Advertisement

என் விழியில் உன் பிம்பம்-3

 

அன்று இளங்காளி அம்மன் கோயில் உறவினர் ஊரவர் நண்பர்களால் நிரம்பி வழிந்தது.சுத்துப்பட்டு பத்து பன்னிரண்டு ஊர்களுக்கு அவள் தான் காவல் தெய்வம்.திருமணம் காதுக்குத்து பெயர் சூட்டு விழா என கோயிலிலேயே செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள் அங்கு வந்து செய்வதற்கு ஏற்றாற்போல் கோயில் வளாகம் பெரியதாக இருந்தது.பத்மா-சுரேஷ் திருமணம் அங்கு தான் நடந்துக் கொண்டிருந்தது.விசேஷங்களுக்கு வந்தவர்கள் தங்குவதற்கென்று கோயில் பக்கத்திலேயே ரூம்கள் கட்டப்பட்டிருந்தது.அதில் மணமகளுக்கென்று ஒதுக்கியிருந்த மாடி அறையில் பத்மாவிற்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள் இந்து.

 

தலையில் மல்லிகை பூவை பத்மாவின் நீண்ட கூந்தலில் அழகாக சுத்தி விட்டாள் இந்து.

 

“ம்…. இப்ப பாரு கண்ணாடிய சூப்பரா இருக்கு…என் திருஷ்டியே பட்டுடும் உனக்கு”

 

என அவளின் கன்னத்தை தடவி திருஷ்டி எடுத்தாள்.

 

இந்துமதியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட பத்மா

 

“ரொம்ப தேங்க்ஸ்டி இந்து!நீ மட்டும் முயற்சி எடுக்கலேன்னா இன்னிக்கு இந்த கல்யாணம் நடந்திருக்காது… எங்க வீட்டு கவுரவத்த காப்பாத்திக் கொடுத்திட்டே நீ”

 

எனவும் அவள் முதுகில் லேசா தட்டியவள்.

 

“ஏய் இத எத்தன வாட்டி தான் சொல்லுவ?இத்தோட நூறு வாட்டி ஆயிடுச்சு…”

 

“என் வாழ்நாளு பூரா சொல்லிக்கிட்டே இருப்பேன்…நீ தைரியமா போய் பேசலேன்னா இது கண்டிப்பா நடந்திருக்காது”

 

“போதும் போதும்.. நன்றி சொன்னது…நா இதுல ஒண்ணுமே செய்யலே… எல்லாம் அந்த பெரிய வீட்ல இருக்கறவரு தான் செஞ்சாரு…நீ நன்றி சொல்லனும்னா அவருக்கு சொல்லு”

 

“அவரு யாருன்னு இன்னும் தெரியலையேடி…இன்னிக்கி கல்யாணத்துக்கு ஊர்ல எல்லருக்கும் பத்திரிக வெச்சிருக்கு…நீ சொன்னவரு யாருன்னு இன்னிக்கு எப்பிடியாவது கண்டுபிடிச்சிரு”

 

“ஆமாடி அவரு பேரக் கூட கேக்கலை நானு”

 

என்றவள் அவனைப் பற்றிய எண்ணங்களில் முழுகி விட்டாள்.அன்று சுந்தர் வந்து சொன்னதும் அவளால் அவளின் காதுகளையே நம்ப முடியவில்லை.இவ்வளவு வேகமாக அவன் நடத்திக் காட்டுவான் என அவள் எண்ணவேயில்லை.எல்லாரும் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவுகிறேன் என்று சொல்லலாம் தான்.ஆனால் சொன்னது போலவே நடத்திக் காட்டுவது என்பது எல்லாராலும் முடிவதில்லை.அதிலும் அன்று தான் அறிமுகமான நபருக்காக ஒரு குடும்பத்தையே ஒரு பெரிய விஷயத்துக்கு சம்மதிக்க செய்வதென்றால் அது சாதாரண விஷயமல்ல.அவன் எப்படி இதை சாதித்திருப்பான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆவல் பொங்கி எழுந்தது அவளுள்.எல்லாவற்றையும் விட அவன் செய்த உதவிக்கு நன்றி கூற வேண்டுமே…அதற்காகவாவது அவனை உடனே பார்க்க வேண்டும் என பரபரத்தது அவள் உள்ளம்.

