Advertisement

மாயவனின் மலர்க்கொடியாள்-1

 

வேலி தாண்டி ஓடியிருந்த காளங்கன்றை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து தொழுவத்தில் கட்டினாள் மலர்க்கொடி.

 

அதன் பின்னே ஓடியதால் தாறுமாறாக வந்தது அவளின் மூச்சு.இடுப்பிலிருந்து நழுவிய தாவணி முந்தானையை இறுக்கி கட்டியபடி அதை முறைத்தவள்,

 

“அவரு பேர உனக்கு வச்சாலும் வச்சேன் எப்பாரு கயித்த அவுத்துகிட்டு ஓடறதுலேயே இருக்க…இது சரியில்ல சொல்லிப்புட்டேன்…மருவாதையா போட்டத திண்ணுட்டு நல்ல புள்ளையா இருக்கனும் …என்ன புரிஞ்சுதா…என் அயித்த மவனே மாயவா!….”

என்று அதன் நெற்றியில் முத்தமிட்டவள் ஏதோ அவள் மாமனுக்கே அதை கொடுத்து விட்டவள் போல் நாணிச் சிவந்தாள்.

மலர்கொடி பெயருக்கேற்ப கொடி போன்ற உடலும் தங்க நிறமும் மீன்விழியும் நீண்ட கூந்தலும் கொண்டு பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் தூண்டும் பேரழகி.இந்த வருடம் தான் பி.எஸ்.ஸி முடித்திருந்தாள்.பெற்றோருக்கு ஒரே மகள்.

அவர்கள் வீடு அந்த கிராமத்திலேயே பெரிய மூன்று கட்டு வீடு.வாயிலிருந்து கொல்லை புறம் வரையில் கால் கிலோ மீட்டர் தூரம் வந்து விடும்.அவ்வளவு பெரிய வீட்டில் மலர்க்கொடியின் தந்தை பொன்னையா தாய் மீனாட்சி மற்றும் பொன்னையனின் விதவைத் தங்கை சிவகாமி இவர்கள் மட்டுமே.

மலர்க்கொடிக்கு பொன்னையனைக் கண்டால் எப்போதுமே பயம்.தாய் மீனாட்சியும் திருமணம் முடிந்து வேறு வீடு செல்லும் பெண் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என எப்போதும் புத்திக் கூறியபடி இருப்பார்.அதனால் அவளை பிறந்ததிலிருந்து அன்போடு வளர்த்த அத்தை சிவகாமியே அவளுக்கு எல்லாம்.அவளுக்கு எது வேண்டியிருந்தாலும் அத்தையிடம் தான் கேட்பாள்.

 

அவரும் தன் அன்பையெல்லாம் இவளிடம் தான் பொழிவார்.சிறுவயதிலேயே கணவனை இழந்து வாழ்வின் ஒரே ஆதாரமாக அவர் எண்ணியிருந்த மகனும் அவரைப் பிரிந்து சென்ற பின் மலர்கொடிக்காகத் தான் அவர் உயிர் வாழ்ந்தார் எனலாம்.

 

ஆம் அவர் மகன் தான் மாயவன்.சிறு வயதில் தாய் மாமன் திட்டியதில் கோபமுற்று தன் பன்னிரெண்டாம் வயதில் வீட்டை விட்டே சென்றுவிட்டான்.தன் தப்புக்கு வருந்திய பொன்னையா அவனை தேடாத இடமே இல்லை.ஆனால் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

 

சிவகாமியை போலவே மாயவனின் மேல் உயிரையே வைத்திருக்கும் இன்னொருவர் மலர்க்கொடி தான்.மாயவன் வீட்டை விட்டு சென்ற போது மலர்க்கொடிக்கு ஏழு வயது.அதுவரை அவளின் அனைத்துமாக இருந்தவன் திடிரென காணாமல் போன பின் அழுதழுது அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.

