Advertisement

என் விழியில் உன் பிம்பம்-1

 

பொதிகை மலையின் அடிவார கிராமங்களில் பூங்குளமும் ஒன்று.குறிஞ்சி நிலத்துக்கே உரிய அழகோடு கண்ணை கவரும் ஊர் அது.பால் போல் விழும் அருவியும் நூய்ய் என்று பறக்கும் வண்டொலியும் பல்வேறு காட்டு மலர்களின் நறுமணமும் இயற்கை விரும்பிகளின் சுவர்க்கம்.அந்த ஊரிலேயே பெரிய வீடு  தனசேகருடையது.அவரின் தாத்தா காலத்தில் கட்டிய வீட்டை நல்லபடியாக பராமரித்து வைத்திருந்தார்.அவரின் மனைவி வனஜா.அவரின் மூத்த மகன் விஸ்வநாதன்.அவரின் தங்கை மகள் சித்ராவையே தன் மகனுக்கு மணமுடித்திருந்தார்.அவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது.

 

தனசேகரின் இரண்டாவது மகவு இந்துமதி தான் நம் கதையின் நாயகி.பக்கத்து டவுனில் பி.எஸ்.ஸி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.சிவந்த நிறமும் மான் விழியும் கொடி உடலும் பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் தூண்டும் பேரழகி அவள்.துரு துருவென ஏதாவது செய்துக் கொண்டே இருப்பாள்.காலை காலேஜ் செல்லும் வரை வேலை செய்பவள் மாலை வந்து சிறிது படித்து விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.

 

பெரிய செல்வந்தரானாலும் வீடு நிறைய வேலை செய்வோர் இருந்தாலும் வனஜா அவர் மகள் மருமகள் எல்லோருக்குமே வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.காலை வாசல் தெளிப்பது.கறந்த பாலை சரிபார்த்து வாங்குவது.காலை உணவு பரிமாறுவது மாலை கல்லூரி முடிந்து வந்து பின்னும் தாய் அண்ணியோடு சேர்ந்து இரவு உணவு தயாரிப்பது என சுறுசுறுப்பாக இருப்பாள்.

 

அவள் தினமும் ஒன்பது மணி பஸ்ஸிற்கு செல்ல வேண்டுமாதலால் அன்று காலை எட்டு மணி வரையிலும் ஏதோ வேலையை செய்தபடி சுற்றி வந்தவளை

 

“இந்து!ஏய் இந்து!மணி எட்டே கால் ஆயிடிச்சு… போதும் நீ வேல செஞ்சது… சைக்கிள மித்திச்சிக்கிட்டு நீ போறதுக்குள்ள பஸ் புர்ன்னு போயிடும்…கெளம்பு சீக்கிரம்”என்றாள் அவள் உயிர் தோழியும் அண்ணியுமான சித்ரா.

 

“வந்துகிட்டே இருக்கேன்….”என்றபடி நீல நிற பாவாடை தாவணியில் நீல மலரென வெளியே வந்தாள் இந்து.

 

“அம்மா!நா போயிட்டு வரேன்”

 

“ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா”என்று மகளின் அழகில் மயங்கிய தாய் அவளுக்கு நெட்டி முறித்தார்.

 

வெளியே வந்து ஓரமாக நிறுத்தியிருந்த அவளின் மின்னல் கொடி (அதுதான் அவள் சைக்கிளுக்கு அவள் இட்ட பெயர்)அதை ஸ்டாண்ட் எடுத்து அதைத் தள்ளிக் கொண்டு அண்ணி திறந்து விட்ட கேட்டை அவள் தாண்டிய போது

 

“இந்து!வீட்ல ரெண்டு காரு இருக்கு…போதாததுக்கு உங்க அண்ண பைக் வேற இருக்கு…நீ ம்..னா உன்னைய கொண்டு போயி காலேஜிலேயே விட்டு வருவாரு…அப்படி இருக்கும் போது தினா இந்த சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகனுமா?”என்றாள் சித்ரா.

