Advertisement

சொர்க்கம் என் கைகளில்-1

 

சென்ட் ஜாகோப் கல்லூரி ஹாஸ்டலில் உயர்தர ரூமில் தன் பொருட்களை சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள் சுமதுரா ஜனார்த்தனன்.வெள்ளை நிற லாங்க் ஸ்கர்ட்டும் நீல நிற டாப்பும் அவளின் பொன்னிற மேனியை தழுவியிருந்தது.நீண்ட கூந்தலை சேர்த்து க்ளிப்பில் அடக்கி இருந்தாள்.திருத்தமான முகமும் மீன் விழியும் மனம் மயக்கும் அவளின் புன்னகையும் எவரையும் வசீகரிக்கும்.ஆனால் சில நாட்களாகவே ஏதோ சிந்தனையில் அவளின் மலர் முகம் கூம்பியே இருந்தது.

 

சுமதுரா கோடிஸ்வரர் ஜனார்த்தனனின் ஒரே மகள்.இரண்டு மகன்களுக்கு பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆசை மகள்.பிறந்த போதே தாயை இழந்த அவளை கண்ணுக்குள் வைத்து இளவரசியாக வளர்த்தனர்.அவர்களின் பிரம்மாண்டமான வீட்டின் மேல் தளம் முழுவதுமே அவளுடையது.கீழே இரண்டு தளமும் அண்ணன்மார்களுடையது.தரைத் தளம் அவர்களின் தந்தையுடையது.

 

ஆனால் அவள் பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீட்டில் இருந்தது மிகவும் குறைவே.பள்ளிப் படிப்பு ஊட்டி கான்வென்டிலும் கல்லூரி படிப்பு ஆந்திராவில் இருந்த சென்ட் ஜாகோப் கல்லூரியிலும் படித்தாள்.பள்ளி கல்லூரி விடுமுறையில் தாதியோடும்  பாதுகாவலரின் பாதுகாப்போடும் வெளியூரிலும் வெளிநாடுகளிலும் சுற்றுலா சென்றாள்.பெரியண்ணன் பூபாலனின் கல்யாணத்திற்கு மட்டும் ஒரு வாரத்துக்கு மட்டும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டாள்.

 

முதலிலெல்லாம் பல ஊர்களை சுற்றிப் பார்ப்பதில் மகிழ்ந்திருந்த சுமதுரா வளர வளர தோழிகளின் வீட்டில் கழிக்கும் விடுமுறை கதைகளைக் கேட்டு தானும் விடுமுறைக்கு வீட்டிற்கே போக வேண்டும் என மிகவும் விரும்பினாள்.

 

ஆனால் எந்தவிதமாகக் கேட்டும் அவள் தந்தையோ சகோதர்களோ அதை அனுமதிக்கவே இல்லை.ஆனால் சின்ன அண்ணன் ஸ்ரீபாலனின் திருமணத்திற்கு வந்த போது தான் தந்தையும் அண்ணன்களும் தன்னிடம் எதையோ மறைக்கிறார்கள் என அவளுக்கு சந்தேகம் தோன்றியது.

 

அவள் அறிந்து ஜனார்த்தனனின் தொழில் பிஸ்னஸ்.முதலில் சிறு அளவில் கோவை நகரில் அவர் தொடங்கியது டெக்ஸ்டைல் பிஸ்னஸ்.பின்பு குளிர்பான நிறுவனம், எக்ஸ்போர்ட் இம்போர்ட் கம்பெனி,ரியல் எஸ்டேட்,பஸ் கம்பெனி,மிஷினெரீஸ் என அவரின் தொழில்கள் வால் போல் நீண்டுக் கொண்டே சென்றது.குறுகிய காலத்தில் இந்த அளவு முன்னேற்றம் ஆச்சரியாமான விஷயம் தான்.ஆனால் லஷ்மி தேவியின் பார்வை அவர் மீது பதிந்ததால் வெறும் டூவீலரில் சுற்றியவர் பத்து கார் இருபது வீடுகள் அவர் குடும்பத்தோடு இருப்பதற்கு பிரம்மாண்டமான பங்களா கோடிக்கணக்கான பேங்க் பேலன்ஸ் என கோவை நகரிலேயே பிரபல புள்ளியாக மாறியிருந்தார்.

