாம்”
“நீ கல்யாண மாப்பிள்ளையாம். அதனால வெளிய அலைய கூடாதாம். அப்பா வரேன்னு சொல்லிருக்காங்க டா. நான் நாளைக்கு கால் பண்றேன். பை”, என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராகுல்.
“ஹ்ம்ம் பை டா”, என்று சொன்ன பிறகு ராகுலை கீழே அழைத்து கொண்டு வந்து தன் அப்பாவின் வண்டியில் ஏற்றி விட்டு விட்டு மேலே வந்தான் நரேன்.
அவன் கண்கள் அபர்ணா அறை கதவை பார்த்தது. அது மூடி இருந்தது.
மறுபடியும் மொட்டை மாடிக்கே வந்து அமர்ந்து விட்டான்.
“இதுக்கு நீ அவளை கல்யாணமே செய்யாம இருந்திருக்கலாம்”, என்ற ராகுலின் பேச்சும் “அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு உனக்கே தோணாம என் பக்கத்துல வர கூடாது”, என்ற அபர்ணாவின் வார்த்தைகளும் அவன் காதில் மாறி மாறி விழுந்தது.
“அபர்ணாவுக்கு நல்ல கணவனா என்னால நடந்துக்க முடியாதோ?”, என்று நினைத்து தவித்து போனான்.
தன் அன்னை அழைக்கும் குரலில் கீழே வந்தவன், தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.
அறையில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தான்.
நெற்றியில் இருந்த சந்தானம் மற்றும் குங்குமமும், சேவ் செய்ய பட்ட கன்னமும், பட்டு வேஷ்டி சட்டையும் அவனுக்கு அழகாக பொருந்தி இருந்தது.
இது எதுவுமே அவன் கண்ணுக்கு தெரிய வில்லை. அவன் கண்ணில் பட்டது அவன் கழுத்தில் இருந்த செயின் மட்டுமே. “அப்பு போட்டு விட்டது”, என்று சிரித்து கொண்டவன் அவனுடைய கட்டிலில் அமர்ந்தான்.
அவன் அவளை பற்ற யோசித்து கொண்டிருக்கும் போது எண்ணத்தின் நாயகியே கண் முன் வந்தாள்.
உள்ளே வந்து கதவை தாளிட்டவள், அவன் அருகே அமர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் அவளை பார்த்து சிரித்தாலும், அந்த சிரிப்பு அவன் கண்களை எட்ட வில்லை என்று புரிந்து கொண்டவள் “ராகுல் பையனை மறுபடியும் குழப்பி விட்டுட்டு போயிருக்கான்”, என்று நினைத்து கொண்டாள்.
“அப்படியே இருந்தா தேவை இல்லாததை யோசிப்பான்”, என்று நினைத்து “என்னைக்கு டா நரேன் சென்னைக்கு போக போறோம்?”, என்று கேட்டாள்.
“தெரியலை அப்பு. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு பாட்டி சொன்னாங்க. அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு கிளம்புவோமா?”
“ஹ்ம்ம் சரி டா”, என்று சொல்லி கொண்டே எழுந்தாள்.
“என்ன டி எந்திச்சிட்ட? தூக்கம் வந்துட்டா? உன் ரூம்க்கு போக போறியா?”
அவன் கேட்டதை பார்த்து மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தவள் “வெளிய போனா அத்தை கொன்னுருவாங்க. இன்னும் ரெண்டு பேருக்கும் ஒரு ரூம் தானாம். என்னோட ரூம்ல பழைய சாமானை எல்லாம் போட போறாங்களாம்”, என்றாள்
“அதுவும் சரி தான். நீ என்கூடவே இரு. அப்புறம் ஏன் எந்திச்சு நிக்குற? உக்காரு கொஞ்ச நேரம் பேசலாம்”
“இரு டா டிரெஸ் மாத்திட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவனுடைய காலேஜ் படிக்கும் போது உள்ள ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள்.
நரேன் என்று பெயர் போட்டிருந்த பனியனையும், அவனுடைய ட்ராக் சூட்டையும் அணிந்து விட்டு சேலையை அங்கு இருந்த சேரில் போட்டவள் அவன் அருகே அமர்ந்தாள்.
“அப்ப நானும் மாத்திட்டு வரேன். எப்ப அவுந்து விழுமோன்னு பயந்து பயந்து இருக்க வேண்டி இருக்கு”, என்று புலம்பி கொண்டு சென்றான்.
சிறிது நேரத்தில் வெறும் முக்கால் டவுசருடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான் நரேன்.
திகைத்து போனாள் அபர்ணா. இத்தனை நாள் அவனை இப்படி சட்டை இல்லாமல் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இன்று முதலிரவு. இன்று இப்படி அவனை பார்ப்பது அவளுக்கு நாணத்தை வரவழைத்தது.
அவன் பரந்த மார்பில் முகம் புதைக்க, அவனுடைய திரண்ட தோளில் முகம் சாய்க்க என்று ஆசை வந்தது. “சே நான் ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன்?”, என்று யோசித்து தலையை உலுக்கி கொண்டாள்.
காதலன் மீதே ஆசை வரும் போது, தாலி கட்டிய கணவன் மீது ஆசைகள் வராதா என்ன? மஞ்ச கயிறு மேஜிக் மேடம் என்று சிரித்தது மனசாட்சி.
அதை “சும்மா கிட”, என்று அடக்கியவள் அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் நெற்றியில் இருந்த சந்தனமும், அதன் நடுவில் இருந்த குங்குமமும் அவன் முகத்துக்கு மேலும் அழகு சேர்த்தது.
செவ் செய்ய பட்டு பளபளவென்று இருந்த கன்னத்தை தன் இரு கைகளாலும் சிறை பிடிக்க ஆசை வந்தது. அவள் அவனுக்கு போட்டு விட்ட செயினில் இன்னும் கவர்ச்சியாக தெரிந்தான்.
இன்ச் இன்சாக அவனை அளவிட்டு கொண்டிருந்தவள் “சே எனக்கு கிறுக்கு தான் பிடிச்சு போச்சு”, என்று நினைத்து மறுபடியும் தலையை உலுக்கி கொண்டாள்.
“என்ன ஆச்சு அப்பு?”, என்று கேட்டான் நரேன்.
“உன் மண்டை”, என்று மனதில் அவனை திட்டியவள் “ஒண்ணும் இல்லை”, என்றாள்.
“இல்லை டி. இல்லாத மூளையை இருக்குன்னு நினைச்சு தீவிரமா யோசிச்சிட்டு இருந்தியே? அதான் கேட்டேன்”
“ஹ்ம் உன் மூஞ்சி போடா. சரி தூங்கலாமா?”
“எனக்கு தூக்கம் வரலை. உனக்கு வருதா?”
“இல்லை டா. ஆனா போர் அடிக்குது”
“சரி அப்ப படம் பாக்கலாமா?”
“வெளிய இதை சொன்னா சிரிச்சிருவாங்க”, என்று நினைத்து கொண்டு “சரி டா”, என்றாள் அபர்ணா.
“என்ன படம் பாக்க?”, என்று கேட்டு கொண்டே லேப்டாப்பை ஆன் செய்தான்.
அவள் சொன்ன படத்தை எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவன் ஒரு சண்டை படத்தை போட்டு விட்டான்.
பல்லை கடித்தவள் அவனுடன் சண்டை இட மனதில்லாமல் கட்டிலில் ஒரு தலையணையை சாய்த்து அதில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து விட்டாள்.
படத்தை பார்ப்பதுக்கு வசதியாக லேப்டாப்பை ஒரு ஸ்டுலில் வைத்து விட்டு அவள் அருகே அமர்ந்தான்.
படமும் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. அபர்ணா தான் தவித்து போனாள். பேசி கொண்டே படம் பார்க்கிறேன் என்ற பெயரில் அவள் காதருகே குனிந்து மிக நெருக்கமாக வந்து பேசி கொண்டிருந்தான் நரேன்.
ஏற்கனவே சலனம் அடைந்தவள், இப்போது அவன் உதடுகள் தன் காதில் பட்டும் படாமலும் தீண்டி சென்று அவஸ்தையை கொடுத்து மேலும் சலன படுத்தியது. அவன் மேல் இருந்து வந்த வாசனை அவளை கிளர்ச்சியூட்டியது.
