கண்டுகொண்டேன் காதலை
இறுதி அத்தியாயம்
அன்று மதியம் இருவரும் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்து திலகா, “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க.உங்க அப்பா சும்மாதான இருக்கார், அவரை வந்து இருக்கச் சொல்லு…” என்றார்.
அவர் சொன்னது போல் தந்தையை வரவழைத்த தீனா, “அம்மாவை டென்ஷன் பண்ணீங்க அவ்வளவுதான். அவங்க ஒழுங்கா ட்ரீட்மெண்ட் முடிச்சிட்டு வரணும்.” என எச்சரித்து விட்டே சென்றான்.
அங்கே இது போல் வயதானவர்கள் நிறையப் பேர் இருந்தனர். பேச்சு துணைக்கு ஆள் இருந்ததால்…. இருவரும் சண்டை போடாமல் இருந்தனர்.
சுமித்ராவுக்கு வீட்டை சுத்தம் செய்யவே இரண்டு நாட்கள் பிடித்தது. வீட்டில் இருவர் மட்டுமே இருந்ததால்… ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தனர்.
ஒரு வாரம் கடந்த நிலையில்… சுமித்ரா தோசை ஊற்ற, தீனா சமையல் மேடையில் அமர்ந்து, அவளுக்கும் ஊட்டிவிட்டபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்க… “நீங்க சாப்பிடுங்க நான் போய்ப் பார்க்கிறேன்.” எனச் சுமித்ரா சென்று கதவை திறந்தாள்.
தீனாவின் நண்பர்கள் நான்கு பேர் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து முதலில் திகைத்தாலும், “வாங்க…” என்றபடி கதவை விரிவாகத் திறந்து வைத்தாள்.
“தீனா இல்லையா சிஸ்டர்… அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு கேள்விப்பட்டோம். அதுதான் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தோம்.”
நண்பர்கள் குரல் கேட்டதும், தீனா கைகழுவிட்டு ஹாலுக்கு வந்தான்.
“வாங்க என்ன திடிர்ன்னு வந்திருக்கீங்க…. வரோம்ன்னு போன் கூடப் பண்ணலை….”
“இந்தப் பக்கம் வந்தோம், உன்னோட வண்டி நின்னுச்சு…. சரி நீ வீட்ல தான இருக்க… அப்படியே அம்மாவையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தோம்.”
“அம்மா இன்னும் வீட்டுக்கு வரலை…. இன்னும் ஒரு வாரம் ஆகும்.”
“ஓ அப்படியா…”என அவர்கள் சொல்லும் போதே…. சமையல் அறை வாயிலில் நின்று இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா, “டீ போடட்டுமா?” எனக் கேட்க….
“இந்த நேரத்தில டீயா….. வேண்டாம் சிஸ்டர்.” என்றவர்கள், தீனாவிடம், “என்ன இப்ப எல்லாம் எங்களைப் பார்க்க கூட வர்றது இல்லை.” எனக் கேட்டனர்.
“அப்பா அம்மா ரெண்டு பேரும் வீட்ல இல்லை.. சுமி மட்டும் தனியா இருப்பா… அதனாலதான்.” என்றான் தீனா.
ஏற்கனவே சுமித்ரா சொல்லித்தான் தங்களை நண்பன் தவிர்கிறானோ என நினைத்தவர்களுக்கு, தீனாவும் சுமியையே காரணமாகச் சொல்ல…. அவள் மீது கோபம் வந்தது.
அவர்களைக் கிளப்ப வழி தெரியாத தீனா… “கீழ இருங்க சட்டை போட்டுட்டு வரேன்.” என அவர்களை அனுப்பியவன்,
“கதவை பூட்டிக்கோ…. என் குரல் கேட்காம கதவை திறக்காத…. நான் சீக்கிரம் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அவர்கள் சென்றதும் கதவை பூட்டிவிட்டு வந்த சுமித்ராவுக்கு, ‘இவரே விலகினாலும் விடமாட்டாங்க போலிருக்கே… கடவுளே ! திரும்பக் குடிக்க ஆரம்பிச்சிட கூடாது.’ என வேண்டியபடி சென்றாள்.
சுமித்ரா கவலைப்படுவது போல் தீனா இல்லை…. அவன் தெளிவாகத்தான் இருந்தான். இனியாவது நல்லபடியாக வாழவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.
அவர்களது வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்குச் சென்று பேசிக் கொண்டு இருந்தனர். அவன் நண்பர்களில் ஒருவன், ஓசியில் கிடைத்தால் மட்டுமே குடிப்பவன், அவன் சம்பாதிப்பதை விவரமாக வீட்டிற்குக் கொடுத்துவிட்டு, நண்பர்கள் தலையில் மிளகா அரைப்பான்.