 

தக்க வயது வந்த பின் மகன்கள் இருவருக்கும் தன் சொந்தத்திலேயே பெண்ணெடுத்திருந்தார்.திருமணத்தையும் ஊரையே வளைத்து ஜனங்கள் பல மாதங்களுக்கு பேசும் அளவு பிரம்மாண்டமாக நடத்தினார்.அதிலும் சின்ன மகனின் திருமணத்திற்கு ஹோம் மினிஸ்டர் கூட வந்திருந்தார்.

 

கோவையிலேயே பெரியதான அந்த திருமண மண்டபமே உறவினர்களாலும் நண்பர்களாலும் பிரபல புள்ளிகளாலும் நிரம்பி வழிந்தது.திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சுமதுரா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.

 

பெரிய அண்ணனின் திருமணத்திற்கு தான் அப்படி ஆகிவிட்டது.இந்த திருமணத்திற்காவது முன்பே வர வேண்டும்.குடும்பத்தவரோடு சந்தோஷமாக திருமண வேலைகளில் பங்கு கொள்ள வேண்டும்.. எல்லோரோடும் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்ற அவளின் ஆசைகளெல்லாம் கனவாகவே முடிந்தது.வருந்திய மனதை திடப்படுத்திக் கொண்டு திருமணத்தில் சந்தோஷமாக கலந்துக் கொண்டாள்.

 

திருமண தினத்தின் காலை முகூர்த்தத்ததிற்கு முன்பு செய்ய வேண்டிய சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தது.மணமகளுக்கு கொடுக்க வேண்டிய திருமண பட்டை ரூமிலிருந்து எடுத்து வருவதற்கு சென்ற சுமதுரா அதை எடுத்துக் கொண்டு வெளியே வரும் முன்பு அங்கு ஓரமாக நின்றிருந்த இரண்டு பெண்கள் பேசியதைக் கேட்டு திடுக்கிட்டு விட்டாள்.அவர்கள் பேசியது இதுதான்.

 

“அண்ணி பாத்தீங்களா… கல்யாணம் எவ்வளவு கிராண்டா பண்றாங்க இல்ல…முதல் பையனுக்கு பண்ண போது நமக்கு அழைப்பு இல்ல…என்னமோ இந்த கல்யாணத்துக்கு பத்திரிகை கெடைச்சுது…எவ்ளோ செலவு பண்ணி பண்றாங்க இல்ல?!”

 

“ஊரை அடிச்சு ஓலைல போட்டு சம்பாதிச்சா…இது என்ன இதுக்கு மேலையும் செய்வாங்க….நல்ல முறையில உழைச்சு சம்பாதிச்ச பணமே நிலைக்காத போது எத்தனையோ பேர் வாழ்க்கைய அழிச்சு சேர்த்த இந்த பணமா நிலைக்கும்….இவங்களால கஷ்டப்பட்டவங்க சாபமெல்லாம் ஒரு நாள் பலிக்காம போகுமா”

 

“ஷ்.. அண்ணி!சத்தம் போட்டு பேசாதீங்க… அவங்க காதுல விழுந்தது இந்த மண்டபத்தை விட்டு நம்ம பொணந்தான் போகும்… வாங்க வாங்க… ஹாலுக்கு போயிடலாம்”

 

என்று அவரை இழுத்து கொண்டு சென்றுவிட்டார் அவர்.

 

இது அனைத்தையும் கேட்டிருந்த சுமதுரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.தன் குடும்பத்தை பற்றி இதுவரை அவளரியாத இந்த உண்மையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.ஆனால் யாரோ முகம் தெரியாதவர்கள் கூறியதை மட்டும் கேட்டு தன்னவர்களை சந்தேகிப்பது தப்பு என தோன்றியதால் சிரமப்பட்டு தன் முகத்தை சரி செய்துக் கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டாள்.ஆனால் வித்தாக அவள் மனதில் விழந்த சந்தேகம் இரண்டே நாட்களில் மரமாக வளரந்து அவள் சந்தேகத்தை ஊர்ஜித படுத்தும் படியாக ஒரு சம்பவம் நடந்தது.