 

“நீ சொல்ற மாறி அது கொண்டு விடும் தான்…ஆனா காலைல எந்திரிச்சி ராத்திரி வர வயலு மில்லு தோப்பு டவுன் கடைன்னு எத்தனை வேலை செய்யுது…இதுல என்னைய கொண்டு போயி விடுன்னு அது வேற வேலை சொல்றதா…என் மின்னல் கொடி எந்த காருக்கும் சளச்சது இல்ல..”என்றவள் சித்ராவின் காதருகே

 

“எல்லா வேலையோட அண்ணே உன்னைய வேற சமாளிக்குது….பாவம்மில்ல அது”எனவும்

 

“அடிங்க…உன்ன!”என்று சித்ரா கை ஓங்குவதற்குள் தன் சைக்கிளில் ஏறிப் பறந்திருந்தாள் இந்து.

 

சைக்கிளைக் கொண்டு போய் ஸ்டாண்டில் போட்டுவிட்டு பஸ்ஸில் ஏறி கல்லூரியைச் சென்றடைந்தாள்.வேகமாக வகுப்பறையில் சென்று அமர்ந்தவள் பக்கத்து இடம் இன்றும் காலியாக இருப்பதைக் கண்டு வருத்தமுற்றாள்.இன்றோடு நான்கு நாட்கள் ஆகியிருந்தது அவள் உயிர் தோழி பத்மா கல்லூரிக்கு வந்து.இன்று வருவாள் நாளை வருவாள் என காத்திருந்து காத்திருந்து இன்றும் அவள் வரவில்லை என்றானதும் மாலை எப்படியாவது அவள் வீட்டிற்கே சென்று பார்த்து விடுவது என முடிவெடுத்தாள்.

 

இந்துமதியும் அவளும் பள்ளியிலிருந்தே தோழிகள்.பத்மா அப்படியொன்றும் படிப்பில் குறைவானவள் இல்லை.ஏழை பெண் தான்.பள்ளியிலிருந்தே உபகார சம்பளத்தில் தான் படித்து வந்தாள்.தாங்க முடியாத ஜீரம் என்றாலும் கூட இரண்டே நாட்களில் மீண்டும் வந்து விடுவாள்.அப்படிப்பட்டவள் இந்த நான்கு நாட்களாக வரவில்லை எனவும் இந்துமதியின் உள்ளம் பலதையும் எண்ணித் தவித்தது.அன்று எப்போது தான் கல்லூரி முடியும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வகுப்பில் அமர்ந்திருந்தவள் மாலை மணி அடிக்கவும் முதல் ஆளாக வெளியேறினாள்.

 

பத்மாவின் ஊர் இந்துமதியின் ஊரிலிருந்து தொலைதூரமில்லை.இவள் ஊரிலிருந்து மண் ரோடில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் அவளின் கிராமம் வந்துவிடும்.அவள் கல்லூரி வருவதற்கு வேறு பஸ் வழி இருந்தது.

 

ஊர் வரவும் வேகமாக இறங்கியவள் தன்னோடு இறங்கிய சிறுமியிடம்

 

“மங்க!எங்க வீட்டுக்கு போயி நா என் பிரண்டு பத்மா வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வந்திட்றேன்னு சொல்றியா?”என வினவினாள்.

 

“சரிக்கா நா சொல்லிட்றேன்”என அந்த சிறுமியும் அகன்றாள்.

 

சைக்கிளில் ஏறி தோழியின் கிராமத்தை நோக்கி பெடலை அழுத்தினாள்.அவளின் மின்னல்கொடியும் அவளின் மனதை அறிந்தது போல் பறந்தது.அரைமணி நேரத்தில் அந்த கிராமத்தை சென்றடைந்தாள்.இத்தனை வருடங்களில் ஐந்தாறு முறை தான் அந்த ஊருக்கு அவள் வந்திருக்கிறாள்.நெல் வயலும் தோப்பும் சூழித்தோடும் ஆறும் என அந்த ஊர் இவர்கள் ஊரை விட அழகாக காட்சி அளித்தது.

 

தோழியின் வீட்டைச் சென்றடைந்தவள் வாயிலில் நின்றுக் கொண்டு

 

“பத்மா!…பத்மா!”என அழைத்தாள்.