அவனைப் பற்றித் தீனாவுக்குத் தெரியும். இன்றும் அவன்தான் அதிகம் புலம்பினான்.
“தீனா, நீ முன்ன மாதிரி இல்லைடா…. இப்ப ரொம்ப மாறிட்ட… முன்னாடி எல்லாம் எப்படிக் கெத்தா இருப்ப தெரியுமா….நாம எல்லாம் அப்படியே இருக்கணும் டா… அப்பத்தான் நம்ம மேல ஒரு பயம் இருக்கும்.”
“நீ இப்படி இருந்தேன்னு வச்சுக்கோ… உன் பொண்டாட்டியே உன்னை மதிக்க மாட்டா….”
“முதல்ல இப்படித்தான் குடிக்காதீங்கன்னு ஆரம்பிப்பாங்க, அப்புறம் இங்க கூடிட்டு போ.. அங்க கூடிட்டு போன்னு சொல்வாங்க…. கடைசியில நம்மையே வீட்டு வேலையும் செய்யப் போட்ருவாங்க… பார்த்துக்க… பின்னாடி உனக்குத்தான் பிரச்சனை ஆகி போகும்.”
அவன் நண்பன் உளறுவதைக் கேட்டு தீனாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“அடேயப்பா ! உனக்கு எல்லா விவரமும் தெரியுதே…. நான் எங்க குடிக்க மாட்டேன்னு சொன்னேன். நீ வாங்கிக் கொடு நான் குடிக்கிறேன்.” என்றான் கிண்டலாக…..
“இது தான வேணாங்கிறது. என்கிட்டே ஏது காசு?”
“ஏன் நீ சம்பாதிக்கலை?”
“எல்லாத்தையும் தான் என் பொண்டாட்டி பிடிங்கிக்கிறாளே….”
“நீ மட்டும் விவரமா இருப்ப… நான் மட்டும் இளிச்சவாயனா இருக்கனுமா…. இனி இந்த வேலையெல்லாம் என்கிட்டே நடக்காது.”
“உன் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்தாளா இப்படிப் பேசுன்னு?”
“போதும் இதோட நிறுத்திக்க.. என் பொண்டாட்டியை பத்தி பேசின சும்மா இருக்க மாட்டேன்.” என்றபடி தீனா எழுந்துகொள்ள….
“பேசினா என்ன டா பண்ணுவ?”
“அடிச்சு வாயை உடைச்சிடுவேன்.” தீனா கோபத்தில் கையை மடக்க….
“இவன் பொண்டாட்டி பெரிய ….” என அவன் சொல்லிக் கூட முடிக்கவில்லை… தீனா அவன் மூக்கில் குத்தி இருந்தான்.
அவன் மூக்கு உடைந்து ரத்தம் வர…. “டேய் ! என்னையே அடிச்சிட்ட இல்ல…..” என்றவனை, தீனா மேலும் அடிக்கச் செல்ல… மற்றவர்கள் தடுத்தார்கள்.
“அவன் பேசுறது சரியா…” தீனா கேட்க….
“அவனை விடு…. நீ என்ன சொல்ற தீனா… நீ முன்னாடி மாதிரி எங்களோட இருப்பியா இல்லையா…”
“தினமும் சேர்ந்து இருந்து அப்படி என்ன டா சாதிச்சோம்? நம்மை மத்தவங்க கேவலமா பார்க்கிறது தான் மிச்சம். நம்ம முன்னாடி சிரிச்சு பேசினாலும், பின்னாடி தறுதலைங்கன்னு தான் திட்றாங்க.”
“எத்தனை நாள் இதெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்கிறது. நாமும் எப்படா நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழப்போறோம்.”
“நாளுக்கு நாள் நாம குடிகிறது அதிகமாகிட்டேதான் போகுது… ஏற்கனவே இதோ இருக்கானே திவாகர், இவன் குடிச்சிட்டு பொண்டாட்டியை சந்தேகப்பட… அந்தப் பொண்ணு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிடுச்சு….”
“நாமும் கொஞ்ச நாள்ல அதேதான் பண்ணுவோம். நம்மால நம்மைக் கட்டிட்டு வந்தவங்களுக்கும் கஷ்ட்டம். அதனால இனியாவது நல்லபடியா வாழறதுன்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்.”
“நான் உங்களோட தான் ஆரம்பத்துல இருந்து இருந்திருக்கேன். நீங்க எப்படியோ போங்கன்னு என்னால விட முடியாது.”