மாயவனுக்கு மலர்க்கொடி தான் என்று பெரியவர்கள் எப்போதும் பேசி வந்ததால் அந்த இளம் வயதிலேயே மாயவன் தான் தன் கணவன் என்பது அவளின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது.வளர வளர அவன் அருகில் இல்லாவிட்டாலும் அவன் நினைவிலேயே வாழ்ந்தாள்.என்றேனும் ஒரு நாள் அவன் திரும்பி வருவான் என்று காத்திருந்தாள்.

 

ஆனால் பொன்னையனோ அந்த நம்பிக்கையை எப்போதோ கைவிட்டு மலர்க்கொடியின் படிப்பு முடிந்த நிலையில் அவளுக்கு தகுந்த வரனை மும்மரமாக தேடத் தொடங்கி விட்டார்.

 

ஆசையாக மாயவனின் பேரை வைத்த காளங்கன்றை அவள் கொஞ்சிக் கொண்டிருந்த போது உள்ளேயிருந்து அவள் தாய் மீனாட்சி அவள் பேரை கூவி அழைக்கும் குரல் உரத்துக் கேட்டது.

“மலர்க்கொடி!……ஏய் மலர்க்கொடி!….வா இங்கே”

“இதோ வந்திட்டேன்ம்மா!”என திருப்பி கத்தியவள் கன்றிடம்,

“மாயவா!இனிமே நல்ல புள்ளயா இருக்கனும் சரியா?”என்றபடி அன்னையைத் தேடிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

அங்கே அன்னையைக் காணாமல் அவரைத் தேடியவள் பெற்றோரின் அறையில் பேச்சு குரல் கேட்டதும் அருகில் சென்றவள் அவர்கள் பேச்சில் தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள்.அங்கே அவள் தந்தை,

“மீனா!வர புதன்கிழமை அன்னிக்கு நம்ப மலரைப் பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க….பேச்சு வார்த்தை எல்லாம் ஏற்கெனவே நானும் பையனோட அப்பாவும் பேசியாச்சு….பையனும் மலரு போட்டோவ பாத்தே ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு…. இப்ப பாக்க வரது ஒரு சம்பிரதாயத்துக்கு தான்….என்ன தெரிஞ்சுதா?”

“அது….அது நம்ம மலரு மாயவனத்தான் கட்டிக்குவேன்னு சொல்லுது”

“அதுதான் புரியாம பேசுதுன்னா நீயும் அதுக்கு சரியா பேசுறியா?! மாயவன் எங்க போனான்னே தெரியல….நாம அவன தேடாத இடமுண்டா…..கெடைக்கறதா இருந்தா இத்தன நாளு கெடைச்சிருக்க மாட்டானா?அவன இனிமே மறந்திட வேண்டியது தான்….உன் பொண்ணுக்கு புத்தி சொல்லி அவங்க வர அன்னிக்கு சரியா நடக்க சொல்லு….என்ன ஆனாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்….”

அவர் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த மலர்க்கொடி சத்தமில்லாமல் வெளியே திண்ணைக்குச் சென்று அமர்ந்தாள்.இந்த திருமணத்திலிருந்து எப்படி தப்புவது என தீவிரமாக யோசித்தாள்.உயிர் போனாலும் மாயவனைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தை நீட்டுவதில்லை என்பதில் திடமாக இருந்தாள்.

தப்பும் வழியைப் பற்றி யோசித்தபடி திரும்பியவளை அருகில் இருந்த தினப்பத்திரிக்கையில் இருந்த விளம்பரம் கவர்ந்து இழுத்தது.அதை கவனமாக படித்தவளின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.திருமணத்திலிருந்து தப்புவதற்கு இதுவே சரியான வழியென அவள் உள்ளம் துள்ளியது.

அதில் இருந்த விளம்பரம் இதுதான்….இந்திய ராணுவ அகாடமியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்பது தான் அது.

 

Advertisement