அத்தியாயம் 19

 

“எதுக்கு நரேன் இப்படி முழிக்கிற?”, என்று கேட்டாள் அபர்ணா.

 

“ஏய் என்ன டி இது? இப்படி வந்து நிக்குற? சாமியார் மாதிரி மஞ்ச கலர் புடவை கழுத்துல மாலைன்னு”, என்று கடுப்பாக  கேட்டான் நரேன்.

 

“அதெல்லாம்  அப்படி தான்”, என்று சிரித்தாள்  அபர்ணா.

 

“பாட்டி என்னது இது?”, என்று கோபத்துடன் கேட்டான் நரேன்.

 

“நீயும் அப்புவும் சந்தோசமா வாழணும்னு  நினைச்சு அப்பு விரதம் இருந்து முளைப்பாரி   எடுக்க போறா டா”, என்றாள் பாட்டி.

 

“அட பாவிகளா? சந்தோசமா வாழுறதுக்கு  தானே ஒரு வாரமா துடிச்சிட்டு இருக்கேன். இப்ப போல இப்படி ஒரு சோதனையா?”, என்று நினைத்து கொண்டு “சரி முளைப்பாரி எடுக்குற விஷேசம்  நாளைக்கு முடிஞ்சிரும் தான?”, என்று கேட்டான்.

 

“என்னது நாளைக்கா? இன்னைக்கு தான டா ஆரம்பிக்கவே செஞ்சிருக்கா. இன்னும் அடுத்த வாரம் கோயில் கொடை அன்னைக்கு தான் விரதம் முடிப்பா”

 

“இன்னும் ஒரு வாரமா? நரேன் விதி உன்னை சுத்தி சுத்தி அடிக்குது டா. இந்த அம்மா அப்பு ரூம்க்கு  என்னை போக சொன்னப்பவே யோசிச்சேன். எதுவோ வில்லங்கம் இருக்குன்னு. அது என்னனு இப்ப தான தெரியுது?”, என்று மனதுக்குள் தாளித்தவன் தன்னுடைய பாட்டியை பார்த்து “என் பொண்டாடிக்கு இந்த ஐடியாவை நீ தான கொடுத்த?”, என்று கேட்டான்.

 

“ஆமா டா, எப்படி கண்டு புடிச்ச?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“உன்னை தவிர வேற யாரு சகுனி வேலை செய்வா?”

 

“அட போடா, லூசு பயலே”, என்று அவனிடம் சொன்ன பாட்டி அப்பு புறம் திரும்பி  “அவன் கிடக்கான் அப்பு. நீ சாமி ரூம்‌ல போய் இதை எல்லாம் வச்சு விளக்கேத்திட்டு என்னோட ரூம்க்கு வந்துரு என்ன? விரதம் முடியுற வரைக்கு என்னோட ரூம்லே தங்கிக்கோ”, என்றாள்.

 

“ஹ்ம் சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். போகும் அவளையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தான் நரேன். “இது தான் கண்ணுக்கு முன்னாடி விருந்தை  பரிமாறி கைக்கு எட்டுறதை வாய்க்கு எட்ட விடாம செய்றதா??”, என்று எண்ணி பெருமூச்சு வந்தது அவனுக்கு.

 

தன்னுடைய அறைக்கு சென்றவுடன் ராகுலை போனில் அழைத்தவன் அபர்ணாவையும், பாட்டியையும்  திட்டி தீர்த்து விட்டான்.

 

அனைத்தையும் கேட்ட ராகுல் “நான் அன்னைக்கே சொன்னேன்ல? பாட்டி தான் எதாவது வேலை செஞ்சிருக்கும்னு”, என்றான்.

 

“இப்ப என்ன டா செய்றது?”