“நல்லபடி வாழணும்ன்னு நினைக்கிறவங்க, எப்ப வேணா என்னைப் பார்க்க வரலாம். நான் இப்ப கிளம்புறேன்.” என்றவன், தன் வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
அன்று நண்பர்களைச் சென்று பார்த்து விட்டு வந்தவன், பிறகு நிறையவே மாறி விட்டான்.
திலகாவை மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வைத்து, அவர் வரும் முன் கீழ் வீட்டில் இருந்தவர்களைக் காலி செய்ய வைத்து, அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். மடியில் அவர்கள் இருந்த வீடு நல்ல வாடகைக்குச் சென்றது.
வீட்டின் முன்புறம் இருந்த காலி இடத்தில் ஒரு கடையைக் கட்டி… அவன் அப்பாவுக்குக் கடை ஒன்றை வைத்துக் கொடுத்தான்.
“எனக்கு எதுக்கு டா கடை?” என்றவரை, “சும்மா.. வீட்ல உட்கார்ந்திட்டு பொம்பளைங்க மாதிரி நாடகம் பார்த்திட்டு… இதுல அம்மா கூடச் சண்டை வேற….இனி இந்த ராமாயணத்தை எல்லாம் என்னால பார்க்க முடியாது.” என்றான்.
மாலை வேலை விட்டு வந்ததும், அவன் கடையைப் பார்த்துக் கொண்டான். அவன் கடை வைத்து அமர்ந்ததும், அவன் நண்பர்களும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை…. சிலர் அவனைப் போல் திருந்த முயன்றனர். சிலர் இனி இவன் சரிப்பட மாட்டான் என விலகி சென்றனர்.
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் இருப்பிடம். அவன் தன்னை முழுமையாக வேலையில் புகுத்திக்கொள்ள… அவனுக்கு வேறு எதற்கும் நேரம் இல்லாமல் போனது.
சுமித்ராவும் வீட்டு வேலை முடிந்துவிட்டால் வந்து கடையில் இருப்பாள். வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள் இல்லையென்றால் குறித்து வைத்துக் கொள்வாள், பிறகு அதையும் வாங்கி வைப்பார்கள்… அருகில் பள்ளிக்கூடம் வேறு இருந்ததால்…. மாணவர்களுக்கு வேண்டிய அனைத்தும் வாங்கி வைத்தனர்.
வீட்டை கீழே மாற்றியதற்குக் காரணமே திலகா நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றுதான். நடந்தாலும் மாடிப்படி ஏறி இறங்குவது இன்னமும் அவருக்குச் சிரமம்தான். அவரும் சிறிது நேரம் கடையில் வந்து உட்கார்ந்து இருப்பார்.
“நீயும் எதாவது வேலை பண்ணுமா….சும்மா உட்கார்ந்துட்டு இருக்காத…..” தீனா சொல்ல…. மருமகளுக்குச் சமையலில் திலகா உதவினார்.
தீனா சுமித்ராவின் நகைகளைத் தொடவே இல்லை…. தன் அம்மாவிடம் தான் பணம் வாங்கி இருந்தான்.
“இப்ப கொடுமா… நான் சீக்கிரம் திருப்பிக் கொடுத்திடுறேன்.” என அவன் கேட்ட போது, மகன் தனக்காக இவ்வளவு பார்க்கிறான், என நினைத்தவர், பணத்தைக் கொடுத்து விட்டார்.
“நீ திருப்பி எல்லாம் தர வேண்டாம், நீயே வச்சுக்கோ.” என்றவர், சுமித்ராவை அழைத்து அவளுக்குச் சில நகைகளைக் கொடுத்தார்.
“இந்தா இந்த நகை எல்லாம் நீ வெளிய போகும் போது போட்டுட்டு போ.”
“ஏதுமா இவ்வளவு நகை.”
“டேய் ! எங்க வீட்லயே எனக்கு எவ்வளவு நகை போட்டாங்க தெரியுமா… அதோட நான் சேர்த்து வைக்கிற வாடகை பணம் எல்லாம் அப்பப்ப நகையா மாத்திடுவேன் டா…. அது தான் இவ்வளவு.”
தீனாவுக்கு இப்போது தான் நியாபகம் வந்தது, நகை செய்யும் ஆசாரி ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார்.
“சரியான கில்லாடி மா நீ…. வீட்டுக்குள்ளையே இருந்திட்டு எவ்வளவு நகை சேர்த்திருக்க…”
“எனக்கு எதுக்கு அத்தை இவ்வளவு நகை?” சுமித்ரா தயங்க…..