 

இவள் குரலைக் கேட்டு பத்மாவின் தாய் செங்கமலம் பின் கட்டிலிருந்து வந்தார்.

 

“அடடே இந்துமதியா?அங்கையே ஏம்மா நிக்கற?வா உள்ளே… இப்பத்தான் இங்க வர வழி தெருஞ்சுதா!உன் பிரண்ட காலேசுக்கு வரலைன்னதும் பாக்க ஓடி வந்திட்டியா?என்னமோ நாளு நாளா இந்த புள்ள ஒடம்புக்கு சொகமில்லைன்னு காலேசுகே வரல” என்றபடி அவளை வரவேற்றார்.அவர் ஏழையாக இருக்கலாம் ஆனால் அவர்கள் வீட்டில் அன்புக்கு எப்போதுமே பஞ்சமிருந்தது இல்லை.இந்துவை எங்கு கண்டாலும் நின்று அவளோடு பேசி விட்டுத் தான் செல்வர் அந்த வீட்டவர்கள்.அவர்களின் மூத்த பெண் பத்மா இளையவன் சுந்தர்.கணவனை சிறுவயதிலேயே இழந்திருந்த செங்கமலம் தன் மக்களை உயிரைக் கொடுத்து வளர்த்தார்.இதையெல்லாம் யோசித்தவாறு உள்ளே நுழைந்த இந்து தோழியை கண்களால் தேடினாள்.

 

“பத்மா கொல்லப்புறத்துல தான் இருக்கா…நீ போயி பாரு…எனக்கு வயல் வரைக்கும் போகனும்…நா போயிட்டு வந்திட்றேன்…நீ கெளம்பிடாதே… இன்னிக்கு இங்க தான் சாப்பிட்டு போகனும்..தெரிஞ்சுதா!”என்றவர் தங்கள் சொற்ப நிலத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்.

 

அவர் சென்ற பின் வாயில் கதவை சாத்தியவள் தோழியைத் தேடி கொல்லைப் புறத்திற்கு சென்றாள்.அங்கே அவளோ இந்த உலக நினைவே இல்லாமல் வான்வெளியை இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தாள்.அருகில் சென்று இவள் அவளின் தோளைத் தொட்டதும் தூக்கிவாரிப் போட்டபடி திரும்பிப் பார்த்தாள்.

 

“என்னடி ஆச்சு பயந்திட்டியா?ஆமா ஏன் காலேஜுக்கு வரலை?அம்மா உனக்கு ஒடம்பு சரியில்லைன்னாங்களே…என்னடி உனக்கு ஒடம்பு…மருந்து வாங்கி தின்னியா?”

 

இவள் கேட்டதும் தான் தாமதம் ஹோவென்று அழுதபடி தோழியை கட்டிக் கொண்டாள் பத்மா.அதிர்ந்த இந்துமதி

 

“பத்மா!என்னடி… எதுக்கு இப்படி அழுவுற?ஒடம்புக்கு ரொம்ப முடியலையா?ஆஸ்பத்திரிக்கு போவமா?சொல்லிட்டி அழுடி குரங்கே… எனக்கு பயமா இருக்கில்ல”

 

“நா….போ..கக…வேவேண்டியது… ஆஸ்பத்திதிரிக்கிகி இல்லல…சுசுடுக்காகாட்டுக்குகு….”என திக்கி திணறியபடி கூறினாள் பத்மா.

 

“சீ….விட்டேன்னு சொல்லு… எதுக்கு இப்படி பேசற…சாகற அளவு இப்ப என்ன ஆயிடுச்சு உனக்கு?”

 

அவள் விடாமல் அழவும்

 

“இப்ப சொல்லப் போறியா?இல்லியா?”என்றபடி அவளை அங்கிருந்த கிணற்றடியில் அமர வைத்தாள்.

 

“இப்ப சொல்லு என்னாச்சுன்னு?”

 

பத்மா தன் தாய் தனக்காகவும் தன் தம்பி முத்துக்காகவும் படும் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவள்.அதற்காகவே அவள் வயது பெண்கள் ஆசைப்படும் எதையும் அவள் வேண்டும் என தாயிடம் கேட்டதேயில்லை.தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து தாயையும் தம்பியும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என கனவுகள் கண்டவள்.ஆனால் அவளுக்கு அந்த வயதின் ஆசைகளை உண்டாக்கினான் சுரேஷ்.

