Kandukondaen Kaathalai 10 2 7469 பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை… சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான். சமையல் அறைக்குள் வந்த சுமித்ராவிடம் ஈஸ்வரி காரணம் கேட்க…. “எனக்கும் தெரியலை மா.. எதோ மரியாதை தரலைன்னு சொல்றாரு.” “அவங்க ரொம்ப நேரமா ஹால்ல உட்கார்ந்து இருப்பாங்க போல…. உன் அத்தைங்க வந்து சொல்லி இருக்கலாம். வேணும்ன்னே நம்மைப் பழி வாங்கிட்டாங்க.” “எனக்கும் அறிவு இல்லை… வந்து பார்க்கனும்ன்னு தோணவே இல்லை.” “விடுங்க மா…. அவங்க குணம் தெரிஞ்சது தான… இன்னொரு நாள் வந்து தங்கிறோம். என்னோட பாக் ரெடியா இருக்கா…” “ம்ம்… நானும் சுபத்ராவும் துணியெல்லாம் அடுக்கி வச்சோம்.” “சரி மா நான் கிளம்புறேன்.” எனச் சுமித்ராவின் கைபிடித்துத் தடுத்த ஈஸ்வரி, “உனக்குக் கல்யாணம் பண்ணனும்ன்னு ஆசையில அவசரப்பட்டுடோம்ன்னு தோணுது. நீ கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ சுமி.” என அவர் கண் கலங்க…. “அதெல்லாம் ஒன்னும் இல்லைமா…. அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகம் வரும். மத்தபடி நல்லமாதிரிதான். நீங்க கவலைப்படாம இருங்க நான் பார்த்துகிறேன்.” என்றாள் சுமித்ரா. தீனா காரில் ஏறி ஹாரன் அடிக்க.. சுமித்ரா விரைவாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். காரின் முன்புறம் தீனாவும் அவன் அப்பாவும் இருக்க.. பின் இருக்கையில் தன் மாமியாரோடு சுமித்ரா உட்கார்ந்து கொண்டாள். நிதானமாக யாரிடமும் சொல்லிக்கொள்ளக் கூட நேரமில்லை. கலங்கிய கண்களை அடக்கி, எல்லோரையும் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தாள். கார் அங்கிருந்து சீறிப்பாய்ந்தது. சுமித்ரா கிளம்பிய கையோடு மீனாட்சியும், வாணியும் தங்கள் பிள்ளைகளுடன் கிளம்பி விட்டனர். வீட்டிற்குள் வந்த ஈஸ்வரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர… அவர் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டார். அவரைச் சுபத்ராவும் மேகலாவும் சமாதானம் செய்தனர். அப்போது ஈஸ்வரி தெரியாமல் வார்த்தையை விட்டார். “உங்களை நம்பிதான என் பெண்ணை அந்த வீட்ல கொடுத்தேன். இப்படிச் சின்ன விஷயத்தைக் கூட இவ்வளவு பெரிசு பண்றாங்களே… என் பொண்ணு அங்க எப்படி இருப்பான்னு தெரியலையே…” என அவர் மேகலாவிடம் சொல்ல… அவர் முகம் மாறினார். “கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா… இன்னும் நல்ல இடமே சுமித்ராவுக்கு வந்திருக்கும். எல்லாம் உன்னோட அவசரத்துல தான்.” என சுந்தரம் ஈஸ்வரியை கடிந்து கொள்ள… “எல்லாம் இந்த பாவியாலதான் நான் அவசரப்பட்டேன்.” என ஈஸ்வரி திலிப்பை காட்ட… அவன் தலை குனிந்தான். சிறிது நேரத்தில் மேகலாவும் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் வீட்டிற்குச் சென்று மகனிடம் என்ன சொன்னாரோ…. சுபத்ராவின் கணவன் கார்த்திக் அவளிடம் செல்லில் கோபப்பட்டான். அதை அவள் அப்படியே தன் அம்மாவின் மீது காட்டினாள். “உங்களுக்கு நல்லது நினைச்ச என் மாமியாரையே குற்றம் சொல்வீங்களா?” “எதாவது வரன் இருந்தா சொல்லுங்கன்னு நீங்கதான் அவங்களைக் கேட்டீங்க. அவங்களுக்குத் தெரிஞ்ச இடத்தில அவங்க சொன்னாங்க. அந்த இடம் எப்படிப்பட்டதுன்னு விசாரிக்க வேண்டியது உங்க கடமை. இதுல என் மாமியார் என்ன தப்பு பண்ணாங்க?” “ஆமாம் டி தப்பு என் மேலதான். உன் மாமியார் சொன்னா நல்ல இடமாத்தான் இருக்கும்ன்னு நான் நம்பி மோசம் போயிட்டேன். இனி யாரையும் குறை சொல்லி என்ன ஆகப்போகுது. நான் இனி உன் மாமியாரை ஒன்னும் சொல்லமாட்டேன்.” ஈஸ்வரி சொல்ல சுபத்ரா அவரை முறைத்தாள். “என்னை ஏன் டி முறைக்கிற? இதே நீயா இருந்தா உன் குணத்துக்கு இந்த மாதிரி ஆளுங்ககிட்ட சண்டை வழிச்சிட்டு ரெண்டு நாள்ல பொட்டியை கட்டிட்டு வந்திருப்ப…” “சுமித்ரா உன்னை மாதிரி இல்லை…அவ எல்லாத்தையும் சமாளிப்பா… என் பொண்ணு குணத்துக்கு அவ போன இடம் எப்படி இருந்தாலும் நல்லா மாத்திடுவா பாரு.” என்றார் ஈஸ்வரி நம்பிக்கையாக. செல்லும் வழியில் தாம்பரத்தில் ஒரு இடத்தில் நிறுத்தி காபி மட்டும் வாங்கிக் குடித்து விட்டு, சுமித்ராவின் குடும்பம் பயணத்தைத் தொடர்ந்தது. வீடு வந்து சேர்ந்த போது நேரம் இரவு எட்டு முப்பது. சிறிது நேரம் சென்றுதான் இரவு உணவை பற்றி யோசித்தனர். சிதம்பரம் சென்று ஹோட்டலில் வாங்கி வருவதாகச் சொல்ல… “அதுதான் வீட்டுக்கு மருமகள் வந்தாச்சே… இன்னும் ஏன் ஹோட்டல்ல வாங்குறீங்க?” எனத் திலகா அதிகாரமாக கேட்க… அப்போது அறைக்குள் இருந்து வெளியே வந்த தீனாவை பார்த்து, “ நீங்க ரெடிமேட் மாவு வாங்கிட்டு வாங்க. நான் தோசை ஊத்துறேன்.” என்றாள் சுமித்ரா. “அப்பாகிட்ட சொல்லு அவர் வாங்கிட்டு வருவார்.” என்றவன் வெளியே சென்றுவிட்டான். எங்கே செல்கிறான், எப்போது வருவான், ஒன்றுமே சொல்லவில்லை. அவன் பெற்றோரும் அவனை ஒன்றும் கேட்கவில்லை. சிதம்பரம் தான் கடைக்குக் கிளம்பினார். இந்த வயதான காலத்தில், அதுவும் இந்த நேரத்தில், அவரைக் கடைக்கு அனுப்புவது சுமித்ராவுக்கு ஒருமாதிரி இருக்க… “இருங்க மாமா காலையில சமைக்கவும் சாமான் வேணும் இல்லையா… ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திடுறேன். இல்லைனா நீங்கதான் திரும்பக் காலையில கடைக்கு அலையணும்.” என்றாள். “மண்டபத்தில மீதம் ஆன மளிகை சாமான் எல்லாம் பிரிக்காம அப்படியே இருக்கு. நீ நாளைக்குப் பிரிச்சு பார்த்திட்டு எது இருக்கு இல்லைன்னு சொல்லு, அப்புறம் வாங்கிக்கலாம். நான் இப்ப மாவு மட்டும் வாங்கிட்டு வரேன்.” “சரி மாமா…..” சிதம்பரம் சென்றதும் தன் மாமியார் இருந்த அறையைச் சுமித்ரா எட்டி பார்க்க… அவர் உடைமாற்றிவிட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். சுமித்ரா அவளுடைய அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றி வந்தபோது சிதம்பரம் வந்து இருந்தார். அவள் இட்லி ஊற்ற ஆரம்பித்த போது, சமையல் அறைக்கு வந்த சிதம்பரம், “தீனா வந்ததும் அவனைக் கேட்டுகிட்டு தோசை ஊற்று.” என்றார். அவனுக்கு இட்லி பிடிக்காது என சுமித்ரா நினைத்துக் கொண்டாள். “சரி மாமா…” என்றாள். இரவு உணவை மாமியார் அவர் அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட… அவருக்கு அங்கேயே கொண்டு சென்ற சுமித்ரா, தன் மாமனாருக்கு பரிமாறிவிட்டு, தான் மட்டும் சாப்பிடாமல், தன் கணவன் வரவுக்காகக் காத்திருந்தாள். சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்தபடி சுமித்ரா அப்படியே உறங்கி விட…. இரவு பதினோரு மணிக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தது. சுமித்ரா உறக்கம் களைந்து எழுந்து செல்வதற்குள். சிதம்பரம் சென்று கதவை திருந்து இருந்தார். தீனாதான் வந்திருந்தான். “வாங்க, உங்களுக்குத் தோசை ஊதட்டுமா….” சுமித்ரா கேட்க… “வேண்டாம், நான் வெளியே சாப்பிட்டேன்.” என்றவன் அறைக்குள் சென்று விட… இருந்த அலுப்பில் சுமித்ராவுக்குச் சாப்பிட தோணவே இல்லை… அப்படியே படுத்துவிடத்தான் தோன்றியது. ஆனால் உணவு வீணாகி விடுமே என உட்கார்ந்து சாப்பிட்டாள். குளியல் அறையில் இருந்து வெளியே வந்த தீனா, அவளை அறைக்குள் காணாது தேடி வந்தான். அவள் சாப்பிடுவதைப் பார்த்து, “நீ இப்பதான் சாப்பிடுறியா….” எனக் கேட்டான். “ஆமாம். நாங்க எங்க வீட்ல நைட் எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.” சுமித்ரா சொல்ல…. அதற்குத் தீனா எந்தப் பதிலும் சொல்லவில்லை. “பால் குடிக்கறீங்களா?” “இல்லை வேண்டாம். நீ சீக்கிரம் சாப்பிட்டு வா…” என்றவன் அறைக்குள் சென்றுவிட்டான். அவள் அறைக்குள் சென்றபோது, தீனா பாட்டு கேட்டபடி படுத்து இருந்தான். ஏசியின் குளிர் சுகமாக உடலை தழுவ… சுமித்ரா சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். அவள் எப்போது வருவாள் எனக் காத்திருந்தது போல் தீனா அவளை அனைத்துக் கொள்ள… சுமித்ராவும் அப்போது இன்பமாகத்தான் உணர்ந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு எதோ வித்யாசமாகத் தோன்ற… “நீங்க குடிச்சு இருக்கீங்களா?” எனக் கேட்டே விட்டாள். “ஆமாம், ப்ரண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க, கொஞ்சமாத்தான் குடிச்சேன்.” என்றான். சுமித்ரா மேலும் எதோ கேட்க வர… தீனா அவளை அதன்பிறகு பேசவே விடவில்லை…. நள்ளிரவுக்கு மேல் அவன் உறங்கி விட… சுமித்ரா உறக்கத்தைத் துலைத்து விழித்துக் கிடந்தாள். அவளுக்குத் தீனாவை பற்றி ஒன்றுமே புரியவில்லை…. அவன் நல்லவனா கெட்டவனா என ஒரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை. அந்த வீட்டில் இருந்த மற்றவர்கள் கூட அப்படித்தான். அந்த வீட்டில் எல்லாமே இருந்தது. ஆனாலும் எதோ குறையாகத் தெரிந்தது. பெரிய கட்டிடமோ… அல்லது அதில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை வைத்து மட்டும் நிம்மதியும் சந்தோஷமும் வந்துவிடாது. அந்த வீட்டில் உள்ள மனிதர்களின் குணமும், ஒருவருக்கொருவர் காட்டிக்கொளும் அன்பும் அக்கறையும் தான் முக்கியமானது. இந்த வீட்டில் அவள் வந்து இன்னும் முழுதாக ஒருநாள் கூட முடியவில்லை. இந்த ஒருநாளில் ஒருமுறை கூட அவர்கள் அன்பாகவோ, அக்கறையாகவோ பேசி அவள் பார்க்கவே இல்லை…. நமக்கும் இந்த நிலைதானா… நாமும் இப்படித்தான் ஆகிவிடுவோமோ என அவளுக்குப் பயம் வந்துவிட்டது.