 

“என்ன செய்ய? ஒரு வாரம் காத்திருக்க வேண்டியது தான்”

 

“என்ன டா? இப்படி சொல்லிட்ட? அதெல்லாம் முடியாது. எனக்கு அப்பு வேணும்”

 

“லூசு பயலே, கிடைச்ச சான்ஸ் எல்லாத்தையும் மோப்பம் பிடிச்ச கெடுத்துட்டு இப்ப இப்படி சொன்னா எப்படி? சாமி விஷயம் டா”

 

“நமக்கு சந்தோசத்தை கொடுக்குறதுக்கு தான் டா சாமி. ப்ளீஸ் டா எதாவது ஐடியா சொல்லு”

 

“ஹ்ம்ம், ஐடியாவா? ஒரு படத்துல பொண்டாட்டி இப்படி மாலை போட்டா அவன் வேலை காரி கூட சேந்து இருக்குற மாதிரி நடிப்பான். பொண்டாட்டி கோப பட்டு மாலையை கழட்டிருவா டா. நீயும் அப்படி வேணும்னா செய்யேன்”

 

“எங்க வீட்ல வேலைக்காரியே இல்லையே டா. அப்புறம் எங்க நடிச்சு அப்புவை வெறுப்பேத்த?”

 

“அதான், அன்னைக்கு அப்பு காலுக்கு பதிலா வேற ஒரு பொண்ணோட காலை உரசிட்டேன்னு சொன்னியே? அந்த பொண்ணு கிட்ட அப்பு முன்னாடி நல்லா பேசு. அதுல கோபம் வந்துரும் அப்புவுக்கு”

 

“ஏய், சூப்பர் ஐடியா மச்சான். இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணிறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு பாரினில் இருந்து தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் எடுத்து கொண்டு கீழே ஹாலுக்கு வந்தான். பின் அங்கிருந்த சேரில் அனைத்தையும் வைத்தவன் “எல்லாரும் வாங்க. அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் வாங்க”, என்று அழைத்தான்.

 

அனைவரும் “என்ன டா?”, என்று கேட்டு கொண்டே வந்தார்கள். அவனுடைய நல்ல நேரம் அதே நேரம் விஜியும் அங்கு வந்தாள். ஆனால் அபர்ணா மட்டும் வர வில்லை. “இன்னும் அவளை காணலையே”, என்று எண்ணி கொண்டிருக்கும் போதே அபர்ணாவும் அங்கு வந்து நின்று கொண்டாள்.

 

“அப்பாடி வந்துட்டா. பெர்பார்மன்ஸ் ஸ்டார்ட் பண்ண  வேண்டியது தான்”, என்று நினைத்து கொண்டு “அம்மா, அப்பா இது உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கான்னு பாருங்க”, என்று சொல்லி இருவருக்கும் கவரை கொடுத்தான்.

 

அதை வாங்கி கொண்டவர்கள் “நல்லா இருக்கு டா”, என்று சிரித்து கொண்டே கூறினார்கள்.

 

அடுத்து மற்றொரு கவரை எடுத்தவன் பாட்டியிடம் கொடுத்தான். அதன் பின் கடைசி கவரை விஜியிடம் கொடுத்தான்.

 

“எனக்கா மச்சான்?”, என்று ஆசையாக வாங்கி கொண்டாள் விஜி. “உனக்கு தான் விஜி. புடிச்சிருக்கா?”, என்று கேட்டான் நரேன்.

 

“ரொம்ப அழகா இருக்கு மச்சான்”, என்று புன்னகைத்தாள் விஜி.

 

அனைத்தையும் கையை கட்டி கொண்டு கடுப்புடன் பார்த்து கொண்டு நின்றாள் அபர்ணா.

 

“எங்க டா அப்புக்கு வாங்குனதை காணும்?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“அவன் பொண்டாட்டிக்கு தனியா கொடுப்பானா இருக்கும்”, என்று சொல்லி சிரித்தாள் சிவகாமி.