“போடத்தானே நகை வாங்கிறது. இங்க என்ன வேற பொண்ணா இருக்கு.” என்றார்.
சுமித்ரா வந்ததும் தான் அந்த வீட்டுக்கே ஒரு லக்ஷ்மிக்கலை வந்தது. அதுவரை வீடு போலவா இருந்தது. ஆளுக்கொரு திசையைப் பார்த்து இருந்தனர்.
அவள்தான் எல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பம் ஆக்கினாள். ஆனால் அதை ஒத்துக் கொண்டால்…. இதுவரை தான் எதுவும் செய்யவில்லை என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா….
அதற்குத் திலகாவின் ஈகோ இடம் தருமா…. அதனால் தான் பெருந்தன்மையாக மருமகளுக்குக் கொடுப்பது போல் கொடுத்தார்.
அதோடு உண்மையில் சுமித்ரா அவரை நன்றாக பார்த்துக் கொண்டதும் ஒரு காராணம்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகும் பத்திய உணவு சமைத்துக் கொடுத்து. காலில் தைலம் தேய்த்து விட்டு, அவர் நன்றாக நடக்கும் அவரை அவள் விடவில்லை.
ஒருநாள் காலை வீட்டிற்குப் பின்புறம் சுடுநீர் போடும் விறகு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்து சுமித்ரா வாயில் போட….
“அம்மா ! இங்க வந்து பாரேன், இவ என்ன பண்றான்னு….” எனத் தீனா போட்ட சத்தத்தில், திலகா என்னமோ ஏதோவென்று பதறி போய் வந்தார்.
“ஏய் துப்பு டி ! இந்த வீட்ல சாப்பிடுறதுக்கு உனக்கு எதுவும் இல்லையா? சாம்பலை போய்ச் சாப்பிடுற…”
“எனக்குச் சாம்பல் சாப்பிடனும் போல இருந்துச்சு….”
“இவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே… நேத்து நைட் தோசைக்கு ஒரு ஊர்காய் பாட்டிலையே காலி பண்ணா… இப்ப சாம்பல் சாப்பிடுறா…. நல்லா தானடி இருந்த…” தீனா கவலையாகச் சொல்ல…. சுமித்ரா பாவமாகப் பார்த்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்து திலகாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“எவ்வளவு நாள் ஆச்சு குளிச்சு?”
அப்போதுதான் சுமித்ரா யோசிக்கிறாள். எவ்வளவு நாள் ஆச்சு? தீனாவுக்கு ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை… அவன் கடுப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“போன மாசம் பதினெட்டாம் தேதியே வரணும்.” சுமித்ரா சொல்ல… “என்ன வரணும்?” எனத் தீனா கேட்க….
“நல்லா கேட்கிற டா கேள்வி. உன் பொண்டாட்டி முழுகாம இருக்கா… ரெண்டு மாசம் ஆச்சு… சாயங்காலம் டாக்டர்கிட்ட கூடிட்டு போ….”
“இவ்வளவு நாள் என்ன பண்ணீங்கன்னு டாக்டர் காரி துப்ப போறாங்க.” எனச் சொல்லியபடி திலகா உள்ளே செல்ல… கேட்ட தீனாவுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம்.
“ஹே…” என அவன் சுமித்ராவை தூக்க வர…
“ஐயோ ! பாப்பா…” எனப் பயந்து அவள் பின்வாங்க…. தீனாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“வா…” என அவளைக் கைபிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அன்றைய தினத்துக்குப் பிறகு இருவரும் குழந்தையைப் பற்றிப் பேசவே இல்லை. எல்லாவற்றிலும் சரியாக முடிவு எடுக்கும் சுமித்ரா, இதிலும் நல்ல முடிவே எடுப்பாள் எனத் தீனாவுக்குத் தெரியும்.
“ரொம்ப நாள் உங்களை வெயிட் பண்ண வச்சிட்டேனா? என் மேல கோபமா?”
“இல்லை… இப்பத்தான் ரொம்பச் சந்தோஷமா இருக்கு. கல்யாணம் ஆனவுடனே குழந்தை பிறந்திருந்தா… எனக்கு அதோட அருமை தெரிஞ்சிருக்காது. இப்ப எனக்குத் தெரியும். என் குழந்தைக்கு எல்லாமே நானே செய்வேன்.”
சொன்னது போல் வளைகாப்பை கூடச் சுமித்ரா வீட்டினரை செய்ய விடவில்லை… அவனே தான் சொந்தக்காரர்கள் அனைவரையும் அழைத்து மண்டபத்தில் சிறப்பாகச் செய்தான்.