 

அன்று காலை உணவிற்கு பின் வெளியே செல்வதற்கு தயாரான சுமதுரா தோட்டத்தில் இருந்த ரோஜாவைப் பறித்து தலையில் வைத்தபடி பார்த்த போது பெரியண்ணன் பூபாலன் வெளியே செல்வதற்கு தயாராகி தன் கார் அருகே நின்றிருந்தான்.அவனுடனே காரில் சென்றுவிடலாம் என எண்ணி வேகமாக கார் நிற்குமிடம் நோக்கி சென்றவள் அவள் அண்ணன் யாருடனோ போனில் பேசியதைக் கேட்டு நடுநடுங்கி தரையிலேயே அமர்ந்து விட்டாள்.

 

“டேய் என்ன ஆனாலும் சரி இன்னிக்கு அவன் பொணம் விழுனும்….அரைமணி நேரத்துல நா அங்க வரும் போது செத்த அவன் மூஞ்சியத் தான் நா பாக்கனும்…இல்ல உங்க எல்லாரையும் அவனோட சேத்து எமலோகத்துக்கு பார்சல் பண்ணிடுவேன்…இவ்ளோ நாளாச்சுன்னு அப்பாக்கு மட்டும் தெரிஞ்சுது உங்க ஒத்தொத்தனையும் வெட்டி பொலி போட்ருவாறு… ஜாக்கிரதை…நா இப்ப வந்துகிட்டே இருக்கேன்”

 

என்றவன் காரில் ஏறுமுன் தன் பேண்ட் மறைவில் இருந்த துப்பாக்கியை எடுத்து பார்த்து அதை மீண்டும் தன் பாக்கெட்டில் வைத்தவன் காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டான்.

 

அரைமணி நேரமானது அவளுக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு.

 

‘தன் குடும்பமா இப்படி?அவள் மீது அன்பை பொழிந்த அப்பாவும் சகோதரர்களும் எங்கே?கனிவு பொங்க அவளை பார்க்கும் அவர்கள் ஒரு உயிரை அனாயாசமாக எடுக்கும் அசுரர்கள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.ஆனால் அதுதான் உண்மை.இதெல்லாம் அவளுக்கு தெரியக் கூடாது என்று தான் அவளை இத்தனை ஆண்டுகளாக வீட்டிலிருந்து தூரமாகவே வைத்திருந்தார்கள் என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது.

 

இதையெல்லாம் கேட்டு அவர்களோடு சண்டை போட வேண்டும் என்று தோன்றியது.ஆனால் இதுவரை அதிர்ந்து கூட பேசியறியாத அவளால் அவர்களோடு சண்டையிட்டு ஜெயிக்க முடியுமெனத் தோன்றவில்லை.அதனால் அவர்களிடமிருந்து தூரம் சென்று விடுவதே நல்லது என எண்ணியவள் அன்றே வீட்டை விட்டு ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.

 

நேற்றுதான் சுமதுரா தன் மூன்றாம் ஆண்டின் கடைசி தேர்வை எழுதியிருந்தாள்.தன் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் வீட்டிற்கு செல்ல வேண்டுமே என எண்ணி திகிலடைந்தாள்.வீட்டிற்கு சென்ற பின் ஏதாவது காரணம் கூறி அவர்களிடமிருந்து தூரமாக சென்று விட வேண்டும் என எண்ணினாள்.இனியும் அந்த பாவ பணத்தில் வாழ அவளுக்கு அவமானமாக இருந்தது.அவள் எல்லாவற்றையும் பேக் செய்த போது ரூமின் வாயிலில் அவள் வீட்டின் ஆள் வந்து நின்றிருந்தான்.இவள் சென்று காரில் அமர்ந்து கொண்ட பின் சாமனையெல்லாம் கொண்டு வந்து டிக்கியில் வைத்துப் பூட்டினான்.முன் சீட்டில் ட்ரைவரோடு அவன் அமர்ந்தான்.அவளின் பின் சீட்டில் அவளின் பாடி காட் இரண்டு பேரும் அமர்ந்தனர்.கார் ஹைத்ராபாத் ரோடில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது.இரவு பதினோரு மணி அளவில் கார் திடிரென ப்ரேக் அடித்து நிற்கவும் அப்போது தான் சிறிது கண்யர்ந்திருந்த சுமதுரா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