 

அவனும் அதே கிராமம் தான்.அவனுக்கும் கொஞ்சம் நிலபுலன்கள் அந்த ஊரில் இருந்தது.ஆனால் பத்மா குடும்பத்தை விட அதிகம்.மூன்று மாதங்களுக்கு முன்பு செங்கமலத்திற்கு வந்த காய்ச்சலால் இவர்கள் வயலின் அருப்பை மேற்பார்வையிட விடுமுறையில் இருந்த பத்மா செல்ல வேண்டியதாகி விட்டது‌.

 

சுரேஷி்ன் அண்ணன் ஊரில் இல்லாததால் அவனும் வயலில் வந்து நின்றிருந்தான்.பக்கத்து பக்கத்து நிலமாதலால் அவர்களின் பழக்கம் ஆரம்பித்து அது காதலில் வந்து நின்றது.ஆனால் திருமணத்தைப் பற்றி அவன் வீட்டில் பேசிய போது பெண் வீட்டவர்கள் இருபத்தைந்து பவுன் போட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி தருவதாக இருந்தால் மட்டுமே அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க முடியும் என கண்டிப்பாகக் கூறி விட்டனர்.வீட்டாரை எதிர்க்கும் தைரியம் அவனுக்கும் இல்லை.தான் இதில் செய்வதற்கு எதுவும் இல்லை என பத்மாவிடம் தீர்மானமாக கூறிவிட்டான்.

 

“அவ்ளோ தானே…. இவ்ளோ தைரியம் கூட இல்லாதவன நீ கட்டிக்கவே வேண்டா….இவன் போன போகட்டும்… உனக்கு இத விட நல்ல மாப்பிளயா கெடைப்பான்….இதுக்கு போயி சாவு அது இதுன்னு பேத்தற”

 

“ஐயோ இந்து!அவரத் தவிர நா யாரையும் கட்டிக்க முடியாது…”

 

“ஏன்…அவ்ளோ ஆழமான காதலா…. கத்திரிக்கா…போடி போடி இவளே”

 

“பொறக்க போற புள்ளக்கி அவரு அப்பான்ன பொறவு நா வேற மனுசன எப்புடி கட்டிக்கறது”

 

“என்னது?!!…..”அதிர்ந்து நின்று விட்டாள் இந்துமதி.

 

“பத்மா….?”

 

“மூணு மாசம்டி…நா என்ன பண்ணுவே…அம்மாக்கு தெரிஞ்சா உயிரையே விட்ருவாங்க…அதான் நானே செத்துட்றேன்…”

 

“ஏய் மொத்தல இந்த சாகற பேச்சை விடு… இதுக்கு என்ன பண்ணலான்னு யோசி…அத விட்டுட்டு வேண்டாதத விடு”

 

“எல்லா வழியும் அடைச்சு போச்சுடி…யாரைலையும் ஒன்னும் பண்ண முடியாது”

 

“அவரு என்னடி பண்றாரு…விவசாயம் தானா?”

 

“இல்ல இந்த ஊர்ல ரங்கதுரைன்னு ஒருத்தரு..இருக்காரு… அவருகிட்ட வேல செய்றாரு”

 

அந்த நபரைப் பற்றி இந்துமதி கேள்விப்பட்டிருக்கிறாள்.ஒருமுறை அவள் தந்தையும் அண்ணனும் அந்த ரங்கதுரை என்பவன் போக்கிரி என்றும் அடிதடியில் முன்னாள் என்றும் அவர்கள் விஷயத்தில் முக்கை நுழைத்து தொந்தரவு கொடுக்கிறான்… மொத்தத்தில் அவர்களுக்கு விரோதி என அவர்கள் பேச்சிலிருந்து அறிந்துக் கொண்டிருந்தாள்.ஆனால் தன் உயிர் தோழி இந்த நிலையில் இருக்கும் போது அதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது என்று நினைத்தாள்.

 

ஆம் அந்த ரங்கதுரையை நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தாள் இந்துமதி.

 

Advertisement