 

ஆனால் பத்மாவின் வீட்டிற்கு சென்ற போது சுரேஷ் வீட்டவரைத் தவிர வேறு யாருமே அங்கு இல்லை.அவளுக்கு அதில் சிறிது ஏமாற்றமாகி விட்டது.திருமணத்தின் முன் தினமே தோழியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.இன்று காலைக் கோயிலுக்கு வந்ததிலிருந்தே அவள் கண்கள் அவனைத் தான் தேடிக் கொண்டிருந்தது.ஆனால் அத்தனைக் கூட்டத்தில் அவனை மட்டும் காணவில்லை.இரண்டு மூன்றுமுறை யாரோ திரும்பி நின்றிருந்தவரை அவன்தான் என அருகில் ஓடி சென்றுப் பார்த்து அது அவன் இல்லை என்றானதும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.

 

தோழியின் அலங்காரம் முடியவும் அவளுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தருவதற்கு சென்றவள் அங்கு ஊர் நாட்டாமைக்காரரோடு பேசியபடி நின்றிருந்த அவனைப் பார்த்து விட்டாள்.ஜூஸை அங்கு வைத்தவள் அவனை நோக்கி விரைந்தாள்.அவன் பின்னே நின்றிருந்தவள் அவனை எப்படி அழைப்பது என்று அறியாமல் திகைத்தாள்.

 

நாட்டாமைக்காரர் விடைப்பெற்று செல்லவும் ஏதோ உணர்வில் படக்கென திரும்பிய ரங்கதுரை அவன் பின்னே பச்சை நிற பாவாடை தாவணியில் சர்வலங்கார தேவதையாய் நின்றிருந்த இந்துவைக் கண்டு மூச்சடைக்க நின்று விட்டான்.அந்த பேரெழிலை விட்டு அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை.

 

அவன் பார்வை தன் மேலேயே இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திண்டாடினாள் இந்து.தான் வந்தது அவனுக்கு நன்றி உரைக்கல்லவா என்று கஷ்டப்பட்டு நினைவுப்படுத்திக் கொண்டவள்

 

“அது…அது உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்…. நீங்க முயற்சி எடுக்காட்டி இன்னிக்கு இந்த கல்யாணமே நடந்திருக்காது… என் பிரண்டு வாழ்க்கைய காப்பத்திக் கொடுத்துட்டீங்க”

 

மிகவும் முயற்சி செய்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த துரை அவன் கவனத்தை அவள் பேச்சில் திருப்பினான்.அவள் நன்றி உரைத்ததும்

 

“சே..சே..நன்றியெல்லாம் எதுக்குங்க…என் இடத்துல யாரு இருந்தாலும் இததான்‌ செய்திருப்பாங்க…ஒரு பொண்ணு வாழ்க்கை சரியாக என்னால முடிஞ்ச சின்ன உதவிய செஞ்சேன்…இத போயி பெருசு பண்ணிக்கிட்டு..”

 

“சின்னன உதவியா!அவ வாழ்க்கை என்னாகுமோன்னு நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா… பெரிய வீட்டுக்கு வரும் போது கூட ரொம்ப ஒண்ணு நம்பிக்கை இல்ல….ஆனா முன்ன பின்ன தெரியாத என் பிரண்டுக்காக இவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்கீங்க…இத நா உயிரு உள்ள வர மறக்க மாட்டேன்”

 

என கண்களில் துளிர்த்த கண்களால் அவனைப் பார்த்தாள்.

 

அவள் கண்ணீரைக் கண்டதும் அவளை அப்படியே இறுக்கி அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று எழுந்த உணர்வைக் கண்டு திடுக்கிட்டான்.திருமண வீட்டில் கண்ணீர் விடக் கூடாது என கண்களைத் துடைத்த இந்து

 

“ஆமா…பெரிய வீட்டு துரைய்யா அவங்க வீட்டம்மா எல்லாரும் வந்திருக்காங்களா? எங்க இருக்காங்க?என்னைய கூட்டிப் போறீங்களா…? எனக்கு பாக்கனும் போல ஆசையா இருக்கு”

 

‘கெட்டுது குடி..!துரை வீட்டம்மாவ எங்கேந்து காட்டறது?!பாத்தே ஆகனும்னு சொன்னா என்ன பண்றது’என்று திருதிருவென முழித்த துரை ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவன் பின்னே

 

“என்ன ரங்கதுரை எப்படி இருக்க?பாத்து ரொம்ப நாளாச்சே?”என்று அவனின் உறவுமுறை மாமா அழைத்தாரே பார்க்கலாம்.