அவனை தொட வேண்டும், அவன் தோளில் சாய வேண்டும் என்று ஏங்கியது மனது.
“நான் ஏன் இப்படி அசிங்கமா நினைக்கிறேன்? எந்த பொன்னாவது இப்படி நினைப்பாளா? பையங்க தான் அப்படி நினைப்பாங்க”, என்று மனத்தை கடிந்து கொண்டாள்.
“எவன் சொன்னா? பையனுக்கு தான் ஆசை வருமோ? பொண்ணுங்களுக்கு வர கூடாதோ? பையன்களுக்கு வர ஆசை, அவன் விரும்பிய பொண்ணை தொடணும்னு. ஆனா பொண்ணுக்கு வர ஆசை, என்ன தெரியுமா? மனசுக்கு புடிச்சவனை ஓட்டிகிட்டே இருக்குறது. அதனால உனக்கு வந்துருக்குற ஆசை தப்பே இல்லை”, என்று வாதாடியது மனது.
மனசாட்சி இப்படி தூண்டி விட்டா சும்மா இருப்பாளா என்ன? அடுத்த நொடி அவன் தோளில் கன்னத்தை வைத்தாள். மற்றொரு கையை அவள் வயிற்றில் வைத்தாள்.
அவனும் அவள் தோளை சுற்றி கை போட்டு அணைத்து கொண்டான்.
அவன் கை போட்டதும் இன்னும் அவனுடன் ஒண்டினாள் அபர்ணா. அவன் தோளில் புதைந்திருந்த முகம் இப்போது அவன் நெஞ்சில் பதிந்திருந்தது.
அபர்ணாவின் உதடுகள் அவன் நெஞ்சில் மெதுவாக பதிந்தது.
அந்த முத்தத்தில் எதுவோ உள்ளே சிலிர்த்தது நரேனுக்கு. அடுத்த நிமிடம் அவன் மனம் படத்தில் பதிய வில்லை. “இப்ப அப்பு என்ன செஞ்சா?”, என்று யோசித்து அதில் தான் அவன் கவனம் சென்றது.
அவளோ “சே என்ன செஞ்சு வச்சிட்டேன். ஏதாவது நினைப்பானோ?”, நினைத்து அசையாமல் அப்படியே முகத்தை அவன் நெஞ்சில் புதைத்திருந்தாள்.
ஆனால் அவன் எதுவும் சொல்லாமல் எதுவும் பேசாமல் யோசனையிலே இருந்தான்.
“அப்பாடி, படம் பாக்குற ஆசைல நான் கொடுத்த முத்தத்தை அவன் கவனிக்கலை. இதுக்கு மேல அவனை ஒட்டி கிட்டு இருந்தா, நானே முத்தம் கொடுன்னு கேட்டுருவேன்”, என்று நினைத்து விட்டு அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்தாள்.
அவனுக்கு வெகு அருகில் தெரிந்த முகத்தை கண் எடுக்காமல் பார்த்தான் நரேன்.
“எனக்கு தூக்கம் வருது நரேன். நீ படம் பாரு”, என்று சொல்லி விட்டு விலகி படுத்து விட்டாள்.
அவனும் படத்தை நிறுத்தி விட்டு படுத்தான்.
இருவருமே தங்களுக்குள்ளே வந்த யோசனையிலே இருந்தார்கள். எப்போது தூங்கினார்கள் என்று தெரியாமல் கண்ணயர்ந்தார்கள்.
காலையில் கதவு தட்டும் ஓசையில் கண் விழித்தான் நரேன்.
தன் மேல் கையை போட்டு தூங்கி கொண்டிருந்த அப்புவை பார்த்தவன் சிரித்து விட்டு, அவள் தூக்கம் கலையாமல் அவள் கையை நகர்த்தி விட்டு கதவை திறந்தான்.
அங்கே சங்கடமாக நின்றிருந்தாள் சிவகாமி.
கொட்டாவி விட்டு கொண்டே “என்ன மா?”, என்று கேட்டான் நரேன்.