 

“அப்படி எல்லாம் இல்லை மா. அப்புக்கு ஒண்ணுமே நான் வாங்கிட்டு வரலை”, என்று சொல்லி அனைவருக்கும் குழப்பத்தை கொடுத்தான்.

 

“என்ன டா சொல்ற?”, என்று கேட்டார் சிவப்பிரகாசம்.

 

“ஆமா பா. அவளுக்கு ஒண்ணுமே வாங்கலை. கடைசி நேரத்துல தான் எல்லாருக்கும் வாங்குனேனா. அவளுக்கு என்ன வாங்கன்னு யோசிக்க நேரம் இல்லை. உங்களுக்கு மாதிரி அவளுக்கு எதாவது ஒன்னு வாங்கலாமான்னு யோசிச்சேன். ஆனா அதெல்லாம் அவ கிட்ட நிறையவே இருக்கு. அப்பறம் எதுக்கு இதை வாங்கிட்டு வந்த? என்கிட்டே தான் இது இருக்கேன்னு சொல்லுவா. அதனால வாங்கலை”, என்று நரேன் சொன்னவுடனே அடுத்த நொடி அங்கிருந்து மறைந்து விட்டாள் அபர்ணா.

 

எல்லாரும் கண்ட மேனிக்கு அவனை திட்டி விட்டு சென்றார்கள். விஜியோ “ஐ ஜாலி அவளுக்கு மட்டும் வாங்கிட்டு வரலை”, என்று குதித்து கொண்டு சென்றாள்.

 

அறைக்கு சென்ற அபர்ணாவோ, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து வெளியே பார்த்தாள். சந்தோசத்துடன் கையில் கவருடன் சென்ற விஜி அவள் கண்களில் தெரிந்தாள். இருந்த எரிச்சல் கூட கொஞ்சம் அதிகமானது போல தோன்றியது.

 

அப்போது நரேன் வரும் காலடி ஓசை கேட்டு முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டவள் தன்னுடைய உடைகளை எடுக்க ஆரம்பித்தாள்.

 

உள்ளே வந்ததும் அவளையே பார்த்தான். “எதுக்கு டா எனக்கு மட்டும் வாங்கிட்டு வரலை பண்ணி”, என்று சொல்லி சண்டையை ஆரம்பிப்பாள் என்று எண்ணி இருந்தான் நரேன். அவளோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தன் வேலையை தொடர்ந்தாள்.

 

“அப்பு என் மேல கோபமா டி?”, என்று கேட்டான் நரேன்.

 

“கோபமா? உன்மேல எதுக்கு கோப படணும்?”, என்று சாதாரண குரலில் கேட்டாள் அபர்ணா.

 

“நான் உனக்கு மட்டும் வாங்கிட்டு வரலைல? அதுக்கு தான்”

 

“அதுக்கெல்லாம் எதுக்கு கோபம்? நீ சொன்ன மாதிரி என்கிட்ட எல்லாமே இருக்கே. நீ வாங்கிட்டு வந்தாலும் நான் அப்படி தான் சொல்லிருப்பேன். இத்தனை வருசமா நீ எனக்கு என்ன வாங்கிட்டு வந்தாலும் எதுக்கு டா இதை வாங்கிட்டு வந்துருக்க? இது தான் என்கிட்ட இருக்கேன்னு தான சொல்லிருக்கேன்? என்று அமைதியான குரலில் சொல்லி விட்டு தன்னுடைய உடைகள் அடங்கிய பையை கீழே எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

 

அவள் குரலில் இருந்த குத்தலில் வருத்தம் கொண்டான் நரேன். அபர்ணா இதுவரை அவன் என்ன வாங்கி வந்தாலும் சந்தோசமாக குதூகலிப்பாளே தவிர எதுக்கு இது வாங்கிட்டு வந்தேன்னு கேட்டதே இல்லை. அதை தான் இப்போது சுட்டி காட்டி அவனை குத்தி காட்டி இருந்தாள்.

 

“தப்பு பண்ணிட்டோமோ?”, என்று யோசித்து கொண்டே அவளுக்கு வாங்கிய பெரிய பையை தூக்கி கொண்டு கீழே வந்தான். பாட்டி அறையில் பாட்டியும், அவளும் இருந்தார்கள். இருவரும் எதையோ தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தார்கள்.

 

“அப்படி என்ன பேசுறாங்க?”, என்று எண்ணி கொண்டே உள்ளே சென்றான். இவன் சென்றதும் இருவருடைய  பேச்சும் தடை பட்டது.

 

“என்ன எதையோ பேசிட்டு இருந்தீங்க? நான் வந்ததும் அமைதியாகிடீங்க?”, என்று கேட்டான் நரேன்.

 

“அது அப்பு என்கிட்டே ஒரு யோசனை கேட்டா டா. அது சரியா தப்பான்னு பேசிகிட்டு இருக்கோம்”, என்றாள் பாட்டி.

 

“என்கிட்டயும் கேளு பாட்டி. நானும் ஐடியா சொல்றேன்”, என்று சிரித்தான் நரேன்.

 

“அதுவும் சரி தான். நீயும் இதுல சம்மந்த பட்டிருக்க. இவன் கிட்டயே கேட்கலாம் என்ன அப்பு?”, என்று பாட்டி கேட்டதும் “ம்ம்”, என்று முணுமுணுத்தாள் அபர்ணா.

 

“என்ன பாட்டி?”, என்று சந்தோசமாக கேட்டவன் “அப்பு என்ன சொன்னாலும், அது தான் சரின்னு பேசணும். அப்ப தான் என்மேல உள்ள அவளோட கோபம் குறையும்”, என்று எண்ணி கொண்டான்.

 

“அதுவா நரேன்? அபர்ணா இன்னைக்கு காலைல நடந்த பூஜைக்கு போனதுல இருந்து மனதுக்கு ரொம்ப அமைதி கிடைக்குறதாகவும் சந்தோசமா இருக்குன்னும் சொன்னா. அதனால அவளுக்கு ஆன்மீகத்துல ஆசை வந்துட்டாம்”

 

“என்னது ஆன்மீகத்துலயா? என்ன பாட்டி சொல்ற?”, என்று அதிர்ச்சியானான் நரேன்.

 

“முழுசு கேளு டா. அதனால அவ இந்த மாலை அடிக்கடி போடணும்னு சொன்னா. அதுக்கு நான் அடிக்கடி வேண்டாம். இது வருஷம் ஒரு தடவை தான் நடக்கும். ஆனா வேற சாமிக்கு வேணும்னா மாலை போடு. அதான் டா, ஆதிபராசக்தி, திருச்செந்தூர் முருகன் இந்த கடவுள்க்கு எல்லாம் மாலை போடுன்னு சொன்னேன்”

 

“பாட்டி, உன்னை கொன்னுருவேன். நீ எதுக்கு இப்படி சொன்ன?”

 

“கோப படாத நரேன். அபர்ணா நான் சொன்ன யோசனைக்கு எல்லாம் சரி சொல்லவே இல்ல”

 

“அப்பாடி, என் அப்பு அப்படி எல்லாம் சொல்ல மாட்டா”

 

“ஹ்ம்ம், ஆனா அவ ஒரு புது யோசனையை சொன்னா டா. அதை தான் பேசி கிட்டு இருந்தோம்”

 

“புதுசு புதுசா யோசிச்சு என் வயித்துல புளியை கரைக்காதீங்க? என்ன யோசனை பாட்டி?”

 

“காலத்துக்கும் ஆன்மீகத்துல நாட்டம் கொண்டு அவள் சந்நியாசியா மாறட்டுமான்னு கேட்டுட்டு இருந்தா டா”

 

“ஆ”, என்று வாயை பிளந்த படி நின்ற நரேன் “அப்ப என்னோட கதி?”, என்று கேட்டான்.

 

“உனக்கென்னடா டா, ராஜா நீ? பொண்ணுங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்றது தான் கஷ்டம். ஆம்பளைங்களுக்கு சுலபமா பண்ணிரலாம். அதுவும் விஜி பொண்ணு வேற மச்சான் மச்சான்னு உன்னையே சுத்தி வாரா. அதனால நீ அவளை கட்டிப்பியாம். அப்பு கடவுளுக்கு சேவகம் பண்ண போறாளாம்”

 

“பாட்டி”, என்ற படியே சாஷ்டாங்கமாக பாட்டி காலில் விழுந்த நரேன் “உன்னை கெஞ்சி கேக்குறேன் பாட்டி, இவளுக்கு பாரின்ல இருந்து ஒண்ணுமே வாங்கிட்டு வரலைன்னு நான் சொன்னது பொய் தான். அதுக்காக இப்படி எல்லாம் மோசமா ஐடியா கொடுத்து என் வாழ்க்கையே நாசம் பண்ணிறாத?”, என்றான்.

 

“இந்த புத்தி முன்னாடியே இருந்துருக்கணும். என்கிட்ட கேக்குற மன்னிப்பை உன் பொண்டாட்டிகிட்ட கேளு. ஒரு வாரம் தான? இப்படி கிறுக்கு தனம் எதாவது செஞ்சிகிட்டு இருந்த, நானே என் பேத்தியை கூட்டிகிட்டு இமயமலைக்கு போயிருவேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள்.

 

எழுந்து நின்ற நரேன் பரிதாபமாக அபர்ணாவை பார்த்தான். அவன் முகத்தை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நின்றாள்.

 

கையில் கொண்டு வந்திருந்த கவரை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி கொண்டவள் அவன் முகத்தை பார்த்தாள்.

 

“உனக்கு வாங்காம விஜிக்கு வாங்குனா, என்கூட சண்டை போடுவன்னு நினைச்சேன் டி அப்பு. ராகுல் சொன்னான். அவ கூட நான் குளோசா பழகுனா நீ கோப பட்டு மாலையை கழட்டிருவன்னு. அதனால தான் இப்படி செஞ்சேன் சாரி”, என்றான்.

 

“எங்க உன்னோட போன்?”, என்று கேட்டாள் அபர்ணா.

 

“இதோ”, என்று எடுத்து கொடுத்தான் நரேன்.

 

நரேனிடம் இருந்து அழைப்பு வந்ததை பார்த்த ராகுல் திகைத்தான். அவனுடைய முத்தத்துக்காக கண் முன்னே கண்களை மூடி அமர்ந்திருந்தாள் அவனுடைய காதலி.

 

அதுவும் அவன் ஒரு வாரமாக  அவளிடம் இந்த ஒரு முத்தத்துக்காக தான் கெஞ்சி கொண்டிருந்தான். இப்போது அது நடைபெறும் நேரத்தில் தொல்லையாய் நரேன் போனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனாலும் நண்பனுக்கு எதுவோ என்று மனம் தவித்தது.

 

“இப்போது அவளுக்கு முத்தம் கொடுக்கவா? இல்லை போனை எடுக்கவா?”, என்று குழம்பினான் ராகுல்.

 

அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் கண் விழித்து பார்த்த வீணா திகைத்து “என்ன ஆச்சு ராகுல்?”, என்று அவனிடம் கேட்டாள்.

 

“இல்லை நரேன், போன் பண்றான்”, என்று இழுத்தான் ராகுல்.