 

‘ஐய்யோ மாட்னம்… இன்னிக்கு’என்று எண்ணியபடி திரும்பி நின்று அழைத்தவருடன் சிறிது நேரம் பேசி அவரை அனுப்பி விட்டு திரும்பிய போது அங்கே தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு அவனை முறைத்தபடி‌ கோபாவேசமாக நின்றிருந்தாள் இந்து.

 

“அது….அது வந்து….நா வேணும்னு அப்படி சொல்லல…அது…”

 

தன் கையை உயர்த்தி அவன் பேச்சை நிறுத்திய இந்து

 

“ஏன் இப்படி பொய் சொன்னீங்க?நீங்க தான் அந்த வீட்டவருன்னு ஏன் மறைச்சீங்க…?”

 

“பின்ன நீங்க மட்டும் வந்தவொடனே பெரியவரு இல்லையான்னு கேட்டீங்க…ஆமா நான் தான் அந்த பெரியவருன்னு நானே சொல்லி என் வயச நானே எப்படி ஏத்திக்கறது”

என்று அவன் விதண்டாவாதம் செய்யவும் அவளை மீறி சிரிப்பு வந்தது இந்துவுக்கு.இருந்தும் அதை அடக்கிக் கொண்டு

 

“என்ன இருந்தாலும் நீங்க பொய் சொன்னது தப்பு தான்…நா போறேன் போங்க”

என்று அவள் நகரும் முன் அவளை கையைப் பற்றினான் துரை.

 

சில்லென அவள் உயிர் வரை சென்று மீட்டியது அவனின் தீண்டல்.அவனின் முரட்டு கைகளில் தன் மெல்லிய கை அடங்கியிருந்ததை கண் அகலப் பார்த்திருந்தாள் அந்த பாவை.அவள் மென் கரங்களைப் பற்றிய அவனுக்கும் அதை விட மனமேயில்லை.

 

“ச்சூ… விடுங்க கைய…யாராவது பாத்துட போறாங்க…”

 

“நீங்க கோவம் இல்லேன்னு சொன்னாதான் விடுவேன்…”என்றான் அவன்.

 

“விடுங்கன்னு சொல்றேன்ல… யாராச்சும் பாத்தா என் கதி அவ்ளோதான்”

 

“நா வேணும்னு அப்படி பொய் சொல்லல… நீங்க கோவம் இல்லேன்னு சொன்னாதான் எனக்கு நிம்மதி…”என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

 

அவனின் முக பாவனையில் தன்னை மீறி சிரித்து விட்டாள் இந்து.அவள் சிரித்தவுடன் அவன் முகத்திலும் குறுநகை அரும்பியது.தன் கைகளை எப்படியோ விடுவித்துக் கொண்டவள் நாணச் சிவப்போடு அங்கிருந்து ஓடிச் சென்றாள்.

 

அவள் போவதையே கண்கொட்டாமல் பார்த்திருந்த துரைக்கு அந்த அழகு சுந்திரியிடம் தன் மனம் தஞ்சமடைந்து விட்டது என்பதை உணர்ந்து விட்டான்.

 

சுபயோக முஹுர்த்தத்தில் சுரேஷ் பத்மாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டான்.சுற்றி நின்றிருந்தவர் அட்சதை தூவி வாழ்த்தினர்.மனம் கொள்ளா சந்தோஷத்தோடு தன் கையிலிருந்த பூவை அவர்கள் மேல் தூவிய இந்து எதேச்சையாக திரும்பியவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த துரையைக் கண்டு வெட்கி அங்கிருந்து அகன்று விட்டாள்.

 

அவள் எங்கு சென்றாலும் அவன் பார்வை அவளையேத் தொடர்வதை  அறிந்து சிறிது படபடப்போடு உவகையும் கொண்டது அவள் இதயம்.

 

பந்தி பரிமாற வந்த இந்து துரை அமர்ந்திருந்த இலை வரவும் கரண்டியிலிருந்த குழம்பை சொட்டு சொட்டாக ஊற்றினாள் என்றால் அவனோ அவள் அழகை சிறிது சிறிதாக தன் கண்களால் பருகினான்.அப்போது அவள் பின்னால் வந்து நின்ற ஒரு இளைஞன் இவர்கள் நிலையைக் கண்டு”க்கும்….”என பொய்யாக இருமவும் தங்கள் நிலையடைந்தனர் இருவரும்.மீதி குழம்பை அவன் இலையில் ஊற்றிய இந்து அங்கு வந்த இன்னொரு பெண்ணிடம் குழம்பு வாளியைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக அகன்றாள்.

 

துரையின் அருகில் காலியாக இருந்த இலையில் அமர்ந்த அந்த இளைஞன் துரையின் காதுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்

 

“நண்பனை மறந்து ஃபிகரை சைட்டடிக்கும்

 

திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து

 

கொள்ளடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா”

 

என்று பாடவும்

 

“டேய் நிறுத்துடா உன் பாட்டை… தலைவர் பாட்டை மாத்தி பாடிக்கிட்டு”

 

“ஏன்டா சுச்சுவேசனுக்கு சரியாதானேடா இருக்கு என் பாட்டு…என்ன கொஞ்சம் வரிய மாத்தி இடத்துக்கு சரியா போட்டேன்”

 

“ஆமா ஆமா இவரு பெரிய கவிஞரு…பாட்டு எழுதிட்டாலும்…”

 

“ஏன்டா சொல்லமாட்டே உங்க அத்தைக்கு மகனா பொறந்ததால இப்படி மளிகை கடைய கட்டிக்கிட்டு அழுவுறேன்…இதே வேற எங்கயாவது பொறந்திருந்தா என் ரேஞ்சே வேற”

 

“இல்லாட்டா மட்டும் இவரு கார்த்தி ஐ.ஏ.எஸ் ஆகியிருப்பியாக்கும்….அத விடு ஒரு வாரமா எங்க ஆளையே காணும்?”

 

“அதாண்ட மச்சான் ஏன்டா சரக்கு வாங்க திலிக்கு போனேன்னு இப்ப வருத்தபடுறேன்… இந்த ஒரு வாரத்துல பல நாளா சுத்திக்கிட்டு  இருந்த ஜோடி கல்யாண பண்ணிடிச்சுங்க…புதுசா ஒரு ஜோடி கண்ணால அம்பு விடுதுங்க…சே..சே… இந்த கார்த்தி ஊருல ஒரு நாளு இல்லேன்னாலும் ஊர் நெலவரம் கலவரமா ஆயிடுது”

 

அவன் மறைமுகமாக தன்னைத் தான் சொல்கிறான் என்பதை அறிந்த துரை மேலே அவனிடம் பேசினால் தன் வாயை பிடிங்கி விஷயத்தை கறந்துவிடுவான் என்பதால் மேலே பேசாமல் உணவில் ஆழ்ந்து விட்டான்.பேச்சுக்கு பதில் பேச்சு பேசி தன்னை திணறடிக்கும் தன் மாமன் மகன் இன்று மவுனமானதிலேயே அவன் மனதைப் படித்துவிட்டான் கில்லாடி என்று பெயர் வாங்கியிருந்த கார்த்தி.

 

திருமணம் முடிந்து தோழியை அவள் கணவன் வீட்டில் விட்டு வீடு திரும்பிய இந்து பேசாமல் முகம் கழுவி வேறு உடை உடுத்தியவள் உணவுன்ன அழைத்த தாயிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு நேராக சென்று தன் அறை கட்டிலில் படுத்து விட்டாள்.

 

எத்தனை முயன்றும் இவள் கைகளைப் பிடுத்துக் கொண்டு மன்னிப்பை வேண்டியபடி பாவமாக நின்றிருந்த துரையின் முகமே அவள் மனதில் நிலைத்திருந்தது.அவன் நினைவுகள் அணைந்திருந்த அவளை நித்திரை அணைக்காமல் சென்றது.

 

உன் விழிகளில் விழுந்த என் இதயம் பேசட்டும்

 

அதில் பிறந்த காதல் மொழியை…

 

Advertisement