“அத்தை கோயிலுக்கு போகணும்னு சொன்னாங்க டா. இப்ப கிளம்புனா தான் சரியா இருக்கும். அப்பு எந்திச்சிட்டாளா?”
“அவ எந்திக்கலை. நான் குளிச்சிட்டு அவளை எழுப்புறேன். கிளம்பி வரோம்”
“சரி டா, காபி கொண்டு வரவா?”
“வேண்டாம் மா. கீழ வந்து குடிச்சுக்குறோம்”
“சரி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் சிவகாமி.
சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தான் நரேன்.
பக்கத்தில் இருந்த தலையணையை இறுக்கி பிடித்து தூக்கத்தை தொடர்ந்தாள் அபர்ணா.
“தூங்கு மூஞ்சி”, என்று சிரித்து விட்டு குளிக்க சென்றான்.
குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட அவள் அருகில் அமர்ந்தவன், “அப்பு எந்திரி”, என்றான்.
“அதுக்குள்ளே எழுப்புற? போடா தூக்கம் வருது”, என்று கண்களை திறக்காமலே சொன்னாள் அபர்ணா.
மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்து, தன் தலையில் வடியும் நீரை அவள் முகத்தில் பட வைத்தான் நரேன்.
அந்த குளிர்ச்சியில் சிலிர்த்து கண் விழித்தாள் அபர்ணா.
வெகு அருகாமையில் தெரிந்த அவனுடைய புன்னகை சிந்தும் முகத்தை இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன லுக்? எந்திரி டி. கோயிலுக்கு போகணுமாம்”
அவன் பேச்சில் தெளிந்தவள் “ஆமால்ல? பாட்டி சொன்னது மறந்தே போச்சு”, என்று சொல்லி கொண்டே எழுந்தாள்.
“பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வச்சிரு டா. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று அறைக்கு வெளியே போக பார்த்தாள்.
“அதெல்லாம் முடியாது. நீயே மடி”
“கொன்னுருவேன். நான் குளிக்கணும். நீ குளிச்சு முடிச்சு வெட்டியா தான இருக்க? ஒழுங்கா மடிச்சு வை”, என்று சொல்லி விட்டு அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.
போன அவளையே முறைத்து கொண்டே மடிக்க ஆரம்பித்தான் நரேன்.
குளித்து முடித்து ஒரு டிசைனர் சேலையை கட்டி கொண்டு அவன் அறைக்கு வந்தாள் அபர்ணா.
“ஹலோ யாருங்க நீங்க?”, என்னோட ரூம் குள்ள வந்துருக்கீங்க?”, என்று கேட்டு நக்கல் அடித்தான் நரேன்.
“ஹ்ம்ம் உன்னோட பொண்டாட்டி. வா போகலாம். நேரம் ஆகிட்டு”, என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு கீழே வந்தாள் அபர்ணா.
அவர்களுக்காக கீழே காத்து கொண்டிருந்த அம்மா அப்பா, பாட்டி கண்ணில் சந்தோசமாக கிளம்பி வரும் அவர்களை பார்த்து ஆனந்தத்தில் கண்ணீரே வந்தது.
ட்ரைவர் சீட்டில் நரேனும், அவனருகில் சிவ பிரகாசமும் பெண்கள் மூவரும் பின்னாடியும் அமர்ந்து கொண்டார்கள். கார் அவர்கள் குலதெய்வம் கோயிலை நோக்கி பயணித்தது.
அங்கே பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு விட்டு, வீட்டுக்கு கிளம்பி வந்த பின்னர் இரண்டு நாள் இருந்து விட்டு, அன்று இரவு சென்னை கிளம்ப முடிவு எடுத்தார்கள்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வெளியே தோட்டத்தை பார்வை இட்டு கொண்டிருந்தாள் அபர்ணா.
அப்போது அவள் அருகில் வந்த சிவகாமி, கொஞ்சம் சங்கடத்துடன் அவளை பார்த்தாள்.
“என்ன அத்தை? எதாவது வேலை இருக்கா?”