பெரிய பட்டுபுடவை உடுத்தி, அவளுடைய நகைகள், மாமியார் கொடுத்தது என அணிந்து சுமித்ரா மேடையில் வந்து அமர்ந்தபோது ,அனைவரது கண்களும் அவள் மீதுதான்.
அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பே… அவளது வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது எனக் காட்டும்படி இருந்தது.
முதலில் திலகா ஆரம்பித்தார். நலங்கு வைத்து சாஸ்த்திறத்துக்கு இரண்டு கண்ணாடி வளையல்கள் போட்டவர் , இன்னொரு கையில் நான்கு தங்க வளையல்கள் போட்டார்.
அடுத்து வந்த ஈஷ்வரி முகத்தில் அவ்வளவு சந்தோஷசம். அவரும் கண்ணாடி வளையல் போட்டுவிட்டு, ஒரு பெரிய தங்க வளையலை போட்டவர், இன்னொன்றை தன் மருமகளிடம் கொடுத்து போட சொன்னார். அது திலிப் அக்காவிற்கு வாங்கிய வளையல்கள்.
உறவினர்கள் எல்லோரும் போட்டதும் கடைசியாக வளையல் போட வந்த தீனா… அவனும் தங்கத்தில் வளையல்கள் போட ,உறவுக் கூட்டம் ஹா எனப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சுமித்ராவுக்கு ஒரு கையில் கண்ணாடி வளையல்கள் நிறைந்தது என்றால்…. மறு கையில் தங்க வளையல்கள் குலுங்கியது.
அது வேறு ஒன்றும் இல்லை. தங்கம் போன்ற குணம் உடைய பெண்ணுக்கு, தங்க வளையலே போட்டனர்.
சுமித்ராவுக்கு இந்தத் தங்க வளையல்கள் எல்லாம் பெரிதே இல்லை… தீனா நல்லபடியாக மாறியது தான் அவளுக்குப் பெரும் சந்தோஷமே…. அவனது அன்பிற்கு முன்னால் இது எதுவமே ஈடு கிடையாது.
மதிய உணவு முடிந்து சுமித்ரா அமர்ந்திருக்கும் போது, அவள் அருகில் வந்து உட்கார்ந்த தீனா முகம் வாடிப் போய் இருக்க… சுமித்ரா அவனை ஏன் என்பது போல் பார்த்தாள்.
“உன்னை இப்ப கூடிட்டுப் போயிடுவாங்களாம் சுமி. நான் உன்னோட வரக் கூடாதாம். நான் எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன்.”
அவனின் கவலையைப் பார்த்து சுமித்ராவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ஒருநாள் தான். நீங்க நாளைக்கே வந்து என்னைக் கூப்பிட்டுக்கோங்க. செங்கல்பட்டு கூடப் போகலை… சாஸ்திரத்துக்குத் திலிப் வீட்டுக்குத்தான் கூடிட்டு போறாங்க.”
“கண்டிப்பா போகனுமா…” என்றவனை முறைத்தவள்,
“நம்ம குழந்தை நல்லதுக்குத்தான்.” என்றாள்.
“என்ன பாலா மாப்பிள்ளை பிரசவத்துக்குக் கூட அனுப்ப மாட்டேங்கிறார். “ ஈஸ்வரி கவலையாகச் சொல்ல….
“சுமித்ரா வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு தானே அத்தை எதிர்பார்த்தோம். இப்ப அவ சந்தோஷமா இருக்கா… அதோட அவர் குழந்தை பிறந்த பிறகு அழைச்சிட்டு போங்கன்னு தானே சொன்னார். அவர் சொல்றபடி பண்ணுங்க.” என்றுவிட்டான்.
சுமித்ரா அவள் வீட்டினரோடு சென்ற போது, தீனா முகம் அவ்வளவு வாடி போய் இருக்க… பாலா அவனைக் கிண்டல் செய்து ஓட்டினான்.
மறுநாள் காலை சுமித்ரா கண்விழித்த போதே தீனா வந்திருந்தான்.
அடப்பாவி… இவன் அன்புத்தொல்லை தாங்கலையே……என நினைத்தாலும், அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
கட்டிலில் இருந்தபடியே அவனை அருகில் வர சொல்லி கையை நீட்டியவள், அவன் அருகில் வந்ததும் அனைத்துக் கொண்டாள்.
அவனும் அவளைக் காதலுடன் தழுவிக்கொண்டான். இனி அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை.