Kandukondaen Kaathalai 14 1 9627 கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 14 வெளியே சென்ற தீனா எந்த நிலையில் வருவானோ எனக் கவலையில் இருந்த சுமித்ரா தன்னையுமறியாமல் உறங்கி விட….. ஆழந்த உறக்கத்தில் இருந்தவளை யாரோ தூக்குவதைப் போல் உணர்ந்தாள்…. அவள் சிரமமாகக் கண் திறந்து பார்க்க… தீனாதான் அவளைக் கைகளில் ஏந்தி இருந்தான். இவன் என்ன பண்றான் என்று யோசிக்கும் முன்பே அவளைக் கட்டிலில் கிடத்தி, அவள் மீது படர்ந்தும் இருந்தான். நெற்றி, கன்னம் என்று அவன் இதழ்களால் தீண்ட…. ‘எதோ சபதம் எல்லாம் போட்டிருந்தானே…’ என நினைத்த சுமித்ரா, அவனது முகத்தைப் பற்றி நிமிர்த்தி “குடிச்சிருகீங்களா?” எனக் கேட்டாள். அவள் கண்களில் இருந்த தவிப்பை பார்த்தவன், வார்த்தையால் பதில் சொல்லாமல்…. அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட…. அவன் குடிக்கவில்லை என்பதைச் சுமித்ரா உணர்ந்தாள். அவளும் சந்தோஷத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டாள். மனைவியே தன்னை அனைத்ததும், சந்தோஷத்தில் தீனா இன்னும் உற்சாகமானான். மாலையில் இருந்தே சுமித்ராவின் அருகாமை தீனாவை தடுமாறச் செய்து கொண்டுதான் இருந்தது. ஒரு நொடி அவளைக் காணவில்லை என்றதும், அவன் மனம் துடித்த துடிப்பை அவன் அறிந்தே இருந்தான். நண்பன் வந்து அழைத்ததும் சென்றாலும், அவன் மனம் எல்லாம் சுமித்ராவை சுற்றியே வந்தது. நண்பர்கள் பேசுவதைக் கேட்பது போல் அமர்ந்து இருந்தாலும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் சாப்பிடும் போது சேர்ந்து சாப்பிட்டான். எப்போதும் ஆளுக்கு முன்பு பணம் கொடுப்பவன், இன்று கொடுக்கவில்லை…. அவனை ஒரு மாதிரி பார்த்த நண்பர்களும் அவர்களே கொடுத்தனர். தீனா அவர்களைக் கவனிக்கும் நிலையில் கூட இல்லை….. அடுத்து அவர்கள் மது அருந்த செல்ல…. தீனா மட்டும் கிளம்பிவிட்டான். “என்ன அதுக்குள்ள கிளம்புற?” நண்பன் ஒருவன் கேட்க…. “வீட்ல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை….” என வாயிக்கு வந்த காரணத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டான். மனைவியோடு கூடலில் திளைத்தவன், அதன்பிறகு கூட அவளை விடாமல் தன் கைவளைவில் வைத்திருந்தான். “என்ன தீனா எதாவது சொல்லனுமா?” அவனது முகத்தைப் பார்த்தபடி சுமித்ரா கேட்க…. அவளை எப்போதும் தன்னால் விட முடியாது எனத் தீனாவுக்குப் புரிந்தது. தன்னைப் பற்றி அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விட முடிவு செய்தான். “சுமி, நான் இன்ஜினியரிங் முடிக்கலை….” “தெரியும்.” “எப்படி?” எனத் தீனா ஆச்சர்யமாகப் பார்க்க… “நம்ம ரூம்மை சுத்தம் பண்ணும் போது, உங்க சர்டிபிக்கேட்ஸ் கிடைச்சது… அதுல நீங்க டிகிரி முடிச்ச சர்ட்டிபிகேட் இல்லை… அப்பவே தெரியும்.” “என் மேல கோபமா?” “இன்ஜினியரிங் படிச்ச எல்லோருக்கும் வேலை கிடைக்குதா என்ன? படிப்பை விடத் திறமைதான் முக்கியம். எனக்கு ஒன்னும் அதுல வருத்தம் இல்லை.” “நான் ஒன்னும் பெரிய வேலையில எல்லாம் இல்லை சுமி.” “பரவாயில்லை…. வேற எதாவது யோசிக்கலாம். சாயந்திரம் வந்து வீட்ல சும்மா தான இருக்கீங்க. எதாதவது கடை வைக்கலாம்.” “அதுக்குப் பணம்.” “உங்க அப்பா கொடுக்க மாட்டாரா?” “அவர்கிட்ட ஏது அவ்வளவு பணம். எங்க அம்மாகிட்ட வேணா இருக்கும். ஆனா அவங்க கொடுக்க மாட்டாங்க.” “உங்களுக்குக் கூடவா….” “அவங்களுக்குப் பணம்தான் தன்னைக் காப்பாதும்ன்னு நினைப்பு.” “எனக்குப் புரியலை….” “எங்க அம்மாவுக்கு அப்பாவை பிடிக்காது. அந்தக் கோபத்தை அவர்கிட்ட காட்டுவாங்க. அதனால அப்பாவுக்கு வேற பொம்பளைங்க கூடத் தொடர்பு இருந்தது போல…. அது தெரிஞ்சு அம்மா அவரைச் சுத்தமா வெறுத்துட்டாங்க.” “இந்தப் பணம் இருக்கிறவரைதான், தனக்கு இந்த வீட்ல மதிப்புன்னு அவங்களோட எண்ணம்.” “அதை நீங்க மாத்த முயற்ச்சியே பண்ணலை….” “என்ன பண்ணனும் எனக்குத் தெரியலை…” “நான் உங்களுக்கு இருக்கேன்னு, நீங்க அவங்களுக்குப் புரிய வச்சிருக்க வேண்டாமா….” “வீட்ல அப்பாவும் அம்மாவுக்கும் எப்பவும் சண்டை நடக்கும். எங்க அம்மா எதுக்கெடுத்தாலும் சாகப் போவாங்க… எனக்கு வீடே நரகம் போல இருக்கும். அதனால ப்ரண்ட்ஸ் கூட வெளியதான் சுத்திட்டு இருப்பேன்.” “ரெண்டு பேரும் நான் கேட்கும் போது பணம் மட்டும் கொடுப்பாங்க.” அதாவது சிதம்பரம் மேல் இருக்கும் வெறுப்பில் திலகா வீட்டை கவனிப்பதே இல்லை…. சிதம்பரம் வெளியில் ஆறுதல் தேடிக்கொண்டார். இருவரும் தங்கள் குறையை மறைக்க…. பாசத்தைக் காட்ட வேண்டிய மகனுக்கு, பணத்தை மட்டும் கொடுத்து அவனையும் உருப்படவிடாமல் செய்து விட்டனர். நினைச்ச வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ளத் தெரியாமல்…. திலகா எல்லோரின் வாழ்க்கையையும் நரகம் ஆக்கிவிட்டார். தன் கணவனுக்கு ஏன் தாய் தந்தை மீது மதிப்போ, மரியாதையோ இல்லை என்று சுமித்ராவுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது. “அவங்க பணம் தரலைனா பரவாயில்லை… நான் என்னோட நகைகள் தரேன். அதைப் பேங்க்ல வச்சு லோன் வாங்கிக்கலாம்.” சுமித்ரா எளிதாகச் சொல்லி விட்டாள். ஆனால் தீனாவுக்குதான் தனியாகத் தொழில் தொடங்க தயக்கமாக இருந்தது. நகைகளை வேறு வைத்துத் தொழில் தொடக்கி நட்டம் ஆகி விட்டால். அதனால் அவன் தள்ளி போட்டுக்கொண்டே சென்றான். மற்றபடி அவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றது. இப்படியே விட்டால் திலகா சரிப்பட மாட்டார் என நினைத்த சுமித்ரா, அவரை மருத்துவமனைக்கு அழைக்க… திலகா வர மறுத்தார். “உங்க வேலையையாவது நீங்க பார்த்துக்க வேண்டாமா அத்தை. வீட்டுக்குள்ள கூட உங்களால நடக்க முடியலை…. இப்படி உட்கார்ந்துட்டே இருந்தா வியாதி தான் பெருகும்.” எனச் சுமித்ரா சொல்ல… “வியாதி வந்து செத்துபோறேன்.” என்றார் திலகா காட்டமாக…. “அம்மா, உன் நல்லதுக்குத்தனே சொல்றா… நீ பணம் தர வேண்டாம். நான் தரேன் வா போகலாம்.” என்ற தீனா, அவனே காரில் அழைத்துச் சென்றான். முதலில் அலோபதி மருத்துவரைதான் பார்த்தனர். அவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். அதுவும் திலகாவுக்கு வேறு பல தொல்லைகள் இருந்ததால்…. அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்றும் சொல்லமுடியாது என்றார். அதாவது சரி ஆகினால் ஆகும். இல்லயென்றால் ஆகாமலும் போகலாம். இன்னும் மோசம் ஆனாலும் ஆகலாம். வேறு என்ன செய்வது என யோசித்த சுமித்ரா, பெயர்பெற்ற சித்த மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றாள். “இதெல்லாம் எதுக்கு வீண் செலவு… நான்தான் அவளைப் பார்த்துகிறேனே…. இப்படியே இருக்கட்டும்.” என்ற சிதம்பரத்தை தீனா முறைத்தான். “அவங்க இப்படியே இருந்தா உங்க இஷ்டத்துக்கு ஆடலாம் அதுக்கா?” மகன் கேட்க…. சிதம்பரம் வாயையை மூடிக்கொண்டார். அவர் அங்கேயே தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டால்….. நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றார் வைத்தியர். வண்டலூரில் ஊருக்கு வெளியே தனித்தனி குடில்களாகக் கட்டி வைத்து இருந்தனர். இயற்கை காட்சிகளோடு அந்த இடம் பார்க்க நன்றாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பணம் கட்டினார்கள். திலகாவோடு சிதம்பரத்தை துணைக்குத் தங்க வைத்தால்… அங்கேயும் இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று தெரியும். வைத்தியம் செய்யும் போது… நல்ல மனநிலையில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால்…. சுமித்ரா அவரோடு இருந்து கொள்வதாகச் சொன்னாள். இரவில் பாதுகாப்பு இருக்குமா எனப் பயந்த தீனா… இரவில் தான் வந்து துணைக்கு இருப்பதாகச் சொன்னான். சுமித்ரா அவள் அம்மா வீட்டில் தங்கிக் கொண்டாள். காலை வந்துவிட்டு மாலை செல்வாள். தீனா இரவில் வருவான். காலை வரும்போதே சுமித்ரா அவனுக்கு டிபன் மற்றும் மதிய உணவு கொண்டு வருவாள். அங்கேயே குளித்துத் தயாராகி அலுவலகம் செல்பவன், மாலையும் நேரே இங்கேயே வந்துவிடுவான். திலகாவுக்கு அங்கே அவர்களே பத்தியமாகச் சமைத்துக் கொடுத்தனர். அதனால் அவரைப் பற்றிக் கவலை இல்லை. சுமித்ரா இருட்டும் வரை அங்கிருப்பாள். பிறகு தீனா அவளோடு பேசியபடி வந்து பஸ் ஏற்றி விடுவான். அவள் சென்றதும் அங்கே இருக்கும் உணவகத்தில் இரவு உணவு வாங்கி வைத்துக் கொள்வான். சில நேரம் மனைவியையும் சாப்பிட வைத்து அனுப்புவான்.