“அதெல்லாம் இல்லை. நீ வா. இப்படி உக்காரு. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்”
புருவ சுளிப்புடன் அங்கு இருந்த படியில் சிவகாமி அருகில் அமர்ந்தாள் அபர்ணா.
“என்ன அத்தை?”
“அது வந்து… எப்படி கேக்கன்னு தெரியலை”
“என்கிட்டே என்ன தயக்கம்? கேளுங்க”
“உனக்கு அம்மா இருந்திருந்தா கேட்டிருப்பா. ஆனா எனக்கு கேக்க தயக்கமா இருக்கு. கேக்காமலும் இருக்க முடியலை”
“என்ன அத்தை இது? எனக்கு அம்மாவும் நீங்க தான? அப்புறம் என்ன கேளுங்க?”
“நீயும் நரேனும் சந்தோசமா இருக்கீங்களா?”, என்று ஒருவாறு கேட்டே விட்டாள் சிவகாமி.
முகம் சிவந்து போனாள் அபர்ணா.
சிவகாமி பதிலுக்கு தவிப்புடன் காத்திருக்கிறாள் என்று புரிந்து “உங்க பையனுக்கு இன்னும் என்னை பொண்டாட்டியா பாக்க மனசு வரலை அத்தை”, என்றாள்.
“ஓ”, என்று சோர்ந்து ஒலித்தது சிவகாமியின் குரல்.
“இப்ப என்ன, என் செல்ல அத்தைக்கு வருத்தம்? கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகலை. கொஞ்ச நாள் கழிச்சு அவனே புரிஞ்சிப்பான்”, என்று சிவகாமிக்கு ஆறுதல் சொன்னாள்.
“அத்தை தான் உன்கிட்ட கேக்க சொன்னாங்க அப்பு. என்னை தப்பா நினைக்காதே. அவங்களுக்கு சீக்கிரம் கொள்ளு பேரன் வேணுமாம். எங்களுக்கும் தான். ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் டா”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள்.
சிவகாமி போன பிறகு ஒரு பெருமூச்சு வந்தது அபர்ணாவுக்கு. “நானா மாட்டேன்னு சொல்றேன். பண்ணி, கூடவே இருந்தாலும் ஒரு தப்பான பார்வை பாக்குறானா? இவனுக்கு என்னைக்கு பல்ப் எரிஞ்சு… ஹ்ம்ம்”, என்று நினைத்து கொண்டு உள்ளே போனாள்.
மனமக்களுடன் சிவகாமியும், சிவபிரகாசமும் சென்னை சென்றார்கள்.
வீட்டில் போய் இறங்கியவுடன் அவர்களை வெளியவே நிப்பாட்டி விட்டு உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள் சிவகாமி.
பிளாட்டில் இருந்த அனைவரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றார்கள்.
“வா டா புது மாப்பிளை”, என்று சிரித்து கொண்டே வீட்டுக்குள் வந்தான் ராகுல்.
அதன் பின் இரண்டு நாள் அவர்களுடனே தங்கி விட்டு ஊருக்கு கிளம்பினார்கள் சிவகாமியும், சிவபிரகாசமும்.
நரேன் ஆபிஸ்க்கும், அபர்ணா டேன்ஸ் ஸ்கூல்க்கும் சென்று வர ஆரம்பித்தார்கள்.
“டேய் நரேன், உன் கல்யாணத்துக்கு ஆபிஸ்ல எல்லாருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்துரு டா. எல்லாவனும் என் மண்டையை உருட்டுறாங்க”, என்றான் ராகுல்.
“நானே நினைச்சேன் டா. இந்த சண்டே அரேஞ் பண்ணிரலாமா?”
“ஹ்ம்ம் சரி டா, இங்க ஆபிஸ் பங்க்சன் ஹால்லே வச்சிக்கலாம். எம் டி கிட்ட பெர்மிஷன் வாங்கிக்கலாம். டெக்ரேசன் எல்லாம் ஆபிஸ் டீம் பண்ணிக்கும். சாப்பாடு மட்டும் அரேஞ் பண்ணனும் டா”
“அப்ப இன்னைக்கு கிளம்பும் போது, ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்துறலாம் சரியா?”
“சரி, நீ எல்லாரையும் இன்வைட் பன்னிரு நரேன்”
“ஓகே டா”, என்று சொல்லி விட்டு அனைவரையும் அழைத்தான். அடுத்து சாயங்காலம் ஹோட்டலில் சாப்பாடுக்கு சொல்லி விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்.
அபர்ணா இன்னும் வந்திருக்க வில்லை.
“சரி சும்மா தான இருக்கோம். அவளை கூப்பிட போவோம்”, என்று நினைத்து காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அவன் போகும் போது, அவளும் அப்போது தான் கிளம்பி கொண்டிருந்தாள்.
அவனை பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்தி பூட்டி விட்டு, அவனுடன் முன்னே அமர்ந்தாள்.
“அப்பு, இந்த சண்டே ஆபிஸ்ல மேரேஜ்கு ட்ரீட் இருக்கு. உனக்கு ஓகே தான?”
“உன் ஆபிஸ்ல ட்ரீட் னா என்னை எதுக்கு டா கூப்பிடுற?”, என்று வம்பிழுத்தாள்.
“லூசு, உன்னை கல்யாணம் பன்னதுனால தான ட்ரீட்? அப்ப நீ வர வேண்டாமா?”
“சரி டா லூசு”
“பங்க்சன் போடுற மாதிரி டிரெஸ் வச்சிருக்கியா? இல்லை இன்னைக்கு எடுத்துருவோமா?”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு வாங்குனதே இருக்கு டா. இப்ப எதாவது சாப்பிட வாங்கி தா”
“இங்க வேண்டாம். எதாவது வாங்கிட்டு வரேன். வீட்ல போய் சாப்பிடலாம்”
“இன்னும் உன் குணம் மாறலை டா. சரி வாங்கு”, என்று சிரித்தாள் அபர்ணா.
நரேனுக்கு ஒரு சிரிப்பான வியாதி உண்டு. அதுக்கு பேர் வாசனை வியாதி. இந்த பெயர் வைத்ததே அபர்ணா தான். அவனுக்கு பிடிக்காத வாசனையை முகர்ந்து விட்டால், அந்த வாசனை போகும் வரை பிடித்த வாசனையை மோப்பம் பிடித்து முகர்ந்து கொண்டிருப்பான். அதனால் வெளியே அமர்ந்து எங்கயும் சாப்பிட கூட மாட்டான்.
அதை நினைத்து அவள் சிரித்து கொண்டிருக்கும் போதே, அவன் கடையில் இருந்து வாங்கி வந்து விட்டான்.
வீட்டுக்கு போய் அதை சாப்பிட்டு விட்டு, நைட் அபர்ணா செஞ்சி கொடுத்த தோசையும், கார சட்னியையும் சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றான் நரேன்.
முதல் நாளுக்கு பிறகு அபர்ணா, அவன் அருகில் நெருங்காமல் இருந்தாள். அவன் மூட்டி விடும் மோக தீ தன்னையே எரிப்பதை உணர்ந்து, அவன் அருகில் செல்லாமலே இருந்தாள்.
ஒரே கட்டிலில் படுத்தாலும் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டாள். இதுக்கு மற்றொரு காரணமும் உண்டு. “நான் நெருங்கி அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்த கூடாது. அவனுக்கா தோணனும்”, என்பது தான்.
அந்த ஞாயிறு அழகாக விடிந்தது.
மாலை நான்கு மணிக்கு கிராண்டான ஒர்க் வைத்த சேலையை கட்டி கொண்டு அழகு ராணியாக நரேன் அருகில் நடந்து போனாள் அபர்ணா.
நரேனும், அபர்ணாவும் ஆபிஸ் போகும் போது, ராகுல் அங்கு எல்லா ஏற்பாடையும் முடித்திருந்தான்.
“எல்லாம் முடிச்சாச்சு டா. எம்.டி வந்த உடனே ஸ்டார்ட் பண்ணிரலாம்”, என்றான் ராகுல்.
“தேங்க்ஸ் டா. சரி எல்லா ஸ்டாப்பும் வந்துட்டாங்களா ராகுல்?”