 

காரை விட்டு இறங்கிய ட்ரைவர் பேணட்டைத் திறந்து பத்து நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த வேலையாள் இறங்கி சென்று அவனோடு பேசியவன் காரில் ஏறி சுமதுராவிடம்

 

“மேடம்…காரல பன்சர் ஆயிடுச்சு.ஒரு அரைமணி நேரம் ஆகும் சரியாக….வேற கார் கொண்டு வர சொல்லலாமா?இல்ல இதே சரியான பின்னாடி போகலாமா?”

 

“இட்ஸ் ஓகே! இந்த கார் சரியான பின்னாடி இதுலேயே போகலாம்…”

 

என்றவள் வெளியே பௌர்ணமி நிலவு தன் ஒளியை பரப்பியதைக் கண்ணாடி வழியே சிறிது நேரம் பார்த்தவள் அதை காரின் வெளியே சென்று பார்க்க எண்ணினாள்.

 

“சீனா!கார் டோர் ஓபன் பண்ணுங்க…நா கொஞ்ச நேரம் வெளியே போயி நிக்கனும்”

 

“வேண்டாம் மேடம் சாருக்கு தெரிஞ்சா எங்கள கொன்னுடுவாரு…”

 

“அதெல்லாம் முடியாது…நா வெளியே கொஞ்ச நேரம் நிக்கனும்…தட்ஸ் இட்…நா என்ன ஜெயில் கைதியா?ஒரு பத்து நிமிஷம் வெளியே நின்னா ஒண்ணும் ஆகாது.. டோர் ஓபன் பண்றீங்களா இல்லையா…நா சொல்றத செய்யலேன்னாலும் அப்பா உங்கள வேலைலேந்து தூக்கிடுவாரு… மைண்ட் இட்”

என்று அவர்களை மிரட்டினாள்.

 

வேறு வழியில்லாததால் காரின் டோரை ஓபன் செய்தான் சீனா.விட்டால் போதும் என வேகமாக அதிலிருந்து இறங்கிய சுமதுரா வெளியே பொழிந்த நிலவொளியும் குளிர்ந்த காற்றும் அவள் மனதை மயக்கியது.

 

மனித நடமாட்டமே இல்லாத இடமாதலால் அவளுக்கு எந்த தொந்தரவும் நேராது என எண்ணிய பாடி காட் இருவரும் தங்கள் இயற்கை அவசரத்திற்காக தொலைவில் தெரிந்த மரத்தின் பின்னே சென்று மறைந்தனர்.சீனாவும் ட்ரைவரோடு தனக்கு தெரிந்த அளவில் உதவிக் கொண்டிருந்தான்.

 

எதிர் பக்கத்தில் தெரிந்த சிறு குளத்தை நிலவொளியில் காண எண்ணி ரோட்டை கடந்து குளத்தருகே சென்ற சுமதுரா தெளிந்த நீரில் தெரிந்த நிலவின் பிம்பத்தை அதில் பார்த்தபடி மெய்மறந்து நின்றிருந்தாள்.

 

மனம் மயக்கும் அந்த நிலையில் அவள் பின்னே இலைகள் சரசரக்கும் மெல்லிய ஒலி அவளுக்குக் கேட்கவில்லை.இருட்டில் வந்தது ஓர் நெடிய உருவம்.கண்களைத் தவிர அதன் எல்லா உடலும் கருப்பு ஆடையில் மறைந்திருந்தது.சுமதுராவின் பின்னே வந்து நின்ற அந்த உருவம் தன் கையில் இருந்த கர்சீப்பை அவளின் வாயில் வைத்து அழுத்தியது.

 

ஆபத்தை உணர்ந்து அவள் போராடு முன் அந்த கர்சீப்பில் இருந்த மருந்தின் விளைவால் தலைசுற்றி தன் பின்னே நின்றிருந்த உருவத்தின் மார்பிலேயே மயங்கி சரிந்தாள்.தன் நினைவற்று சரிந்தவளைத் தூக்கி தன் தோளில் போட்ட உருவம் வேகமாக அந்த காட்டில் சென்று மறைந்தது.சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவு அவளைத் தோளில் சுமந்தபடி நடந்த அந்த உருவம் அங்கு மறைவில் நிறுத்தியிருந்த காரின் பின் சீட்டில் அவளைப் படுக்க வைத்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிச் சென்றது.மண் பாதையில் சிறிது தூரம் சென்ற பின் அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் ஏறி புனேவை நோக்கி வேகமெடுத்தது.வண்டியை ஓட்டியபடியே பின் சீட்டில் தன் நினைவிழந்து படுத்திருந்த அந்த பெண்ணைப் பார்த்த அந்த உருவத்தின் கண்களில் சொல்ல முடியாத கொடூரம் தெரிந்தது.

 

கனத்த கண்ணிமைகளை திறக்க முயன்றாள் சுமதுரா.முதலில் முடியாதது பிறகு சிறிது நேர முயற்சிக்கு பின் மெதுவாகத் திறக்க முடிந்தது.கண்ணை விழித்து தன்னை சுற்றிலும் பார்த்தவள் தான் எங்கிருக்கிறோம் தனக்கு என்ன நடந்தது.என மூளையைக் கசக்கியவள் தன் கார் பஞ்சர் ஆகியதும் நிலவொளியை ரசிக்க தான் குளக்கரைக்கு சென்றதும் யாரோ பின்னிருந்து தன் வாயை அழுத்தியது வரையில் அவளுக்கு நினைவுக்கு வந்தது.ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என என்ன முயன்றும் நினைவுக்கு வரவில்லை.சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் அது ஒரு சிறிய அழகான அறை என்பதை கண்டாள்.சுற்றிலும் திரைச்சீலைகள் ஆட சிறிய விளக்கொளி அந்த அறையின் இருட்டை விரட்ட முயன்று தோற்றது.மெதுவாக தன் சக்தியைத் திரட்டி எழுந்து அமர்ந்தாள்.

 

அப்போது அந்த அறையின் கதவு டக்கென திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் ஆஜானுபாகுவான ஒரு இளைஞன்.

 

சுமதுரா எழுந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவனின் கூர் விழிகள் ஆச்சரியத்தைக் காட்டியது.மெதுவாக இவள் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்து நின்றான் அந்த நெடியத் திருமால்.

 

அந்த குறைவான ஒளியிலும் அங்கு நின்றிருந்த அவனின் கெட்டியான உடலும் திண்ணிய புஜமும் அகத்தை காட்டாத முகமும் அவளை ஊடுருவும் கூர் விழிகளும் சுமதுராவிற்கு இதயத்தில் குளிர் பரவ செய்தது.

 

அவளின் பயந்த தோற்றத்தைக் கண்டு கடகடவென சிரித்தவன் சட்டென சிரிப்பை நிறுத்தி

 

“வெல்கம் மிஸ் சுமதுரா ஜனார்த்தனன்… வெல்கம் டூ மை கஸ்டடி….இனிமே இது தான் உன் உலகம்… இதிலிருந்து இனிமே எப்பவும் உனக்கு விடுதலையே இல்லை…காட் இட்”

 

என்றான் கடுமையான குரலில்.தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அவள் அப்போது தான் முழுமையாக உணர்ந்தாள்.

 

Advertisement