 

“நீ உன் பிரண்ட் கிட்டயே பேசு. இன்னொரு தடவை முத்தம்னு என்கிட்டே கேட்டுறாத டா”

 

“வீணா கோப படாத டி. அவன் முக்கியமான கட்டத்துல இருக்கான். அதனால தான் எடுக்கலாம்னு யோசிச்சேன்”

 

“அது நான் கொடுக்குற முத்தத்தை விடவா டா பெருசு. முத்தம் கொடுத்துட்டு பேசிருக்கலாம்ல? எவ்வளவு நேரம் கண்ணை மூடிட்டு இருக்கேன்? என்னை வெயிட் பண்ண வைக்கிறல்ல? இனி உனக்கு கிடையவே கிடையாது போ”

 

“செல்ல குட்டி, ப்ளீஸ் டி”

 

“அதெல்லாம் கிடையாது. இப்ப என்கூட பேச போறியா? இல்லை உன் பிரண்ட் கூட பேச போறியா?”

 

“சில்லியா கோப படாத செல்லம். அவன் கிட்ட என்னனு பேசிட்டு, அப்புறம் உன்கிட்ட தான் பேசிட்டே இருப்பேன்”

 

“இல்லை, நீ அவன் கிட்டயே பேசு. ஒரு வாரம் என்னை பிரிஞ்சு இருக்குறது தான் உனக்கு தண்டனை. அது வரை உன் போனை கூட எடுக்க மாட்டேன் பை”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

“அவளை அப்புறம் சமாதானம் செய்யலாம். முதல்ல நரேன் பத்தி கேப்போம்”, என்று எண்ணி “என்ன டா மேட்டர் முடிச்சிட்டியா? பிளான் ஒர்க் ஆகிருச்சா? அப்பு மாலையை கழட்டிட்டாளா?”, என்று ஆனந்தமாக கேட்டான்.

 

அந்த பக்கம் காதில் வைத்திருந்த அபர்ணாவோ “வெளங்காதவனே, நீ தான் இவனுக்கு இந்த மட்டமான ஐடியா கொடுத்தியா? அறிவு இருக்கா டா”, என்று ஆரம்பித்து நாயே, பேயே, எருமை என்று வரிசையாக திட்டியவள் “இப்ப கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு சும்மா இருக்கேன். இல்லைன்னா உன்னை கழுவி கழுவி ஊத்திருவேன்”, என்று திட்டினாள்.

 

“நாடு தாங்காது மங்கம்மா. அப்புறம் உன் புருஷன் ஒரு குழந்தை பாரு. வாயில விரலை வச்சா கூட கடிக்க தெரியாது. அவனுக்கு நான் ஐடியா கொடுக்குறேனா?”, என்று கேட்டான் ராகுல்.

 

“ஆமா டா, அதுக்கு இப்ப என்னங்குற? இன்னொரு தடவை அவனுக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்த வெளக்கமாறு பிஞ்சிரும்”

 

“உன்னை திட்ட விட்டு வேடிக்கை பாக்குறானா அவன்? அவன் கிட்ட போனை கொடு”

 

“கிட்ட தான் இருக்கான் பேசு டா தடியா”, என்று ஸ்பீக்கர் மோடில் போட்டாள்.

 

“ஏண்டா, உன் பொண்டாட்டி என்னை இப்படி திட்டுறா. நீ பாத்துட்டு இருக்க. அவ கிட்ட என்னை திட்ட கூடாதுன்னு சண்டை போடு டா. என் நண்பன் தான் முக்கியம்னு சொல்லு டா”, என்றான் ராகுல்.

 

“ஹ்ம்ம், மாட்டேன் பா. எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம்”

 

“அடேய், உன் போன் வந்ததுனால வீணா கூட கோப பட்டு போய்ட்டா டா”

 

“கோப பட்டு போய்ட்டாளா? இத்தனை நாள் உன்கூட  சேந்து வீணா, வீணா போய்கிட்டு இருந்தா. இப்ப உன்னை விட்டு போய்ட்டால்ல? நல்லா   ஆகிருவா”, என்று சொல்லி அவனை வெறுப்பேத்தினாள் அபர்ணா.

 

“நீங்க ரெண்டு பேரும் சென்னைக்கு வாங்க. புருஷன், பொண்டாட்டி ரென்று பேர் மேல அழுகின தக்காளி, அழுகின முட்டை அடிக்கிறேன்”, என்றான் ராகுல்.

 

“அதை எல்லாம் அடிக்காமல் உன் மூஞ்சு அப்படி தான் இருக்கு. அதனால அடக்கிட்டு இரு. வை டா போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள் அபர்ணா.

 

“அரசனை  நம்பி புருஷனை  கை விட்ட கதையாவுள்ள  இருக்கு”, என்று எண்ணி கொண்ட  ராகுல் “சே இப்ப எதுக்கு இந்த பழமொழியை  யோசிச்சேன். இந்த நரேனால என்னோட டார்லிங் கோப பட்டு போய்ட்டாளே? இன்னும் ஒரு வாரம் அவ பின்னாடியே அலையணுமே”, என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

 

நரேனை பார்த்து சிரித்த அபர்ணா “என்னை வெறுப்பேத்த தான் நீ இப்படி செஞ்சன்னு தெரியும் நரேன். ஆனா இப்படி எல்லாம் செஞ்சா என் மனசு கஷ்ட படும்னு நீ ஏன் யோசிக்க மாட்டிக்க?”, என்று கேட்டாள்.

 

அவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் “சாரி டி, நீ வேணும்னு ஆசைல தான் இப்படி செஞ்சிட்டேன்”, என்றான்.

 

“இத்தனை நாள் பொறுத்துகிட்டல்ல. இனி ஒரே ஒரு வாரம் தான் பொறுத்துக்கோ.  என்கிட்ட எப்படி லவ் புரொபோஸ் பண்ணனும்னு இந்த ஒரு வாரத்தில் யோசிச்சு வை. அதை விட்டுட்டு அந்த குள்ளச்சி கூட சேந்து என்னை வெறி ஏத்துனேன்னு வை, மாலை போட்டு தப்பு தான் செய்ய கூடாது. ஆனா கொலை செய்யலாம். என்னை கொலை காரியா மாத்திராத சொல்லிட்டேன்”

 

“கோப படாத அப்பு. இனி அவ கிட்ட பேசல”

 

“நல்ல முடிவு. அந்த பொண்ணுக்கு என்னோட ரெண்டு வயசு தான் கம்மி. உன் மேல எதாவது அபிப்ராயம் வந்துருச்சுன்னா அந்த பொண்ணுக்கு தான் கஷ்டம். நீ விளையாட்டுக்கு அவளை யூஸ் பண்ணிக்கிறன்னு அவளுக்கு தெரியாது டா.  நீ விலகி இருந்தா அவளே விலகி போயிருவா”

 

“இதை பத்தி நான் யோசிக்கவே இல்லை அப்பு. சாரி. இனி அப்படி செய்ய மாட்டேன். சரியா?”

 

“ஹ்ம்ம் குட்”

 

“பாராட்டலாம் செய்ற. அதான் ஒரு வாரத்துக்கு உன் கிட்ட வர கூடாதே. ஆனா என்கூட ஒரே ரூம்ல இருக்கலாம்ல?”

 

“இருக்கலாம் தான். ஆனா உன்னை நம்ப கூடாதுன்னு பாட்டி சொன்னாங்க அதான்”, என்று சிரித்தாள் அபர்ணா.

 

“ப்ச், போ அப்பு. சரி விரதம்னு உடம்பை கெடுத்துக்காத. விரதம் முடிக்கும் போது சத்தானதை சாப்பிடு என்ன?”

 

“இது தான் என் நரேன்”, என்று சொல்லி அவன் முன் உச்சி முடியை களைத்து விட்டவள் அவனை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

 

இந்த தொடுகையில் அவன் மனதில் தப்பான எண்ணம் எதுவும் தோன்றாமல் காதல் மேலும் மலர்ந்து மணம் பரப்பியது.

 

தொடரும்…..