“உன்னோட விசிறியை தவிர வேற எல்லாரும் வந்தாச்சு”, என்று சிரித்தான் ராகுல்.
“என்னது விசிறியா?”, என்று கேட்டாள் அபர்ணா.
“அவன் சும்மா சொல்லி கிட்டு இருக்கான். நீ வா அப்பு”, என்றான் நரேன்.
“ஏய் இரு டா. ராகுல் எருமை நீ சொல்லு. யாருடா அந்த விசிறி?”
“ஆமா நரேன். இந்த லேடி யாரு? உன் பங்க்சனுக்கு, உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வராம வேற யாரையோ கூட்டிட்டு வந்திருக்க?”, என்று சிரித்தான் ராகுல்.
அவன் மண்டையில் ஒரு கொட்டு வைத்த அபர்ணா “இப்ப தெரிஞ்சிருக்குமே நான் யாருன்னு?”, என்று சிரித்தாள்.
“ஆ”, என்ற படியே தலையை தடவி கொண்டவன் “சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருந்த உடனே யாரோன்னு நினைச்சிட்டேன்”, என்று சொல்லி மற்றொரு கொட்டையும் வாங்கி கொண்டான்.
“இப்ப யார் அந்த விசிறினு சொல்ல போறியா? இல்லை நான் வீட்டுக்கு போகட்டுமா?”
“டேய் ராகுல் எதுக்கு டா என் பொண்டாட்டியை இப்படி டென்ஷன் பண்ணுற?”, என்றான் நரேன்.
“புருசனும், பொண்டாட்டியும் ஒன்னு கூடிட்டிங்களா? அது வந்து அப்பு இங்க மாயான்னு ஒரு மோஹினி இருக்கு. அவளுக்கு நரேன் மேல ஒரே கண்ணு”
“கண்ணுன்னா?”
“கண்ணுன்னா சொல்ல தெரியல. ஆனா இவன் வேலை எல்லாத்தையும் அவளே செய்வான்னா பாத்துக்கோயேன்”
“பாரு டா, இப்படி ஒரு விஷயம் நடக்குதா? சொல்லவே இல்லை. சரி எங்க அந்த மோஹினி?”
“அவ பாரின்க்கு ப்ரொஜெக்ட் விஷயமா போயிருக்கா. விஷயம் தெரிஞ்சு அவ ஹார்ட் வெடிக்குமோ என்னவோ?”
“அவன் சும்மா சொல்றான் அப்பு. அவ நல்ல பிரண்ட் அவ்வளவு தான்”
“ஹ்ம்ம்”, என்று சொன்ன அபர்ணாவுக்கு “இப்படி ஒரு பொண்ணு இருந்தா அவளை கல்யாணம் பண்ணாம என்னை ஏன் செஞ்சிக்கிட்டான்? அப்ப இவன் மனசுல அந்த பொண்ணு காதலியா இல்லை”, என்று நினைத்து சந்தோசத்தை தந்தது.
அதன் பின் பங்க்சனில் சந்தோசமாக கலந்து கொண்டாள். ஒரே சிரிப்பும் பாட்டுமாக நடந்தது. சாப்பிட்டு விட்டு, “நீங்க வீட்டுக்கு கிளம்புங்க டா. நான் பாத்துக்குறேன்”, என்று அவர்களை அனுப்பி வைத்தான் ராகுல்.
“தேங்க்ஸ் டா மச்சான்”, என்று சொல்லி விட்டு காரை கிளப்பினான் நரேன்.
வீட்டுக்கு வந்தவுடன் தொப்பென்று சோபாவில் விழுந்தாள் அபர்ணா.
“செம சாப்பாடு”, என்ற படியே நரேனும் அமர்ந்தான்.
சிறிது நேரம் டிவி பார்த்தார்கள். “நான் போய் டிரெஸ் மாத்துருறேன்”, என்று எழுந்து உள்ளே போன அபர்ணா அடுத்த நிமிடம் “நரேன்”, என்று அலறினாள்.
பதறி அடித்து உள்ளே போனான் நரேன். அங்கே வயிற்று வலியில் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள் அபர்ணா.
தொடரும்…..